கால நதிக்கரையில் – அத்தியாயம் – 25

This entry is part [part not set] of 35 in the series 20070927_Issue

வே.சபாநாயகம்


நாராயணசாமி பிள்ளையின் வீடு சிதம்பரம் வீட்டுக்கு எதிர்ச் சாரியில் இரண்டு வீடு தள்ளி இருந்தது. அவரது சகோதரர்கள் இருவருடன் பாகப்பிரிவினை நடந்த போது பூர்வீக கல்வீடு அவரது அண்ணனுக்கும் தம்பிக்கும் சமபாதியாக ஒதுக்கப்பட்டு, இவருக்கு தெரு முனையில் மணியப் பிள்ளை வீட்டுக்கு எதிரில் இருந்த காலிமனை ஒதுக்கப்பட்டது. அதில் அவர் வீடு கட்டிக் கொண்டார்.

இப்போது அவர் வாழ்ந்த வீடு கூரை இல்லாமல் சுவர்கள் மட்டும் அரை குறையாய் இடிந்து நின்றன.

“என்னப்பா ஆச்சு இந்த வீட்டுக்கு?” என்று கேட்டார் சிதம்பரம்.

“அவுரு இருக்கும்போதே வித்துட்டாரே! வாங்குனவன் ரொம்ப வருஷமா இப்பிடிப் போட்டு வச்சிருக்கான். அவரு பசங்க மூணு பேரும் தெக்குத் தெருவுலே அவரோட அத்தை எழுதிக் குடுத்த மனையிலே கூர வீடு கட்டிக்கிட்டு அம்மாவோட இருக்காங்க” என்றான் மருது.

நாராயணசாமி பிள்ளை சிறு பிள்ளையிலிருந்தே துடுக்கான பேச்சும் குறும்புத் தனங்களும் மிகுந்தவர். எதிலும் தலையிட்டு கேள்வி கேட்கும் எதிர் சிந்தனைப் போக்கு மிக்கவர். எந்த ஊர்வம்பு தும்புகளிலும் முன்னிருப்பவர். வயது, சாதி, அந்தஸ்து, ஆண் – பெண் என்று எந்த பேதமும் இல்லாமல் யாரையும், எங்கும் கேலி பேசுவதும், வம்புக்கு இழுப்பதும் அவருக்குத் தீராத விளையாட்டு. கள்ளக் காதலர் களுக்கு அவர் சிம்மசொப்பனம். இளம் காதலர்கள் மட்டுமின்றி, குடியும் குடித்தனமுமாய் இருப்பவர்களின் அந்தரங்கங்களும் அவருக்கு அத்துபடி.

ஊரில் முதலில் தென்படுகிற அப்பு வீட்டு அகன்ற திரை போன்ற பெருஞ்சுவரில் எழுதப்படும் அக்கப்போர்களில் அதிகமும் அவரது கோஷ்டியின் கைங்கரியம் தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்தான். கோவில் நிர்வாகி, பெருமாள் கோவில் பட்டர் மற்றும் தர்மகர்த்தாக்களின் ஊழலும் அவரது கண்டனத்துக்குத் தப்ப வில்லை. அவரை யாரும் கண்டிக்கவோ புத்தி சொல்லவோ முடியாமல் ‘கைம்பெண் வளர்த்த பிள்ளை அப்படித்தான் இருக்கும்’ என்று அவர் அம்மாவுக்கு வசவு வாங்கித் தந்து கொண்டிருந்தார். திருமணம் ஆகி, பிள்ளை குட்டி பிறந்த பிறகும் அவரது விளையாட்டுத்தனமும் மணியப்பிள்ளை போன்ற அப்பாவிகளை வம்புக்கு இழுப்பதும் தொடரவே செய்தன.

‘கண்ணாடிப் பிள்ளை’ என்பது போல காரணப் பெயராக இல்லாமல் என்ன காரணத்தாலோ ‘காத்துப் பிள்ளை’ என்று அவருக்கு ஒரு மாற்றுப் பெயரும் ஊரில் வழங்கி வந்தது. சுப்பிரமணிய பிள்ளைக்கு மணியப் பிள்ளை என்று பெயர் வழங்கியது மாதிரி கூட புரிந்து கொள்ள முடியாத பெயர்.

உள்ளூர்வாசிகள் மட்டுமல்ல ஊருக்குத் தற்காலிகமாய்க் குடி வந்தவர்களையும், விருந்தாளியாக வந்திருப்பவர்களையும் கூட அவர் விட்டு வைப்பதில்லை. அப்படி அவரிடம் சிக்கி நிம்மதி இழந்தவர்களில் ஒருவன் கொத்தன் ராஜவேலு.

அவன் பத்து மைலுக்கு அப்பால் இருந்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன். அவனுக்கு உள்ளூரில் நேர்ந்த ஒரு சிக்கலால் அப்பா அம்மாவுடன் தற்காலிகமாக இந்த ஊரைப் புகலிடமாக்கிக் கொள்ளக் குடி வந்தவன்.

ஊரில் யாருக்கும் அவன் வந்திருப்பது பற்றியோ அதற்கான காரணம் பற்றியோ அக்கரையோ ஆர்வமோ எழவில்லை. ஆனால் காத்துப் பிள்ளையால் அப்படி இருந்து விட முடியவில்லை. ஊர்த் தலைவரோ, மணியமோ கேட்க வேண்டிய விசாரிப்புகளை
அவர் மேற்கொண்டார். சொந்த ஊரில் இருக்கப் பயந்து தலைமறைவாய் இருக்க வந்தவன் உண்மையான காரணத்தைச் சொல்லுவானோ? பிழைப்புத் தேடி வந்திருப்ப தாக அவன் சொன்னதை அவர் நம்பவில்லை. சொல்லும்போது ஏற்பட்ட அவனது முகமாற்றமும் முன்னுக்குப் பின் முரணான பேச்சும் அவரைச் சந்தேகிக்க வைத்தன. அவனது உண்மையான ஊரைக் கூட அவரால் அவனிடமிருந்து அறிந்து கொள்ள முடியவில்லை. அவரது வம்புப்பேச்சுக்குப் பயந்து அவன் அவர் கண்களில் படாமல்
நடமாடினான். அது அவருக்கு ஒரு கௌரவப் பிரச்சினை போல ஆனது.

சிதம்பரம் அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அவர் கோடை விடுமுறையில் வந்திருந்தபோது தான் ராஜவேலு என்கிற அவனைப் பற்றிக் கேள்விப் பட்டார். காத்துப் பிள்ளைதான் அவரிடம் அவனைப் பற்றிய சந்தேகத்தைச் சொல்லி,
“நீயே கேளு சிதம்பரம். என்ன மெரட்டினாலும் அவங்கிட்ட இருந்து உண்மைய வரவழைக்க முடியல” என்றார்.

சிதம்பரத்துக்கு அது நியாயமற்ற தலையீடாகப் பட்டது. ஆனாலும், காத்துப் பிள்ளையின் நிர்ப்பந்தத்தால் ஒரு நாள் காலை ஆற்றுக்குக் குளிக்கப் போகையில் ராஜவேலுவை அழைத்துப்போய் தனிமையில் பரிவுடன் விசாரித்தார். மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு அவன், சிதம்பரத்திடம் ஒரு பாதுகாப்பை உணர்ந்தவனாகத் தன் கதையைச் சொன்னான்.

அவனது கிராமத்தில் நடந்து விட்ட ஒரு பெண்ணின் கொலை சம்பந்தமாக அவன் சிக்கலில் இருந்தான். அவனும் இன்னும் மூன்று விடலைப் பையன்களுமாய் கூட்டாக திருமணமாகாத ஒரு இளம் பெண்ணுடன் கள்ள உறவு கொண்டிருந்
திருக்கிறார்கள். அந்தப் பெண்ணுடைய தகப்பன் மிகவும் மானஸ்தன். முன்கோபமும் முரட்டுத்தனமும் இயல்பாகவே அமைந்த இனத்தின் முக்கியப் புள்ளி. தன் பெண்ணின் தகாத உறவு அவனுக்கு வெகு நாட்களுக்குத் தெரியவில்லை. ஆனால் அந்தப் பெண் அதனால் கர்ப்பமுற்றது தெரிந்தபோது அவனுக்கு ஆவேசமாகி விட்டது. தன் மானத் தையும் குடும்ப கௌரவத்தையும் குலைத்த மகளை, கொஞ்சமும் இரக்கம் காட்டாமல் பாட்டி வீட்டுக்கு அழைத்துப் போவதாகச் சொல்லி பக்கத்து நகரத்தை ஒட்டி இருந்த ஒரு அடர்ந்த காட்டில் வீச்சரிவாளால் வெட்டி தலையை எடுத்துக் கொண்டு நேராகப் போலீஸ் நிலையத்திற்குச் சென்று சரணடைந்து விட்டான்.

போலீஸ் அந்த ஊருக்குப் போய் விசாரித்ததில் ராஜவேலுவும் அவனது கூட்டாளிகளும் இதில் சம்பந்தப் பட்டிருப்பது அறிந்து அவர்களைப் பிடித்துக் கொண்டு போய் லாக்கப்பில் போட்டு விசாரித்தார்கள். அடி, உதை என்று எல்லாவித போலீஸ் மரியாதைகளுக்குப் பிறகு பையன்கள் அந்தப் பெண்ணோடு தங்களுக்கு இருந்த கள்ள உறவை ஒப்புக் கொண்டார்கள். கொலை செய்தது அவர்கள் இல்லை என்பதாலும் கொலை செய்த தகப்பனே குற்றத்தை ஒத்துக் கொண்டதாலும் அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என்கிற நிபந்தனையோடு ஜாமீனில் விடுவிக்கப் பட்டிருந்தார்கள். ஆனால் உள்ளூரில் அதற்கு மேலும் இருக்கப் பயந்து கொண்டு நாலு பையன்களும் திசைக் கொருவராகப் பக்கத்து ஊர்களில் புகலிடம் தேடிப்போனபோது ராஜவேலு இந்த ஊருக்கு வந்து விட்டிருந்தான்.

ராஜவேலு தன் சோகமான கதையைச் சொல்லிவிட்டு சிதம்பரத்திடம் மேற்கொண்டு என்ன ஆகுமோ என்ற பயத்தையும், காத்துப் பிள்ளையிடம் சொல்லி மேற்கொண்டு அவனது கதையைத் துருவித் தொந்தரவு தராதிருக்கச் சொல்லும் படியும் கெஞ்சினான். பயத்தில் அவன் கிலிபிடித்தவன் போல் மிரண்டிருப்பது தெரிந்தது. அவனை நிம்மதியாய் வந்த இடத்திலும் வாழவிடாமல் காத்துப் பிள்ளை செய்வது அவனுக்குப் ‘புலியிடமிருந்து தப்பி முதலை வாய்க்குள் விழுந்தமாதிரி’ ஆகி
விட்டது. சிதம்பரத்துக்குப் பாவமாக இருந்தது.

மறுநாள் காத்துப் பிள்ளையிடம் பக்குவமாய் ராஜவேலு விஷயத்தைச் சொல்ல இருந்தபோது அவரே சிதம்பரத்தைத் தேடி வந்தார். அவரது கையில் கைக்கு அடக்கமான ஒரு சின்னப் புத்தகம் இருந்தது. பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்திய பூரிப்பு அவரது முகத்தில் தெரிந்தது.

“இதப் பாத்தியா சிதம்பரம்! இந்தப் பய சொல்லாட்டி நா கண்டுபிடிக்க மாட்டனா? டவுன் சந்தையிலே இவங் கதைய டேப் அடிச்சுப் பாடுறான். இதுதான் அந்தக் கொலைச் சிந்து!” என்று அந்தப் பிரசுரத்தை சிதம்பரத்திடம் நீட்டினார். அதில் ராஜவேல் சொன்ன கதை முழுதும் பாட்டாக எழுதப் பட்டிருந்தது.

அப்போதெல்லாம் பரபரப்பான கொலை கொள்ளைச் செய்திகள் சூடு தணியு முன்பாக, இதுபோல சிந்து பாடி சிறு பிரசுரமாக அச்சிட்டு ஒர் அணா, ரெண்டணா விலையில் சந்தை போன்ற மக்கள் கூடும் இடங்களில் டேப் அடித்துப் பாடி விற்கப்படும்.

“ராஜவேலு எங்கிட்ட எல்லாத்தியும் சொல்லிட்டான். பாவம்! அவன விட்டு ருங்க. நீங்க முரட்டுத்தனமா கேட்டதுலே பயந்துட்டான்” என்றார் சிதம்பரம்.

“அதெப்படி விட்டுடுறது? எங்கிட்டியே மறைச்சா உட்றுவனா? இப்ப அவங்கிட்ட இதக் காட்டி ஒரு உலுக்கு உலுக்கிட்டுதான் வரேன்” என்றார் வெற்றிப் பெருமிதத்துடன். அதோடு “ஜெயில்ல இருக்குற அப்பன்காரன் ஜாமீன்ல வெளீல வந்து உங்க நாலு பேரையு தீர்த்துக் கட்டப் போகிறானாம்” னும் செல்லி வச்சேன்” என்று கெக்கலி கொட்டினார். பாவம், ராஜவேல் அதைக் கேட்டு குற்றுயிரும் கொலை உயிருமாய் ஆகி இருப்பான் என்று மனம் கசிந்தார் சிதம்பரம்.

“போவுது இத்தோட விட்டுடுங்க! ஓடுறவன விரட்டுறது வீரமில்லே!” என்று காத்துப் பிள்ளையைத் தடுத்து ராஜவேலுவை ஆற்றுப் படுத்தியது நினவுக்கு வந்தது. அதை நினைவூட்டி இப்போது மருதுவிடம் சொன்ன போது அவன் சொன்னான்: “ஆயிரம் அடாவடித்தனம் இருந்தாலும் அவுரு தன்னோடத் தம்பியை உங்கள மாதிரியே காலேஜுல படிக்க வைக்கணும்னு ஆசப்பட்டு நீங்க படிச்ச காலேஜுலியே படிக்க வச்சாரே அதுக்காகப் பாராட்டணும்”

“உண்மைதான். ஹைஸ்கூல் வரைக்கும் கடன் வாங்கியோ எப்பிடியோ படிக்க வச்சார். அப்புறமா தன்னாலே முடியாமெ சொத்து வருதுண்ணு காலேஜுக்குப் போறதுக்கு முன்னாலே ஒறவுலே கல்யாணமும் பண்ணி வச்சுட்டாரு. நாங்கள்லாம் ஹாஸ்டல்லே தங்கிப் படிச்சப்போ அவரோட தம்பி டவுன்ல ஒரு சின்னப் போர்ஷன்ல வாடகைக்கி புது மனைவியோட தங்கிக்கிட்டு படிச்சார். அதுவும் இண்டருக்கு மேலே முடியல. அப்றம் என்ன ஆச்சுன்னு தெரியல!” என்றார் சிதம்பரம்.

“அதுக்கு மேல காத்துப் பிள்ளைக்கு சக்தி இல்லே. அவுரு தம்பி டவுன்ல டைப் அடிக்கக் கத்துத் தர ஒரு எடத்தை வாடகைக்குப் பிடிச்சி, நாலஞ்சு மிஷின வாங்கிப் போட்டு ஆரம்பிச்சாரு. அதுல தான் வந்துது வினையே!” என்று சற்றே நிறுத்தினான் மருது.

அப்பொழுது சிதம்பரம் வேலைக்காக வெகு தொலைவுக்குப் போய்விட்டதால் அதெல்லாம் அவருக்குத் தெரிந்திருக்க வில்லை.

“ஏன், என்ன ஆச்சு?” என்றார் ஆர்வமாக.

“டைப் சொல்லித் தர ஒரு பெண்ணை உதவிக்கு வச்சார். அவ அவரை மயக்கி ரிஜிஸ்தர் கல்யாணம் பண்ணிக்கிட்டா. அதோட விடுல. அவர் பங்குக்கு இருந்த வீடு நெலம் எல்லாத்தையும் வித்துக் காசாக்கி அவரையும் வற்புறுத்தி
அழச்சிக்கிட்டு தன்னோட சொந்த ஊரான கோயம்புத்துருக்குக் கொண்டு போய்ட்டா. ஊரை எல்லாம் நையாண்டி பண்ணிய காத்துப் பிள்ளைக்கு இப்ப ஊரே தன்னைப் பாத்து நையாண்டி பண்ற மாதிரி ஆயிடுச்சேன்னு மனசு ஒடஞ்சு போய்ட்டுது. தம்பிய வளத்து ஆளாக்கப் பாடு பட்டவருக்குத் தன் பிள்ளைகள அப்படிச் செய்ய முடியாம போயிடுச்சி. அவுரு தம்பியும் சீக்கிரமே ரெண்டாவது
பொண்டாட்டியோட கொடுமத் தாங்காம பூச்சி மருந்து குடிச்சி செத்துப் போய்ட்டார்னு சேதி வந்துது. காத்துப்பிள்ளை அப்ப படுத்தவர்தான். அப்றம் எழுந்திருக்கவே இல்லே. மொதல் சம்சாரமும் கொழந்தையும் பொறந்த ஊட்டோடப் போய்ட்டாங்க. நல்லா வாழ்ந்த குடும்பம் இப்படிச் செதறிப் போச்சு” என்று இரக்கத்தோடு சொன்னான் மருது.

சிதம்பரத்துக்குக் கேட்க மிகவும் கஷ்டமாக இருந்தது. “வா, போகலாம்” என்றபடி நடந்தார்.

(தொடரும்)


v.sabanayagam@gmail.com

Series Navigation

author

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்

Similar Posts