சி. ஜெயபாரதன், கனடா
உன்னைப் பற்றி உரைத்துள்ளார் ஆண்டனி,
நம்பத் தகுந்த நபரென்று ! உமது தளபதி
என்னை ஏமாற்றி னாலும் ஏற்புடைத்தே !
எகிப்த் அரசியைப் பிச்சை எடுக்க வைத்தால்
இப்படிக் கேட்பாள் என்று அவரிடம் சொல் !
“எகிப்த் நாட்டுக்கு மீண்டும் என்னையே
பட்டத்து ராணி யாக்கு என்றுதான் !
என் வசப்பட்ட நாடுகளை மகனுக்கு நான்
ஈவதுபோல், அளிக்க வேண்டும் அக்டேவியஸ் !
முன்னால் அவருக்கு மண்டி யிட்டு
நன்றி சொல்லத் தயார் என்றும் சொல் ! … (புரோகியூலியஸிடம் கிளியோபாத்ரா)
வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
சிறையில் கிடப்பேன் என்று எண்ணாதீர் !
மதுவருந்த மாட்டேன் நான் அங்கு !
புலால் உண்ண மாட்டேன் நான் அங்கு !
வைக்கோல் மெத்தையில் துயில மாட்டேன் !
ரோமானிய மன்றக் கூண்டில் என்னை
ஏற்றலாம் என்று கனவு காணாதீர் !
ரோமானிய வீதிகளில் என்னை
வெற்றிச் சிறை மாதாய்க் காட்டி
சுற்றிடலாம் என்று எண்ணாதீர் !
அதற்குப் பதிலாக எகிப்த் குப்பைக் கிடங்கில்
புதைந்து போவதில் பூரிப்ப டைவேன் !
என்னாட்டில் மாபெரும் பிரமிட் ஆலயம்
எழுந்து நிற்குது என்னை ஏற்றுக் கொள்ள ! (கிளியோபாத்ரா)
வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
Fig. 1
Cleopatra in Agony
+++++++++++++++
ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்
நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்
ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ்: ரோமின் மூன்றாம் தளபதி
எனோபர்பாஸ்: ஆண்டனியின் ஆலோசகன், பாதுகாவலன்
கானிடியஸ்: ஆண்டனியின் போர்த் தளபதி
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
·பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன், இளைய பாம்ப்பி)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)
கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -1
ரோமா புரியின் நிலைமை: ·பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி ·புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள்.
எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள். ஆண்டனி எகிப்துக்கு மீண்டு மனைவியை மறந்து கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்து மயங்கிக் கிடக்கிறான். ஆண்டனியைத் தண்டிக்க அக்டேவியஸ் ரோமானியப் படையுடன் ஆக்டியக் கடற் பகுதியில் போரிட்டு வெற்றி அடைகிறான். தோற்றுப் போன ஆண்டனி ஆக்டேவியஸ் தூதரை விட்டு அனுப்பிய நிபந்தனைகளில் கையொப்பமிடுகிறான். ஆயினும் இருவருக்குள்ளும் நிரந்தரப் பகை உண்டாகி, ஆண்டனி எகிப்தில் அடைபட்டுப் போகிறான். போரில் தோல்வியுற்று அவமானப் பட்டு வேதனையில் உள்ள போது, கிளியோபாத்ரா அவன் கவனத்தைக் கவரத் தான் செத்து விட்டதாகச் செய்தி அனுப்புகிறாள். ஆண்டனி மரணத் தகவல் கேட்டு மனமுடைந்து, தன் கத்திமேல் பாய்ந்து தன்னுயிரை மாய்த்துக் கொள்கிறான். உயிர் பிரிவதற்குள் கிளியோபாத்ராவைக் கண்டு பேசி அவள் முன்பாக ஆண்டனி உயிரை விடுகிறான். அக்டேவியஸ் ஆண்டனி இறந்த செய்தியைக் கேட்டு, கிளியோபாத்ராவுக்குத் தூதனை அனுப்புகிறான்.
++++++++++++++++++
Fig. 2
Cleopatra with her Son
கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -1
நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாத்ராவின் தனியறை. பகல் வேளை.
நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, மகன் சிஸேரியன் (எட்டு வயது), ஈராஸ், சார்மியான், புரோகியூலியஸ், அக்டேவியஸ், தொலபெல்லா, மற்றும் ரோமானியப் படையினர்.
காட்சி அமைப்பு: கிளியோபாத்ரா ஆண்டனி மரித்த துக்கத்தில் சோகமாய்க் கண்ணீருடன் வீற்றிருக்கிறாள். பக்கத்தில் மகன் சிஸேரியன் தாயின் சோகத்தைக் கண்டு வருந்துகிறான். அப்போது அக்டேவியஸின் தூதன் புரோகியூலிஸ் நுழைகிறான்.
சிஸேரியன்: [தாயின் கண்ணீரைத் துடைத்து] அன்னையே ! ஏன் உங்கள் கண்கள் சிவந்துபோய் உள்ளன ? கண்கள் என்றும் இல்லாதபடி ஏனின்று கண்ணீரைப் பொழிகிறது ?
கிளியோபாத்ரா: [வருத்தமுடன் மகன் சிஸேரியனை பார்த்து] மகனே ! மனப்புண் ஆறாமல் போகும் போது அது கண்களில் ஆறாகப் பெருகுகிறது. மனத்தின் கொதிப்பே கனல் நீராகக் கண்களில் சிந்துகின்றன.
சிஸேரியன்: அன்னையே ! மனப் புண்ணுக்கு மருந்தில்லையா ?
கிளியோபாத்ரா: ரணப் புண்ணுக்குத்தான் மருந்துண்டு ! மனப் புண்ணுக்கு மருந்தில்லை மகனே ! தீராக் கவலையே ஆறா மனப் புண்ணை உண்டாக்கும்.
சிஸேரியன்: தீராக் கவலை எப்படி உண்டானது அன்னையே ?
கிளியோபாத்ரா: தீராக் கவலை முதலில் உன்னைப் பற்றி ! ஆறாக் கவலைப் பிறகு என்னைப் பற்றி ! என்னை முதலில் பாதுகாத்த உன் மாவீரத் தந்தை சீஸர் கொல்லப்பட்டு மாண்டார் ! பிறகு என்னைக் காப்பாற்றி வந்த ஆருயிர்க் காதலர் ஆண்டனி உயிரை மாய்த்துக் கொண்டார் ! இனி நமக்குத் துணைவர் யாருமில்லை ! அதனால் எனக்கு ஆறாக் கவலை ! உன்னைக் காத்து வந்த எனக்கு இப்போது அபாய எச்சரிக்கை வந்திருக்கிறது ! உன்னை இனிமேல் யார் பாதுகாப்பது என்பது எனக்குத் தீராக் கவலை !
Fig. 3
Son Caesarian
சிஸேரியன்: அன்னையே நீங்கள் இப்படி அஞ்சியதை நான் இதுவரைக் கண்டதில்லையே ! என்ன அபாயம் உங்களுக்கு வரப் போகிறது ? நமது எகிப்த் படைகள் இருக்க ஏன் பயப்பட வேண்டும் ?
கிளியோபாத்ரா: நீ ரோமாபுரிக்கு வேந்தன் ஆவாய் என்னும் கனவு உன் தந்தை சீஸர் செத்ததும் அழிந்து போனது ! நீ எகிப்துக்கு பாரோ பரம்பரை வேந்தனாய் ஆளுவாய் என்னும் கனவு ஆண்டனி மரித்ததும் அழிந்து போனது ! இப்போது உன் உயிரைக் காப்பது எப்படி என்பதே பிரச்சனையாகி விட்டது ! நமது பகைவரின் படைப்பலம் நம்மை விடப் பலமடங்கு மிகையானது !
சிஸேரியன்: நான் எங்கே போக வேண்டும் அன்னையே ? எகிப்த்துக்கு என்ன நேரிடப் போகுது ?
கிளியோபாத்ரா: என்ன நடக்கும் என்று எனக்கே தெரியாது மகனே ! நம் நாட்டுக்குப் பாதுகாப்பாக இருந்த வேலி முறிந்து போனது ! எந்த நேரத்திலும் எகிப்தைக் கைப்பற்றிப் பகைவர் நம்மை மீண்டும் அடிமைப் படுத்தலாம். ஆதலால் என்னுடன் வாழ்ந்த நீ இப்போது வேறு இல்லத்தில் வாழப் போகிறாய். அன்னியருடன் நீ வாழப் போகும் தருணம் வந்து விட்டது ! என்னை மீண்டும் காணும் தருணம் எப்போது என்பது தெரியாது ! நான் உன்னைப் பிரியும் வேளை வந்து விட்டது மகனே ! [கண்ணீருடன் கட்டிப் பிடித்து முத்தமிடுகிறாள்] [சார்மியானைப் பார்த்து] சார்மியான் சிஸேரியனை அழைத்துச் செல் ! நான் ஏற்பாடு செய்த நபரிடம் அடைக்கலம் செய்திடு ! சீக்கிரம் போ ! யாரோ வருகிறார் [மகனைத் தழுவி மீண்டும் முத்தமிடுகிறாள். சார்மியான் சிஸேரியனை அழைத்து விரைவாகச் செல்கிறாள்.]
[அப்போது வேறு திசையிலிருந்து அக்டேவியஸின் தூதன் புரோகியூலியஸ் நுழைகிறான்]
புரோகியூலியஸ்: [மகாராணிக்கு வந்தனம் செய்து] மகாராணி ! என்பெயர் புரோகியூலியஸ். ரோமாபுரித் தளபதி அக்டேவியஸ் அனுப்பிய தூதன் நான் ! நல்ல தகவலைக் கொண்டு வந்திருக்கிறேன் ! உங்களுக்கு அக்டேவியஸ் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறார் ! ரோமாபுரித் தளபதி ஆண்டனி உங்கள் நாட்டிலே உயிர் மரித்ததற்கு வருத்தம் தெரிவிக்கிறார் !
கிளியோபாத்ரா: ஓ ! நீதான் புரோகியூலியஸா ? நினைவிருக்கிறது எனக்கு. ஆண்டனி உன்னைப் பற்றி என்னிடம் சொல்லி இருக்கிறார். உன்னை நம்பலாம் என்றும் என்னிடம் சொல்லி இருக்கிறார். என்னை நீ ஏமாற்றினாலும் அதுவும் ஏற்புடையதே. உங்கள் தளபதி எகிப்த் மகாராணியைப் பிச்சைக்காரி ஆக்க நினைத்தால் அவரிடம் நீ சொல் ! எகிப்த் நாட்டைக் கொடுத்து என்னை மீண்டும் பட்டத்து ராணியாக்கு என்றுதான் பிச்சை கேட்பேன் என்று சொல் ! இன்னும் சொல்லப் போனால், எகிப்தைச் சேர்ந்த நாடுகளுக்கு என் மகனை வேந்தனாக்கு என்று பிச்சை கேட்பேன் என்று சொல் ! என் கைவசமுள்ள நாடுகளை மகனுக்கு நான் அளிப்பதுபோல், அக்டேவியஸ் அவனுக்குத் தரவேண்டும். அதற்கு அவர் முன்னால் நான் மண்டியிட்டுக் கேட்கவும் தயார் என்று சொல் !
Fig. 4
Cleopatra Surrenders to
Proculeius
புரோகியூலியஸ்: [மகிழ்ச்சியோடு] அஞ்ச வேண்டாம் மகாராணி ! தளபதி அக்டேவியஸ் உங்களைப் பரிவுடன் நடத்துவார் ! ஆசைப் பட்டதை அவரிடம் கேளுங்கள் ! அளிப்பார் அவர் ! உங்கள் கோரிக்கையை அவரிடம் சொல்கிறேன் ! அவரை அன்புடன் நாடும் உங்களைப் பற்றி எடுத்துச் சொல்வேன் உறுதியாக ! எங்கள் வெற்றிப் பிரபு உங்களை மதிப்புடன் வரவேற்பார்.
கிளியோபாத்ரா: [மிக்கப் பணிவுடன்] அக்டேவியஸின் ஆணைக்குக் கட்டுப்படும் மகாராணி நான். அவரை எகிப்த் நாட்டின் தலைவராக ஏற்றுக் கொண்டு என் வாழ்த்துக்களை அனுப்புகிறேன்.
புரோகியூலியஸ்: உங்கள் பணிவான வாழ்த்துக்களைத் தளபதிக்கு வழங்குகிறேன் மகாராணி ! ஆண்டனி மரித்துத் தனியாகப் போன உங்கள் பரிதாப வாழ்வுக்கு வருந்துகிறேன் !
[அப்போது பெருத்த ஆரவாரம் கேட்கிறது. திடீரென பத்துப் பதினைந்து ரோமானியப் படையினர் உள்ளே புகுந்து கிளியோபாத்ராவைக் கைது செய்கிறார்]
ஈராஸ்: [ஓவென்று அலறிக்கொண்டு] மகாராணி ! என்ன வஞ்சம் இது ?
[சார்மியான் தனியாக ஓடி வருகிறாள்]
சார்மியான்: [கோபத்துடன்] மூர்க்கர் ! முரடர் ! வஞ்சகர் !
புரோகியூலியஸ்: [தாழ்மையுடன்] மன்னிக்க வேண்டும் மகாராணி ! ரோமானியச் சம்பிரதாயம் இது ! ரோமானியப் படையினர் உங்களை இனிமேல் பாதுகாப்பார் ! பயப்பட வேண்டாம் ! எங்கே உங்கள் மகன் சிஸேரியன் ? அவனுக்கும் தனியாக ரோமானியப் பாதுகாப்பு உண்டு. [ரோமானியப் படைகளிடம்] அக்டேவியஸ் வரும்வரை கிளியோபாத்ராவைப் பாதுகாப்பீர் !
கிளியோபாத்ரா: [திடீரென்று தன் வாளை உருவிப் படைகளை நோக்கி] தொடாதீர் என்னை ! என் மகன் எங்குள்ளான் என்பது தெரியாது. [புரோகியூலியஸைப் பார்த்து] தேனாகப் பேசிய தெல்லாம் தேளாகக் கொட்டுவதற்கா ? ரோமானியர் யோக்கியர் என்று தவறாக எடை போட்டு விட்டேன் ! உங்களிடம் சிறைப்படும் முன்பு நான் உயிருக்கு விடுதலை அளிப்பேன் !
Fig. 5
Cleopatra under House-Arrest
புரோகியூலியஸ்: [வேகமாய் நெருங்கி] மகாராணி ! வேண்டாம் ! அது தவறு ! உங்கள் உயிரைப் போக்கிக் கொள்ள முனையாதீர் ! அஞ்ச வேண்டாம் ! அக்டேவியஸ் உங்களுடன் நேராக உரையாடப் போகிறார் ! ரோமானியப் பாதுகாப்பு அதற்குத்தான். [கிளியோபாத்ராவின் கைவாளைப் பிடுங்கிக் கொள்கிறான்]
கிளியோபாத்ரா: [கோபத்துடன்] உங்கள் தளபதியைக் காண எனக்கு விருப்ப மில்லை இப்போது ! வஞ்சகருடன் உரையாட விருப்ப மில்லை எனக்கு ! ஆண்டனி மரித்த நாளே நானும் மரணம் அடைந்திருக்க வேண்டும் ! காலம் தாமதித்தது தவறாகப் போனது.
புரோகியூலியஸ்: ரோமானியப் பாதுகாப்பில் மகாராணிக்கு எந்த மானபங்கமும் நேராது ! அஞ்ச வேண்டாம் ! அக்டேவியஸ் பரிவு மிக்கவர் ! உங்களையும், உங்கள் அருமைப் புதல்வனையும் ரோமாபுரிக்கு அழைத்துச் செல்ல அக்டேவியஸே நேராக வரப் போகிறார் !
கிளியோபாத்ரா: [கோபத்துடன்] அயோக்கியர்களே ! அருகில் நிற்காதீர் ! நான் சிறையில் கிடப்பேன் என்று எண்ணாதீர் ! புலால் உண்ண மாட்டேன் நான் ! மதுவருந்த மாட்டேன் நான் ! வைக்கோல் மெத்தையில் துயில மாட்டேன் ! பட்டினி கிடந்து சாவேன் ! ரோமானிய மன்றக் கூண்டில் என்னை ஏற்றலாம் என்று கனவு காணாதீர் ! ரோமானிய வீதிகளில் என்னைச் சிறை மாதாய் இழுத்துச் சென்று சித்திரவதை செய்யலாம் என்று கோட்டை கட்டாதீர் ! அதற்குப் பதிலாக எகிப்த் குப்பைக் கிடங்கில் புதைந்து போவதில் பூரிப்படைவேன் ! பிரம்மாண்டமான பிரமிட் புதை ஆலயம் எழுந்து நிற்கிறது என்னை ஏற்றுக் கொள்ள ! தள்ளி நிற்பீர் ! உங்கள் மூச்சுக் காற்று கூட என்மீது படக் கூடாது ! உமது வாய் எச்சில் என் மீது சிதறக் கூடாது ! தள்ளி நிற்பீர் !
(தொடரும்)
*********************
Based on The Plays:
1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]
2. William Shakespeare’s Julius Caesar [Play-2]
3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]
4. Britannica Concise Encyclopedia [2003]
5. Encyclopedia Britannica [1978 & 1981]
6. Life of Antony By: Plutarch
7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.
8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia
9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]
10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]
11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (July 24, 2007)]
- சூட்டு யுகப் பிரளயம் ! ஈரோப்பில் வேனிற் புயல் ! இங்கிலாந்தில் பேய்மழை ! -6
- விநாயகர் துதி!
- மரணம் அழகானது
- (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -1 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)
- கடிதம்
- கடிதம்
- கலைச்செல்வன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நிகழ்வு
- மைதாஸ்
- புலமைக் காய்ச்சலும் கவிஞருக்கான உரிமமும்
- சில வரலாற்று நூல்கள் 2 – திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு – ஹெச்.ஆர்.பேட் ஐ.சி.எஸ்
- பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 9
- கவிதை சுடும் !
- அரவிந்தன் நீலகண்டனின் அற நெறி!?
- தமிழ் இலக்கியத் தோட்டம் – வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது
- நல்லடியாருக்கு / மலர்மன்னனுக்கு நான்கு கேள்விகள்:
- ஈரோடு புத்தகத் திருவிழா – 2007
- அன்பாதவனின் ‘மாயவரம்’ (ஹைபுன்கள்), ‘மனத்தினுள் மழை’
- ஒரு தாயின் புலம்பல்
- ஓவியத்தில் இருந்து நான் ஓவியத்தை எடுப்பதில்லை ஓவியர் கா. பாஸ்கருடனான கலந்துரையாடல்
- புரிந்துகொள்ளல்
- போர் நாய்
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் இருபது: இந்திராவின் சந்தேகம்!
- மும்பை குண்டுவெடிப்பு தீர்ப்புகளும், கோவை எதிர்பார்ப்புகளும்
- காதல் நாற்பது – 31 என்னை நெருங்கி நில் !
- வெள்ளை மாளிகை வல்லரசர் !
- நாட்டாண்மை, பஞ்சாயத்து மற்றும் ஜமாத்தார்களுக்கு!
- தீர்வு
- வீராயி
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 20
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 16