சி. ஜெயபாரதன், கனடா
(கிளியோபாத்ரா இறந்த செய்தி கேட்டு)
என் உடைவாளை அகற்று ஈராஸ் !
இன்றைய நீள் பொழுதின் வேலை முடிந்தது !
தூங்கும் நேரம் வந்து விட்டது ! ……..
ஏழடுக்குக் கவச அணியும்
என்னுள்ளத் துடிப்பை அடக்க முடியாது !
ஒரு காலத்தில் உடம்பை விட
உறுதியாய் இருந்தது என்னிதயம் !
மிருதுவான உடற் கூண்டை
நொறுக்கி விடு ! போதும் போர் புரிந்தது !
உன்னுடன் இணைவேன் கிளியோபாத்ரா !
மன்னிப்பு வேண்டிக் கண்ணீர் விடுகிறேன்.
என் நீண்ட ஆயுள் முடிந்தது
எரித்தீபம் அணைந்து போனதால் !
தணிந்து போ ! நடமாட்டம் போதும் !
இனிமெய் வருந்திச் செய்யும் எனது
பணிகளால் விளைவது மனச் சிதைவே !
என்னினிய ராணி ! உன்னிடம் வருகிறேன் !
எனக்காக நீ காத்திரு ! ….. (ஆண்டனி)
வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
கிளியோபாத்ரா மரித்துப் போயினள்,
அவமானப் பட்டு வாழ்ந்து வருகிறேன்.
தெய்வங்கள் அறவே வெறுக்கும் என்னை !
மாதரின் மனவலு வில்லா மனிதனாய்
தாழ்த்திக் கொள்கிறேன் என்னை ! ….
என் ஆணைக்குப் பணிந்து நீ
என்னைக் குத்திட வேண்டும்
இப்போதே முடித்திடு (ஈராஸ்) ! ….. (ஆண்டனி)
வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
ரோமாபுரி இல்லத்தின் பலகணியில் நீ நின்று
உன் பிரபு தலை கவிழ மண்டி யிட்டு
கைகள் கட்டப் பட்டு வெளுத்துப் போய்
கழுத்தொடிந்து சோக முகத்துடன்
அவமானம் நெஞ்சத்தை ஊடுருவ,
இரு சக்கர வாகனத்தில் அக்டேவியஸ்
செருக்குடன் அவன்முன் கடந்து செல்லும்
சீரழிவுக் கோலத்தை நேராய்ப் பார்க்கிறாயா ? (ஈராஸிடம் ஆண்டனி)
வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்
நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்
ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ்: ரோமின் மூன்றாம் தளபதி
எனோபர்பாஸ்: ஆண்டனியின் ஆலோசகன், பாதுகாவலன்
கானிடியஸ்: ஆண்டனியின் போர்த் தளபதி
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
•பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன், இளைய பாம்ப்பி)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)
கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 8
ரோமா புரியின் நிலைமை: •பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள்.
எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள். ஆண்டனி எகிப்துக்கு மீண்டு மனைவியை மறந்து கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்து மயங்கிக் கிடக்கிறான். ஆண்டனியைத் தண்டிக்க அக்டேவியஸ் ரோமானியப் படையுடன் ஆக்டியக் கடற் பகுதியில் போரிட்டு வெற்றி அடைகிறான். தோற்றுப் போன ஆண்டனி ஆக்டேவியஸ் தூதரை விட்டு அனுப்பிய நிபந்தனைகளில் கையொப்பமிடுகிறான். ஆயினும் இருவருக்குள்ளும் நிரந்தரப் பகை உண்டாகி, ஆண்டனி எகிப்தில் அடைபட்டுப் போகிறான். போரில் தோல்வியுற்று அவமானப் பட்டு வேதனையில் உள்ள போது, கிளியோபாத்ரா அவன் கவனத்தைக் கவரத் தான் செத்து விட்டதாகச் செய்தி அனுப்புகிறாள். ஆண்டனி மரணத் தகவல் கேட்டு மனமுடைந்து தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முனைகிறான்.
++++++++++++++++++
கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 8
நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியா அரண்மனையில் கிளியோபாத்ராவின் மாளிகை. பகல் வேளை.
நாடகப் பாத்திரங்கள்: ஆண்டனி, படைத்தளபதி ஈராஸ், டையமீடிஸ் (கிளியோபாத்ராவின் தூதன்], காவலளர்கள்.
காட்சி அமைப்பு: மர்டியான் கிளியோபாத்ரா அனுப்பிய பொய் மரணச் செய்தியைக் கேட்டு மெய்யெனக் கருதி, ஆண்டனி மனமுடைந்து தன்னுயிரை மாய்த்துக் கொள்ளத் துணிகிறான். அதற்கு ஈராஸ் உதவியை நாடுகிறான் ஆண்டனி.
ஆண்டனி: [மனமுடைந்து, கண்ணீருடன்] ஈராஸ் ! என் கண்மணி கிளியோபாத்ரா தன்னுயிர் நீத்தபின் எனக்கினி எகிப்தில் வேலை இல்லை ! என் போருடையை அகற்று ! அதற்கும் இனி ஓய்வுதான் ! என் உடைவாளை உறைக்குள் போட்டு என்னோடு புதைத்து விடு. எனக்கும் விடுதலை ! என் உடைவாளுக்கும் விடுதலை ! நான் உறங்கச் செல்ல வேண்டும் ! மீண்டெழாத நீண்ட தூக்கத்தில் ஆழ்ந்துவிட வேண்டும். அதுவே நிம்மதி அளிக்கும் எனக்கு ! கிளியோபாத்ராவுடன் இணைந்து கொள்ள வேண்டும் நான் ! திசை தெரியாமல் போய்க் கொண்டிருந்த எனக்கு, போகும் திசையைக் காட்டியவள் கிளியோபாத்ரா ! சொல்லிக் கொள்ளாமல் போன கிளியோபாத்ராவின் திடீர் மரணம் என் இதயத்தில் துடிப்பு அலைகளை உண்டாக்கி விட்டது. ஏழடுக்குக் கவச உடுப்பு கூட அந்த துடிப்பை அடக்க முடியாது ! ஒரு காலத்தில் என்னிதயம் உடலை விட ஊக்கமோடும், உறுதியோடும் இருந்தது. இப்போது என் உடலில் கீறல் விழுந்து விட்டது. கிளியோபாத்ரா எனக்காகக் காத்திருப்பாள் ! அவளுடன் நான் சேர்ந்து கொள்ள வேண்டும். அதற்கு நீ உதவுவாயா ஈராஸ் ?
ஈராஸ்: [கவலையோடு] தளபதி ! என்ன சொல்கிறீர் ? எனக்குப் பயமாக இருக்கிறது. என்ன உதவி செய்ய வேண்டும் நான். பிரமிடுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமா ? கிளியோபாத்ரா மரித்துக் கிடக்கும் இடத்துக்கு உம்மை அழைத்துச் செல்வதில் எனக்குச் சிரமம் இல்லை ! அது ஒன்றும் பெரிய உதவி இல்லை.
ஆண்டனி: ஈராஸ் ! அந்த உதவியை நான் உன்னிடம் கேட்க வில்லை. கிளியோபாத்ரா மரணத்துக்கு நான்தான் காரண கர்த்தா ! அக்டேவியஸிடம் நான் தோற்றுப் போனதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை ! அவளைக் காப்பாற்ற வந்த அதி வீரன் நான் தோற்றுப் போய் என்னுயிரைக் காப்பாற்ற வேண்டிய அவமான நிலை எனக்கு ! எப்படிப் பொறுத்துக் கொள்வாள் அத்தோல்வியை ? என் ஆண்மை வீரம் அழிந்துபோய், பெண்ணுக்குள்ள நெஞ்சுறுதி கூட இல்லை என்னும் கேவல நிலைக்கு வீழ்ந்து விட்டேன். நான் அக்டேவியஸின் சிறையில் அவமானப் படுவதை விட உயிரை மாய்த்துக் கொள்வதே முறையானது என்னும் முடிவுக்கு வந்து விட்டேன். எனக்கு முன்பே நீ வாக்களிதிருக்கிறாய். அந்த ஒப்பந்தப்படி நான் ஆணையிட்டால் அதை நிறைவேற்றுவாயா ?
ஈராஸ்: [நடுங்கிக் கொண்டே] என்ன ஆணை என்று தெரியாமல் நான் எதுவும் ஒப்புக் கொள்ள முடியாது, தளபதி.
ஆண்டனி: ஈதோ என் உடைவாள் ! அதை என் உடலில் பாய்ச்ச வேண்டும் ! ஆம் அதுதான் என் ஆணை ! உடனே செய் ஈராஸ் ! தருணம் வந்து விட்டது ஈராஸ், என் மரணத்தை நானே முடித்துக் கொள்ள ! நீ எனக்கு மரண வாசலைத் திறந்திடுவாயா ?
ஈராஸ்: [கண்களில் விழி பிதுங்க] தளபதி ! என்னால் முடியாது ! நான் வாக்களித்தது இதுவன்று. இந்த பயங்கரக் கொலையை நான் செய்ய முடியாது ! நான் பணிபுரியும் ரோமாபுரிப் பிரபுவின் உடல் மீது இந்தக் கை எப்படி உடைவாளை உள்ளே செலுத்தும் ? வலுமிக்க என் கைகள் வலுவிழந்து தொங்குகின்றன ! எப்படிச் செய்வேன் இந்த மரண வேதனையை ? மன்னிக்க வேண்டும் தளபதி ! உங்கள் உயிரைக் காப்பது என் பணியே தவிர, உயிரைப் பிரிப்பதில்லை ! என் வாக்கை நான் மீறத் தயார் ! ஆனால் உங்கள் உயிரைப் போக்க நான் தயாரில்லை ! அழகிய மாது அக்டேவியா விதவை ஆவதை நான் தாங்கிக் கொள்ள முடியாது ! தெய்வங்கள் என்னைத் தண்டிக்கும் ! தீராத மன நோயில் வெந்து சாவேன் !
ஆண்டனி: ஈராஸ் ! ரோமாபுரி இல்லத்தின் பலகணியில் நீ நின்று கொண்டு, தெரு வழியே உன் பிரபு சிரம் கவிழ்ந்து, மண்டியிட்டுக் கைகள் கட்டப்பட்டு வெளுத்துப் போய் சோக முகத்துடன் அவமானம் நெஞ்சத்தை உள்ளே அரித்து வர, இரு சக்கிரத் தேரில் அக்டேவியஸ் இறுமாப்புடன் கடந்து செல்லும் சீரழிவுக் கோரத்தைக் காண விரும்புகிறாயா ?
ஈராஸ்: [முகத்தைத் திருப்பிக் கொண்டு] வேண்டாம் அந்த அவமானம் உங்களுக்கு தளபதி ! என்னால் அதையும் தாங்கிக் கொள்ள முடியாது பிரபு !
ஆண்டனி: அப்படியானால் என் வேண்டுகோளை நிறைவேற்று ! இக்கணமே நிறைவேற்று ! என் வாளைத் தொட அஞ்சினால் உன் வாளால் என்னைக் குத்திவிடு ! ஒரே ஒரு முறைதான் ! அது என் இறுதி ஆணை. நாட்டுக்கு உதவிய உன் போர்வாளால் ஓர் உன்னத பணியை எனக்குச் செய் !
ஈராஸ்: மன்னித்திடுவீர் ! மறுக்கிறேன் உங்கள் கட்டளையை !
ஆண்டனி: சொன்னதைச் செய் ! உருவிடு உன் வாளை ஈராஸ் ! என் வேளை நெருங்கி விட்டது ! உன் கடமை என் கட்டளைக்குப் பணிவது ! ஒருமுறை மட்டும் பணிந்திடு ! உனக்கினி ஆணை என்னிடமிருந்து வராது !
ஈராஸ்: [மனம் ஒப்பிக் கண்ணீருடன்] நானிதைச் செய்ய வேண்டு மென்றால் நீங்கள் அப்புறம் திரும்பிக் கொள்ள வேண்டும். உங்கள் உன்னத முகம் நான் செய்வதைக் காணக் கூடாது !
ஆண்டனி : சரி, உன் ஆணைக்கு நான் அடி பணிகிறேன். [ஆண்டனி அப்புறம் திரும்பிக் கொள்கிறான். ஈராஸ் தன் வாளை உருவுகிறான்]
ஈராஸ்: [மனம் வெதும்பி அழுகையுடன்] உருவி விட்டேன் என் வாளை, உங்கள் கட்டளைப்படி ! கட்டளை நிறைவேற வேண்டுமா ?
ஆண்டனி: நன்றி ஈராஸ் ! ஓங்கிக் குத்து ! ஒரே குத்திலே என் வாழ்வு முடிய வேண்டும் ! செய், சீக்கிரம் செய். என்ன சிந்தனை செய்கிறாய் ?
ஈராஸ்: என்னரிய பிரபு ! என்னினிய தலைவா ! என்னுயர்ச் சக்கரவர்த்தி ! என்னிறுதி வணக்கம் ! ஓங்கிக் குத்துவதற்கு முன் உம்மிட மிருந்து விடை பெறுகிறேன் ! விடை பெறுகிறேன் ! விடை அளிப்பீர் என் வேந்தே ! [கத்தியைத் தன் வயிற்றிக் குத்திக் கொண்டு அலறிய வண்ணம் வலியுடன் கீழே துடித்து வீழ்கிறான். குருதியில் புரள்கிறான்.]
ஆண்டனி: [திரும்பிக் கொண்டு கீழே குனிந்து ஈராஸைத் தாங்கிக் கொண்டு] ஈராஸ் ! ஈராஸ் ! என்ன காரியம் செய்தாய் ? என்னைக் கொல்லக் கட்டளை இட்டால், உன்னைக் கொன்று விட்டாயே ! உன் மரணத்துக் காரண கர்த்தாவாக என்னைத் திருப்பி விட்டாயே ! [கோவென தலையில் கைவைத்து அழுகிறான்]
ஈராஸ்: மகாவீரரே ! உம்மைக் கொல்வதிலிருந்து தப்பி விட்டேன் ….. விடை பெறுகிறேன். [ஈராஸ் கண்மூடி மரிக்கிறான்]
ஆண்டனி: [மிக்க கவலையுடன்] முதலில் என் இதய ராணி போனாள், இப்போது என் படைத் தலைவனா ? தனிப்பட்டுப் போகிறேன் அனுதினமும் நான் ! எப்படிச் சாவது என்று தெரியாமல் போன எனக்கோர் வழி காட்டினாய் ஈராஸ் ! நீ கற்றுக் கொடுத்த பயிற்சியை நான் முயற்சி செய்கிறேன். நானொரு மணமகன் இப்போது ! காதலர் படுக்கையான கத்தியின் மீது நான் விழப் போகிறேன் ! [கீழே கிடந்த தன்வாளைத் தளத்தில் நட்டு அதன் மீது விழுகிறான், அலறுகிறான், புரள்கிறான், துடிக்கிறான். குருதி பொங்கி ஓடுகிறது.] [காவலரை நோக்கி] என்னுடலை அப்புறப் படுத்துங்கள். ஒரு வேண்டுகோள். என்னுயிர் குடித்த இந்த வாளை, என்னிறுதிக் கொடையாய் அக்டேவியஸ¥க்கு அளித்திடுவீர்.
முதல் காவலன்: அப்படியே செய்கிறோம் தளபதி. தெய்வமே ! நமது பெரும் தளபதியும் மாய்ந்தார். [யரோ வரும் அரவம் கேட்கிறது] யாரங்கே ?
[கிளியோபாத்ராவின் தூதுவன் டையோமீடிஸ் வருகிறான்]
டையோமீடிஸ்: நான்தான் டையோமீடிஸ் ! கிளியோபாத்ரா அனுப்பிய தூதன் ! தளபதி ஆண்டனிக்குத் தகவல் தர வந்திருக்கிறேன். எங்கே தளபதி ஆண்டனி ?
ஆண்டனி: [தழுதழுத்த குரலில்] டையோமீடிஸ், ஈதோ கிடக்கிறேன் தரையில் ! உன்னை எப்போ அனுப்பினாள் கிளியோபாத்ரா ? எங்கே உள்ளாள் கிளியோபாத்ரா ? வானுலகத்திலா அல்லது வையகத்திலா ? செத்தவளா உன்னைத் தூது அனுப்பினாள் ?
டையோமீடிஸ்: மகாராணி சாகவில்லை ! தளபதி, மகாராணி சாகவில்லை ! அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார். செத்ததாகச் செய்தி அனுப்பி உங்கள் கவனத்தைக் கவரச் செய்தார் ! அடடா என்ன தவறு நேர்ந்து விட்டது ? விளையாட்டு வினையாகி விட்டதே ! இப்போது மெய்யாக நீங்கள் மரணமாகி மகாராணி கவனத்தைக் கவர்ந்து விட்டீர் ! உண்மை பொய்யாகி விட்டது ! பொய் மெய்யாகி விட்டது ! உண்மை வாசலைத் தாண்டுவதற்குள் பொய் மூன்று தரம் உலகைச் சுற்றி விட்டதே !
ஆண்டனி: டையோமீடிஸ் ! காவலர் உதவியுடன் என்னை மாளிக்கைக்கு எடுத்துச் செல் ! கிளியோபாதராவிடம் விடை பெற வேண்டும். என்னைத் தூக்கிச் செல்வீர்.
[காவலர் உதவியுடன் டையோமீடிஸ் ஆண்டனியைத் தூக்கிச் செல்கிறான்]
(தொடரும்)
*********************
Based on The Plays:
1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]
2. William Shakespeare’s Julius Caesar [Play-2]
3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]
4. Britannica Concise Encyclopedia [2003]
5. Encyclopedia Britannica [1978 & 1981]
6. Life of Antony By: Plutarch
7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.
8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia
9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]
10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]
11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (July 4, 2007)]
- (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 8 ஆண்டனி & கிளியோபாத்ரா
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம்
- சிவாஜியும் சினிமா படும்பாடும்!!
- மகத்தான பணியில் மக்கள் தொலைக் காட்சி
- கால நதிக்கரையில்……(நாவல்)-13
- An open letter to Pujyasri puuvaraswanaar !
- ஆருயிர் அன்னை இராமநாதர் இராசம்மா
- கே.வி.ராமசாமி-சில நினைவுகள்
- தெய்வம் ஹாங்காங் வந்தது
- இந்துத்துவத்தின் சாதீய எதிர்ப்பு பாரம்பரியம்
- “கந்தர்வன் நினைவு – கருத்தரங்கம் – கலைஇரவு-2007”
- தேசிய நூலக வாரியம் மற்றும் வாசகர் வட்டம்
- சில வரலாற்று நூல்கள் 1 – மதுரை நாடு : ஒரு ஆவணப்பதிவு (ஜெ.எச்.நெல்சன்)
- முல்லைப்பாட்டும் சுற்றுச்சூழலும்
- அன்புடன் கவிதைப் போட்டிக்கு வந்த காட்சிக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி நடுவர் நிலா (என்ற) “நிலாச்சாரல்” நிர்மலா கருத்துரை
- தமிழ் இலக்கிய வட்டம், பிரான்சு
- பாரதி -125 பன்னாட்டுக் கருத்தரங்கம்
- பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 7
- மக்கள் தொலைக்காட்சி
- தமிழகக் கோட்டைகள் : விட்டல் ராவ்
- சூட்டு யுகப் பிரளயம் ! உருகி மறையும் கிலிமாஞ்சாரோ பனிச்சிகரங்கள் -3
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 17
- லாஜ்வந்தி
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் பதினேழு: ஹரிபாபுவின் நடைபாதை வியாபாரம்!
- நல்லூர் இராஜதானி நகர அமைப்பு! அத்தியாயம் பதினொன்று
- 5வது தூண் ! !
- சிற்பி!
- மனப்பறவை
- ஈரம்.
- தீபச்செல்வன் கவிதைகள்
- அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – காட்சிக்கவிதைப் பிரிவு – நடுவர்: நிலா (என்ற) நிலாச்சாரல் நிர்மலா
- மெளனங்கள் தரும் பரிசு
- பாலக்காடு 2006
- காதல் நாற்பது – 28 உன் காதல் கடிதங்கள் !
- புதிய தென்றல் என்ற மாத இதழ்