எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 4

This entry is part [part not set] of 32 in the series 20070607_Issue

சி. ஜெயபாரதன், கனடா


வா, அருகில் வா அந்த வாளைக் கொடு !
விடை பெறுகிறேன், கண்மணியே
விடை கொடு எனக்கு !
நடக்கப் போவது என்ன வாயினும்,
படை வீரன் நான்தரும் முத்தம் உனக்கு,
இகழத் தக்கது வரட்டு வாழ்த்துதான்,
இரும்புக் கவச உடை யோடு
உன்னை விட்டு நான் அகல்கிறேன்
போரிடும் நீயும் என் பின்னே வந்திடு … (ஆண்டனி)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

நானொரு வஞ்சகன் இந்த மண்ணிலே !
வீணாய் மனது அடித்துக் கொள்ளுது !
அந்தோ ஆண்டனி !
எத்தகை ஊதியம் என்பணிக் களித்தாய்,
பொன் மகுடம் சூட்ட உனக்கு ?
என்னிதயம் நொறுங்கிடும், ஆயினும்.
உன்னை எதிர்த்துப் போரிடேன் நானினி.
ஒரு புதைகுழி தேடுவேன்
என்னுடலை மூடிட,
இறுதிக் காலம் கேவல மானது ! [எனோபர்பஸ்]

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்

நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ்: ரோமின் மூன்றாம் தளபதி
எனோபர்பாஸ்: ஆண்டனியின் ஆலோசகன், பாதுகாவலன்
கானிடியஸ்: ஆண்டனியின் போர்த் தளபதி
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
•பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன், இளைய பாம்ப்பி)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 4

ரோமா புரியின் நிலைமை: •பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள். ஆண்டனி எகிப்துக்கு மீண்டு மனைவியை மறந்து கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்து மயங்கிக் கிடக்கிறான். ஆண்டனியைத் தண்டிக்க அக்டேவியஸ் ரோமானியப் படையுடன் ஆக்டியக் கடற் பகுதியில் போரிட்டு வெற்றி அடைகிறான். தோற்றுப் போன ஆண்டனி ஆக்டேவியஸ் தூதரை விட்டு அனுப்பிய நிபந்தனைகளில் கையொப்பமிடுகிறான். ஆயினும் இருவருக்குள்ளும் நிரந்தரப் பகை உண்டாகி, ஆண்டனி எகிப்தில் அடைபட்டுப் போகிறான். அவனைக் கைது செய்ய அக்டேவியஸ் எகிப்துக்குத் துரத்திச் செல்கிறான்.

++++++++++++++++++

கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 4

நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் அரண்மனைக்கு வெளியே ஓரிடம். இரவு வேளை.

நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, அண்டனி, ஈராஸ் மற்றும் ஆண்டனியிக்குக் கீழிருக்கும் ரோமானியப் படையினர்.

காட்சி அமைப்பு: ஆண்டனியின் போர்க் கூடாரங்கள். ரோமானியப் படையினர் கூட்டமாகப் பேசிக் கொண்டிருக்கிறார். வேறிடத்தில் ஆண்டனி போருக்குத் தயாராகிறான்.

முதல் சேனாபதி: போய் வா, நல்லது இன்று நாம் உயிரோடிருக்கிறோம். நாளைக்கு மறுபடியும் போர். நாமெல்லாம் இதே வேளையில் நாளை உயிருடன் இருப்போமா என்பதை அறியோம். போய்த் தூங்கு ! பொல்லாத கனவுகள் வந்தால் என்னைத் திட்டாதே ! நல்ல கனவுகள் வந்தால் என்னைப் பாராட்டு. நாளைப் போரில் நீ பிழைத்தால் அது மறுபிறப்பாய் எண்ணிக்கொள். போய்வா.

இரண்டாவது சேனாபதி: [போகாமல் நின்று] யுத்தகளம் நமக்குச் செத்தகளம் ! போனவர் மீளார் ! மீண்டவர் வாழார் ! யுத்தகளம் படைக்கு ஒருபோக்குப் பாதை !

முதல் சேனாபதி: சேதி கேட்டாயா? நமது தளபதி எனோபர்பஸ் ஆண்டனியை விட்டுவிட்டு அக்டேவியஸிடம் சேர்ந்து கொண்டார்! நம்மை நடத்திச் செல்ல நமக்கு இப்போது யார் போர்த் தளபதி ?

இரண்டாம் சேனாபதி: என்ன ? என்னால் நம்ப முடியவில்லையே ! எனோபர்பஸ் பகைவருடன் சேர்ந்து கொண்டாரா? அது ராஜ துரோகம் ஆயிற்றே ! ஆண்டனிக்குச் செய்யும் வஞ்சகம். போர் நடுவே தோளுக்குத் தோள் கொடுத்துப் போரிட்ட நம்மை யெல்லாம் விட்டுப் போய்விட்டாரா? புதுத் தளபதி வேறு யாராக இருக்க முடியும் ? தளபதி ஆண்டனி ஒருவர்தான் அதற்குத் தகுதி உடையவர்.

முதல் சேனாபதி: என்னுடைய அச்சம் மிகையானது. ஆண்டனி வணங்கிவரும் தெய்வம் ஹெர்குலிஸ் அவரை விட்டு நீங்கிச் செல்வதாக உணர்கிறேன்.

[ஆண்டனி, கிளியோபாத்ரா, ஈராஸ், சார்மியான் நுழைகிறார்கள்]

ஆண்டனி: [ஆங்காரமாக] ஈராஸ் ! கொண்டுவா எனது போர்க் கவசவ உடைகளை ! எங்கே என் உடைவாள் ? எடுத்துவா அதனையும் ! சீக்கிரம் !

கிளியோபாத்ரா: [கவலையுடன் நெருங்கி] இந்த அகால வேளையிலா போருக்குப் போக வேண்டும் ? சிறிது நேரம் தூங்கி அதிகாலையில் போரைத் துவக்கலாமே !

ஆண்டனி: எனக்கு இன்று தூக்கம் வராது ! திடீரென்று அக்டேவியஸைத் தாக்க வேண்டும். இரவு முழுதும் விழித்திருப்பதை விடப் போரிட்டு அக்டேவியஸின் மார்பைக் கிழிக்கலாம் ! ஒன்று அவன் சாக வேண்டும் அல்லது நான் சாக வேண்டும், கிளியோபாத்ரா, நாங்கள் இருவரும் இனிமேல் தனித்தனியாக வாழ முடியாது என்றாகி விட்டது. உன்னைப் பிரியப் போகும் காலம் வந்து விட்டது. ஆனால் நான் அத்தனை எளிதாய் உன்னை விட்டுப் பிரிய மாட்டேன். அழாதே கிளியோபாத்ரா [கண்ணீரைத் துடைக்கிறான்]

[ஈராஸ் போர்க் கவசங்களைக் கொண்டு வருகிறான். கிளியோபாத்ராவும், ஈராசும் ஆண்டனிக்குக் கவசம் அணிகிறார்கள்]

கிளியோபாத்ரா: ஆண்டனி, இந்த முறை தளப்போர்தானே நடக்கப் போகிறது ? கடற் போரென்றால் இரவில் நடத்த முடியாதே. நீங்கள் தளப்போர் வீரராயிற்றே. வெற்றி உங்களுக்கே !

ஆண்டனி: ஆம் இம்முறை தரைப்போருக்குத்தான் தயார் செய்கிறோம். ஆம் வெற்றி எனக்குத்தான், கிளியோபாத்ரா. ஈராஸ் ! ஈராஸ் ! எங்கே எனோபர்பஸ் ? என்னருகில் சில மணிநேரத்துக்கு முன் இருந்தாரே. கூப்பிடு அவரை.

[அப்போது படைவீரன் ஒருவன் விரைவாகக் கையில் கடிதமுடன் வருகிறான்]

படைவீரன்: [வந்தனம் செய்து] வந்தனம் தளபதி ! எனோபர்பஸ் கடிதம் இது. [கையில் கொடுக்கிறான்]

ஆண்டனி: [கடிதத்தைப் படித்துக் கோபத்துடன்] கிளியோபாத்ரா ! எனது வலது கை போய் விட்டது. எனோபர்பஸ் என்னைப் புறக்கணித்துப் போய்விட்டான். அக்டேவியஸ் படையுடன் சேர்ந்து கொண்டாராம். என்ன வஞ்சகச் செயல் இது ? வஞ்சகம் மட்டுமில்லை ! என்னைக் கொல்லச் செய்த சதி ! நானென்ன தவறு செய்தேன் ? அக்டேவியஸ் செய்த சூழ்ச்சியா ? அல்லது எனோபர்பஸ் செய்த தந்திரமா ? என்னைக் கைப்பற்ற என் தளபதியே தயாராகி விட்டானா ? அக்டேவியஸ் பணம் கொடுத்து எனேபர்பஸை வாங்கியதாகத் தெரியுது எனக்கு. கிளியோபாத்ரா ! ஏன் என்னைப் பிடிக்க உன்னைக் கூட விலைக்கு வாங்கி விடுவான் அந்த அயோக்கிய அக்டேவியஸ் !

கிளியோபாத்ரா: [கவலையுடன்] என்னை அப்படி எந்தப் பகைவனும் எளிதாக வாங்கிவிட முடியாது, ஆண்டனி ! .. சரி …. யார் இப்போது போரை முன்னின்று நடத்துவது ?

ஆண்டனி: இந்தப் போர் என்னிறுதிப் போர் ! நான் என்னைக் காப்பாற்றப் போராடும் போர். நான்தான் முன்னிற்பேன் ! நானிருக்கும் போது வேறு யாரும் நடத்தத் தேவை யில்லை. அக்டேவியஸை நேருக்கு நேர் எதிர்க்கும் நேரம் வந்து விட்டது! எங்கள் இருவரில் ஒருவருக்கு முடிவு காலம் நெருங்கி விட்டது. எனொபர்பஸ் என்னை விட்டு நீங்கிய பின் அவனோடு என் பாதி பலம் போனது. இழந்த அந்த பாதிப் பலத்தை நீ எனக்குத் தா ! என்னிழலில் நின்று நீயும் போரிட நேரிடலாம் ! போருனக்குப் புதியதில்லை ! நீ யெனக்கு அருகில் நின்றாலே பலமெனக்குப் பெருகும், கிளியோபாத்ரா !

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]

10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]

11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (June 6, 2007)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts