சி. ஜெயபாரதன், கனடா
நடக்காதே என்மீதெனப் பூமி சொல்லும் அந்தோ!
நண்பர்கள்! அவமானப் படும் என்னைச் சுமக்க!
தவறிப் பாதையை விட்டு விட்டேன் நிரந்தரமாய்!
தாமத மாகி விட்டேன் தரணியில்!
பொன் நிறைந்த கப்பல் ஒன்றுளது!
பங்கிட் டளித்து அக்டேவிய ஸோடு
சமாதானம் செய்ய விரைந்து செல்! … (போரில் தோற்ற ஆண்டனி)
வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
(போர்க்களம்) விட்டு ஓடினேன்! கோழைகளை
புற முதுகு காட்ட ஆணை யிட்டேன்!
போவீர் தோழரே! நானோர் போக்கில் மாறியுளேன்!
நீவீர் தேவை யில்லை எனக்கு! போவீர்!
துறைமுகக் கப்பலில் உளதுபொன் களஞ்சியம்!
விரைவாய்ச் சென்றதை அளித்திடு!
என்தலை மயிர்கூட எதிர்க்குது என்னை! … (போரில் தோற்ற ஆண்டனி)
வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
பிரார்த்தனை செய்வீர்! வருத்தப் படாதீர்! …
நினைப்பேன் சிறப்பாய் உம்மையும் கப்பலையும்!
எனைவிட் டகல்வீர்! வேண்டிக் கொள்கிறேன்!
பிரார்த்தனை செய்வீர், இச்சம யத்தில்!
இழந்தேன் இப்போது என் ஆணைத் திறமையை!
உமக்குநான் பிரார்த்தனை செய்வேன்! போவீர் … (போரில் தோற்ற ஆண்டனி)
வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்
நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்
ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ்: ரோமின் மூன்றாம் தளபதி
எனோபர்பாஸ்: ஆண்டனியின் ஆலோசகன், பாதுகாவலன்
கானிடியஸ்: ஆண்டனியின் போர்த் தளபதி
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
•பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன், இளைய பாம்ப்பி)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)
கிளியோபாத்ரா
அங்கம்:8 காட்சி:1
ரோமா புரியின் நிலைமை: •பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள். ஆண்டனி எகிப்துக்கு மீண்டு மனைவியை மறந்து கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்து மயங்கிக் கிடக்கிறான். ஆண்டனியைத் தண்டிக்க அக்டேவியஸ் ரோமானியப் படையுடன் ஆக்டியக் கடற் பகுதியில் தாக்க வருகிறான்.
++++++++++++++++++
கிளியோபாத்ரா
அங்கம்:8 காட்சி:1
நேரம், இடம்: ஆக்டியம் கடற்போர் முனை, பகல் வேளை.
நாடகப் பாத்திரங்கள்: ஆண்டனி, போர்த் தளபதி எனோபரஸ், கான்டிடஸ், கிளியோபாத்ரா, சார்மியான், ஈராஸ், ஆண்டனியின் கப்பல் போர்ப் படையினர், கிளியோபாத்ராவின் கப்பற்படை வீரர்கள், தளபதி அக்டேவியஸ், போர் அட்மிரல் அக்கிரிப்பா, ரோமானியக் கடற்படை வீரர்கள், டாரஸ்
காட்சி அமைப்பு: கீரிஸின் அருகில் ஆக்டியம் பகுதியில் ஆண்டனி அக்டேவியஸைக் கடற்போருக்கு அழைத்துப் போரிடுகிறான். கிளியோபாத்ராவும் தனது 60 போர்க்கப்பலுடன் ஆண்டனிக்கு உதவியாகப் போர்க்களத்துக்கு வருகிறாள். அக்டேவியஸ் 230 கப்பல்களுடன் கடற்போருக்குத் தயாராகிறார். கடற்போர் பீரங்கிக் கனல்வெடிகளுடன் துவங்கிறது. அக்டேவியஸின் போர் அட்மிரல் அக்கிரிப்பா சாமர்த்தியமாக ஊடே புகுந்து, ஆண்டனியின் கடற்படை ஓட்டத்தைத் தடுத்து, உணவு, போர்த் தளவாடச் சாதனங்களின் அனுப்புதலைத் துண்டிக்கிறான். போர் தோற்காத போது போர் தோற்று விட்டதாய் எண்ணி, கிளியோபாத்ரா, ஆண்டனியை விட்டுவிட்டு அலெக்ஸாண்டிரியாவுக்கு மீள்கிறாள். ஆண்டனி தன் போர்ப் படையினரை விட்டுவிட்டு, கிளியோபாத்ரா பின்னால் போகிறான். ஆண்டனியின் படையினர் பட்டினியால் வாடிப் போரிட இயலாது முடிவில் அக்டேவியஸ் ஆண்டனியைத் தோற்கடிக்கிறான். முதன்முதல் தனக்கிளைய தளபதியிடம் தோற்று அவமானப்பட்ட ஆண்டனி, போர்க் களத்தை விட்டு ஓடுகிறான். பின்தங்கிய ஆண்டனியின் படையினரை அக்கிரிப்பா போர்க்கைதிகளாகச் சிறைப்படுத்துகிறான்.
கடற்போரில் தோற்றோடும் ஆண்டனி முதன்முறையாகச் சுயமதிப்பிழந்து சோகமாக துணைக்காவலர் கூட உரையாடுகிறார்.
ஆண்டனி: [மனம் நொந்துபோய்த் தடுமாறிய குரலில்] மானம், மதிப்பெல்லாம் போய்விட்டது! உயிர் போன வெற்றுக் கூடாய் அலைகிறேன்! சீஸருக்கு வாரீசுத் தீரனாய் வலு படைத்தவன், போரை விட்டு ஓடிவந்து புலம்பிக் கொண்டிருக்கிறேன். வெட்கப்படுகிறேன்! எப்படி ரோமாபுரி முகத்தில் தலை நிமிர்ந்து விழிக்கப் போகிறேன்? செவில் படுகிறதா? என் மீது நடக்காதே என்று நான் நிற்கும் பூமியும் கட்டளை யிடுகிறது! என்னைத் தாங்கிக் கொள்ள அது அவமானப் படுகிறது. என் நண்பர்களே! சொல்வதைக் கேளுங்கள். நான் தாமதித்து விட்டேன் போரில். அதனால் மோதி மிதிக்கப் பட்டேன். பாதை தவறி விட்டேன்! படைப்பல மிழந்து விட்டேன். பழி வாங்கப் பட்டேன். முதல் வீரனாய்த் திகழ்ந்தவன், மூன்றாம் நிலைக்குத் தள்ளப் பட்டேன். என் உன்னத தோள்கள் தாழ்ந்து விட்டன. இந்த அவமானத்தைத் தாங்கிக் கொண்டு வாழ முடியுமா நான்? காவலனே! என் பொற்களஞ்சிய கப்பல் அதோ அங்கே நிற்கிறது. அதிலிருக்கும் பொன் நாணயங்களை அக்டேவியஸ் கைகளில் அளித்து சரண் அடைந்தேன் என்று தகவலைத் தெரிவித்திடு! என் சமாதானச் செய்தியைக் கொண்டு போ! பறந்து போ!
காவலன்: எப்படிப் பறப்பது? விரைந்து செல்கிறேன் பிரபு.
ஆண்டனி: போ! விரைந்து போ! நான் வெகுதூரம் ஓடி வந்து விட்டேன்! என் படை வீரர்களையும் ஓடச் சொல்லி உத்தரவு செய்தேன்! புற முதுகு காட்ட வைத்துத் தீரர்களைக் கோழைகள் ஆக்கினேன்! போய் விடுவீர், இனித் தேவை யில்லை நீவிர்! துறைமுகத்துக்கு அருகில் களஞ்சியக் கப்பல் நங்கூரத்தில் நிற்கிறது. பொன் நாணயங்களைக் கொடுத்து அக்டேவியஸை விரட்டுங்கள்! நமது பீரங்கிகளின் மூச்சு நின்று விட்டது. என் தலை மயிர் கூட எதிர்க்கிறது என்னை!
காவலன்: ஈதோ போகிறேன் பிரபு.
ஆண்டனி: பிரார்த்தனை செய்! மனம் நோகாதே! உங்கள் யாவரையும் நான் மறக்க மாட்டேன். உங்களைச் சுமந்த கப்பலையும் மறக்க மாட்டேன். எனக்கு இப்போது தனிமை தேவை! என்னைத் தனியே விட்டுப் போவீர்! பிரார்த்தனை புரிவேன் நானும்! என் மானமிழந்தேன்! என் மதிப்பிழந்தேன்! என் படைகளை ஆணையிடும் வல்லமை யிழந்தேன்! என்னை விட்டுச் செல்வீர். [மன வேதனையுடன் பாறை மீது அமர்கிறார்]
[அப்போது கிளியோபாத்ரா, சார்மியான், ஈராஸ் சூழ நுழைகிறாள்]
ஈராஸ்: [கவலையுடன் உள்ள ஆண்டனியை நோக்கி] மகாராணி! மாண்புமிகு தளபதி மனவருந்திக் காணப்படுகிறார். ஆறுதல் கூறுவீர் அவருக்கு! பராக்கிரமசாலி பரிதாப நிலையில் தலை குனிந்திருக்கிறார்.
சார்மியான்: ஆமாம் மகாராணி! நீங்கள்தான் ஆறுதல் கூற வேண்டும். வேறு யாரும் நெருங்க முடியாது.
கிளியோபாத்ரா: [பரிவுடன் நெருங்கி, அருகில் அமர்ந்து] மனம் நோகாதீர்! தோல்வி வெற்றியின் முதற்படி! அக்டேவியஸ் வெற்றி ஆக்டியத்துடன் முடிந்தது! அலெக்ஸாண்டிரியாவுக்குள் அவர் நுழைய முடியாது! அங்கே கால்வைத்தால் என் படையினர் அவரது கால்களைத் துண்டித்து விடுவார். [தலையைக் கோதி விடுகிறாள்]
ஆண்டனி: [புலம்பிய வண்ணம்] பில்லிப்பி போர்க்களத்தில் தன்னை மாய்த்துக் கொண்ட புரூட்டஸ் இப்போது என்னைப் பழி வாங்கி விட்டார். என் போர் அனுபவம் என்ன? என் வயதென்ன? என் திறமை என்ன? அனைத்தும் ஒரு நாளில் பயனற்றுப் போயின! நான் துணையற்றுப் போனேன்! நான் தனித்துப் போனேன்! எனக்கும் ரோமுக்கும் உள்ள பந்தம் அறுந்து போனதே!
கிளியோபாத்ரா: [கலக்கமுடன்] அப்படிச் சொல்லாதீர் ஆண்டனி! நானிருக்கும் போது துணையில்லை என்று சொல்லாதீர்! தனித்துப் போனதாக வருத்தப் படாதீர். நானிருக்கிறேன், என் எகிப்த் உள்ளது! ரோமாபுரி கைவிட்டாலும், எகிப்த் நாடு உங்களை விட்டுவிடாது. உங்களுக்குத் தோள் கொடுக்கும், துணை யிருக்கும், படை கொடுக்கும்.
ஆண்டனி: கிளியோபாத்ரா! எகிப்த் துணையால் நான் ரோமை யிழந்தேன்! அக்டேவியஸ் என்னைத் தோற்கடித்து என்னிட மிருந்து ரோம் சாம்ராஜியத்தைப் பிடுங்கிக் கொண்டான்! அத்துடன் என் மானம், என் மதிப்பு, என் மகிமை அனைத்தும் போயின.
கிளியோபாத்ரா: எனது சொற்பப் படகுகள், ரோமின் அற்பக் கப்பல்கள் முன்பு முன்னேற முடியவில்லை.
ஆண்டனி: [தனிமொழியில்] எகிப்தே! உன் திசைதிருப்பியுடன் என்னிதயத்தைக் கயிற்றில் கட்டி யிழுக்கிறாய்! உன் பராக்கிரமத்தில் என் ஆத்மாவைப் பறித்துக் கொண்டாய்!
கிளியோபாத்ரா: அப்படி நினைக்காதீர் ஆண்டனி! உங்களுக்கு அடைக்கலம் தந்துள்ளது எகிப்த் நாடு! உங்கள் ஆத்மாவுக்கு உறுதி கொடுக்கும் எமது எகிப்த் நாடு! நீங்கள் அப்படி நினைப்பது வருத்தம் அளிக்கிறது எனக்கு.
ஆண்டனி: நான் தணிந்து போய் அக்டேவியஸோடு உடன்படிக்கை செய்ய வேண்டும். நான் பிடித்த நாடுகளை எல்லாம் உன்னிடமிருத்து பிரித்து அக்டேவியஸின் வசம் ஒப்படைக்க வேண்டும். வருந்த வேண்டியவள் நீயும்தான்! நீ அறிய மாட்டாய், என்னைக் கைப்பற்றி வைத்திருக்கும் மோகினி நீ யென்று! என் பராக்கிரம வாள் உன் முன் பலமிழந்து போய்க் கிடக்கிறது! என்ன காரணம் இருப்பினும், என் வாள் உனக்கு வணக்கம் செய்கிறது.
கிளியோபாத்ரா: [கண்ணீர் கலங்க] அப்படியா? நீங்கள் எனக்கு வெகுமதியாக அளித்த நாடுகளை அக்டேவியஸ் எடுத்துக் கொள்வாரா? வேதனைப் படுகிறேன் நானும்.
ஆண்டனி: [கிளியோபாத்ரா கண்ணீரைத் துடைத்து] எளிதாகக் கிடைத்தவை எளிதாக நீங்கின! அதிர்ஷ்ட தேவதைக்கு க் கண்கள் குருடு! யாரிடம் எடுத்து யாருக்குக் கொடுக்கும் என்பது தெரியாது. என்னிடம் உள்ளது ஒன்றுமில்லை இப்போது, என் முத்தத்தைத் தவிர! [கெஞ்சியபடி] முத்தமிடு என்னை கிளியோபாத்ரா! உன் கனல் முத்தம் என் இதயக் கனலைத் தணிக்கட்டும். உள்ளம் குளிர என்னை உன் உடற்கனலால் சுற்றிக்கொள். என் பசிக்கும் உடலுக்கு உன் அ¨ணைப்பு விருந்தளி! எனக்கு ரோமாபுரி ஆட்சி, ரோமானியரின் ஆதரவு எதுவும் வேண்டாம்! நீ தான் எனக்குத் துணைவி. நீதான் எனக்கு மனைவி! நானினி ரோமுக்கு மீளப் போவதில்லை! வாழ்நாள் முழுதும் உன் நிழலிலே கிடப்பேன்! எகிப்தின் நைல் நதி நீரே என் தாகத்தைத் தீர்க்க வல்லது.
[கிளியோபாத்ரா ஆண்டனியை முத்தமிடுகிறாள்]
(தொடரும்)
*********************
Based on The Plays:
1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]
2. William Shakespeare’s Julius Caesar [Play-2]
3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]
4. Britannica Concise Encyclopedia [2003]
5. Encyclopedia Britannica [1978 & 1981]
6. Life of Antony By: Plutarch
7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.
8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia
9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]
10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]
11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (May 9, 2007)]
- ‘நிலவு ததும்பும் நீரோடை’ கவிஞர் பஜிலா ஆசாத்தின் அழகியல்!
- கவிதைத் தொகுதிகள் வெளியீடு
- எவ்வாறு ஒரு பிரிட்டிஷ் ஜிஹாதி உண்மை ஒளியைக் கண்டடைந்தார்? – 2
- கருத்துக் கணிப்பு – சில ஆலோசனைகள்
- மனிதன்
- இந்தியாவுக்கு அசுர வல்லமை அளித்த ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம் -5
- இலை போட்டாச்சு ! 28 – வெங்காய ரவா தோசை
- காதல் ஒரு போர் போன்றது
- குறுந்தொகை காட்சியும் மாட்சியும்
- இலக்குகள் நோக்கிய பயணத்தில் பாரதி இளைஞர்அணி
- திரு. பிரகஸ்பதி அவர்களின் கட்டுரை பற்றி
- திருமதி கொப்பலின் குற்றச்சாட்டு
- இலர் பலராகிய காரணம்
- உரையாடல் குறித்த உராய்தல்கள் – தாஜுக்கு மறுமொழி
- கவிதைகள்
- நிறச் சுவாசங்கள்
- கால நதிக்கரையில்……(நாவல்)-6
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 9
- பிரதிமைகள்
- நாவல்: அமெரிக்கா II! அத்தியாயம் ஒன்பது: 42ஆம் வீதி மகாத்மியம்!
- தலித் முஸ்லிம்
- வழிவிடட்டும் அரசியல் வாரிசுகள்
- தமிழ்நாட்டு அரசின் பொறுப்பற்றதனம்
- தமிழர் நீதி
- பூத்துக் குலுங்கும் பாப்பா! ( சிறுவர் பாடல்)
- காதல் நாற்பது (20) உன்னைத் தெரியாது ஓராண்டுக்கு முன்பு
- கவிதை
- மிருகம்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:8 காட்சி:1)