சிறகொடிந்த பறவை

This entry is part [part not set] of 35 in the series 20070222_Issue

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா


வீட்டில் கடும் சண்டை. சனியன் பிடிச்சவளோடு “காச் மூச்” சென்று கத்தித் தொலைத்தேன்.

நிம்மதியே இல்லை. எவ்வளவு ஜாலியாக பறவை மாதிரி இருந்தேன் தெரியுமா ?

ஒரு மரத்திலே ஒரு பறவை இருந்ததாம். அதற்கு நன்றாகப் பறக்கத் தெரியுமாம். கூட்டை விட்டு வந்தால் அதற்கு எங்கெல்லாம் போகப் பிடிக்குமோ அப்படி அலையுமாம்.

காலைக் கதிரவன் தன் கதிர்களால் மெலிதான சூட்டை என் உடம்பில் ஏற்ற மெல்ல சோம்பல் முறித்தேன். ஆகா !

எழுந்தேன். அம்மா எங்கிருந்தோ தேடி எடுத்து வைத்திருந்த தானியத்தை தன் அழகு விரல்களால்
கொடுக்க வாங்கி கொறித்தேன். ஊரின் எல்லையருகே இருந்த மண்டபத்தில் அனைத்து நண்பர்களும் காத்துக் கொண்டிருப்பார்கள். சிறகடித்து பறந்து விளையாட ஆரம்பித்தால்
நண்பகல் வரைக் கொண்டாட்டம். பிறகு, மதியம் சுட்டெரிக்கும் வெயில் வந்தவுடன் மண்டபத்தின் உள்ளே குளிராக இருக்கும் பகுதியில் அனைவரும் குதித்துக், கொண்டாடுவோம். பாடுவோம். நடனமாடுவோம். பிறகு பசிக்க ஆரம்பிக்கும். மீண்டும் கூட்டுக்குப் பறந்து போனால். அம்மா அப்பாவிற்கும் ஊட்டி விடுவார்கள். எனக்கும் சாப்பிட ஏதோ கிடைக்கும்.

மீண்டும் டாடா !

ஆகா ! ஒரு குட்டித் தூக்கம். மீண்டும் எழுந்தால், மெலிதாகக் கொட்டாவி விட்டபடி சர்ரென்று குதித்தால், கீழே குளத்தில் ஒரு நல்ல குளியல். உடம்பை முக்கி ஒரு சிலிர்த்து சிலிர்த்து
உடம்பை உதறினால் அப்படியே புத்துணர்ச்சி வரும். அப்படியே போக வர பவனி வரும் பறவைகளை ஒரு நோட்டம். பிறகு கொண்டை சிலிர்த்துக் கம்பீரமாக ஒரு நடை. மீண்டும் பறந்து தென்னந்தோப்பில் போனால் அங்கே மீண்டும் நண்பர்களுடன் கொண்டாட்டம். இரவு வந்ததும், பாம்புகள் பயம் இருந்ததால், அம்மா சொல்லிக் கொடுத்த மாதிரி, பறந்து வந்தேன்.

வீட்டில் அப்பா, அம்மா, மற்றும் அக்கா பறவைகள் வீட்டு வம்பு பேசிக் கொண்டிருந்தன. மழை வேறு பெய்ய ஆரம்பித்திருந்தது. அம்மா தன் இறக்கையை விரித்து அணைத்துக் கொண்டாள். இதமாக இருந்தது. பக்கத்தில் இருந்த இலைகளை மேலும் அருகே இழுத்தோம்.

மழைத் துளிகள் இலைகள் மீது விழ, ஒதுங்கிக் கொண்டோம். மழையின் போது அம்மா காலையில் சேகரித்து வைத்திருந்த உணவினை தன் அலகினால் குத்தி ஊட்டி விட்டாள்.

மீண்டும் சாப்பாடு !

நிம்மதி.

அக்காவுடன் கொண்டாட்டம். பிறகு உடம்பு அசதியில் தூக்கம்.

வாழ்ந்தால் பறவையாக வாழ்ந்திருக்க வேண்டும்.

எனக்கும் இரு குட்டிப் பறவைகள். அவை எழுந்தவுடன் குடிக்க, சாப்பிட ஏதாவது கேக்கும்.
பிறகி சாப்பிட்டுப் போன பிறகு, வீட்டைச் சிதறடித்திருக்கும்.

அப்பா பறவை வேறு அப்பப்போ “கீச் மூச்” சென்று கத்திக் கொண்டிருக்கும். காது குடுத்துக் கேக்க வேண்டும். அப்புறம் “அது’ பறந்தவுடன் வீட்டிற்கருகே பல மரங்களில் சென்று வேலை பார்த்துக் குச்சிகள் சேர்த்து வீட்டைக் கட்ட வேண்டும். பல வீடுகளுக்குச் சென்று வேலை பார்த்து தானியங்களைச் சேர்த்து வீட்டிற்கு வர வேண்டும்.

அப்போது தான் மதியம் விளையாடச் சென்ற குட்டிகள் “தின்பதற்க்கு’ “ரெடியாக” வரும். பிறகு அவை பறந்தவுடன் மாலைக்காக மீண்டும் வேலை. தானியங்கள் சேமிப்பு.

மாலை மழை வருமோ என்று கவலை. தானியங்கள் சிதறிவிடுமோ ?

ஈரமாக இருந்தால் எங்கே படுத்துக் கொள்வது ?

இம்மரத்தில் இலைகள் போதுமானதாக இல்லை. இந்தத் துப்புக் கெட்டவருடன் குடித்தனம் நடத்த முடியலை. வீடு தேடும் போது “எல்லம் இந்த மரம் போதுமென்றார்”. ஆனால் இங்கிருக்கும் ஓட்டை இலைகள் போதுமானதாக இல்லை. ஆலமரத்து இலைகள் இன்னும் பெரிதாக இருக்கும் .

ஹ¤ம் ! என்ன செய்வது ?

இருக்கும் இலைக்குள் ஒதுங்க வேண்டியது தான். இதில் குட்டிகள் தூங்கியபின் ஒரே தொல்லை.
அதையும் “தாங்க” வேண்டும்.

எங்கேயாவது பறந்து “அப்பா பறவை” யாக வாழ வேண்டும்.

எவ்வளவு ஜாலி ?

ஆனால் திருமணத்திற்குப் பின்னால் அப்படி என்னால் இந்த அப்பா பறவை மாதிரி இருக்க முடியலை சார் !


kkvshyam@yahoo.com

Series Navigation

author

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா

Similar Posts