எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:1)

This entry is part [part not set] of 32 in the series 20070118_Issue

சி. ஜெயபாரதன், கனடா


வாழ வேண்டும் நீ! அல்லது மதிப்போடு
மீள வேண்டும் வாழ நீ, குருதி மூழ்கி
மாள எதிராகப் போரிட்டு! …. (ஆண்டனி)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

தைபர் நதி ரோமில் உருகிப் போகட்டும்!
ரோம் சாம்ராஜி யத்தின்
தோரண வளையம் குப்புற வீழட்டும்!
என் வசிப்புத் தளம் இதுதான்!
ராஜாங்க மாளிகை அனைத்தும் களிமண்!
சாணிப் பூமி யானது,
மானி டனுக்கும் மிருகத் துக்கும்
தீனி யிடுவது வெவ்வேறு முறையில்!
வாழ்வின் புனிதம் இவ்விதம் புரிவது:
ஒருவரை ஒருவர் விரும்பி யிருவர்
ஒன்றாய்ப் பின்னிக் கொள்வது ! … (ஆண்டனி)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

என்னை நேசிப்பது நீ உண்மை என்றால்
எவ்வளவு என்று சொல்ல முடியுமா ? ….(கிளியோபாத்ரா)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!

முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.

ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்

நாடகப் பாத்திரங்கள்:

எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:

கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ், ரோமின் மூன்றாம் தளபதி
எனோபரஸ் (ஆண்டனியின் பாதுகாவலன்),
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
•பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன்)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

கிளியோபாத்ரா
அங்கம்:6 காட்சி:1

ரோமா புரியின் நிலைமை: •பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள்.

நேரம், இடம்: அலெக்ஸாண்டியா, கிளியோபாத்ராவின் மாளிகை. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, சேடிகள், ஆண்டனி, ஆண்டனியின், பாதுகாவலர், படையாட்கள்

காட்சி அமைப்பு: கிளியோபாத்ராவின் மாளிகையில் ரோமானிய படையினர் •பிலோ, டெமிடிரியஸ் இருவரும் தமது தளபதி ஆண்டனியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கிளியோபாத்ராவும், ஆண்டனியும் தம் சகாக்களோடு உள்ளே நுழைகிறார்கள்.

•பிலோ: [வெறுப்புடன்] சகிக்க முடிய வில்லை, டெமிடிரியஸ்! பார், தளபதியின் நிமிர்ந்த தலை தணிந்து விட்டது! தீக்கனல் கக்கி செவ்வாய் போல் செவ்வொளி மின்னிய கண்கள் கறைபட்டு நிலவுபோல் மங்கி விட்டன! அவரது இரும்பு நெஞ்சம் தளர்ந்து, இடையில் கட்டியுள்ள பெல்டும் சூம்பி விட்டது! வெள்ளைப் புறாவைப் போல் மனைவி •புல்வியா ரோமிலே காத்துக் கிடக்க, பளுப்பு மேனி ஜிப்ஸியைத் தேடி வர வேண்டுமா? கிளியோபாத்ரா மோகத்தைத் தணிக்க ஓடி வர வேண்டுமா? சீஸரைக் கவர்ந்த ஜிப்ஸியின் சிலந்தி வலையில் பிடிபடப் போவது அடுத்து ஆண்டனி.

டெமிடிரியஸ்: கிளியோபாத்ரா ஒரு கருப்பு விதவை தெரியுமா? அவளை மணந்தவன் சிறிது நாட்களில் செத்துப் போகிறான். முதல் கணவன் டாலமி, சீஸரின் ஆட்கள் விரட்டி நைல் நதியில் மூழ்கிக் போனான்! இரண்டாம் கணவர் ஜூலியஸ் சீஸருக்கு என்ன ஆனது நமக்குத் தெரியும். அவரும் கொல்லப்பட்டார்! இப்போது ஆண்டனி! அவருக்கு என்ன ஆகுமோ?

[அப்போது வாத்தியக் கருவிகள் முழங்க, அறிவிப்புடன் கிளியோபாத்ரா, அவரது சேடியர், அடிமைப் பெண்கள் பின்சூழ நுழைகிறார். பின்னால் ஆண்டனி அவரது பாதுகாவலர் சூழ வந்து கொண்டிருக்கிறார்]

•பிலோ: பார் அங்கே, டெமிடிரிஸ்! எத்தனை கம்பீரமாக கிளியோபாத்ரா நடந்து வருகிறாள்! ஆனால் ஆண்டனி அடிமைபோல் பின்னால் வருவதைப் பார்! வேங்கை போலிருந்த ஆண்டனி, ஜிப்ஸியின் வனப்பில் மயங்கி மது அருந்திய மந்திபோல் நடந்து வருவது எப்படி யிருக்கிறது?

டெமிடிரியஸ்: [கிளியோபாத்ராவுக்கு முன் சென்று] மகாராணி ! ஆண்டனி உங்கள் கவர்ச்சிக்கு அடிமை! அவருக்கு உங்கள் மேல் ……!

கிளியோபாத்ரா: [திரும்பி நோக்கி] யாரது? ரோமானியப் படையாளா? முதலில் என்முன் மண்டியிட்டுப் பேசு! எகிப்தின் விதிகள் உனக்குத் தெரியாதா? யார் உனது படைத் தளபதி?

டெமிடிரியஸ்: [நின்று கொண்டே] மகாராணி! ஆண்டனிதான் எங்கள் தளபதி!

கிளியோபாத்ரா: [கோபத்துடன், சீறி] அறிவு கெட்டவனே! அகந்தையோடு என்முன் நின்று கொண்டு பேசாதே! என் செவியில் எதுவும் விழாது! முதலில் என்முன் மண்டியிட்டுப் பேசு!

டெமிடிரிஸ்: மகாராணி! ரோமில் யாரும் மண்டியிடுவதில்லை! குடியரசு நாட்டில் யாவரும் சமம்!

கிளியோபாத்ரா: முட்டாள்! நீ நிற்பது எங்கே? ரோமிலா? எகிப்த் பூமியில்! மண்டியிடு அல்லது வெளியேறு! காட்டுமிராண்டிகள் ரோமில் செத்த வேந்தர் சீஸரைக் குப்பைக் கூளம்போல் எரித்தார்! எகிப்தில் மாபெரும் பிரமிட் கட்டி, நாங்கள் செத்தவரைப் புதைக்கிறோம்!

ஆண்டனி: [கோபத்துடன், முன்வந்து] கிளியோபாத்ரா! எப்படி ரோமானியனரை நீ காட்டுமிராண்டிகள் என்று சொல்வாய்?

கிளியோபாத்ரா: [முகத்தில் முறுவலுடன்] ஓ! மார்க் ஆண்டனியா? ரோமாபுரியின் முப்பெரும் தளபதியில் ஒருவரா? வருக, வருக, தங்கள் வரவு நல்வரவாகுக!

ஆண்டனி: போதும் உன் சாது மொழிகள்! மன்னிப்புக் கேள் என்னிடம்! காட்டுமிராண்டிகள் எகிப்தியர்! ரோமானியர் அல்லர்!

கிளியோபாத்ரா: மண்டியிட மறுக்கும் உங்கள் மடையனுக்காக மன்னிப்புக் கேட்க வேண்டியது நீங்கள்! சீஸரிங்கே தங்கி யிருந்த போது, எங்கள் மாபெரும் நூலகத்தை எரித்தார் உமது ரோமானியர்! அவர் முன்பாகவும் இப்படித்தான் காட்டுமிராண்டிகள் என்று கத்தினேன்! இப்போது மீண்டும் சொல்கிறேன்! சீஸரைக் குப்பையாக எரித்த ரோமானியர் காட்டுமிராண்டிகளே! மகத்தான பீடத்தில் புதைக்கப்பட வேண்டிய மன்னர் உங்கள் சீஸர்! அவர் சடலம் எகிப்தில் கிடந்தால், அவருக்கொரு பிரமிட் கட்டி நிரந்தமாகப் புதைத்திருப்போம். … சொல்லுங்கள், எதற்காக வந்தீர்கள் இங்கே?

ஆண்டனி: [கனிவுடன், குரல் தடுமாறி] கிளியோபாத்ரா! உன்னைக் காணத்தான் வந்தேன்! மூன்றாண்டுகள் ஓடிவிட்டன! எப்போது உன்னைச் சந்திப்போம் என்று கனவு கண்டேன்! நாளும், பொழுதும் என் மனம் உன்னைத்தான் நினைத்துக் கொண்டிருந்தது!

கிளியோபாத்ரா: [கிண்டலாக] உங்கள் மனைவி •புல்வியாக்கு உங்கள் கனவைச் சொன்னீர்களா? அவளுக்குத் தெரியாமல் என்னை நினைப்பது சரியா? கட்டிய மனைவி உங்களைச் சும்மா விட்டாளா?

ஆண்டனி: [கண்ணீர் கலங்க] கிளியோபாத்ரா! •புல்வியா இறந்துபோய் விட்டாள்! என்னை விட்டுப் பிரிந்து போய் விட்டாள்! நான் தனித்துப் போய்விட்டேன்.

கிளியோபாத்ரா: [கிண்டலாக] ஏன் பிரிந்து போக மாட்டாள், கணவன் பிறமாதைக் கனவில் நினைத்துக் கொண்டிருந்தால் ! …. அடடா, ஆண்டனி! கண்களில் கண்ணீர் கொட்டுகிறதே! •புல்வியா மீது இப்படி பரிவும் நேசமும் கொண்ட நீங்கள், கிளியோபாத்ராவைத் தேடி வந்தேன் என்று சொல்வது முழுப் பொய்யல்லாவா? ரோமில் உமக்கொரு மங்கை கிடைக்க வில்லையா? சொல், எது உண்மை? •புல்வியா மீது உள்ள நேசமா? அல்லது கிளியோபாத்ரா மீதிருக்கும் காதலா? எது உண்மை? சொல், சொல் ஆண்டனி!

ஆண்டனி: [சற்று மனம் தேறி] •புல்வியா மீது எனக்கு வெறும் பரிவுதான்! ஆனால் நான் நேசிப்பது கிளியோபாத்ராவை! அதுதான் உண்மை! செத்துப் போன •புல்வியாவோடு, அவள் மீதிருந்த என் நேசமும் செத்து விட்டது! உன்னைக் கண்டதும் நேச மனம் புத்துயிர் பெற்று மீண்டும் எழுந்து விட்டது!

கிளியோபாத்ரா: ஓ, அப்படியா? ஆண்டனி! நீ என்னை நேசிப்பது உண்மையானால் எவ்வளவென்று எனக்கு சொல்! நீ நேசிப்பது என்னை என்றால் எனக்கு நிரூபித்துக் காட்டு!

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]

10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (Jan 18, 2007)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts