எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:10) ஆண்டனி ஆற்றிய சீஸர் மரணப் பேருரை -1

This entry is part [part not set] of 33 in the series 20061228_Issue

சி. ஜெயபாரதன், கனடா


பிறந்தவன் எவனும் மரணத்தின்
பிடியிலிருந்து தப்ப முடியாது பூமியில்!
மரணம் அனைவ ருக்கும் நண்பன்!
எல்லா விதத் துயர்களி லிருந்தும்
நமக்கு அது விடுதலை அளிப்பதால்,
நம் நன்றி உணர்வுக் குரியது!

மகாத்மா காந்தி (1869-1948)

சீஸரை சிறிதுதான் நேசித்தேன் எனச்
சிந்திக் காதீர், ரோமர்காள்! நான்
நேசித்தது மிகையாய் ரோமா புரியென
நினைத் திடுவீர் அன்பர்காள்!
சீஸர் வாழ்ந்து நீவீர் எல்லாம்
அடிமையாய் மடிவதை விட,
சீஸர் செத்து நீவீர் எல்லாம்
விடுதலை அடைவது மேலானது!
சீஸருக்கு விடுகிறேன் கண்ணீர், நெருங்கி
நேசித்ததால் அவர் என்னை! ஆயினும்
சீஸரைக் குத்தினேன் வாளால், அவர்
ஆசை தன்னை அடக்கிட! …. (புரூட்டஸ்)

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

கதறி அழும் ரோமிங்கே!
பயங்கர ரோமிங்கே!
எனது மரண உரையைக் கேட்ட பின்
எப்படி ஏற்பர் மக்கள்,
இரத்த வெறியர் கோரச் செயலை? ….. (ஆண்டனி)

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

வேதனை உலைத்தீ ஒரு பயங்கரச் சக்தி!
செப்பணிடும் பண்பை, அறிவை, ஆத்மாவை!
புதுப்பிக்கும் மானிட மகத்து வத்தை!
அதுவே படைப்பின் கண்படா ஆணிவேர்!
ஆக்கப் படுவது அருக முடியாது
அச்சம் ஊட்டலாம்! நம்பிக்கை நீக்கலாம்!
முரணாகப் புரட்சியாய் மாறலாம்!

பெக் எலியட் மாயோ, பெண் கலைத்துவ மேதை [Peg Elliot Mayo]

கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!

முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.

நாடகப் பாத்திரங்கள்:

எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:

ஜூலியஸ் சீஸர்: ரோமானியப் போர்த் தளபதி [52 வயது]
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி [20 வயது]
டாலமி XIV: கிளியோபாத்ராவின் தனயன் (கணவன்), எகிப்தின் மன்னன் [15 வயது]
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா [45 வயது]
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன் [வயது நான்கு]
போதினஸ்: டாலமியின் பாதுகாப்பாளன் [50 வயது]
தியோடோடஸ்: டாலமியின் ஆசிரியர் [45 வயது]
அக்கில்லாஸ்: டாலமியின் போர்த் தளபதி [53 வயது]
பிரிட்டானஸ்: சீசரின் அரசாங்கச் செயலாளர் [40 வயது]
ரூ·பியோ: சீஸரின் லெ·ப்டினன்ட் [40 வயது]
லூசியஸ் ஸெப்டிமியஸ்: ரோமானிய இராணுவ அதிகாரி [50 வயது]
அபெல்லோடோரஸ்: ஸிசிலியன் கம்பள வாணிகன்.
சீஸரின் சதிகாரர்கள்.
பாம்ப்பியின் அனுதாபிகள்.

ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள்.

அங்கம்:5 காட்சி:10

நேரம், இடம், கட்டம்: சீஸர் பட்டாபிசேக தினம். மார்ச் பதினைந்தாம் தேதி மாலை வேளை. ரோமாபுரியில் மக்கள் மன்றம் கூடிய சமயம் பாம்ப்பியின் சிலைக்குக்கீழ் படுகொலை செய்யப்பட்டுக் குருதியில் கிடக்கும் சீஸர் உடலை ஏந்திக் கொண்டு ஆண்டனி அங்காடி மேடைக்கு வருக்கிறார். மேடை முன்பு ரோமானியர் மரணச் சடங்கு உரைகளைக் கேட்க ஆர்வமோடு, ஆரவாரமோடு நிற்கிறார்கள்.

நாடகப் பாத்திரங்கள்: புரூட்டஸ், காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா மற்றும் சீஸர் கொலையில் ஈடுபட்ட சதிகாரர்கள், ஆண்டனி, ஆண்டனியின் தோழர்கள், ரோமானிய மக்கள்.

காட்சி அமைப்பு: அங்காடி மேடையில் புரூட்டஸ் முதல் பேச்சாளராய் நிற்கிறார். பக்கத்தில் காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா மற்றும் ஏனைய சதிகாரர் கையில் குருதியில் மூழ்க்கிய கைவாளை ஏந்தி விடுதலை வீரர்களாய்க் காட்டிக் கொண்டு நிமிர்ந்து நிற்கிறார்கள்.

பொதுமக்கள்: [கூக்குரலில்] பேசுங்கள்! புரூட்டஸ் பேசுங்கள்! சீஸரைக் கொன்றதின் காரணம் சொல்வீரா? காத்திருக்கிறோம் உங்கள் பேச்சைக் கேட்க.

புரூட்டஸ்: [கையை உயர்த்தி] அமைதி! ரோமானியரே! அமைதி! என்னுரையைக் கேட்பீர்! சீஸரைக் கொன்ற எமது காரணம் கேட்பீர். என்னுரையைக் கேட்பவர் என்முன் தங்குவீர்! அதோ காஸ்ஸியஸ்! அவர் உரையைக் கேட்க அவர் பின்னால் செல்வீர்.

பொதுநபர் ஒருவர்: உங்கள் பேச்சைக் கேட்பேன் நான். நீங்கள்தான் பிரதானத் தலைவர் சதிக்கு!

புரூட்டஸ்: ரோமர்களே! குடிமக்களே! அன்பர்களே! பொறுமையாய் இருப்பீர் இறுதிவரை. அமைதியாய்க் கேட்பீர்! எனது பண்பான தேசப் பணிக்கு மதிப்பளிப்பீர்! உங்கள் தெளிந்த ஞானத்தால் என்னை எடை போடுங்கள்! உங்கள் அறிவு விழித்து எழட்டும்! உங்களில் ஒருவர் சீஸரைக் கொன்றது ஏனென்று கேட்டால் என் பதிலிதுதான்! சீஸர் மீது நான் கொண்ட நேசிப்பு சிறிதில்லை! ஆனால் ரோமின் மீது நான் கொண்ட பற்று மிகுந்தது! அதுதான் காரணம்! சீஸர் ஏதேட்சைவாதியாய்த் தலைதூக்கி, ரோமானியர் அடிமைகளாய்க் கிடப்பதை விட, சீஸர் செத்து மடிந்து நீவீர் விடுதலை அடைவது மேல் அல்லவா? என்னை நேசித்த சீஸர் இறந்து போனதற்குக் கதறி அழுகிறேன்! ஆனால் அவரது பேராசையை ஒழிக்க அவரைக் கூரிய வாளால் குத்தினேன்! சீஸரின் பராக்கிரமத்திற்கு மெச்சுகிறேன்! ஆனால் அவரது பேராசைக்கு முடிவு அவரின் மரணம்தான்! யாரிங்கே உள்ளார் அடிமைகளாய் வாழும் ஆசையோடு? வாரீர் என் முன்னே! உங்களை நான் அவமதித்து விட்டேனா? யாரிங்கே உள்ளார் நாட்டின் மீது வாஞ்சை யில்லாதவர்? சொல்லுங்கள் பதில்! காத்திருக்கிறேன் உமது கருத்தறிய!

கூட்டத்தில் சிலர் குரல்: இல்லை புரூட்டஸ்! இல்லை! நீவீர் செய்தது நியாயமே! சீஸருக்கு உகந்த வெகுமதி கிடைத்தது! நாட்டுக்கு செய்த உமது பணி உயர்ந்தது! ஈடு இணை அற்றது! பாராட்டுகிறோம் உம்மை! உன்னத தேச நேசர் சீஸரில்லை! உண்மையான தேச நேசர் நீங்கள்தான், புரூட்டஸ் நீங்கள்தான்! யாரையும் அவமதிக்க வில்லை நீங்கள்!

புரூட்டஸ்: அப்படியானால் எவரையும் நான் அவமதிக்க வில்லை! கேட்கப் பூரிப்பாக உள்ளது. சீஸருக்கு நான் செய்தது போல்தான், நீங்கள் புரூட்டஸ¤க்குச் செய்கிறீர். நல்லது. கேளுங்கள்! சீஸரின் மரணச் சம்பவம் மக்கள் மன்றத்தில் பதிவாகி விட்டது! அவரது வெற்றிகள், சாதனைகள் எவையும் புறக்கணிக்கப்பட வில்லை! அதுபோல் சீஸரின் தவறுகள் எவையும் உயர்த்தப்பட்டு மேலாக எழுதப்பட வில்லை! சீஸர் செத்ததால் ரோமாபுரிக்கு விடுதலை! எங்கள் கடமை தீர்ந்தது!

[அப்போது ஆண்டனி சீஸரின் உடலைத் தாங்கிய வண்ணம், கண்ணீர் சொரிய மேடை நோக்கி வருகிறார்]

புரூட்டஸ்: ஈதோ! பாரீர்! துக்கப்படும் ஆண்டனியின் கரங்கள் ஏந்தி, சீஸரின் சடலம் வருகிறது! ஆண்டனி ஓர் உத்தமர்! சீஸரின் மரணத்தில் எங்களுடன் பங்கேற்க வில்லை ஆண்டனி! ஆனால் சீஸர் மரணத்தின் பலாபலனை முற்றும் அடைவார்! விடுதலை அடைந்த ரோமின் குடிமக்களில் ஒருவராய் இடம் பெறுவார்! சீஸர் மரணத்தால் உமக்குக் கிடைக்கும் வெகுமதி, நண்பர் ஆண்டனிக்கும் கிடைக்கும்! இத்துடன் என்னுரை முடிக்கிறேன், அன்பர்களே! நினைவில் வைப்பீர்! மீண்டும் ஒருமுறை உரைப்பேன்! அழுத்தமாய்ச் சொல்கிறேன்! என் ஆத்ம நண்பர் சீஸரை நான் கொன்றது, ரோமா புரியின் மேன்மைக்காகச் செய்தது! எனக்காகச் செய்ய வில்லை! உமக்காகச் செய்தேன்! மறக்காதீர்கள் அன்பர்களே! சீஸரைக் குத்திய அதே கத்திதான் என் கையில் உள்ளது! நாட்டுக்குத் தேவையானல் என்னுயிரையும் போக்கிக் கொள்ள நான் தயார், அதே கத்தியால்! [புரூட்டஸ் மேடையிலிருந்து கீழே இறங்குகிறார்]

பொதுமக்கள்: [ஒன்றாகக் கூக்குரலில்] வாழ்க, வாழ்க, புரூட்டஸ் வாழ்க! நீண்ட காலம் புரூட்டஸ் வாழ்க!

பொதுநபரில் ஒருவர்: சிலை வைப்பீர் புரூட்டஸ¤க்கு! சிலை வைப்பீர் புரூட்டஸின் மனைவிக்கு! சிலை வைப்பீர் புரூட்டஸின் மூதாதையருக்கும், புரூட்டஸின் சந்ததியாருக்கும்!

மற்றொருவர்: ரோமுக்குப் புரூட்டஸை அதிபதி ஆக்குவீர்! புரூட்டஸை அரசர் ஆக்குவீர்! சீஸரின் ஆசனத்தில் பண்பாளர் புரூட்டஸ் அமரட்டும்! ரோமா புரியை நேசிக்கும் புரூட்டஸ்தான் அதன் ஆட்சிப் பீடத்தில் அமரத் தகுதி பெற்றவர்! சீஸர் செத்தது நாட்டுக்கு நல்லது! நமக்கு நல்லது! நம் சந்ததிக்கும் நல்லது!

மற்றொருவர்: ரோமைக் காப்பாற்றிய புரூட்டஸ¤க்கு சீஸரின் மகுடத்தைச் சூட்டுவீர்! புரூட்டஸ் நமது அடுத்த தளபதி!

புரூட்டஸ்: [திரும்பிப் பார்த்து, தயக்கமுடன்] என்னருமை நாட்டவர்களே! என்ன சொல்கிறீர்? ரோமின் அரசியல் நியதி குடியாட்சி! முடியாட்சி வேண்டாம் உமக்கு! நீங்கள் என்னை மன்னராக்கி மகுடம் அளித்தால் அது செல்லாது! செனட்டார் முடிவு செய்ய வேண்டிய தீர்வுப் பதவி அல்லவா அது? ரோமர்களே! என்னைத் தனியே போக விடுவீர்! நான் சீஸரைப் போல் ஆளப் பிறந்தவன் அல்லன்! போய் வருகிறேன், மேடைக்கு ஆண்டனி ஏறிவரட்டும்! முடிந்து விட்டதென் பணி! ஆண்டனியின் உரையைக் கேளீர்! அவர் எங்கள் அனுமதியில் பேச வருகிறார்! சீஸருக்கு மூத்த மகனாகக் கருதப்படும் ஆண்டனி சீஸருக்கு மரண உரையாற்றி ஈமச் சடங்குகளைச் செய்யப் போகிறார்! எங்களைச் சேராத அவருக்குப் பேச அனுமதி தாருங்கள்!

[புரூட்டஸ் சீஸர் சடலத்தைக் காணச் சகிக்காமல், முகத்தைத் திருப்பிக் கொண்டு வெளியேறுகிறார்]

கூட்டத்தில் ஒருவன்: அமைதி! அமைதி! ஆண்டனி பேச்சைக் கேட்போம்.

அடுத்தவன்: மேடைக்கு ஏறிச்செல் ஆண்டனி! சீஸர் உடலைத் தரையில் இறக்கி வை! சீஸரைச் சுமந்தது போதும்! சீஸருக்கு நீங்கள் கண்ணீர் விட்டது போதும்! செத்த சீஸர் புதையப் போவது பூமியில்! பேச்சைத் துவங்குவீர்!

[சீஸரின் சடலத்தைப் பூமியில் கிடத்தி, ஆண்டனி மேடைக்குச் செல்கிறான்]

ஆண்டனி: [கண்ணீரைத் துணியில் துடைத்துக் கொண்டு] மிக்க நன்றி புரூட்டஸ்! நான் புரூட்டஸ் அனுமதி பெற்றுப் பேச வந்திருக்கிறேன். தனியே வந்திருக்கிறேன், சீஸர் சடலத்துடன்! [கண்ணீரைத் துடைத்துக் கொண்டு] நான் நின்றாலும், பாரீர் என் கண்ணீர் நிற்க மறுக்கிறது! உங்களைக் காணத் தடையாய் என் கண்ணீர் திரையிடுகிறது! கொஞ்சம் அவகாசம் கொடுங்கள், கண்ணீர் நிற்கும் வரை!

முன்னிற்கும் ஒருவன்: அந்தோ பாவம் ஆண்டனி! கண்ணீர் தைபர் நதிபோல் கரை புரண்டு ஓடுகிறது! மங்கலான கண்களால் எப்படி நம்மைக் காண முடியும்? என் கண்களைக் கொடுக்கத் தயார், ஆனால் எப்படிக் கொடுப்பது? … அமைதி! அமைதி! ஈதோ ஆண்டனி பேசப் போகிறார்!

ஆண்டனி: [தழுதழுத்த குரலில், சீஸர் சடலத்துக்கு அருகில் நின்று துக்கமோடு]

நண்பர்காள்! ரோமர்காள்! நாட்டு மக்காள்!
சீஸரை நான் புதைக்க வந்துளேன்!
புகழ்த்த வந்திலேன்!
மனிதரின் தீங்குகள் மறைந்தபின் நிலைபெறும்!
நற்பணி யாவும் புதைபடும் எலும்புடன்!
சீஸரைப் பேராசை யாளராய்
ஏசினார் பண்புள்ள புரூட்டஸ்!
அப்படி யாகின் அது வருத்திடும் தவறு!
அதற்குச் சீஸர் தன்னுயிர் நீத்தார்!
புரூட்டஸ் மற்றோர் அனுமதி பெற்று
உரைதனை ஆற்ற வந்துளேன் ஈங்கு!
புரூட்டஸ் சிறந்த பண்பாடு உடையவர்!
அத்தனை பேரும் பண்புடை மாந்தர்!
சீஸரின் அகால மரணச் சடங்கில்
பேச வந்துளேன்! அவரென் நண்பர்,
நம்பிக்கை யானவர், நியாய வாதி!
ஆனால் ஆசையாளி என்றார் புரூட்டஸ்!
அவர் உன்னதப் பண்பாடு உடையவர்!

பன்னாடுகள் வென்று பொற்காசுகள் திரட்டி
அடிமைகள் பிடித்துப் பெரும்பணம் உருட்டி
ரோமின் பொக்கிசம் நிரப்பிய சீஸரா
பேராசை மனிதர்?
ஏழையர் அலறிடச் சீஸரும் அழுதார்!
கல்நெஞ்சக் காரர் கைக்கொளும் ஆசை!
சீஸரை ஆசை யாளியாய்க் காட்டுமா?
ஆயினும் சொன்னார் புரூட்டஸ்
சீஸர் பேராசைக் காரர் என்று!
பண்பாடு உடையவர் புரூட்டஸ் அறிவீர்!
அன்று நான் மும்முறை சீஸருக்கு
மகுடம் சூட்டப் புகுந்த வேளை
ஏற்றிலர் சீஸர்! இதுவா பேரவா?
ஆயினும் சொன்னார் பேராசை என்று!
மெய்யாய்ப் புரூட்டஸ் மேன்மை யாளரே!
புரூட்டஸ் உரைத் ததைத் தவறென
நிரூபிக்க வர வில்லை யிங்கு!
எனக்குத் தெரிந்ததை எடுத்துச் சொன்னேன்!
காரண மோடுதான் ஒருகாலத்தில்
யாவரும் நேசித்தீர் சீஸரை!
எந்தக் காரணம் உம் துக்கத்தை
நிறுத்தும் இந்தக் கணத்தில்!
நீதியே! நீ எங்கே?
மிருக மூர்க்கத்தை நோக்கி
ஓடி விட்டாயா?
மனிதர் நன்னெறி இழந்தார்!
மன்னித் திடுமின்!
சீஸரின் சவத்தொடு சேர்ந்துள தென்மனம்!
திரும்பிடும் வரைநான் இருந்திட வேண்டுமே!

முதல் நபர்: ஆண்டனி பேசுவதில் அர்த்தம் உள்ளது! கேட்டீரா? மும்முறை கிரீடத்தை அணிவித்த போது அம்முறை ஏற்றுக் கொள்ள வில்லை சீஸர்! நிச்சயம் அவர் ஒரு பேராசைக்காரர் இல்லை!

அடுத்த நபர்: பாருங்கள்! அழுது, அழுது ஆண்டனி கண்களில் செந்நிறம் பூத்துக் கனல் பறக்கிறது!

முதல் நபர்: ஆண்டனி போன்ற ஓர் புனித மனிதன் ரோம் எங்கிலும் கிடையாது!

இரண்டாம் நபர்: பேசியது போதும், ஈதோ ஆண்டனி தொடர்ந்து பேசப் போகிறார்.

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan December 28, 2006]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts