எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:7) ஜூலியஸ் சீஸர் படுகொலை.

This entry is part [part not set] of 32 in the series 20061207_Issue

சி. ஜெயபாரதன், கனடா


சீரோங்கும் ரோமாபுரிச் செம்மை நிலத்தில்,
சீஸர் செத்து வீழும் முன்பாக,
பிரேதங்கள் குழியைக் காலி செய்து
ஆடை உடுத்தி வீதியில் ஆடின,
வானில் காணும் விண்மீன் ஒளிபோல்!
பரிதியில் சிதறிய குருதித் துளிபோல்!
கடல் தேவன் நெப்டியூன் கடாட்சம் படும்
கிரகணப் பரிதியின் பிரளய நாள்போல்!

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஹாம்லெட் நாடகம்]

தேடிச் செல்லாதே உன் மரணத்தை!
தேடி வருமாம் உன்னை மரணம்!
தேடிச்செல், மரணம் பூரண மடையும்
திக்கினை நோக்கி!

டாக் ஹாம்மர்ஷோல்டு, [Dag Hammarskjold, UN Secretary General (1905-1961)]

உலகப் பகட்டினில் உழலும் போது,
நிழலாய்ப் பின்வரும் சாவினை அறியாய்!
இடிபோல் தாக்கும் மனிதனை மரணம்,
தடாலென மண்டையில் அடித்து! ….

ஜெட்ஸன் மிலரேப்பா, திபெத் கவியோகி [Jetsun Milarepa (1052-1135)]

மரணம் என்பது என்ன?
உணர்ச்சி அதிர்வு கட்கு ஓய்வு!
ஆசைகளின் அந்திமக் கனவு!
சிந்தனைக் கோலங் கட்கு முடிவு!
உடலின் உழைப்புக்கும் ஒரு விடுப்பு!

மார்கஸ் அரேலியஸ் [Marcus Aurelius, Roman Emperor (A.D.121-180)]

அஞ்சா நெஞ்சன் என்பவன் மெய்யாய்
அஞ்சாத மனிதன் அல்லன், என்பேன்!
அது மடமை, தர்க்க ரீதியில் தவறு!
மகத்துவ மனம் பயத்தைத் தணித்து,
இயற்கையில் நேரும் விபத்தைப் பங்கிட்டு,
தயங்காது ஏற்பவன் அஞ்சா மனிதன்!

ஜோவானா பைல்லி, நாடக மேதை, கவிஞர் [Joanna Baille (1762-1851)]

அந்தோ! செத்ததும் செல்வ தெங்கோ?
புதைந்து பனியில் சிதைந்து முடங்குவதோ?
கண்காணா, காற்றில்லாச் சிறையுட் பட்டு,
பயங்கரம் மரண மென்று அலறுவதோ?
கொடுமையிலும் மிகக் கோரம் அந்தோ!

வில்லியம் ஷேக்ஸ்பியர் [Measure for Measure]

ஏற்றி வைத்த மெழுகு வர்த்தி ஒருநாள்,
காற்றில் அணைந்து விடும் டுப்பென!
நேற்று சுவாசித்து வாழ்ந்தவன் சாம்பல்,
ஆற்றில் கரைந்தோடு மின்று!

கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!

முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.

நாடகப் பாத்திரங்கள்:

எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:

ஜூலியஸ் சீஸர்: ரோமானியப் போர்த் தளபதி [52 வயது]
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி [20 வயது]
டாலமி XIV: கிளியோபாத்ராவின் தனயன் (கணவன்), எகிப்தின் மன்னன் [15 வயது]
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா [45 வயது]
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன் [வயது நான்கு]
போதினஸ்: டாலமியின் பாதுகாப்பாளன் [50 வயது]
தியோடோடஸ்: டாலமியின் ஆசிரியர் [45 வயது]
அக்கில்லாஸ்: டாலமியின் போர்த் தளபதி [53 வயது]
பிரிட்டானஸ்: சீசரின் அரசாங்கச் செயலாளர் [40 வயது]
ரூ·பியோ: சீஸரின் லெ·ப்டினன்ட் [40 வயது]
லூசியஸ் ஸெப்டிமியஸ்: ரோமானிய இராணுவ அதிகாரி [50 வயது]
அபெல்லோடோரஸ்: ஸிசிலியன் கம்பள வாணிகன்.
சீஸரின் சதிகாரர்கள்.
பாம்ப்பியின் அனுதாபிகள்.

ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள்.

அங்கம்:5 காட்சி:7

நேரம், இடம்: சீஸர் பட்டாபிசேக தினம். பகல் வேளை. ரோமாபுரியில் மக்கள் மன்றம் கூடுகிறது. பாம்ப்பியின் சிலைக்குக் கீழ் பெரிய ஆசனம் போடப்பட்டு உள்ளது. பக்கத்து மேடையில் தங்க மகுடம் ஒன்று வைக்கப் பட்டுள்ளது. மன்றத்துக்குப் போகும் மேற்படிக் கருகில் கிளியோபாத்ராவின் புதிய சிலை ஒன்று உருவாக்கப்பட்டு மன்றத்துக்கு வருவோரை வரவேற்க நிறுத்தப் பட்டுள்ளது.

நாடகப் பாத்திரங்கள்: ஜூலியஸ் சீஸர், தீஸியஸ், புரூட்டஸ், ஆண்டனி, காஸ்ஸியஸ், காஸ்கா மற்றும் பல ரோமானிய செனட்டர்கள்.

காட்சி அமைப்பு: மார்ச் பதினைந்தாம் தேதி பகல் வேளை. ஜூலியஸ் சீஸர், தீஸியஸ், புரூட்டஸ், ஆண்டனி, காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா, மெத்தலஸ், திரிபோனஸ், ஆர்டிமிடோரஸ், பொப்பிலஸ் மற்றும் சில செனட்டர்கள் புடைசூழ மக்கள் மன்றத்துக்கு வந்து கொண்டிருக்கிறார். வழியில் ஜோதிட நிபுணன் சீஸர் முன்பாக எதிர்ப்படுகிறான்.

ஜூலியஸ் சீஸர்: [மன்றத்தின் அருகில் நின்று ஜோதிட நிபுணனைப் பார்த்துக் கேலியாகச் சிரித்து] என்னப்பா! மார்ச் பதினைந்தாம் தேதி வருது, வருது என்று எனக்குப் பயமூட்டினாயே! அதுவும் வந்தாயிற்றே! ஒன்றும் நேர வில்லையே எனக்கு!

ஜோதிடர்: மேதகு சீஸரே! பதினைந்தாம் தேதி இன்னும் கடந்து செல்ல வில்லை என்பதை மறக்காதீர்!

ஜூலியஸ் சீஸர்: ஜோதிடரே! நான் எதற்கும் அஞ்சி ஒளிய மாட்டேன். பயங்காட்டியே பிழைக்கும் நீ இனி என்கண் முன் எதிர்ப்படாதே! எதிரே கண்டால் உன்னைக் காலால் எற்றி விடுவேன்! கண்முன் நில்லாமல் ஓடிப் போய்விடு!

ஜோதிடன்: [விரைந்து போய்க் கொண்டே] இதுதான் கடைசி முறை. நானினி உங்களைக் காணப் போவதில்லை! நீங்களும் என்னைக் காண மாட்டீர் இனிமேல்! [ஓடிப் போகிறான்]

ஆர்டிமிடோரஸ்: [சீஸரை நிறுத்தித் தலை வணங்கி] மேதகு அதிபதி! வாழ்க நீடூழி! என் பட்டியலைத் படித்துப் பாருங்கள்! கட்டாயம் நீங்கள் வாசிக்க வேண்டும்! உங்கள் நண்பர் யார், பகைவர் யார் என்னும் அட்டவணை இது. தயவு செய்து படியுங்கள்!

தீஸியஸ்: [சீஸர் முன் தலை வணங்கி] தளபதி வாழ்க! முதலில் என்னுடைய விண்ணப்பத்தை படியுங்கள். அவசர மில்லை அவன் பட்டியலுக்கு! என் பிரச்சனை முக்கிய மானது! படியுங்கள் இதை முதலில்! யார் உங்கள் நண்பர் என்று ஒருவன் எழுதிக் காட்ட வேண்டுமா? ரோமில் உங்களுக்குப் பகைவர்கள் கிடையா.

ஆர்டிமிடோரஸ்: வாசிக்க வேண்டாம் அதை! உங்களை முதலில் அண்டியவன் நான்தான்! முதலில் வந்தவனுக்கு முதலிடம் அளிப்பீர்! தீஸியஸ் பிரச்சனையை தீர்க்க முடியாதது! என் பட்டியல் உங்களைப் பாதிக்கும்! ஏன் ரோமாபுரியையே பாதிக்கும்! ஒதுக்கித் தள்ளுங்கள் அவனை! எனது பட்டியல் பாதுகாப்பு நபர்களைச் சுட்டிக் காட்டும்! அவசரம் பாருங்கள்! அவசியம் பாருங்கள்! அலட்சியம் வேண்டாம்!

காஸ்ஸியஸ்: போடா போ! உன் பட்டியலுக்கு என்ன அவசரம்? பாதையில் சீஸரை நிறுத்தி பட்டாபிசேக நேரத்தை வீணாகக் கடத்துகிறாய்! உன் விண்ணப்பத்தை மன்றத்துக்கு வந்து பின்னர் காட்டு!

[சீஸர் தொடர்ந்து நடக்கிறார். மன்றத்தை அடைந்து பாம்ப்பியின் சிலைக்கருகில் உள்ள ஆசனத்தில் சீஸர் அமர்கிறார்.]

பொப்பிலஸ்: [சீஸரை நெருங்கி மண்டியிட்டு] மேதகு மன்னா! அடியேன் வணக்கம்! நீண்ட காலம் நீங்கள் வாழ வேண்டும்! எனக்கொரு கோரிக்கை! நிறைவேற்ற வேண்டும்! உங்கள் பட்டாபிசேக நாளென்று எனக்கோர் வேண்டுகோள் உள்ளது!

காஸ்ஸியஸ்: [புரூட்டஸிடம் மெதுவாகத் தடுமாறி, ஆங்காரமாய்] புரூட்டஸ்! நமது ரகசியம் கசிந்து யார் காதிலும் பட்டுவிடக் கூடாது! நமது திட்டம் விரைவில் நிறைவேற வேண்டும்! நமது மர்மச் சதி சீஸர் காதுக்கு எட்டுவதற்குள், நம் கத்திகள் முந்திக் கொள்ள வேண்டும். நமது சதித் திட்டம் வெளியானால், குத்திக் கொண்டு நான் செத்து வீழ்வேன்! புரூட்டஸ்! கால தாமதம் கூடாது! கத்திகள் விஷ நாக்குகளை நீட்ட வேண்டும், சீக்கிரம்!

புரூட்டஸ்: சற்று பொறு காஸ்ஸியஸ்! புறாவைக் கூண்டில் அடைத்தாகி விட்டது! கையில் பிடிபட்ட புறா நம்மிட மிருந்து தப்ப முடியாது! நாம் அனைவரும் சீஸரைச் சுற்றி முற்றுகை இட வேண்டும்! நேரம் வந்து விட்டது, காஸ்ஸியஸ்! உறங்கும் வாளை ஓசையின்றி உருவுங்கள்!

காஸ்ஸியஸ்: [மெதுவாக] புரூட்டஸ்! அதோ பாருங்கள்! நமது முதல் திட்டம்! காலத்தை அறிந்தவன் திரிபோனஸ்! ஆண்டனியைப் பின்புறமாய்க் கடத்திப் போகிறான்! … [காஸ்காவை நெருங்கி] சரியான சமயம்! சட்டெனச் செய்! சீஸரின் பின்பக்கம் செல்! அங்கே காத்து நில்! முதலில் நீதான் சீஸரின் முடிவு விழாவைத் துவங்க வேண்டும்! போ, காஸ்கா போ! பூனைபோல் நடந்து புலிபோல் தாக்கு! யானை சாகாது ஓரடியில்! அடுத்து அடிமேல் அடி வைப்பது நாங்கள்! போ, காஸ்கா போ! கால தாமதம் வேண்டாம்!

மெத்திலஸ்: [திடீரென சீஸர் காலில் விழுந்து] பராக்கிரமச் சக்கரவர்த்தி! பாராளும் வேந்தே! வல்லமை மிக்க பிரபு! உலகம் சுற்றிய உங்கள் உன்னத பாதங்களில் விழுகிறேன்! என் தமையன் மீது பரிவு கொள்ள வேண்டும்!

ஜூலியஸ் சீஸர்: சக்கரை மொழிகளில் என்னை மெழுகாக்க முனையாதே! கூழைக் கும்பிடு போட்டு வாளை நீட்டாதே! நீ எதற்கு என்னை நெருங்கி வருகிறாய் என்று தெரியும் எனக்கு! நாடு கடத்தப் பட்ட உன் தமையனுக்காக எதுவும் என்னிடம் கேளாதே! அவன் தேசத் துரோகி! தேசத் துரோகிகளை விலங்குபோல் வேட்டையாட வேண்டும்! உயிரோடு அவனை நான் விரட்டியதற்கு நீ பூரிப்படைய வேண்டும்! சீஸர் அவனைத் தண்டித்தது காரணமோடுதான்! போய்விடு!

மெத்திலஸ்: [தலையைத் திருப்பி] மாபெரும் மக்கள் மன்றத்தில் என் குரலுக்கு வேறு ஆதரவு கிடையாதா? என் சகோதரனை மீண்டும் அனுமதிக்க எனக்கு வழிமொழிபவர் எவரு மில்லையா? [எழுகிறான்]

புரூட்டஸ்: [தலை குனிந்து] உங்கள் கரத்தை முத்த மிடுகிறேன் சீஸர், முகத்துதிக்காக இல்லை! மெத்தலஸ் தமையனை நீங்கள் மன்னித்து, மீண்டும் ரோமானிய பிரஜையாக மாற அனுமதிப்பீர்!

ஜூலியஸ் சீஸர்: [ஆச்சரியத்துடன், சினத்துடன்] புரூட்டஸ்! தேசத் துரோகியை நீயுமா மன்னிக்கச் சொல்கிறாய்? மெத்தலஸ் அயோக்கியன்! அவன் தமையன் அவனை விட அயோக்கியன்! அவனை நீ ஆதரித்து மன்னிக்கச் சொல்வது அதை விட அயோக்கியத்தனம்! [புரூட்டஸ் எழுந்து பின் செல்கிறான்]

காஸ்ஸியஸ்: [சட்டென முன் வந்து தலைவணங்கி] மன்னிக்க வேண்டும் சீஸர்! மெத்தலஸ் தமையனை மன்னிக்க வேண்டும் நீங்கள்! தவறுவது மனித இயல்பு! மன்னிப்பது தெய்வ இயல்பு! ஆனால் தண்டிப்பது அரச இயல்பு என்று சொல்ல மாட்டேன் நான்! மெத்தலஸ் தமையனின் தண்டனையை நீக்கி நாடு திரும்ப அனுமதிப்பீர்!

ஜூலியஸ் சீஸர்: காஸ்ஸியஸ்! உன்னைப் போல் நானிருந்தால், உருகிப் போவேன் நானும் ஒருகணம்! பிறரை மாற்ற உன்னைப் போல் பிரார்த்தனை செய்தால், நானும் மெழுகாய்ப் போவேன்! ஆனால் நானொரு துருவ நட்சத்திரம்! அதன் நிலைப்பு மாறாது! அதன் இருப்பிடம் மாறாது! அதன் ஒளிவீச்சு மாறாது! அதுபோல் என் மனமும் மாறாது! அவன் தமையன் வாழ்நாள் முழுதும் தண்டனை அனுபவிக்கத்தான் வேண்டும்! ¡வனுக்கு விடுவிப்பில்லை!

சின்னா: [காஸ்ஸியஸ் எழுந்து நகர, மண்டியிடுகிறான்] சீஸர்! சீஸர்! சீஸர்! பரிவு கொள்வீர்! மன்னிப்பீர்! பரிதவிக்கும் பாபியை வர அனுமதிப்பீர்!

ஜூலியஸ் சீஸர்: ஒலிம்பஸ் மலையை யாரும் நகர்த்த முடியாது! அலை, அலையாய் படை எடுத்தாலும், மலையை யாரும் தள்ள முடியாது! ஓநாயை வேங்கை வேட்டையாடத்தான் செய்யும்.

[திடீரெனப் பின்னாலிருந்து கத்தியால் முதுகில் குத்துகிறான் காஸ்கா. ஆவென அலறுகிறார் சீஸர். செனட்டார் அனைவரும் ஆவேசமுடன் எழுந்து, பயந்துபோய் ஆரவாரம் செய்கிறார்கள்.]

காஸ்கா: [ஆங்காரமாய்க் கத்தியை உருவி] ஏன் முடியாது? வேங்கையின் மூச்சை நான் நிறுத்த முடியும்!

[அடுத்தடுத்து தீஸியஸ், சின்னா, காஸ்ஸியஸ், திரிபோனஸ், மெத்தலஸ் ஆகியோர் சீஸர் உடம்பைக் குத்திக் கிழிக்கிறார். சீஸர் தடுமாறிக் கொண்டு புரூட்டஸ் உதவியை நாடி மெதுவாய்ச் செல்கிறார். சட்டெனத் திரும்பிய புரூட்டஸ் தன் கைவாளை உருவி, சீஸரின் வயிற்றில் பாய்ச்சுகிறான்.]

ஜூலியஸ் சீஸர்: [கண்ணீர் சிந்தச் சிந்த] நீயுமா புரூட்டஸ்? பிறகு சீஸர் சாக வேண்டியதுதான்! [பொத்தென பாம்ப்பியின் சிலைக் காலடியில் சீஸர் விழுந்து உயிரை விடுகிறார். மக்கள் மன்றத்தில் கூச்சலுடன் செனட்டர்கள் அங்குமிங்கும் பயந்து ஓடுகிறார்கள்.]

சின்னா: [கையில் வாளை உயர்த்தி] விடுதலை! விடுதலை! ரோமுக்கு விடுதலை! ஏதேட்சை அதிகாரம் ஒழிந்தது! தெருவெல்லாம் முரசடிப்பீர் செனட்டர்களே! செத்தொழிந்தான் சீஸர்! கொடுங்கோல் ஆட்சி ஒழிந்தது! தேச நேசர்கள் மேடையில் பேசுவார்! வெற்றி நமக்கு! விடுதலை நமக்கு! நல்ல காலம் நமக்கு!

[தீஸியஸ், புரூட்டஸ், காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா, மெத்தலஸ், திரிபோனஸ், ஆர்டிமிடோரஸ், பொப்பிலஸ் அனைவரும் குருதி சொட்டும் வாளை உயர்த்திக் கொண்டு செத்து வீழ்ந்த சீஸரின் உடலைச் சுற்றி வருகிறார்]

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan December 7, 2006]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts