வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 14

This entry is part [part not set] of 32 in the series 20061207_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


அத்தியாயம் – 14

மறுநாள், எழுந்திருக்கையில் முதல்நாள் சோர்வேதுமில்லை, நன்றாகவே இருந்தேன். நேற்றைய அத்துமீறல்களால் பின்கழுத்தில் மாத்திரம் வலி. வழக்கம்போல எனது கட்டில், சூரிய ஒளியில் மூழ்கிக் கிடக்கிற காலை வேளை. போர்வையை சுருட்டித் தள்ளினேன், போட்டிருந்த பைஜாமாவின் மேற்சட்டையையும் கழற்றிப் போட்டுவிட்டு, எனது வெறும் முதுகை சூரியனுக்குக் காட்டியபடி குப்புற படுத்தேன். மடக்கிய கையில் கன்னத்தை வைத்தபடி பார்க்க, முதலில் போர்வைக் குவியல், தூரத்தில் தரையில் பதித்திருந்த மார்பிளில் ஈயொன்று தவித்துக்கொண்டிருந்தது. காலை சூரியனில்லையா? இதமான வெப்பம். என்மீது கரிசனங்கொண்டு கதகதப்பினையூட்ட நினைத்ததுமாதிரி, சூரியன் எனது தசைக்குள் இறங்கி எலும்புகளை நீவிக்கொண்டிருந்தான். அப்படியே அசையாமல் கட்டிலிற்கிடந்து காலைப் பொழுதை ஓட்டிவிடலாமா என்று கூட நினைத்தேன்.

நேற்று மாலை நடந்ததனைத்தையும் மெல்ல மெல்ல, தெளிவாய் ஞாபகப்படுத்த முடிந்தது. ‘ஆன்’னிடம், ‘சிரில்’ என் ஆசைநாயகன்’ என்று கூறியிருந்ததையும், பின்னர் சிரித்ததையும் நினைத்துக்கொண்டேன்: போதையிலிருக்கையில் உண்மையைப் பேசுகிறோம், ஆனால் ஒருவரும் நம்புவதில்லை. அடுத்து, மதாம் வெப்(Mme Webb)பையும் அவளோடு சண்டையிட்டதையும் ஞாபகப்படுத்த முடிந்தது. எனது வயதும், மதாம் வெப் மாதிரியான பெண்கள் மத்தியில் பழகியதும் அவளைச் சமாளிக்க உதவியிருக்கிறதென புரிந்துகொண்டேன். அப்பெண்களையும் குற்றம் சொல்வதற்கில்லை, வேலையற்று இருப்பவர்கள், வாழ்க்கையை நன்கு அனுபவிக்கவேண்டுமென்கிற ஆசைகளும் அவர்களுக்கு நிறைய இருக்கின்றன, எனவே பொதுவிடங்களில் இரசாபாசமாக நடந்துகொள்கிறார்கள். வழக்கத்திற்கு மாறாக ‘ஆன்’ மிகவும் மனமுடைந்திருப்பதும், வருத்தத்திலிருப்பதும், அவள் காட்டிய அமைதி தெரிவித்தது. தொடர்ந்து அவள் அப்படியே இருந்தால், என் தகப்பனாருடைய பெண் நண்பர்களில், யாரை அவளோடு ஒப்பிட்டுப்பார்ப்பது, ஒருவரும் சரிவரமாட்டார்களேயென நினைத்துக்கொண்டேன். ஒரு மாலைப்பொழுதை சந்தோஷமாக நீங்கள் என் தகப்பனாருடைய பெண் நண்பர்களோடு கழிக்கவேண்டுமெனில், சில தகுதிகள் உங்களுக்கு அவசியம்: முதலில் ஓரளவுக்காவது நீங்கள் குடிபோதையில் இருக்கவேண்டும், அடுத்து அவர்களோடு மல்லுக்கு நிற்கவேண்டும், கடைசியில் முடிந்தால் அவரவர் தேவைக்கேற்ப சம்பந்தப்பட்டத் தோழியையோ, தோழனையோ அல்லது அவர்களது ஜோடியையோ தள்ளிக்கொண்டு மறைவாக ஒதுங்கவேண்டும். என் தகப்பனாருக்கு இவைகள் சுலபமாக வரும். ஷார்ல் வெப்பும்(Charles webb), அப்பாவும் ஸ்த்ரீலோலர்கள். ” இன்றிரவு என்னோடு டின்னர் சாப்பிடவும், படுக்கவும் வருகிறவள் யாரென்று உன்னால் சொல்லமுடியுமா? ஸொரெல்(Saurel) படத்துல வருகிற மார்ஸ்(Mars). துப்புய்(Dupuis) வீட்டுக்கு திரும்பவும் வருகிறேன் அங்கே…” தொடர்ந்து அப்பா உரத்தக் குரலில் சிரிப்பார், வெப்(Webb) என் தகப்பனார் தோளினை மெல்லத் தட்டி: அவனுக்கென்னய்யா ஜாலியான ஆசாமி!… அவளும் அழகில் எலிஸ்(Elise)க்கு எந்த விதத்திலும் இளப்பமில்லை.”, என்பார். இருவரும் பள்ளிச் சிறுவர்கள்போல அரட்டை அடிப்பார்கள். அம்மாதிரியான நேரங்களில் அவர்களிடத்திலே வெளிப்படுகிற தவிப்பும் தாபமும் சுவாரஸ்யமாகயிருக்கும். மாலைவேளைகளில் காப்பி பார்களில் அப்பாவுக்கும் அவரது நண்பர்களுக்கும் மணிக்கணக்கில் நடக்கிற உரையாடல்கள் இன்னமும் சுவாரஸ்யமாகயிருக்கும், அதிலும் ‘லொம்பார்ட்'(Lombard) சொல்கிற சோகக்கதைகளை நீங்கள் கேட்டிருக்கவேண்டும்: ” அவளைத்தவிர வேறொருத்தியை என்னால நினைச்சு பார்க்க முடியலை ரெமோன்(Raymond).. என்னுடன் அவளிருந்த வசந்தகாலம் நினைவிருக்கா? அதாவது அவள் என்னைவிட்டுப் போவதற்கு முன்னால நடந்தது… ஒருவனுக்கு ஒருத்திண்ணு சொல்றதெல்லாம் என்ன வாழ்க்கை…” என அவர் மிகவும் அலுத்துக்கொள்வார். என்ன… இப்படியெல்லாம் கூச்சமில்லாமல் அருவருப்பாக பேசிக்கொள்கிறார்களே என நினைப்பீர்கள், எனினும், மதுவை வைத்துக்கொண்டு அவர்கள் பேசும் பேச்சிருக்கிறதே, அதனை எவ்வளவு நேரமென்றாலும் ரசிக்கலாம்.

‘ஆன்'(Anne) நண்பர்கள் ஒருபோதும் தங்களைப்பற்றி அப்படி பேசிக்கொண்டதில்லை. நீங்கள் நினைப்பதும் சரி, அவர்களுக்கு, அப்பாவைப்போலவோ அல்லது அவரது நண்பர்களைப்போலவோ காதலனுபவங்கள் இல்லை. அப்படியே அவர்கள் பேசும்படி நேரிட்டாலும், புன்னகைக்கலாம் அவ்வளவுதான். உண்மையில் பலரும் விரும்பக்கூடியதும், ஏற்கக்கூடியதுமான குணங்கள் அவர்களிடம் இருந்தன. வருங்காலத்தில் அத்தகைய பெருந்தன்மையை ‘ஆன்’ எங்களிடத்திலும் காண்பிக்கலாமென்பதால், அதை பகிர்ந்துகொள்ள நானும் தயார். எனினும் எனது முப்பதாவது வயதை கற்பனை செய்துபார்க்கையில், நான் பெரிதும் அப்பாவின் நண்பர்களை ஒத்திருந்தேனேயன்றி ‘ஆன்’போல இல்லை. அப்போது, அவளது அமைதியும், அலட்சியமும், கமுக்கமும் எனது நெஞ்சை அதிகமாகவே இறுக்கலாம். ஆனால், அடுத்த பதினைந்துவருடத்தில் ஒரு நாள், வாழ்க்கையை ஒருபாட்டம் ஆடிமுடித்து அலுத்துபோய் நான் அமர்ந்திருக்க, அருகில் வசீகரத்துடன் ஆணொருவன் அமர்ந்திருப்பான், அநேகமாக அவனும் என்னைப்போல களைத்திருக்கலாம், அவனிடத்தில்:

” – என்னோட முதல் கள்ளக்காதலன் பேரு ‘சிரில்'(Cyril). அப்போது எனக்கு வயசு பதினெட்டு, கொளுத்தும் வெயிலில், கடலில்…” என்று சுயபுராணம் படித்துக்கொண்டிருப்பேன்.

அம்மனிதனின் முகத்தையும் என்னால் கற்பனைசெய்ய முடிந்தது. அப்பாவைப்போலவே அவனது முகத்திலும் சின்னதாய்ச் சுருக்கங்கள். கதவை யாரோ தட்டும் சத்தம். அவசரவசரமாக பைஜாமாவினுடைய ஜாக்கெட்டை அணிந்தவள், “உள்ளே வரலாம்”, என்றேன். கதவைத் திறந்துகொண்டு ஆன், காப்பிக்கோப்பையொன்றை வெகு ஜாக்கிரதையுடன் கையில் பிடித்திருந்தாள் .

” உனக்குக் காப்பித் தேவைப்படுமென்று நினைத்தேன். உடம்பில் நோக்காடு தெரிகிறதா?

– ஆமாம், நேற்றுமாலை கொஞ்சம் அதிகமா குடிச்சுட்டேண்ணு நினைக்கிறேன்.

– வெளியே போகும்போதெல்லாம், அதிகமாகக் குடிப்பதென்பதுதான் உனது வழக்கமாகப் போச்சே…அதிலும் நேற்று மாலை ஆக மோசம்… என்னை ரொம்ப நோகடிச்சுட்ட, நேற்றைய இரவு நன்கு கழிந்திருக்கவேண்டியது…”

அதன்பிறகு எனது கவனம் சூரியனிடத்திலுமில்லை, காப்பியின் ருசியிலுமில்லை. ‘ஆன்’னிடம் உரையாடுகின்ற நேரங்களில், வழக்கமாக எனக்கேற்படும் நிலைமை: என்னை முழுவதுவதுமாக அவள் கிரகித்துக்கொள்வாள், எனது இருப்பு பொய்யென்றாகிவிடும், எனினும் நான் ‘இருக்கிறேன்’ என்பதுபோல என்னைக் குறிவைத்து கேள்விகள் வரும், என்னைப்பற்றிய முடிவுக்கு வரும்படி அவை வற்புறுத்தும், அன்றைக்கும் அப்படித்தான் என்னை மிகவும் இக்கட்டான நிலமையில் வைத்திருந்தாள்.

” – செசில்(Cecil) உனக்கு வெப்(Webb), துப்புய் (Dupuis) குடும்பங்களென்றால் சந்தோஷம் போலிருக்கிறது?

– சரியான கழுத்தறுப்பு ஆசாமிகளென்றாலும், நமக்குப் பொழுது போகுதே….”

தரையில் கிடந்த ‘ஈ’ யின் பிரயத்தனங்களை கவனித்தபடியிருந்தாள் ‘ஈ’க்கு ஏதோ நேர்ந்திருக்கவேண்டும். நீளவாக்கிலும், தடித்துமிருந்த ‘ஆன்’னுடைய விழிமடல்கள், பரிவும் கனிவும் அவளது இயல்பான குணமென்று சாட்சியமளித்தன.

“- திரும்பத் திரும்ப ஒப்பந்தங்கள், ஏற்பாடுகள், பெண்கள், மாலைப் பொழுதுகள் என அவர்கள் பேசுகிறபொழுது, அப்பேச்சு உனக்கு எரிச்சலூட்டவோ, அல்லது வருந்தச் செய்யவோ இல்லை.

– ‘ ஆன்… உனக்குத் தெரியும், பத்துவருடங்கள் நான் விடுதியில் தங்கியிருந்தவள். நீ குறிப்பிட்ட அவர்களிடத்தில் பெரிதாக எந்தப் பண்பையும், எதிர்பார்க்கவும் முடியாது, எனவே, அவர்களின் பேச்சு எனக்கு சுவாரஸ்யமாக இருக்கிறது.”

சுவாரஸ்யமாக இருக்கிறதென்று சொன்னேனேயன்றி சந்தோஷமாக இருக்கிறதென்று சொல்லவில்லை, உண்மையைச் சொல்ல அச்சம்.

“- இரண்டுவருடமாக, அப்படித்தானே?…. இது, மனிதர்களின் பண்பினைக் அடிப்படையாகக்கொண்டதோ அல்லது நியாயத்தினை அடிப்படையாகக்கொண்டதோ அல்ல, உணர்வு சம்பந்தப் பட்ட விடயம், இன்னும் சொல்லபோனால் அதற்கும் மேலே…”

எனக்கு முடியாது, அப்படியெல்லாம் ஒரு விடயத்தை என்னால் பார்க்கவியலாது, அந்த விவாதத்தினைத் தொடர்வதற்கு எனக்குப் போதாதென்பது தெளிவாய் விளங்கியது.

சட்டென்று அவளிடம் “ஆன்… நான் புத்திசாலிண்ணு நம்பறியா?” கேட்கிறேன்.

அப்படியொரு கேள்வியை எதிர்பார்க்காதவள்போல, அவள் கலகலவென சிரித்தாள்.

“- நீ புத்திசாலிண்ணு நம்பத்தான் செய்யறேன். எதற்காக இந்தக் கேள்வி?

– நான் முண்டமாகவிருந்தாலும், உனது பதில் இப்படித்தானிருக்குமா? அடிக்கடி என்னை நீ ஓரங்கட்டுவதுபோல நினைக்கிறேன்…

– எல்லாத்துக்கும் வயசுதான் அடிப்படை. உன்னிலும் பார்க்க தெளிவாக நான் இருப்பது அவசியம், அப்படியில்லையெனில், எனக்கு இன்னமும் அலுப்புத் தட்டிவிடும். உன்னோட ஆதிக்கத்திற்கு நான் அடக்கமென்றாகிவிடும்.”- சொன்னவள் சத்தமிட்டு சிரித்தாள், எனக்கு அவளது பதிலில் ஏமாற்றம்.

” – அப்படியே… நானிருக்கிறேன் என்று வைத்துக்கொள்வோம், அதிலென்ன தப்பு?

– வேறு வம்பே வேண்டாம், கற்பனைசெய்யவே பயமாயிருக்கு”, எனக் குரலைத் தாழ்த்திசொன்னவள், சட்டென்று அதிலிருந்து விடுபட்டு நேராக எனது கண்களைப் பார்த்தாள். அவளது பார்வையைத் தாங்கவியலாமல் நெளிகிறேன். இன்றைக்கும் அப்படியானப் பழக்கமுள்ளவர்களைச் சந்திக்கிறேன், அவர்கள் எனது கண்களை நேரிட்டுப் பார்த்தாலோ, அல்லது அவர்கள் சொல்வதை நான் காதில் வாங்குகிறேனா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக, அண்மையில் வந்து நின்றாலோ, அதனை எதிர்கொள்ள என்னால் முடிவதில்லை. தவிர அவர்களிடமிருந்து தப்பினாற்போதுமென நினைத்து, பின்வாங்குவேன், ” கேட்டுக்கொண்டுதானிருக்கிறேன், சொல்லுங்கள்”, என்றெனது வாய் சொல்லிக்கொண்டிருக்க, கால்கள் சும்மாயிராது, இடம் வலமென்று மாறிமாறி அடவு பிடிக்கும், தப்பித்தால் போதுமென்று அறையின் அடுத்தமுனைக்கு ஓடுவேன். அம்மனிதர்களின் பிடிவாதமும், இங்கிதமற்ற தன்மையும், தங்களுக்கு எல்லா சுதந்திரமும் உண்டென்பதுபோல அவர்கள் நடந்துகொள்ளும்விதமும், எனக்கு நிறைய கோபத்தை ஊட்டும். நல்லவேளை, ஆன்(Anne)ன் அப்படியான எண்ணத்துடன் என்னைத் துரத்தினாள் என்றெல்லாம் சொல்லப்போவதில்லை ஆனால் அந்தப் பார்வையில் மாத்திரம் அப்படியொரு வீச்சு, என்னை ஏறிட்டுப்பார்த்தாளெனில் அத்தனை சீக்கிரம் கண்கள் விலகாது, கூடுதலாக அவளது சிரத்தையற்ற மென்மையான குரல், அவைகளைப்பற்றிப் பெருமையாக பேசியதுண்டு, இனி முடியாது.

” – கடைசியில் வெப்(Webb) மாதிரியான ஆண்களுடைய நிலைமை என்ன தெரியுமா?” -மீண்டும் ஆன்.

மனது அப்பாவை நினைத்துக்கொண்டது.

” – சாக்கடையில் விழுவார்கள்”, மகிழ்ச்சியுடன் சொன்னேன்.

” -அதற்கென்று ஒரு வயதுவரும், அப்போது அவர்களது வசீகரமனைத்தும் காலாவதியாகியிருக்கும், ‘ஏதோ இருக்கிறேன்’ என்று இருப்பார்கள், மது அருந்த மாட்டார்கள், பெண்கள்மீதான ஆசை மாத்திரமிருக்கும்; அதைத் தணித்துக்கொள்ள பணம் வேண்டும். தங்கள் தனிமையிலிருந்து தப்புவதற்கு சின்னசின்னதாய் அநேக விஷயங்களை விட்டுக்கொடுக்கவேண்டிவரும், இழப்புகளுக்குச் சம்மதிக்க வேண்டிவரும். அவர்கள் பரிதாபத்துக்குரிய மனிதர்கள், அரைக்கம்பத்தில் நிறுத்திய கொடிகள். நிறைய எதிர்பார்ப்பிருக்கும், சட்டென்று கலங்கிப்போவார்கள். உடைந்து, உருக்குலைந்து, கடைசியில் சிதைவுகளாய் மாறிப்போனவர்கள் அநேகம்பேரை நான் சந்தித்திருக்கிறேன்.

” வெப்பை(Webb) நினைச்சா பரிதாபமாகத்தான் இருக்கிறது”, – நான்

‘ஆன்’ மாத்திரம் அப்பாவைக் கவனித்துகொள்கிற பொறுப்பை நிராகரித்தால், அவரது கதியென்னவாகும். என் தகப்பனாரின் அந்திமக் காலத்தை நினைக்க அச்சமாக இருந்தது. நான் குழப்பத்திலிருந்தேன்.

” – உன்னால் அதையெல்லாம் எண்ணிப்பார்க்கமுடிகிறதா? எதிர்காலத்தைப்பத்தின கவலைகள் உனக்கேது? உன் வயது அப்படி, இளைஞர்கள் அப்படித்தானிருப்பீர்கள்.

– ஆன்… வேண்டாம், புதுசா இளம்வயது அப்படி, இப்படியென்று சொல்லி இன்னொரு குழப்பம் வேண்டாம். அப்படியொன்றும் இளம்வயது கனவுகளில் மிதப்பவளும் நானல்ல. நீ சொல்கிற வயது எனக்குச் சகலசுதந்திரத்தையும் கொடுத்திருப்பதாகவோ,, எதைச் செய்யவும் எனக்கு அனுமதி வழங்கியிருக்கிறதென்றோ நான் நினைக்கலை. நீ நினப்பதுபோல அதற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கிறதில்லை.

– சரி, நீ எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிற உன்னோட நிம்மதிக்கா?… இல்லை உன்னோட சுதந்திரத்திற்கா?”

எனக்கு அதுபோன்ற உரையாடல்களென்றால் பயம், அதிலும் ‘ஆன்’ன்னுடன், அவைகளைப்பற்றியெல்லாம் பேசுவதென்றால் கூடுதல் பயம்.

” இல்லை… எதைப் பற்றியும் நான் நினைப்பதில்லை, என்னைத் தெரியுமில்லை உனக்கு.

– எனக்கு எரிச்சலுண்டாக்கிற…இரண்டுபேருமே என்னை அதிகமாகச் சீண்டறீங்க, உன் தந்தையையும் சேர்த்துத்தான் சொல்றேன். “தகப்பனுக்கும் பெண்ணுக்கும் எதைபற்றியும் சிந்தனையில்லை, நீங்கள் எதற்கும் உபயோகமில்லை… இந்த உண்மைகளெல்லாங்கூட உங்களுக்குத் தெரியாது…” என்ன விளையாடறியா?

– இதிலென்ன விளையாட்டு? என்னை நானே வெறுக்கிறேன். அது கூடாதென்பதற்காக எந்த முயற்சியிலும் இறங்குவதில்லை. ஆனால் நீ, எனது வாழ்க்கையில் சிக்கல்களை ஏற்படுத்தவேண்டுமென்றே, சிலவேளைகளில் என்னைச் சிரமப்படுத்துகிறாய், அதற்குப் பழிவாங்கவேண்டுமில்லையா, நானும் உன்வழியிலேயே செயல்படுகிறேன், அவ்வளவுதான். ”

ஏதோவொரு பாடலொன்றை திடீரென்று முணுமுணுக்கிறாள். ஏற்கனவே கேட்டபாடல், ஆனால் என்னப் பாடலென்று நினைவில் இல்லை.

” – ‘ஆன்’..இப்போ பாடறதை நிருத்தமுடியுமா? எனக்குப் பிடிக்கலை. என்னப் பாட்டு அது?

– தெரியாது,” சிரிக்கிறாள். மனந்தளர்ந்திருப்பதைபோல தெரிந்தது. தொடர்ந்து, ” கட்டிலிலேயே படுத்திரு, உனக்கு இப்போது ஓய்வு தேவை, இதற்கிடையில் எனக்கும் உங்கள் குடும்பத்தின் புத்திசாலித்தனத்தைப் பற்றிய ஆராய்ச்சியை தொடரவேண்டியிருக்கிறது, நான் புறப்படறேன்”

“அப்பாவுக்குச் சுலபமாய் முடியும்”, நினைத்துக்கொண்டேன். இன்னொன்றும் எனக்கும் புரிந்திருந்தது: எனக்கு எதைப் பற்றியும் சிந்தனையில்லை என்பதற்கு, “அடியே ‘ஆன்’, உன்னையே நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன், உன்னை நேசிக்கிறேன்”, என்றும் பொருள். புத்திசாலி பெண்மணியான ‘ஆன்’னுக்கு, எனது மனது நிச்சயம் புரிந்திருக்கவேண்டும். கால்களை நீட்டி, தலையணையில் முகம் புதைத்து படுத்தேன். ‘ஆன்’ன்னிடம் சொல்லியிருந்ததற்கு மாறாக, நிறைய யோசித்துக்கொண்டிருந்தேன். உண்மையில் என்னை அமைதி படுத்துவதற்குப் பதிலாக, அச்சத்தை விதைத்திருந்தாள். அடுத்த இருபத்தைந்து வருடங்களில், என் தப்பனாருக்கு அருபது வயது, நரைத்த தலை, கூடுதலாக ஓரளவு விஸ்கியும், கடந்தகால வண்ணமயமான வாழ்க்கையும் ஏற்படுத்திய பாதிப்புகள். அப்பாவும் நானும் அடிக்கடி வெளியே போகிறோம், நான் எனது தவறுகளை, அதனாலுற்ற சங்கடங்களை அவரிடம் முறையிடுகிறேன், அவர் எனக்கு தகுந்த யோசனைகளைத் தெரிவிக்கிறார். எனது எதிர்காலம் குறித்த சிந்தனையில் எப்படி ‘ஆன்’ வராமற்போனாள் என்றெண்ணினேன். அவளின்றி என்னால் முடியுமா? அது சாத்தியமாகுமா? எனது எண்ணத்திலிருக்கிற எதிர்கால வீட்டிற்கு ‘ஆன்’னுடைய பிரத்தியேக உடமைகளான ‘ஒழுங்கு’, ‘அமைதி’, ‘இணக்கம்’ இதெல்லாம் ஒத்துவராது, எப்போதும் தலைகீழாக புரட்டிபோட்டதுபோல இருக்கும். சிலவேளைகளில் துக்கத்தில் மூழ்கியிருக்கலாம், சிலவேலைகளில் பூங்கொத்துகளால் நிரம்பிவழியலாம், விதவிதமான காட்சிகள் அரங்கேறலாம், அங்கங்கே பெட்டிபடுக்கைகள் கிடக்க, அந்நிய குரல்களையும் கேட்கலாம். எனக்குள்ள பயமே கடுமையான மனக்குடைச்சல்கள்பற்றியதுதான். எனினும், சிரிலை மனத்தாலும், உடலாலும் நான் நேசிக்கத் தொடங்கியபிறகு, எனக்கு அதுபற்றிய அச்சங்கள் குறைவென்றுதான் சொல்லவேண்டும். அவனோடு எனக்கிருந்த உறவு நிறைய அச்சங்களிடமிருந்து என்னை மீட்டிருந்ததென்றாலும், மனவேதனைகள் குறித்து இன்னமும் பயப்படுகிறேன். அமைதி, அதுவே எனக்கு வேறெதைக்காட்டிலும் பிரதானமாகத் தோன்றியது. உள்ளத்தில் எங்களுக்கு அதாவது எனக்கும் என் அப்பாவிற்கும் அமைதி வேண்டுமெனில், எங்களைச் சுற்றிலும் மாற்றம் நிகழவேண்டும், அதுதான் உண்மை, அதை அங்கீகரிக்கின்ற மனம் ‘ஆன்’னிடம் வேண்டும், எனக்கு நம்பிக்கையில்லை.


nakrish2003@yahoo.fr

Series Navigation

author

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts