எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:6) சீஸர் பட்டாபிசேக தினத்தின் காலை

This entry is part [part not set] of 25 in the series 20061130_Issue

சி. ஜெயபாரதன், கனடா


பல்வித முகக் கவசம் பூண்டது மரணம்!
மரணம் அறிவிக் காது வரும் தருணம்!
வெடியோ, கடலோ, வெந்திடும் தீயோ,
இடியோ, மின்னலோ, வாளோ, கயிறோ
முடிவில் சாவது முன்பே தெரி யாது!

*************

உலகப் பகட்டினில் உழலும் போது,
நிழலாய்ப் பின்வரும் சாவினை அறியாய்!
இடிபோல் தாக்கும் மனிதனை மரணம்,
தடாலென மண்டையில் அடித்து! ….

மரணப் படுக்கையில் புரள்பவன் ஆயுளை
மருத்துவர் நீட்டலும் அரிதே! உந்தன்
குருதேவர் கூட்டலும் அரிதே!

ஜெட்ஸன் மிலரேப்பா, திபெத் கவியோகி [Jetsun Milarepa (1052-1135)]

இலையுதிர் காலத்து முகில்போல்
நிலை யிலாதது நம் வாழ்வு!
கதக்களி போல் துவங்கி முடிவது,
மனிதரின் பிறப்பு மிறப்பும்!
வானில் அடிக்குமோர் மின்னல் வீச்சே,
மானிடர் கால வாழ்க்கை!
செங்குத் தான
மலைமே லிருந்து உருண்டு வீழும்,
நதி போன்றதே நமது வாழ்வு!

கௌதம புத்தர் (கி.மு.560-480)

கவனம் வைப்பீர் சீஸர்! புரூட்டஸ் மீதும்,
காஸ்ஸிஸ் மீதும் நம்பிக்கை வைத்திடேல்!
காஸ்கா அருகிலே வராதீர்!
தீஸியஸ் உம்மை நேசிக்க வில்லை!
சின்னா மீது ஒருகண் வைப்பீர்!
அன்னார் மனத்திலும் உள்ள தொன்றே!
தெய்வம் உம்மைக் காக்க வேண்டும்! ……
என்னறிக்கை படித்தால் சீஸர் தப்புவார்!
இல்லாவிடின் விதியால் சதிக்கி ரையாவார்! .. [ஆர்டிமிடோரஸ், சீஸரின் நண்பன்]

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

நெஞ்சுக்கும், நாவுக்கு மிடையே,
நிற்குது மாபெரும் மலையே!
ஆடவன் உள்ளமும், ஆயிழை உறுதியும்
கூடவே கொண்டுள்ளேன்!
எத்தனைக் கடினம் ரகசியம் காப்பது
உத்தமப் பெண்ணொ ருத்திக்கு? .. [போர்ஷியா, புரூட்டஸின் மனைவி]

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!

முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.

நாடகப் பாத்திரங்கள்:

எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:

ஜூலியஸ் சீஸர்: ரோமானியப் போர்த் தளபதி [52 வயது]
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி [20 வயது]
டாலமி XIV: கிளியோபாத்ராவின் தனயன் (கணவன்), எகிப்தின் மன்னன் [15 வயது]
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா [45 வயது]
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன் [வயது நான்கு]
போதினஸ்: டாலமியின் பாதுகாப்பாளன் [50 வயது]
தியோடோடஸ்: டாலமியின் ஆசிரியர் [45 வயது]
அக்கில்லாஸ்: டாலமியின் போர்த் தளபதி [53 வயது]
பிரிட்டானஸ்: சீசரின் அரசாங்கச் செயலாளர் [40 வயது]
ரூ·பியோ: சீஸரின் லெ·ப்டினன்ட் [40 வயது]
லூசியஸ் ஸெப்டிமியஸ்: ரோமானிய இராணுவ அதிகாரி [50 வயது]
அபெல்லோடோரஸ்: ஸிசிலியன் கம்பள வாணிகன்.
சீஸரின் சதிகாரர்கள்.
பாம்ப்பியின் அனுதாபிகள்.

ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள்.

அங்கம்:5 காட்சி:6

நேரம், இடம்: சீஸர் பட்டாபிசேக தினம். காலை வேளை. ரோமாபுரியில் கிளியோபாத்ரா தங்கி இருக்கும் அரசாங்க விருந்தினர் மாளிகை.

நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, சிறுவன் சிஸேரியன், சேடிகள், ஜூலியஸ் சீஸர், தீஸியஸ், புரூட்டஸ், ஆண்டனி, காஸ்ஸியஸ் மற்றும் சில செனட்டர்கள்.

காட்சி அமைப்பு: மார்ச் பதினைந்தாம் தேதி காலைப் பொழுது. கிளியோபாத்ரா தன்னையும், மகனையும் ஒப்பனை செய்து கொண்டு மக்கள் மன்றத்துக்குச் செல்லத் தயாராக ஆசனத்தில் அமர்ந்திருக்கிறாள். ஜூலியஸ் சீஸர், தீஸியஸ், புரூட்டஸ், ஆண்டனி, காஸ்ஸியஸ் மற்றும் சில செனட்டர் புடைசூழ மக்கள் மன்றத்துக்கு வந்து கொண்டிருக்கிறார்.

கிளியோபாத்ரா: [மகிழ்ச்சியுடன்] கண்மணி! இன்றைக்குக் கொண்டாட்ட நாள்! உன் தந்தை ரோம் சாம்ராஜியத்துக்குச் சக்கரவர்த்தியாக மகுடம் சூடப் போகிறார்! ஒருகாலத்தில் இப்படி நீயும் ரோமாபுரிக்குப் பெரு வேந்தனாய் முடிசூட்டப் படுவாய்! நீயும், நானும் அந்த கோலாகல விழாவை நேராகக் காணப் போகிறோம். உன் தந்தை முதலில் நம்மைக் காண வருகிறார். அவருக்குப் பின்னால் நாமும் போகப் போகிறோம்!

சிஸேரியன்: [தாயைச் சுட்டிக் காட்டி] நீங்கள் எகிப்துக்கு மகாராணி! தந்தை ரோமாபுரிக்கு மகாராஜா! நான் எகிப்துக்கும் மகா இளவரசன்! ரோமுக்கும் இ ளவரசன் அல்லவா?

கிளியோபாத்ரா: [சிரித்துக் கொண்டு] சரியாகச் சொன்னாய் கண்மணி! [கன்னத்தில் முத்தமிடுகிறாள்] உலகை ஆளப்போகும் நீ எதிர்கால அலெக்ஸாண்டர்! மகா, மகா இளவரசன்! நீ சைனாவைப் பிடிக்க வேண்டும் தெரியுமா?

சிஸேரியன்: சைனாவுக்கு வழி தெரியாதே எனக்கு! அரிஸ்டாடில் மாதிரி எனக்கொரு குரு, முதலில் பாதை காட்டிக் கொடுக்க வேண்டுமே! கத்திச் சண்டை தெரியும் எனக்கு! ஏற்றி விட்டால் குதிரை ஓட்டத் தெரியும் எனக்கு!

கிளியோபாத்ரா: அலெக்ஸாண்டிரியாவில் ஏற்பாடு செய்திருக்கிறேன், உனக்கொரு குருவை. கணித மேதை பித்தகோரஸ் வம்சாவளியில் வந்தவர்! உனக்குக் கணிதம், வான சாஸ்திரம், வரலாறு, பூகோளப் பாடம் அனைத்தும் சொல்லிக் கொடுப்பார்!

[அப்போது சேடி ஒருத்தி சீஸர் வருவதை அறிவிக்கிறாள். சீஸர் செனட்டர்களை வாசலில் நிறுத்தி விட்டு கிளியோபாத்ரா மாளிகைக்குள் நுழைகிறார். கிளியோபாத்ரா எழுந்து சென்று சீஸரை வரவேற்கிறாள். சிஸேரியன் ஓடிச் சென்று சீஸர் கையப் பற்றுகிறான். மகனைத் தூக்கி முத்தமிடுகிறார் சீஸர். கிளியோபாத்ராவையும் முத்தமிடுகிறார்.]

ஜூலியஸ் சீஸர்: கண்ணே! கிளியோபாத்ரா! மன்றத்துக்குப் போகிறேன் நான். நீ மகனைக் கூட்டிக் கொண்டு வருகிறாயா, என் முடிசூட்டு விழாவைக் காண!

கிளியோபாத்ரா: [மகிழ்ச்சியுடன்] நானும், மகனும் வந்திருப்பது கோலாகல விழாவில் கலந்து கொள்ளத்தானே! உங்கள் பின்னால் என் தூக்கு ரதமும் வரும். நான் வராமல் போவேனா? என்ன கேள்வி யிது?

ஜூலியஸ் சீஸர்: [சற்று கவலையுடன்] ஆனால் கல்பூர்ணியா வரப் போவதில்லை மன்றத்துக்கு! நானங்கு போவதும் பிடிக்க வில்லை அவளுக்கு!

கிளியோபாத்ரா: [ஆச்சரியமுடன்] ஏன் கல்பூர்ணியா வரப்போவ தில்லை? நீங்கள் போவது ஏன் அவளுக்குப் பிடிக்க வில்லை? நான் உங்களுக்கு அருகில் இருப்பேன் என்று வருந்துகிறாளா?

ஜூலியஸ் சீஸர்: என்னருகில் நீ இருப்பது அவளுக்கு வெறுப்பூட்ட வில்லை! நேற்றடித்த பயங்கரப் புயலிடி, மின்னல் அவள் மனதைப் பாதித்து விட்டது! படுக்கையில் பயங்கரக் கனவு கண்டு பலமுறை அலறி விட்டாள்! அந்தக் கனவில் என் சிலை மீதிருந்து குருதி பீறிட்டெழுவதைக் கண்டாளாம்! ரோமாரியில் பலர் தீப்பந்தங்கள் ஏந்தி வீதியெங்கும் பதறி ஓடுவதைக் கண்டாளாம்! வானிலிருந்து மலர் வளையம் ஒன்று பாம்ப்பியின் சிலைக் காலடியில் விழுவதைக் கண்டாளாம்! என்னுயிருக்குப் பயந்து என்னைத் தடுத்து நிறுத்த முயன்றாள்!

கிளியோபாத்ரா: [ஆச்சரியமும், அச்சமும் கலந்து] அப்படியா! இப்போது நினைவுக்கு வருகிறது. எனது சூனியக்காரியும் ஒருமாதிரியாகச் சொன்னாள்! இப்போது புரிகிறது எனக்கு! பாம்ப்பியின் சிலை அடியில் மலர் வளையம் விழுந்ததா? அப்படி என்றால் உங்கள் பகைவர், உயிரிழந்த பாம்ப்பி உங்களைப் பலி வாங்கப் போவதாகத் தெரிகிறது எனக்கு! அவள் அஞ்சியது சரியே! சீஸர்! நீங்கள் மன்றத்துக்குப் போவதில் ஆபத்து இருப்பதாகத் தெரிகிறது எனக்கு!

ஜூலியஸ் சீஸர்: [கவலையுடன்] எனக்கு கனவில் நம்பிக்கை யில்லை! ஆனால் உன் சூனியக்காரி என்ன சொன்னாள்? எனக்குச் சகுனத்தில் நம்பிக்கை யில்லை! ஆனால் அவள் கூற்றை விளக்கமாய்ச் சொல்!

கிளியோபாத்ரா: இன்று காலை கடவுளைத் தியானிக்கத் தீ வளர்த்த போது சூனியக்காரி கண்மூடிச் சொன்னது: “ரோமுக்குக் கெட்ட காலம் வருகுது! ரோமானியர் தீ ஏந்தி தெருவெங்கும் ஓடப் போகிறார்! ரோமா புரியை விட்டுச் சிஸேரியனை அழைத்துப் படகில் போவேன் என்றாள்!” எனக்கு அப்போது ஒன்றும் புரிய வில்லை! சீஸர்! என் நெஞ்சில் அச்சம் உண்டாகுகிறது. நீங்கள் மன்றத்துக்குத் தனியாகப் போவது சரியாகத் தெரிய வில்லை! ஆண்டனியை அருகில் வைத்துக் கொள்ளுங்கள். சீஸர்! எனக்கும், நமது மகனுக்கும் கூட ஆபத்து உண்டாகலாம்! பாதுகாப்போடு இருக்க வேண்டும் நீங்களும், நாங்களும்!

ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] அஞ்சாதே கிளியோபாத்ரா! எனக்கும் அச்சத்தை உண்டாக்காதே! உனக்கொன்றும் நேராது. எனக்கொன்றும் விளையாது! கல்பூர்ணியாபோல் பேசி நீயும் என்னைத் தடுக்கிறாய்! சகுனங்களைக் கண்டு நான் அஞ்சி ஒளிபவனில்லை! கிளியோபாத்ரா! போர்க் களத்தில் நாற்புறத்திலும் பகைவர் முன்பாகவே நடமாடிய நான், யாரைக் கண்டும் அஞ்சுபவனில்லை! ரோமானிய செனட்டர் யாவரும் என்னாட்டு மாந்தர்! அன்னியர் அல்லர்! ஏனவர்க்கு நான் அஞ்ச வேண்டும்? நான் தினமும் அஞ்சி அஞ்சிச் சாகும் தெரு மனிதன் அல்லன்!

கிளியோபாத்ரா: எனது தெய்வத்தை நான் வணங்குகிறேன்! உங்கள் தெய்வத்தை நீங்கள் வழிபடுங்கள்! உங்கள் உயிருக்கு ஆபத்தென்றால், எங்கள் கதி என்னவாகும்? மன்றத்தில் எங்களுக்கும் ஆபத்து ஏற்படலாம் அல்லவா? அன்னியரான நானும் மகனும் கவனமாகக் கண்விழிப்புடன் இருக்க வேண்டும். ஏதேனும் உங்களுக்கு நேர்ந்தால், எங்களுக்கும் ரோமில் ஆபத்து விளையலாம்! மன்றத்துக்கு நான் மகனுடன் செல்வதைப் பற்றி இப்போது சிந்திக்கிறேன்!

ஜூலியஸ் சீஸர்: [கம்பீரமாக] கிளியோபாத்ரா, எனக்கொன்றும் நேராது! உனக்கொன்றும் நேராது! பட்டம் சூட்டும் விழாவில் நீ பங்கெடுக்காமல் போனால், மிக்க வேதனைப் படுவேன் நான்! மனதை மாற்றாதே கிளியோபாத்ரா! நீ வர வேண்டும். என் புதல்வன் வர வேண்டும்.

[அப்போது தீஸியஸ் உள்ளே நுழைகிறான்]

தீஸியஸ்: மேதகு அதிபதி அவர்களே! நேரம் நெருங்கி விட்டது! நீங்கள் போகும் நேரம் வந்து விட்டது! செனட்டார் மன்றத்தில் காத்துக் கொண்டிருக்கிறார். வாருங்கள் போகலாம்!

ஜூலியஸ் சீஸர்: [கிளியோபாத்ராவையும், மகனையும் முத்தமிட்டு] நான் போகிறேன் கல்பூர்ணியா! பின் தொடர்ந்து நீயும், மகனும் வாருங்கள்!

[தீஸியஸ் உடன் வர, புரூட்டஸ், ஆண்டனி, காஸ்ஸியஸ் மற்றும் செனட்டார் பின்வர சீஸர் மக்கள் மன்றம் நோக்கிச் செல்கிறார்]

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan November 30, 2006]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts