எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:3, காட்சி:4)

This entry is part [part not set] of 31 in the series 20060929_Issue

சி. ஜெயபாரதன், கனடா


“லிஸ்ஸட் [Liszt] சொல்கிறார்: கடவுள் ஒன்றுதான் ஒருவர் நேசிக்கப்பட உகந்தது. உண்மையாக இருக்கலாம் அக்கூற்று. ஆனால் ஓர் ஆடவனை ஒருத்தி நேசிக்கும் போது, கடவுளை நேசிப்பது என்பது வேறுபட்ட தன்மை யானது.”

“எளிமைப் பண்பு என்பது உலகிலே கைவசப் படாத மிகக் கடினமான நடப்பு! அது ஒருவர் அனுபவத்தின் எல்லையில் வரக் கூடியது. மாமேதைகள் கைக்கொள்ளும் இறுதியான முயற்சி.”

ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளி [George Sand (1804-18 76)]

“உன்னத படைப்புகள் [Masterpieces] என்பவைத் தனிப்பட்ட ஆக்கமோ அல்லது ஒற்றை உதயமோ அல்ல. ஒருவரின் பல்லாண்டு காலச் சிந்தனையில் எழுந்து, மற்றும் மானிடக் குழுக்களின் பங்கீட்டுச் சிந்திப்புக்களில் பின்னி உதயமானவை அவை; பொது மாந்தர் அனுபவத் தொகுப்புகளைப் பின்னணியாகக் கொண்டு, ஒருவரது வாக்கு மூலமாக வடிக்கப் படுபவை.” [Example: Leo Tolstoy’s War & Peace]

வெர்ஜினியா ஊ·ல்ப், ஆங்கில எழுத்தாளி [Viginia Woolf (1882-1941)]

விடுதலை நாட்டில்
சீஸரைப் போல வாழ்ந்தவன் நான்!
நீயும் அப்படித்தான்!
நானும், நீயும்
நன்றாகத் தின்று, கொளுத்து,
குளிர் காலத்துக் கடும்பனியும் தாங்குவோம்,
சீஸரைப் போல!

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

கானப் பாக்கள் சிலவற்றை எழுப்பிடு!
மோன முகக் கோணல் நிமிர்த்தி,
காதலை வணிக மாக்கிடத் துணியும்! ….
நானவளை ஒருதரம்தான் நோக்கினேன்,
நாற்பது எட்டுகளில் தடம் வைத்தாள்,
தெருவினில் மாந்தர் நடமாடும் போது!
பெருமூச்சுடன் அவள் பேசினாள்,
செம்மை நெறியைப் பழுது படுத்தியதாக,
விம்மினாள் மூச்சுத் திணர!

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஆண்டனி & கிளியோபாத்ரா]

கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!

முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.

நாடகப் பாத்திரங்கள்:

எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:

ஜூலியஸ் சீஸர்: ரோமானியப் போர்த் தளபதி [52 வயது]
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி [20 வயது]
டாலமி XIV: கிளியோபாத்ராவின் தனயன் (கணவன்), எகிப்தின் மன்னன் [15 வயது]
பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா [45 வயது]
கிளியோபாத்ராவின் மகன் [வயது ஒன்று]
போதினஸ்: டாலமியின் பாதுகாப்பாளன் [50 வயது]
தியோடோடஸ்: டாலமியின் ஆசிரியர் [45 வயது]
அக்கில்லாஸ்: டாலமியின் போர்த் தளபதி [53 வயது]
பிரிட்டானஸ்: சீசரின் அரசாங்கச் செயலாளர் [40 வயது]
ரூ·பியோ: சீஸரின் லெ·ப்டினன்ட் [40 வயது]
லூசியஸ் ஸெப்டிமியஸ்: ரோமானிய இராணுவ அதிகாரி [50 வயது]
அபெல்லோடோரஸ்: ஸிசிலியன் கம்பள வாணிகன்.

எகிப்தில் மற்றும்:

பெல்ஸானர்: கிளியோபாத்ராவின் காவலர் காப்டன் [35 வயது]
பெல் அ·ப்பிரிஸ்: மெம்·பிஸ் ரா தேவாலயத்தின் மதாதிபதி.
ரோமானியப் படையாளிகள்.
கிளியோபாத்ராவின் அடிமைச் சேடிகள்.
எகிப்தின் படையாளிகள்

ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸியஸ் [30 வயது]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது].

அங்கம்:3 காட்சி:4

நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியா அரண்மனையில், கிளியோபாத்ராவின் தனியறை. பகல்வேளை

நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, ஜூலியஸ் சீஸர், அவரது மகன், சேடிகள்

காட்சி அமைப்பு: ஜூலியஸ் சீஸர் ரோமாபுரிக்குத் திரும்பிச் செல்ல ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். புதல்வனோடு கிளியோபாத்ரா வருந்திய வண்ணம் நிற்கிறாள்.

ஜூலியஸ் சீஸர்: [விறுவிறுப்பாக] கண்ணே! கிளியோபாத்ரா! என்னைத் தடுத்து நிறுத்தாதே! தங்கச் சொல்லி வற்புறுத்தாதே! நமது செல்வ மகனுக்கு ஒருவயது வந்ததும் போகலாம் என்று கூறியதை மறந்து விட்டாயா? ஓராண்டு நானிங்கு தங்கி விட்டேன்! என்னாசை மகனுடன் விளையாடி விட்டேன்! இனி ஒருநாள் தாமதித்தால், ரோமானிய செனட்டரின் சினத்துக்கு ஆளாவேன் நான். எனக்குச் செனட்டில் பகைவர் பெருக என் தாமதப் பயணம் தூண்டிவிடும். முடிவாகச் சொல்கிறேன்! விடைகொடு கண்ணே! நான் ரோமாபுரியின் பொறுப்பையும், ரோம சாம்ராஜியத்தின் பொறுப்பையும் செனட்டர் முன்பாக நான் ஏற்றுக் கொள்ள வேண்டும். ரோமாபுரி ஏகாதிபத்திய அதிபதியாக என்னை முடிசூட்ட எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது!

கிளியோபாத்ரா: [சீஸரின் கைகளைப் பற்றிக் கொண்டு] என்னைத் தனியே விட்டுச் செல்வது நியாயமாகுமா? தந்தையைத் தேடுவானே நம் அன்புப் புதல்வன்! அன்புச் செல்வனுக்குத் தம்பி, தமக்கை வேண்டாமா? நமக்கொரு மகன் போதாது! நானொரு வளமை மிக்க நைல் நதி! அநேக ஆண்மகவை உங்களுக்குப் பெற்றுத் தருவேன்! என்னைத் தவிக்க விட்டுப் பிள்ளையே பெறாத கல்பூர்ணியாவை நாடிப் போவதா? என்னைச் சுற்றிலும் பகைவர் சூழ்ந்திருக்கிறார்! பயமின்றித் தனியாக நான் எப்படி வாழ்வேன்? இன்னும் ஓராண்டு எங்களுடன் தங்க வேண்டும். ரோமாபுரிக்கு உங்களுக்குப் பொறுத்திருக்கும்! நம்பத் தக்க ஆண்டனி உங்கள் துணை ஆளுநர்! நீங்களின்றிச் சாமர்த்தியமாய் ரோமாபுரியை ஆண்டனி ஆட்சி செய்து வருகிறார்! நீங்கள் ரோமின் தளபதி மட்டுமில்லை! இப்போது என் பதி! எகிப்தின் வேந்தர்! ரோமாபுரி மீதுள்ள பரிவு உங்களுக்கு எகிப்து மீதில்லையா? [கைகளைப் பற்றி நெஞ்சோடு வைத்துக் கொள்கிறாள்]

ஜூலியஸ் சீஸர்: [கனிவுடன்] கிளியோபாத்ரா! ஆம் நான் உன் பதிதான்! அதை உலகே அறியும்! எகிப்தின் பெயரை எண்ணும் போதெல்லாம் எழிலரசி கிளியோபாத்ரா என் நெஞ்சைப் பற்றிக் கொள்கிறாள். முதல் மனைவி கல்பூர்ணியா ஆயினும், இளம் மனைவி கிளியோபாத்ராதான் என்னை ஆட்டிப் படைப்பவள்! ரோமாபுரியில் கல்பூர்ணியா ஆளுக்கு மேல் ஆளாக அனுப்பி, என்னை ஆங்கு வரும்படி அழைக்கிறாள்! பல்லாண்டுகள் நானவளைப் பார்க்க வில்லை. இம்முறை நான் போகாவிட்டால், அவள் கண்ணாடி இதயம் துண்டாக உடைந்து விடும்! பிறகு அவள் என்னை விலக்கிப் போய் விடுவாள்! நான் ரோமில் எப்படித் தனியாக வாழ்வது?

கிளியோபாத்ரா: [மிக்க ஆர்வமுடன்] நானங்கு வந்து விடுகிறேன், உங்கள் தனிமையைப் போக்க! நானும் தனி மாதாக எகிப்தில் தவிக்க வேண்டாம்! நீங்களும் தனி ஆணாக ரோமில் நோக வேண்டாம்! நானும் நம் செல்வனும் உங்கள் கண்ணெதிரிலே வாழ்வோம். நாங்கள் ரோமுக்கு உங்களுடன் வரலாமா?

ஜூலியஸ் சீஸர்: [சற்று கவலையுடன்] வேண்டாம் கிளியோபாத்ரா! தக்க தருண மில்லை இது! ரோமாபுரி உனக்கும், நம் மகனுக்கும் எந்த முறையில் மதிப்பளிக்கும் எனத் தெரியாது எனக்கு. உன்னை அவமதித்தால் உனக்கும் தாங்காது! எனக்கும் தாங்காது! அதோடு என் முதல் மனைவி கல்பூர்ணியா எப்படி உன்னை வரவேற்பாள் என்பதும் தெரியாது எனக்கு! நீ எகிப்தை ஆளப் பிறந்தவள். இங்கு நீ மகிழ்ச்சியோடு இருக்கிறாய். ரோமாபுரியில் நீ அடைப்பட்டுப் போவாய்! ஒருமாதிரியாக உன்னைப் பார்ப்பார் ரோமானியர்! நீ வேதனைப் படுவாய்! இப்போது வேண்டாம். ஓரிரு வருடம் கழித்து வா! நான் முதலில் சென்று மக்கள் மனதை அறிய வேண்டும். உன்னைப் பற்றிச் செனட்டர் என்ன நினைக்கிறார் என்று நான் உளவு செய்ய வேண்டும்.

கிளியோபாத்ரா: [சினத்துடன், உரத்த குரலில்] சீஸர்! செனட்டர் அனுமதி கேட்டா என் உதட்டில் முத்த மிட்டீர்? செனட்டர் அனுமதி கேட்டா என் மெத்தையில் படுத்தீர்? செனட்டர் அனுமதி கேட்டா எனக்குப் பிள்ளை உண்டாக்கினீர்? பிறகு செனட்டர் அனுமதி கேட்டா என்னைத் திருமணம் செய்தீர்? ரோமாபுரிக்கு வரும் எனக்கு செனட்டார் வாசற் கதவு திறப்பாரா என்று உங்கள் வாய் பிதற்றுவதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்! சீஸருக்கு ஆண்மகவை முதலில் அளித்த கிளியோபாத்ரா பெரியவளா? உங்கள் தனி உரிமைக் கட்டுப்படுத்தும் ரோமாபுரிச் செனட்டர் பெரியவரா?

ஜூலியஸ் சீஸர்: [சற்று அழுத்தமுடன்] கிளியோபாத்ரா! ஐயமின்றி நான் செனட்டர் தீர்மானத்துக்குக் கட்டுப்பட்டவன்! செனட்டர் பேரவைக்கு நான் அதிபதி ஆனாலும், அவரது பெரும்பான்மைக் குரலுக்குத் தலை சாய்க்க வேண்டும் நான்! நீ என் மனைவிதான்! ஆனாலும் செனட்டர் தணிக்கைக்கு நீயும் தலை வணங்க வேண்டும்! ஆண்மகவை ஈன்ற நீ வீட்டுக்கு பெரியவள்தான்! ஆனால் குடிமக்களின் பிரதிநிதிகள் நாட்டுக்குப் பெரியவர்!

கிளியோபாத்ரா: [சீற்றத்துடன்] கிளியோபாத்ரா கீழ்நாட்டுக்காரி என்பதாலா? அல்லது எகிப்த் ரோமின் அடிமை நாடு என்பதாலா? நான் எகிப்தின் மகாராணி! நான் சீஸரின் மனைவி! உங்கள் செனட்டாருக்கு நான் கீழ்ப்படிய முடியாது! நான் அன்றும் விடுதலை ராணி! இன்றும் விடுதலை ராணி! என்றும் விடுதலை ராணி!

ஜூலியஸ் சீஸர்: [கனிவுடன்] ஆமாம் கிளியோபாத்ரா! நீ என் மனைவிதான்! அதுபோல் கல்பூர்ணியாவும் என் மனைவிதான். ஆனால் கல்பூர்ணியா செனட்டார் கட்டுப்பாட்டுக்கு உட்பட வேண்டும், தெரியுமா? செனட்டார் கண்முன்பாக ரோமும் ஒன்றுதான்! எகிப்தும் ஒன்றுதான்! அந்த முறையில் எந்த ஓரவஞ்சகமு மில்லை, செனட்டருக்கு! கண்ணே கிளியோபாத்ரா! உன்னுயிருக்கு அஞ்சுகிறேன் நான்! ரோமானியர் அன்னியப் பெண்ணென்று உன்மீது வெகுண்டு உன்னைக் கொன்று விடக் கூடாது! செனட்டார் சினங்கொண்டு நம் சிறு பாலகனைக் கொன்று விடக் கூடாது! குறைந்தது ஓராண்டு கூடியது ஈராண்டாடு நீ காத்திருப்பது நல்லது. மகனுக்கும் மூன்று வயதாகும். ரோமில் ஓடியாடி மகிழ்வான்.

கிளியோபாத்ரா: [சற்று சமாதானம் அடைந்து] சீஸர்! நாட்களை நான் எண்ணிக் கொண்டிருப்பேன்! ரோமாபுரியில் உங்களைச் சுற்றிலும் கன்னியர் முற்றுகை யிடுவார்! கண்களைச் சுழற்றி, உடம்பைக் குலுக்கி மன்மதக் கணைகளை உம்மீது ஏவி விடுவார்! கல்பூர்ணியா மீது துளியும் உங்களுக்குக் காதல் கிடையாது! ஆகவே உங்கள் நெஞ்சக் கவசம் உறுதியாக இருக்கட்டும்! உங்கள் மனது கல்லாகட்டும்! சீஸருக்குச் சென்ற விடமெல்லாம் காதற் பெண்டுகள் என்பது பழமொழி! பெண்களைக் கண்டால் கண்களை மூடிக் கொள்வீர்! கண்கள் வழியாகத்தான் ஆடவருக்கு வலை வீசுவர் பெண்கள்! அந்த வலையில் சிக்கிக் கொண்டு தவிக்காதீர்! உள்ளே இடம் பிடித்துக் கொண்ட பெண்டிரை வெளியே விரட்டுவது கடினம்!

ஜூலியஸ் சீஸர்: [பெரிதாகச் சிரித்து] எகிப்த் எழிலரசி வலையில் சிக்கிக் கொண்டு தப்பிக் கொள்ள முடியாமல் நான் திண்டாடுவது போதாதா? பெண்டிரைக் கண்டால் கண்களை எப்படி மூடிக் கொள்வது? பெண்களின் கவர்ச்சி மின்னல் போல் நெஞ்சைத் தாக்கும் போது, என்னிரும்புக் கவசம் அதைத் தடுக்க முடியாது! அவ்விதம் தடுக்கும் நெஞ்சக் கவசத்தை யார் செய்ய முடியும்? சீஸர் மகாவீரன் ஆயினும், பெண்டிரின் கணைகளின் முன் பலமற்றவனே! எனது எ·கு நெஞ்சிக்குள் உள்ளது பஞ்சுப் பொதி!

கிளியோபாத்ரா: [கேலியாகச் சிரித்து] எந்த ஆடவன்தான் பாவையைக் கண்டால் பாகாய் உருகா திருக்கிறான்? என்னாசை நம் செல்வனை ரோமானியர் கண்டு பாராட்ட வேண்டும் என்பதே! அவன் உலகாளப் பிறந்தவன்! அலெக்ஸாண்டரைப் போல ஆவேச வேட்கை கொள்பவன்! சீஸரைப் போல பல தேசங்கள் வெல்பவன்! ஆனால் என்னையும், புதல்வனையும் கல்பூர்ணியா வரவேற்க மாட்டாள் என்பது எனக்குத் தெரிந்ததே! என்னால் நீங்கள் செனட்டர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். நான் காத்திருக்கிறேன். போய் வாருங்கள்.

ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] கிளியோபாத்ரா! மாறாக நம் புதல்வனைக் காண கல்பூர்ணியா காத்துக் கொண்டிருக்கிறாள். சீஸரின் மகன் என்று கல்பூர்ணியா ஏற்றுக் கொள்வது வியப்பாக இருக்கிறது.

கிளியோபாத்ரா: [சற்று விரக்தியுடன்] அப்படியானல் என்னைக் கல்பூர்ணியா வரவேற்க மாட்டாள் என்று மறைவாகக் கூறுகிறீரா? அதாவது அவளுக்கு என் மகன் வேண்டும், ஆனால் அவனைப் பெற்ற அன்னை வேண்டாம்! உண்மைதானே!

ஜூலியஸ் சீஸர்: உண்மைதான் கிளியோபாத்ரா! சற்று சிந்தித்துப் பார்! நான் வேறொரு வாலிப மாதை உன் மாளிகைக்கு அழைத்து வந்தால், நீ அவளை வரவேற்பாயா? அல்லது வாசற் கதவை மூடித் துரத்துவாயா?

கிளியோபாத்ரா: [ஆங்காரமாக] நிச்சயம் நானவளை வரவேற்க மாட்டேன்! வாசலில் நிறுத்தித் துரத்தவும் மாட்டேன்! வாளால் தலையைத் துண்டித்து, உடலைக் கழுகுக்கிரை ஆக்குவேன்!

[அப்போது பிரிட்டானஸ், ரூ·பியோ விரைவாக உள்ளே நுழைகிறார்கள்]

பிரிட்டானஸ்: சீஸர்! கப்பல் தயாராக உள்ளது ரோமாபுரிக்கு. நீங்கள் கிளம்ப வேண்டிய தருணமிது. அலைகள் நமக்குச் சாதகமாக அடித்துக் கொண்டிருக்கின்றன. காற்றடிக்கும் திசையும் பாய்மரக் கப்பலுக்கு அனுகூலமாய் வீசுகிறது! புறப்படுங்கள்! உங்கள் பெட்டிகள் எல்லாம் கப்பலில் ஏற்றப்பட்டு விட்டன!

ஜூலியஸ் சீஸர்: [கனிவுடன்] கண்ணே! கிளியோபாத்ரா! கண்ணீரைத் துடைத்துக் கொள்! நான் போய் வருகிறேன். பூரிப்புடன் விடை கொடு எனக்கு! [சீஸரைக் கிளியோபாத்ரா அணைத்துக் கொள்கிறாள். சேடி தூக்கி யிருக்கும் மகனின் நெற்றியில் சீஸர் முத்தமிடுகிறார். கிளியோபாத்ராவை நோக்கி] கிளியோபாத்ரா! நீ அஞ்ச வேண்டாம்! ரூ·பியோவை எனது சார்பில் எகிப்தின் பாதுகாப்புக்கு விட்டுச் செல்கிறேன். அவருடன் உள்ள ஐயாயிரம் ரோமானியப் படையினர் உன் ஆணைக்கு அடி பணிவர். அவர் உன்னையும் பாதுகாப்பார். எகிப்தையும் பாதுகாப்பார். சென்று வருகிறேன். [கிளியோபாத்ராவை முத்தமிடுகிறார்]

கிளியோபாத்ரா: [கண்ணீர் கலங்க] மிக்க நன்றி சீஸர்! சென்று வாருங்கள். ஈராண்டுகள் கழித்து ரோமாபுரிக்கு நானும், நம் மைந்தனும் வருவோம். நிச்சயம் வருவோம்.

ஜூலியஸ் சீஸர்: நானங்கு காத்திருப்பேன் உங்களுக்கு.

[சீஸர் பிரிட்டானஸ் பின்னால் தொடர மாளிகையை விட்டு வெளியேறுகிறார்]

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan September 26, 2006]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts