வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 2

This entry is part [part not set] of 31 in the series 20060908_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


எப்படியும் ஒருவாரத்திற்கு முன்பாக ஆன்(Anne)இங்கு வரப்போவதில்லை, அதுவரை, எஞ்சியிருக்கும் நாட்களையாவது உண்மையான விடுமுறையாக கழிப்பதென்று தீர்மானித்தேன். இரண்டு மாதங்களுக்கு ‘வில்லா’வை வாடகைக்கு எடுத்திருப்பதும் உண்மை, எனினும் ‘ஆன்’ வருகைக்குப் பிறகு, அக்கடாவென்று விடுமுறையை அனுபவிக்கவியலாது. அவளுக்கு அப்படியொரு சாமர்த்தியம்: தொட்டதெல்லாம் துலங்கும், வார்த்தைகளும் அதற்கு விதிவிலக்கல்ல. அவளது சொற்களிலுள்ள ஆழமும், கூர்மையையும் புரிந்துணர அப்பாவிற்கும் எனக்கும் பொறுமை இருப்பதில்லை, ஓடி ஒளிவோம். பேச்சில் நல்ல இரசனையும், இனிமையும் இருந்தபோதிலும், அவற்றிற்கென சில நெறிமுறைகளை வைத்திருந்தாள். உரையாடல்களுக்கிடையில் சட்டென்று அவள் ஒதுங்கிக்கொள்கிறபோதும், புண்பட்ட மனதுடன் அமைதிகொள்கிறபோதும், பிற மெய்ப்பாடுகள் ஊடாகவும் அதனை உணரமுடியும். உணர்ச்சிகளின் கொந்தளிப்பும், அலுப்பும், அவமானமும் ஏற்படுத்திய விளைவுகள், அவையென உணர்ந்தபோது, அவளது செய்கைக்கான காரணம் புரிந்தது.

அந்த நாளும் வந்தது. அப்பாவும் எல்ஸாவும் ‘Frejus’ இரயில் நிலையத்திற்குச் சென்று காத்திருப்பதென்று முடிவெடுக்கப்பட்டது. எனக்கு அம்மாதிரியான அனுபவங்கள் ஒத்துவராதென்பதால் திட்டவட்டமாக மறுத்தேன். அப்பாவுக்கு ஏமாற்றம், தோட்டத்தில் மலர்ந்துகிடந்த ஒருவகை நாணற்பூக்களை, இரயிலிலிருந்து ஆன்(Anne) இறங்கும்போது கொடுத்து வரவேற்கும் எண்ணத்துடன் பறித்துக்கொண்டார். பூங்கொத்தை எல்சாவிடம் கொடுத்துவிடாதீர்கள், நீங்களே எடுத்துச் செல்லுங்களென்று, அவரிடம் எச்சரித்தேன். அவர்கள் புறப்பட்டுச் சென்றபிறகு, மூன்றுமணி அளவிற்கு கடற்கரைக்குச் சென்றேன். கடுமையான வெயில். மணலில் நீட்டிப்படுத்து கண்ணயர்ந்த நேரம், சிரிலுடைய(Cyril) குரல், என்னை எழுப்பியது. கண் திறந்து பார்த்தேன், வானம் வெள்ளைவெளேரென்றிருந்தது, போதாக்குறைக்கு தகிக்கும் வெப்பம் வேறு. அமைதியாக இருந்தேன். எனக்கு சிரிலிடம் பேசும் எண்ணமில்லை. அவனென்று இல்லை, வேறு எவராக இருந்திருப்பினும், பேசியிருக்கமாட்டேன். கோடையின் அத்தனை பலத்தையும் எதிர்கொண்டவளாய்க் கைகள் கனத்துகிடக்க, வாய் உலர்ந்துபோக மனலில் அழுந்தப் படுத்துக்கிடந்தேன்.

” என்ன.. உயிரோடுதானே இருக்கிறாய்? தூரத்திலிருந்து பார்க்க ஏதோ தீண்டுவாரற்ற கூளம்போலக் கிடந்தாய்.” – சிரில்.

மெல்ல சிரித்துவைத்தேன். எனதுபக்கம் வந்தமர்ந்தான்.. எனது தோளில் அவனது கை படர, இதயத் துடிப்பு அதிகமானது, மிகக் கடுமையாகவே அடித்துக்கொண்டது. கடந்த வாரத்தில், தவறுதலாக நான் கையாள, படகு ஆழ்கடல் திசைக்காய் செல்வதும், நாங்கள் ஒருவரோடொருவர் பின்னிக்கொள்வதும் பலமுறை நேர்ந்திருக்கிறது, அப்போதெல்லாம் எனது நெஞ்சத்தில் எந்தவித அதிர்வினையும் உணர்ந்ததில்லை. ஆனால் இன்றைக்கு, மெல்ல மெல்ல நான் உடைந்துபோவதற்கு, இந்த வெப்பமும், பொய்த்தூக்கமும், அசட்டுத் தனமான சிலசேட்டைகளும் போதும்போலிருக்கிறது. அவன் பக்கமாகத் தலையைத் திருப்பினேன். என்னை நேரிட்டுப் பார்த்தான். அவன் இன்னாரென்று புரிய ஆரம்பித்தது: எதிலும் சமநிலை, நல்ல குணங்கள்மாத்திரம் அவன் வயதுக்கு, இயற்கைக்குமாறாக கொஞ்சம் அதிகமாகவிருக்கலாம். அதனால்தானோ என்னவோ நாங்களிருந்த நிலைமையும் – வித்தியாசமான மூவரைக்கொண்ட எங்கள் குடும்பமும் அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. மிகவும் நல்லவனாகவோ, மிகவும் அடக்கமானவனாகவோ இருந்தான், அப்படிப்பட்டவன் என் தந்தையிடத்தில் காழ்ப்பும், ஒருவித வன்மமும் கொண்டிருப்பதுபோல தோன்றியது. அவனது செய்கையைக்கண்டு நான் சஞ்சலப்படவேண்டுமென்பதும் அவனது அவாவாகவிருந்தது. ஆனால் அதனாலெல்லால் நான் பாதிக்கபட்டதில்லை. அவனது அவா இப்பொழுது நிறைவேறிடும்போலிருக்கிறது. வேறொன்றும் இந்த நேரத்தில், என்னைப் பெரிதும் துன்புறுத்துகிறது, அது அவனது நேரிட்ட பார்வை. அப்பார்வையின் தீட்சண்யத்தைத் தாங்கவியலாமல் என்னிதயம் படபடக்கிறது. என்மீது படிந்தான். கிழமையின் இறுதி நாட்களையும், எனது நம்பிக்கையையும், எனது அமைதியையும், அவனது அண்மையிற் கண்டேன். சற்றே தடித்தும், அகன்றுமிருந்த அவனது வாய் என்னை நெருங்கி வர, பரிதாபமான நிலையில் நான்.

– ” சிரில்! இதுவரை சந்தோஷமாகவே இருவரும் இருந்தோம். அதை…” நான்.

மெல்ல முத்தமிட்டான். வானத்தைப் பார்த்தேன். இறுக மூடிய எனது கண்ணிமைகளுக்குக் கீழே, எங்கும் சிவந்து பிரகாசிக்கும் ஒளியன்றி வேறேதும் காட்சியிலில்லை. வெப்பம், கிறுகிறுப்பு, முதல் முத்தத்தின் இனிப்பு, நேரமெடுத்துக்கொண்ட பெருமூச்சுகள்.

ஆரன் சத்தம் கேட்டு, திருடர்களைப்போல பதட்டத்துடன் விலகிக்கொண்டோம். சிரிலிடம்(Cyril) சொல்லிக்கொள்ளாமலேயே புறப்பட்டேன் எங்கள் ‘வில்லாவை’ நோக்கி நடந்தேன். இத்தனைச் சீக்கிரம் திரும்பிவிடுவார்களென்று நினைக்கவில்லை, ஆதாலால் வியப்பு: ‘ஆன்'(Anne)னுடைய இரயில் இதற்குள் வந்து சேர்ந்திருக்காது. எனினும் பால்கணியில் நின்றிருப்பது அவள்தான், சொந்தக்காரில் வந்திருக்கவேண்டும்.

-” அட.. இதுதான் ‘Belle-au-Bois-dormant (எங்கள் வில்லாவின் பெயர்)வா? பரவாயில்லையே, வெயில் உனது நிறத்தை ஓரளவு பழுப்புநிறத்திற்கு மாற்றித்தானிருக்கிறது. செஸில்(Cecil)! உன்னை மீண்டும் சந்திப்பதில், எத்தனை சந்தோஷம் தெரியுமா?..

– எனக்குங்கூடத்தான், பாரீஸிலிருந்து வருகிறாயா.. என்ன? -நான்.

– காரில் வருவது பிடித்திருந்தது, ரொம்பவும் களைத்திருக்கிறேன். ”

அவளுக்கென ஒதுக்கபட்டிருந்த அறைக்கு அழைத்துபோனேன். சன்னலைத் திறந்துவைத்தேன், சிரிலின்(Cyril) படகு கண்ணிற்படுமென்று நம்பினேன். இல்லை, மறைந்துவிட்டிருந்தான். ஆன்(Anne) கட்டிலில் அமர்ந்தாள். அவள் கண்களைசுற்றிலும் கருவ¨ளையமிட்டிருப்பதைக் கவனித்தேன்.

“- இந்த வில்லா மிகவும் அருமை, நெட்டுயிர்த்தாள். உடையவரை எங்கே காணோம்?

– உன்னை வரவேற்கவென்றுதான் எல்சாவுடன்(Elsa) இரயில் நிலையத்துக்குச் சென்றார்.”

அவளுடைய பெட்டியை நாற்காலியொன்றின்மீது வைவத்துவிட்டுத் திரும்பிய எனக்கு அதிர்ச்சி, அவளது முகம் பேயறைந்தது போலிருந்தது, அதரங்கள் மெல்ல நடுங்கின.

” – எல்சா மக்கென்பூர்(Elsa Mackenbourg)? உங்க அப்பா, எல்சா மக்கென்பூரை இங்கே அழைத்து வந்திருக்கிறாரா என்ன?”

எனக்கு, என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அவளைப் பார்த்தேன். அதிர்ச்சியில் உறைந்துபோனேன். எனக்குத் தெரிந்து அமைதியும், தன்னில் உறுதியும் கொண்ட முகம், இன்றென்னை வியப்பிலாழ்த்தியது. சற்றுமுன்பு, நான் சொன்ன வார்த்தைகள் தீட்டியிருந்த சித்திரங்களூடாக என்னை நிறுத்தினாள், பார்த்தாள், பிறகு தலையைத் திருப்பிக் கொண்டாள்.

” உங்களுக்கு முன்னமேயே தெரிவித்திருக்கவேண்டும், என்ன செய்வது? நான் அவசரமாகப் புறப்பட வேண்டியிருந்தது, ரொம்பவும் களைத்திருக்கிறேன்…

– பிறகு இப்பொழுது…, நான் – (எதையாவது சொல்லியாகவேண்டுமே, அதற்காக)

– இப்பொழுதென்றால்? என்ன பொருள்? -ஆன்

இம்முறை அவளது பார்வையில் ஒருவித ஏளனம், பிறகு அமைதியானாள்.

” அதாவது, இப்பொழுது நீயும் வந்திருக்கிறாய், எனது கையிரண்டையும் தேய்த்தபடி, அசட்டுத்தத்துடன் உளறிவைத்தேன். நீ வந்திருப்பதால், உண்மையில் எனக்கும் ஒருவகையில் சந்தோஷம். உனக்கும் அதற்கான காரணம் தெரியும். அதைச் சொல்லவேண்டுமா என்ன? சரிசரி… கீழே உனக்காகக் காத்திருக்கிறேன். ஏதாவது குடிக்கவேண்டுமென்று தோன்றினால்..இறங்கிவா. மினி’பாரில்'(Bar) எல்லாமிருக்கிறது.”

சங்கடத்துடன் அவளது அறையைவிட்டு வெளியில் வந்தேன். மாடிப்படிகளில் இறங்கியபோது, பலவிதமான சிந்தனைகளால் மனம் நிறைய குழப்பங்கள். எதனால் அவளது முகம் அப்படிப் போனது? குரலில் ஏன் இத்தனைத் தடுமாற்றம், இத்தனை சோர்வு எங்கிருந்து வந்தது? நாற்காலியொன்றில் அமர்ந்தேன். கண்களை மூடினேன். நானறிந்த ஆன்(Anne)னுடைய கடுமையான, நம்பிக்கைதரும் எல்லாமுகங்களையும் நினைவிற் கொண்டுவந்தேன். ஏளனம், கவலையின்மை, அதிகாரம் என்று வரிசையில் நின்றன. எளிதில் பாதிப்புள்ளாகிற அவளது முகங்களின் குணங்களை அறியநேர்ந்ததால், ஒருபுறம் கலக்கம், இன்னொருபுறம் கோபம். என் தந்தையை விரும்பினாளா? அவரைக் காதலிக்கக்கூட அவளால் முடியுமா? அவரிடத்தில், அவள் விரும்பத்தகுந்த குணங்களென்று ஏதுமில்லையே. அவர் பலவீனமானவர், எதிலும் அவசரம், சில வேளைகளில் எளிதில் மனம்தளர்ந்து போகக்கூடியவர். அப்படியிருக்க அவர்மீது இவளுக்கு காதல்வருமென்றால் யார் நம்புவது? ஒருவேளை பயணக் களைப்பினால், முகம் அப்படிச் சோர்ந்ததுபோல தெரிந்ததோ? அல்லது மனதளவில் காயப்பட்டிருப்பாளோ? முடிவுக்குவர இயலாமல் ஒருமணிநேரத்திற்கு மேலாகத், தவித்தேன்.

‘எல்சா’வுடன் அப்பா வீட்டிற்குத் திரும்ப மாலை மணி அய்ந்தாகியிருந்தது. அவர் காரிலிருந்து இறங்குவதைப் பார்த்தேன். ஆன்(Anne) இவரை காதலிப்பதற்கான சாத்தியங்களுண்டா? மனதிற்குள் கேட்டுப்பார்த்தேன். பின்புறமாகத் தலையை வெட்டிச் சாய்த்தபடி வேகமாய் என்னிடம் வந்தார். சிரித்தார். வேறொருத்தியால் அவரை நேசிக்கமுடியுமெனில், ‘ஆன்'(Anne) அவரை நேசிப்பதற்கான சாத்தியங்களும் அதிகமென்றே தோன்றியது.

” ‘ஆன்'(Anne) அங்கே இல்லை?, சத்தமிட்டார். வாயிலில் அவள் குறுக்கிட்டுவிடக்கூடாதென்று, நினைத்துக்கொண்டேன்.

– அவளது அறையிலிருக்கிறாள். காரில் வந்திருந்தாள் – நான்.

– உண்மையாகவா? நல்லதாப் போச்சு! -அப்பா.

– மேலே சென்று கையிற்வைத்திருக்கிற பூங்கொத்தை நீங்கள் கொடுக்கவேண்டியதுதான், பாக்கி. -நான்

– பூங்கொத்து எனக்காகவா வாங்கினாய்¡? மிக்க நன்றி-” ஆன்னின்(Anne) குரல்.

மாடியிலிருந்து சிரித்தமுகத்துடன் இறங்கிக் கொண்டிருந்தாள், சற்றுமுன்னர் முகத்தில் தெரிந்த வாட்டம், இப்போதில்லை. அணிந்திருந்த நெடுஞ்சட்டையில் பயணம் செய்ததற்கான அடையாளமேதுமில்லை. கொஞ்சம் முன்கூட்டியே இறங்கிவந்து என்னிடத்தில் சிறிதுநேரம் பேசியிருக்கலாம். அதனை விடுத்து கார் சத்தத்தினைக்கேட்ட பிறகு இறங்கிவந்ததை நினைக்க, எனக்கு அவள்மீது வருத்தம். அப்படி வந்திருந்தால், நடந்து முடிந்த தேர்வில் நான் கோட்டை விட்டதைக் குறித்து சொல்லவேண்டியிருந்திருக்கும். பரவாயில்லை, அந்தவகையில் ஆறுதல்.

அப்பா வேகமாய் அவளிடத்தில் வந்தார், கரத்தினை வாங்கி முத்தமிட்டார்.

” கால் மணிநேரத்திற்குக் கூடுதலாக பிளாட்பாரத்தில், கையில் பூங்கொத்துடனும், உதட்டில் அசட்டு சிரிப்புடனும் காத்திருந்தேன். கடவுளே! கடைசியில் நீ இங்கிருக்கிறாய்! எல்ஸா மகென்பூர்(Elsa Mackenbourg) உனக்குத் தெரியுமில்லையா?”

அடுத்து என்ன நடக்குமென்று தெரியும், அவர்களைப் பார்ப்பதை தவிர்த்தேன்.

“நாங்களிருவரும் ஏற்கனவே சந்தித்திருக்கவேண்டுமென்றே நினைக்கிறேன், ‘ஆன்’னுடைய பதிலில் கனிவு இருந்தது. எனக்கென்று ஒதுக்கிய அறை அருமை. விடுமுறையை உங்களோடு கழிக்கவென்று அழைப்பு விடுத்ததற்காக, ரெமோன்(Raymond)உனக்கு மிகவும் நன்றி, காரில் வந்ததால் களைத்திருக்கிறேன்.”

அப்பா செருமிக்கொண்டார். வார்த்தைகளை அளந்து பேசினார். போத்தல்கள் திறக்கப்பட்டன. சிரில்(Cyril)லுடைய காதற்பசிகொண்ட முகமும், ஆன்(Anne)னுடைய முகமும் ஒன்றுமாற்றியொன்று எனது மனதில் வந்துபோனது. இருமுகங்களிலும் ஒருவித வன்மம் படிந்திருப்பதை உணர்ந்தேன். அப்பா எதிர்பார்ப்பதுபோல, இக்கோடைவிடுமுறை எந்தவித சிக்கலுமின்றி முடியுமா? என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

நாங்கள் அனைவரும், முதன்முறை ஒன்றாக உணவுகொள்ள உட்கார்ந்தபோது மகிழ்ச்சிக்குக் குறைவில்லை. அப்பாவும் ஆன்(Anne)னும், தங்கள் இருவருக்கும் இடையேயான பொதுவிடயங்கள்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள், அப்படியான விடயங்கள் அதிகமில்லையென்கிறபோதிலும், அவை உயர்வானவை, வண்ணமயமானவை. அவர்களது உரையாடலை சுவாரசியமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஆன்(Anne) என் தந்தையின் கூட்டாளி ஒருவரைப்பற்றிக் குறிப்பிட்டபோது, அந்த நபர், ஒர் ‘அரைவேக்காடு’ என்றாள். அவள் யாரைபற்றிப் பேசுகிறாள் என்றெனக்குத் தெரியும். அவரொன்றும் தப்பான ஆசாமியல்ல. மது அருந்தும் பழக்கம் கொஞ்சம் அதிகம். அவரோடு சேர்ந்து, நானும் அப்பாவும் பலமுறை உணவருந்தியிருக்கிறோம். அந்த நாட்கள் சுலபத்தில் மறக்கமுடியாதவை.

ஆன்னு(Anne)டைய அபிப்ராயத்தை மறுப்பது அவசியமாயிற்று.

“ஆன்!..லொம்பார்து (Lombard) ஒரு வேடிக்கையான நபர். அவரோடு இருந்தால் நேரம்போவதே தெரியாது. மற்றபடி பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை….- நான்.

– ஆக அவரைபற்றிப் பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லையென்பதை, அப்பாவும் பெண்ணும் ஒத்துக்கொள்கிறீர்கள். அவரது நகைச்சுவை உணர்வுகூட ஒருவகையில்…- ஆன்.

– ஒருவேளை நாம் எதிர்பார்க்கிற வகையிலான ஞானம் அவருக்கு இல்லாமலிருக்கலாம்…..- எனது வாக்கியத்தை முடிக்கும் முன்பாகக் குறுக்கிட்டாள், முகத்தில் முந்தைய ஏளனமில்லை. கொஞ்சம் இறங்கிவந்திருந்தாள்.

– ஞானத்தின் வகைகளென்று பேசினாயே, அது வயதைப் பொறுத்தது, வயதுக்குத் தகுந்த புத்தியோடு மனிதர்கள் நடந்துகொள்ளவேண்டும். ”

வார்த்தைகளில் விளையாடுவதும், சொல்லவந்த கருத்தில் உறுதியாய் நிற்பதும், அவளுக்குக் கைவந்தகலை. பேச்சில் நிறைய ஆழமும், கூர்மையுமுண்டு. மேதைகள் உலகத்திற்கான கதவுகளை எனக்கென்று அகலத் திறந்துவைக்கும் தன்மையது. அரைமனதோடு பார்வையைத் திருப்புவேன், சுலபமாய் அடிமைகொள்ளூம். இதற்காகவே குறிப்பேடும் எழுதுகோலும் கண்டிப்பாய் கைவசமிருக்கவேண்டும். அன்றைக்கும், அப்படியான எண்ணம் உதிக்க, அதனை ஆன்(Anne)னிடம் தெரிவித்தேன். எனது தகப்பனார் வெடித்துக்கொண்டு சிரித்தார்:

” உனக்கொன்றும் அவள் மீது பொறாமையில்லையே?”

– அவள்மீது பொறாமைகொள்ள என்னால் முடியாது? ஆன் தப்பானவளில்லையே.

எனினும் அவள் என்னோடு மிகமோசமாக முரண்பட்டிருப்பதை உணர்ந்தேயிருந்தேன். பிடிவாதத்துடன் எடுக்கும் அவளது முடிவுகளில் தெளிவிருப்பதில்லை, அம்முடிவுகள் என்னால் ஏற்கமுடியாதவையுங்கூட.

முதள்நாள் மாலை, எல்சா வேண்டுமென்றே எனது தந்தையின் அறையில் நுழைந்ததை, ஆன் கவனித்ததாகத் தெரியவில்லை. தனக்கென்று வைத்திருந்தபொருட்களிலிருந்து, கம்பளிச் சட்டையொன்றை எடுத்துவந்த ஆன்(Anne) என்னிடத்திற் கொடுத்தவள், நன்றி சொல்வதற்கான வாய்ப்பினை எனக்கு அளிக்கவில்லை. ‘நன்றிகள்’ அவளுக்கு இடையூறாக இருந்தன, தவிர ‘நன்றிகளை’ விரும்பும்வகையில் என்னால் சொல்லவும் முடிந்ததில்லை. எனவே அன்பளிப்பாய் பெற்ற கம்பளிச் சட்டைக்கு நன்றிசொல்லமுடியாமற்போனதால் வருத்தமேதுமில்லை.

” எல்சா(Elsa) மிகவும் நல்ல பெண்மணியென்று நினைக்கிறேன், – புறப்படவிருந்த என்னிடம், ஆன் கூறினாள்.

எனது கண்களை நேரிட்டுப் பார்த்தாள், முகத்தில் வழக்கமாக தென்படுகிற புன்னகை இல்லை. என்னிடத்தில் ஏதோவொன்றை தேடுவதுபோலத் தோன்றியது, அதனை முளையிலேயே கிள்ளிவிடவேண்டுமென்கிற எண்ணமும் இருந்தது. சற்றுமுன்பு அவள் குறிப்பிட்ட, ‘அறிவு, வயது’ இவற்றையெல்லாம் மறந்தவளாக, பதிலிறுக்கத் துணிந்தேன்.

” ஆமாமாம்.. எல்லோராலும் விரும்பத்தக்கவள், வயதும் அதிகமில்லை… அன்பாய்வேறு பழகுகிறாள்.”

உண்மையைச் சொல்லவேண்டுமெனில் நான் உளறினேன். அவள் கலகலவென்று சிரித்தாள். எனக்கு எரிச்சல் வந்தது, இருக்கவிருப்பமில்லை, படுக்கச் சென்றேன். நித்திரையின் போது, சிரிலை(Cyril) நினைத்துக்கொண்டேன். அநேகமாக இந்நேரம் கான்(Cannes) நகரத்தில் பெண்களோடு இரவு விடுதிகளில் ஆட்டம்போட்டுக்கொண்டிருப்பான்.

எனது மறதி குறித்து நினைத்துப்பார்த்தேன், அதிலும் ‘முக்கியமானது’ சுத்தமாக மறந்துபோகிறது: கடலின் இருப்பு, ஓயாமல் அது எழுப்புகிற ஓசை, சூரியன் மறந்து விடுகிறேன்; மாகாணத்து விடுதிமுற்றத்திலிருந்த நான்கு எலுமிச்சை மரங்களும், அவற்றின் நறுமணமும் மறந்துபோகிறது; இரயில் நிலையத்தில் எனக்காகக் காத்திருந்த என் தகப்பனாரின் சிரிப்பு மறந்திருந்தது, அச்சிரிப்பு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விடுதியிலிருந்து வெளியேறியநேரத்தில், எனது தலைமுடியைச் சடையாகப் பின்னித் தொங்கவிட்டிருந்ததற்காகவும், கறுப்புவண்னத்தில் பிறர் சகியாவண்ணம் அணிந்திருந்த நீண்டசட்டைகாரணமாகவும், வேறுபொருளைத் தந்தது, மறந்து போயிற்று; காரில் அமர்ந்தபொழுது கரைகாணாத மகிழ்ச்சியில் அப்பா, சட்டென்று ஒருவித எக்காளத்துடன் சத்தம்போட்டுச் சிரித்ததைக்கூட மறந்திருந்தேன், அச்சிரிப்புக்கான காரணம், எனது கண்களும் எனது வாயும் அவரது சாயலைப் பெற்றிருந்ததற்காக. என்னை விலைமதிப்பற்றவளாகவும், மிகவும் விசித்திரமானதொரு பொம்மையாகவும் கருதினார். எதைப்பற்றியும் எனக்குத் தெரியாது; எனது அப்பாதான் அனைத்தையும் அறிமுகப்படுத்தினார்: பாரீஸ் மாநகரம், உல்லாசம், எளிதான வாழ்க்கை…. அப்போதைய எனது பெரும்பானமையான சந்தோஷங்களுக்கு பணமே மூலகாரணமென்று நம்பினேன்: காரில் மின்னல் வேகத்திற் பறந்தது, நாளுக்கொரு ஆடையில் வலம்வந்தது, பிடித்த இசைச் தட்டுகளை வாங்கமுடிந்தது, பிறகு புத்தகங்கள், பூக்கள்…என எல்லாவற்றிர்க்குமே, பணமே மூலம். எளிதாகப்பெறமுடிந்ததால், அந்த சந்தோஷங்களை அவமரியாதைக்குரியதாக எண்ணவில்லை, தவிர அவற்றை எளிதானவையென்று நான் சொல்வதற்குக்காரணம், அவை அவ்வாறாகத்தான் இருந்தன. என்றேனும் ஒருநாள் இதற்காக நான் வருந்தக்கூடும், வேதனைகளைலிருந்து அல்லது விளங்கிக்கொள்ளவியலாத இந்தச் சிக்கல்களிலிருந்து விமோசனம்பெற எவரிடமாவது சொல்லி அழக்கூடும். வாழ்க்கையென்றால் இரண்டே விடயங்கள்தான் எனக்குச் சுவாரசியமாகத் தோன்றுகின்றன: ஒன்று: இன்பமும் அதனைச் சுகிக்கும் வகையும், மற்றொன்று: மகிழ்ச்சியும் அதனைக் கொண்டாடும் விதமும். போதிய அளவு எனக்குப் படிப்பு ஏறாதுதான் காரணமோ? விடுதியில் தங்கியிருந்தபோது அதிகமாக வாசித்ததெல்லாம் ஒழுக்கம், உண்மை மாதிரியான உபதேசங்களையன்றி வேறல்ல. பாரீஸிலிருந்தபோது படிப்பதற்கு எனக்கு நேரமே காணாது: வகுப்பு முடிந்து வெளியே வந்தால், காத்திருக்கும் நண்பர்களுடன் திரைப்படங்களுக்குச் செல்வேன்; நடிகர்களின் பெயரெதுவும் எனக்குத் தெரியாதென்றால் நண்பர்கள் வியப்பார்கள். பிறகு க·பே(1)யின் சூரிய வெப்பத்துடனான திறந்தவெளிமுற்றம்; கூட்டத்தில் ஒருத்தியாக சந்தோஷத்துடன் நேரத்தைப் போக்குவது, அதற்காக எதையாவது கொண்டுவரச் செய்து குடித்துக்கொண்டிருப்பது, எனது கண்களை நேரிட்டுப் பார்க்கும் ஒருவனுடன் கைகோர்த்துக்கொண்டு எந்தக் கூட்டத்தை நேசித்தேனோ, அதே கூட்டத்திலிருந்து விலகி வெகுதூரம் செல்வது. அவனோடு வீடுவரை நடந்தே செல்வது. வீட்டை நெருங்கியதும் கதவருகில், சட்டென்று என்னை அணைத்து அவன் முத்தமிடுவான்: முத்தங்களினால் கிடைக்கும் இண்பங்களை கண்டறிவேன். எனது நினைவில் ‘அவன்’ களுக்கு பல பெயர்கள் உண்டு. எல்லா இளம் பெண்களுக்குமே தெரிந்த பெயர்கள் அவை: ழான், உபேர், ழாக்…இரவானதும், எனக்கு வயது கூடிவிடும். அப்பாவுடன் புறப்பட்டுப்போவேன். சில இரவுகளில் வெறுமனே சுற்றிவர வேண்டியிருக்கும், சில இரவுகள் உல்லாசமாகவும், என் வயதுக்கேற்ற ஆட்டப்பாட்டங்களுடனும் கழியும். வீட்டிற்குத் திரும்பிவுடன் பெரும்பாலான நாட்களில் அப்பா என்னைமட்டும் காரிலிருந்து இறக்கிவிட்டுவிட்டு, தனது பெண் சிநேகிதியுடன் கிளம்பிப் போனாரென்றால், வீட்டிற்கு எத்தனை மணிக்குத் திரும்புவாரென்று எனக்குத் தெரியாது. அப்பாவுடைய இம்மாதிரியான காரியங்களில் எனக்கு உடன்பாடு இருப்பது மாதிரியான பொய்யான நம்பிக்கையை அவருக்கு ஊட்ட விருப்பமில்லை. அவரது நடவடிக்கைகள் என்னிடம், எதையும் மறைக்க விருப்பமில்லாததுபோலத்தான் தோன்றியது. சரியாய் சொல்லவேண்டுமென்றால் அவராக, இந்தபெண்மனியுடன் சேர்ந்து சாப்பிட அவளோடு போகிறேன், அல்லது அந்தப் பெண்மணி வீட்டிற்குப் போகிறேன், அங்கேயே தங்கிவிடுவேனென்றோ (நல்லவேளை, ஒரு சில நாட்களுக்கு மட்டும்) தமது செய்கையை நியாயப்படுத்தும் விதத்திலோ அல்லது மறுத்தோ எதையும் சொன்னதில்லை. எது எப்படியோ, தனது விருந்தினர்களிடம் அவருக்குக்குள்ள இம்மாதிரியான உறவுகளைத் தொடர்ந்து அலட்சியபடுத்த முடியாது. தவிர கண்டதையும் கற்பனை செய்திட அனுமதிக்காததோடு, தம்மீது முடிந்த அளவு நம்பிக்கையுடன் இருக்குமாறு என்னைப் பார்த்துக்கொண்டார். பழுதில்லாமல் அவர்போட்டிருந்த திட்டபடி எல்லாம் நடந்தன. எனது இளம்வயது மற்றும் அனுபவத்தின் விளைவாக சிறிதுகாலம், காதலைக் கேளிக்கைப்பொருளாக எடுத்துக்கொண்டேன், அதன் உண்மையான தாக்கத்தையும் உணரமறுத்தேன். இதற்கு அப்பாவின் காதல் விவகாரங்களிலிருந்து, நான் பெற்ற அனுபவங்களே மூலம். அப்பாவைக் குற்றம் சொல்லவேண்டுமெனில், இந்த ஒரு காரணம் போதும். “நவீன உலகில், வண்ணங்களில் எஞ்சியிருப்பது பாவம் மாத்திரமே”, என்ற ஆஸ்க்கார் வைல்டின், மேற்கோளை இங்கே குறிப்பிட்டாகவேண்டும். அவர் கருத்தில் உடன்பட்டு, என்பங்கிற்கும் இந்த மண்ணில் பாவங்களை விட்டுச் செல்லவேண்டும், பிறகு அதனை நன்கு செயல்படுத்துவகையில் எளிதானதாக உருவாக்கவும் வேண்டும். எனது வாழ்க்கை இவ்வரிகளை ஒரு நாள் பிரதிபலிக்கக்கூடும், அதனை முன்னுதாரணமாகக்கொண்டு இயங்கவும் கூடும்,. ‘எப்பினால் சித்திரத்தின்'(2) எதிர்மாறாய்கூடஅமையலாம்: இறந்த காலங்கள், அநித்யம், தினசரி வாழ்க்கையின் நல்லுணர்வுகள், அனைத்தையும் மறந்தாயிற்று. கடைசியில் அர்த்தமற்ற, கீழ்மையான வாழ்க்கைக்குக் காத்திருப்பதே இலட்சியமாயிற்று.
————————————————————

1. Cafe -(க·பே) காப்பி, தேநீர் மற்றும் மது அருந்துமிடங்கள், எளிய உணவுகளும் கிடைக்கும்.

2. பிரான்சுநாட்டில் எபினால் பகுதியிலிருந்த ஒருவகை சித்திரக்கலை (Image d’Epinal), மரப்பலகையில் செதுக்கி வண்ணங்கள் பூசப்பட்ட இச்சித்திரங்கள் அரசியல், மதம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கபட்டன. நாளடைவில், ஒருபொருளின் நல்லபக்கத்தைக்குறிக்க(வடிவமுள்ள பகுதி) எப்பினால் சித்திரம், என்கிற சொல்லாடல் வழக்கிற்குவந்தது

nakrish2003@yahoo.fr

Series Navigation

author

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts