வலி

This entry is part [part not set] of 41 in the series 20060901_Issue

குரு அரவிந்தன்


எல்லோரும் ஒரே மாதிரியான எரிச்சல் கலந்த சினத்தோடு அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டு போனார்கள். யாரோ ஒருத்தன், முகத்தில் காறித்துப்பாத குறையாய், வேண்டுமென்றே வாசலில் காறித்துப்பிவிட்டுச் சென்றான். தடியை ஊன்றியபடி இன்றைக்கோ நாளைக்கோ என்றிருந்த வயோதிபமாது ஒருத்தி, அந்த வீட்டைக் கடந்து செல்லும்போது, நின்று ஒருபிடி மண் எடுத்துத்திட்டித் தீர்த்துவிட்டுத் தன்பாட்டிற்குப் போனாள்.
கொஞ்ச நாட்களாக அவனைச் சுற்றி என்னென்னவோ எல்லாம் நடக்கின்றன. வானத்தில் ஹாயாய்ப் பறந்து கொண்டிருந்தவனை திடீரென சிறகொடித்து, சாக்கடைக்குள் இழுத்து விழுத்தி விட்டது போன்ற உணர்வில் அவன் மனசு கூனிக்குறிகிப் போனது. அவனை மட்டுமல்ல அவனைச் சார்ந்த எல்லாவற்றையுமே இவர்கள் வெறுப்போடு பார்ப்பது போன்றதொரு பிரமையும் அவனை வாட்டிவதக்கியது.
அவன் சற்றும் எதிர்பார்க்காததொன்று, இப்படி நடக்கும் என்று அவன் ஒருபோதும் நினைத்ததில்லை. அந்த நிலைக்குள் இருந்து கொஞ்சமேனும் அவனால் விடுபட்டு வெளியே வரவும் முடியவில்லை. வெளியேவர முயற்சி செய்தாலும் அவனது மனச்சாட்சி நடந்ததை குத்திக் காட்டிக் கொண்டே இருந்தது. தவறு நடந்ததென்னவோ உண்மைதான். பேசாமல் மன்னிப்பாவது கேட்டிருக்கலாம். மனைவியின் பாராமுகத்தால், தான் செய்த தவறுக்கு பொதுமன்னிப்பாவது கேட்கத்தான் நினைத்தான், ஆனாலும் அவன் நினைத்ததுபோல அது அவ்வளவு சுலபமாகக் கைகூடவில்லை. அதிகாரபீடத்தில் இருந்தவர்கள் அவனது நினைப்பிற்கு சற்றும் இடம் கொடுக்கவில்லை. ‘ஊதியம் பெற்றுக் கொண்டுதானே இதைச் செய்தாய், உன்பணி இத்துடன் முடிந்துவிட்டது, கவலையைவிடு! இனி நடக்க வேண்டியவற்றை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று அதிகாரபீடத்தில் இருந்தவர்கள் கைவிரித்து விட்டார்கள்.
அன்று முழுவதும் நடந்த பாராட்டிலே குளிர்ந்துபோய், இரவு வீட்டிற்கு வந்தவனை மனைவிதான் முதலில் எதிர்கொண்டாள். ஏதோ தீண்டத்தகாத பொருளைப் பார்த்ததுபோல தீராதவெறுப்போடு அவள், அவனைப் பார்த்தாள். வெற்றிக் களிப்பு உபசாரத்தில் கொஞ்சமாய் மேல்நாட்டு மதுவை அவன் அருந்தியிருந்தாலும், கதவைத் திறந்தபோது அந்த வாடை அவள் முகத்தில் குப்பென்று அடித்திருக்கலாம் என்பதை அவளது முகச்சுழிப்பில் இருந்து அவன் நிச்சயப்படுத்திக் கொண்டான். அவளது அலட்சியத்திற்கு அது காரணமில்லை என்பதும் அவனுக்குத் தெரியும். இப்படி எத்தனை நாட்கள் இரவு நேரம் கடந்து மதுபோதையில், வண்டியைவிட்டு இறங்கித் தள்ளாடிக் கொண்டு வீட்டிற்கு வந்திருக்கிறான். அப்பொழுதெல்லாம் அவள் இப்படி முகத்தைத் திருப்பியதில்லை. இன்று மட்டுமென்ன? அவனது உயர் அதிகாரிகள், சகபாடிகள் எல்லோரும் அவன் பெரிய சாதனை செய்து விட்டதாக புகழாரம் சூட்டி வெற்றிக் களிப்பில் மிதந்து கொண்டிருக்க, இவள் மட்டும் ஏன் முகத்தைச் சுழிக்கிறாள்? ஏன் என்னை அவமானப் படுத்துகிறாள்?
மனைவி மட்டும்தான் இப்படி அலட்சியப் படுத்தியிருந்தால் அதை ஓரளவாவது தாங்கியிருப்பான், ஆனால் அதற்கும் மேலாய் அவனது பதினாறு வயது மகளுமல்லவா அவனை அலட்சியம் செய்துவிட்டாள்.
ஒரே மகள் என்பதால் அவள் மீது அவன் அதிக பாசம் வைத்திருந்தான். அதனால்தான் மகளின் அந்த அலட்சியத்தை அவனால் தாங்க முடியவில்லை!
‘என்னம்மா.., என்னோட என்ன கோபம்..?’ என்றபடி, ஒரு தந்தையின் பாசத்தோடு அவளை அணைக்கச் சென்றான்.
‘கிட்டவராதே கொலைக்காரப்பாவி..!’ என்று அவள் வீறிட்டுக் கத்திக் குளறிப் பின்வாங்கியபோது, அந்த அதிர்ச்சியில் அவன் செய்வதறியாது ஒருகணம் அப்படியே அதிர்ந்துபோய் நின்றான்.
‘என்னைப் போலதானே அம்மா, என்னுடைய வயசுதானேம்மா, எப்படி இந்த மனுஷனாலே ஒட்டுமொத்தமாய் அந்தப் பிஞ்சுகளை ஈவிரக்கம் இல்லாமல் கொலை செய்யமுடிஞ்சுது..?’ தாயிடம் சொல்லி மகள் கதறி அழுதபோதுதான் தனது செய்கையின் மறுபக்கம், அதனால் ஏற்பட்ட பாதிப்பு என்னவென்று அவனுக்குப் புரியலாயிற்று.
மகள் கொடுத்த அதிரடியில் அவனுடைய மதுபோதை சற்றுத் தெளிந்து போயிருந்தது. என்னுடைய மகளா இப்படிச் சொன்னாள்? மகளிடம் ஒரு சோகத்தழும்பை அந்தச் சம்பவம் ஏற்படுத்தியிருக்கும் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சாப்பிடாமல் மதுபோதையில் அப்படியே கட்டிலில் விழுந்தான்.
தூக்கம் வர மறுத்தது. நீண்ட நேரத்தின்பின் கண்கள் செருக அயர்ந்து கொண்டு போனவன் யாரோ உலுப்பி விட்டதுபோல சத்தம் போட்டுக் கத்திக் கொண்டே திடுக்கிட்டு எழுந்தான்.
‘யூ ரூ டாட்..? நீயுமாப்பா..?’ மகள் அருகே வந்து கேட்டாளா, அல்லது மகளைப்போன்ற தெளிவில்லாத பலபிஞ்சு முகங்கள் ஒவ்வொன்றாய் வந்து கேட்டனவா, அல்லது அவன் கண்டது கனவா என்னவென்று புரியாமல் குழம்பிப்போய் படுக்கையில் எழுந்திருந்து தவித்தான். நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. சுரம் வந்து சுடுவதுபோல உடம்பெல்லாம் கொதித்து வியர்த்துக் கொட்டி, உடம்பு தொப்பமாய் நனைந்து போயிருந்தது.
இரவில் சின்னச் சத்தம் கேட்டாலே துடித்துப் பதைத்து எழுந்திருக்கும் மனைவிகூட ‘எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன’ என்பதுபோல, அவன் அவஸ்தைப்படுவதைத் தெரிந்து கொண்டும் அப்படியே அசையாமல் கிடந்தாள்.
நிம்மதி இல்லாத இந்த நிலையில், வீடு வாசல் காசு பணம் என்று கொட்டிக் கிடந்தென்ன? அந்த சம்பவத்தின்பின் மற்றவர்களிடம் இருந்து தான் தனிமைப் படுத்தப்பட்டு விட்டதை அவன் உணர்ந்தான். அன்று வெறுப்போடு வீட்டைவிட்டு போன அவனது மகள் திரும்பி வீட்டிற்கு வரவேயில்லை. ஊர்பேர் தெரியாத அவனை, அந்தச் சம்பவத்தின்பின் சர்வதேசமுமே அவனைத் தீண்டத்தகாதவன் போல ஒதுக்கி விட்டிருப்பதை அவன் உணர்ந்தான். கொஞ்சம் கொஞ்சமாக அந்த நினைவுகள் அவனது உயிரைக் குடித்துக் கொண்டிருந்தன. ஒன்றா இரண்டா..? எத்தனை பெண் குழந்தைகள்? அவை என்ன பாவம் செய்தன..?
மனச்சாட்சி குத்திக் கிளறிக் கொண்டே இருந்தது. பயங்கரக் கனவு கண்டு துடித்துப் பதைத்து எழும்புவதும், தனிமையில் தவிப்பதும், தூங்காத இரவுகளும் அவனுக்கு ஒரு சாபக்கேடாய் போயின.
மனசு இனம்புரியாமல் ஏனோ சஞ்சலப்பட்டது. எதிலும் நாட்டமில்லாமல், வாழ்க்கையில் பிடிப்பில்லாமல், இப்போதெல்லாம் வெறித்த பார்வை ஒன்றுதான் அவனிடம் மிஞ்சி நின்றது.
‘இவன் ஒரு மனநோயாளி’ என்றனர் சிலர்.
‘யார் பெற்றாலும் பிள்ளைகள்தானே! குழந்தைகள் என்று தெரிந்து கொண்டுதானே இந்த ஈனச்செயலைச்செய்தான். தப்பு செய்துவிட்டு தப்பிக்கொள்ளத்தான் இப்படிநடிக்கிறான். இவனைமட்டுமல்ல, அதைச் சரியென்று நியாயப்படுத்த நினைக்கும் மனிதநேயம் இல்லாத இவனைப் போன்றவர்களையும் மன்னிக்கவேகூடாது’ என்று தங்கள் விசனத்தை வெளிப்படுத்தினர் வேறு சிலர்.
‘மனிதநேயம் என்பதே அவனிடம் இல்லையா, புத்தரின் பெயரைச் சொல்லிக் கொண்டு ஒரு கோழைபோல, அதுவும் பச்சிளம் குழந்தைகளைக் குண்டுவீசிக் கொன்று குவித்தானே, எப்படி மனசு வந்தது? இவன் மிருகத்தைவிடக் கேவலமானவன்’ என்றார்கள் சம்பவத்தை நேரில் சென்று பார்த்தவர்கள்.
‘யப்பானில் குரோஷிமா, நாகசாக்கியில் குண்டு போட்டு காட்டுமிராண்டித் தனமாக அப்பாவி மக்களைக் கொன்று குவித்தவனுக்கும,; இவனுக்கும் என்ன வித்தியாசம்? குழந்தைகள், பெண்கள் என்று முதலைக் கண்ணீர் வடிக்கும் ஓரே பட்டறையில் இவனும் பயிற்சி பெற்றிருப்பானோ? இப்படித்தான் அவனும் உலகத்தால் தனிமைப் படுத்தப்பட்டு, அந்த வலியின் வேதனையில் மனநோயாளியாகி ஒருநாள் இறந்து போய்விட்டான்.’ சரித்திரம் தெரிந்தவர்கள் பேசிக்கொண்டார்கள்.
போதாக்குறைக்கு இவர்களோடு இதுவரைகாலமும் சினேகமாய் பழகிய அயல்வீட்டுக்காரர்கூட எதுவும் பேசாமலே, சந்தேகப் பார்வையோடு அவசரமாக தாங்கள் குடியிருந்த வீட்டை இரவோடீரவாக காலி செய்துவிட்டுப் போனார்கள்..
இவனுக்குப் பயம் பிடித்துக் கொண்டது.
நிம்மதிதேடி புத்தவிஹாரைக்குச் சென்றான். ஜீவராசிகளிடம் அன்பு காட்டிய புத்தபிரான் ஆட்டுக் குட்டி ஒன்றை கையிலே தூக்கி அணைத்தபடி கருணையே உருவமாய் இருப்பதை அப்போதுதான் அவனது கண்ணில் பட்டதுபோலவும், முதன்முதலாய்ப் பார்ப்பது போலவும் பார்த்தான். கூப்பிய அவனது கரங்களில் இருந்து இரத்தம் வழிவது போன்ற பிரேமை அவனுக்கு ஏற்படவே, அவனை அறியாமலே அவனது கைகள் நடுங்கத் தொடங்கின.
‘உண்மையிலே இவர்கள் யாரை வழிபடுகிறார்களோ, அந்தப் புத்தரும் பிறப்பாலே இந்துதான், இதைத்தெரிந்து கொண்டும் எப்படித்தான் இந்தப் படுகொலையைச் செய்ய அந்த பாவிக்கு மனம்வந்ததோ?’ இவன்தான் இதற்கெல்லாம் காரணகர்த்தா என்று தெரியாமல் உண்மையான பௌத்தர்கள் சிலர், இவனிடமே நடந்த சம்பவத்தைச் சொல்லி அந்தச் சிறார்களுக்காகப் பச்சாதாபப்பட்டார்கள்.
சென்ற இடமெல்லாம் வசை கேட்கவேண்டியதாயிற்று. வீட்டிலும் நிம்மதி இல்லாமற்போயிற்று. ஒரு புழுவைப் பார்ப்பது போன்ற மனைவியின் மௌனப்பார்வை அவனைக் குத்திக் கிழிக்கலாயிற்று. பிரிந்துபோன மகளை நினைத்தாளோ அல்லது அநியாயமாய் குண்டுவீச்சில் இறந்துபோன குழந்தைகளை நினைத்தாளோ, மனம் பொறுக்க முடியாமல், ஒருநாள் மௌனத்தை உடைத்துக் கொண்டு ஓவென்று கத்தியழுதபடி அவள் மனதில் உள்ளதை சினத்தோடு கொட்டித் தீர்த்தாள்.
‘பாவி எப்படியடா உனக்கு மனசுவந்தது..? அந்தப் பச்சிளம் பாலகர்களைக் குண்டுவீசிக் கதறக்கதறக் கொன்று குவிச்சிட்டியேடா! நீ நல்லாயிருப்பியா..?’
ஆற்றாமையால் துடித்தவள், சாபம் போடுவதுபோல அவனைப் பார்த்து உறுதியாகச் சொன்னாள்.
‘உன்னுடைய மரணம் அவங்களுக்கு ஒரு தூசு! ஆனால் இப்போ நீ மரணிக்கக்கூடாது. ஏத்தனை உயிர்களைக் கொன்று குவித்தாயோ அத்தனை உயிரையும் இழந்தவர்களின், ஊனமுற்றவர்களின் வலியையும், வேதனையையும் ஒட்டுமொத்தமாய் நீ உயிரோடு இருந்து அனுபவிச்சுச் சாகணும்! அப்பதான் எங்க குடும்பத்திற்கு ஏற்பட்ட மறக்கமுடியாத இந்த பெரியவடு நீங்கும்!’
மற்றவர்களின் அவலங்களைத் தொலைக்காட்சியில் பார்த்து ரசிப்பவர்களும், மௌனம் சாதிப்பவர்களும், ஆரம்பத்திலேயே இப்படிப்பட்ட அநியாயங்களை, அமைதிப்போராட்டம் மூலம் தடுத்து நிறுத்தாவிட்டால், தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும்கூட இப்படி ஒருநாள் நடக்கலாம் என்பதை ஏனோ உணர்வதில்லை.
வலி என்பது எல்லா ஜீவன்களுக்கும் ஒன்றுதான்! ஆனால் அதை அனுபவிப்பவர்களுக்குத்தான் அந்த வலியின் உண்மையான வேதனை புரியும்!


kuruaravinthan@hotmail.com

Series Navigation

author

குரு அரவிந்தன்

குரு அரவிந்தன்

Similar Posts