ஜோதிர்லதா கிரிஜா
கூடிய விரைவில் நடப்பதற்கிருந்த மாநாட்டை முன்னெப்போதையும் விட அதிகச் சிறப்பாக நடத்துவதற்கான யோசனைகளில் துர்க்கா ஆழ்ந்திருந்தாள். பெண்ணுரிமை இயக்கத்தில் ஆண்களையும் இணைத்துக்கொள்ளப் பங்கஜம் கூறியிருந்த யோசனையைச் செயல்படுத்துவது அவ்வªவு எளிதாக இருக்கவில்லை. மிகச் சிலரே அதில் ஆர்வங் காட்டினர். ஆனால் அப்படி ஆர்வங்காட்டிய ஆண்கள் பென்களைக் காட்டிலும் அதில் அதிக ஈடுபாட்டுடன் அக்கறை காட்டினார்கள்! எண்ணிக்கை குறைவா யிருந்தாலும் அத்தகைய நல்லிதயம் படைத்த ஆண்களின் துணை கொண்டு பெண்களால் வியத்தகு சாதனைகளைச் செய்ய முடியும் என்று துர்க்கா நம்பிக்கை கொண்டாள்.
நாடு தழுவிய இயக்கமாக மகளிர் இயக்கம் மலர்ந்து விட்டதால், அவ்வியக்கத் தலைவியர்க்கும், அதில் பங்கேற்ற பிற பெண்களுக்கும் நிறைய எதிரிகள் ஏற்படலாயினர். மிரட்டல்கள் நிறைந்த மொட்டைக் கடிதங்கள், தொலைபேசியில் கற்பழிப்பு-கொலை மிரட்டல்கள் ஆகியவை அன்றாடக் கசப்பு நிகழ்வுகளாயின.
எனினும் முன் வைத்த காலைப் பின் வைக்கும் தோல்வி மனப்பான்மை சிறிதும் இல்லாமல், துர்க்காவின் மகளிர் மன்றத் தலைமைச் செயலகமும், நாடு தழுவிய அதன் கிளைகளும் இயங்கிக்கொண்டிருந்தன.
அந்த மாநாட்டில், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து வந்து பங்கேற்ற கிளைத் தலைவியின் பேச்சில் தீப்பொறி பறந்தது.
“பெண்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், இந்திய நாட்டில் உள்ள பெண்களில் பெரும்பாலோர் முன்னேறிவிட்டாற்போலவும் , அதனால், ஆண்களுடன் தேவையற்ற முறையில், தங்களுக்குத் தகுதியற்ற துறைகளிலும் அவர்கள் போட்டி போடுவது போலவும் ஆண்களில் பலர் பேசவும், ஏடுகளில் எழுதவும் தலைப்பட்டுள்ளனர். பெண்ணடிமைத்தனத்தின் மிச்சம் மீதிகள் – குறிப்பாக எங்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் -இன்னமும் இருக்கவே செய்கின்றன. உயிரோடிருக்கும் மனைவியை – அவள் எவ்வளவு இளம் பெண்ணே யானாலும் கூட – கணவனின் பிணத்தோடு வலுக்கட்டாயமாகச் சேர்த்து எரிக்கும் வழக்கத்துக்கும், மிகச் சிறு வயதிலேயே மணமுடிக்கும் வழக்கத்துக்கும் இன்னும் அங்கே ஆதரவு இருக்கிறதே! இந்த வெட்கக்கேட்டையும் கொடுமையையும் எங்கு போய்ச் சொல்ல! இந்து மத வாதிகளும் ‘சதி’ என்னும் இந்த மனிதாபிமானமற்ற செயலைக் கண்டிப்பதில்லை என்பதோடு, இதற்கு எதிராக அறிக்கை விடவேண்டுமென்று கேட்டுக்கொண்ட சீர்திருத்தவாதிகளிடம் சில ஆசாரியர்கள், ‘அது அந்த்ப் பெண்ணின் இஷ்டம்! வலுக்கட்டாயமாய்த்தான் ஒரு கைம்பெண்ணை எரிக்கக்கூடாதே யல்லாது, அவளே கணவனின் சடலத்தோடு தானும் உயிருடன் எரிக்கப்பட விரும்பினாலோ, அந்தச் செயலை மறுதலிக்காம லிருந்தாலோ, மற்றவர்கள் அவளைத் தடுக்கக் கூடாது’ என்று பதிலளித்துள்ள கொடுமையான கூற்றை என்னவென்று சொல்லிக் கண்டிப்பது! இவர்களெல்லாம் முதலில் மனிதப் பிறவிகள்தானா! இதயம் என்பதாய் ஒன்று உள்ளவர்கள்தானா! ‘தீண்டாமை சாஸ்திர அங்கீகாரம் பெற்றதுதான்’ என்றெல்லாம் கூடவன்றோ இந்த ஆச்சாரியர்களில் சிலர் கதை விடுகிறார்கள்! சாஸ்திரங்களில் இல்லாத ஒன்றைச் சில விஷமிகள் – உயர்ந்த சாதியினர் என்பதாய்த் தங்களுக்குத் தாங்களே முத்திரை குத்திக்கொண்டவர்கள் – இடைச்செருகல் செய்து இந்து மதத்தை இழிமைப் படுத்தியுள்ள அசிங்கத்தை இவர்கள் ஏன் இருட்டடிப்புச் செய்து இந்த நாட்டுக்கே கேவலத்தைத் தேடித் தந்து கொண்டிருக்கிறார்கள்? நம் சாஸ்திரங்களில் முன்னுக்குப் பின் முரணான பல விஷயங்கள் இருப்பதும், அவ்ற்றில் அறிவுக்கும் நியாயத்துக்கும் பொருந்தாதவை இருப்பதும் இடைச் செருகல்கள் என்பதாய் மகாத்மா மாந்தி என்றோ எடுத்து உரைத்துள்ளாரே! அது மட்டுமா? நம் மத ஆசாரியர்கள் அனைவரும் ஒன்றாய்க் கூடிப் பேசி அத்தகைய அபத்தமான இடைச்செருகல்களை நம் சாஸ்திரங்களிலிருந்து நீக்கிவிடுதல் வேண்டுமென்றும் கூட அவர் அறிவார்ந்த யோசனையைச் சொன்னாரே! ஆனால், அதற்கெல்லாம் நம் மடாதிபதிகளுக்கு நேரம் ஏது? பெண்ணுக்கு எதிரான அறிக்கைகள் விடவும், அவர்களை எக்காலத்துக்கும் கட்டுப் பெட்டிகளாகவே வைத்திருக்கும் மூடப் பழக்க வழக்கங்களைப் போற்றி எழுதுவதற்கும்தானே அவர்களுக்கு நேரம் இருக்கிறது! பெண்ணாதரவுக் கருத்துகளை அகில இந்திய அளவில் மகாத்மா காந்தி வெளியிட்டார் என்றால், உங்கள் தமிழ் நாட்டில் தந்தை பெரியார் ஆண்களின் அடக்குமுறைக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டுள்ளார். அவருடைய கருத்துகள் மிக மிகப் புரட்சிகரமானவை! ஒரு பெண்ணால் கூட இந்த அளவுக்கு ஆண்கள் மீது ஆத்திரம் கொள்ள முடியுமா எனத் தெரியவில்லை. அந்த அளவுக்கு அவர் ஆணினத்தின் மீது வெறுப்பையும் சினத்தையும் உமிழ்ந்துள்ளார். பெண்ணாதரவுக் கருத்துகளையும், ஆணாதிக்க எதிர்ப்புக் கருத்துகளையும் அந்த அளவுக்கு ஆத்திர ஆவேசத்துடன் வேறெந்தச் சமுதாயச் சீர்திருத்தச் செம்மலும் வெளியிட்டதாகத் தெரியவில்லை.. .. அவர் விரும்பிய அளவுக்கு இல்லாவிட்டாலும், சில அடிப்படை உரிமைகளையேனும் பெண்கள் பெற வாய்த்தால் நன்றாயிருக்கும்.. .. ..” என்பது அவரது சொற்பொழிவின் சாரமாகும்.
“.. .. .. மற்ற எல்லா விஷயங்களிலும் பெற்றோரின் விருப்பத்துக்கு எதிராகச் செயல்படும் இளைஞர்கள் வரதட்சிணை விஷயத்தில் மட்டும் தாய்-தந்தையர் மீது பழி போட்டுவிட்டு ஒதுங்கி யிருப்பதேன்? .. .. .. வரதட்சிணைக் கொலைகள் விஷயத்தில் போலீஸ் ஏன் இவ்வளவு மெத்தனமாய்ச் செயல்படுகிறது? .. .. .. ஒரு பெண் தான் கனவன் வீட்டில் கொடுமைப்படுத்தப்படுவதாய்த் தன் பெற்றோரிடம் முறையிடும் போது, அவளுக்கு ஆதரவு தருவதை விடுத்து, ‘நீ இருக்க வேண்டிய இடம் புருஷன் வீடுதான். விட்டுக்கொடுத்தும், சகித்துக்கொண்டும் அங்கேயே இரு’ என்று ‘அறிவுரை’ வழங்கி, அவன் சிகரெட்டால் சூடு போடுகிற கணவனாக இருந்தாலும், அடித்துக் காயப்படுத்துகிறவனாயிருந்தாலும், அவனிடமே கட்டாயமாய்த் திருப்பி யனுப்புகிறார்களே பெரும்பாலான பெற்றோர்கள், அது நல்லதா? இரு புறங்களிலும் ஆதரவற்ற நிலையில் ஒரு பெண்ணால் என்ன செய்ய முடியும்? அவள் தற்கொலையைத்தானே நாட முடியும்? வெளியே போய்ச் சுயமாய்ச் சம்பாதிக்கும் தொழிற்கல்வி யற்றவர்களாக வன்றோ பெரும்பாலான பெண்களை வைத்திருக்கிறீர்கள்? .. ..’ என்று பஞ்சாப் மாநிலப் பெண்மணி கேள்விக் கணைகளை வரிசையாய்த் தொடுத்தார்.
மகாராஷ்டிர மாநிலப் பென்மணியின் பேச்சிலும் தீப்பொறிகள் பறந்து சிதறின.: “.. .. .. திரைப்படங்களில் பெண்களை எப்படிச் சித்திரிக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆண்களாலேயே பெரும்பாலும் தயாரிக்கப்படுகிற அத் திரைப்படங்களில் இருதாரமணத்தை அங்கீகரிக்கும் – அல்லது அதற்குச் சப்பைக்கட்டுக் கட்டும் – படங்கள் அடிக்கடி வருகின்றன. ‘பெண்டாட்டி சரியாக இருந்தால் ஆண்பிள்ளை ஏன் சிவப்பு விளக்குப் பகுதிக்குப் போகவோ சின்ன வீடு வைத்துக்கொள்ளவோ, போகிறான்?’ என்று ‘டயலாக்’ (dialogue) எழுதுகிற திரைக்கதை ஆண் ஆசிரியர்கள், ‘ஆண்பிள்ளை சரியாக இருந்தால், பெண்பிள்ளை ஏன் தப்பு வழிக்குப் போகப் போகிறாள்?’ என்று மறந்தும் எழுதிவிடாதிருப்பதில் கவனம் காட்டுபவர்கள்! அப்படி எழுதினாலோ, அதில் உள்ள நியாயத்தைச் சுட்டிக்காட்டினாலோ, ஏராளமான மனைவியர் வெளியேறிவிடுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும் போலும்! அவர்கள் எடுத்தியம்பும் நியாயங்கள் யாவுமே ஒருவழிப்பாதை நியயங்கள்தானே! பெண் என்பவள் தாய்மையின் பிரதிநிதி என்கிற பிரக்ஞையே அவர்களுக்குக் கிடையாது. அதனால்தான் தாய்மையின் அடையாளங்களான பாலுறவு உறுப்புகளையும் அவற்றின் செயல்பாடுகளையும் கேலி செய்கிற வக்கிரப் பாடல்களைக் கவிஞர்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஆபாசத் திரைப்படப் பாடல்கள்தான் ‘பெண் சீண்டல்’ எனும் eve-teasing செய்யும் பொறுக்கி ஆண்களுக்கும் மாணவர்களுக்கும் என்னமாய்க் கைகொடுத்து உதவுகின்றன! சும்மா யிருப்பவர்களின் மனங்களையும் கெடுத்து வம்புக்கு இழுக்கின்ற பாடல்கள் அவை. விரசமான பாடல்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்தால், ‘அவற்றில் விரசமே இல்லை. அந்த மறுபொருள் உங்களிடம் உள்ள வக்கிரத்துக்கேற்ப நீங்களாய்க் கற்பனை செய்வது’ என்று தீர்ப்புச் சொல்லத் தயாராயிருக்கும் நீதிபதிகளை என்ன செய்ய! புனிதமான ஒரே ஒர் அர்த்தத்தில்தான் அவர்கள் பாட்டு எழுதுகிறார்களாம்! அதற்கு இரண்டாம் அர்த்தமும் இருப்பதோ, தோன்றுவதோ தற்செயலாக நிகழ்கின்ற ஒன்றாம்! அத்தகைய கவிஞர்களின் பெண்களையும், நீதிபதிகள் வீட்டுப் பெண்களையும், படத்தயாரிப்பாளர்களின் வீட்டுப் பெண்களையும் கேலி செய்யவோ, வீண் வம்புக்கிழுக்கவோ அந்தப் பாடல் வரிகளைத் தெருப்பொறுக்கிகள் பாடினால், அப்போது தெரியும் அவர்களுக்கு அந்தப் பாடல்களின் விரசமும் வக்கிரமும்! ஒருவேளை அதையும் செரிமானம் செய்கிற அளவுக்கு அப் பாடலாசிரியர்களும், திரைப்படத் தயாரிப்பாளர்களும் பண ஆசை பிடித்து அலையும் சொரணை கெட்டவர்களோ என்னவோ!
‘மாற்றுப் பொருள் என்பதாக ஒன்றில்லாமலேயே, நேரடியாகவே ஆபாசத்தை வெளிப்படுத்தும் பாடல்களையும் அவ்வப்போது அவர்கள் எழுதுவதுண்டு. கேட்டால், ‘வயிற்றுப் பிழைப்பு’ என்று சால்சாப்புச் சொல்லுவார்கள். கோடிக் கணக்கில் பணம் சேர்த்து முடித்து விட்ட அவர்கள் அதில் வரும் வட்டியை வைத்தே ஐந்தாறு குடும்பங்களைப் பராமரிக்கக்கூடிய வசதி படைத்தவர்கள். ஆனாலும், அவர்களுக்குத் திருப்தி என்பதே இல்லை. ‘நான் எழுத மறுப்பதால், அது நின்றுவிடப் போகிறதா என்ன! அப்படி இன்னொருவன் எழுதத் தயாரா யிருக்கிறானே! அதை உங்களால் தடுக்க முடியுமா?’ என்றும் இவர்கள் எதிர்க்கேள்வி கேட்கிறார்கள்! ‘ஏண்டா அந்தப் பெண்ணைக் கற்பழித்தாய்?’ என்னும் கேள்விக்கு, ‘ஏற்கெனவே இன்னொருவன் அவளைக் கற்பழிப்பதற்கிருந்தான். அதனால் நான் முந்திகொண்டேன்!’ என்று ஒருவன் சொல்லுவதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாய் நமக்குத் தெரியவில்லை. இன்னும் சிலர், ‘நான் எழுதிய ஆபாசப் பாடல்கள் மட்டும்தான் உங்கள் கண்களுக்குத் தெரிகின்றனவா? அம்மாவின் உயர்வைப்பற்றி, கடவுளைப்பற்றி, வாழ்க்கைத் தத்துவங்கள் பற்றி, தேசபக்தியைப் பற்றி எல்லாம் எத்தனை பாடல்களை நான் எழுதியிருக்கிறேன்?’ என்பார்கள்! இது எப்படி இருக்கிறதென்றால், ‘ஏன் விபசாரவிடுதி நடத்துகிறாய்?’ என்று வினவப்படும் ஒருவன், ‘ஏன்? நான் ஒரு பஜனை மடமும், பள்ளிக்கூடமும் நடத்துகிறேனே, அதெல்லாம் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?’ என்று பதில் கேள்வி கேட்பதைப் போலிருக்கிறது! விரசம் வழியும் பாடல்கள் வெட்டப்பாடாமல் தப்பிவிடுவது நம் திரைப்படத் தணிக்கையாளர்களின் பொறுப்பின்மையையும், தணிக்கை விதிகளைச் செயல்படுத்தாமல் கையூட்டுப் பெறுவதையும்தான் தெற்றெனக் காட்டுகின்றன! தணிக்கை விதிகள் கடுமையாக இருக்கும் போதே இத்தகைய ஆபாசம் ததும்பும் பாடல்கள் இடம் பெறுவதும், வக்கிரமான அங்க அசைவுகள், இடுப்பு ஆட்டங்கள், சாடைமாடையான பிற அசைவுகள் ஆகியன கத்தரிக்கப்படாது தப்பிவிடுவதும் தணிக்கை விதிகள் மீறப்படுவதையே காட்டுகின்றன. எங்களைப் போன்ற மகளிர் அமைப்புகள் கண்டித்துப் புகார் செய்த பிறகு ஓரிரு வார்த்தைகளை நீக்குகிறார்கள். ஆனால், எல்லாப் பிரதிகளிலிருந்துமா அவை நீக்கப்படுகின்றன? இல்லை. தங்கள் வீட்டுப் பெண்களுக்குப் பின்னால் அப் பாடல்களைப் பாடிக்கொண்டு பொறுக்கிகள் பின்தொடர்வதாய்த் தணிக்கையாளர்கள் ஒரு கணம் கற்பனை செய்து பார்த்தாலும் போதும். அத்தகைய பாடல்களைத் தங்கள் படங்களில் இடம்பெறச் செய்ய மாட்டார்கள். தணிக்கையாளர்களைச் ‘சரிக்கட்டிவிட முடியும்’ என்கிற நம்பிக்கையில்தான் அவர்கள் பாடலாசிரியர்களை அத்தகைய காலித்தனமான பாடல்களை எழுதத் தூண்டுகிறார்கள். இளைஞர்களும் இளம் பெண்களும் ஒருசேரப் பயணம் செய்யும் பேருந்துகளில் அவர்கள் உங்கள் சென்னை நகரத்தில்- ஏன்? இந்தியாவின் எந்த நகரத்திலும்- சில தடவைகள் காலை, மாலை வேளைகளில் அவர்கள் பயணம் செய்து பார்க்கட்டும். நம் பெண்கள் எத்தகைய விகாரச் சேட்டைகளையும், எவ்வளவு மானக்கேட்டையும் சகித்துக்கொள்ள வேண்டி யுள்ளது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளுவார்கள். எங்கள் பம்பாயில், ‘சோலி கே பீச்சே க்யா ஹை?’ என்று ஒரு மாணவன் ஒரு பெண்ணிடம் பாட, வெகுண்ட அப்பெண், ‘சப்பல் சே மாரூங்கி’- செருப்பால் அடிப்பேன் – என்று கத்த, அந்த இளைஞன் சட்டென்று அவள் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு இறங்கி ஓடி விட்டான். மக்களின் கூட்டம் செயலற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது! தப்புச் செய்கிறவர்களைத் தட்டிக் கேட்டால், அவ்வாறு கேட்கிறவர்களுக்கு ஆதரவுக் குரல் எழுப்ப ஆடவர்கள் தயாராயில்லை. உடல் வலிமை என்பதை ஆண்டவன் ஆண்களுக்குக் கொடுத்திருப்பதே வலிமையற்றவர்களை – அவர்கள் பெண்களாயினும் சரி, வலிமைக்குறைவுள்ள பிற ஆண்களாயினும் சரி – காப்பாற்றுவதற்குத்தானே? என்ன செய்தாலும் யாரும் தட்டிக் கேட்கமாட்டார்கள் என்கிற நிலையால்தான் இந்த நாட்டில் தப்புச் செய்கிறவர்களின் தொகை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருகிறது. திரைப்படத் தொடர்புள்ள ஆபாசச் சுவரொட்டிகள் ஊர் முழுவதையும் அலங்கோலப்படுத்துகின்றன. இவற்றுக்கு எதிரான தண்டனைச் சட்டங்கள் காவல்துறையில் ஏற்கெனவே உள்ளன. அவற்றை அமல்படுத்தத்தான் யாருமே தயாராயில்லை. ஏற்கெனவே உள்ள கடுமையான தணிக்கை விதிகளும் இவற்றுள் அடக்கம்.
“இவற்றையெல்லாம் பார்க்கும் போது, காவல் துறை அதிகாரிகள் கையூட்டுப் பெற்றுக்கொண்டு அத்தகைய அசிங்கங்களை அனுமதிக்கிறார்கள் என்றுதானே நினைக்கத் தோன்றுகிறது? இல்லாவிட்டால், சட்டத்தை அமலாக்காதவாறு அவர்களைத் தடுப்பது எது? நியாய உணர்வும் சமுதாயப் பொறுப்பு உணர்வும் உள்ள ஓரிரு பத்திரிகைகள் அப்படிப்பட்ட அயோக்கியர்களைக் கண்டித்துக் கட்டுரைகளோ தலையங்கமோ எழுதினால் உடனே அவற்றின் ஆசிரியர்களுக்குத் தண்டனை வழங்குவீர்கள்! ”- சட்டென்று அந்தப் பென்மணி முன்வரிசையில் முழுச் சீருடையில் அமர்ந்திருந்த காவல்துறை ஆணையரை நோக்கிக் கை நீட்டிச் சொன்னார். குரலில் ஆத்திரம் தெறித்த போதிலும், முகத்தில் நக்கலான புன்னகை தவழ்ந்துகொண்டிருந்தது.
கூட்டம் முழுவதும் கைடட்ட, ஆணையரின் முகம் சுருங்கி, அசடு தட்டியது. எனினும், உதடுகளை உள்மடித்துபடி மவுனமா யிருந்தார்.
அடுத்து, ஒரிஸ்ஸாவிலிருந்து வந்திருந்த பெண்ணியக்கத் தலைவி முழங்கினார்:
“ .. .. .. 1993 ஆம் ஆண்டுக்குரிய தேசியக் குடும்ப நல அறிக்கையின்படி, ஒரிஸ்ஸாவில் பெண்களின் நிலை பொதுவாக மிக மோசமாக உள்ளதென்று தெரிகிறது. பெரும்பாலான பெண் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப்படுவதில்லை. பெண் குழந்தைகளின் இறப்பு விகிதம் மிக, மிக அதிகமாக உள்ளது. ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையைவிட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. எதனால் இப்படி ஒரு வேறுபாடு என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன். கருத்தடைச் சாதனங்களைப் பயன் படுத்துதல் என்பது பெண்களின் மேல் தான் திணிக்கப்படுகிறது. ஆண்களின் அறுவைச் சிகிச்சை எளிதானதாகவும், பின் விளைவுகள் அற்றதாயும் இருந்தாலும், கருத்தடை அறுவைச் சிகிச்சைக்கு மிகப் பெரும்பாலான எண்ணிக்கையில் பெண்களே உட்படுத்தப்படுகிறார்கள். ஸ்டெரிலைசேஷன் (sterilization) எனப்படுகிற பெண்களுக்கான அறுவைச் சிகிச்சையின் பின் விளைவாக நூற்றுக்கு இரண்டு பெண்கள் இறந்து போகிறார்கள் என்று மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. இதை அறிந்துள்ள படித்த ஆண்களுக்குக் கூட, அவ்வாறு இறந்து போகிற இரண்டு விழுக்காட்டுப் பெண்களில் தன் மனைவியும் ஒருத்தியாக இருந்துவிடக் கூடுமே என்கிற உறுத்தலோ கவலையோ பொதுவாக இருப்பதாய்த் தெரியவில்லை. உண்மையில், மனைவிகள் மீது அன்பு இருந்தால், எளிய சிகிச்சைக்குத் தங்களை உட்படுத்திக்கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கையன்றோ அதிகமா யிருக்கும்? சாவு என்பது மட்டுமல்லாமல், கருப்பையில் கட்டி, புண்கள், புற்று நோய் ஆகியவற்றுக்கான சாத்தியத்தை இந்த அறுவைச் சிகிச்சை பெண்களிடம் ஏற்படுதிவிடுகிறது.
“அறுவைச் சிகிச்சை மட்டுமின்றி, கருத்தடை மாத்திரைகளும் பின்விளைவுகளைப் பெண்களிடம் ஏற்படுத்துகின்றன. இந்தக் குளிகைகள் கருப்பையில் உருக்கொள்ளும் கருவை அழிக்கவல்லவை. எனவே, கரு உருக்கொண்டதா இல்லையா என்பதை உடனடியாக அறிய வழியற்ற நிலையில், ஒவ்வோர் உடலுறவின் போதும் இக்குளிகையை விழுங்குமாறு பெண் போதிக்கப் படுகிறாள். ஆனால், கருப்பையில் அழிப்பதற்குக் கரு உருக்கொள்ளாமற் போனால், இம்மாத்திரைகள் கரு உருக்கொள்ளும் கருவகத்தையே (ovary) அரிக்க முற்படுகின்றன. இதன் விளைவாகக் கருப்பையில் புண்களும், காலப் போக்கிலான புற்று நோயும் இரத்தக் கசிவும் ஏற்படுகின்றன. இவற்றையெல்லாம் மனைவி மீதான மெய்க்காதலோடு எண்ணிப் பார்த்து விஷயமறிந்த கணவன்மார்கள் கூடத் தாங்கள் தடுப்பு உறையைப் பயன்படுத்தப் பெரும்பாலும் முன்வருவதில்லை. இவற்றை யெல்லாம் எடுத்துச் சொன்னால் நாங்கள் பொல்லாத பெண்கள்! வெட்கமற்றவர்கள்!
கருத்தடை மாத்திரைகளைத் தயாரிக்கிற பண முதலைகளிடம் கையூட்டுப் பெற்றுக்கொண்டு, அவற்றை உட்கொள்ளுவதால் எந்தப் பின்விளைவோ அபாயமோ இல்லை என்கிற மருத்துவர்களின் சப்பைக்கட்டு அறிக்கைகள் வேறு! .. .. ..
“சாப்பாட்டு விஷயத்தில், ஆணுக்குத்தான் முன்னுரிமை பல குடும்பங்களில் இன்றைக்கும் அளிக்கப்படுகிறது. நியாயப்படி, உயிர்களை உற்பத்தி செய்யும் பெண்ணே உணவு விஷயத்தில் அதிக முக்கியத்துவம் பெற வேண்டும். அப்படி யில்லாவிட்டாலும், ஆணுக்குச் சமமாகவாவது சாப்பாட்டு விஷயத்தில் அவள் நடத்தப்பட வேண்டாமா?
“.. .. .. அடுத்து, பெண்கள் அனைவருக்கும் தற்காப்புக் கலை கற்பிக்கப்பட வேண்டும். பள்ளிப் பருவத்திலேயே அவர்களுக்குக் கராத்தே சொல்லித்தரப்பட வேண்டும். மேல்நாட்டாரின் கூற்றான ‘பெண்கள் ஆண்களைவிடவும் சிறந்த பாதியினர் – The better half – என்பதை ஒப்புக்கொள்ளாவிட்டாலும், குறைந்த பட்சம் ஆண்களைக் காட்டிலும் தாழ்ந்தவர்கள் அல்லர் என்பதையேனும் ஆண்கள் ஒப்புக்கொள்ளவேண்டும்! என்னருமைச் சகோதரர்களே! இந்தக் கூட்டத்தில் என் பேச்சிடையே அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. நையாண்டி ஓலங்களும், நக்கல் ஊளைகளும் கேட்கின்றன. உங்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல், எங்களால் எங்களது இலக்கை யவைய முடியாது என்பதால்தான், நாங்கள் எங்கள் இயக்கத்தில் கணிசமான அளவுக்கு ஆண்களையும் சேர்த்துக் கொண்டிருக்கிறோம். .. .. உங்களில் இன்னும் மிகப் பெரிய அளவில் – மிக அதிக எண்ணிக்கையில் – எங்கள் இயக்கத்தில் சேர்ந்து எங்களுக்கு ஆதரவு தர வேண்மென்று பணிவன்புடன் கேட்டுகொள்ளுகிறேன். ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்துதான் நாம் எல்லாரும் வந்தோம் என்பதை நாம் மறத்தலாகாது. .. ..” என்று தமது மிக நெடிய சொற்பொழிவிடையே அவர் குறிப்பிட்டார்.
மேலும் சில மாநில இயக்கத் தலைவர்கள் பேசிய பிறகு, துர்க்கா பேச முற்பட்டாள்: “எனது சொற்பொழிவு முடிந்த பிறகு கூட்டத்தினர் என்னைக் கேள்விகள் கேட்கலாம். எங்கள் இயக்கம் தப்பாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அது சம்பந்தமான கேள்விகளை வரவேற்கிறேன்.. .. ..” என்று உரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட பிறகு, தனது பேச்சிடையே பின் வருமாறு குறிப்பிட்டார்:
“தாம் எழுதிய ராமாயணத்தின் பின்னுரையில் ராஜாஜி, ‘சீதையின் துயரம் இன்னும் முடியவில்லை. அது நம் பெண்களின் துயரங்களில் இன்னமும் தொடர்கிறது’ எனும் பொருள்பட மனம் வருந்தி எழுதியுள்ளார். அது உண்மைதான் என்பதையே இன்றளவும் நடந்துவரும் நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன. ராவணர்களின் தொகை மட்டும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகிறது. திரௌபதிகளின் தொகையும்தான்! ராமர்களைத்தான் காணவே யில்லை! பெண் என்பவள் ஒரு நுகர்பொருளாகவே கருதப்பட்டு வருகிறாள். அது மட்டுமின்றி, அவள் ஓர் உடைமையாகவும் கருதப்படுகிறாள். ஆடுமாடுகளை விற்பது போல் அவளை விற்கும் உரிமை தங்களுக்கு உண்டு என்று இன்னமும் சில ஆண்கள் நினைப்பதாகத் தெரிகிறது. அந்த அளவுக்கு நினைக்கிற ஆண்கள் குறைவு தானென்றாலும், அவள் ஓர் உடைமை என்கிற மனப்பான்மை அவர்களில் பெரும்பாலோரிடம் இருந்து வருகிறது என்பது கசப்பான உண்மையாகும். மறைந்த நம் பிரதமர் – அஸ்ஸாமிலா, வங்களாத்திலா என்று ஞாபகமில்லை – ஒருவன் தன் குடும்பச் செலவுக்காகத் தன் சொந்தத் தங்கையை முன்னூறு ரூபய்க்கு விற்றான் என்பதை அறிந்து கண் கலங்கிய செய்தி ஒரு பத்திரிகையில் சில நாள் முன்பு வந்ததைப் படித்திருப்பீர்கள். ஆளை விற்பது என்று வரும்போது பெண்ணைத்தான் விற்கிறார்கள்! இல்லையா? தேசத்தின் ஏதோ ஒரு மூலையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நான் பெரிது படுத்துவதாக நினைக்கக்கூடாது. இது போல் ஆங்காங்கு நிகழ்ந்தவாறுதான் உள்ளது. பத்திரிகைகளில் இச் செய்திகள் அரிதாக வருகின்றனவே தவிர, இவை நிகழ்வது அரிதாகவன்று. ஓர் ஆங்கில நாளேட்டின் நிருபர் ஒருவர் வடக்கே சென்று தாமே ஒரு பெண்ணை விலைக்கு வாங்கிவந்து அந்த அவலத்தை மெய்ப்பித்ததை நினைவூட்ட விரும்புகிறேன். சூதாடிகள் இன்றளவும் ஆங்காங்கு பெண்களைப் பந்தயப் பொருளாக்கி விளையாடிக்கொண்டுதான் இருக்கிறர்கள். மகாபாரதக் காலத்தில் நிலவிய அவ்வநியாயம் இன்னும் எத்தனை நாள்களுக்குத் தொடரப் போகிறதோ, தெரியவில்லை.
“.. .. அநேகமாக, எல்லாருடைய பேச்சுகளுமே வரதட்சிணையைத் தொட்டன. ஒருவன் படித்தவனாக இருப்பதற்கும், வரதட்சிணை கேட்கிற தவற்றை அவன் செய்வதற்கும் எந்தச் சம்பந்தமும் இருப்பதாய்த் தெரியவில்லை. ஆணின் படிப்பு எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாக உள்ளதோ, அவ்வளவுக் கவ்வளவு அவன் வாங்குகிற வரதட்சிணைத் தொகையும் அதிகரிக்கிறது! இதுவே நடைமுறையா யிருந்து வருகிறது. வரதட்சிணைக்கு மாமியாரைக் குறை சொல்லுவதும் வழக்கமாகி வருகிறது. மாமியார் ஒரு பெண் என்பதால் நான் அவளுக்குப் பரிந்துகொண்டு வருவதாக யாரும் தயவு செய்து நினைக்கவேண்டாம். தப்பு என்பது அதை யார் செய்தாலும் தப்பே! ஆனால், பிள்ளையைப் பெற்றவள் தன் மகனை இன்னொருத்திக்குக் கொடுப்பதற்கு விலை கேட்பது எதனால் என்பதை நாம் யோசித்துப் பார்த்தால், அதன் பின்னணியில் ஆண்கள் இருப்பது புரியும். பெண்ணைக் காட்டிலும் ஆணே சிறந்தவன், உயர்ந்தவன் என்று அநாதிகாலந்தொட்டு ஆண் பெண்ணுக்குச் சொல்லி வந்துள்ளான். தன் உடல் வலிமை ஒன்றால் மட்டுமே அவனால் அப்படி ஓர் எண்ணத்தைப் பெண்ணின் மனத்தில் உருவாக்க முடிந்துள்ளது. மற்ற யாவற்றிலும் அவள் ஆணைவிடவும் மேன்மையானவள் என்பதை அவன் சாமர்த்தியமாக இருட்டடிப்பும் செய்தான். அவளுக்கென்று இருந்திருக்கக்கூடிய எண்ணங்களையும் தன் உடல் வலிமை கொண்டு அவனால் வீழ்த்த இயன்றுள்ளது! கல்வி மறுப்பின் மூலம் சுய சிந்தனையும் அவளுக்கு மறுக்கப்பட்டு வந்துள்ளது. இவ்வாறு, பெண்ணை விடவும் ஆணே சிறந்தவன் என்று காலங்காலமாக நம்ப வைக்கப்பட்டுவிட்ட பெண் தான் பெறும் ‘பெண்ணைக்காட்டிலும் உயர்ந்த’ தன் மகனை மற்றொரு பெண்ணுக்குத் தருகையில் அவனுக்கு ஒரு விலையை வைக்க முற்பட்டதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை! எனவே மாமியார்க்காரியின் வரதட்சிணை வாங்கும் போக்குக்குப் பொறுபேற்க வேண்டியவன் ‘பெண்ணை விட ஆண்தான் உயர்ந்தவன்’ என்று பொய் சொன்ன ஆணே யாவான்!” என்று அவள் குறிப்பிட்டபோது பெண்கள் கைதட்டினார்கள்.
– தொடரும்
jothigirija@vsnl.net
- புது வழித்தோன்றல்!
- சூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, காலநிலை மாறுதலுக்குக் காரணமான பூகோளச் சுழற்திரிபுகள் -7
- கடந்த திண்ணையிதழில் வெளிவந்த நண்பர் நேசகுமாரின் ‘எண்ணச்சிதறல்கள்’ பற்றி…..
- நேச குமார் மற்றும் ஜெயமோகன் பார்வைகளுக்கு
- மந்திரவாதி அம்மாவை அடிக்கணுமா?
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-12)
- கீதாஞ்சலி (84) – பிரிவுத் துயர்..!
- கல்வெட்டாய்வு: ஸானான் வர்த்தினை
- எண்ணச் சிதறல்கள் – இளைய தலைமுறை, ரீடா கோத்தாரி, தி எகனாமிஸ்ட், அருண் ஷோரி, இஸ்ரேல் ஷங்கர், சின்னக் கருப்பன், அல்லாஹ¥ அக்பர்!
- பெரியபுராணம் – 98 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- ஏன் தற்கொலை?
- கவிதைகள்
- கடிதம்
- களையிழந்தக் கச்சேரிகள்
- ஒப்புக்கொண்ட உண்மை
- வடக்கு வாசல் – இசை விழா – நினைத்தாலே இனிக்கும்
- பெண் போனால் . . .
- Screening of ‘a little dream’ a docu-film on Dr.APJ.Abdul Kalam
- கடித இலக்கியம் – 16
- இஸ்லாமிய தீவிரவாதத்தைப் பூசி மெழுகும் இப்னு பஷீர்
- கண்களைத் திறக்கும் கலை – (மலரும் மணமும் தேடி – பாவண்ணனின் கட்டுரைத் தொகுப்பு அறிமுகம் )
- அம்பேத்கரின் பன்முகம் – நூல் அறிமுகம்
- மறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம் – 32
- கோயில்கள், பெண்கள், மொழி,வழிபாடு : சர்ச்சைகளும், புரிதல்களும் -2
- புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 7 : தேவ லோக இசை
- 2006 தேர்தல் / சில குறிப்புகள்
- உள்நாட்டு இஸ்லாமிய ஜிகாதி தீவிரவாதத்தின் கோர முகம் தோலுரிக்கப் பட வேண்டும்
- தமிழ் இசை , தமிழர் இசை, தமிழ் மொழி , தமிழர் மொழி
- இஸ்லாமியருக்கெதிரான இந்துத்துவ சூழ்ச்சிகள்!
- தோழர் யேசுவுடன் பேசாது திருமபிய இரவு
- தாய் வீடு
- அட்லாண்டிக்குக்கு அப்பால்
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 10. நம்பிக்கைகள்