எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-10)

This entry is part [part not set] of 20 in the series 20060721_Issue

சி. ஜெயபாரதன், கனடா


“எனது மரணத்துக்கு நான் மணமகன்! காதலியின் மெத்தைக்கு ஆசைப்படுவது போல் நான் மரணத்தை நோக்கி விரைகிறேன்.” … (கிளியோபாத்ரா)

“எல்லாவிதப் பயங்கரமான அதிசயச் சம்பவங்களை வரவேற்கிறோம்! ஆனால் ஆறுதல் மொழிகளை அறவே வெறுப்போம்.”

வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]

“துக்கமுற நான் எந்த தளத்தையும் விட்டு வைக்க வில்லை! அதற்கென எந்த அறையும் எனக்கில்லை! போகும் பாதையில் வேதனையும், பேரிழப்புகளும் எனக்காகக் காத்திருப்பதை நான் முன்பே எதிர்பார்த்திலேன்.”

கிளாடிஸ் லாலெர் [Gladys Lawler (Age: 93)]

“உனது கப்பல் நுழைவதற்கு நீ முதலில் துறைமுகம் ஒன்றைக் கட்ட வேண்டும்.”

கே அல்லென்பாக் [Kay Allenbaugh, Author of Chocolate for a Woman’s Soul]

“இடையூறுகள் என்னை ஒருபோதும் நசுக்குவதில்லை. ஒவ்வோர் இடையூறும் தீர்வு காண்பதற்கு சவால் விடுகிறது. எவன் ஒருவன் விண்மீன் ஒன்றின் மீது கண்வைத்து விட்டானோ, அவன் அந்தக் குறிக்கோளிலிருந்து என்றும் விட்டு விலகுவதில்லை.”

லியனார்டோ டவின்ஸி, ரோமானிய ஓவிய மேதை (1452-1519)

“நம்மில் பலருக்குப் பெருத்த ஏமாற்றமாவது, ஒருவர் குறிக்கோளை உயரத்தில் வைத்து விட்டு, முடிவில் அவர் குறைவாகச் சாதிப்பதிலில்லை! குறிக்கோளைத் தணிவாக வைத்து, அதை ஒருவர் வெற்றிகரமாகச் செய்து காட்டுவதுதான்.”

மைக்கேலாஞ்சலோ ரோமானிய ஓவிய மேதை (1475-1564)

கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!

முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் அண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த அண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. அண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் அண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை அண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன அண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.

அங்கம்: 2 பாகம்: 10

நாடகப் பாத்திரங்கள்:

ஜூலியஸ் சீஸர்: ரோமானியப் போர்த் தளபதி [52 வயது]
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி [20 வயது]
டாலமி XIV: கிளியோபாத்ராவின் தனயன் (கணவன்), எகிப்தின் மன்னன் [15 வயது]
பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா [45 வயது]
போதினஸ்: டாலமியின் பாதுகாப்பாளன் [50 வயது]
தியோடோடஸ்: டாலமியின் ஆசிரியர் [45 வயது]
அக்கில்லாஸ்: டாலமியின் போர்த் தளபதி [53 வயது]
பிரிட்டானஸ்: சீசரின் அரசாங்கச் செயலாளர் [40 வயது]
ரூ·பியோ: சீஸரின் லெ·ப்டினன்ட் [40 வயது]
லூசியஸ் ஸெப்டிமியஸ்: ரோமானிய இராணுவ அதிகாரி [50 வயது]
அபெல்லோடோரஸ்: ஸிசிலியன் கம்பள வாணிகன்.

மற்றும்:
பெல்ஸானர்: கிளியோபாத்ராவின் காவலர் காப்டன் [35 வயது]
பெல் அ·ப்பிரிஸ்: மெம்·பிஸ் ரா தேவாலயத்தின் மதாதிபதி.
ரோமானியப் படையாளிகள்.
கிளியோபாத்ராவின் அடிமைச் சேடிகள்.
எகிப்தின் படையாளிகள்

நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. ·பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: ஜூலியஸ் சீஸர், மெய்க்காப்பாளி, கிளியோபாத்ரா, சேடியர்.

காட்சி அமைப்பு: கிளியோபாத்ரா, டாலமியை அகற்றி விட்டுத் தன்னை எகிப்துக்கு ராணியாக்க சீஸரை வேண்டுகிறாள். சீஸர் கிளியோபத்ராவின் அறிவையும், திறமையையும் மெச்சி அவளை ராணியாக்க ஒப்புக் கொள்கிறார். சீஸரின் பகைவனும், மருமகனுமாகிய ரோமாபுரித் தளபதி பாம்ப்பியை டாலமியின் படையினர் இரகசியமாகக் கொன்றதை அறிந்து சீஸர் வேதனைப் பட்டுக் கோபம் அடைகிறார். டாலமியும் அவரது ஆலோசகரும் அதற்குத் தண்டனை அடைகிறார். மனம் மகிழ்ந்து, கிளியோபாத்ரா தன் உடற் கவர்ச்சியால் வசீகரிக்கையில் சீஸர் காக்காவலிப்பு நோயால் தாக்கப்பட்டு, துடிப்புடன் தரையில் விழுகிறார். மருத்துவர் பணிக்குப் பிறகு சீஸர் படுக்கையில் புத்துயிர் பெற்று எழுந்து அமர்கிறார்.

கிளியோபாத்ரா: [பக்கத்தில் அமர்ந்து கிளியோபாத்ரா பரிவுடன் சீஸரை நோக்கி] நேற்றிரவு முழுவதும் எனக்குத் தூக்கம் வரவில்லை! நான் சூரியக் கடவுளை வேண்டினேன்! உடல்நலம் பெற்று நீங்கள் உயிர்த்தெழ வேண்டுமென்று! நீங்கள் ஆழ்ந்து தூங்கினீர்களா? உங்களுக்குப் பாதகம் ஏதாவது நேர்ந்தால் என் நிலைமை என்னவாகும் என்று சிந்தித்தேன்! தூக்கம் போய் ஏக்கம் பற்றிக் கொண்டது. நீங்கள் என்னைப் பிரிந்து போய்விடுவீரோ என்று அச்சம் உண்டாகிறது! எகிப்தின் அரசியானாலும், தனியாக உள்ள எனக்கு நீங்கள்தான் தக்க துணைவர்! சீஸரின் பராக்கிரமக் கரங்களுக்குள் நான் அரண் கட்டி வாழ விரும்புகிறேன்! கனல்மிக்க உங்கள் மார்பின் மீது, என் கண்கள் தொட்டில் கட்டித் தூங்க வேண்டும்! நான் உங்கள் அடிமை அரசி! உங்கள் துணையில் உயிர் வாழும் எனக்குத் துடிக்குது, உங்களுக்கு எதுவும் நேரக் கூடாது!

ஜூலியஸ் சீஸர்: [கனிவுடன்] கண்மணி கிளியோபாத்ரா! நான்தான் உன் அடிமைத் தளபதி! ரோமாபுரியை மறக்க வைத்தவள் நீ! மனைவி கல்பூர்ணியாவை மறக்க வைத்தவள் நீ! தீயாய்ச் சுடும் அலெக்ஸாண்டிரியாவைத் தேனாய் ஆக்கியவள் நீ! ரோமாபுரி மாவீரன் உன் விழிகளுக்கு அடிமை! சீஸருக்குப் பாதகமாய் ஏதும் நிகழாது! நானிந்த இழுப்பு நோயிக்கெல்லாம் அஞ்சுபவனில்லை! நீ ஏன் எனக்காகப் பயப்படுகிறாய்? காக்காய் வலிப்பு நோயோடு நான் பல்லாண்டுகள் வாழ்ந்து விட்டேன்! அஞ்சாமல் போரிட்டு, ரோம சாம்ராஜியத்தை எத்தனை பெரிதாக ஆக்கி விட்டேன் தெரியுமா? நான் போய்விட்டால் உனக்கு என்னவாகும் என்று அஞ்சுகிறாய்?

கிளியோபாத்ரா: என் விஷமத் தமையன் டாலமி உயிரோடிருக்கிறான்! அவன் வாழும் வரையில் என்னுயிர் அங்குமிங்கும் ஊசலாடிக் கொண்டிருக்கும்! அந்த மிருகங்கள் உயிரோடுள்ளவரை எனக்குச் சரியாகத் தூக்கம் வராது!

ஜூலியஸ் சீஸர்: டாலமியைப் பற்றி உனக்கினிக் கவலை வேண்டாம்! நேற்று மாலையில் அவனை ரோமானியப் படையாளர் விரட்டிச் செல்லும் போது, அவன் நைல் நதியில் குதித்து மூழ்கிப் போனதாகச் செய்தி வந்துள்ளது! அவனது உடம்பு ஒருவேளை கடலுக்குள் சங்கமம் ஆகியிருக்கலாம்! அல்லது முதலைகளின் அடிவயிற்றில் செறிக்கப் பட்டிருக்கலாம்! போதினஸ், தியோடோடஸ், அக்கிலஸ் அனைவரும் கொல்லப் பட்டார். உனக்கோ அல்லது உன் மகுடத்துக்கோ இனி எதிரி யாருமில்லை, கிளியோபாத்ரா!

கிளியோபாத்ரா: [பெருமூச்சு விட்டு] நன்றி சீஸர் அவர்களே! நன்றி! மிக்க நன்றி! நானார்க்கு மினி அஞ்ச வேண்டியதில்லை! எகிப்தின் ஏகப்பெரும் அரசி கிளியோபாத்ரா வென்னும் போது, என் மெய் சிலிர்க்கிறது! என் பரம்பரையான ·பாரோ மன்னரின் கால்தடத்தில் நடக்கிறேன் என்னும் போது, என் மேனி நடுங்குகிறது! என் கனவு நிறைவேறியது, உங்களால்! கிளியோபாத்ரா கட்டுப்பட்டவள் உங்களுக்கு! கடமைப் பட்டவள் உங்களுக்கு! மகாவீரர் சீஸரே, உமக்கு நன்றி! உலகைக் கைக்கொள்ளும் தொடர்க் கனவை நிறைவேற்ற உதவப் போகிறேன் உங்களுக்கு!

ஜூலியஸ் சீஸர்: [தயக்கமுடன்] கிளியோபாத்ரா! உனக்கு வயது 20! எனக்கு வயது 52! எனது போர்க் கோலப் பராக்கிரம வயது போய் விட்டது! நானினிப் பெரும் போர் புரியப் போவதில்லை!

கிளியோபாத்ரா: [அரண்மனைப் பீடத்தில், பளிங்குப் பேழையில் வைக்கப்பட்ட காலஞ்சென்ற அலெக்ஸாண்டர் உடலைக் காட்டிச் சீஸரை அழைத்துச் சென்று] பாருங்கள்! மகாவீரர் அலெக்ஸாண்டரை! முப்பதியிரண்டு வயதில் அவர் ஒருவர் சாதித்ததை நாமிருவரும் சமாளிக்கப் போகிறோம்! நமது சராசரி வயது, 36. உங்களால் என் வயது முதிர்ச்சியாகி ஏறுகிறது! என்னால் உங்கள் முதிய வயது இளமையாகிறது! அவரது கனவை முடிக்க வேண்டியது உங்கள் கடமை! என் கடமையும் கூட! அதாவது நம் கடமை! வரலாற்றுப் புகழ் பெற்ற அவரது வாளை உங்களுக்குப் பரிசாகத் தரப் போகிறேன்.

ஜூலியஸ் சீஸர்: [அலெக்ஸாண்டர் பேழையைத் தொட்டுப் பெருமையுடன் கண்ணீர் சிந்தி] வேண்டாம் கிளியோபாத்ரா! புதைந்து போன அவரது வாளைக் கையில் தொடத் தகுதியற்றவன் நான்! அலெக்ஸாண்டர் அல்லன் நான்! அவர் பற்றிய வாள் எனக்குக் கனமாகத் தெரிகிறது!

கிளியோபாத்ரா: பேழைக்குள்ளிருக்கும் அலெக்ஸாண்டர் உடலைப் பார்த்து எதற்காகக் கண் கலங்குகிறீர்?

ஜூலியஸ் சீஸர்: கிளியோபாத்ரா! இந்தியாவின் வடபகுதியை வென்று, வெற்றிமாலை சூடிய மகா வீரர் அலெக்ஸாண்டர் சாகும் போது அவருக்கு வயது 32! இப்போது எனக்கு வயது 52. அலெக்ஸாண்டரின் கனல் பறக்கும் நெஞ்சத்தை நானிழந்து விட்டேன்! எனது கண்கள் வெந்நீரைக் கொட்டுகின்றன, அதனால்! எனக்கு 32 வயதாகிய போது, ஸ்பெயினைக் கைப்பற்றப் போனேன். அப்போதும் அங்கிருந்த அலெக்ஸாண்டர் சிலையைக் கண்டதும், இதேபோல் நான் அழுதேன்! அவரது பராக்கிரம் எனக்கில்லை என்றுதான்! எனது வாழ்நாள் காய்ந்து முற்றிப் போனதென்று நான் அழுதேன்! அவர் உலகைக் கைப்பற்றினார்! ஆனால் உலகு என்னைக் கைப்பற்ற முயல்கிறது என்று நான் அஞ்சுகிறேன்!

கிளியோபாத்ரா: [சீஸரின் கண்ணீரைத் தனது துணியால் துடைத்து] அலெக்ஸாண்டரின் மறுபிறவி என்று நீங்கள் எண்ணிக் கொள்ளுங்கள்! அவரது கனவுகளை உங்கள் கனவாக்கிக் கொள்ளுங்கள். அவருடைய வாள் உங்களது வெற்றி வாளாகட்டும்! அவர் விட்டுச் சென்ற ஆசிய முனையிலிருந்து தொடரட்டும் உங்கள் படையெடுப்பு! இந்தியாவுக்குச் செல்லும் பாதை எனக்குத் தெரியும்! அலெஸாண்டரின் போர்த்தளப் படம் என்னிடம் உள்ளது!

ஜூலியஸ் சீஸர்: [சிந்தனையுடன்] ஆச்சரியமாக உள்ளது! கிளியோபாத்ரா! இருபது வயதில் உனக்குத் தெரிந்துள்ள போர் ஞானம் வேறு யாருக்கும் கிடையாது! ஆனால் அலெக்ஸாண்டருடைய வாள் எனக்குக் கனமாய்த் தெரிகிறது! உலகப் பேராசை ஆக்கிரமிப்பில் அலெக்ஸாண்டர் தோல்வி அடைந்தார்!

கிளியோபாத்ரா: அவர் வயது 32! உங்கள் வயது 52! அவருக்குப் போர்ப் பண்பில் கொளுந்து விட்டெரியும் மனப்போக்கிருந்தது! ஆனால் உங்களுக்கு அவரை விட 20 வருடப் போர் அனுபவம் உள்ளது! அலெக்ஸாண்டர் எப்படி இறந்தார் என்று அறிவீரா? வட இநெதியாவைக் கைப்பற்றிய அலெக்ஸாண்டர் மேற்புறப் பகுதியில் செல்லும் போது, அங்குள்ள விஷக் கொசு கடித்துச் கடும் காய்ச்சலில் திரும்ப வேண்டியதாயிற்று! பிறகுப் போரிடும் பராக்கிரம மிழந்தார். கடும் காய்ச்சலுக்குச் சிகிட்சை யில்லாமல் கடைசியில் செத்து விட்டார். அது ஒருவித மரணக் கொசு என்று கேள்விப் பட்டேன்! அலெக்ஸாண்டரின் அசுர வல்லமை உங்களுக்கு உள்ளது. அவர் விட்டுச் சென்ற இடத்திலிருந்து தொடங்குவீர்! ரோமானியப் படையுடன் எகிப்தின் படையும் ஒன்றிணைந்து போரிடும்! மகாவீரர் சீஸரே! உலகம் நமது கைகளில்! நீங்களும், நானும் ரோமாபுரிக் கடியில் உலகை ஒன்றாக்குவோம்! இந்தப் பூமியில் ஒரே உலகம்! ஒரே நாடு! ஒரே மக்கள்! சமாதானமாக அனைவரும் வாழ்வோம் போரின்றி.

ஜூலியஸ் சீஸர்: [சினத்துடன்] ஓ! தெரிந்து கொண்டேன். அதுதான் நீ என்னிடம் எதிர்பார்ப்பதா? அதற்குத்தான் நீ என்னை உருவாக்குகிறாயா? பலே கிளியோபாத்ரா! நானொரு ரோமன்! அலெக்ஸாண்டரைப் போலக் கிரேக்கன் அல்லன்! ஒரே உலகம்! ஒரே நாடு! ஒரே மக்கள்! நல்ல சிந்தனைதான்! ஆனால் அது வெறும் கனவு! நடக்காத கனவு! அந்த உலகத்தின் தலைநகர் உனது அலெக்ஸாண்டிரியாவா?

கிளியோபாத்ரா: [ஆங்காராமாக] அந்த உலகுக்கு எனது அலெக்ஸாண்டிரியா தலநகரில்லை! உங்கள் ரோமாபுரிதான் தலைநகர்! ஒரே உலகை ஆக்கப் போன அலெக்ஸாண்டர் தோல்வி யுற்றார்! ஆனால் நம்மிருவர் முயற்சியில் வெல்வோம், நிச்சயம்! அலெக்ஸாண்டர் கிரேக்கர்! நீங்கள் ரோமானியர்! நான் எகிப்திய மாது! அதனால் என்ன? அலெக்ஸாண்டரின் போர்ப்படை மாஸபடோமியாவிலிருந்து கிளம்பியது! நமது படைகள் ரோமிலிருந்து புறப்படட்டும்! ரோமும், எகிப்தும் இரட்டைக் காளைகள் போல் இரட்டை வலுவுடன், இருமடங்கு படைகளுடன் போரிடும்! அதனால் நமக்கு வெற்றி உறுதி! அலெக்ஸாண்டர் வாளை நாமிருவரும் தூக்கிச் செல்வோம்! [கிளியோபாத்ரா விரைந்து சென்று சீஸரின் தோள்களைப் பற்றிக் கொண்டு பதிலை எதிர்பார்க்கிறாள்]

ஜூலியஸ் சீஸர்: [கனிந்து போய் கிளியோபாத்ராவை அணைத்துக் கொண்டு] மாபெரும் போர் ஞானி நீ என்பதை அழகாகக் காட்டி விட்டாய், கிளியோபாத்ரா! அரசியலையும், உணர்ச்சியையும் ஒன்றாக்க முயல்கிறாய் நீ! அவை யிரண்டும் ஒன்று சேரா! அரசியல் ஒருபுறம் நுழையும் போது, உணர்ச்சி மறுபுறம் வெளியேறும் என்று உனக்குத் தெரியாதா? என்னுடைய விதியில் கையில் என்னை விட்டுவிடு! எனக்கு வயது 52! அலெக்ஸாண்டருக்கு அப்போது வயது 32! அவரது பாதையைக் காட்டி என் பாதையை மாற்ற முற்படாதே! அவர் போன பாதை தோல்விப் பாதை! தோல்விப் பாதையைப் பின் தொடர்ந்து, நான் எப்படி வெற்றிப் பாதை ஆக்க முடியும்?

கிளியோபத்ரா: உங்களுடன் நான் ஒன்று சேர்வதால் நமது பாதை வெற்றிப் பாதையாக மாறும்! தோல்வி என்பது என் அகராதியில் இல்லை! வீழ்ச்சி என்பது உங்கள் அகராதியில் இல்லை! என் சிந்தனை முற்போக்கான சிந்தனை! அலெக்ஸாண்டரின் போரங்கி உங்களுக்குப் பொருந்தும்! எகிப்துவரை பரவிய சீஸரின் பெயர் ஆசியா வெங்கும் பரவும்! நீங்கள் ரோமாபுரி, எகிப்த் நாடுகளுக்கு மட்டும் வேந்தர் அல்லர்! அரேபிய நாடுகள், இந்தியா, தாய்லாந்து, சைனா ஆகிய நாடுகளுக்கும் வேந்தராக ஆட்சி செய்வீர்! நீங்களும், நானும் ஆண்ட பிறகு, நமக்குப் பிறக்கும் ஆண்மகன் உலகை அரசாளுவான். மாவீரர் சீஸரே! நிச்சயம் நான் சொல்கிறேன்! நமக்குப் பிறப்பது ஆண்மகவே! அது மட்டும் உறுதி!

ஜூலியஸ் சீஸர்: [மகிழ்ச்சியுடன்] ஆண்மகவா? ஆனந்தம் அடைகிறேன்! என் மனைவி கல்பூர்ணியா அளிக்காத ஆண்மகவை நீ பெற்றுத் தருவாயா? எனக்கு மகிழ்ச்சியே! … ஆனால் ரோமாபுரி எப்படி என் ஆண்மகவை ஏற்றுக் கொள்ளுமோ தெரியாது? அவன் பாதி ரோமானியன்! பாதி எகிப்தியன் ஆயிற்றே! நான் ரோமுக்கு விரைவில் திரும்ப வேண்டும், கிளியோபாத்ரா?

கிளியோபாத்ரா: [அருகில் நெருங்கி மிக்கக் கனிவுடன்] ஆனாலும் அவன் உங்கள் மகன்! ரோமானிய மாது கல்பூர்ணியா அளிக்க முடியாத ஆண் பரம்பரையை, எகிப்தின் கிளியோபாத்ரா ஆக்கித் தருகிறாள்! மாவீரர் சீஸரே! நீங்கள் ரோமுக்கு மீள்வதைச் சற்று தள்ளிப் போடுங்கள்! எனக்கு உங்கள் கையால் எகிப்து மகாராணி என்று முதலில் மகுடம் சூட வேண்டும்! என் மாளிகையில் எனது சிறப்பு விருந்தினராகச் சில நாட்கள் தங்கிச் செல்ல வேண்டும்! எனக்குப் பிறக்கப் போகும் ஆண்மகவை உங்கள் ஆசைக் கரங்களில் முத்தமிடக் கொடுத்து நான் ஒப்படைக்க வேண்டும்! அதன் பிஞ்சு வாயில் தவழும் புன்னகையை நீங்கள் மனதில் படமெடுத்து ரோமாபுரிக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan July 19, 2006]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts