மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 28

This entry is part [part not set] of 30 in the series 20060707_Issue

ஜோதிர்லதா கிரிஜா


பங்கஜம் வியப்புடன் துர்க்காவை ஏறிட்டாள் : “எதுக்கு எங்காத்துக்காரரோட பேரைக் கேட்டே?”

“சும்மாத்தான். ஒருக்கா, தெரிஞ்சவாளா யிருக்குமோன்னு பாக்கறதுக்கோசரந்தான்.”

“செங்கல்பாளையத்துல நோக்கு யாரையாவது தெரியுமா, என்ன?”

“இல்லே. தெரியாது. ஆனா, பக்கத்துப் பக்கத்து ஊரானதுனால, கேள்விப்பட்ட பேரா இருக்கலாமோங்கிறதுக்காகக் கேட்டேன். என்ன பேருன்னு சொன்னேள்? சாமிநாதன்னு தானே?”

“ஆமா. “

“அவருக்கு வேற ஏதாவது பேரும் உண்டா? .. .. அதாவது சில குடும்பங்கள்ளே ரெண்டு பேரு வைப்பா இல்லியா?”

“இல்லேம்மா.. .. முன்னே யெல்லாம் ஆத்துக்காரர் பேரைச் சொல்றதுக்கே வாய் வராது. பொம்மனாட்டிகள் புருஷா பேரைச் சொல்லப்படாதுன்னு வெச்சிருக்காளே! ஆனா, இப்ப – இங்கே வந்தாவுட்டு – அந்தக் கூச்சமெல்லாம் போயிடுத்து. அதுல எல்லாம் என்னம்மா இருக்கு?.. .. ஆமா? நீ எதுக்காக அவருக்கு இன்னொரு பேரு உண்டான்னு கேக்கறே?”

“விசேஷமான காரணம் ஒண்ணுமில்லே. இன்னொரு பேரு இருந்தா, அந்தப் பேருள்ளவா நான் கேள்விப்பட்ட ஆளா யிருக்குமோன்னு தெரிஞ்சுக்கிறதுக்காகத்தான்.”

அதன் பின்னர் இருவரும் தத்தம் அலுவலில் ஆழ்ந்தார்கள். கணவன் பெயரைக் கேட்டதும் அவளையும் அறியாமல் அவள் வாயில் எந்தத் தயக்கமும் இன்றி வந்த பெயர் சாமிநாதன் என்பது¡ன்! ‘இப்போதுதான் அறிமுகம் ஆன புதுப் பெண்ணிடம் போய், ‘எனக்கு இரண்டு கணவன்மார்கள். முதல் ஆள் பெயர் தாசரதி. அந்த மனிதன் என்னைத் துரத்தி விட்டதால், இரண்டாவதாகச் சாமிநாதன் என்பவரை மணந்துகொண்டேன்’ என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா என்ன! அது பற்றி இவளுக்குத் தெரியவந்து அதற்குப் பிறகு கேட்டால் – அல்லது ஒரு நெருக்கம் விளைந்ததற்குப் பிறகு பேச்சுவாக்கில் – சொன்னால் போயிற்று. பெரிய சிதம்பர ரகசியம் பாழாய்ப் போகிறதா என்ன!’

சாமிநாதன் பற்றிய நினைவுகள் பங்கஜத்துள் மிகப் பெரிய அளவில் கிளர்ந்துகொண்டன. ‘எந்த ஜெயிலில் இருக்கிறாரோ? அல்லது விடுதலை யாகி வெளீயே வந்து என்னைத் தேடிக்கொண்டிருக்கிறாரோ! சேதுமாதவனை அவர் சந்திக்க வாய்த்தால் நான் இங்கே பத்திரமா யிருக்கும் விஷயம் அவருக்குத் தெரிய வரும். .. .. குழந்தை வளர்ந்திருப்பான் என்று எண்ணி அவனைப் பார்க்க எவ்வளவு ஆவலா யிருப்பார் அவர்! .. .. ..ஒரு வேளை நான் அவரை இரண்டாம் கணவராக ஏற்றது தப்போ? அதனால் தான் என் குழந்தையைப் பறித்து – அவரையும் என்னை விட்டுப் பிரித்து – பகவான் என்னைத் தண்டித்துவிட்டாரோ!” – பங்கஜம் முதன் முறையா யிவ்வாறு எண்ணிக் கண் கலங்கினாள்.

ஆனால், மறு கணமே சுதாரித்துக்கொண்டு, ‘அதெப்படித் தப்பாகும்? வரிசையாகப் பெண் பிறந்தது என்பதற்காக அவர் மட்டும் என்னை விரட்டியடித்துவிட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொள்ளலாமா? மறு கல்¡ணத்தில் எனக்குப் பிள்ளைக் குழந்தை பிறந்ததே! வரிசையாகப் பெண் குழந்தைகளாகவே பெற்றது என் உடம்பு வாகு என்று அவர்கள் சொன்ன காரணத்தைப் பகவான் பொய்யாக்கினாரே! புருஷர்கள் மட்டும் என்ன வேண்டுமானாலும் பண்ணலாமா? எந்தச் சட்டத்தில் அப்படி எழுதி வைத்திருக்கிறதாம்? அப்படியே எழுதி வைத்திருந்தாலும், அது மாதிரியான சட்டங்களை யெல்லாம் புருஷர்கள்தானே எழுதிவைத்தார்கள்? வாய்க்கு வாய், சிஸ்டர் பொருமுவது போல், பெண்கள் சம்பந்தபட்ட விஷயங்களில் கூட, புருஷர்கள் வைத்ததுதானே சட்டமா யிருந்து வந்திருக்கிறது! இது எந்த ஊர் நியாயம்?’

.. .. .. மார்கரெட்டுடன் மோட்டார் சைக்கிளில் உற்சாகமாக வீடு திரும்பிய சிவகுரு வீட்டில் எங்கும் துர்க்காவைக் காணாமல் திகைத்துத் திகிலுற்றான். அவள் வெளியே எங்கும் போக மாட்டாள் என்பதால், முதலில் கொல்லைப் பக்கம் சென்று சுற்றிப் பார்த்தான். அன்று காலையிலிருந்தே அவர்கள் வீட்டுக் கொல்லைக் கிணற்றில் சில பணியாளர்கள் தூர் வாரிக்கொண்டிருந்ததால், கிணற்றில் அவள் விழுந்திருக்க மாட்டாள் என்றெண்ணிய சிவகுரு சஞ்சலத்தில் ஆழ்ந்தான்.

தூர் வாரிக்கொண்டிருந்தவர்களை அணுகி, “அம்மா வெளியே எங்கேயாவது போனாங்களா?” என்று விசாரித்த சிவகுருவுக்கு, “நாங்க கவனிக்கலீங்களே, சாமி!” என்கிற பதிலே கிடைத்தது. அவன் பெருங் குழப்பத்துக்கும் பதற்றத்துக்கும் ஆளானான்.

வீட்டினுள் சென்று, “மார்கரெட்! இன்னைக்கு நாம ஹொட்டேலுக்குத்தான் (hotel) போகணும். அவளைக் காணோம். எங்கே போய்த் தொலைஞ்சான்னு தெரியல்லே,” என்றவாறு அவன் வீட்டின் கதவுகளைப் பூட்டுவதற்குத் தயாரானான்.

“எனக்குப் பயமாயிருக்கு, சிவா!.. அவ உங்க மேல கோவிச்சுக்கிட்டு பீச் கீச்னு எங்கேயாச்சும் போய்க் கடல்ல விழுந்து.. ..”

“அவளாவது கடல்ல விழுந்து சாகறதாவது! சரியான பயந்தாங்கொள்ளி! அதுக்கெல்லாம் அவளுக்குத் தைரியம் கெடையாது!” என்று பதில் சொன்ன போதிலும், அவனுக்கு உள்ளூற உதைப்பாகத்தான் இருந்தது.

“அதனாலதான், நான் வீட்டுக்கெல்லாம் வந்து தங்க மாட்டேன்னு சொன்னேன். நீங்க கேக்கல்லே. எந்தப் பொண்ணும் இன்னொரு பொண்ணோட தன் புருசன் தன் கண் முன்னாலேயே கொட்டம் அடிக்கிறதைச் சகிச்சுக்க மாட்டா, சிவா! எத்தினி வாட்டி நான் காஷன் (caution) பண்ணினேன்? நீங்கதான் கேக்கல்லே. இப்ப பாருங்க.”

“போனாப் போகட்டும், விடு. நாம ஜாலியா யிருக்கலாம். சும்மா பயங் காட்றா! எங்க போயிடுவா, கழுதை? ஒரு வேளைச் சோத்துக்குக் கூட நாதி யத்தவ! வா, வா!” என்ற சிவகுரு வாசற்கதவைப் பூட்டிக்கொண்டு அவளுடன் தெருவில் இறங்கினான். இருப்பினும், அவனது இதயம் தடதடத்துக்கொண்டிருந்தது. தற்கொலை செய்துகொள்ளுகிற அளவுக்குப் போவாள் என்பதை அவன் மனம் நம்ப மறுத்துச் சமாதானமுற முயன்றது. ஆனால் தோல்வியே அடைந்தது.

“ஏங்க! போலீஸ்ல சொல்லுவீங்களா?”

“இல்லே, மார்கரெட். ‘ரெண்டு நாள் பாத்துட்டுத்தான் சொல்லுவேன்.”

“உடனே ஏன் கம்ப்ளெய்ன்ட் (complaint) குடுக்கல்லேன்னு அவங்க கேட்டா?”

“அவளுக்கு மனநிலை சரியில்லே, அப்பப்ப அப்பிடித்தான் போய்ச் சுத்திட்டு ரெண்டொரு நாள் கழிச்சுத் திரும்புவா, அது மாதிரி எங்கேயோ பொயிருக்கான்னு நெனைச்சுட்டதாச் சொல்லிச் சமாளிப்பேன்.”

“நம்புவாங்களா?”

“நம்பாம என்ன? எதிர் வீட்டுல, பக்கத்து வீட்டுல எல்லாம் கூட லேசா மனநிலை சரியில்லாதவ, கொஞ்சம் ஏடாகூடமா நடந்துக்குற மாதிரி தெரிஞ்சா கவனிச்சு எனக்கு ·போன் பண்ணுங்கன்னு சொல்லி வெச்சிருக்கேன். எப்பிடி என்னோட முன் ஜாக்கிரதை?”

“அப்ப, முழு நேரத்துக்கும் அவங்களுக்குத் தொணைக்கு இருக்குறாப்ல ஒரு வேலைக்காரியை வைக்க வேண்டியதுதானேன்னு அவங்க கேக்கலையா?”

“கேட்டாங்கதான்! அது ஊருக்குப் போயிருக்கிறதாவும், வர்றதுக்குக் கொஞ்ச நாளாகும்னும் சொன்னேன். அவ ஒருத்தியாலதான் இவளைச் சமாளிக்க முடியும்னும் சொல்லி வெச்சிருக்கேன்.”

“நீங்க பெரிய ஸ்கீமர்தான் (schemer)! ஆனா எதுக்கு முன்கூட்டியே அப்பிடிச் சொல்லி வெச்சீங்க? அவங்க இது மாதிரி ஓடிப் போவாங்கன்னு உங்களுக்கு ஏற்கெனவே தெரியுமா?”

“தெரியாதுதான். ஆனாலும், உன்னை இங்க கூட்டிண்டு வர்றப்போ அவ ஏடாகூடமா ஏதாவது பண்ணிட்டா நான் சமாளிக்கணுமில்லே? அதுக்குத்தான் .. .. ..ஆனா ஒண்ணு. நாம சாப்பிட்டு முடிச்சதும் நீ உன்னோட ரூமுக்குப் போயிடு. அதை இப்போதைக்குக் காலி பண்ண வேண்டாம்னு நான் சொன்ன யோசனை சரியாப் போச்சு, பாத்தியா! உன்னாலதான் அவ ஓடிட்டான்னோ, இல்லே, தற்கொலை பண்ணிண்டான்னோ யாரும் குத்தம் சுமத்தமாட்டாங்கல்ல?”

“அடியம்மா! படா க்ரிமினல் (criminal) மூளைதான் உங்களுக்கு!”

சிவகுரு அந்தப் பாராட்டுக்கு மகிழ்ந்து சிரித்தான்.

.. .. .. அன்று மாலை, மார்கரெட்டின் அறைக்கு அவளுடைய (உண்மைக்) காதலன் வில்லியம்ஸ் வந்தான்.

“சிவகுரு வீட்டுக்குத்தான் மொதல்ல ·போன் பண்ணினேன். வழக்கம் போல உன்னோட கசின்னு (cousin) சொன்னேன். நீ இங்க திரும்பிப் போயிட்டதாச் சொன்னான், அதான் வந்தேன். எல்லாம் ரெடி பண்ணிட்டியா?”

“பண்ணிட்டேன். இவ்வளவு க்விக்கா (quick) பண்ண முடியும்னு நான் கொஞ்சங்கூட நெனைக்கல்லே, வில்லியம்ஸ்! எனக்கு ரொம்ப வசதியா ட்யூப்ளிகேட் (duplicate) சாவிக்கொத்து ஸ்டீல் பீரோவுக்குப் பின்னாடியே ஒரு ஆணியில தொங்கிட்டிருந்திச்சு. அவனே ஒளறினான் அது ட்யூப்ளிகேட் சாவிக்கொத்துன்னு! நைஸா எடுத்தாந்துட்டேன்.”

“நாளைக்கு நீ அவனோட கம்பெனியில வேலை பண்றப்ப, பகல் நேரத்துலயே என்னோட வேலையை நான் அவன் வீட்டுக்குப் போய் முடிச்சிர்றேன்!”

“ரைட்! ஆனா, இன்னிக்கு அவன் வீட்டுக் கெணத்துல தூர் வாரிக்கிட்டிருந்தாங்க. இன்னியோட வேல முடிஞ்சுடும்னுதான் பேசிக்கிட்டாங்க. எதுக்கும் நீ வீட்டுக்குள்ள நொழையிறதுக்கு முன்னாடி, ஆளுங்க இருக்காங்களான்னு நல்லாப் பாத்துட்டு வீட்டுக்குள்ள போ. என்ன?”

“சரி, மார்கரெட்! தேங்க் யூ! “

“அப்புறம், வெளிக்கதவுப் பூட்டு வெறுமன அமுக்கினாலே பூட்டிக்கும். அதனால ட்யூப்ளிகேட்டுகளைப் (duplicate) பழையபடியே ஸ்டீல் பீரோவுக்குப் பின்னாடி ஆணியில தொங்கவிட்டுட்டு நீ வெளியே வந்து பூட்டை அமுக்கிப் பூட்டிடலாம்.”

“அப்ப ஈஸி! அப்படியே வாசலுக்குப் போய்க் கதவைப் பூட்ட முடியாத படிக்கு ஏதாச்சும் எடைஞ்சல் வந்திச்சுன்னாலும், அதைப் பத்தி எனக்கென்ன? நான் பாட்டுக்குப் பின் பக்கமாக் கம்பி நீட்டிடுவேன்!”

.. .. .. மறு நாளுக்கு மறு நாள் வந்த சுதேசமித்திரனில் சிவகுருவின் வீட்டில் சுமார் இருபத்தைந்தாயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட செய்தியும், அவன் தன் மனைவியைச் சந்தேகிக்கிற செய்தியும் வெளியாகியிருந்தன. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்திய மகிழ்ச்சியில் மார்கரெட்டும் வில்லியம்சும் ஆழ்ந்தனர்.

.. .. சிவகுருவுக்காகப் போலியாய்க் கண் கலங்கியதற்குப் பிறகு அன்று மாலை தன் அறைக்குத் திரும்பிய மார்கரெட்டுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. தவிடுக்கில் செருகப்பட்டிருந்த கடிதத்தில், “டார்லிங்! (Darling) இருபத்தையாயிரத்துக்கு நன்றி! என் (உண்மையான) காதலி ரோசியுடன் நான் இணைவதற்கு நீ எனக்குச் செய்த இந்தப் பேருதவியை நான் என்றும் மறக்கவே மாட்டேன்! வடக்கே சென்று குஷியாக வாழ்க்கையைத் தொடங்குவேன். மீண்டும் உனக்கு நன்றி!’ என்றிருந்த ஆங்கில வாசகம் மார்கரெட்டை மூர்ச்சையுறச் செய்தது. எடுக்கப் போகும் பணத்திலும் பிறவற்றிலும் ஆளுக்குப் பாதி என்பதுதான் அவர்கள் செய்து கொண்டிருந்த ஒப்பந்தம். வில்லியம்சுக்கு இன்னொரு காதலி இருக்கும் விஷயமே அவளுக்கு அப்போதுதான் தெரிந்தது!

.. .. .. “காந்தி பத்தொம்பதாம் தேதி மெட்றாசுக்கு வர்றராம். நம்ம ஸ்திரீ சேவா மண்டலிக்கும் கூப்பிடலாம்னு ரொம்ப முயற்சி பண்ணினேன். ஆனா ரொம்பவே டைட் ஷெட்யூலாம் (tight schedule). வர முடியாதுன்னுட்டார். இருந்தாலும் அவர் இருக்கிற எடத்துக்கு நாம வந்து பாக்கலாம்னு அனுமதி குடுத்திருக்காராம். பங்கஜம்! நீயும் என்னோட வறே தானே?” என்று சிஸ்டர் முத்துலட்சுமி வினவியதும் பங்கஜம் தலைகால் தெரியாத உற்சாகத்தில் ஆழ்ந்தாள்.

“கரும்பு தின்னக் கூலியா, சிஸ்டர்? காந்தியைப் பாக்கணும், பாக்கணும்னு நேக்கு எத்தனை நாளா ஆசை தெரியுமா? .. .. அவரோட நாம பேச முடியுமா, சிஸ்டர்?”

“அதுக்குத்தானே போறோம்? சும்மா வாயைப் பொளந்துண்டு நின்னுண்டு அவரைப் பாத்துட்டு வர்றதுக்கா! அதுக்கு வெறும் காந்தி படத்தைப் பாத்தாலே போறுமே?”

“அவரை என்ன கேக்கப் போறோம், சிஸ்டர்?”

“பொண்ணுகளோட பிரச்னைகள் பத்தித்தான். நமக்கு மத்ததைக் காட்டிலும் அதில தானே இன்டெரெஸ்ட் (interest)? அவரும் இந்தியாவுக்கு வந்த கொஞ்ச நாள்லேயே வரதட்சிணை எதிர்ப்பு, பால்ய விவாக எதிர்ப்பு, பெண் கல்வி, விதவைகள் மறுமண ஆதரவுன்னு ஆரம்பிச்சு ஏதேதோ பண்ணிண்டிருக்கார். ஆனா, காந்திக்கு எல்லாரும் கை தட்றாளே ஒழிய, அவர் சொன்னதை அவாவா வாழ்க்கையில எங்கே பண்றாளாம்?”

‘அவ்வளவு சீக்கிரமா மனுஷா மாறுவாளா, சிஸ்டர்? கொஞ்சங் கொஞ்சமாத்தான் மாறுவா’ என்று எண்ணினாலும், சிஸ்டர் தன்னை அதிகப் பிரசங்கி என்று நினைப்பாரோ என்பதால், தான் எண்ணியதை வெளிப்படுத்தப் பங்கஜம் விரும்பவில்லை.

அவரவர், ‘காந்தியிடம் அப்படிக் கேள்வி கேட்கவேண்டும், இப்படிக் கேள்வி கேட்கவேண்டும்’ என்று தத்தம் மனத்துள் ஒத்திகை செய்து பார்க்கத் தொடங்கினார்கள்.

.. .. ·பிப்ரவரி மாதம் 19 ஆம் நாளன்று மகாத்மா காந்தி சென்னைக்கு வந்தார். அவர் தங்கி யிருந்த இடத்துக்கு விஜயநகரம் மகாராணியார் வந்து பார்த்துச் சென்றார். கூட்டமான கூட்டம்.

சிஸ்டர் முத்துலட்சுமி பங்கஜம், துர்க்கா, மற்றும் இரண்டு பெண்கள் ஆகியோருடன் அவரைச் சந்தித்தார். துர்க்காவுக்கும் பங்கஜத்துக்கும் மற்ற எவரையும் காட்டிலும் அதிகப் பரபரப்பு அவரைப் பார்த்த போது ஏற்பட்டது. தங்கள் வாழ்க்கையைப் பற்றி மிகச் சுருக்கமாய் அவரிடம் சொல்லி அவர் என்ன சொல்லுகிறார் என்று தெரிந்துகொள்ள இருவருமே விரும்பினார்கள். கணவன் உயிருடன் இருக்கையில் இன்னொருவரோடு தான் வாழ்ந்ததைக் காந்தி அங்கீகரிப்பாரா என்பது பங்கஜத்தின் ஊகிக்கும் திறனுக்கு அப்பாற்பட்டதா யிருந்தது. எதிர்ப்பாய் ஏதேனும் சொல்லிவிட்டால் தன் மனம் அமைதி யிழந்து விடுமே என்பதால் முதலில் ம்¢குந்த ஆர்வத்தில் இருந்த அவள், பின்னர், அது பற்றிக் கேட்காதிருக்கத் தீர்மானித்தாள். துர்க்காவோ, பொறுமை காட்டாமல் அவள் கணவனை விட்டு வந்து விட்டது தப்பு, அகிம்சை வழியில் அவள் போராடி யிருந்திருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது அன்று அஞ்சி அது பற்றிப் பேசாதிருப்பதே நல்லது என்று ஆழ்ந்து யோசித்த பிறகு முடிவு செய்தாள். ஆனால் அவர்கள் பேச விரும்பி யிருந்தாலும், அது நிகழ்ந்திராது. ஏனெனில், அந்த அளவுக்குக் காந்திக்கு நேரமில்லை. மேலும், சொந்தப் பிரச்சினகள் பற்றிப் பேசுகிற அளவுக்கு அவர் தனியாகவும் இல்லை. எனவே, சிஸ்டர் முத்துலட்சுமி பொதுவாய்க் கேட்டவற்றுக்கு அவர் என்ன சொன்னார் என்பதை மட்டுமே செவியுற அவர்களால் முடிந்தது.

“வரதட்சிணை கேட்பவனை மணக்க மாட்டேன் என்று பெண்கள் சத்தியாக்கிரகம் செய்ய வேண்டும். அதுவும் இத் தீமையை ஒழிக்க ஒரு வழி!”

“அது சாத்தியமா, பாபுஜி? அந்த அளவுக்குத் துணிச்சலும் தன்னம்பிக்கையும் இருக்கிறபடியாகவா நாம் பெண் குழந்தைகளை வளர்க்கிறோம்? மீசை வளர்க்கும் ஆண்களே அம்மா மீதும், அப்பா மீதும் பழி போட்டுவிட்டு வரதட்சிணை விஷயத்தில் அக்கடா என்று ஒதுங்கியிருக்கும் இந்த நாட்டில், கோழைகளாகவும் அடிமைகளாகவும் ஆணுக்கு அடங்கியவளே பெண் என்கிற ரீதியில் இரண்டாம் தரக் குடிமகளாகவும் பெற்றோரால் வளர்க்கப்படுகிற பெண்ணிடத்தில் அந்த அளவுக்குத் துணிச்சலை எதிபார்ப்பது என்ன நியாயம், பாபுஜி?”

காந்தி பதில் சொல்லாமல் புன்னகை பூத்தார்.

“பாபுஜி! ஒரு பெண்ணுக்குக் கல்யாணம் நடந்தால், அவள் தகப்பன் ஓட்டாண்டியாக நேர்கிறது. பிள்ளையைப் பெற்றவர்கள் கொள்ளைக்காரர்களாக நடந்துகொள்ளுகிறார்கள். நாட்டில் எத்தனையோ வேறு பல பிரச்சினைகள் இருக்க, இது ஒரு பிரச்சினையா என்று கூடச் சிலர் அதன் தீவிரத்தைப் புரிந்துகொள்ளமல் பேசுகிறார்கள். பெண் என்பவள் ஒரு சுமையாய்க் கருதப்படுகிற அளவுக்குச் சமுதாயக் கட்டுப்பாடுகளும் அடக்குமுறைகளும் இருப்பதால், பெற்றோர்கள் அவளை எவ்வளவு விரைவில் ‘தள்ளிவிட’ முடியுமோ, அவ்வளவு விரைவில் ‘தள்ளிவிட’வே அவசரப்படுகிறார்கள். பெண்ணைப் பெற்றவர்களின் இந்தப் பலவீனத்தைப் பிள்ளையைப் பெற்றவர்கள் காசாக்கப் பார்க்கிறார்கள்.”

“உண்மைதான், சகோதரி. அதற்கும் வழிகள் உள்ளன. பெற்றோர்கள் சமுதாயக் குற்றச்சாட்டுகளைப் பாராட்டாதிருக்கக் கற்கவேண்டும். தனி மனிதர்களை ரொம்பவும் துன்புறுத்தாதிருக்கும் அளவுக்குச் சமுதாயமும் உயரவேண்டும். இதன் சுருக்கம் என்னவென்றல், தனி மனிதர்கள் ஒட்டுமொத்தமாக மாறவேண்டும். அது உடனே நிகழ்வதென்பது சாத்தியமன்று. சிறுகச் சிறுகத்தான் மாறும். மனமாற்றம் கொள்ளுகிற தனிமனிதர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக, அது சமுதாய மாற்றத்தில் முடியும். அதற்கு நாளாகும். என்ன செய்ய! .. .. அப்புறம்.. .. பெண்கள் நகையாசையைக் கொஞ்சம் கொஞ்சமாகத் துறக்கவேண்டும்! “

”உண்மைதான், பாபுஜி. ஆனால், அது ஒன்றுதான் அவர்களது சொத்து. அதுவும் கூடாதென்று சொல்லுகிறீர்களே!”

“அறவே கூடாதென்று நான் சொல்லவில்லை. ஏதோ கொஞ்சம் இருக்கட்டும். தேவையற்றுச் சுமக்காதீர்கள். அவற்றை யெல்லாம் எங்கள் காங்கிரஸ் இயக்கத்துக்கு நன்கொடையாய்க் கொடுத்துவிடுங்கள். ஆடுமாடுகளுக்கு நகை யணிவித்துப் பாருங்கள். அதன் அசிங்கம் புரியும்!”

அங்கிருந்த பெண்கள் அனைவருமே ஏதேனும் ஒரு நகையைக் கழற்றிக் கொடுத்தனர். காந்தி பொக்கைவாய்ச் சிரிப்புடன் ஆங்கிலத்தில் நன்றி கூறி அவற்றைப் பெற்றுக்கொண்டார்.

“அடுத்து, விதவைகளின் மறுமணம் பற்றிச் சொன்னீர்கள். விதவைகளாகும் தங்கள் பெண்களுக்கு மறுமணம் செய்விக்க முதலில் பெற்றோர்கள் பக்குவப்பட வேண்டும். அவர்களை ஏற்க, பிரும்மசாரிகளோ அல்லது மனைவியை இழந்த ஆண்களோ முன்வரவேண்டும். இது பற்றித் தற்சமயம் பிரசாரம் மட்டுமே செய்ய முடியும். யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. பிரசாரத்தின் மூலம் மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாய்த்தான் மாற்ற முடியும். அதைத்தான் நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன். மறுமணம் செய்துகொள்ளுவது (செய்யத்தகாத) பாவம் என்பதாய்ப் பெண்கள் தாங்களாக நினைக்கவே யில்லை. அவ்வாறு அவர்களுக்குப் போதிக்கப்பட்டு வந்துள்ளது. அதனால், பெண்களும் இவ்விஷயத்தில் மனமாற்றமும் துணிவும் கொள்ளவேண்டும். .. .. குழந்தைத் திருமணத்துக்கும் நான் இப்போது சொன்னது பொருந்தும். வாழ்ந்த விதவைகளின் நிலையை விட, வாழவே செய்யாத குழந்தை விதவைகள் அதிகமான பரிதாபத்துக்கு உரியவர்கள் என்பது உங்களுக்கே தெரியும். நீங்கள் சொல்லுவது போல் ஆண்கள் மனம் மாறித் திருந்தினால்தான் இப்பிரச்சினைகள் தீரும். 1927 ஆம் ஆண்டு, செப்டெம்பர் மாதம், நான் மதறாசுக்கு வந்திருந்த போது, இது பற்றிப் பச்சையப்பா கல்லூரி மாணவர்களிடம் நெடிய பிரசங்கமே செய்தேன். இது போன்ற பிரச்சினைகளுக்கு உடனே தீர்வு ஏற்பட்டுவிடாது. மனிதர்களின் எண்ணம் சிறிது சிறிதாய்த்தான் மாறும். சமுதாயப் புரட்சி என்பது ஒரு நாளில் விளைவிக்கக்கூடியதன்று. என் சகோதரிகளே! இப்போது அதை நாம் தொடங்கி வைத்திருக்கிறோம். உங்களைப் போன்றவர்களும், என் எண்ணங்கள் நியாயமானவை என்று கருதும் நல்ல உள்ளம் படைத்த ஆண்களும் சேர்ந்து இன்னும் பெரிய அளவில் இடைவிடாது பிரசாரம் செய்தால், காலப்போக்கில் இது மறைந்து, பின்னர் ஒழியும். 1829 ஆம் ஆண்டு ‘சத்¢’ என்னும் உடன்கட்டை ஏறுதல் சட்டத்தின் மூலம் – அப்போதைய கவர்னர்-ஜெனரல் லார்ட் வில்லியம் பெண்ட்டிங்க் ( Lord William Bentinck) என்பவரால் – தடை செய்யப்பட்டது. ஆயினும் – நூறாண்டு கடந்தும் – அது முற்றாக ஒழியவில்லை. சமுதாயச் சீர்திருத்தங்கள் என்பவை அப்படித்தான். மெதுவாகவே அவை நிகழும். * ஆயிரக்கணக்கான ஆண்டுப் பழக்க வழக்கங்கள் மெல்ல மெல்லத்தான் மாறும். எல்லாருக்கும் புரிந்த அற்ப நியாயங்களைச் செயல்படுத்துவதற்குக் கூட மனிதனுக்குச் சில நூற்றண்டுகள் ஆகி விடுகின்றன. .. .. ..”

தன் முதுகில் திடீரென்று விளைந்த குறுகுறுப்பால் பங்கஜம் தன்னையும் அறியாமல் பின்னால் திரும்பிப் பார்த்தாள். பார்த்தவளின் இதயம் கணம் போல் துடிக்க மறந்து, பின்னர் தாளம் தப்பித் துடிக்கலாயிற்று.

கூட்டத்தோடு கூட்டமாக அவளுடைய முதல் கணவன் தாசரதி நின்றுகொண்டிருந்தான்!

* (ஆசிரியையின் பின் குறிப்பு :

ராஜஸ்தான் மாநிலத்தில் சதி ஆங்காங்கு இன்னமும் வழக்கத்தில் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் ரூப் கன்வார் எனும் இளம் கைம்பெண் அவள் கணவனோடு பலவந்தமாய் எரிக்கப்பட்ட நிகழ்ச்சி இந்தியாவின் பெண்ணுரிமை அமைப்புகளின் பலத்த கண்டனத்துக்கு ஆளாயிற்று. இது பற்றிக் காஞ்சி சங்கர மடாதிபதி ஜயேந்திர சரசுவதி சுவாமிகள், “ பலவந்தப் படுத்தக் கூடாது. ஆனால், கணவன் இறந்த பிறகு வாழ விரும்பாத ஒரு பெண் உடன்கட்டை ஏற அவளாகவே தீர்மானித்தால், அதைத் தடுக்கக் கூடாது!” என்று ‘திருவாய் மலர்ந்தருளினார்’ என்பது இங்கே நினைவுகூரத்தக்கது. தன் மனைவி தன் மரணத்துக்குப் பிறகு வேறு யாருக்கும் சொந்தமாகிவ்¢டக் கூடாது என்னும் தன் பொறாமையால் ‘சதி’ என்கிற அக்கிரமச் சடங்கை ஆண் ஏற்படுத்தினான் என்பதால் அது மனிதத்தனமே அற்றது – அரக்கத்தனமானது – எனவே அது இன்னமும் ஆங்காங்கு தொடர்வது நிறுத்தப்பட வேண்டிய ஒன்று என்றெல்லாம் அந்த “மனிதர்” (!?) சொல்லவே இல்லை என்பது நினைவில் கொள்ளத் தக்கது.

– தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation

author

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts