மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 27

This entry is part [part not set] of 39 in the series 20060630_Issue

ஜோதிர்லதா கிரிஜா


.. .. .. கணவரின் உயிர் பிரிந்த சில நாள்களுக்குள்ளேயே காவேரியின் உயிரும் பிரிந்துவிட்ட அதிசயம் பற்றி அந்த ஊர் வாய் ஓயாது பேசத் தொடங்கியது.

நொறுங்கிய உள்ளத்துடன் துர்க்கா கணவனோடு பட்டணத்துக்குப் புறப்பட்டுப் போனாள்.

பட்டணத்தில் சிவகுரு தன் கூட்டாளி நண்பர்களுடன் சேர்ந்து கண்ணாடிக் கடை நடத்தத் தொடங்கினான். அனைத்துக் கூட்டாளிகளிலும் அவனே அதிக முதல் போட்டவன் என்கிற காரணத்தால், தொழிற்சாலையின் முக்கிய முதலாளிக்குரிய தனி வசதிகள் அவனுக்குத் தரப்பட்டன. சுருக்கமாய்ச் சொன்னால், அவன்தான் தலைமையாளன். மற்ற பங்குதாரர்கள் அவன் கீழ் வேலை செய்பவர்கள் என்றே சொல்லிவிடலாம்.

சிவகுருவுக்கு மார்கரெட் என்கிற பெண் அவனின் வாய்மொழிக் கடிதங்களைச் சுருக்கெழுத்தில் எடுத்துத் தட்டெழுதுகின்ற பணியில் அமர்த்தப்பட்டாள். உதட்டு நுனி ஆங்கிலம், குலுக்கல், மினுக்கல், வெளிப்பாடான ஆடைகள், மிகையான ஒப்பனை, செயற்கைத்தனமான சிரிப்பு ஆகியவற்றால் தன்னைப் பேரழகியாய்க் காட்டிக்கொள்ள முயன்று அதில் வெற்றியும் பெற்ற மார்கரெட் ஒரே ஆண்டுக் காலத்துள் சிவகுருவின் இதயத்திலும் இடம் பிடித்தாள்.

சிவகுரு தன் தொழிற்சாலையே கதி யென்று நாளின் பெரும் பகுதியைக் கழிக்கலானான். அவன் மார்கரெட்டுக்கு வலை விரித்தானா, அல்லது அவள் சிவகுருவுக்கு வலை விரித்தாளா என்பதே புரியாத அளவில் இருவருமே ஒருவர்க்கு மற்றவர் வலை விரித்து அதில் சிக்கிக்கொள்ளவும் செய்தார்கள்.

சிவகுரு தன்னிடம் முன்பு போல் பழகாததைத் துர்க்கா உணரவே செய்தாள். ஒரு சராசரிக்கும் கீழான பெண்ணுக்குக் கூடப் புரிந்துவிடக் கூடிய விஷயம் அவளுக்குப் புரியாது போகுமா என்ன! பெண்ணுறவின்றி இருக்க முடியாத அவன் அவளை நாடாமலே பல நாள் தொடர்ந்து இருக்கத் தொடங்கியது அவளது ஊகத்தை உறுதிப்படுத்தியது.

அவள் தொலைபேசியில் அவனைக் கூப்பிட்ட போதெல்லாம் ஒரு பெண்ணே ஒலிவாங்கியை எடுத்துப் பேசிய போதே அவளுக்கு நெரடியது. நாள்கள் நகர நகர அவனது ஒட்டாமையும் விலகலும் அவளது ஐயத்தையும் ஊகத்தையும் மேலும் உறுதிப்படுத்தின. ஆனால் அது பற்றி அவனிடம் பேச அவளுக்கு அச்சமா யிருந்தது. எனினும் தனது ஊகம் சரிதானா என்பதைக் கண்டுபிடிப்பதற்கான வழிதான் அவளுக்குப் புலப்படவில்லை.

அதற்கெல்லாம் வேலை வைக்காமல், அவனே ஒரு நாள் அந்தப் பெண்ணை வீட்டுக்கே கூட்டிக்கொண்டு வந்துவிட்டான்.

“துர்க்கா! அவ என்னோட ஸ்டெனோ (steno). ஸ்டெனோன்னா தெரியுமா? நோக்கு எங்கே தெரியப் போறது? நான் சொல்ற கடுதாசிகளை யெல்லாம் ஷார்ட்ஹேண்ட்ல (sahorthand) எடுத்துண்டு அப்புறம் அதையெல்லாம் டைப் (type) அடிச்சுக்குடுப்பா. அவ பேரு மார்கரெட். நீ ·போன் பண்றப்பல்லாம் எடுத்து அவதான் பதில் சொல்லுவா. அவளுக்கு அம்மா, அப்பா இல்லே. வேற சொந்தக்காராளும் யாருமில்லே. அதனால, இனிமே அவ நம்மாத்துலதான் இருக்கப் போறா. ..என்னோடா மாடி ரூம்ல,” என்று கடுகளவு வெட்கமோ தயக்கமோ உறுத்தலோ இன்றி, அந்தப் பெண்ணைத் தன் மாடியறைக்கு அழைத்துப் போய் உட்காரச் சொல்லிவிட்டு இறங்கி வந்த சிவகுரு, ரொம்பவும் சாதாரணமாக, ‘அந்தப் புதுப் பேனாவை மாடி அறைப் பெட்டியில வெச்சிருக்கேன்’ என்று சொல்லுவதற்குரிய இயல்புடன் அவளுக்குச் சொன்ன போது அவள் திடுக்கிட்டும் திகைத்தும் போனாள்.

சில கணங்களுக்கு வாயிழந்து போனாலும், பின்னர் சமாளித்துக்கொண்டு, “வேற சொந்தக்காரா யாருமேவா இல்லே அவளுக்கு? உங்க கம்பெனியிலே வேலைக்கு வர்றதுக்கு முந்தி அவ எங்க இருந்தாளோ அங்க போய் இருந்துக்க வேண்டீதுதானே? வயசுப் பொண்ணை மாடி ரூம்ல கொண்டுவந்து வெச்சுண்டா நாலு பேர் உங்களைப் பத்தி அசிங்கமாப் பேசுவாளேன்னா?” என்று அவள் தன்னுள் கடலாய்ப் பொங்கிய ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு வினவியதும் அவன் சிரித்தான்.

“வெச்சுண்டாத்தானே அசிங்கமாப் பேசுவா? ரெண்டாவதாக் கல்யாணமே பண்ணிண்டுட்டா?”

சில நொடிகளுக்குப் பேச்சே வராமல் அதிர்ச்சியில் ஆழ்ந்த துர்க்கா, ஒரு வழியாகச் சமாளித்துக்கொண்டு, “ நான் உசிரோட இருக்கிறப்பவேயா?” என்றாள். அவளது குரல் அதைக் கட்டுப்படுத்த அவள் செய்த முயற்சியைக் கடந்து நடுங்கியது.

“அதுக்கோசரம் நான் உன்னைச் சாகடிக்கவா முடியும்! நீ பாட்டுக்குக் கீழே இருந்துட்டுப் போயேன். என்ன இருந்தாலும் நான் தாலிகட்டினவன். கடைசி வரைக்கும் நோக்குச் சாப்பாடு போட்டுக் காப்பாத்துவேன். அந்தக் கடமை நேக்கு இருக்கு. நான் ஒண்ணும் அயோக்கியனில்லே. அப்பிடி யெல்லாம் ஒன்னைக் கைவிடமாட்டேன்!”

“பொண்டாட்டிக்குச் சாப்பாடு மட்டும் போட்றதோட ஒரு புருஷனோட கடமை முடிஞ்சுட்றதா? ஒரு புருஷன் யோக்கியனா, அயோக்கியனான்னு சொல்றதுக்கு அது மட்டும் போறுமா?”

“என்னடி, வாய் ரொம்பத்தான் நீள்றது? அது கூடப் போனாப் போறதுன்னுட்டுத்தான். நான் நெனைச்சா ஒன்னைத் தொரத்தி யடிச்சுட முடியும்! தெரிஞ்சுக்கோ. இத பாருடி. ஒழுங்கா மொறையா நேக்கு அடங்கி நடக்கச் சம்மதம்னா, வேளா வேளைக்குச் சாப்பிட்டுண்டு இங்க இரு. அதுக்கு ஒத்துக்கல்லேன்னா இந்த க்ஷணமே கெளம்பு!”

துர்க்கா தன் கட்டுப்பாட்டை யிழந்து ஓங்கிய குரலெடுத்து அழத் தொடங்கினாள். அவன் பாய்ந்து நெருங்கி அவள் வாயைப் பொத்தினான். “ஏய்! அழுது ஆகாத்தியம் பண்ற வேலையெல்லாம் ஏங்கிட்ட வேணாம். தெரிஞ்சுதா? மார்கரெட்டுக்கு உன்னோட சமையல் ரொம்பப் பிடிக்கும். இன்னிக்கு நான் கம்பெனிக்குப் போகப் போறதில்லே. அதனால அழுது கிழுது ரகளை பண்ணாதே. வெங்காய சாம்பார், கத்திரிக்கா, முருங்கைக்கா, உருளைக்கெழங்கு இந்த மூணையும் போட்டு ஒரு புளிக்கறி பண்ணுவியே, அது, மைசூர் ரசம், கடலைப் பருப்புப் போட்டுப் பூசனிக்காக் கூட்டு, இஞ்சித் தொகையல், வெள்ளரிக்காப் பச்சிடி எல்லாம் பண்ணிடு. ஆங்! இன்னிக்கு அவ நம்மாத்துல தங்கப் போற மொத நாளு. அதனால சேமியா பாயசமும் பண்ணிடு. நான் அவளோட வெளீல போய்க் காயெல்லாம் வாங்கிண்டு வந்துட்றேன்.. .. ..”

ஐந்தே நிமிடங்களில் அவன் தயாராகி மாடிக்குப் போய் அந்த மார்கரெட்டைக் கூட்டிக்கொண்டு வந்தான். மறு நிமிடம் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஏறிக்கொண்டு வெளியே சென்றார்கள்.

துர்க்கா சுவர்க் கெடியாரத்தைப் பார்த்தாள். காலை மணி ஒன்பது. எவளோ ஒருத்தியைக் கூட்டிக்கொண்டு வந்து மாடியறையில் தங்க வைத்துவிட்டு, அவளைத் தான் இரண்டாம் மனைவியாக்கிக் கொள்ளப் போவதாய் அறிவித்தும்விட்டு, அவளுக்கும் சேர்த்துத் தன்னை அவன் சமைக்கச் சொன்னதை அவளால் துமியளவும் செரிக்கவே முடியவில்லை. அப்படி ஓர் அவமானம் நேர்வதற்கு முன்னால் தனக்குச் சாவு வராதா என்று அவளுக்கு இருந்தது.

மிகச் சில நிமிடங்களில் அவள் ஒரு முடிவுக்கு வந்தாள். அந்த முடிவு அவள் முகத்தில் ஓர் அமைதியையும், சிக்கலிலிருந்து விடுபடப்போவதற்கான நிம்மதியையும் உடனுக்குடனாய்த் தோற்றுவித்தது. அவள் கதவைச் சாத்திக்கொண்டு தெருவில் இறங்கித் திருவல்லிக்கேணிக் கடற்கரையை நோக்கி மிக விரைவாய் நடக்கத் தொடங்கினாள். தங்கள் வீடு கடற்கரைக்குப் பக்கத்தில் இருந்ததற்கு மகிழ்ச்சி யடைந்தாள்.

‘நல்ல காலம்! நேக்கு இன்னும் கொழந்தை உண்டாகல்லே! கொழந்தை இருந்தா, இப்பிடி ஒரு முடிவுக்கு வரவே முடியாது. நல்லதுதான் நேக்கு நடந்திருக்கு – ஒரு விதத்தில!’ – துர்க்கா கால்களை வீசி விரைந்தாள்.

அவள் கடற்கரையை அடைந்த போது அது மனித நடமாட்டமற்று இருந்தது. ஒன்பதே முக்கால் மணி நேர வெயில் பொழுதா யிருந்ததும் தனக்கு – யார் கண்ணிலும் படாமல் அதைச் செய்வதற்குரிய – நல்வாய்ப்புத்தான் என்று எண்ணி அவள் கசப்பாய்ச் சிரித்துக்கொண்டாள்

.. .. .. கண் விழித்துப் பார்த்த போது, துர்க்கா தான் ஒரு குடிசையில் இருந்ததையும் ஓர் அம்மாளும் ஓர் இளம் பெண்ணும் தான் படுத்திருந்த பாயின் அருகே கவலையாய் உட்கார்ந்து கொண்டிருந்ததையும் கண்டாள். கடலுக்குள் நடந்து சென்று, பின் அதனுள் மூழ்கியது வரையில் அவளுக்கு ஞாபக மிருந்தது. மூக்கினுள் நீர் புகுந்து மூச்சு முட்டியதும் ஞாபக மிருந்தது. ‘நான் இன்னும் ஒரு சில நிமிஷங்களில் சாகப் போகிறேன்’ என்று நினைத்துக்கொண்டதும் கூட ஞாபக மிருந்தது. ஆனால் அதன் பின் என்ன நடந்தது, தான் பிழைத்தது எவ்வாறு என்பதொன்றும் அவளுக்குத் தெரியவில்லை.

“இது எந்த எடம்? இங்க யாரு கொண்டு வந்தா என்னை? எதுக்கு என்னைக் காப்பாத்தினேள்?” என்று ஈனக் குரலில் வினவியபடி எழுந்து உட்கார முற்பட்ட அவளைத் தோள் பற்றி, படித்தவள் போல் தோன்றிய அந்தப் பெண்மணி படுக்க வைத்தாள்.

“உசிரை விட்டுட்டா எல்லாம் சரியாயிடுமா? என்ன கஷ்டம் வந்தாலும் தைரியாமா இருக்கணும்மா. அதுதான் புத்திசாலிப் பொண்ணுக்கு அழகு!”

“நான் புத்திசாலி இல்லேம்மா!”

“எல்லாரும் புத்திசாலிகள்தாம்மா! இந்தச் செம்படவாள்ளாம் உன்னைக் காப்பாத்தல்லேன்னா, என்ன கதி ஆகியிருக்கும்!”

அவள் காட்டிய திசையில் இருந்த சில மீனவர்களைத் துர்க்கா அப்போதுதான் கவனித்தாள் : “நேக்கு நல்ல கதிதான் கிடைச்சிருக்கும்!”

“அதெல்லாம் பேசாதே.. .. பக்கத்துலே எங்கேருந்தாவது காப்பியோ டீயோ வாங்கிண்டு வர முடியுமாப்பா?”

ஓர் ஆள் உடனே ஓடினார்.

“நீ யாரும்மா? நோக்கென்ன கஷ்டம்? உசிரை விட்டுடணும்னு தோண்ற அளவுக்கு உன்னை யாரு கொடுமைப் படுத்தினா?”

துர்க்கா எல்லாவற்றையும் சுருக்கமாய்த் தெரிவித்தாள்.

“சரி.. .. நல்ல வேளையா நான் இந்தப் பக்கமா என்னோட மோட்டார்கார்ல வந்தேன். நடந்தது தெரிஞ்சதும் என்ன, ஏதுன்னு விசாரிக்கிறதுக்காகக் காத்திண்டிருந்தேன்.. .. நான் இந்தப் பக்கம் தற்செயலா வந்தது உன்னோட அதிருஷ்டம்தாம்மா. உன்னோட நல்ல காலந்தான்.. .. நான் ஒரு அநாதை இல்லம் நடத்திண்டிருக்கேன். ஸ்திரீ சேவா மண்டலின்னு அதுக்குப் பேரு. கேள்விப்பட்டிருக்கியா?”

“மாதர் போதினி பத்திரிகையிலே அதைப் பத்திப் படிச்சிருக்கேம்மா. அப்படின்னா, நீங்கதான் அந்த சிஸ்டர் முத்துலட்சுமியா?”

“ஆமாம்மா. அது சரி, உனக்குப் படிக்கத் தெரியும் போலேருக்கே?”

“ஆமா. தமிழ் மட்டும் எழுதப் படிக்கத் தெரியும். கொஞ்சம் கணக்கு வழக்கும் தெரியும்.”

அப்போது ஓட்டலுக்குப் போயிருந்த மீனவர் ஒரு கோப்பையில் காப்பி கொண்டு வந்தார். அதை குடிக்க அவள் எழுந்து உட்கார்ந்தாள்.

அவள் குடித்து முடித்த பின், “இந்தாப்பா! இதை வெச்சுக்கோ!” என்று சிஸ்டர் முத்துலட்சுமி கொடுத்த ஐந்து ரூபாயை வாங்கிக்கொள்ள அவர் மறுத்துவிட்டார்.

“ஒரு உசிரையே காப்பாத்தி யிருக்கியேப்பா! அஞ்சு ரூவாயை வாங்கிக்கக்கூடாதா?”

“இந்தம்மா உசிரோட வெலை வெறும் அஞ்சு ரூவாதானாம்மா? வேணாம். என் தங்கச்சியைக் கடல்லேருந்து காப்பாத்தினா நான் காசு வாங்குவேனாம்மா?” என்றார் அவர்.

அவருக்கு நன்றி சொல்லிவிட்டு முத்துலட்சுமி துர்க்காவைப் பார்த்துச் சொன்னார்: “இத பாரும்மா.. ..நீ என்னோட வந்துடு. எங்க ஹோம்ல இருந்துக்கோம்மா. படிப்பும் அஞ்சாறு கைத் தொழிலும் கத்துத் தர்றோம். .. இவாளுக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்லிட்டுக் கெளம்பு!”

துர்க்கா அவர்களைப் பார்த்துக் கைகூப்பி விடைபெற்றாள்.

.. .. .. “இவா பேரு பங்கஜம். இவாதான் இந்த ஸ்தாபனத்துக்கு நேக்கு அடுத்தபடியாத் தலைவியா யிருக்கப் போறவா. அந்த அளவுக்கு இந்த ஸ்திரீ சேவா மண்டலிக்காக சர்வசதா உழைச்சிண்டிருக்கா. ஆமா? உங்க ஊரு எதுன்னு சொன்னே?”

“சிலுக்குப்பட்டி, மாமி!” என்று துர்க்கா பதில் சொன்னாள்.

சிஸ்டர் முத்துலட்சுமி சிரிட்துவிட்டு, “ இவ்வளவு நேரமும் நீ என்னை ‘மாமி’னு கூப்பிட்டது தப்பில்லே. நான் மாமிதான். ஆனா, இங்க வந்து சேந்துட்ட பிற்பாடு நான் எல்லாருக்கும் சிஸ்டர்ம்மா! தெரிஞ்சுதா? சிஸ்டர்னா தெரியுமில்லியா?” என்றார்.

“தெரியும், மாமி .. .. இல்லேலே.. .. தெரியும் சிஸ்டர்! கூடப் பொறந்தவான்னு அர்த்தம்.”

“ஏம்மா, பங்கஜம்! சிலுக்குப்பட்டி, வத்தலப்பாளையம், செங்கல்பாளையம் இதெல்லாம் பக்கத்துப் பக்கத்து ஊர்கள்தானே?”

“ஆமா, சிஸ்டர்,” என்று பதிலிறுத்த பங்கஜம் ஆர்வத்துடன் துர்க்காவை நோக்கினாள். துர்க்காவும் அவளைப் பார்த்தாள். இருவரின் பார்வைகளும் சந்தித்துக்கொண்ட கணத்தில் அவை இரண்டறக் கலந்தன. பிரிந்து வெகு நாளான பின் சந்தித்துக்கொள்ளும் இருவரின் ஏக்கம் நீங்கிய மகிழ்ச்சி அந்தப் பார்வையில் வெளிப்பட்டதாக இருவருக்குமே தோன்றியது. சுருக்கமாய்ச் சொன்னால் அந்த நொடியில் இருவுருக்கும் ஒருவரை யருவர்க்கு மிகவும் பிடித்துப் போயிற்று.

“என்னமோ, தெரியல்லே. கொஞ்ச நாளா மதுரை ஜில்லாப் பக்கத்துப் பொண்கள் சிலர் இந்த ஹோம்ல வந்து சேந்திண்டிருக்கா. .. ..” என்று புன்னகை செய்த சிஸ்டர் முத்துலட்சுமி, “அந்தப் புதுப் பொண்ணு, சத்தியபாமா எப்பிடிப் படிக்கிறா? நன்னா பிக் அப் (pick up) பண்றாளா?” எண்று கேட்டார்.

“ரொம்ப நன்னாவே பண்ணிண்டிருக்கா, சிஸ்டர்.”

“அப்புறம், இன்னொண்ணு, துர்க்கா. இந்த ஹோம்ல ஜாதி வித்தியாச மெல்லாம் பாக்கக் கூடாது. தீண்டாமை துளிக்கூடக் கிடையாது. தீண்டாமைன்னா தெரியுமில்லையா?”

“தெரியும். பறையாளைத் தொடாம இருக்கிறதுக்குப் பேரு.”

“சரி. ஆனா, ‘பறையா’ங்கிற வார்த்தையைக் கூட நாம சொல்லக்கூடாது. மகாத்மா காந்தி அவாளுக்கு ‘ஹரிஜன்’னு பேரு வெச்சிருக்கார். தெரியுமில்லையா?”

“தெரியும், சிஸ்டர். ஹரியோட கொழந்தைகள்னு அதுக்கு அர்த்தம்.”

“பரவால்லியே! தெரிஞ்சு வெச்சிருக்கியே! ஆனா, அதுக்காக, இங்கே உள்ள அவாளை ஹரிஜன் அப்படின் னெல்லாம் சொல்லக்கூடாது. இங்கே இருக்கிறவா யாருக்குமே தங்களைப் பத்தின ஜாதி நெனைப்போ, மத்தவாளைப் பத்தின ஜாதி நெனைப்போ வரவே படாது. யாருமே மத்த யாரையும் பாத்து, ‘நீ என்ன ஜாதி?’ன்னு கேக்கவும் கூடாது. சுருக்கமாச் சொல்லணும்னா, ‘ஜாதி இரண்டொழிய வேறில்லை’ங்கிறது இங்கே இருக்கிறவா ஏத்துக்க வேண்டிய சட்டம். அதுக்கு நீயும் கட்டுப்பட்டாகணும்.”

“சரி, சிஸ்டர்.”

“அப்போ, பங்கஜம், இவளை நீ அழைச்சிண்டு போ!”

“வாம்மா!” என்ற பங்கஜம் துர்க்காவின் வலக்கையின் ஆள்காட்டி விரல் பற்றி அழைத்துப் போனாள். மிகச் சில நொடிகளில் கொஞ்சங்கொஞ்சமாய் – ஒவ்வொரு விரலாக – அவள் துர்க்காவின் முழுக் கையையும் பற்றிக் கோத்துக்கொண்டாள்.

சிஸ்டர் முத்துலட்சுமி, நடந்து சென்ற இருவரையும் பார்த்தபடி, ‘இவா ரெண்டு பேரோட ஒடம்பு வாகும் ஒரே மாதிரி இருக்கு. ஒரே ஒசரம். நடையில கூட ஒரு சாயல் தெரியறது. முக ஜாடையிலெ கூட ஒத்துமை இருக்கிற மாதிரி தெரியறது. இவா ரெண்டுபாரையும் ஒண்ணாச் சேத்துப் பாக்கற யாருக்குமே, இவா ஒண்ணு அம்மா-பொண்ணுன்னோ, இல்லேன்னா அக்கா-தங்கைன்னோ தோணும்!’ என்று தனக்குள் எண்ணிக்கொண்டார்.

.. .. தன் கை பற்றி அழைத்துச் சென்ற பங்கஜத்தை, “நீங்க இங்கே எத்தனை நாளா இருக்கேள், மாமி?” என்று துர்க்கா விசாரித்தாள்.

“கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா யிருக்கேம்மா.. .. என்னையும் நீ சிஸ்டர்னுதான் கூப்பிடணும்.. ..இங்கே எல்லாருமே ஒருத்தரை ஒருத்தர் சிஸ்டர்னுதான் சொல்றது. அதாவது அவாவா பேரோட சிஸ்டர்ங்கிறதையும் சேத்துச் சொல்லணும். இப்ப நீ என்னை ‘பங்கஜம் சிஸ்டர்’னு சொல்லணும்.”

“சரி.. ..”

“ஆமா? என்னை நோக்கு ஞாபகமில்லே?”

“எங்கேயோ பாத்த மாதிரி இருக்கு. ஆனா ஞாபகம் வரமாட்டேங்கிறது.”

“நன்னா ஞாபகப்படுத்திப் பாரு. உன் கல்யாணத்துக்குக் கூட நான் வந்திருக்கேன். ஆனா, பாவம், நீ எங்கே எங்களைக் கவனிச்சிருந்திருக்கப் போறே? உன் கல்யாணம் நிச்சியமானதும், ஒரு பத்து நாள் போல நாங்க நிறைய மாமிகள் உங்கத்துக்கு வந்து கல்யாண வேலைகள்ளாம் செஞ்சோம் – அப்பளம் இட்றது., பட்சணம் பண்றது இந்த மாதிரியான ஏகப்பட்ட வேலைகள். சிஸ்டர் முன்னால அதை யெல்லம் பத்திப் பேசிக் கெளற வேண்டாம்னுட்டுத்தான் நான் அப்ப எதுவும் பேசல்லே. ஆனா, சிஸ்டருக்குத் தெரியப்படாதுன் னெல்லாம் ஒண்ணுமில்லே. அப்புறமாச் சொல்லுவேன்.”

துர்க்கா தன் விழிகளை அகல விரித்தாள்: “ஆமா, மாமி! .. ஹி ஹி! இல்லேல்லே – பங்கஜம் சிஸ்டர்! ரொம்ப நாளாயிடுத்து இல்லியா? அதான் டக்னு நெனப்பு வரல்லே. இப்ப நீங்க சொன்னதும் ஞாபகம் வந்துடுத்து.”

“மொதல்லெ நேக்கும் ஒடனே அடையாளம் தெரிஞ்சுடல்லே. எங்கேயோ பாத்த மாதிரி மட்டுந்தான் இருந்துது. கொஞ்சங் கொஞ்சமாத்தான் ஞாபகம் வந்துது. .. தவிர, நான் உங்காத்துலே வேலை பண்ணினப்போ, நீ அடிக்கடி எங்கண்ணுல படல்லே. நாங்கல்லாம் வந்து கூட்றதுக்கு முந்தியே நீ உன் சிநேகிதிகளோட மாடிக்குப் போயிடுவே. சாப்பாடு, டி·பன், காப்பி எல்லாமே உங்களுக்காக மாடிக்குப் போயிடும். ஆனா, கல்யாணத்தன்னிக்கு நான் ஒன்னை நன்னாப் பாத்தேன். அன்னைக்குத்தான் நீ அதிகமா என் கண்ணுல பட்டேன்னு சொல்லலாம். ஊரே மெச்சும்படியா, ஒன்னோட கல்யாணந்தான் நாலு நாளும் என்னமா ஜாம் ஜாம்னு நடந்துது! .. ..ஆமா? .. .. கொழந்தைகள் ஏதானும் .. “

“இல்லே. அதனாலதான் தைரியமா உசிரை விட்டுடலாம்னு சமுத்திரத்துல எறங்கினேன். என்னோட துரதிருஷ்டம் செம்படவாள்லாம் என்னைக் காப்பாத்தித் தொலைச்சுட்டா!”

“அப்பிடி யெல்லாம் பேசப்படாது. உன்னை அவா தொலைக்கல்லே. பத்திரமா இங்கே வந்து சேர வழி பண்ணிட்டா!!”

அப்போது அந்தப் பக்கம் வந்த ஒரு பெண்மணி, “உங்க ரெண்டு பேரையும் சேந்தாப்ல பாத்தா, அம்மாவையும் பொண்ணையும் பாக்கற மாதிரி நிறைய ஜாடை இருக்குன்னு இப்பதான் சிஸ்டர் சொல்லிண்டிருந்தா!” என்று புன்னகை செய்துவிட்டு நகர்ந்தாள்.

பங்கஜம் துர்க்காவைப் பார்த்துச் சிரித்தாள்.

“இப்ப அவா சொன்னதுக்கு அப்புறம் நேக்கே நீ என்னோட ஜாடையில இருக்கிறமாதிரி தெரியறது!”

துர்க்காவும் பங்கஜத்தைக் கண் கொட்டாமல் பார்த்தாள். “ஆமா. அவா சொன்னது சரிதான். நேக்கு வயசானா நான் உங்க மாதிரிதான் மாறுவேன்னு தோண்றது!” என்று தானும் அவளுடன் சேர்ந்து சிரித்த துர்க்கா, சட்டென்று அவளது மூளை நரம்பொன்று அசைந்து கொடுக்க, “ஆமா? உங்க சொந்த ஊர் எது?” என்று பரபரப்புடன் வினவினாள். அவள் நெஞ்சுக் கூட்டுக்குள் விளைந்த படபடப்பு அவள் செவிகளுக்கே கேட்டது.

“செங்கல்பளையம்.”

“உங்க ஆத்துக்காரர் பேரு?” – துர்க்காவின் இதயத் துடிப்பின் ஒலி அதிகரித்துக்கொண்டே போயிற்று.

“மிஸ்டர் சாமிநாதன்!”

‘தாசரதி’ என்கிற பெயரை எதிர்பார்த்திருந்த துர்க்காவுக்கு அவளது பதிலைக் கேட்டதும் சப்பென்று ஆகிவிட்டது.

– தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation

author

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts