மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 26

This entry is part [part not set] of 42 in the series 20060623_Issue

ஜோதிர்லதா கிரிஜா


பங்கஜத்தின் விழிக் கூர்மையை எதிர்கொள்ள முடியாமல் ராகவன் தலையைத் தாழ்த்திக்கொண்டான்: “பங்கஜம்! உங்களை நான் தனியாப் பாக்கணும்னு சொன்னது என்னோட பிரச்னையைப் பத்திப் பேசறதுக்காக மட்டுமில்லேம்மா. அன்னிக்கு நான் பண்ணின பாவத்தோட பலனை இன்னிக்கு நான் அனுபவிக்கிறேன். தாசரதி ரெண்டாங் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லித் தன்னோட அப்பாவும் அம்மாவும் யோசனை சொன்னது பத்தி ஏங்கிட்ட சொன்னப்போ, ‘அப்படி யெல்லாம் பண்ணாதேடா. அது மகா பாவம்’ னு தான் நான் சொல்லி யிருந்திருக்கணும். தடுக்கப் பாத்திருந்திருக்கணும். அவன் என் பேச்சைக் கேட்டிருப்பானாங்கிறது வேற விஷயம். ஆனா அதுக்கு நான் தூண்டுகோல் போட்டேன். அது உங்களுக்குத் தெரியாது.”

பங்கஜம் சிரித்தபடி குறுக்கிட்டாள் :”இல்லே, தெரியும்! காப்பி எடுத்துண்டு வந்தப்ப என் காதுல நீங்க சொன்னதெல்லாம் விழுந்துது. என் பேரு அடிபடவே, நான் கதவுக்கு வெளியிலேயே நின்னுட்டேன். ‘அவளும் இதே ஆத்துல ஒரு ஓரமா யிருந்துட்டுப் போகட்டும்’ னேள்! அதுக்காக நான் உங்களுக்கு தேங்க்ஸ் தான் சொல்லணும்!”

‘ஒண்ணுக்கு ரெண்டா வெச்சிண்டு ஜமாய்!’ என்று தான் சிரித்ததும் ஞாபகத்துக்கு வர, ராகவனின் முகம் சிவந்து அவன் தலையும் தாழ்ந்த நிலையிலேயே இருந்தது. அவன் விழிகளில் நீர் படர்ந்தது.

“நீங்க வருத்தப்பட வேண்டாம். அப்ப உங்களுக்குச் சின்ன வயசு. அது மாதிரியான எண்ணம், பேச்சு, நடவடிக்கை இதெல்லாமே நாம வளந்த விதத்துல இருக்கிற தப்பு. குறைபாடு. உங்களைச் சொல்லிக் குத்தமில்லே. ‘அவளும் ஒரு ஓரமா யிருந்துட்டுப் போகட்டும்’ னு சொன்னேளே! அவர் கேட்டாரா? இல்லே தானே? அதனால நீங்க தப்பு யோசனை சொன்னதா நெனைச்சு வருத்தப்படாதங்கோ. அந்த யோசனையைக் கேக்காம அவர் என்னை வெர்ட்டியேன்னா விட்டுட்டார்? அதனால, எப்பவுமே செயல்பட்றவா மேலதான் முழுத் தப்பும்! அப்பா-அம்மா தப்பு யோசனை சொன்னா கேக்கறவாளுக்கு மதி எங்கே போச்சு? அவாவாளுக்குன்னு ஒரு மனச்சாட்சியும் சொந்த புத்தியும் இருக்கணுமா, இல்லியா?”

“இருக்கலாம். ஆனாலும், நல்லது சொல்ற ஒரு வழிகாட்டி நண்பனா நான் இருக்கல்லே. மொத்தத்துல ஒரு நல்ல மனுஷனா நான் நடந்துக்கல்லியேம்மா? அந்தப் பாவத்தோட பலன்தான் இப்ப என் பொண்ணு தனி மரமாயிட்டா. இப்ப பாருங்கோ, பொண்களை நாம எப்பிடி எல்லாம் கொடுமைப் படுத்தறோம்கிறதை மகாத்மா காந்தி தான் பேசற கூட்டங்கள்லே யெல்லாம் தவறாம எடுத்துச் சொல்றார். என்னை மாதிரியும் தாசரதி மாதிரியும் இருக்கிற புருஷ ஜென்மங்களைத் திருத்தப் பாக்கறார். ஆனா, நாங்க திருந்தற ஜாதியா! இன்னும் முன்னூறு நானூறு வருஷமானாலும் நாங்க திருந்துவோம்னு நேக்குத் தோணல்லே. .. .. .. அந்த அளவுக்கு எங்களுக்குள்ளே ஒரு திமிர் ஊறிப் போயிருக்கு. இப்ப என்னோட உதாரணத்தையே எடுத்துக்குங்கோ. நேக்குப் பொறந்த பொண்ணு கண்ணைக் கசக்கிண்டு வந்து நிக்கறச்சேதானே எங்களோட தப்புத் தெரியறது? ஒவ்வொரு ஆம்பளைக்கும் ஒரு பொண் கொழந்தையாவது பொறக்கணும். அப்பதான் `நியாயங்கள் புரியும். பொண்டாட்டின்னா ஒரு நியாயம், தான் பெத்த பொண்ணுன்னா வேற நியாயம்னுதானே நாங்க நடந்துக்கறோம்? “

பங்கஜம் சிரித்தாள்: “நியாயங்கள் புரியறதுக்கு ஒவ்வொரு ஆம்பளைக்கும் பொண் கொழந்தை பொறக்கணும்கிற அவசியமே இல்லே, மிஸ்டர் ராகவன்! இப்ப நம்ம காந்தியையே எடுத்துக்குங்கோ. அவருக்கென்ன, பொண் கொழந்தையா இருக்கு?”

ராகவன் தலை உயர்த்திப் பங்கஜத்தைப் பார்த்தான்.

“ரொம்ப சரி நீங்க சொல்றது! நியாய அநியாயங்களைப் புரிஞ்சுக்குறதுக்கு மனுஷத்தனம்தான் வேணும்! .. .. இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லணும். எப்பிடிச் சொல்றதுன்னே தெரியல்லே. தைரியம் வரமாட்டேங்கறது. ஆனாலும் சொல்லித்தான் ஆகணும்.. .. ..”

“எதுவானாலும் சொல்லுங்கோ, மிஸ்டர் ராகவன்! என் மனசு இப்ப விட்டேத்தியா யிருக்கு. நீங்க எது சொன்னாலும் அது என்னைப் பாதிக்காது.”

“இல்லேம்மா, பங்கஜம்! அது உங்களை ரொம்பவே பாதிக்கும். அதான் சொல்றதுக்குத் தயக்கமா யிருக்கு.”

“பரவால்லே, சொல்லுங்கோ. இந்த எண் சாண் ஒடம்புல ஏறாத அம்பில்லே. இப்ப நீங்க சொல்லப் போறதா என்னைப் பாதிக்கப் போறது?”

“.. ம்.. ம்ம்.. உங்களுக்கு ஒரு பிள்ளைக் கொழந்தை பொறந்ததில்லியா?”

பங்கஜத்தின் முகத்தில் துல்லியமான திடுக்கீடு தெரிந்தது. அவள் கண்கள் அகலமாயின. ‘உங்களுக்கு இதெல்லாம் எப்பிடித் தெரியும்?’ என்கிற கேள்வி அவள் பார்வையில் குதித்துக்கொண்டிருந்தது.

“இங்கே, பட்டணத்துல, சுப்ரமணியன்னு நேக்கு ஒரு சிநேகிதன் இருக்கான். அவனோட சிநேகிதன் சேதுமாதவன்கிறவன். அவன் மூலமாத் தனக்குத் தெரிய வந்ததை இவன் தற்செயலா ஏங்கிட்ட சொன்னான். நீங்க ஒண்ணும் தப்பா அவனைப் பத்தி நெனைக்க வேண்டாம். அவன் வம்புக்கு அலையறவனில்லே. பேச்சு வாக்கிலெ சொன்னதுதான்.”

“சேதுமாதவனை நேக்கு நன்னாத் தெரியும் அவர் வம்பு பேசக்கூடியவர் இல்லே. .. சொல்லுங்கோ.”

“எம் பொண்ணு வேற வாழாவெட்டியாத் திரும்பிட்டாளா? ஒரு நாள் தாசரதி கிட்ட, ‘பிள்ளைக் கொழந்தை பொறக்கல்லேங்கிறதுக்காகப் பங்கஜத்தைத் தள்ளி வெச்சியே, இப்ப அவ வேற ஒருத்தனோட பட்டணத்துல வாழ்ந்துண்டிருக்கா. அவளுக்கு ஒரு பிள்ளைக் கொழந்தையும் இருக்கு. அதனால கோளாறு உன் பக்கம் கூட இருக்கலாம்’னு அவனுக்கு எடுத்துச் சொன்னேன். அவன் உங்களோட விலாசம் கேட்டான். உங்களைச் சொல்லக்கூடாத வார்த்தை யெல்லாம் சொல்லித் திட்டித் தீத்தான். உங்களையும் உங்க கொழந்தையையும் கொன்னுடப் போறதாக் கத்தினான். நான் அவன்கிட்ட உங்களைப் பத்திச் சொன்னது அவன் தன்னோட தப்பை உணரணும்கிறதுக்காகவும், அது அவனை உறுத்தணும்கிறதுக்காகவும் மட்டும்தான். ஆனா, அவன் அதை எடுத்துண்டதோ வேற விதத்துல. இப்பிடி அவன் ஒரு முட்டாள்தனமான மொரடனா யிருப்பான்கிறதை நான் துளியும் எதிர்பாக்கல்லே. உங்க விலாசமெல்லாம் தெரியாதுன்னும், என் சிநேகிதன் மூலமாக் கண்டுபிடிக்க முடியும்னாலும் அதைக் கண்டுபிடிச்சுச் சொல்ல நான் தயாரா யில்லேன்னும் திட்டவட்டமாச் சொல்லிட்டேன். அவனோட எண்ணம் ரொம்ப ரொம்பத் தப்புன்னும் எவ்வளவோ எடுத்தும் சொன்னேன்.. .. .. அதுக்கு அப்புறம் நான் அவனைச் சந்திக்கவே இல்லே. .. ஆனா, ஒரு நாள் ஏதோ கல்யாணத்துக்காக மெட்ராஸ் எக்மோர்ல வந்து எறங்கினப்போ, நீங்களும் உங்களோட ஆத்துக்காரரும் கொழந்தையோட அதே ஸ்டேஷன்ல நின்னுண்டிருந்ததை அவன் பாத்திருக்கான்.. ..”

“அவர் என்னைக் கல்யாணம் பண்ணிண்டவர் இல்லே. நீங்க சொன்ன சேதுமாதவன்தான் அவர்.. .. ..அய்யோ! நேக்கு ஒடம்பெல்லாம் நடுங்கறது! .. .. அப்படின்னா, என்னோட கொழந்தையைக் கடத்திண்டு போய்க் கொன்னது அவரா?” – பங்கஜம் கணத்துள் கரைந்து அழலானாள்.

பங்கஜத்தின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியென வழிந்தது.

“அதான் நான் எடுத்த எடுப்பிலேயே சொன்னேன் – உங்களால தாங்கிக்க முடியாதுன்னு. .. என்ன செய்யறது? ஏன்தான் நான் அவன்கிட்ட உங்களுக்கு ஒரு பிள்ளைக் கொழந்தையும் இருக்குன்ற விவரத்தையெல்லாம் ஒளறித் தொலைச்சேனோ!”

பங்கஜம் கண்களைத் துடைத்துக்கொண்டாள்: “நீங்க என்ன பண்ணுவேள்? நீங்க சொன்னது ஒரு நல்ல நோக்கத்தோட. அவர் இந்த அளவுக்குப் போவார்னு நீங்க கண்டேளா என்ன?”

“ஆமாம்மா. நான் ஒண்ணு நெனைக்க, அது வேற மாதிரி முடிஞ்சுடுத்து. தாசரதி ஒரு அப்பாவிக் கொழந்தையைத் தூக்கிண்டு போய்க் கொல்ற அளவுக்குப் போவான்னு நான் கொஞ்சங்கூட எதிர்பாக்கல்லேம்மா. நெனைச்சாலே குலை நடுங்கறது. இப்பிடியும் ஒரு கிராதகனா! என்னால நம்பவே முடியல்லே. என்னை மன்னிச்சுடுங்கோ.. .. இப்ப நான் சொல்ல வந்தது என்னன்னா, அவன் உங்களையும் கண்டுபிடிச்சு.. .. ம்ம்.. ..”

“கொல்லப் போறாராமா? பகவானே! மனுஷா எவ்வளவு பொல்லாதவா! .. .. ஆனா அந்தக் குப்பையிலே குருக்கத்தி மாதிரி – நான் ஏற்கெனவே கல்யாணம் ஆனவங்கிறதைத் துளியும் சட்டை பண்ணாம – என்னை ஏத்துண்டாரே வத்தலப் பாளையம் தங்கம்மா மாமி பிள்ளை, அவாளைப் போலவும் நல்லவா இருக்கத்தான் செய்யறா! பகவான் ஒரு விதத்துல கெட்டது பண்ணினாலும் இன்னொரு விதத்துல நல்லது பண்ணி அதைச் சரிக்கட்டிட்றார்.. .. அப்படி நமக்கு வர்ற கெட்டது கூட நாம போன ஜென்மத்துல பண்ணின பாவத்தோட பலன்தானே? பகவானை எதுக்கு நோகணும்?”

“சரி, இப்ப அவர் எங்கே இருக்கார்? நீங்க ஏன் இங்க இருக்கேள்? சொல்லலாம்னா சொல்லுங்கோ. ஒரு கவலையிலதான் கேக்கறேன்.”

பங்கஜம் எல்லாவற்றையும் சுருக்கமாய்ச் சொல்லிவிட்டு, “போலீஸ்காரனைத் திருப்பி யடிச்சுக் காயப்படுத்திட்டதுனால, அதிக நாளுக்கு ஜெயில்ல போட்டுடுவான்னு சேதுமாதவன் சொன்னார். இப்ப அவரும் ஜெயில்ல இருக்கார். எந்த ஜெயில்ல ரெண்டு பேரும் இருக்கா – ஒரே ஜெயிலா, வேற வேறயான்னு கூட – நேக்குத் தெரியாது. அவர் ஜெயில்லேர்ந்து வெளியில வந்ததும் நான் இங்கே இருக்கேன்கிறதை அவருக்கு யார் சொல்லப்போறா? சேதுமாதவனை அவர் சந்திக்க வாய்க்கணுமே? சந்திச்சா தெரிஞ்சுக்கலாம்.. ..”

சட்டென்று இருவரிடையேயும் ஒரு மவுனம் விளைந்தது. ஆனால், ஒரு சில கணங்களுக்கு மேல் அதைத் தாங்க முடியாமல், ராகவன்தான் அதைக் கலைத்தான்: “பங்கஜம்! என் பொண்ணை நன்னா கவனிச்சுக்குங்கோ, அவ இங்கே பேயிங் இன்மேட்டாத்தான் (paying inmate) இருக்கப் போறா. இங்கே படிப்பு, கைத்தொழில் எல்லாமே சொல்லித் தருவாங்கிறது ஆறுதலான விஷயம். பொண்ணுகளுக்கு ரொம்ப அவசியமும் கூட. எனக்கும் சொத்து, சுகம்னு பெரிசாக் கெடையாது. இருந்த ஒரே வீட்டையும் இவ கல்யாணத்துக்காக வித்துட்டேன். கையில கொஞ்சம் பணம் வெச்சிண்டிருக்கேன். அதுவும் கரைஞ்சின்டே வருது. குந்தித் தின்னா, குன்றும் கரையுமில்லியா? என் காலத்துக்கு அப்புறம், இந்த ஹோம் (home) தான் அவளுக்குப் பாதுகாப்பு.. .. “ என்ற ராகவன் சட்டென்று குரல் தழுதழுக்கக் கண்ணீர் விட்டான்.

“அழாதங்கோ, மிஸ்டர் ராகவன்! நான் அவளைப் பாத்துக்கறேன்.. ..”

கண்களைத் துடைத்துக்கொண்ட ராகவன், “அப்ப, நான் கெளம்பட்டுமா? .. நீங்க எதுக்கும் ஜாக்கிரதையா யிருந்துக்குங்கோ.. .. வெளியிலே எங்கேயும் போகவே போகாதங்கோ, பங்கஜம்!” என்று எழுந்து நின்று கைகூப்பினான்.

“தேங்க்ஸ், மிஸ்டர் ராகவன். ஜக்கிரதையா யிருக்கேன். ஆனா நம்ம ஜாக்கிரதையையும் மீறி, விதின்னு ஒண்ணு இருக்கே? சாகிறதுக்கெல்லாம் நான் பயப்படல்லே. ஆனா, அதுக்கு முன்னாடி என்னை ஏத்துண்ட பெரிய மனுஷரை ஒரு தரமாவது சந்திக்கணும்னு ஆசை! பாக்கலாம். பகவான் என்ன நெனைச்சிண்டிருக்காரோ!”

“அவர் யாரு, என்ன, மத்த விவரமெல்லாம் சொன்னேள்னா, எந்த ஜெயில்ல இருக்கார்ங்கிறதைக் கண்டுபிடிக்க நானும் முயற்சி பண்றேன்.”

“அவர் பேரு சாமிநாதன். ஊரு வத்தலப்பாளயம்.”

“யாரு? பீ.ஏ. சாமிநாதனா!”

“ஆமா. அவரேதான். அவரை உங்களுக்குத் தெரியுமா?”

“ஓரளவு தெரியும். ஆனா தங்கம்மாங்கிறது அவனோட அம்மா பேருன்னெல்லாம் தெரியாது. நாங்க ரெண்டு பேரும் வத்தலப்பாளையம் ஹை ஸ்கூல்லதான் படிச்சோம். ஆனா பழக்கமெல்லாம் கெடையாது. ஏன்னா, நான் அவனுக்கு ரெண்டு வருஷம் சீனியர். .. அப்பவே காந்தி, காங்கிரஸ்னு பேசுவான். கதர்தான் உடுத்துவான். .. ரொம்ப சந்தோஷம்மா.. .. அப்ப நான் வரட்டுமா?”

ராகவன் மறுபடியும் கைகூப்பினான். இறுதியாகப் புறப்படுவதற்கு முன்னால், மகள் சத்தியபாமாவை அழைத்து அவளைப் பங்கஜத்தை வணங்கச் செய்தான். .. ..

‘காலம் மனிதர்களை எப்படி யெல்லாம் மாற்றுகிறது! சிலரைப் புடமிட்ட பொன்னாக்குகிறது. சிலரை மேலும் கெட்டவர்களாக்குகிறது. ராகவன் மாதிரியானவர்கள் பழுத்துக் கனிகிறார்கள். தாசரதி போன்றவர்கள் வெம்பி அழுகிப் போகிறார்கள்! . . .’

ராகவன் கிளறிவிட்டுவிட்ட ஞாபகங்களால், தண்டவாளத்தருகே சிதறுண்டு கிடந்த குழந்தை பதஞ்சலியின் குண்டு முகம் வழக்கத்தை விட இன்னும் அதிகமாய் நினைவைப் புரட்ட, பங்கஜம் கண் கலங்கினாள். நடந்தவற்றில் எதையும் அறியாமல் எங்கோ சிறையில் வாடும் சாமிநாதனைப் பற்றியும் அதிகமாய் எண்ணி அன்றிரவு முழுவதையும் அவள் உறங்காமல் கழித்தாள்.

.. .. கணவன் சிவகுருவுக்கும், அம்மா காவேரிக்கும் தெரியாமல் வள்ளியைச் சந்திக்கச் செல்லுவது துர்க்காவால் இயலவில்லை. .. எப்படியாவது அவளைச் சந்தித்துப் பேச அவாவினாலும், எப்படி என்பதுதான் அவளுக்குப் புரியவில்லை. பெண்கள் வெளியே போகும் வழக்கமே இல்லாத கிராமத்தில் எதற்கு என்றூ காரணம் சொல்லி வெளியே போவது! அவள் தவித்தபடி நேரத்தைக் கழிக்கலானாள். சாவு நேர்ந்த வீட்டார் கோவிலுக்குப் போக முடியாது என்பதால், அப்படி ஒரு பொய்ச் சாக்கில் வெளியே போக முடியாமல், அவள் தவியாய்த் தவிக்கலானாள். அடுத்த தடவை பட்டணத்திலிருந்து ஊருக்கு வரும்போது ஒரு வேளை அது முடியலாம் என்று அவள் நினைத்தாள். ஆனால் அதற்கு நெடுநாளாகும் என்பதால் அவளது குறுகுறுப்பு அதிகமாயிற்று.

.. .. அன்று மாலை அவளைப் பார்க்க அவள் தோழி நீலா வந்தாள். அப்போது சிவகுரு வீட்டில் இல்லை. நீலாவைப் பார்த்ததும் வத்தலப்பாளையத்துக்குப் போவதற்கான ஒரு யோசனை அவளுக்குத் தோன்றியது : “நீலா! வத்தலப் பாளையத்துக்குப் போய் ஒரு ஆளைப் பாக்கணும். ஆனா அது எங்காத்துல யாருக்கும் தெரியக்கூடாது. நீ அங்க ஏதோ அவசர வேலையாப் போகப் போறேன்னும், உன் கூட வர்றதுக்கு என்னைத் தொணைக்குக் கூப்பிட்டேன்னும் எங்கம்மா கிட்ட சொல்லப் போறேன். எதுக்காகங்கிறதை யெல்லாம் நீ கேக்கவே கூடாது. இந்த உதவியை நீ செய்வியா?”

“செய்யறேண்டி!” என்று நீலா அவளுக்கு உதவ முன்வந்தாள்.

“தேங்க்ஸ்டி, நீலா. ஆனா நாம போகப் போறது வத்தலப்பாளைய மாயிருந்தாலும், செங்கல்பாளையம்னுதான் எங்கம்மாகிட்ட சொல்லப்போறேன். சரியா?”

“சரிடி.”

செங்கல்பாளையத்துக்குச் சில தெரிந்தவர்கள் வீடுகளுக்குப் போய்வர துர்க்காவைத் தன்னோடு துணைக்கு அனுப்பி வைக்குமாறு நீலா வேண்ட, காவேரியும் அதற்குச் சம்மதித்தாள். எனினும், “உங்க ஆம்படையான் ஒண்ணும் சொல்ல மாட்டாரேடி?” என்றாள். சிவகுரு இரவு எட்டு மணிக்குத்தான் வருவதாக இருந்தான் என்று சொல்லிவிட்டு நீலாவுடன் துர்க்கா படபடத்த நெஞ்சுடன் புறப்பட்டுவிட்டாள்.

.. .. .. தன் குடிசை வாசலில் வந்து நின்ற துர்க்காவையும் இன்னோர் அய்யர் வீட்டுப் பெண்ணையும் பார்த்துவிட்டு வள்ளி வியப்புடன் எழுந்து வந்தாள். துர்க்கா இன்ன காரியமாக வந்திருந்தாள் என்று அவளுக்கு உடனே புரிந்துவிட்டது.

“வாங்கம்மா!”

“நான் ஒடனே கெளம்பணும், வள்ளி. இன்னைக்கு எங்க ஆத்துக்கு உன்னோட வந்திருந்தாளே சின்னப்பொண்ணுன்னு.. . அவ இங்கதானே இருக்கா?”

“இருக்காம்மா. கூப்பிடட்டுமா?”

“வேணாம், வள்ளி. நானே உள்ள போய் அவளோ¡ட பேசிக்கிறேன். கொஞ்சம் தனியாப் பாத்துப் பேசணும். .. .. நீலா! நீ கொஞ்சம் இங்கேயே இருடி. அஞ்சே நிமிஷத்துல வந்துடுவேன். தப்பா எடுத்துக்காதேடி.”

“நான் ஒண்ணும் எதுவும் நினைக்க மாட்டேன். போய்ப் பேசிட்டு வா.”

குடிசைக்குள் அப்போது சின்னப்பொண்ணு மட்டுமே இருந்ததால், துர்க்காவால் அவளுடன் தயக்கமின்றிப் பேச முடிந்தது.

“இன்னிக்கு வள்ளியோட எங்காத்துக்கு வந்து ஏதோ மோதரம் காட்டினியே, அவாளோட பொண்ணுதான் நான். அப்ப நான் பக்கத்து ரூம்ல இருந்தேன். அப்ப ‘நீ மேலே எதுவும் பேசவேண்டாம்’ னு எங்கம்மா நோக்கு ஜாடை காட்டினதை நான் கதவிடுக்கு வழியாப் பாத்தேன். இன்ன விஷயம்கிறதைச் சொன்னா நன்னாருக்கும். எங்கம்மாவையே அதைப் பத்திக் கேட்டேன். எதுவும் சொல்ல மாட்டேன்னுட்டா மொதல்லே. அப்புறம், வற்புறுத்தினாச் சொல்லிடுவான்னுதான் தோணித்து. ஆனா அது எங்கம்மாக்கு மனக்கஷ்டம் தரும்மோங்கிறதுனால, இப்ப ஓங்கிட்ட வந்திருக்கேன். ஆனா ஒண்ணு. நீ சொல்லப் போற ரகசியம் எதுவானாலும், அது நேக்குத் தெரிஞ்சுட்ட மாதிரி எங்கம்மா கிட்ட நான் காட்டிக்கவே மாட்டேன். சத்தியமா! அதனால நீ தயங்காம ஏங்கிட்ட அதைப் பத்திச் சொல்லலாம்.”

சின்னப்பொண்ணு அதன் பிறகு எல்லாவற்றையும் அவளுக்குச் சொன்னாள்.

“எல்லாத்தையும் சொன்ன நீ என்னை வெள்ளத்துல போடச் சொன்ன தாத்தாவும் பாட்டியும் எங்கப்பனும் யாருங்கிறதை இன்னும் சொல்லல்லே. “

“தெரிஞ்சு என்ன செய்யப் போறே, தாயி?”

“ஒண்ணும் செய்யப்போறதில்லே. ஆனா நான் யாருங்கிறது நேக்குத் தெரியவேண்டாமா?”

“நீ சாமி சத்தியமா அவங்களண்ட போயி எந்தத் தகராறும் பண்ணப்படாது. அதுக்கு ஒத்துக்கிட்டா சொல்லுவேன்.”

“பண்ணவே மாட்டேன், சின்னப்பொண்ணு! நான் இன்னார்ங்கிறது எங்க புக்காத்து மனுஷா யாருக்குமே தெரியக்கூடாது. தெரிஞ்சா, அதனால வேற புதுசா வம்பு வந்து சேருமோன்னோ? அதனால நான் அதைப் பத்தி மூச்சுக்கூட விடமாட்டேன். நான் யாருங்கிறது நேக்குத் தெரியணும்கிறதைத் தவிர வேற எந்த ஆசையும் நேக்கு இல்லே, சின்னப்பொண்ணு! என்னை நம்பு!”

“ .. சின்னக்கொளத்து அக்கிரகாரத்துலே, மொதத் தெருவிலே. எட்டாம் நம்பரு வீடும்மா. தாசரதின்னு அங்க இருக்காரு ஒருத்தரு. அவருதான் ஒன்னோட அப்பா. உங்கம்மா பேரு பங்கஜம். அவங்களுக்கு வரிசையாப் பொட்டப் பிள்ளைங்களாவே பொறந்திச்சுங்கிறதுக்காக, அப்பிடிப் பண்ணினாங்க. மொத ரெண்டு கொழந்தைங்களையும் கூட என்னத்தையோ குடுத்து அவங்க சாவடிச்சிருக்கணும்னு இப்ப தோணுது. மூணாவதாப் பொறந்த உன்னைய, உங்கம்மா பிள்ளைப்பேத்து மயக்கத்துல இருந்தப்ப, ஏங்கிட்ட குடுத்து ஆத்துல வீசச் சொன்னாங்க. தாயி! என்னைய மன்னிச்சுசிரும்மா. மகாலச்சுமி கணக்கா இப்ப வந்து ஏம்முன்னால நிக்கிற ஒன்னையா நான் ஆத்துல போட இருந்தேன்! .. ..” என்ற சின்னப்பொண்ணு கண் கலங்கினாள்.

துர்க்காவுக்குத் தலை சுழல்கிற உணர்ச்சி உண்டாயிற்று. சமாளித்துக்கொண்டு குடிசையை விட்டு வெளியே வந்தாள். தன்னை எதுவும் கேட்கக்கூடாது என்று அவள் சொல்லி வைத்திருந்ததற் கிணங்க, நீலா அவளிடம் ஏதும் கேட்காமல் மவுனமா யிருந்தாள். இருவரும் மிக விரைவாக வீடு திரும்பினார்கள். காவேரிக்கு ஊகமாய் எதுவும் தெரிந்துவிடலாகாது என்பதற்காகத் துர்க்கா தன் முகத்தை இயல்பாக வைத்துக்கொண்டாள். சிவகுரு வீடு திரும்பி யிராததால், அவள் ஒரு நிம்மதிப் பெருமூச்சை உதிர்த்தாள். அவள் தன்னை அலைக்கழித்துக் கொண்டிருந்த நிம்மதிக்குறைவிலும் ஒரு நிம்மதியை அனுபவித்தவாறு சிந்தனையுடன் உள்ளே போனாள்.

காவேரி கூடத்தில் மல்லாந்து படுத்திருந்தாள். அவள் படுத்துக் “கிடந்த” நிலை இயல்பானதா யில்லை என்பது கண்டு துர்க்கா பதற்றத்துடன் அவளைத் தொட்டு அசைத்து, உலுப்பினாள். அவள் தலை தொய்ந்து சாய்ந்ததைக் கண்ணுற்றதும், “அம்மா!” என்று அந்தத் தெருவே கிடுகிடுக்குமளவுக்கான ஓலத்தை அவள் எழுப்பினாள்

.. .. .. அக்கம்பக்கத்தவர்கள் ஓடி வந்தார்கள். காவேரியின் மூச்சு நின்றிருந்ததைப் பெரியவர்கள் உறுதிப்படுத்தினார்கள். அழைத்து வரப்பட்ட மருத்துவரும் அதை உறுதி செய்தார்.

jothigiija@vsnl.net – தொடரும்

Series Navigation

author

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts