எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-6)

This entry is part [part not set] of 42 in the series 20060623_Issue

சி. ஜெயபாரதன், கனடா



தேன்மொழி நாவால் நெகிழ வைப்பவள்!
மீன்விழிக் கணையால் நெஞ்சைப் பிளப்பவள்!
சூழ்ந்த கவர்ச்சி காந்த மண்டலம்! அவ்வலையில்
வீழ்ந்தவர் மீண்டும் உயிர்தெழ மாட்டார்!
வனப்பினில் மயங்கிக் கனவினில் அணைப்போர்
மனதினில் நீங்கா ஓவியம் வரைபவள்!

கிளியோபாத்ராவைப் பற்றி …

“அவளது கனிவுக்குரல் மொழிகள் வாத்திய இசைக் கருவியின் பல்வேறு நாண் கம்பிகள் போன்றவை. மாந்தரின் முகப்புகழ்ச்சி மொழிகள் நான்கு தரப்பின; ஆனால் அவளிட மிருந்தவையோ ஆயிரம்!”

புளூடார்க், கிரேக்க வரலாற்றுப் பதிவாளர் [Plutarch (46-120) A.D.]

வயது ஏறினும் வதங்காது அவள் மேனி!
வழக்க மரபுகளால் குலையாது அவள் பாணி!
வரம்பிலா விதங்களில் அவளோர் வனப்பு ராணி!

வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]

கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!

முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் அண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த அண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. அண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் அண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை அண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன அண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.

அங்கம்: 2 பாகம்: 6

நாடகப் பாத்திரங்கள்:

ஜூலியஸ் சீஸர்: ரோமானியப் போர்த் தளபதி [52 வயது]
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி [20 வயது]
டாலமி XIV: கிளியோபாத்ராவின் தனயன் (கணவன்), எகிப்தின் மன்னன் [15 வயது]
பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா [45 வயது]
போதினஸ்: டாலமியின் பாதுகாப்பாளன் [50 வயது]
தியோடோடஸ்: டாலமியின் ஆசிரியர் [45 வயது]
அக்கில்லாஸ்: டாலமியின் போர்த் தளபதி [53 வயது]
பிரிட்டானஸ்: சீசரின் அரசாங்கச் செயலாளர் [40 வயது]
ரூ·பியோ: சீஸரின் லெ·ப்டினன்ட் [40 வயது]
லூசியஸ் செப்டிமியஸ்: ரோமானிய இராணுவ அதிகாரி [50 வயது]
அபெல்லோடோரஸ்: ஸிசிலியன்

மற்றும்:
பெல்ஸானர்: கிளியோபாத்ராவின் காவலர் காப்டன் [35 வயது]
பெல் அ·ப்பிரிஸ்: மெம்·பிஸ் ரா தேவாலயத்தின் மதாதிபதி.
ரோமானியப் படையாளிகள்.
கிளியோபாத்ராவின் அடிமைச் சேடிகள்.
எகிப்தின் படையாளிகள்

நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. ·பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: பால்ய அரசன் டாலமி, போதினஸ், தியோடோடஸ், அக்கில்லஸ், ஜூலியஸ் சீஸர், ரூபியோ, ரோமானியக் காவலர், எகிப்தின் படையினர், கிளியோபாத்ரா, கம்பள வணிகர்.

காட்சி அமைப்பு: பதினைந்து வயது பால்ய அரசன் டாலமி, [கிளியோபட்ராவின் தமையன் (கணவன்)] பல படிகள் உள்ள பீடத்தின் உயரத்தில் பாதுகாப்பாளர் போதினஸ் அருகில் வர அரச ஆசனத்தை நோக்கிப் படிகளில் ஏறுகிறான். டாலமியின் பயிற்சியாளர் தியோடோடஸ் வலது புறம் படி ஏறுகிறார். படைத் தளபதி அக்கில்லஸ் இடது புறத்தில் இருக்கிறார். மற்ற அரண்மனை அதிகாரிகள், காவலர் சற்று தூரத்தில் கூடி யுள்ளனர். அனைவரும் எழுந்து நின்று மன்னர் டாலமிக்கு வணக்கம் தெரிவித்த பிறகு, அரசன் அமர்ந்த பின் தாமும் உட்காருகின்றனர். சிறிது நேரம் கழித்து ஆங்கே ஜூலியஸ் சீஸர், அவரது அரசாங்கச் செயலாளர் பிரிட்டானஸ் மற்றும் ரோமானியக் காவலர் சிலரும் நுழைகிறார். டாலமியிடம் சீஸர் கப்ப நிதி பற்றிப் பேசும் போது கம்பள வணிகன் ஒருவன் விலை உயர்ந்த கம்பளத்துடன் அவர் முன்பு வருகிறான்.

[முன்வாரத் தொடர்ச்சி]

[அப்போது காவலன் ஒருவன் ஒரு ரத்தினக் கம்பள வணிகனை அழைத்து வருகிறான். வணிகனைத் தொடர்ந்து, மூச்சுத் திணறி அவனது கையாள் கனமான கம்பளத்தைத் தோளில் தூக்கிக் கொண்டு வருகிறான்.]

வாயிற் காவலன்: [வாளை நீட்டி] நில்! யார் நீ? தோளில் எதைத் தூக்கிக் கொண்டு வருகிறீர்?

கம்பள வணிகன்: நான் கம்பள வணிகன்! சிரியாவிலிருந்து வருகிறேன்! சிரியா மன்னர் விலை மதிப்பில்லா ஒரு கம்பளத்தை ரோமாபுரித் தளபதி சீஸருக்கு அனுப்பி யுள்ளார்! சீஸரிங்கு வந்துள்ளாய் நான் அறிந்தேன்! சிறப்பாக நெய்யப்பட்ட இந்தக் கம்பளத்தை நான் நேராக அவரிடம் சேர்க்க வேண்டியது என் பொறுப்பு.

வாயிற் காவலன்: அப்படியா? சற்று பொறு! நாங்கள் சீஸரிடம் வினாவி வருகிறோம். [உள்ளே ஒரு காவலன் செல்கிறான். சிறிது நாழி கழித்து வெளியே வருகிறான்]

இரண்டாம் காவலன்: ரோபாபுரித் தளபதி கம்பளக் கொடையாளியை அழைத்து வரச் சொல்கிறார். [காவலன் கம்பள வணிகனையும், பணியாளியையும் உள்ளே சீஸர் முன்பாக அழைத்து வருகிறான்]

கம்பளி வணிகன்: மகாமகா மேன்மை தங்கிய ஜெனரல் சீஸர் அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். எங்கள் சிரியாவின் மன்னர் விலைமிக்க இந்த கம்பளத்தைத் தங்களுக்கு அளித்துள்ளார்! ஏற்றுக் கொள்வீரா? முதன்முதல் தங்க கம்பிகளைப் பயன்படுத்தி நெய்த கம்பளமிது! ரோம சாம்ராஜியம் காணாத கம்பளமிது!

ஜூலியஸ் சீஸர்: [கம்பளத்தை உற்று நோக்கி] அப்படியா? ஏற்று கொள்கிறேன். வெகு அழகான வேலைப்பாட்டைக் காண்கிறேன். இறக்கி வைத்துச் செல்! சீஸர் நன்றி கூறியதாக சிரியா மன்னருக்குச் சொல்! [ரூபியோவைப் பார்த்து] ரூபியோ கம்பளத்தை வாங்கி என்னறையில் வை! ரோமுக்கு மீளும் போது, மறக்காமல் படகில் ஏற்றிவிடு!

கம்பளி வணிகன்: ஜெனரல் அவர்களே! இது ரோமாபுரிக்குப் போகும் கம்பளமில்லை! தங்கள் அலெக்ஸாண்டிரியா அறையை அலங்கரிக்க வேண்டியது! கம்பளத்தின் வெளிப்படைப்பு வேலைப்பாட்டைப் புகழ்ந்தீர்! அதன் உள்ளழகு வெளியழகை மிஞ்சுவது! நான் விரித்துக் காட்டலாமா? பார்த்தால் பூரித்துப் போவீர்!

ஜூலியஸ் சீஸர்: வேண்டாம்! எனக்கு வேலை உள்ளது! சும்மா வைத்து விட்டுப் போ!

கம்பளி வணிகன்: [பணியாள் கம்பளத்தைக் கீழிறக்கி வைக்க வணிகன் கவனமாக, மெதுவாகத் தரையில் அதை விரிக்கிறான். கம்பளத்துக் குள்ளிருந்து ஓரிளம் மங்கை புன்னகையுடன் உடலை முறித்துக் கொண்டு எழுகிறாள்! [அனைவரும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைகிறார்]

ஜூலியஸ் சீஸர்: [சினத்துடன்] என்ன வேடிக்கையிது? பெண்ணை ஒளித்து வைத்து என்னோடு சிரியா மன்னர் பகடை ஆடுகிறாரா? ஈதென்ன கோமாளித்தனமாக உள்ளது? முதலில் இந்தப் பெண் யாரென்று சொல்ல வேண்டும்! எதற்காக இப்படி ஒளிமறைவில் என்னைக் காண வருகிறாள்? என்னால் இவளுக்கு ஆவதென்ன? அல்லது அவளால் எனக்கு கிடைப்பதென்ன? …யார் நீ? சொல்! கள்ளத்தனமாக கம்பளத்துக்குள்ளே ஏன் ஒளிந்து வந்தாய்? மாயக்காரியா? மந்திரக்காரியா? அல்லது சூனியக்காரியா? யார் நீ?

கிளியோபாத்ரா: [எழுந்து ஒய்யாரமாக நின்று, புன்சிரிப்புடன்] மகாமகா சீஸர் அவர்களே! என்னை யாரென்று தெரியவில்லையா? அரச வம்சத்தில் பிறந்து அரசை யிழந்துவிட்ட அரசியைத் தெரிய வில்லையா?

ஜூலியஸ் சீஸர்: [ஆச்சரியம் பொங்க] யார்? கிளியோபாத்ராவா? நம்ப முடியவில்லையே!

டாலமி: [சினத்துடன்] ஜெனரல்! இவளொரு ஜிப்ஸி! நாடோடி! இவள் கிளியோபாத்ரா இல்லை! நிச்சயமாகக் கிளியோபாத்ரா இத்தனைக் கீழ்த்தரமாகக் கம்பளச் சுருளில் ஒளிந்து வரமாட்டாள்! அவள் நேராக வரும் ஒரு வீர மங்கை! இந்தக் கோமாளி வணிகன் யாரையோ பிடித்து வந்து எகிப்தின் அரசி கிளியோபாத்ரா வென்று ஏமாற்றுகிறான்! [அக்கிலஸைப் பார்த்து] வணிகனைச் சவுக்கால் அடி! அயோக்கியன்! [சீஸரைப் பார்த்து] ஜெனரல்! இந்த கூத்தாடிப் பெண்ணை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள்! அவளை நான் தண்டிக்கிறேன்! [அக்கிலஸைப் பார்த்து] அக்கிலஸ்! அந்த நாடோடிப் பெண், அவள் கைக்கூலி வணிகன், பணியாள் மூவரையும் கைது செய் உடனே! யாரை ஏமாற்ற இந்த நாடகம்?

கிளியோபாத்ரா: [எழுந்தோடி சீஸரின் பின்புறம் நின்று கொள்கிறாள்] மேன்மை மிகு சீஸர் அவர்களே! நான் நாடோடி யில்லை! நாடகம் போடவு மில்லை! நான் கிளியோபாத்ரா! அதோ! அந்தப் பாலகன் டாலமி! என் தமையன் அவன்! நான் மணம் புரிந்து கொண்டவன்! என்னைக் கொலை செய்ய எகிப்தியப் படைகளை அனுப்பிய என்னருமைக் கணவன்! நான் யாரென்று குருநாதர் தியோடோஸைக் கேளுங்கள்! அவர் உண்மை பேசுபவர்! நான் யாரென்று பாதுகாப்பாளி போதினஸைக் கேளுங்கள்! படைத் தளபதி அக்கிலஸைக் கேளுங்கள்! எப்போதும் டாலமி பொய் பேசியே ஏமாற்றுபவன்!

ஜூலியஸ் சீஸர்: [தியோடோடஸைப் பார்த்து] யாரிந்த மங்கை? சொல்! [போதினஸைப் பார்த்து] யாரிந்தக் குமரி? சொல்! [அக்கிலஸைப் பார்த்து] யாரிந்த வாலிப மங்கை? சொல்!

தியோடோடஸ்: ஜெனரல்! அவர் மகாராணி கிளியோபாத்ரா!

போதினஸ்: ஆம் ஜெனரல்! அவர் எகிப்தின் அரசி கிளியோபாத்ரா!

அக்கிலஸ்: மேன்மை மிகு சீஸர் அவர்களே! அவர் எங்கள் டாலமி மன்னரின் மனைவி கிளியோபாத்ரா!

ஜூலியஸ் சீஸர்: [டாலமியைப் பார்த்து] பாலகனே! உன் கண்ணில் கோளாறா? அல்லது மூளையில் கோளாறா? உன் தமக்கையை நாடோடி என்று ஒதுக்கி விட்டாயே! ஏன் அவளைக் கூத்தாடி என்றுக் கேலி செய்தாய்? தந்தத்தில் செதுக்கிய இந்த அழகுச் சிலையா கூத்தாடி?

டாலமி: [கெஞ்சலுடன்] கண்ணே கிளியோபாத்ரா! நலமா? சந்தனத் தண்டுபோல் தளதள வென்றிருந்த நீ எப்படித் தளர்ந்துபோய் மெலிவா யிருக்கிறாய்? பாலை வனத்தில் ஈச்சம் பழத்தைத் தின்று, நீரைக் குடித்தே வாழ்ந்தாயா? பாவம், உன்னைப் பாலை வனத்துக்கு அனுப்பாமல், அரண்மனைச் சிறையிலே நான் பூட்டி வைத்திருக்கலாம்! அரச குமாரியை அனாதை போல் திரிய விட்டது எனது தவறுதான்!

கிளியோபாத்ரா: [சீஸரின் உடை வாளை உருவி, நேரே டாலமியை அருகி அதட்டலுடன்] அடே! அயோக்கியா! போதும் உன் பாசாங்கு! போதும் உன் பரிவு! என்னைக் கண்டு பாகாய் உருகாதே! உன்னைக் கண்டு என் நெஞ்சம் கொதிக்கிறது! இறங்குடா கீழே ஆசனத்தை விட்டு! இந்த தங்க ஆசனம் என் ஆசனம்! நான் அமர்ந்து எகிப்த் ராணியாய் அரசாண்டது! [டாலமி பயந்து நடுங்கி ஆசனத்தை விட்டு எழுகிறான். கிளியோபாத்ரா ஆசனத்தின் முன் நின்று வாளை ஓங்கி விரட்டுகிறாள்] டாலமி! ஓடுடா! உன் கழுத்தைக் காப்பாற்றிக் கொள்! [டாலமி ஓடிப்போய் சீஸரின் பின்னால் ஒளிந்து கொள்கிறான்] … உயிருக்குப் பயந்து ஓடும் ஓணான் நீ! என்னைச் சாகடிக்க நீ அனுப்பிய அதே பாலை வனத்துக்கு நான் உன்னைத் துரத்துகிறேன்! உலக அனுபவம் உண்டாகும் உனக்கு!

டாலமி: [சீஸர் கையைப் பற்றிக் கொண்டு] தளபதி! என்னைக் காப்பாற்றுங்கள்! நான் பாலகன்! இந்தப் பாதகி என்னைப் பாலை வனத்துக்கு அனுப்புவதைப் பார்த்துக் கொண்டு நிற்காதீர்! ஐயோ! கருந்தேள் என்னைக் கடிக்கும்! கருநாகம் என்னைக் கொட்டிவிடும்! நான் ஆளா விட்டாலும், சாக விரும்பவில்லை! காப்பாற்றுவீர் என்னை!

ஜூலியஸ் சீஸர்: [முகத்தைத் தடவி] டாலமி! நீ பாலகன்! உன்னைப் பாதுகாப்பது எம்பணி! கிளியோபாத்ராவை நீ பாலைக்கு ஏன் துரத்தினாய்? அவள் உன் உடன்பிறந்த தமக்கை! நீங்கள் இருவரும் கணவன் மனைவி வேறு! எகிப்தை ராஜா ராணியாய் நீங்களிருவரும் ஒன்றாக ஆள்வதையே நான் விரும்புகிறேன். அதற்காகதான் நான் அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்துள்ளேன்!

கிளியோபாத்ரா: [கோபத்துடன் சீஸரை நோக்கி] தளபதி சீஸர் அவர்களே! உங்கள் ஆசை நிறைவேறாது! டாலமி! பாலகன் வடிவத்தில் காணப்படும் அயோக்கியன்! நாங்கள் இருவரும் ஒரே அரண்மனையில் நிம்மதியாகத் தூங்க முடியாது! எகிப்தை ஈரரசர் ஆள முடியும் என்று கனவு காணாதீர்! எகிப்தியர் இரண்டு அரசருக்குப் பணி புரிய இயலாது! ஒருவர் கழுத்தை ஒருவர் தேடும் இந்தக் கண்ணாமூச்சிப் போராட்டத்தில் யாராவது ஒருவர் கண்மூட வேண்டும்! நிச்சயம் அந்தப் பிறவி நானில்லை!

ஜூலியஸ் சீஸர்: [சினத்துடன்] கிளியோபாத்ரா! போதும் நிறுத்து உன் பேச்சை! டாலமியைப் பலிவாங்க நீ புறப்பட்டு விட்டாய்! உங்களுக்குள் பிரிவும், போரும் நேர்வதை எகிப்தியர் யாரும் விரும்பார்! உள்நாட்டுக் கலவரம் உங்களால் நிகழ்வதை ரோமாபுரியும் விரும்பாது! நீங்கள் இருவரும் எப்படிச் சேர்ந்து நாடாள்வீர் என்பதைப் பற்றி வாதிப்போம்! முடிவு செய்வோம்! டாலமி! என்ன சொல்கிறாய் அதற்கு?

டாலமி: இரட்டையர் ஆட்சிக்கு நான் ஒப்புக் கொள்கிறேன்! ஆனால் கிளியோபாத்ரா அதற்குத் தயாரில்லை! நாட்டை இரண்டாக வெட்டினால் நாங்கள் தனித்தனியாக அரசாட்சி நடத்தலாம்! நிம்மதியாக இரவில் தூங்கலாம்! ஒரே அரண்மனையில் தலைக்குமேல் கத்தி தொங்கும் போது நாங்கள் எப்படி உறங்க முடியும்?

கிளியோபாத்ரா: எகிப்தைத் துண்டாட நான் விடமாட்டேன்! எகிப்து ஒரு நாடு! அதை ஆள்பவர் ஒருவரே! அதுவும் கிளியோபாத்ரா ஒருத்திதான்!

ஜூலியஸ் சீஸர்: தனித்தனி மாளிகையில் குடித்தனம் நடத்துங்கள்! நீங்களிருவரும் சேர்ந்தாண்டால், சைப்பிரஸ் தீவை உங்களுக்குச் சன்மானமாக அளிக்கிறேன்!

போதினஸ்: சைப்பிரஸ் தீவா? ஒன்றும் விளையாத பன்றித் தீவு சைப்பிரஸா? எமக்கு வேண்டாம் அது!

கிளியோபாத்ரா: [முகமலர்ச்சியுடன்] நல்ல நன்கொடை சீஸர்! சைப்பிரஸ் தீவில் நூற்றுக் கணக்கானத் திராட்சைத் தோட்டங்கள் உண்டே! ஒயின் உற்பத்தி செய்து எகிப்து ரோமாபுரிக்கு விற்கலாமே!

ஜூலியஸ் சீஸர்: ஒயினை ஏன் விற்க வேண்டும்? ரோமாபுரி ஆண்டுக் கப்பத்துக்கு ஈடாக அனுப்பலாமே!

டாலமி: கள்ள ராணி! கப்பம் என்றதும் களவு போன பொக்கிசம் நினைவுக்கு வருகிறது! எங்கே பொக்கிச நிதி? கப்பம் கட்டும் நிதியைக் களவாடிப் போனாயே! கொடு அதைச் சீஸர் கையில்! எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய், சொல்?

கிளியோபாத்ரா: டாலமி! அது என் நிதி! தந்தையார் சாகும் போது எனக்கு அளித்தது! அது உன் நிதி என்று யார் சொன்னார்? கணக்கு விபரம் தெரியாத அறிவிலி நீ! வரவு செலவு புரியாத அறிவாளி நீ! என்னைத் துரத்திவிட்டு வரிப்பணத்தை வாங்கத் தவறியவன் நீ! அரசனாகக் காலம் கடத்திய நீதான் சீஸருக்குக் கப்பம் செலுத்த வேண்டும்! நாடு கடத்தப்பட்ட நான் ஏன் தர வேண்டும்?

டாலமி: சீஸர் அவர்களே! உமது கப்பப் பணம் கிளியோபாத்ராவிடம் உள்ளது! அந்தக் கள்ளியிடம் பெற்றுக் கொள்ளுங்கள்! விடாதீர் அந்த வேடக்காரியை! எங்களிடம் பணம் கைவசமில்லை!

கிளியோபாத்ரா: [கனிவுடன் சீஸரைப் பார்த்து] தளபதி! கப்ப நிதி நான் கட்டத் தயார், ஏகப் பெரும் பட்டத்து ராணியாய் நான் மகுடம் சூட்டப் பட்டால்! டாலமி அகற்றப்பட வேண்டும்! நான் தனி ராணியாக ஆசனத்தில் அமர வேண்டும்! சீஸரே! நாமிருவரும் ஒன்று சேர்ந்தால் உலகையே கைப்பற்றலாம்! எனது பெரியப்பா மகா அலெக்ஸாண்டர் கிழக்கே சென்று இந்தியாவைக் கைப்பற்றினார்! எனக்கு அந்தப் பாதை நன்கு தெரியும்! நாமிருவரும் சேர்ந்தால் நமது பராக்கிரமத்தால் சீனாவைக் கூடப் பிடித்து விடலாம்!

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1968]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan June 20, 2006]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts