எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-3)

This entry is part [part not set] of 43 in the series 20060602_Issue

சி. ஜெயபாரதன், கனடா


அவளது கண்கள் தீவிர சக்தி வாய்ந்தவை!
அணங்கின் வனப்பிற்கும் அப்பாற் பட்டவை!
வான்வெளி நிலவையும் வசீகரம் செய்பவை!
வாக்கு வன்மையில் நெகிழ வைப்பவள்!

ஜான் டிரைடென் [John Dryden, Drama: All for Love]

வயது ஏறினும் வதங்காது அவள் மேனி!
வழக்க மரபுகளால் ஒருபோதும் குலையாது
வரம்பிலா விதவித வனப்பு வேறுபாடு!

வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]

“வாழ்க்கையில் நடந்த தொடர் நிகழ்ச்சிகள் யாவும் தானாக நேர்ந்த விளைவுகள் அல்ல! அவை ஒவ்வொன்றும் உள்ளத் தூண்டலின் தேவையால்தான் ஏற்பட்டது!”

ஹன்னா ஸெனிஷ், யூதப் பெண் கவிஞர் [Hanna Senesh (1921-1944)]

கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரைத் தனியாகச் சந்தித்தாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் கள்ளத் தனமாக நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ள வில்லை! முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார்.

சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் அண்டனி, அக்டேவியன், ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்கு வந்த அண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. அண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சினத்தையும், வெறுப்பையும் மார்க் அண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை அண்டனி மீது போர் தொடுத்து வெற்றியும் அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன அண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்.

அங்கம்: 1 பாகம்: 3

நாடகப் பாத்திரங்கள்:

ஜூலியஸ் சீஸர்: ரோமானியப் போர்த் தளபதி [52 வயது]
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி [20 வயது]
டாலமி XIV: கிளியோபாத்ராவின் தனயன் (கணவன்), எகிப்தின் மன்னன் [15 வயது]
·பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா [45 வயது]
போதினஸ்: டாலமியின் பாதுகாப்பாளன் [40 வயது]
தியோடோடஸ்: டாலமியின் ஆசிரியர் [50 வயது]
அக்கில்லாஸ்: டாலமியின் போர்த் தளபதி [35 வயது]
பிரிட்டானஸ்: சீசரின் அரசாங்கச் செயலாளர் [40 வயது]
ரூ·பியோ: சீஸரின் லெ·ப்டினன்ட் [40 வயது]
லூசியஸ் செப்டிமியஸ்: ரோமானிய இராணுவ அதிகாரி [50 வயது]
அபெல்லோடோரஸ்: ஸிசிலியன்

மற்றும்:
பெல்ஸானர்: கிளியோபாத்ராவின் காவலர் காப்டன் [35 வயது]
பெல் அ·ப்பிரிஸ்: மெம்·பிஸ் ரா தேவாலயத்தின் மதாதிபதி.
ரோமானியப் படையாளிகள்.
கிளியோபாத்ராவின் அடிமைச் சேடிகள்.
எகிப்தின் படையாளிகள்

காலம், நேரம், இடம்: கி.மு. 48. எகிப்தின் நீள நைல் நதிக்கருகில் உள்ள பாலைவனம். ஒளிமிக்க பௌர்ணமி முழுநிலவு பொங்கி எழுகிறது. நீல நிற வானில் காளான்கள் முளைப்பது போல் விண்மீன்கள் விழித்தெழுகின்றன. பிரமிட் பின்னால் நிற்க, முன்னால் பிரம்மாண்டமான மனிதத் தலைச் சிங்கம் படுத்திருக்கிறது!

நாடகப் பாத்திரங்கள்: ஜூலியஸ் சீஸர், அவரது லெ·ப்டினன்ட் ரூ·பியோ, ரோமானியக் காவலர் சிலர், கிளியோபாத்ராவின் காப்டன் பெல்ஸானர், உதவிக் காப்டன், எகிப்திய காவலர் சிலர் சிங்கச் சிற்பத்தின் அருகே நடமாடி வருகிறார்கள். திடகாத்திரமும், உடல் உறுதியும் படைத்த பெல்ஸானர் தூரத்தில் வரும் ரோமானியப் படைவீரர் கூட்டத்தைக் கண்டு வியப்புற்று நிற்கிறான்.

ஜூலியஸ் சீஸர்: [பிரம்மாண்டமாக வீற்றிருக்கும் மனிதச் சிங்கச் சிற்பத்தை (Sphinx) நோக்கி] மனிதச் சிங்கமே! கால வெள்ளம் அடித்துச் செல்லாத சிற்பமே! பாலை வனத்தில் மண்புயல் இழுத்துச் செல்லாத மகத்தான படைப்புச் சிற்பமே! வெற்றி மமதையுடன் நீ வீற்றிருக்கிறாய்! உனக்கு ஜூலியஸ் சீஸர் வணக்கம் செய்கிறார்! ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எகிப்தின் பாலைவனக் காவலனாகக் கண்மூடாது நிமிர்ந்து படுத்திருக்கிறாய்! நீயும் நானும் ஒரே குறிக்கோள் உடையவர்! உன்னைப் புரிந்து கொள்வது எப்படிச் சிரமமானதோ, அப்படிக் கடினமானது என்னை அறிந்து கொள்வதும்! சிறுவனாக உள்ள போது நஉன்னைப் பற்றி அறிவேன்! உன் நிழலில் எனது பராக்கிரமும் வல்லமையும் வளர வேண்டும் என்று சிறு வயதில் கனவு கண்டதுண்டு! அக்கனவு மெய்யானது! உங்கள் எகிப்து நாட்டுக்கும் நான் ஓர் அதிபதி! ரோம் பைத்தியகாரின் விளையாட்டுத் தளமாகி விட்டது! ஆனால் எகிப்து நாடு பொன்னும், பொருளும் குவிந்த நாடு! உங்களது நாட்டால் ரோம் செல்வ நாடாகச் செழித்திருக்கிறது! ரோம சாம்ராஜியத்தைத் தாங்கி நிற்கும் பிரதான தூண்களில் எகிப்தும் ஒன்று! உன் மகத்துவம், உன்னதம் வாழ்க! உனது நாட்டுக்கு இரண்டு மன்னர்! ஆண் மன்னர் டாலமி! பெண் மன்னர் கிளியோபாத்ரா! அவர்களிருவரும் ஒருவர் முகம் ஒருவர் பாராமல், ஒருவரை ஒருவர் ஒழித்துக் கட்டத் துணிந்து விட்டார்! யார் தலை விழப் போகிற தென்று தெரிய வில்லை! அவரது சண்டையை நிறுத்த நான் வந்திருக்கிறேன். மன்னர் டாலமிக்கு பதினைந்து வயதாமே! அந்த பாலகன் இந்த நாட்டு வேந்தனா? விளையாட்டுப் பிள்ளை எப்படி வேந்தனாக ஆசனத்தில் அமர்ந்திருக்கிறான்? கிளியோபாத்ராக்கு வாலிப வயதாமே! கவர்ச்சி நங்கையை நான் சந்திக்க வேண்டும். எங்கே ஓடிவிட்டாள் உங்கள் ராணி?

[கிளியோபாத்ராவின் காப்டன் பெல்ஸானர், உதவிக் காப்டன் மற்றும் எகிப்த் காவலர் ரோமானியரை நெருங்கி ஜூலியஸ் சீஸருக்கு ராவணுவ முறையில் வணக்கம் செய்கிறார்கள்]

பெல்ஸானர்: [சீஸர் கையைக் குலுக்கி] வருக, வருக ரோமாபுரித் தளபதி அவர்களே! எகிப்து அரசு உங்களைக் கனிவுடன் வரவேற்கிறது! நான்தான் காப்டன் பெல்ஸானர். அரசி கிளியோபாத்ராவின் காப்டன். இவர்தான் உதவிக் காப்டன்.

ஜூலியஸ் சீஸர்: [புன்னகையுடன்] கனிந்த வரவேற்புக்கு மகிழ்ச்சி. இவர்தான் ரூ·பியோ, லெ·ப்டினென்ட் ரூ·பியோ. அரசி கிளியோபாத்ராவின் காப்டன் என்றால், அரசர் டாலமிக்கு வேறொரு காப்டனா?

பெல்ஸானர்: ஆமாம் ஜெனரல். அக்கில்லாஸ் என்பவர் டாலமியின் போர்த் தளபதி. அரசர் டாலமிக்கு ஆசிரியர் ஒருவரும் உண்டு. தியோடோடஸ் என்பது அவர் பெயர். டாலமியின் முதல் மந்திரி அவர். அவரே அரசாங்க அதிகாரி. பல மொழிகளைக் கற்றவர். ஆனால் எங்கள் அரசி கிளியோபாத்ராவுக்கு ஏழு மொழிகள் எழுதப் பேசத் தெரியும். எகிப்திய மொழியில் எழுதவும், பேசவும் அறிந்த முதல் கிரேக்க அரசி அவர்.

ஜூலியஸ் சீஸர்: கிளியோபாத்ரா எங்கே இருக்கிறார்? நான் அலெக்ஸாண்டிரியா போகிறேன். நான் கண்டு பேச வேண்டும் உங்கள் ராணியை. ஏற்பாடு செய்வீரா?

பெல்ஸானர்: ஜெனரல் அவர்களே! நீங்கள் தேடிப் போக வேண்டாம். அவரே உங்களைக் காணத்தான் முயன்று கொண்டிருக்கிறார். மன்னர் டாலமி எங்கள் அரசியியை நாடு கடத்தி விட்டார்! சிரியா நாட்டில் வசித்து வருகிறார் தற்போது. ஆனால் அவர் சிரியாவில் எங்கே யிருக்கிறார் என்பதை அறிய முடியாது. அவருக்குச் சேதி அனுப்பவும் முடியாது! டாலமியின் ஒற்றர் அவர் ஒளிந்திருக்கு மிடத்தைக் கண்டால், அவரது உயிருக்கே ஆபத்து! அவரைத் தேடிக் காண்பதும் அத்தனை எளிதன்று. டாலமியின் ஓநாய்கள் எங்கள் அரசியைத் தேடி அலைகின்றன!

ஜூலியஸ் சீஸர்: ஏனிப்படி உமது ராணியார் ஒளிந்து, ஒளிந்து உயிர் வாழ்கிறார்? யாரிடம் அத்தனை பயம்! டாலமிக்கு கிளியோபாத்ரா மீது ஏனிந்த வெறுப்பு? அவள் டாலமியின் ச்கோதரி அல்லவா?

பெல்ஸானர்: டாலமியிடம்தான் பயம்! நாடு கடத்திய பிறகும் டாலமி தமக்கையை நசுக்கத்தான் காத்திருக்கிறார். பாலைவனத்தில் அலைய விட்ட பாவை நாளை அவர் உயிரைப் பறிக்க வரலாம் என்று டாலமி அஞ்சுகிறார்.

ஜூலியஸ் சீஸர்: ஆச்சரியமா யிருக்கிறது. டாலமிக்கு அஞ்சுபவர் அரசி கிளியோபாத்ராவா? கிளியோபாத்ராவுக்கு அஞ்சுபவர் அரசர் டாலமியா? எகிப்தின் பால மன்னர்கள் ஒருவரை ஒருவர் பிடிக்கக் கண்ணாமூச்சி விளையாடுகிறாரா? யார் யாரை பிடித்துக் கவிழ்த்தப் போகிறாரோ? …. நான் எகிப்துக்கு வந்திருப்பதின் காரணம் டாலமி கிளியோபாத்ரா இருவரையும் ஒன்று சேர்ப்பதற்கே! ஒரு தந்தைக்குப் பிறந்த இருவரும் கைகோர்த்து எகிப்தை ஆள வேண்டும் என்று ஆசைப் படுகிறேன். அவ்விதமே ரோமா புரியும் ஆசைப் படுகிறது.

பெல்ஸானர்: மதிப்புக் குரிய தளபதி அவர்களே! இருவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்தான்! கணவன் மனைவியாக எகிப்தின் விதிப்படித் திருமணம் புரிந்து கொண்டவர்தான்! ஆனால் இது மிகவும் சிக்கலான ஆட்சி! பிரச்சனை மிக்கது! ஆண் அரசர் போடும் ஒரு சட்டத்தைப் பெண்ணரசர் பிடிக்காமல் நிராகரிக்கிறார்! பெண்ணரசி போடும் சட்டத்தை டாலமி ஏற்றுக் கொள்வதில்லை! இருவருக்கும் இடையில் மக்கள் வேதனைப் படுகிறார்! இருவர் ஒரு நாட்டை ஆள முடியாது! ஒருவர் ஆள ஒருவர் மேற்பார்வை யிடலாம்! ஒருவர் ஆள ஒருவர் ஓய்வெடுத்துக் கொள்ளலாம்! ஆனால் ஒரு நாட்டுக்கிரு மன்னர் கூட்டாட்சி நடத்த முடியாது! யாராவது ஒருவர் ஆள்வதுதான் மதியுடைமை. வயதில் மூத்த, கல்வி ஞானமுள்ள, கலைப் பேறுள்ள எங்கள் அரசி கிளியோபாத்ராதான் நாட்டை ஆளத் தகுதி பெற்றவர்! டாலமி அடுத்தவர் ஆட்டி வைக்கும் கைப்பொம்மை ஆடி வருகிறார்! அவருக்கு வயது பதினைந்து! முகத்தில் இன்னும் பால் வடிகிறது! கல்வி அறிவு, உலக அனுபவம் டாலமிக்குப் போதாது! அவருக்கு எகிப்தைப் பற்றியும் அறிவு போதாது! ரோமைப் பற்றி எதுவும் அறியதவர்!

ஜூலியஸ் சீஸர்: கிளியோபாத்ராவும் வாலிப மங்கை என்று கேள்விப் பட்டேன். பெண்ணரசி நாட்டை ஆள முடியுமா? கண்ணுக்கு மையிடும் மாதரசி, கட்டளை யிட்டுப் படைகளை நடத்த முடியுமா? மென்மை மிகுந்த பெண்ணரசி குதிரை ஏறி, வாள் வீசிப் போரிட முடியுமா? ஆயிரம் ஆயிரம் சேனைகளை ஆணையிட்டு நாட்டைப் பிடிக்க ஆசை உள்ளதா?

பெல்ஸானர்: எமது அரசி மகா வீரர் அலெக்ஸாண்டர் வம்சா வழியில் பிறந்தவர்! மீன் குஞ்சுக்கு நீந்தத் தெரியுமா என்று கேட்கிறீர்! இருபது வயது அரசி கிளியோபாத்ராவுக்கு உள்ள திறமை நாற்பது வயது ரோமானியத் தளபதிக்குக் கூடக் கிடையாது! கணித அறிவு மிக்கவர். விஞ்ஞான அறிவு மிக்கவர். வானியல் ஞானம் உள்ளவர்! தினமும் படிக்கிறார். புதுப்புது மொழிகளைக் கற்கிறார். பூகோள ஞானம் மிக்கவர்! போர் புரியும் வல்லமை உடையவர். அலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுத்துச் சென்று வென்றதைப் படித்தவர்! இந்தியாவுக்குப் பயணம் செய்யும் பாதைகளைக் கூடத் தெளிவாகத் தெரிந்தவர்!

ஜூலியஸ் சீஸர்: ஆச்சரியப் படுகிறேன்! வாலிபத்தின் வாசலில் கால் வைத்த ஒரு பால்ய மங்கைக்கு இத்தனை ஆழ்ந்த அறிவா? மெச்சுகிறேன்! மகா வீரர் அலெக்ஸாண்டர் இந்தியாவுக்குப் போன பாதையை அறிந்தவர், நிச்சயம் மகா அறிவாளியாக இருக்க வேண்டும். கிளியோபத்ராவை நான் நேராகக் காண வேண்டும். உடனே ஏற்பாடு செய்வீரா?

பெல்ஸானர்: ஜெனரல் அவர்களே! கிளியோபாத்ரா எங்கு ஒளிந்துள்ளார் என்று எனக்கே தெரியாது! எங்கள் அரசியைத் தனியாகக் காண்பது அத்தனை எளிய காரிய மில்லை! அவர் ஓரிடத்தில் இரண்டு நாள் தங்குவதில்லை! கொஞ்சம் பொறுங்கள். அவரிடத்தை முதலில் நான் தெரிந்தாக வேண்டும். தெரிந்த பின் உங்களுக்குத் தகவல் அனுப்புவேன்.

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Juliua Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1968]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan May 29, 2006]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts