மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 23

This entry is part [part not set] of 43 in the series 20060602_Issue

ஜோதிர்லதா கிரிஜா


பத்மநாபன் கேட்ட கேள்வியில் தொனித்த கிண்டலைப் புரிந்துகொள்ளாத தேவராஜன், “என்ன சொல்றேள், பத்மநாபன்?” என்றார் விழிகள் விரிய.

“தயவு பண்ணி நான் பேசப்போறதை நீங்க தப்பா எடுத்துக்கப்படாது.”

“இல்லே. சொல்லுங்கோ.”

“பொண்களோட கல்யாண வயசைக் கொறைஞ்ச பட்சம் பதினெட்டுன்னாவது ஆக்கணும்னு காந்தி சொல்லிண்டிருக்காரோன்னோ? அதை நீங்க ஒங்க மாட்டும்பொண்ணு விஷயத்துலே ரொம்பவே சரியா அனுசரிக்கிறேள் போலேருக்கு!”

“என்ன சொல்றேள் நீங்க?” என்று ஒன்றும் புரியாதவர் போன்று அவர் கேட்டாலும், அவரது முகம் சிறுத்து விட்டதிலிருந்து அவர் விஷயத்தைப் புரிந்துகொண்டே கேட்டது பத்மநாபனுக்குப் புரிந்துபோயிற்று.

“நீங்கல்லாம் பெரிய மனுஷா. நான் ஒரு சாமானியன். இவன் வந்து இப்பிடிப் பேசறானேன்னு நீங்க கோவிச்சுக்கக்கூடாது. ஆத்துல இருக்கிற படிக்காத பொம்மனாட்டிகள் கொஞ்சம் முன்ன பின்ன அல்பத்தனமா நடந்துண்டாலும், படிச்ச புருஷா, நாம தான் அவாளுக்கு நியாயத்தை எடுத்துச் சொல்லணும். அதை விட்டுட்டு நாமளும் கண்டுங்காணாதவா மாதிரி யாருக்கு வந்த விருந்தோன்னு பட்டுக்காம இருக்கிறது நியாயமா, சார்? நீங்களே சொல்லுங்கோ. பொம்மனாட்டிகள் சுபாவமாப் பொறாமை பிடிச்சவா. தான் பெத்த பிள்ளையை எவளோ ஒருத்தி புதுசா வந்து உக்காந்துண்டு சொந்தங் கொண்டாட்றாளேன்னு அவாளுக்கு ஒரு வயித்தெரிச்சல் வந்துட்றது. அதே மாதிரிதான் அவாளும் இன்னொருத்தியோட பிள்ளையை அபகரிச்சவாங்கிறதை படிச்சவா – நாம – எடுத்துச் சொல்ல வேண்டாமா?”

பத்மநாபன் தம்முள் பொங்கிய சினத்தை அடக்கிக்கொண்டு – ஆனால் அழுத்தந்திருத்தமான தோரணையுடன் துளியும் தயக்கமில்லாது – பேசியது தேவராஜனின் வாயை அடைத்துவிட்டது. ‘என்ன, ஏது’ என்று நடிப்பாய்க் கேட்பதற்கும் அவரால் முடியவில்லை. அப்படி அவர் கேட்டாலும், அது வெறும் நடிப்பு என்பதைச் சுட்டிக்காட்டும் வண்ணமான இன்னுமொரு கேலிச் சிரிப்பு அவர் முகத்தில் தவழும் என்பதால் அவர் விஷயத்தைப் புரிந்துகொண்டதற்கு அடையாளமாய்த் தலைகுனிந்தார்.

பெரும் பணமும் செல்வாக்கும் உள்ள தம்மைத் தம் சம்பந்தி – அதிலும் பெண்ணைக் கொடுத்திருப்பவன் – அவ்வாறு கேட்டது தம்மைச் சிறுமைப்படுத்தும் விஷயமாய்த் தோன்றினாலும், காந்தியின் பெயரை அவர் சொன்னது அவரை நாவிழக்கச் செய்துவிட்டது.

தலையை உயர்த்தாமலே, “துர்க்கா உங்ககிட்ட சொன்னாளா?” என்றார்.

“அவளா எங்கே, சார், சொன்னா? பாவம், கொழந்தை அவ! என் பொண்டாட்டி அவளைத் தூண்டித்துருவி இல்லாத பொல்லாத கேள்வியெல்லாம் கேட்டதுக்கு அப்புறந்தானே அவ எல்லாத்தையும் சொன்னா? கொஞ்சம் பாத்துக்குங்கோ, சம்பந்தி சார். நீங்களும் ரெண்டு பொண்ணைப் பெத்த்¢ருக்கேள். பொண்ணைப் பெத்தவா குடும்பத்தோடதான் சம்பந்தம் வெச்சுக்கணும்கிறதுக்காகவும் நாங்க உங்காத்துல எங்க பொண்ணைக் குடுத்தோம்! பொண்ணைப் பெத்தவாளுக்குத்தானே பொண்களோட அருமை தெரியும்? அதனாலதான்! சாந்தி முகூர்த்தம்கிற கொண்டாட்டத்தை வெளிப்படையா உங்காத்துல தடுக்கலையே தவிர, அன்னைக்கு எதுவும் நடந்துடக் கூடாதுன்னு உங்க பிள்ளைக்குக் கண்டிப்பாச் சொல்லி வெச்சுட்டேள் போலேருக்கு! அது பத்தி நாங்க கேட்டா, அப்புறம் உங்க ஆத்துக்காரி எங்க பொண்ணைப் படுத்தினா என்ன பண்றதுன்னு பயம் எங்களுக்கு. அதான் இத்தனை நாளும் வாயை மூடிண்டிருந்தோம். அருமையும் பெருமையுமா வளந்தவ துர்க்கா. எளைச்சுப் போயிட்டா. ஆத்துல வேலையும் ஜாஸ்தி போலேருக்கு. கொஞ்சம் உங்க பொண்ணாட்டமா நெனைச்சுக்குங்கோ சார். நீங்க நன்னாருப்பேள்!. ..” என்று தழுதழுத்த பத்மநாபன் தேவராஜனின் கைகளைப் பற்றித் தம் கண்களில் ஒற்றிக்கொண்டார்.

“நான் பேசினது எதுவும் உங்க ஆத்துக்காரிக்குத் தெரியாம இருக்கிறது நல்லது. நீங்களாவே பாத்து ஏதாவது பண்ணுங்கோ. உங்க பிள்ளையும்தானே இதுல சம்பந்தப்பட்டிருக்கார்? கல்யாணம் பண்ணியும் பிரும்மசாரியா உங்க பிள்ளையும் வாழணுமா? நாமெல்லாம் அந்த வயசைத் தாண்டி வந்தவாதானே?”

“சரி, சரி. கண்ணைத் துடைச்சுக்கும். யாராவது வந்துடப் போறா. இனிமே நான் கவனிச்சுக்கறேன். கண்டிப்பா நானே அவ கிட்ட பேசறேன். .. .. மோர் குடிக்கிறேளா?”

“இல்லே, வேண்டாம். .. .. துர்க்காவுக்கோ மாப்பிள்ளைக்கோகூட நான் பேசினது தெரியவேண்டாம்.”

தந்தையின் குரல் கேட்டு, அடுக்களையிலிருந்து அங்கு வந்த துர்க்கா, “வாங்கோப்பா. இப்பதான் வந்தேளா?” என்றாள்.

“ஆமாம்மா. இந்தா. இந்தப் பழத்தையெல்லாம் உள்ள கொண்டுபோய் உங்க மாமியார்கிட்ட குடு.”

“அவா வெளியிலே போயிருக்காப்பா. வந்ததும் குடுக்கறேன். “

“அம்மா, துர்க்கா! உங்கப்பாவுக்கு மோர் கொண்டுவந்து குடும்மா.”

“சரி, மாமா.”

அதன் பின்னர் மறுப்பேதும் சொல்லாது, துர்க்கா கொண்டுவந்து கொடுத்த மோரைக் குடித்துவிட்டு அவர் புறப்பட்டார்.

.. .. .. அன்றிரவு பார்வதியைத் தேவராஜன் மொட்டை மாடிக்கு அழைத்துக்கொண்டு போய் அவளுடன் உட்கார்ந்து நிறையப் பேசினார். ரொம்பவும் எடுத்துச் சொன்னார்:

“இது அநியாயம்டி, பார்வதி! எங்கம்மாவும் உன்னைப் படுத்தியிருக்காதான். நான் இல்லேங்கல்லே. ஆனா உன்னாட்டமாவா பண்ணினா? அந்த அளவுக்கா போனா? நோக்குப் பதினஞ்சு வயசிலேயே கொழந்தை பொறந்தாச்சு. அதை நெனைச்சுப் பாரு, பார்வதி! சின்னஞ்சிறிசுகளைப் பிரிச்சு வைக்கிறது மகா பாவம்டி, பார்வதி! வேண்டாம். இது மாதிரியான பாவாங்கள்ளாம் நம்மைப் பல ஜென்மங்களுக்கும் தொடரும் – நம்ம நெழலாட்டமா.”

பார்வதி சில கணங்களுக்குப் பதில் சொல்லாதிருந்தாள். பிறகு, “சரி. ஆனா ஒண்ணு. அவாளுக்குக் கோட்டையாட்டமா ஒரு வீடு இருக்கோன்னோ? அதை நம்ம சிவகுரு பேர்ல எழுதிவைக்கச் சொல்லுங்கோ!” என்றாள்.

“அது அவாளோட பரம்பரைச் சொத்துன்னு நெனைக்கறேன், பார்வதி. அப்படியெல்லாம் எழுதிவைக்க முடியாது.”

“எல்லாம் நான் விசாரிச்சாச்சு. அதை விக்கற பாத்தியதை கூட அவருக்கு இருக்காம். அதனால உயில் எழுதவும் முடியும். எதுக்கும் கேளுங்கோ.”

“.. .. கேக்கறேன். ஆனா அதுக்காக நீ சிறிசுகளைப் பிரிச்சு வைக்காதே. அதையும் இதையும் சம்பந்தப்படுத்தாதே. வீட்டை எழுதி வாங்கறதைப் பத்தி நான் அப்புறம் சாவகாசமா அவர் கிட்ட பேசறேன்.”

“சரி. .. .. ..”

அன்றிரவு, “துர்க்கா! நீ இன்னையிலேர்ந்து மாடி ரூமுக்குப் போய்ப் படுத்துக்கோ. ஆனா, காலங்கார்த்தால அஞ்சு மணிக்கெல்லாம் டாண்ணு முழிச்சிண்டு கீழே எறங்கி வந்துடணும்! ராத்திரி பதினொரு மணிக்குத்தான் நீ மாடிக்குப் போணும். கீழே எல்லாரும் தூங்கினதுக்கு அப்புறமா! என்ன, புரிஞ்சுதா?” என்ற பார்வதி இப்படி இரண்டு நிபந்தனைகளையும் சேர்த்தாள்.

ஒரு வாரம் கழித்து, மனைவிக்கு வாக்களித்தபடி, தேவராஜன் பத்மநாபனைத் தம் வீட்டுக்கு வரவழைத்து வீட்டைச் சிவகுருவுக்கு அவர் எழுதித்தர வேண்டியது பற்றிப் பேசினார். சுற்றி வளைக்காமல் – துளியும் வெட்கமோ, உறுத்தலோ இல்லாமல் – அவர் நேரடியாகவே அப்படி உடனே பேச்செடுத்தது கண்டு பத்மநாபன் வாயடைத்துப் போய்விட்டார்.

“எதுக்கும் என் சகதர்மிணியைக் கலந்து ஒரு வார்த்தை பேசிட்டு.. .. ..”

“நீர் யாரோட வேணாலும் கலந்து பேசிக்கும்! ஆனா, ‘சரி’ ங்கிற பதில்தான் நேக்கு வேணும்.”

“எங்களுக்கு இருக்கிறதே அந்த வீடு ஒண்ணுதான். மத்த எல்லாத்தையும் வித்தாச்சு. இதையும் மாப்பிள்ளை பேர்ல எழுதி வெச்சுட்டா, அப்புறம் எங்களுக்குன்னு எதுவுமே இருக்காது.. .. ..”

“பொண்ணைப் பெத்தா அப்படித்தான்காணும்! நானும் கூட என்னோட ரெண்டு பொண்ணுகளுக்கும் அமோகமாத்தான் செஞ்சேன். இன்னமும் ஏங்கிட்டேர்ந்து சம்பந்திகள் பிடுங்கிண்டேதான் இருக்கா. அதுக்கு என்ன பண்றது? தவிர உம்ம பொண்ணோட வாழ்க்கை இந்தாத்துல சந்தோஷமாக் கழியணும்னா நீர் அதுக்கு ஒத்துண்டுதான் ஆகணும், ஓய்!”

“ .. .. .. மாப்பிள்ளை ஏதோ பிசினெஸ் பண்ண ஆசைப்பட்றதா நீங்க சொன்ன ஞாபகம்.. .. ..”

“ஆமா. சொன்னேன்தான். ஆனா, அதெல்லாம் கூடாதுன்னுட்டேன். ஊரோட இருந்துண்டு வெவசாயத்தைக் கவனின்னுட்டேன். .. ஏதோ படிச்சுப் பட்டம் வாங்கணும்னான். அவனோட ஆசையைக் கெடுப்பானேன்னு சம்மதிச்சுப் படிக்க வெச்சேன். மூணு பிள்ளைகளுக்கும் பாகம் பிரிச்சுக் குடுத்தாச்சுன்னா என்ன மிஞ்சப் போறது? ஆளுக்கு ரெண்டு வீடு; கொஞ்சம் நெலம்.. .. .. அவ்வளவுதானே? மொத்தமா எல்லாமே ஏங்கிட்ட இருக்கிறவரைக்கும் பணக்காரன்னு பேருதான் பெத்த பேரு. “

“சரி. ஆத்துக்காரியைக் கேட்டுட்டு நாளைக்கோ இல்லேன்னா, நாளைநீக்கியோ வந்து சொன்றேன்.”

“நீர் சொல்லப் போற பதில் எங்களுக்குச் சாதகமாத்தான் இருக்கணும். அதை மட்டும் நெனப்பு வெச்சுக்கும்.”

“ச.. .. ரி.. “

பத்மநாபன் இடிந்து போய் வீடு திரும்பினார். சங்கதியை அவர் சொன்னதும், காவேரி கல்லாய் உட்கார்ந்து போனாள்.

.. .. .. சாமிநாதன் இல்லாத வாழ்க்கை பங்கஜத்துக்குக் கசந்து வழிந்தது. இருபத்துநான்கு மணி நேரமும் அவளுக்கு அவனது நினைப்புத்தான். தென்றலைப் போல் தன் வாழ்க்கையில் சற்றும் எதிர்பாராது வந்து குளிர்வித்த அவன் இனித் தன்னோடு இருக்கும்படியான நிலையே திரும்பிவராமலும் கூடப் போய்விடுமோ என்கிற அச்சத்தால் அவள் உருகத் தொடங்கினாள். அளவிடற்கரிய அவளது துன்பத்தில் அவளுக்கு ஆறுதல் அளித்த ஒரே விஷயம் குழந்தை பதஞ்சலிதான்.

தூங்க முடிந்த நேரம் மிகவும் குறைவாகிவிட்டதால் பங்கஜம் எக்கச்சக்கமாக இராட்டையில் நூல் நூற்றாள். நூற்றபடியே இடைவிடாது அவள் மனம் சாமிநாதனின் வருகைக்காகக் கடவுளை வேண்டிக்கொண்டே இருந்தது. சாமிநாதனின் நண்பர்கள் உடன்பிறந்த சகோதரர்களைப் போல் அவ்வப்போது வந்து விசாரித்துத் தங்களால் இயன்ற உதவிகளை யெல்லாம் அவளுக்குச் செய்துவிட்டுப் போனார்கள். வருகிற போதெல்லாம் சாமிநாதனின் அச்சு இயந்திரப் பங்குத் தொகையைச் சேகரிக்க முயன்று வருவதாகவும், முழுத்தொகையும் சேர்ந்ததும் அதை அவளிடம் தருவதாகவும், ஒரு வங்கியில் அவள் பெயரில் அதைப் போட்டு வைக்க ஏற்பாடு பண்ணுவதாகவும் வாக்களித்தபடி இருந்தார்கள்.

ஒரு நாள் சேதுமாதவன் என்கிற (சாமிநாதனின்) நண்பன் அவளைச் சந்தித்து அதிர்ச்சியான அந்தச் சேதியை அவளுக்குச் சொன்னான். அவளுக்குச் சேரவேண்டிய தொகையுடனும், எல்லா நண்பர்களுடையவும் தனிப்பட்ட நன்கொடையான ஐந்நூறு ரூபாயுடனும் சசிதரன் என்பவன் அவளைச் சந்திக்கத் தன் சைக்கிளில் வந்துகொண்டிருந்தபோது, போலீசாரின் சந்தேகப் பட்டியலில் அவன் இருந்ததால் அவன் பிடித்துச் செல்லப்பட்டுவிட்டதாகவும், அந்தப் பணத்தைப் போலீசார் கைப்பற்றிவிட்டதாகவும் அவன் தெரிவித்த போது அவளைச் சொல்லிமுடியாத ஏமாற்றம் சூழ்ந்துகொண்டது.

அவன் அவளிடம் அது பற்றிப் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் அந்தச் சின்னஞ்சிறிய வாடகை வீட்டின் சொந்தக்காரர் அங்கு வந்தார்.

“உங்களைக் கையும் மெய்யுமாப் பிடிக்கணும்கிறதுக்காகத் தான் நான் இப்ப வந்தேன்!” என்று அவர் தொடங்கியதன் அடிப்படை பங்கஜத்தின் ஊகிக்கும் திறனுக்கு அப்பாற்பட்டதா யிருந்தது. ஆனால், சேதுமாதவனோ வேறு மாதிரி ஊகித்தான். வெள்ளைக்கார அரசாங்கத்துக்கு எதிரான தீவிரவாதக் கும்பலோடு அவன் தொடர்பு வைத்திருப்பதாய் ஏற்கெனவே சந்தேகித்துக் கொண்டிருந்த அந்த மனிதர் அன்று கையும் மெய்யுமாகத் தன்னைப் பிடித்துவிட்டதாய்ச் சொன்னார் என்பதாக!

ஆனால், “என்ன சொல்றீங்க நீங்க?” என்று பங்கஜம் அப்பாவித்தனமாய் வினவியதும், “என்னம்மா, ஒண்ணும் தெரியாத பாதிரி கேக்கறேள்? உங்களைப் பத்தி நேக்கு அப்பப்போ புகார் வந்துண்டிருக்கு – புருஷன் இல்லாம தனியா இருக்கிற உங்களைத் தேடிண்டு கண்டவாளும் இங்கே வறான்னு. .. .. இது கவுரவமான எடம். தெரிஞ்சுதா? நீங்க ஒடனே காலி பண்ணிடணும். இன்னிக்குத் தேதி இருபத்தஞ்சு ஆறது. முப்பதாந்தேதிக்குள்ள .. ..” என்றவரை அடங்கா ஆத்திரத்துடன் சேதுமாதவன் இடைமறித்தான்.

“சார்! அப்படியெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசாதேள். நாங்க கண்ணியமானவா. மிஸ்டர் சாமிநாதனோட சிநேகிதாள். அவர் ஜெயில்ல இருக்கிறதால அப்பப்ப வந்து சில உதவிகளைச் செஞ்சுட்டுப் போறோம். இந்தம்மாவை நாங்க ஒரு தங்கை மாதிரி எண்ணிண்டிருக்கோம். எங்களை எவ்வளவு கேவலமா வேணும்னாலும் பேசுங்கோ. இவாளை அப்படியெல்லாம் பேசாதேள். நாக்கு அழுகிப் போயிடும்!” என்றான் ஆவேசமாக.

“ஊர்ல வம்பு பேசற மாதிரி எதுவுமே இல்லேன்னே வெச்சிண்டாலும், சாமிநாதன் காங்கிரஸ்காரன்கிற ஒண்ணுக்காகவே நான் இந்தப் பொண்ணை வீட்டை விட்டு வெளியேத்தலாம். தெரியுமோல்லியோ? வெள்ளைக்காரனோட விரோதிகளோட சம்பந்தம் வெச்சிண்டிருக்கிறவாளுக்கு என் வீட்டை வாடகைக்கு விட்டா, நேக்கும் தொல்லைதான். .. .. எது எப்படி வேணா இருக்கட்டும். வர்ற ஒண்ணாந்தேதி இந்த வீடு காலியா யிருக்கணும். அவ்வளவுதான்!” என்று திட்டவட்டமாய்ச் சொல்லிவிட்டு அந்த மனிதர் வெளியேறினார்.

“மனுஷா ரொம்ப மோசமானவா, சிஸ்டர். அழாதேள்! கண்ணைத் தொடச்சுக்குங்கோ. .. .. ஆங்! உங்க பிரச்னை தீர்றதுக்கு ஒரு வழி யிருக்கு. ஸ்திரீ சேவா மண்டலின்னு – அநாதை ஆசிரமம் மாதிரி – ஒரு சங்கம் இருக்கும்மா. சிஸ்டர் முத்துலட்சுமிங்கிறவர் அதை ஏற்படுத்தி நடத்தறார். இப்பவே கூட நாம அங்கே போலாம். இந்த மாசம் முடியறதுக்கு இன்னும் அஞ்சே நாள்தான் தானே இருக்கு? இன்னும் கைது ஆகாம மிஞ்சி யிருக்கிறவா நாங்க ரெண்டே பேருதான் . இப்ப கெளம்பி வரமுடியுமா, சிஸ்டர்?”

“கெளம்பறேன். .. ஆமா? அவருக்கு எத்தனை நாள் தண்டனைன்னு தெரிஞ்சுதா?”

“மறியல் செஞ்சப்ப முட்டியில அடிச்ச போலீஸ்காரனை சாமிநாதன் திருப்பி அடிச்சுட்டான். அவனோட லாட்டியைப் பிடுங்கி அதனாலேயே அடிச்சுட்டானாம். அதனால, மத்தவாளுக்குக் குடுக்கிறதைவிட அதிகமான தண்டனை சாமிநாதனுக்குக் குடுப்பான்னு நெனைக்கிறோம். ஒரு மூணு வருஷமவது ஜெயில்ல வெச்சுட்டுத்தான் விடுவான்னு நெனைக்கறேன்.”

“நான் இன்ன எடத்துல இருக்கேன்கிறதை அவர் ஜெயிலைவிட்டு வெளியே வந்ததும் அவர் கிட்ட சொல்லுங்கோ.”

“கண்டிப்பா, சிஸ்டர்!” என்ற சேதுமாதவன் தனக்குள் கசப்பாய்ச் சிரித்துக்கொண்டிருந்தான். அவர்களது அச்சு இயந்திரத்தை அதற்கு முந்திய நாள்தான் போலீஸ் பறிமுதல் செய்து அந்த அலுவலகத்துக்கு முத்திரை (seal) வைத்துச் சென்றிருந்தது. அதன் உரிமையாளர்களைத் தேடிக்கொண்டிருந்தது. சேதியைச் சொல்லுவதற்காக அவன் வந்திருந்தான். இனித் தங்கள் உதவி அவளுக்குக் கிடைக்காது என்பதையும் தெரிவிப்பதற்காக!

.. .. ..ஸ்திரீ சேவா மண்டலி இருந்த தாம்பரம் செல்லுவதற்கு ரெயில்வண்டி பிடிப்பதற்காகப் பங்கஜமும் சேதுமாதவனும் எக்மோர் (எழும்பூர்) இரயில் நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தபோது வேறொரு மேடையில் நின்ற வண்டித்தொடரிலிருந்து தாசரதி இறங்கினான். நிலையத்திலிருந்து வேளியேறுகையில் பிறிதொரு மேடையில் நின்றுகொண்டிருந்த பங்கஜத்தையும் சேதுமாதவனையும் பார்த்தான். எல்லாவற்றுக்கும் மேலாக அவள் கையில் இருந்த குழந்தை அவன் கண்களை அதிகம் உறுத்தியது. ‘என்ன துணிச்சல்! .. .. கொழந்தையும் கையுமா நிக்கறாளே கள்ளப்புருஷனோட! ஆளு அழகாத்தான் இருக்கான். அதான் ஓடிப்போய்ப் பிள்ளை பெத்துன்டிருக்கா. எங்கேயோ ஊருக்குப் போறா போலிருக்கு. இவளை இப்ப தவற விட்டுட்டா அப்புறம் பிடிக்க முடியாம போயிடலாம் .. .. இப்பவே ஏதாவது செய்ய முடியறதான்னு பாக்கணும்.. ..’ – தாசரதி தன் தோளில் தொங்கிக்கொண்டிருந்த துண்டை எடுத்து அதைத் தன் தலையின் மீது முக்காடாய்ப் போட்டுக்கொண்டான். அவர்கள் நின்றுகொண்டிருந்த மேடையை அடைந்த அவன் ஓர் ஒரமாக நின்றுகொண்டான்.

பங்கஜம் ஏதோ சொல்லியபின், தன் குழந்தையைக் ‘கள்ளப் புருஷ’னிடம் கொடுத்துவிட்டு நகர்வதை அவன் கவனித்தான். ‘கொழந்தைக்கு ரெண்டு வயசு இருக்கும் போல இருக்கே?’ – தாசரதி மெதுவாக அவள் ‘கள்ளப் புருஷ’னுக்குப் பக்கத்தில் போய் நின்றுகொண்டான். கையில் பங்கஜத்தின் பெட்டியும் பையும் இருந்ததால், சேதுமாதவன் பதஞ்சலியை ஓர் ஒரமரக நிற்கவைத்துவிட்டு, சரியாக ஒரே தப்படி தாண்டி இருந்த பத்திரிகைக்கடையை நெருங்கிய கணத்தில் தாசரதி மின்னல் விரைவுடன் செயல்பட்டான். சேதுமாதவன் தலை திருப்பிய ஒரே கணத்துள், அந்தக் குழந்தையைத் தூக்கித் தோள்மீது சாய்த்துக்கொண்டான். ஞாபகமாய் அதன் வாயைப் பொத்தினான். பிறகு ஓட்டம் பிடித்தான். நிலையத்தில் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. அவரவர் தத்தம் ஜோலிகளில் மும்முரமாக இருந்தனர்.

கடையில் பத்திரிகை வாங்கிய பிறகு தலை திருப்பிய சேதுமாதவன் திகைத்துத் திடுக்கிட்டான். பதஞ்சலி காணப்படவில்லை. பக்கத்தில் எங்கேனும் நகர்ந்து சென்றிருக்கக்கூடும் என்றெண்ணிப் பதற்றத்துடன் இங்குமங்குமாக ஒடிப் போய்த் தேடிப் பார்த்தான். பத்திரிகை வாங்கப் பிடித்த இரண்டே நிமிடங்களில் – அதிலும் அந்தக் கடை வாசலில் தனக்குப் பின்னால் மிக அருகே நின்றுகொண்டிருந்த – அவன் எங்கும் காணாமல் போய்விட வாய்ப்பில்லை என்றெண்ணி நம்பிக்கையோடு சுற்றிச் சுற்றி வந்தான். பதஞ்சலி கிடைக்கவில்லை. கைப்பெட்டியையும் பையையும் கீழே வைத்துவிட்டுக் குழந்தையைத் துக்கிக்கொள்ளாத தன் மடமையை நொந்துகொண்டான். கழிவறையிலுருந்து பங்கஜம் திரும்பியதும் அவளுக்குத் தான் என்ன சொல்லப் போகிறான் எனும் கிலியில் அவனுக்கு இதயம் படபடத்தது

.. .. .. குழந்தையுடன் விரைந்து வெளியேறிய தாசரதி சற்றுத் தொலைவு நடந்த பிறகு, குறுக்கு வழியில் தண்டவாளத்தை அடைந்து அதன் வழியே விரைவாகச் சென்றான். சற்றுத் தொலைவில் வண்டித்தொடர் ஒன்று வந்துகொண்டிருந்த தட தட வென்னும் ஓசை கேட்கத் தொடங்கியது. அவனது எண்ணத்துக்குத் தோதாக அக்கம்பக்கத்தில் ஆள் நடமாட்டமே இல்லை. தண்டவளத்தில் குழந்தையை நிற்கவைத்து அதன் கால்களைத் தண்டவாளத்துடன் சேர்த்துத் துண்டால் கட்டி இணைத்த பிறகு அவன் ஓடத் தொடங்கினான்.

– தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation

author

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts