ஐயம், சந்தேகம், அயிர்ப்பு (இலக்கிய நாடகம் – பகுதி 8)

This entry is part [part not set] of 43 in the series 20060602_Issue

கரு.திருவரசு


காட்சி- 11

காட்சி நிகழும் இடம்: அழகிய மலைச்சாரல்.

காட்சியில் வருவோர். கவிஞர், புலவர் பக்குடுக்கை நன்கணியார்.

காட்சி நிலை. இருவரும் ஒரு குன்றின்மேல் அமர்ந்திருக்கின்றனர்.

கவிஞர்-

புலவரே! ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் தாங்கள் மற்றவரோடு கொள்ளும் நட்பில், உறவில் தேராமல் ஒரு தெளிவுக்கு வரக்கூடாது. தெளிவுக்கு வந்தபிறகு சந்தேகப்படக்கூடாது.

புலவர்-

மெய்தான் கவிஞரே! பெண்கள் ஆண்களைச் சார்ந்துதான் வாழவேண்டும் என்ற நமது சமுதாய அமைப்பிலே, ஆண்கள் விடுதலைப் பறவைகளாக எதுவும் செய்யலாம், பெண்கள் அவர்களை ஐயப்படக் கூடாதென்றால் எப்படி?

கவிஞ- காலம் மாறிவருகிறது புலவரே! பெண்களும் விடுதலைப் பறவைகளாகப் பறக்கச் சிறகு விரித்துவிட்டார்கள். பெண் விடுதலையை ஆண்கள் தடுக்கவோ கட்டுப்படுத்தவோ கூடாது, அது முடியாது!

புல- அப்படியா, நல்ல செய்திதான்! கோவலன் மாதவி, உதயணன் வாசவதத்தை, நீங்கள் விளக்காமல் விட்ட இராமன் சீதை, இவர்களின் வாழ்க்கை நடப்பைப் பாருங்கள். ஆண்களுக்கு எவ்வளவு தன்னுரிமை! நினைத்ததைச் செய்கிறார்கள்! இந்த உலகத்தில் துரியோதனன், சீநக்கர் போல் எத்தனைபேர் இருக்கிறார்கள்?

கவிஞ- நாம் பார்த்தது பண்பு பற்றிய நிலை. இதில் கணக்கெடுப்பு, புள்ளி விவரம் எல்லாம் சரியாக வருமா புலவரே!

புல- உங்கள் ஐயம் சரிதான் கவிஞரே! வாழ்க்கை என்பது வாணிகம் அல்ல. அதைப் புள்ளிபோட்டுக் கணக்கெடுக்க முடியாது, கூடாது. ஆண் பெண் ஐயப்பாடும் அப்படித்தான்!

கவிஞ- புலவரே, என்ன சொல்லுகிறீர்கள்? இதில் என்னதான் உங்கள் நிலைப்பாடு!

புல- இதில் துலாக்கோல் போட்டு முடிவுக்கு வர முடியாது என்பதுதான் என் கருத்து. நீங்கள் தொடக்கத்தில் பாடினீர்களே திரைப்படப் பாட்டு அதுவே நல்ல தராசுதான்!

கவிஞ- எந்தப் பாட்டைச் சொல்லுகிறீர்கள்! நான் மூன்று பாடல்களின் பல்லவிகளைப் பாடினேனே!

புல- ஆமாம், அந்த மூன்றில் இரண்டைப் பாடுங்கள் போதும்! ஐயம், சந்தேகம், அயிர்ப்பு எனப் பலவாறு நாம் குறிப்பிடும் அந்தக் குணம் அறிவை அசைத்துப் பார்க்கும். சில நிலைகளில் அது தன்னைத் தானேகூட ஐயப்படும். நீங்கள் பாடுங்கள் கவிஞரே!

கவிஞ-

சந்தேகம் தீராத வியாதி- அது

வந்தாலே தடுமாறும் அறிவென்னும் சோதி – சந்தேகம்

(வேறு இசை)

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் – அதற்கு

சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும் – தன்னைத்

(காட்சி நிறைவு – நாடகமும் நிறைவு)
thiru36@streamyx.com

Series Navigation

author

கரு.திருவரசு

கரு.திருவரசு

Similar Posts