எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-2)

This entry is part [part not set] of 39 in the series 20060526_Issue

சி. ஜெயபாரதன், கனடா



வயது ஏறினும் வதங்காது அவள் மேனி!
வழக்க மரபுகளால் குலையாது அவளின்
வரம்பிலா விதவித வனப்பு மாறுபாடு!

அவளது உடல் வனப்பை விளக்கிடப் போனால்,
எவரும் எழுத இயாலாது வர்ணித்து!
தோரணம் தொங்கும் அலங்காரப் பந்தலில்
ஆரணங்கு படுத்திருந்தாள், பொன்னிற மேனி
இயற்கை மிஞ்சியக் கற்பனைச் சிற்பமாம்,
வீனஸ் அணங்கினும் மேம்படும் சிலையவள்!

வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]

கதைச் சுருக்கம்: கிளியோபாத்ராவின் வரலாறு பேராசை, காதல், வஞ்சகம், ஏமாற்றம், மோகம், போகம், சோகம், கொலை, மரணம் ஆகிய அனைத்தும் பின்னிய ஒரு துன்பியல் நாடகம்! கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி நான்கு ஆண்டுகள் ஆண்டபின் மரணம் எய்திய பிறகு ஏழாம் கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். அப்போது கிளியோபாத்ராவுக்கு 17 வயது. பண்டைக் கால எகிப்திய வழக்கப்படிக் கிளியோபாத்ரா 12 வயது தம்பியைத் திருமணம் புரிந்து, அவளே தன் விருப்பப்படி நாட்டை ஆண்டு வந்தாள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்தித் தானே அரசாண்டான்.

சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரைத் தனியாகச் சந்தித்தாள். சீஸரைத் தன் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெறுகிறாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. ரோமாபுரியில் கல்பூர்ணியாவை ஏற்கனவே திருமணம் செய்த சீஸருக்குப் பிள்ளை யில்லாக் குறையைக் கிளியோபாத்ரா தீர்த்தாலும், கள்ளத் தனமான தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ள வில்லை! முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், கிளியோபாத்ரா குழந்தையுடன் சென்று ரோமில் தங்கிய சில தினங்களில், செனட்டர்கள் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். உயிருக்குப் பயந்த கிளியோபாத்ரா உடனே சிறுவனுடன் எகிப்துக்குத் திரும்பினாள்.

சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் அண்டனி, அக்டேவியன், ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. கிளியோபாத்ரா ரோமாபுரி விசாரணைக்கு மீள வேண்டும் என்ற மார்க் அண்டனியின் உத்தரவை மீறுகிறாள். பிறகு நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்கு வரும் அண்டனியைத் தன் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்குகிறாள் கிளியோபாத்ரா. அண்டனியின் காதல் தேனிலவு நீடித்து கிளியோபாத்ரா இரண்டு குழந்தைகளைப் பெறுகிறாள். ரோமானிய செனட்டர்களின் சினத்தையும், வெறுப்பையும் மார்க் அண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படையினர் அண்டனி மீது போர் தொடுத்து வெற்றியும் அடைகிறார்கள். எகிப்தில் தனித்துப் போன அண்டனி தற்கொலை செய்து கொள்கிறான். அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ரா மகனைத் தப்ப வைத்து, மார்பின் மீது நாகத்தைத் தீண்ட விட்டுத் தானும் சாகிறாள். இறக்கும் போது அவளுக்கு வயது 39.

அங்கம்: 1 பாகம்: 2

நாடகப் பாத்திரங்கள்:

ஜூலியஸ் சீஸர்: ரோமானியப் போர்த் தளபதி [52 வயது]
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி [20 வயது]
டாலமி XIV: கிளியோபாத்ராவின் தனயன் (கணவன்), எகிப்தின் மன்னன் [15 வயது]
·பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா [45 வயது]
போதினஸ்: டாலமியின் பாதுகாப்பாளன் [40 வயது]
தியோடோடஸ்: டாலமியின் ஆசிரியர் [50 வயது]
அக்கில்லாஸ்: டாலமியின் போர்த் தளபதி [35 வயது]
பிரிட்டானஸ்: சீசரின் அரசாங்கச் செயலாளர் [40 வயது]
ரூ·பியோ: சீஸரின் லெ·ப்டினன்ட் [40 வயது]
லூசியஸ் செப்டிமியஸ்: ரோமானிய இராணுவ அதிகாரி [50 வயது]
அபெல்லோடோரஸ்: ஸிசிலியன்

மற்றும்:
பெல்ஸானர்: கிளியோபாத்ராவின் காவலர் காப்டன் [35 வயது]
பெல் அ·ப்பிரிஸ்: மெம்·பிஸ் ரா தேவாலயத்தின் மதாதிபதி.
ரோமானியப் படையாளிகள்.
கிளியோபாத்ராவின் அடிமைச் சேடிகள்.
எகிப்தின் படையாளிகள்

பெர்னார்ட் ஷாவின் சீஸர் & கிளியோபாத்ரா நாடகத் துவக்கவுரை

[மெம்·பிஸில் எகிப்தின் தேவாதிபதி கழுகுத் தலையுடைய “ரா” தெய்வத்தின் ஆலயம் [Chief Egyptian Deity “Ra”] இருளடைந்து போயுள்ளது. அங்கிருந்து ஓர் அசரீரிக் குரல் எழுகிறது]

“அமைதி! அமைதி! கேளுங்கள் நான் கூறப் போவதை! எகிப்த் நாடு ரோமாபுரிச் சாம்ராஜியத்தின் கீழிருந்தது. நான்தான் “ரா” தெய்வ அதிபதி. எகிப்த் நாட்டில் ·பாரோ வேந்தர்களின் உன்னதப் பராக்கிரமக் கடவுளாக இருந்தவன், ஒரு காலத்தில்! நான் வணங்கப்பட்ட போது ரோம் நகரம் பண்டைய ரோமாபுரி, புதிய ரோமாபுரி என்று துண்டு பட்டிருந்தது! இரண்டிற்கும் இடையே ரோமானிய மாந்தர் நசுக்கப்பட்டுக் குழப்பத்தில் திண்டாடினர்! பண்டைய ரோமாபுரி ஏழ்மையானது, பேராசை பிடித்தது, கொடூரமானது! தீய எண்ணங்கள் மிக்கது! பாழடைந்த அதன் மனது குறுகியது! சிறுமையும், வறுமையும், இல்லாமையும் நிரம்பியது! பிச்சைக்காரன் குதிரையில் ஏறி அமர்ந்தைப் போலிருந்தது! குதிரையில் உட்கார்ந்த பிச்சைக்காரன் நேராக பிசாசுகளை நோக்கிச் செல்வான், என்று ஒரு பழமொழி சொல்கிறது! பண்டைய ரோமாபுரி வெறுங்கையில் வாளேந்திச் செல்வம் திரட்டும் வழியும், புகழடையும் முறையும் எதுவென்றால், ஏழ்மை நாடுகள் மீது படை யெடுத்துத் திருடிக் கொள்ளை அடிப்பது, மெலிந்தோரை அடிமையாக்கி மிதிப்பது! ரோமானியர் ஏழை மக்களின் நிலங்களைப் பறித்து ரோமாபுரியோடு சேர்த்துக் கொண்டே வந்தார். எகிப்தில் அவ்விதம் ரோமா புரிக்கு அடிமை ஆனபோது, நான் வேதனையில் குமுறிச் சிரித்தேன். காரணம், ரோமானியர் சாம்ராஜியம் பெருகிக் கொண்டே வருகையில், சிறுத்துப் போன அவரது நெஞ்சங்களின் பரிமாணம் மாறாமல் அப்படியே இருந்தன! அடிக்க அடிக்கத் தலை குனியும் எகிப்துக்கு ஆதரவாக ஜூலியஸ் சீஸர் விஜயம் செய்தார்.

ரோமானிய மாந்தர் இரண்டுபட்ட ரோமுக்கு இடையே முரண்டு செய்த போது, வல்லமை கொண்ட போர்த் தளபதி பாம்ப்பி என்பவர் ரோமாபுரியில் மேலோங்கி வந்தார். பாம்ப்பி பண்டைய ரோமைக் கட்டுப்படுத்தி ஆண்டுவந்த தளபதி! படையாட்கள் யாவரும் நோக்கிப் போவது மரணத்தை! படைத் தீரர்களே சமூகத்தில் மேலோங்கி வரமுடியும்! பிறகு அதே சமயத்தில் போர்த் தளப்தி ஜூலியஸ் சீஸர் மேலோங்கி வந்தார். ஆனால் அவர் புதிய ரோமாபுரியின் தீரர்! கடவுளாகப் போற்றப்படும் ·பாரோ மன்னரின் எகிப்தியப் பரம்பரைகள் புதிய ரோமையும், புதிய ரோமா புரியின் வீரர் ஜூலியஸ் சீஸரையும் ஆதரித்து வரவேற்றனர்! பாம்ப்பேயின் நண்பரான ஜூலியஸ் சீஸர் எகிப்திய மன்னர் சார்பில் பண்டைய ரோமின் குறுகிய கட்டுப்பாடுக்கு அப்பால் புதிய வழியில் சென்றார். சீஸர் ஒரு பெரும் பேச்சாளர், சிறந்த அரசியல்வாதி! அண்டை நாடுகளைக் கைப்பற்றிப் பொன்னும், பொருளும் ஏராளமாகச் சேமித்து ரோமில் கொட்டினார்! மேலும் நாடுகளைக் கைப்பற்றிப் போர் வெற்றிகளை அடுத்தடுத்துச் சீஸர் கொண்டு வரவேண்டும் என்று ரோமானியர் எதிர்பார்த்தனர். சீஸர் அந்த வாணிபத்தில் இறங்கி வெற்றிமேல் வெற்றி பெற்று போரில் பலரைக் கொன்றார். கிரேக்க வீரர் மகாஅலெக்சாண்டரைப் போல், வெற்றிப்படைத் தீரனாகப் பேரும் புகழும் பெற்றுத் தன் பெயரை நிலைநாட்டினார்.

ஆனால் ரோமானியர் சட்டம், கடமை பற்றி எப்போதும் பேசிய பாம்ப்பியின் மீது சலிப்புற்றனர். “பண்டைய ரோமின் கடூரச் சட்டங்களை முறிக்க வேண்டும். அப்போதுதான் நான் புதிய ரோம சம்ராஜியத்தை ஆள முடியும்! அவ்விதம் நேராவிட்டால் கடவுள் எனக்களித்த நாடாளும் கொடைப்பரிசு பலன் தராது அழிந்து விடும்,” என்று சீஸர் கலங்கினார். நாளடைவில் நண்பர்கள் பகைவர் ஆயினர்! பாம்ப்பி மறுத்துக் கூறினார்: “சட்டந்தான் எல்லாவற்றும் மேலானது. அதை நீ முறித்தால், நீ உயிரிழக்க வேண்டியதிருக்கும்.” என்று சீஸருக்கு எச்சரிக்கை செய்தார்! சீஸர் நிமிர்ந்து சொன்னார், “சட்டத்தை முறிக்கிறேன் நான்! யார் என்னைக் கொல்ல வருகிறார் என்று பார்க்கிறேன்,” என்று சவால் விட்டு சட்டத்தை முறித்தார். பழைய ரோமின் விதிகளைப் பாதுகாக்கப் பாம்ப்பி பெரும் படை திரட்டிச் சீஸர் மீது போர் தொடுத்தார். சீஸர் ஏட்டிரியாடிக் கடலைத் தாண்டி நழுவி ஓடி விட்டார்! சீஸரைக் கவிழ்த்து, உலகத்தின் முன்பு அவர் முகத்தில் கரியைப் பூச பழைய ரோம் புறப்பட்டது! அதே சமயத்தில் சட்டத்தைப் பின்பற்றும், உன்னத உள்ளம் படைத்த பாம்ப்பியை உயர்த்தினர், பழைய ரோமானியர். பாம்ப்பி சீஸரை விரட்டிக் கொண்டு எகிப்துக்குச் சென்றார். சீஸர் பாம்ப்பியை எதிர்த்து எகிப்தில் போரிட்டார். கடைசியில் இரண்டு ரோமனியப் படைகளும் மோதின! பாருங்கள் பாம்ப்பியின் ரோம் ஒருபுறம்! சீஸரின் ரோம் எதிர்ப்புறம்! இரண்டில் எப்போர் வீரன் மிக்க வலிமை கொண்டவனோ, எகிப்து அவனோடு சேர்ந்து கொண்டு நலிந்தவனை நசுக்க முற்பட்டது. போரின் முடிவில் பாம்ப்பியின் பேராற்றல் நொறுங்கிச் சிதைந்தது. பாம்ப்பியை வஞ்சகமாக வரவேற்ற ரோமானியத் தளபதி லூசியஸ் செப்டிமியஸ் அவனைத் தோற்கடித்தான். முடிவில் பாம்ப்பி கொல்லப் படுகிறான். எகிப்து வெற்றி வீரர் சீஸரை வரவேற்று உபசரித்தது!

ரோமானியரின் உட்புறச் சண்டைகளைக் கேட்டு சலிப்படைந்தீரா? பாருங்கள், இதோ வருகிறாள், கிளியோபாத்ரா! அந்த ஒழுக்கமற்ற நங்கையின் கதையைக் கேட்க வேண்டுமா? வசீகர மங்கை கிளியோபாத்ராவின் வரலாறைக் கேட்க ஆசைப் படுகிறீரா? அவள் வாலிபம் பெறாத ஓர் வனப்பு மங்கை! ஆயா ஒருத்தி ஆட்டிப் படைக்கும் கைப்பொம்மை அவள்! எமது எகிப்து நாட்டில் சீஸர் இப்போது கால்வைத்திருக்கிறார். இனிமேல் வரும் கதையை நான் சொல்ல மாட்டேன். நீங்களே அதைக் காணப் போகிறீர்! அமைதியாக அமர்ந்து நாடகத்தைப் பாருங்கள். வருகிறேன் நான்! தயவு செய்து எனக்குக் கைதட்டாதீர்!

******************************

காலம், நேரம், இடம்: கி.மு. 48. எகிப்தின் நீள நைல் நதிக்கருகில் உள்ள பாலைவனம். ஒளிமிக்க பௌர்ணமி முழுநிலவு பொங்கி எழுகிறது. நீல நிற வானில் காளான்கள் முளைப்பது போல் விண்மீன்கள் விழித்தெழுகின்றன. பிரமிட் பின்னால் நிற்க, முன்னால் பிரம்மாண்டமான மனிதத் தலைச் சிங்கம் படுத்திருக்கிறது!

நாடகப் பாத்திரங்கள்: ஜூலியஸ் சீஸர், அவரது லெ·ப்டினன்ட் ரூ·பியோ, ரோமானியக் காவலர் சிலர், கிளியோபாத்ராவின் காப்டன் பெல்ஸானர், உதவிக் காப்டன், எகிப்திய காவலர் சிலர் சிங்கச் சிற்பத்தின் அருகே நடமாடி வருகிறார்கள். திடகாத்திரமும், உடல் உறுதியும் படைத்த பெல்ஸானர் தூரத்தில் வரும் ரோமானியப் படைவீரர் கூட்டத்தைக் கண்டு வியப்புற்று நிற்கிறான்.

பெல்ஸானர்: அதோ ரோனியப் படையினர்! யாரது ரோமானியப் படைகள் முன்னே பீடு நடையிட்டு வருவது? எங்கோ பார்த்த முகம் போல் தெரிகிறது. யாராக இருக்க முடியும்? போருடை அணியாத வயதான மனிதராகத் தெரிகிறது! அடே அப்பா! என்ன உயரம்? என்ன கம்பீரமான தோற்றம்? பின்னால் வருவர் யாரென எனக்குத் தெரியும். ராணுவ உடையில் இருப்பவர் ரூ·பியோ. ஜூலியஸ் சீஸரின் ரோமானிய லெ·ப்டினென்ட்! ரூ·பியோவுக்கு முன்னால் சிங்கம் போல் நிமிர்ந்து வருபவர் யார்?

உதவிக் காப்டன்: காப்டன்! பார்த்தால் ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸர் போல் தெரிகிறது. ஆமாம், அவருக்குப் பின்னால் வருபவர் நிச்சயம், லெ·ப்டினன்ட் ரூ·பியோதான். ஆனால் சீஸர் எதற்காக போருடை யின்றி, மாறு வேடத்தில் வருவது போல் வர வேண்டும்? … அதோ சீஸர் சிங்கச் சிற்பத்தின் முன்பாக நிற்கிறார். மனிதச் சிங்கத்தை உற்று உற்றுப் பார்க்கிறார் சீஸர்! அதன் கம்பீரத் தோற்றத்தைக் கண்டு பிரமித்து நிற்கிறார்!

ஜூலியஸ் சீஸர்: [பிரம்மாண்டமாக வீற்றிருக்கும் மனிதச் சிங்கச் சிற்பத்தை (Sphinx) நோக்கி] மனிதச் சிங்கமே! கால வெள்ளம் அடித்துச் செல்லாத ஸ்·பிங்ஸ் சிற்பமே! பாலை வனத்தில் மண்புயல் இழுத்துச் செல்லாத மகத்தான படைப்புச் சிற்பமே! வெற்றி மமதையுடன் நீ வீற்றிருக்கிறாய்! உனக்கு ஜூலியஸ் சீஸர் வணக்கம் செய்கிறார்! ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எகிப்தின் பாலைவனக் காவலனாக நிமிர்ந்து கண்ணிமைக்காது படுத்திருக்கிறாய்! முதிய உன் வயதுக்கும், பெருத்த உன் வடிவுக்கும் நான் தலை குனிந்து வணங்குகிறேன். பல நாடுகளைக் கைப்பற்றி நான் இப்போது உன் முன் நிற்கிறேன். உன் நாட்டை எங்கள் ரோமாபுரி அடிமைப் படுத்தினாலும், உன் முன் நான் தவழ்ந்து வரும் ஒரு சிறுவனே! பிரமிக்கத் தக்க பிரமிட்களைக் கட்டி ·பாரோ மன்னர் உன்னைப் பாலைவனத்தில் உருவாக்க எத்தனை ஆண்டுகள் எடுத்தனரோ? எத்தனை ஆயிரம் பணியாட்கள் உன்னையும், உன் பின்னால் நிற்கும் பிரமிடையும் எழுப்பினாரோ? எத்தனை பேர் உங்களைப் படைக்கும் போது செத்தனரோ? உன்னை விட வயதில் நான் சின்னவன் ஆயினும், இந்தப் பாலை வனத்தில் உனக்கு நிகரானவன் நான்! சமமான வல்லமை படைத்தவன் நான்! நீ படுத்தே கிடக்கிறாய்! போர் தொடுத்தே நான் வாழ்கிறேன்! பொறுமையாக அமர்ந்து வேடிக்கை பார்க்கிறாய் நீ! போராடிக் களைத்து ஓய்வெடுக்க வந்துள்ளேன் நானிங்கு! மகத்தான மனிதச் சிங்கமே! நீயும் நானும் ஒரே குறிக்கோள் உடையவர்! உன்னைப் புரிந்து கொள்வது எப்படிச் சிரமமானதோ, அப்படிக் கடினமானது என்னை அறிந்து கொள்வதும்! சிறுவனாக உள்ள போது நான் உன்னைப் பற்றி அறிவேன்! உன் நிழலில் எனது பராக்கிரமும் வல்லமையும் வளர வேண்டும் என்று சிறு வயதில் கனவு கண்டதுண்டு! இன்று அக்கனவு மெய்யானது! உங்கள் எகிப்து நாட்டுக்கும் நான் ஓர் அதிபதி! ரோம் பைத்தியகாரின் விளையாட்டுத் தளம்! ஆனால் எகிப்து நாடு பொன்னும், பொருளும் குவிந்த நாடு! ரோம் உங்களது நாட்டால் செல்வ நாடாகச் செழித்திருக்கிறது! ரோம சாம்ராஜியத்தைத் தாங்கி நிற்கும் பிரதான தூண்களில் எகிப்தும் ஒன்று! உன் மகத்துவம், உன்னதம் வாழ்க! உனது நாட்டுக்கு இரண்டு மன்னர்! ஆண் மன்னர் டாலமி! பெண் மன்னர் கிளியோபாத்ரா! அவர்களிருவரும் ஒருவர் முகம் ஒருவர் பாராமல், ஒருவரை ஒருவர் ஒழித்துக் கட்ட விழிப்பாக உள்ளார்! யார் தலை விழப் போகிற தென்று தெரிய வில்லை! அவரது சண்டையை நிறுத்த நான் வந்திருக்கிறேன். மன்னர் டாலமிக்கு 12 வயதாமே! அந்த பாலகன் இந்த நாட்டு வேந்தனா? விளையாட்டுப் பிள்ளை எப்படி வேந்தனாக ஆசனத்தில் அமர்ந்திருக்கிறான்? ஆமாம் கிளியோபாத்ராக்கு 20 வயதாமே! கவர்ச்சி நங்கையை நான் சந்திக்க வேண்டும். எங்கே ஓடிவிட்டாள் உங்கள் ராணி?

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Juliua Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1968]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan May 22, 2006]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts