ஐயம், சந்தேகம், அயிர்ப்பு (இலக்கிய நாடகம் – பகுதி 7)

This entry is part [part not set] of 39 in the series 20060526_Issue

கரு.திருவரசு


காட்சி – 10
காட்சியில் வருவோர்: அமைச்சர் சீநக்கர், அவர் மனைவி, பொய்யாமொழிப் புலவர்.
காட்சி நிகழும் இடம். அமைச்சர் சீநக்கரின் வளமனையில் அவர் படுக்கை அறை.
காட்சிநிலை. பொய்யாமொழிப்புலவர் படுக்கையில் அமர்ந்து சுவடியிலிருந்து திருக்குறளைப் பாடலாய்ப் படித்துக்கொண்டிருக்கிறார்.
பொ, புலவர்-
தேறற்க யாரையும் தேராது! தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள் (குறள் 509)
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும் (குறள் 510)
(படித்துக்கொண்டிருந்தவர், அமைச்சரின் வருகையை எதிர்பார்த்துக் களைத்த நிலையில்)
என்ன இன்று சீநக்கர் வர இவ்வளவு தாமதம்! நேரமோ நள்ளிரவை நெருங்கும் போலிருக்கிறது. உம்,… களைப்பும் உறக்கமும் கண்ணைச் சுழற்றுகிறதே!
தேறற்க யாரையும் தேராது! தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள் (குறள் 509)
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும் (குறள் 510)
(என்று சுவடியைப் படிப்பதும் வழியைப் பார்ப்பதுமாக இருந்தவர் அப்படியே படுக்கையில் சாய்ந்துவிடுகிறார். படுத்தவர் சில நொடிகளில் படுக்கையின் உள்பக்கம் புரண்டு, வருவோருக்கு முதுகைக் காட்டிய நிலையில் உறங்கிப்போகிறார். சில நொடிகளில் அமைச்சர் சீநக்கரின் மனைவி அங்கே வருகிறார்.)
சீநக்கர் மனைவி-
(அரண்மனையிலிருந்து திரும்பிவந்த கணவர்தான் படுத்திருக்கிறார் என எண்ணி) என்ன, இவர் எப்போது அரண்மனையிலிருந்து திரும்பினார்? நம்மை அழைக்காமலே வந்து படுத்துறங்கிவிட்டாரே! உம், அமைச்சரென்றால் அவ்வளவு வேலையோ!… எழுப்பினாலும் சத்தம் போடுவார். சரி நாமும் படுத்துக்கொள்ளவேண்டியதுதான்! (என்றவாறு அவருக்குப் பக்கத்தில் மெதுவாக அலுங்காமல் படுத்துக்கொள்கிறார். சில நொடிகளில் சீநக்கர் அங்கே வருகிறார்.)
சீநக்கர்- என்ன இவள்! பேதை, பேதை! படுக்கையில் படுத்திருப்பது நானா, புலவரா என்றுகூடக் கவனியாமல் படுத்திருக்கிறாளே! (கொஞ்சம் உரக்க) இருவரும் கொஞ்சம் ஒதுங்கிப் படுக்கிறீர்களா, நானும் படுத்துக்கொள்கிறேன்!
மனைவி- (குரல்கேட்டு எழுந்து திடுக்கிட்டுப் பதற்றமாக) என்னது, என்னது! நீங்கள் இப்போதுதான் வருகிறீர்களா! அப்படியானால் இங்கே படுத்திருப்பது?… ஐயகோ! (என்ற குரல்கேட்டு புலவரும் விழித்து எழுந்துவிடுகிறார்)
புலவர்- என்ன, நான் உறங்கிவிட்டேனா! அம்மையாரும் இங்கே எப்படி? அவர்களும் படுத்துவிட்டார்களா! ஐயகோ, என்ன பிழை! என்ன பிழை! (என்று பதறுகிறார்)
மனைவி- ஐயகோ, அடிகளே! நான் தாங்கள்தான் படுத்திருக்கிறீர்கள் என… பொறுத்தருங்கள், பொறுத்தருளுங்கள்! (சீநக்கரின் மனைவி பயமும் வெட்கமும் கொண்டு எழுந்து ஓடிவிடுகிறார். புலவர் தொடர்கிறார்)
புலவர்- சீநக்கரே! உங்களை எதிர்பார்த்தபடி திருக்குறள் படித்துக்கொண்டிருந்தவன் அப்படியே உறங்கிவிட்டேன். அம்மையாரும் நீங்கள்தான் படுத்துறங்குகிறீர்கள் என நினைத்துப் படுத்துவிட்டார் போலும்…
சீநக்கர்- புரிகிறது, புரிகிறது புலவரே! நீங்கள் ஏன் எதற்காகப் பதறுகிறீர்கள்! படுத்துக்கொள்ளுங்கள். நானும் படுக்கிறேன். காலையில் பேசிக்கொள்வோம்!
புலவர்- என்ன நண்பரே, மிகவும் சாதாரணமாகச் சொல்கிறீர்கள்! அம்மையார் வேறு வெலவெலத்துப்போய் வெளியே ஓடிவிட்டார்களே!
சீநக்கர்- அதற்கென்ன புலவரே, அவளைத் தெரியாதா உங்களுக்கு , அவள் பாவம் பேதை! வஞ்சமில்லாதவள்! நீங்களும் எதிர்பார்த்தா இது நடந்தது! எண்ணம் தெளிவாக இருந்தால் எந்தப் பிழையும் நடவாது.
புலவர்- நண்பரே உங்கள் பெருந்தன்மை பெருமனதோடு பேசுகிறது. எனக்கென்னவோ நெஞ்சம் நெருடுவதுபோல இருக்கிறது!
சீநக்கர்- நெருடுகிறதா? என்னை உறக்கம் வருடுகிறது புலவரே! நீங்களும் படுத்து உறங்குங்கள். மற்றவற்றை விடிந்ததும் பேசுவோமே! இறைவா!… (என்று படுத்துக்கொள்கிறார். புலவரும் தலையை ஆட்டிக்கொண்டே படுக்கின்றனர்.)
(காட்சி நிறைவு)

—————————
thiru36@streamyx.com

Series Navigation

author

கரு.திருவரசு

கரு.திருவரசு

Similar Posts