மறுபடியும் ஒரு மகாபாரதம் அத்தியாயம் – 22

This entry is part [part not set] of 39 in the series 20060526_Issue

ஜோதிர்லதா கிரிஜா


பொல பொலவென்று உதிர்ந்த பங்கஜத்தின் கண்ணீரைப் பார்த்ததும் சாமிநாதனின் நண்பர்கள் பதறிப்போனார்கள்.

“பயப்படாதங்கோ, மிஸஸ் சாமிநாதன்! உங்க பங்குக்கு உண்டான அச்சடிக்கிற மெஷினோட விலையை நாங்க உங்ககிட்ட குடுத்துட்றோம். அதுக்கு ஒரு மாசமாவது ஆகும். அதுவரையில உங்க செலவுக்கு இதை வெச்சுக்குங்கோ,’ என்று அவர்களில் ஒருவன் கொஞ்சம் பணத்தை எடுத்து நீட்டியவாறு சொல்ல, “வேண்டாம். ஏங்கிட்ட இப்ப சத்திக்குக் கொஞ்சம் பணம் இருக்கு,” என்று அவள் வலுவாக மறுத்தாள். ஆனால், அங்கிருந்த மேசை மீது சில ஐந்து ரூபாய்த் தாள்களை அவர்கள் வைத்துச் சென்றனர் .

.. .. .. சின்னக்குளத்தில் தாசரதியின் வாழ்க்கை பல ஏமாற்றங்களுடன் கழிந்துகொண்டிருந்தது. அவனுக்கு வாய்த்த இரண்டாம் மனைவி வாயாடியாக இருந்தாள். அந்தக் காலத்தில் மாமியாரின் படுத்தல் பரவலாக நடந்துகொண்டிருந்த போதிலும், அவர்கள் வீட்டைப் பொறுத்த வரையில் அந்த வாயாடி மருமகள் கல்யாணியின் கைதான் ஓங்கி யிருந்தது. கொஞ்சம் ஏமாந்தால் மாமியாரை நோக்கிக் கை ஓங்கக் கூடியவளாகத்தான் அவள் இருந்தாள்! அதனால், தாசரதியின் வாழ்க்கை நரகமாயிற்று. அடிக்கடி தன் முதல் மனைவி பங்கஜத்தைப் பற்றி அவன் நினைக்கலானான். ‘எவ்வளவு நல்லவள் பங்கஜம்! எவ்வளவு சாது! என் பேச்சுக்கும், அம்மாவின் பேச்சுக்கும் மறு பேச்சுப் பேசாதவள். அதனால் என் வாழ்க்கை அமைதியாகக் கழிந்துகொண்டிருந்தது. ரொம்பவுமே பணக்கார இடத்துப் பெண்ணாய்த் தேடி அம்மாவும் அப்பாவும் என் தலையில் கட்டியதில் என் வாழ்க்கை கொடு நரகமாகத்தான் போயிற்று. .. .. ஒரு நடை செங்கல்பாளையத்துக்குப் போய்ப் பங்கஜத்தைப் பார்த்தால் தான் என்ன? வாராவாரம் அம்மா அப்பாவுக்குத்தெரியாமல் போக்குவரத்து வைத்துக்கொள்ளலாமே! நான் அவளுக்குத் தாலி கட்டினவன். என்னைத் தள்ளிவிடுவாளா என்ன! இத்தனை நாளும் இந்த எண்ணம் எப்படி எனக்கு வராமல் போயிற்று? எவ்வளவு அழகு பங்கஜம்தான்! என்ன செழுமையான உடம்பு! அடியம்மா! கிள்ளக் கூடச் சதை யில்லாத உடம்பு இந்தக் கல்யாணிக்கு. ராகவனின் யோசனைப் படி முரண்டு பிடிக்காமல் என்னோடு என் முதல் பெண்டாட்டியும் வாழ்வதற்கு ஒப்புக்கொள்ளுகிற பெண்ணுக்குத்தான் நான் தாலி கட்டுவேன் என்று சொல்லி அதைச் சாதித்திருந்திருக்க வேண்டும் நான்! .. .. ..’

ஒரு ஞாயிறன்று தாசரதி செங்கல்பாளையத்துக்குப் போனான்.

.. .. ..சாவதற்கு முன்னால் தன்னினைவு அரையா யிருந்த நிலையில் தங்கம்மா பலமணி நேரம் தொடர்ந்து பிதற்றியதிலிருந்து சாமிநாதன் பங்கஜத்தோடு சென்னைப் பட்டணத்தில் குடித்தனம் வைத்திருந்ததும், அவள் உண்டாகி யிருந்ததும் அந்த ஊர்க்காரர்களுக்குத் தெரிந்து போய்விட்டன. அந்தப் பிதற்றல் நின்ற ஒரு கணத்தில் தான் தங்கம்மா தன் பிள்ளை தனக்குக் கொள்ளி போடக்கூடாதென்று சொல்லி அவனது விலாசத்தைத் தெரிவிக்கவும் மறுத்திருந்தாள். செங்கல்பாளை யத்து மனிதர்கள் சிலரைச் சந்தித்து மேற்படி விவரங்களைத் தெரிந்துகொண்ட தாசரதியின் இரத்தம் கொதித்தது. ‘என்ன நெஞ்சழுத்தம்! எவ்வளவு திமிர்! நான் ஒருவன் உயிரோ டிருக்கும்போது இன்னொருவனிடம் தாலி வாங்கியிருக்கிறாளே! ஒருகால், தாலி கட்டிக்கொள்ளாமல் ‘வைப்பாட்டி’ யாக வாழ்ந்துகொண்டிருக்கிறாளோ என்னவோ? என்ன அக்கிரமம் இது! சாது போல் நடந்துகொண்டதெல்லாம் வெறும் நடிப்புத்தான்! என்ன வேஷதாரி! எப்பேர்ப்பட்ட அக்கிரமக்காரி அவள் தான்! சுருக்கமாய்ச் சொன்னால் ஒரு விபசாரி! பட்டணத்துக்குப் போய் அவள் இருக்குமிடத்தை எப்படியாவது கண்டுபிடித்து அவள் கழுத்தை நெரித்தாலும் தப்பில்லை! உண்டாகி வேறு இருக்கிறாளாமே! என்ன அசிங்கமிது! எவ்வளவு கேவலமானவள்! நல்ல குலஸ்திரீயா அவள்? பிடாரி! பரத்தை! அவள் குழந்தையையும் சேர்த்துக் கொன்றாலும் பரவாயில்லை! .. .. ..’ – இப்படி யெல்லாம் யோசித்தவாறு செங்கல்பாளையத்தில் சிலரை நாசூக்காக விசாரித்துப் பார்த்தும் அவளது சென்னை விலாசத்தை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

கொதித்த உள்ளத்தோடு அவன் சின்னக்குளத்துக்குத் திரும்பி வந்த பின் சில நாள் கழித்து, அவன் நண்பன் ராகவன் வந்து சேர்ந்தான். கடந்த வாரத்தில் ஒரு நாள் தான் செங்கல்பாளையத்துக்குப் போயிருந்ததையும் அங்கே பங்கஜத்தைப் பற்றித் தான் கேள்விப்பட்டதையும் அவன் தாசரதிக்குச் சொன்ன போது அவன் ஒரு புதுச் செய்தியைக் கேட்பவன் போல் நடித்தவாறு கேட்டுக்கொண்டான். ஏற்கெனவே அது தனக்குத் தெரிந்திருந்ததைச் சொல்லிக்கொள்ள அவனுக்கு அவமானமா யிருந்தது.

“அவ மட்டும் என் கையிலே மாட்டினா.. .. .. அப்படியே அவ கழுத்தை நெரிச்சுக் கொன்னுடுவேன்!” என்றும் பற்களைக் கடித்துக்கொண்டு உறுமினான்.

“வேணாண்டா, தாசரதி! அது மாதிரியான ஆத்திரத்துக் கெல்லாம் மனசுல எடம் குடுக்காதே. நான் ஒண்ணு சொன்னாக் கோவிச்சுக்க மாட்டியே?”

“என்ன?”

“உன் மொதப் பொண்டாட்டியும் ஒரு ஓரமா ஒங்காத்துலேயே இருந்துட்டுப் போட்டும்னு நான் யோசனை சொன்னேன். நீ கேக்கல்லே.”

“அம்மா அப்பா ஒத்துக்கல்லே. அந்தப் பொண்ணாத்துலேயும் ஒத்துக்கல்லே. .. .. .. இப்ப நீ என்ன சொல்ல வறே? அது ‘பாவம்’கிறயா?”

“நீ பண்ணினது பாவமோ இல்லியோ, ஆனா, நீ ரெண்டாங் கல்யாணம் பண்ணிக்கப் போறதை ஏங்கிட்ட சொன்னப்போ, வேணாண்டான்னு உனக்குப் புத்திமதி சொல்லாத பாவத்தை நான் பண்ணி யிருக்கேன்!”

“ .. .. .. .. .. ..”

“அது மட்டுமா? உங்கம்மா அப்பா யோசனைக்கு நானும் தூப தீபம் காட்டினேன். ‘சில பொண்ணுகள் அப்படித்தாண்டா – பொண்ணுகளாவே பெத்துண்டிருப்பா. அப்புறம் நோக்குப் பிள்ளைக் கொழந்தையே இல்லாம போயிடப் போறது! உங்கம்மா சொல்றது சரிதாண்டா. ஒண்ணுக்கு ரெண்டா வெச்சுண்டு ஜமாய்’ னு உன்னைத் தூண்டி வேற விட்டேனோல்லியோ? அந்தப் பாவம் இப்ப என்னைப் படுத்திண்டிருக்கு!”

“என்ன சொல்றே நீ?”

“எந்தக் கொறையும் இல்லாத எம் பொண்ணைத் தொரத்தியடிச்சுட்டாண்டா என்னோட மாப்பிள்ளை. என்னோட ஒரே பொண்ணுடா அவ. நோக்குத்தான் தெரியுமே?”

“ஏன்? எதுக்காக?”

“காரணம் எதுவுமே சொல்லாம ரெண்டாங் கல்யாணம் பண்ணிண்டுட்டான். வரதட்சிணை, சீர்வரிசை இதுகளுக்கு ரெண்டாந்தடவை ஆசைப்பட்டு அப்படிப் பண்ணினானோ என்னவோ! தள்ளி வெச்ச காரணத்தை எங்கே சொன்னான் அந்தப் படுபாவி! .. .. போய்ச் சத்தம் போட்டேன். அதுக்கு அப்புறந்தான் சொல்றான் -கல்யாணம் ஆயி ரெண்டு வருஷம் ஆயிடுத்தாம். ஆனா, கொழந்தை இல்லியாம்! சின்ன வயசுதானே? பொறக்காதா என்ன? என்ன அநியாயக்காரன், பாரு! .. .. உன்னைத் தூண்டி விட்ட பாவத்துக்கான தண்டனையை இப்ப அனுபவிக்கிறேன்!”

“இதெல்லாம் அறிவுகெட்ட பேச்சு ! பாவமாவது, புண்ணியமாவது! எது ஒண்ணும் அவாவா தலை யெழுத்துபடிதான் நடக்கும்! .. .. நான் அவளைச் சும்மா விடப் போறதில்லே.”

“வேணாம், தாசரதி! சொன்னாக்கேளு! அவளை நீ நியாயமா நடத்தல்லே. .. .. நான் இன்னொண்ணு கூடக் கேள்விப்பட்டேன்.”

“என்ன?”

“விவரமெல்லாம் நான் உன்கிட்ட சொல்றதாயில்லே. ஆனா விஷயத்தை மட்டும் சொல்றேன். உம் பொண்டாட்டி பங்கஜத்துக்குப் பிள்ளைக் கொழந்தை பொறந்திருக்கு. இதுக்கு என்ன சொல்லப் போறே?”

உட்கார்ந்திருந்த தாசரதி எழுந்து நின்றுவிட்டான். அவன் விழிகள் சிவந்து மேலுதடு துடித்தது.

“என்ன சொல்றே? நோக்கெப்படித் தெரியும்? நீயே பாத்தியா?”

“இல்லே. கேள்விப்பட்டேன். என்னோட மெட்றாஸ் சிநேகிதன் ஒருத்தன் சொன்னான். பேச்சுவாக்கிலே தெரிய வந்தது.”

“யாரு? அவனோட விலாசம் தெரியுமா?”

“பங்கஜம் இருக்கிற விலாசத்தை அவன் மூலமா என்னால கண்டுபிடிக்க முடியும். ஆனா நான் நோக்கு அந்த விஷயத்துல உதவி பண்றதா யில்லே! என்னை மன்னிச்சுடு. நான் பங்கஜம் விஷயத்துல பண்ணின ஒரு தப்புப் போறும். இன்னும் ஒரு பாவத்தைப் பண்றதுக்கு நான் தயாராயில்லே. நான் உன்னை விட வயசில பெரியவன். நான் சொல்றதைக் கேளு, தாசரதி!“

“உன்னோட உபதேசத்தை யெல்லாம் நிறுத்து. என்னவோ ரொம்பவும்தான் பிகு பண்றே. நானே கண்டுபிடிச்சுக்கறேன். அவளைக் கொல்லாட்டாலும், தேவடியாத்தனமா அவ பெத்து வெச்சிருக்காளே, அந்தக் கொழந்தையையாவது சாகடிச்சாத்தான் என் மனசு சமாதானமாகும்!” “வேணாண்டா, தாசரதி! அப்படி யெல்லாம் பண்ணிடாதே. நீ ஏற்கெனவே பண்ணி யிருக்கிற பாவமே அடுத்த ஜென்மத்துக்குப் போறும். இன்னும் வேற புதுசாப் பாவத்தைச் சேத்துக்காதே!”

“பாவமாவது, மண்ணாங்கட்டியாவது! தாலி கட்டின புருஷன் உயிரோட இருக்கிறச்சே, இன்னொருத்தனுக்குப் பிள்ளை பெத்திருக்கிற அவதான் துரோகி! என்னமோ பேச வந்துட்டான் பெரிசா!”

“அப்ப, நீ பண்ணினது மட்டும் சரியா?”

“நானு அவளும் ஒண்ணா? நான் ஆம்பளை ஜென்மம்! எத்தனை வேணாலும் கட்டுவேன், இல்லே, வெச்சுப்பேன்!”

ராகவன் சில விநாடிகளுக்கு மவுனமா யிருந்த பிறகு ஒரு பெருமூச்சுடன் எழுந்துகொண்டான்: “பங்கஜத்துக்குப் பிள்ளைக் கொழந்தை பொறக்காதது உன்னோட கொறையினால கூட இருக்கலாமோன்னு நீ யோசிச்சுப் பாக்கணும்கிறதுக்காகத்தான் நான் அந்த விஷயத்தைச் சொன்னேன். நீ என்னடான்னா, ‘அந்தக் கொழந்தையையே கொல்றேன் பாரு’ ங்கறே. இது அடுக்காது, தாசரதி. நல்லதில்லே. சரி. நான் கெளம்பறேன். கடைசியா ஒண்ணு சொல்றேன். கேட்டுக்கோ. பங்கஜம் பண்ணினது தப்புன்னே வெச்சுண்டாலும், அதுக்குக் காரணமே நீ பண்ணின அக்கிரமந்தான்கிறதை மறந்துடாதே!”

“என்னது!”

ராகவன் பதில் சொல்லாமல் அவனை ஒரு புழுவைப் பார்ப்பதுபோல் பாத்த்துவிட்டு விரைவாக வெளியேறினான்.

.. .. .. உரிய நேரம் வந்ததும், பத்மநாபனும் காவேரியும் துர்க்காவை இதற்கிடையே அவளது புக்ககத்தில் கொண்டுவந்து விட்டிருந்தனர்.

அதற்கு முன்னர், ஆடிப் பண்டிகை, ஆறாம் மாதம், தலை தீபாவளி என்கிற சில ‘சாக்குகள்’ வாயிலாகப் பார்வதியும் தேவராஜனும் சேர்ந்து பத்மநாபனின் குடும்பத்தைக் கசக்கிப் பிழிந்துவிட்டனர். பத்மநாபன் தம் சொத்துகளில் சிலவற்றை அதனால் விற்க நேர்ந்தது. காவேரி அணிந்திருந்த வைரத்தோடு, வைர மூக்குத்தி ஆகியவை உட்பட. ஒவ்வொரு முறை சீர்ப்பட்டியலைச் சொன்ன போதும், பத்மநாபனின் மூத்த சகோதரர் தெற்குத் தெரு வள்ளியை ‘வைத்துக்’ கொண்டிருந்தது பற்றியும், அதனால் தங்கள் குடும்ப கவுரவத்துக்கு இழுக்கு நேர்ந்துள்ளது பற்றியும் சொல்லிச் சொல்லிக் காட்டி அவர்கள் காரியத்தைச் சாதித்துக் கொண்டார்கள்.

.. .. .. புகுந்த வீட்டில் துர்க்காவின் வாழ்க்கை நல்லபடியாக அமையவில்லை. தேவராஜனும் பார்வதியும் சமயம் கிடைத்த போதெல்லாம் பத்மநாபனின் குடும்பக் “களங்கம்” பற்றிப் பேசி, துர்க்காவுக்கு எதுவும் முழுவதுமாய்ப் புரியாத நிலையிலும் அவள் மனத்தைப் புண்படுத்தத் தவறவில்லை. பார்வதி வாய்ச்சொல்லோடு நில்லாமல் கன்னத்தில் இடிக்கவும், அவள் கன்னத்தைப் பிடித்துக் கரைக்கவும் தவறவில்லை. ‘உன்னை யாருடி மாட்டுப் பொண்ணா ஏத்துப்பா! நாங்க இளிச்ச வாய்! ஏத்துண்டோம்’ என்று அடிக்கடி பழித்து, ‘உழக்கு இரத்தம் வருமோ’ என்று அவள் பயப்படும்படியாக அவள் உச்சந்தலையில் நறுக்கென்று குட்ட வேறு செய்தாள்.

சாந்தி முகூர்த்தம் ஆன மறு நாளிலிருந்து துர்க்கா சிவகுருவுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள முடியாதவாறு பார்வதி பார்த்துக்கொண்டாள். அது தெரிந்தும், எந்தக் குறுகுறுப்போ, குற்ற உணர்வோ இல்லாதவராய்த் தேவராஜன் ‘சிவனே’ என்று இருந்துகொண்டிருந்தார். சாந்தி முகூர்த்தத்தைக் கூட முடிந்தால் தடுத்திருப்பார்கள்தான். ஆனால், அது ஒரு சடங்காய்க் கொண்டாடப்படும் வழக்கத்தின் காரணமாய், அவ்வளவு வெளிப்படையாய் அவர்களால் செயல்பட முடியவில்லை.

சிவகுருவும் கல்லூரிப் படிப்பைத் தொடர மதுரைக்குப் போய்விட்டதால் விடுமுறை நாள்களில் மட்டுந்தான் வத்தலப்பாளையத்துக்கு அவனால் வர முடிந்தது. அவ்வாறு அவன் வந்த நாள்களில் பார்வதி அவர்கள் தொடர்புகொள்ள முடியாதவாறு உஷாராய்ப் பாதுகாத்தாள்.

இளம் மனைவியோடு கழிக்கப் போகும் மகிழ்ச்சியான பொ¡ழுதுகளுக்கு ஆசைப்பட்டு மதுரையிலிருந்து வந்து சென்ற சிவகுருவுக்கு ஒவ்வொரு தடவையும் ஏமாற்றந்தான் .. .. ..

.. .. .. “ஏன்னா! இந்தக் கூத்தைக் கேட்டேளா?”

“என்ன, காவேரி? என்ன ஆச்சு?”

“நம்ம துர்க்காவை அவ மாமியார் மாப்பிள்ளையோட படுக்க விட்றதில்லையாமே?”

“என்னது! இதென்ன கூத்து?”

“ஆமான்னா. இன்னைக்கு ஜாடையா அவளைக் கேட்டேன். சொன்னா. ராட்சசி! பொண்டாட்டியோட படுக்கப்படாதுன்னு நினைக்கிறவ பிள்ளைக்கு ஏன் கல்யாணம் பண்ணி வைக்கணும்?”

சற்று யோசித்த பிறகு பத்மநாபன் சொன்னார்: “இத பாரு, காவேரி. இதை நாம பெரிசுபடுத்தக்கூடாது. எப்படியும் ஒரு நாள் இந்தப் பிரச்னைக்கு முடிவு ஏற்படும். அது வரைக்கும் கொழந்தைகள் பொறுமையாக் காத்துண்டிருக்க வேண்டியதுதான். வேற வழி இல்லே. விஷயம் தெரிஞ்சதாவே நாம காட்டிக்கப்படாது.”

“நிரந்தரமா அப்படியே இருந்துடாதேன்னா? அதான் பயமாயிருக்கு.”

“அப்படின்னா, அவாளோட மத்தப் பிள்ளைகளுக்கெல்லாம் இத்தனை கொழந்தைகள் பொறந்திருக்குமா?”

“நீங்க சொல்றது சரிதான். .. .. ரெண்டாவது, நம்ம மாப்பிள்ளையும் கொஞ்சம் பெரியவனானா தானே பிரச்னையைச் சமாளிச்சுப்பாந்தான்! .. .. அப்புறம் இன்னொண்ணு.”

“என்ன?”

“துர்க்காவை ரொம்ப வேலை வாங்கறாளாம். தலைக்குத் தலை எல்லாரும், இதைச் செய், அதை செய்ன்னு ஒரு எடுபிடி ஆளை ஏவற மாத்¢ரி ஏவி வேலை வாங்கிப் படுத்தறாளாம். சின்னப் பொண்ணாச்சே! ஒடம்புல சக்தி இருக்க வேண்டாமான்னா?” – சொல்லும் போதே காவாரிக்குக் கண்கள் கலங்கின.

“அதுக்கு நாம என்ன பண்ண முடியும்? தெரிஞ்சதாவே காட்டிக்கப்படாது. அப்புறம் நம்ம கொழந்தையை இன்னும் அதிகமாக் கொடுமைப்படுத்துவா.”

“அவளோட மச்சினன் மாருக்குத் தலா ரெண்டு கைக்கொழந்தைகள் இருக்கு. அந்த நாலையும் இவதான் பாத்துக்கணுமாம்..”

“ஏதோ, சின்னக் கொழந்தைகளோட அவளோட பொழுது நன்னாக் கழியறதோன்னோ? விடு.”

“நாலும் ஒரு வயசு, ரெண்டு வயசு, மூணு வயசு, நாலு வயசுன்னு இருக்கிற ரெண்டுங்கெட்டான் கொழந்தைகள். கட்டி மேய்க்கிறதுன்னா சும்மாவா? பிள்ளை எடுத்துப் பொழைக்கிறதைக் காட்டிலும் பிச்சை எடுத்துப் பொழைக்கலாம்னு சொல்லுவான்னா பெரியவா. சின்னக் கொழந்தைகளை – அதுலேயும் ரெண்டுங்கெட்டான்களை – அதுகள் கீழே விழாதபடி கவனமாப் பாத்துக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?”

“என்னத்தைப் பண்றது, காவேரி? நாம தலையிட்டா, அப்புறம் துர்க்காவுக்குத்தான் இன்னும் கஷ்டம். பொறந்தாத்துல போய்ப் புகார் பண்ணினியான்னு அவளைப் பிலு பிலுன்னு பிடிச்சுக்குவா. அப்புறம் அவளுக்கு இன்னும் அதிகக் கொடுமைதான் நடக்கும்.”

“எவ்வளவு அருமையா வளத்தோம்! சாணி மொதக்கொண்டு தட்ட வைக்கிறாளாம் கொழந்தையை! கிராதகி! தெனமும் அத்தனாம் பெரிய வீட்டை இவதான் பெருக்கி மொழுகணுமாம். வேலைக்காரி மொழுகினா ஆசாரக் கொறைச்சலாம். .. .. மாசத்துல அந்த மூணு நாளும் நொந்து போன பழைய சாதத்தைப் போட்றாளாம். நீர்த்த மோர்தான் விடுவாளாம். இத்தனைக்கும் ஆத்துல ஒரு பசுமாடு, ஒரு எருமை மாடுன்னு இருக்கு! தொட்டுக்குறதுக்கு வெறும் உப்பு நார்த்தங்காயாம்! துர்க்கா சாப்பிட முடியாம அதை அப்படியே தூக்கி கொல்லைக் கதவைத் தொறந்து சாக்கடையில கொட்டிடுவாளாம். அந்த மூணு நாளும் கொலைப் பட்டினிதானாம்.” – காவேரி அழத் தொடங்கினாள்.

“எங்கம்மா கூட உன்னைக் கொஞ்சம் படுத்தியிருக்கா. மாமியார்னா மாட்டுப்பொண்ணைப் படுத்தணும்னு அவாளுக்கு சாஸ்திரம் போல இருக்`கு!” என்று பத்மநாபன் அசம்பாவிதமாய்ச் சிரிக்க, காவேரிக்குள் அடங்காச் சினம் மூண்டது.

“சிரிக்காதங்கோன்னா, சிரிக்காதங்கோ! ‘கொஞ்சம்’ படுத்தினான்னு சொல்லாதங்கோ. ‘கொஞ்ச நஞ்சமாவா படுத்தி யிருக்கா’ ன்னு கேளுங்கோ. .”

“பொதுவாப் பிள்ளையைப் பெத்த மாமியார்க்காரிகள் எல்லாருமே அப்படித்தான் இருக்கா. ஏன்னே தெரியல்லே.”

“அவாளை அவாளோட மாமியார்கள் படுத்தினதுக்கு, தங்களோட மாட்டுப்பொண்களைப் படுத்தி வஞ்சம் தீத்துக்கறா போலேருக்கு!”

“இருக்கலாம். ஆனா அந்தக் கொடுமை எப்ப , எப்படி, யாரால தொடங்கித்துன்னு தெரியலியே?”

“அதொண்ணும் இப்ப தெரியவேண்டாம். நம்ம கொழந்தையை அவா படுத்தாம இருக்கிறதுக்கு நாம ஏதாவது செஞ்சே ஆகணும்னா! அதுக்கு வழி பாருங்கோ மொதல்ல.”

“இன்னும் என்னத்தைடி செய்யறதாம்? நம்ம சொத்துகள் எல்லாத்தையுமே கிட்டத்தட்ட வித்துக் குடுத்து அவாளைத் திருப்தி பண்ணியாச்சு. இந்த வீடு ஒண்ணும் கொஞ்சம் நஞ்செய் நெலமும் தான் மிஞ்சி யிருக்கு. இன்னும் பிரசவம், அது, இதுன்னு செலவுகள் வந்தா எப்பிடித்தான் சமாளிக்கப் போறதோ! பேராசை பிடிச்சவாளைத் திருப்திப்படுத்தவே முடியாது, காவேரி!”

இப்படி ஒரு விவாதம் அடிக்கடி அவர்களிடையே நிகழலாயிற்று.

நாள்கள் நகர்ந்துகொண்டிருந்தன. ஒரு வழியாய்க் கல்லூரிப் படிப்பை முடித்துக்கொண்டு, சிவகுரு கிராமத்தோடு வந்திருக்கத் தொடங்கினான்.

துர்க்காவுக்கும் இதற்கிடையே விவரங்கள் புரியத்தொடங்கியிருந்தன. எனினும் சிவகுரு தொடைநடுங்கியா யிருந்ததால், துர்க்காவைப் பார்வதி தன்னருகே படுக்கவைத்துக்கொள்ளுகிற வழக்கம் தொடரலாயிற்று.

ஒருநாள் பொறுமை யிழந்த பத்மநாபன் அதற்கு ஒரு முடிவு கட்டும் நோக்கத்துடன் வத்தலப்பாளையத்துக்குப் போய்த் தேவராஜனைக் கண்டார்.

பொதுவாய்ப் பேசிய சற்று நேரங்கழித்து, “ .. .. நீங்க நெஜமாவே மகாத்மாகாந்தியோட பக்தர்தானா?” என்று அவர் தேவராஜனைக் கிண்டலாக நோக்கியவாறு வினவினார்.
– தொடரும்

Series Navigation

author

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts