தனிமை..

This entry is part [part not set] of 39 in the series 20060512_Issue

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்


அடிவான இளஞ்சிவப்பு மெல்ல மெல்ல மறைந்து சென்றது. மேற்கு வானம் நன்கு கறுத்திருந்தது. வானத்தின் அமுதம் இன்னும் சிறிது நேரத்தில் மழையாய் பொழியக் காத்திருந்தது. மெல்லிய தென்றல் இதமாக அவளது மேனியை வருடிச் சென்றது. வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு தோல்வியும் வெற்றியின் ஓர் ஆரம்பம் என என்றோ படித்த ஞாபகம் அவளுக்கு. ஜீரணிக்க முடியாத சில உண்மைகள் சில நேரம் நம்ப மறுத்த பல விடயங்களை நியாயப்படுத்தி யுள்ளமை அவளுக்குப் புதிதாகவும் புதிராகவும் இருந்தது. நித்திரைகொள்ள எண்ணும் போதெல்லாம் அவளுக்கு நிலை கொள்ளாமல் தவிப்பது நிம்மதி ஒன்றுதான்.

‘ ‘ ‘

இருபது வருடங்களுக்கு முன் அவளுக்கு வயது எட்டு. மூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த நிப்லாவுக்கு தான் தனிமைப்படுத்தப்படப்போவது தெரிந்திருக்க நியாயமில்லை. அதனைப் புரிந்துகொள்ளக்கூடிய வயதுமில்லை அவளுக்கு. அடுத்த ஆண்டு முதல் தன்னை விடுதி ஒன்றில் தனது தந்தை சேர்ப்பித்து படிக்கவைக்கப் போகிறார் என்பதை அவரது கதைகளிலிருந்து சாடை மாடையாகத் தெரிந்துகொண்டாள். அன்றிலிருந்துதான் அவள் தனிமையின் கொடுமையையும் தன் இறந்துபோன தாயின் பிரிவுத் துயரையும் அன்னைக்கு அன்னையாய் தந்தைக்குத் தந்தையாய் ஒரேயொரு செல்வத்தை தனிமரமாக நின்று சீராட்டிப் பாராட்டி வளர்த்து வரும் தன் தந்தைமீது ஏற்படும் சிறு வெறுப்பையும் உணரத் தொடங்கினாள். இது வெறுப்பா அல்லது விரக்தியா என அவளுக்குத் தெரியவில்லை.

விதியின் விளையாட்டு விடுதி வாழ்க்கையாக சுமார் பத்து வருடங்களைத் தொலைத்துவிட்டு அவளை உயர்தர இறுதிப் பரீட்சைக்கு ஆயத்தமாக்கி காத்துக் கொண்டிருந்தது. தனது இந்தப் பத்து வருட விடுதி வாழ்க்கையில் அவள் கற்றுக்கொண்ட பாடங்கள், அனுபவங்கள் ஏராளம். அவை அவளது மிகுதி வாழ்க்கையை ஓட்டிச் செல்ல போதுமானவையாக இருந்தன. தன் தகப்பன் தனக்காகப் படும் கஸ்டங்களையும், சிரமங்களையும், கரிசனையையும் கண்டு அவள் பெருமைப்பட்ட நாட்கள்தான் ஏராளம்.

தன் தகப்பனும் ஏதோ வகையில் தன்னைப்போல் வாழ்க்கையில் தனிமைப் படுத்தப்பட்டு அல்லது இளமையில் ஏதோ வகையில் விரக்திப்பட்டு அவற்றைக் காட்டிக் கொள்ளாது வாழும் ஒரு சராசரி மனிதனாக ஏன் இருக்கக்கூடாது என்று அவள் நினைப்பதுண்டு. தனக்காகவே அவர் வாழ்வது போல் அவள் பலதடவைகள் உணர்ந்தாள். தானும் தன்பாடும் என்று வாழ்வது போலும் தோன்றியது. அதேவேளை ஏதோ ஒன்றைப் பறிகொடுத்துவிட்டு வாழ்வது போலும் தோன்றியது, அல்லது ஏதோ ஒன்றைத் தனக்கு மறைப்பது போலும் தோன்றியது நிப்லாவுக்கு.

‘ ‘ ‘

அன்றுதான் தனது தகப்பனின் முகத்தில் பேரானந்தம் என்று சொல்வார்களே அதைக் கண்டநாள் நிப்லாவுக்கு. அது அவளது உயர்தரப் பரீட்சை முடிவு வெளியான நாள். தான் மருத்துவத் துறைக்குத் தெரிவாகி இருப்பதை அவர் மூலம் அறிந்த அவளும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. ஆயினும் உள்ளே ஏதோ ஒன்று முகாரி பாடிக்கொண்டிருந்ததையும் அவளால் உணராமல் இருக்க முடியவில்லை. அது மீண்டும் மீண்டும் விடுதி வாழ்க்கையையும் தனிமையையும் பாடிக் கொண்டேயிருந்தது.

காலம் உருண்டோடியது. ஐந்து வருடப் படிப்பில் நான்கு ஆண்டு காலம் ஓடிவிட்டன. ஐந்தாம் ஆண்டில் காலடி எடுத்துவைக்கிறாள் நிப்லா. அதன் ஆரம்ப முதல் இறுதிவரை அவள் பம்பரமாகச் சுழன்று ஈற்றில் வெற்றிவாகையுடன் ஒரு வைத்தியராக வெளியேறு கிறாள். இப்போது அவள் டொக்டர் நிப்லா. மீண்டும் அவளுக்கு வைத்தியசாலை விடுதி – பழகிப் போன ஒன்று, தனிமையைப் போல். இரண்டாண்டுகள் எப்படியோ கடந்துவிட்டன.
ஒருநாள், ஷடொக்டர், நிப்லா| என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்க்கிறாள். ஓர் அந்நிய முகம். ஆனால் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருந்தது. ஷஎஸ்| தன்னைச் சுதாகரித்துக்கொண்டு பதிலுக்கு நிமிர்ந்து பார்த்தாள். மீண்டும் ஷஹலோ| என்றான். காந்தத்தின் எதிர்முனைவுகள் ஒன்றையொன்று ஈர்ப்பதுபோல் அவளுக்குத் தோன்றியது முதன்முறையாக. பதிலுக்கு அவளும் ஷஹலோ| என்றாள். தன்னையும் அறியாமல் முதன்முறையாக அவள் தடுமாறுவது அவளுக்கு ஏதோ ஒன்றை உணர்த்தியது. அந்தத் தடுமாற்றம் தடைக் கற்களை யெல்லாம் நீக்கி இருவீட்டார் சம்மதத்துடனும் திருமணமாக முடிவுற்றது, இன்றுகூட அவளுக்கு நம்பமுடியாத ஒரு நிகழ்வாகவே தோன்றுகிறது.

அஸீம் – நிப்லா திருமணம் நடந்து ஐந்து வருடங்கள் உருண்டோடிவிட்டன. அஸீம் நல்லவன். ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளன். மனித மனங்களை மதிக்கும் பண்பாளன். பழகத் தெரிந்தவன். நிப்லாவுக்குக் கிடைத்த ஒரு சொத்தாகவே அஸீமை அவள் கருதினாள். இருந்தும் தனக்குள்ள பெரும் குறை அவளை வெகுவாகப் பாதித்திருந்தது. அதுவும் விதியின் விளையாட்டுத்தான் என எண்ணி ஆறுதல் அடைந்தாள் நிப்லா.

தன் தந்தைக்குத் தான் பிள்ளை. தன் கணவனுக்கும் தான் பிள்ளைதான். ஆனால் தனக்கொரு பிள்ளை இல்லையே என அவள் ஏங்கித் தவிக்கிறாள். தன் கணவனின் மாசற்ற அன்பு, இரக்கம், பரிவு மற்றும் வயதுபோன தன் தந்தையின் அரவணைப்பு அவ்வப்போது ஆறுதலாக இருப்பினும் தற்காலிக ஆறுதல்களில் தங்கி வாழ்வது எப்படி என்பதுதான் அவளது கவலை எல்லாம். விடுதி வாழ்க்கை, தனிமை, கவலை எனத் தன் வாழ்க்கையை ஓர் இருட்டறைக்குள் மட்டுப்படுத்தி வாழப் பழகிப்போன நிப்லாவுக்குத் தன் தொழிலிலும் ஈடுபாடு குறைந்துவருவதை அவளால் உணராமல் இருக்கவும் முடியவில்லை.

வழக்கம்போல் தன் தந்தையின் மடியில் சாய்ந்து நிம்மதியற்ற நித்திரை கொள்ள ஆயத்தமாகிறாள் நிப்லா. நித்திரை கொள்ள எண்ணும் போதெல்லாம் அவளுக்கு நிலை கொள்ளாமல் தவிப்பது நிம்மதி ஒன்றுதான்.

அவளது கணவன் பதவியுயர்வு பெற்று பயிற்சிக்காய் நான்கு வருடங்கள் வெளிநாடு செல்லவிருக்கும் செய்தி இன்னும் சிறிது நேரத்தில் வந்து அவளை இன்னும் நான்கு வருடங்கள் தனிமைப்படுத்தப் போவதை உணராதவளாக அவள் மெல்ல மெல்ல தன் இமைகளை மடித்தாள்.

விதி தன் அடுத்த விளையாட்டைத் தொடங்கிவிட்டது, பாவம் நிப்லா.

– மருதமுனை எஸ் ஏ. ஹப்பார்.
இலங்கை.
abdulgaffar9@gmail.com

Series Navigation

author

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்

Similar Posts