நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-19)

This entry is part [part not set] of 42 in the series 20060505_Issue

சி. ஜெயபாரதன், கனடா


மான் வேட்டை ஆடு திங்கே!
மயில் ஏட்டை மாற்று மிங்கே!
தேன்விழி வாள் பாயு மிங்கே!
தேடிக் கொண்டாள் பாப மிங்கே!
எங்கணும் சோகம் பரவு திங்கே!
ஏசு நீராட்டி தலை சாயு மிங்கே!
நர்த்தகி புதிர் விடியு மிங்கே!
நரபலிச் சதி முடியு மிங்கே!

+++++++++++++++

“வெல்ல முடியாத மரணமே! எவருக்கும் விட்டுக் கொடுக்காத மரணமே! உனக்கு எதிராக நான் தாவிக் குதிப்பேன்.”

“மனிதரில் ஆண்பால், பெண்பால் என்று தனியாகத் தோன்றினாலும், மெய்யாக இருபாலரிடமும் பாலியற் பண்பு பின்னிய கலவையாகவே காணப்படுகிறது. ஒவ்வொரு மானிடப் பிறவியிலும் ஆண்பாலியல் தன்மையும், பெண்பாலியல் தன்மையும் ஒன்றை ஒன்று எடுத்தாண்டு கொள்கிறது. ஆடை உடுப்பில் ஆண்-பெண் அடையாளம் காணப் பட்டாலும் உடைகளுக்கு உள்ளிருக்கும் பாலியல் பண்புகளை வெளி உடுப்புகள் காட்டும் உருவம் தெரிவிப்பதில்லை!”

“வீட்டுக்குள் நுழைய முடியாதபடி மூடி வெளியே ஒருவர் தடுக்கப் படுவதுதான் கொடுமையானது என்று நான் நினைத்த காலமுண்டு. ஆனால் வீட்டுக்குள்ளே ஒருவர் அடைபட்டு, வெளியேறாதபடி பூட்டப் படுவதுதான் அதைவிட மிகக் கோரமானது என்று கண்டு கொண்டதும் உண்டு.”

வெர்ஜீனியா உல்·ப் [Virginia Woolf (1882-1941)]

“வெய்யிலில் நின்று உடல் காயாது, தென்றலில் உலவி உள்ளம் உருகாது, வெறுமனே செத்துப் போவதில் எந்த பயனுமில்லை! அந்த அனுபவங்களுக்குப் பிறகு நம் உறுப்புக்களைப் பூமியே மூடி விட்டாலும், உறுதியாக நடனம் ஆடலாம் நாம்.”

“பரிவு, பாசம், பற்று எதுவுமில்லா ஒரு வாழ்க்கை கனிகளோ, பூக்களோ அற்ற மரத்துக்கு ஒப்பானது.”

“உன் கனவுகளில் நீ நம்பிக்கை வைத்துடு. ஏனெனில் அவற்றில்தான் உன் சொர்க்க வாசல் மறைந்து உள்ளது.”

கலில் கிப்ரான் [Kahlil Gibrahn (1883-1931)]

“உணர்ச்சிகளைப் போல் ஆத்மாவைக் குணப்படுத்தும் மருந்து வேறு எதுவுமில்லை! அதன் மறுபக்கமாக ஆத்மாவைப் போல் உணர்ச்சிகளைப் பண்படுத்தும் ஓர் ஆற்றல் வேறு எதுவுமில்லை.”

“எந்த உன்னதக் கலைஞனும் பொருட்களை மெய்யாக உள்ளபடிக் காண்பதில்லை எப்போதும். அவ்விதம் காண்பானாகில், அவன் உயர்ந்த கலைஞன் எனக் கருதப்படுவது நிறுத்தமாகும்.”

“மரணம் ஒன்றைத் தவிர தற்காலத்தில் ஒருவன் எதிலிருந்தும் தப்பிக் கொள்ள முடியும். அதுபோல் அவன் முழுவதும் வாழ்ந்து நீங்க முடியும் பேரும், புகழும் பெற முடியாமலே!”

“கலைகளில் உன்னத மானது நாடகக் கலை என்பது நான் அதன்மேல் கொண்டிருக்கும் மதிப்பு. அந்த உன்னதக் கலை மூலமாகத்தான், ஒரு மனிதன் மனிதப் பண்புடன் வாழும் உணர்வை அடுத்தவனுடன் விரைவில் பங்கிட்டுக் கொள்ள முடிகிறது.”

ஆஸ்கர் வைல்டு [1854-1900]

நாடக நபர்கள்:

ஏரோத் ஆன்டிபஸ் (Herod Antipas) : ஜுடேயா (Judea) நாட்டில் காலிலீயின் ஆளுநர் [Governor of Galilee
ஏரோதியாஸ் (Herodias): ஏரோத் மன்னின் மனைவி
ஸாலமி இளவரசி: ஏரோதியாஸின் முதல் கணவன் ·பிளிப்புக்குப் (Philip) பிறந்த புதல்வி.
(·பிளிப்: ஏரோத் ஆன்டிபாஸ¤க்கு மாற்றாந்தாய் சகோதரன்)
ஜொகானன் (Jokanan): ஜான், புனித நீராட்டி
ஏரோதியாஸின் சேடியர், காவலர்
ஸிரியா வாலிபன் : நாராபாத், ஸாலமி மீது தீராக் காதல் கொண்டவன்
சேனைக் காவலர்.
கப்பதோசியன் : (Cappadocian) ஓரினத்தைச் சேர்ந்தவன்.
நியூபியன் : (Nubian) வேறோர் இனத்தைச் சேர்ந்தவன்.
யூதர்கள்: மூவர்.
நாஸரீன் [Nazarene], மற்றும் ரோமாபுரி டைஜெல்லினஸ் [Tigellinus]

நேரம்:

அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை. முழுச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.

காட்சி அமைப்பு:

ஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம். கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை. வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது. ஏரொத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் மாளிகையில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரையாடிக் கொண்டிருக்கிறாள். அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள். ஏரோத் மன்னனின் காம விழிகள் ஸாலமியை வட்ட மிடுகின்றன! மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள். ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக்கிறான். இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொகானன் [ஜான் புனித நீராட்டி] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார்.

இடை இடையே சிறையில் கிடக்கும் ஜொகானன் உரக்கக் குரல் கேட்கிறது. ஸாலமி அருவருப்படைந்து மேல்மாடிக்கு வருகிறாள். அப்போது ஸாலமி ஜொகானனைக் காண வேண்டுமென விரும்பியதும், காவலர் அவரை மாடிக்கு அழைத்து வருகிறார்! சிறைக் கைதி ஜொஹானன் மீது ஸாலமிக்குப் பரிவும், பாசமும், பற்றும் உண்டாகிறது. போதகரை ஸாலமி முத்திமிடப் போவதை, ஸிரியா வாலிபன் தடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான். ஜொகானன் ஸாலமியை உதறித் தள்ளி சிறைக்கு மீள்கிறார். ஏரோத் மன்னன், ஸாலமியைத் தேடி அவரது மனைவி ஏரோதியாஸ் ஆகியோர் புடைசூழ மாடிக்கு வருகிறார். ஸாலமியை நாடும் ஏரோதை ராணி கண்டிக்கிறாள். ஏரோதியாஸின் மேல் சாபமிடும் ஜொகானன் மீது ராணி ஏரோதியாஸ் கோபப் படுகிறாள். ஸாலமியின் மேனி எழிலில் மயங்கி ஏரோத் தன்முன் நடனம் ஆடும்படிக் கெஞ்சுகிறான். ராணி அதைத் தடுக்கிறாள். முடிவில் வெகுமதி தருவதாய் ஏரோத் உறுதி மொழி கொடுத்ததும், ஸாலமி நடனம் ஆட ஒப்புக் கொள்கிறாள். ஆனால் அவள் கேட்கும் வெகுமதி என்ன? பயங்கர வெகுமதி ஒன்று! வெள்ளித் தாம்பாளத்தில் ஜொகானன் தலை! போதர் மீது பேரளவு மதிப்பு வைத்துள்ள ஏரோத் அவ்விதம் செய்ய மறுக்கிறான். ஆனால் மரண மோதிரத்தை ஏரோதின் விரலிலிருந்து உருவி, ஏரோதியாஸ் ஆணையை நிறைவேற்றக் காவலரைச் சிறைச்சாலைக்கு அனுப்புகிறாள். கொலையாளி கட்டளையை நிறைவேற்றுகிறான்.

*********************

ஏரோத்: ….[மது மயக்கத்தில்] யார் என் மோதிரத்தை உருவி எடுத்தது? என்னிடது கைவிரலில் ஒரு மோதிரம் இருந்ததே! எங்கே அதைக் காணோம்? …[மதுக் கிண்ணத்தைப் பார்த்து] யார் எனது ஒயினைக் குடித்தது? என் மதுக்கிண்ணம் காலியாக உள்ளதே! நிரம்பிய கிண்ணம் வெறுமையாய்க் கிடக்குதே! யாரோ என் மதுவைக் குடித்து விட்டார்! .. யாரோ என்னைக் களவாடி விட்டார்? யாரோ என்னை மோசடி செய்து விட்டார்? .. ஏதோ கேடுகாலம் வரப் போகுது! பயமாக உள்ளது எனக்கு! … மன்னன் யாருக்கும் தெரியாத பரிசைத் தருவாய் வாக்களிக்கக் கூடாது! அதிலும் உறுதி அளிக்கக் கூடாது! நாட்டியக்காரி நளினத்தில் மதி மயங்கக் கூடாது! கடவுளே! என்ன செய்வேன் நான்? …. நர்த்தகிக்கு நான் வெகுமதியைக் கொடுத்தாலும் சீர்கேடு! வெகுமதியை நான் மறுத்தாலும் சீர்கேடு! கடவுளே! மூளை குழம்பிப் போகிறது எனக்கு! [உரக்க அலறி] அடே! காவலா! நில்! சிறை நோக்கிப் போகாதே! சிரச் சேதம் செய்யாதே! .. ஸாலமி! புனிதரைக் கொல்லாதே! அவரது தலையை அறுப்பது பாபம்! அவருக்குத் தண்டனை கொடுக்க நீயோ, நானோ யாரும் தகுதி அற்றவர்! ஸாலமி! சிந்தித்துப் பார்! புனிதரின் சிரசு உனக்கு எதற்கு? நரபலியிட்ட நர்த்தகி என்று வரலாற்றில் பெரும் புகழ் பெறவா? நிறுத்து அந்தக் காவலனை! .. போன உயிர் மீளாது! வெட்டிய தலை மீண்டும் சேராது! நீ செய்வது மாபெரும் பாபம்! மன்னிக்க முடியாத பாபம்! செய்த பாபத்தைக் கழுவ முடியாது! சீக்கிரம் நிறுத்து காவலனை! [முகத்தைக் கைகளால் மூடிக் கொண்டு அழுகிறான்]

[கொலையாளி மரண மோதிரமோடு சிறைச்சாலை நோக்கிப் போகிறான்]

ஏரோதியாஸ்: ஸாலமி செய்வது எமக்கும், உமக்கும் நல்லது! நிம்மதி! நிரந்தர நிம்மதி! நிம்மதி யில்லாமல் செய்பவர் போதகர்! போய் ஒழியட்டும் அந்த போதகர்! நாட்டுக்கு நல்லவர் அவர்! ஆனால் நமக்குப் பகைவர்!

ஏரோத்: .. ஐயோ! ஏதோ ஒரு பெருங்கேடு வாசல் முன் வந்து நிற்குது! உனக்கும், எனக்கும் கேடு காலம் வருகுது! … ஏரோதியாஸ்! அவளைத் தூண்டி விடாதே!.. கண்மணி ஸாலமி! நிறுத்து காவலனை!

ஸாலமி: [காவலனைப் பின் தொடர்ந்து செல்கிறாள். சிறைக்கருகே மறைவில் நின்று கவலையோடு] என்ன? எந்த அரவமும் கேட்கவில்லை! போனவன் வாள் உருவிய அரவம் கேட்கவில்லை! போதகர் அலறல் குரல் கேட்கவில்லை! தலை தரையில் வீழ்ந்த அரவம் கேட்கவில்லை! காவலன் வாளை உறையிலிட்ட அரவம் கேட்கவில்லை! [மறைவில் நின்று காவலனை விளித்து] …. காவலனே! என்ன செய்கிறாய்? சொன்னதைச் செய்! போதகர் தலையைத் துண்டித்துக் கொண்டுவா? [சேடியைப் பார்த்து] போடி! போய் வெள்ளித் தட்டைக் கொடு! [சேடி தட்டைக் கொண்டு வருகிறாள்] தட்டைக் காவலனிடம் கொடு! உள்ளே போய்ப் பாரடி! காவலன் என்ன செய்கிறான் என்று பார்த்து வந்து சொல்லடி!

முதல் சேடி: இளவரசி! தட்டைக் கொடுக்கிறேன்! தலை வெட்டுவதை என்னால் பார்க்க முடியாது! என்னுயிர் போய் விடும்! உயிர் துடிப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது!

ஸாலமி: அடீ பயந்தவளே! ஆட்டுத் தலையை வெட்டுவதைப் போல்தான் அதுவும்! சிந்தும் குருதி எல்லாம் சிவப்பாகத் தானிருக்கும்! குருதியைக் கண்டு அஞ்சலாமா? … போடி! உள்ளேப் போய்ப் பார், என்ன நடக்கிற தென்று? எந்த அரவமும் கேட்கவில்லை! கொலையாளி உருவிய வாளை வீசப் பயப்படுகிறானா? எட்டிப் பாரடி, என்ன நடக்கிறதென்று? ஒரே மௌனச் சமாதியாக உள்ளது. …. ஆ! இப்போது ஏதோ விழும் அரவம் கேட்கிறது! உருண்டோடும் அரவம் கேட்கிறது! ஆனால் ஜொகானன் அலறும் அரவம் கேட்கவில்லை! அவர் போடும் அரவத்தால் அரண்மணைத் தூண்கள் ஆடுமே! ஏன் வாயடைத்துப் போனார்? என்ன வென்று தெரியவில்லை? ஆனால் அந்தக் கொலையாளி போகும் போதே தயங்கித் தயங்கித்தான் போனான். வாளிருந்தும் அவன் ஒரு கோழை. உள்ளே நுழைந்த கோழையைப் போதகர் மீறித் தள்ளி விட்டாரா? … [மன்னரிடம் போய்] மன்னரே! கொலையாளி எதுவும் செய்யாது சிலையாக நிற்கிறான்! அனுப்புங்கள் உங்கள் படை வீரரை. உங்கள் ஆணையை நிறைவேற்றும் சிங்க வீரரை அனுப்புங்கள்! கொலையாளி போதகர் முன் தலை வணங்கி நிற்பது போல் தெரிகிறது. தலை கொய்துவா வென்று அனுப்பினால், தலை குனியும் காவலனுக்கு என்ன தண்டனை அளிப்பது? மன்னரே அனுப்புங்கள் படை வீரரை. … [சேடி படை வீரருடன் வருகிறாள்] காவலரே! மாண்பு மிகு மன்னர் மரண மோதிரத்தை அனுப்பியுள்ளார். சிறைப்பட்ட ஜொகானன் தலையைத் தட்டில் கொண்டு வருவீர்! அது மன்னரிட்ட கட்டளை!

[காவலர் சிறை நோக்கி வேகமாகச் செல்கிறார். எதிரே கரிய கொலையாளி கையில் தட்டுடன் மெதுவாக வருகிறான். குருதியில் கிடக்கும் ஜொகானன் தலையைக் கண்ட ஸாலமி புன்னகை புரிகிறாள். கையில் வெள்ளித் தட்டை வெடுக்கெனப் பிடுங்கிச் செல்கிறாள். ஏரோத் பார்க்க விரும்பாது முகத்தைத் திருப்பிக் கொள்கிறான். ஏரோதியாஸ் முகம் மலர்ந்து, விசிறியால் வீசிக் கொள்கிறாள். அருகில் உள்ள சேடியர் கைகளால் முகத்தை மூடிக் கொள்கிறார். காவலர் தலை குனிந்து, வருத்தமுடன் பின் வாங்குகிறார். நாஸரீன் மண்டிக்காலிட்டு மேல் நோக்கி வணங்குகிறான்.]

ஏரோத்: [கண்ணீர் பெருக] கடவுளே! என்ன சீர்கேடு நடந்து விட்டது? நிமிர்ந்து நோக்கும் புனிதர் தலை தணிந்து போனதே! உண்மை நெறி பேசிய வாய் ஊமையாகி விட்டதே! ஒளிவீசும் கண்கள் விழியிழந்து போயினவே! எச்சரிக்கை விட்ட உதடுகள் உச்சரிப்பை மறந்தனவே! பாபங்களைக் கேட்ட செவிகளின் பாதை மூடிப் போனதுவே!

ஏரோதியாஸ்: நிம்மதியாக உறங்குகிறார் போதகர்! அவரை எழுப்பாதீர்! அவரது உறக்கத்தால் எனக்கும் நிம்மதி! கலக்க மற்ற உறக்கம் எனக்கும் கிடைக்கும்! அவரது ஆத்மாவின் நிரந்தர உறக்கத்தில் எத்தனை ஆத்மாக்களுக்கு நிம்மதி உண்டாகுது? எல்லாருக்கும் நிம்மதி அளித்த ஸாலமியின் திறமையைப் பாராட்ட வேண்டும். எத்தனை முறை அவளுக்கு நன்றி சொன்னாலும் போதாது.

ஏரோத்: நாட்டில் மனிதர் பாபத்தை எடுத்துச் சொல்ல இனியாருமில்லை! வேலியற்ற வயலாகப் போயின என் நிலங்கள். கண்காணிக்கும் புனிதரை யிழந்தனர் என் குடிமக்கள்!

ஸாலமி: [வெள்ளித் தட்டை மேஜையில் வைத்து நாற்காலியில் எதிரே அமர்கிறாள். தாய் ஏரோதியாஸ் அவளுக்கு வலப் புறத்தில் உட்காருகிறாள்] நான் காதலித்த முகமிதுதான்! முத்தமிட என்னை முதலில் தடுத்த முகமிதுதான்! இப்போது யார் தடுப்பார் என்னை? உமது உதடுகளை நான் ஆயிரம் தடை முத்தமிடலாம். முதலில் நான் உமது அடிமை! இப்போது நீவீர் எனது அடிமை! எனக்கு வணக்கமிடும் உமது தலை! உமது சினக் கண்களின் இமைகள் மூடியுள்ளன. என்னைக் கண்டதும் தீப்பற்றிய கண்கள் குளிர்ந்து போய் நிரந்தர தூக்கத்தில் விழுந்துள்ளன! உமது விழிகள் உறங்கி எழ மாட்டா! உமது உலகிலினி பகல் கிடையாது! பரிதி உதிக்காது! நிலவு விழிக்காது! விண்மீன்கள் கண்சிமிட்டா! எப்போதும் விடியாத இரவுதான்! ஜொகானன்! ஒருமுறை கண்களைத் திறந்து பாருங்கள்! உமக்கும் எனக்கும் கடைசியில் பிணைப்பு ஏற்பட்டு விட்டது! நீவீர் எப்போதும் எனக்குச் சொந்தமானவர்! என்னை விழித்துப் பார்க்க உமக்கென்ன வெட்கமா? பயமா? தயக்கமா? உமது உன்னத வாழ்க்கையோடு என் அற்ப வாழ்வும் பிரிக்க முடியாதபடி பிணைந்து விட்டது! ஜொகானனை மக்கள் நினைக்கும் போது யாருமினி ஸாலமியை மறக்க முடியாது! உன்னைத்தான் நான் நாடினேன்! உன்னைத்தான் நான் நேசித்தேன்! உன்னைத்தான் என்னுடன் பிணைத்துக் கொள்ள வேண்டினேன்! மற்ற அனைவரையும் நான் வெறுத்தேன்! புறக்கணித்தேன்! விரட்டி அடித்தேன்! உத்தரச் சிலைபோல் உறுதியான உம்முடல் மீதுதான் ஆசை வைத்தேன். என்னைச் சித்திரவதை செய்த உம்முடை விழிகள், மூடிப்போய் மீண்டும் சித்திரவதை செய்கின்றன!

(தொடரும்)

[காட்சி-1, பாகம்-20 அடுத்த வாரத் திண்ணையில்]

**********************************

தகவல்:

1. Salome from The Plays of Oscar Wilde, The Modern Library, New York
2. The Greatest Man Who Ever Lived By: Watch Tower Bible (1991)
3. The Desire of Ages By: Ellen G. White
4. The Story of Jesus By: Reader’s Digest (1993)
5. Who is Who in the Bible, An Illustrated Biographical Dictionary By Reader’s Digest (1994)
6. The New Testament & Psalms, Placed By the Gideons.
7. The Original New Testament By Hugh J. Schonfield (1998)
8. Encyclopaedia of Britannica [1978]
9. Student Bible, The New International Version (2002)
10 The Artist’s Way (A Spiritual Path to Higher Creativity) By: Julia Cameron (1992)
11 Oscar Wilde By Richard Ellmann [1988]
12 Collected Works of Oscar Wilde [1997]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan May 2, 2006]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts