மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 19

This entry is part [part not set] of 42 in the series 20060505_Issue

ஜோதிர்லதா கிரிஜா


தன் வருங்காலச் சம்பந்தியம்மாள் பார்வதியுடன் பேசிவிட்டு அவர்களது வில்வண்டியிலேயே காவேரி வீடு திரும்பிய போது அப்பளம் இட்டு முடித்திருந்த மாமிகள் காத்துக்கொண்டிருந்தார்கள். வீடு திரும்பி யிருந்த பத்மநாபன் வாசல் திண்ணையிலேயே உட்கார்ந்திருந்தார். மாமிகளுக்கு முன்னால் எதுவும் கேட்க விரும்பாத அவர் அன்றைக் கூலியைப் பெற்றுக்கொண்டு எல்லாரும் புறப்பட்டுப் போனதும் அடக்க முடியாத ஆவலுடன் காவேரியை நெருங்கினார்.

துர்க்கா மாடியறையில் தன் தோழிகளோடு பல்லாங்குழி ஆடிக்கொண்டிருந்தாள்.

“என்ன, காவேரி? எதுக்கு வரச் சொல்லி யிருந்தா?”

“எல்லாம் அந்த வள்ளி வெவகாரந்தான். அது எப்பிடியோ அவாளுக்குத் தெரிஞ்சு போயிடுத்துன்னா. நீங்க அவருக்கு மட்டுந்தான் தெரியும், அந்த மாமிக்குத் தெரியாதுன்னு சொல்லி யிருந்தேள். இப்ப அவாளுக்கும் தெரிஞ்சுடுத்து.”

“சரி. என்னதான் சொன்னா? கல்யாணம் நடக்குமோன்னோ? அதில ஒண்ணும் சிக்கல் வராதே?”

“இல்லே. கால்ல விழாத கொறையா அழுதுட்டு வந்திருக்கேன். ‘மறைச்சுட்டேள், அது, இது’ன்னு குத்தம் சாட்டிப் பேசினா. அப்ப என்னையும் அறியாம என் வாயில நெஜம் வந்துடுத்து.”

“என்னன்னு?”

“நீங்க ஏற்கெனவே சம்பந்தி பிராமணன் கிட்ட அதைச் சொல்லிட்டேள்னும், அதனால வரதட்சிணைப் பணத்தை ஏத்திக் குடுக்கிறதா யிருக்கோம்கிறதையும்.”

“பரவால்லே. போனாப் போறது. நமக்கெல்லாம் பொய் சொல்லிப் பழக்கமில்லே. அதான் வாயில நெஜம் வந்துடுத்து. விடு. இப்ப, அவா ரெண்டு பேரும் முட்டிக்கட்டும். வேற ஏதும் ஆட்சேபிக்கல்லையே? சரின்னுட்டாதானே?”

“சரின்னுட்டா.. .. .. ஆனா, கொஞ்சம் மனத்தாங்கல்தான் அந்த அம்மாளுக்கு. சம்பந்தி பிராமணன் கிட்டேர்ந்து நடந்ததைத் தெரிஞ்சுண்டுட்டான்னுதான் நேக்குத் தோணித்து.”

“இருக்கும். தெரியாத மாதரி பேச்சை ஆரம்பிச்சு இன்னும் அத்தைக் கொண்டா இத்தைக் கொண்டான்னு ஏத்திண்டே போகலாமோன்னோ? அதுக்குத்தான்.”

“ஆனா இப்ப ஏங்கிட்ட அதைப் பத்தி எதுவும் பேசல்லே. பின்னாடி ஏதானும் வெஷமம் பண்றதா யிருக்காளோ என்னமோ!”

“எல்லாம் துர்க்காவோட தலை யெழுத்தைப் பொறுத்ததா யிருக்கும். வேற என்னத்தைச் சொல்றது? கல்யாணத்தை நிறுத்தறேன் பேர்வழின்னு ஆரம்பிக்காம இந்த மட்டும் சம்மதிச்சிருக்காளே! இப்போதைக்கு அது போறும்.”

“இருந்தாலும், கழுத்துல தாலி ஏர்ற வரைக்கும் நமக்குத் திக்கு திக்குனுதான் இருக்கப் போறது!”

“அது சரி. ஈஸ்வரோ ரக்ஷது!”

.. .. .. கடைசியில் ஒரு வழியாகத் துர்க்காவின் கழுத்தில் தாலி ஏறிவிட்டது. வரதட்சிணைத் தொகையை மேலும் ஐயாயிரம் ஏற்றியதால், பத்மநாபன் தாம் எண்ணியபடி குடியானவ மக்களுக்குச் சாப்பாடு போட முடியாமல் போனாலும், ஊர் மெச்சுகிற விதமாகவே துர்க்காவின் திருமணம் நடந்தேறியது.

சம்பந்தியம்மாள் அவ்வப் போது ஏதேனும் ரகளைக்கு ஆயத்தம் செய்வது போல் தோன்றிய போதெல்லாம் பெரிதும் தணிந்து போய், எப்படியோ அவளைக் காவேரி சமாளித்தாள். ‘அது நொட்டை; இது நொள்ளை’ என்று அவள் குறை கண்ட போதெல்லாம், ‘அதுக்கென்ன? இன்னொண்ணு நல்லதா உங்க மனசுக்குப் பிடிச்ச மாதிரி பண்ணிட்றோம்’ என்று காவேரி சிரித்துக்கொண்டே பதிலிறுத்து அவளது வாயை அடைத்தாள். இவை யாவும் தெரிந்தும், ஏதும் அறியாதவர் போன்று தேவராஜய்யர் காந்தி எங்கெங்கே என்னென்ன பேசினார் என்பதைச் சுதேசமித்திரனில் படித்துத் தெரிந்துகொள்ளுவதிலும், அவரைப் பற்றி மற்றவர்களுடன் ‘வாய்ச் சவுடால்’ அடிப்பதிலும் பொழுது போக்கிக்கொண்டிருந்தார்.

திருமணத்தின் அர்த்தங்களும் உட்கிடைகளும் முழுவதுமாய்ப் புரியாவிட்டாலும், ‘ஏண்டி, நீலா! நேக்குப் பயம்.. ..மாயிருக்குடி! கலியாணம் ஆனா வயிறு பெரிசாயிடுமாமே? கொழந்தை பொறக்குமாமே? அப்படியாடி?’ என்று துர்க்கா தன் ‘சற்றே விவரம் தெரிந்த’ தோழியிடம் விசாரித்தாள்.

எல்லாருமே அவளைக் கொண்டாடியும், உச்சி முகர்ந்தும், வாழ்த்தியும், பரிசுகள் அளித்தும் அவளுக்கு நல்லதுதான் நடந்துகொண்டிருந்தது எனும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அவளுள் விதைத்தார்கள். தோழிகள் நீலாவும், வைதேகியும் துர்க்காவுக்கு நடந்துகொண்டிருந்த உபசாரங்களைப் பார்த்ததும் தங்களுக்கு எப்போது கலியாணம் நடக்கும் என்று ஏங்கத் தலைப்பட்டார்கள்.

‘மாப்பிள்ளை’ சிவகுருவை அவளுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. ஒரு விளையாட்டுத் தோழன் மாதிரி அவன் அவளைக் கவர்ந்தான்.

.. .. .. “அம்மாடி! ஒரு வழியாக் கல்யாணம் முடிஞ்சுடுத்து. நான் கொஞ்சம் பயந்துண்டுதான் இருந்தேன். பார்வதி மாமி கடேசி நிமிசத்துல ஏதானும் கலாட்டாப் பண்ணிக் கல்யாணத்தை நிறுத்திப்பிடுவாளோன்னு உள்ளூற நேக்கு நெஞ்சு படக் படக்னு அடிச்சிண்டே இருந்துது. அடிமடியில சர்வ சதா நெருப்பைக் கட்டிண் டிருக்கிறாப்லதான் இருந்துது. .. ..” என்றவாறு, தான், தன் கணவர், துர்க்கா ஆகியோர் மட்டும் வீட்டில் இருக்கத் தொடங்கிய முதல் நாளே காவேரி ஆயாசத்துடன் கால் நீட்டிப் படுத்துப் பெருமூச்சுவிட்டாள்.

“அப்பிடியெல்லாந்தான் எதுவும் விபரீதமா நடக்கல்லையே! விடு. ஆனா ஒண்ணு, காவேரி. நம்ம மாப்பிள்ளை துர்க்காவுக்கு ஏத்த ஜோடி. நல்ல லட்சணம். இல்லையா?”

“ஆமா. எல்லாருமே சொன்னா நல்ல ஜோடிப் பொருத்தம்னு! கண்ணு படாம இருக்கணும்.”

“கண்ணும் படாது, மூக்கும் படாது.”

பதினைந்து நாள்கள் போல் காவேரியின் வீட்டில் சாப்பிட்ட நல்ல சாப்பாடு பங்கஜத்தின் ஆரோக்கியத்தில் மெருகூட்டி யிருந்தது. வறுமை அவளது அழகையும் பொலிவையும் பாதித்திருக்க்வில்லை தானென்றாலும், சத்தான சாப்பாடு அந்தப் பொலிவை அதிகப்படுத்தி யிருந்தது.

.. .. .. ஒரு பையில் தன் துணிகளுடன் வத்தலப்பாளையம் தங்கம்மாவின் வீட்டை யடைந்து பங்கஜம் வெளிப்புறம் இலேசாய்த் தட்டி, “மாமி!” என்று குரல் கொடுத்த போது சாமிநாதன் தான் கதவைத் திறந்தான்.

கதவுக்கு அப்பால் நின்றிருந்த பங்கஜத்தைப் பார்த்ததும் சாமிநாதன் பிரமித்துப் போனான். சற்றே பூசினாற்போலச் சதை கூடியிருந்த ஆரோக்கியத்தால் அவள் தக தக வென்று ஒளிர்ந்துகொண்டிருந்தாள். அவள் உடனேயே தன் விழிகளைத் தாழ்த்திக்கொண்டதும்தான், அவளைத் தான் அப்படி ஆழமாகப் பார்த்திருக்கக்கூடாது என்பது அவனுக்கு உறைத்தது.

சுதாரித்துக்கொண்டு, “வாங்கோ, வாங்கோ!” என்ற அவன், “அம்மா, அம்மா! அவா வந்திருக்காம்மா.. .. ..” என்று உள்பக்கம் பார்த்துக் குரல் கொடுத்துவிட்டு இரேழியை ஒட்டி யமைந்திருந்த தன் அறைக்குள் புகுந்துகொண்டான். அவனது நெஞ்சுக் கூட்டினுள் இதயம் படபடத்துக் கொண்டிருந்தது. தனக்குத்தான் அப்படி யெல்லாம் நேர்ந்து கொண்டிருந்தது என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. ஏற்கவும் இயலவில்லை. பங்கஜத்தைக் காட்டிலும் அழகிகளை அவன் பார்த்திருந்தான். பட்டணத்தில் இல்லாத அழகிகளா! அதிலும், அவர்கள் ‘பவுடர் என்ன! ஸ்நோ என்ன!’ என்று தங்கள் அழகை மிகைப்படுத்திக் காட்டுபவர்கள். அப்படி யெல்லாம் ஒப்பனை செய்துகொண்டால், இந்தப் பங்கஜம் அவர்களைத் தூக்கிச் சாப்பிட்டு விடுவாள்! ஆனாலும் என்னை அவள் பால் ஈர்ப்பது அவளது வெளி யழகு மட்டுந்தானா? .. .. ..இல்லை, இல்லை! வெளியழகின் பங்கும் உண்டுதா னென்றாலும், அவள் கண்களில் சுடர் விடும் அந்த உள்ளழகுதான் என்னை இந்தப் பாடு படுத்துகிறது! நல்லவர்களுக்கே உரிய அகத்தழகு அவள் முகத்தில் பளீரிடுகிறது. .. .. பிரும்மசரியமாவது, மண்ணாங்கட்டியாவது! பத்து வருஷங்களுக்கும் மேலாகப் புருஷனை விட்டு வாழ்ந்து வரும் அவளுக்குப் புருஷனின் முகம் கூட மறந்தே பொயிருக்கும். ஒரு பெண்ணை அநியாயமாக விலக்கி வைத்துவிட்டு அவன் இன்னொருத்தியோடு வாழும் போது, இவள் மட்டும் காலமெல்லாம் தனியாக இப்படி வாழவேண்டும் என்பது என்ன நியாயம்? .. .. .. காந்திக்கு இதைப் பற்றிக் கடிதம் எழுதிக் கேட்டாலென்ன? .. .. ஏன்? எதற்காகக் கேட்கவேண்டும்? நான் நினைப்பது தவறில்லை என்று என் மனசு சொல்லும் போது காந்தியை எதற்குக் கேட்பது? .. .. நானென்ன, இப்படியெல்லாம் யோசிக்கிறேன்? ஏதோ அந்தப் பங்கஜம் சம்மதித்துவிட்டது போலவும், அங்கீகாரத்துக்காக நான் காந்தியை அணுகுவது போலவும், இதென்ன மயக்கமான கற்பனை! .. .. அம்மா ஒருகாலும் இந்த நினைப்பைக்கூடத் தாங்க மாட்டாள்.. .. .. ஏன்? பங்கஜமும் தான்! ஆனால், பங்கஜம் எனக்குச் சம்மதிக்காவிட்டால், அது இயல்பானதாக இருக்காது. காலங்காலமாகப் பெண்களின் மேல் திணிக்கப்பட்டு வந்துள்ள கட்டாய நெரிமுறைகளின் தாக்கமும், சமுதாயத்துக்குப் பயந்து சாகிற பேடித்தனமும், சொந்தக் கால்களில் நிற்க முடியாமையால் விளையும் நிராதரவான நிலை விளைவிக்கும் பீதியும்தான் அதற்கான காரணங்களாக இருக்கும். தவிர, பெண் குழந்தைகளையே வரிசையாகப் பெற்றாள் என்பதற்காக உறவையே முறித்துவிட்ட கணவன் மீது ஒரு பெண்ணுக்கு என்ன அன்பு இருக்க முடியும்? அப்படி இருப்பதாக ஒரு பெண் சொன்னால், அது வெறும் பொய்தான்! அவள்மீது திணிக்கப்பட்டு வந்துள்ள – சமுதாயம் பற்றிய மிதமிஞ்சிய அச்சத்தால் விளைந்த – செயற்கைத்தனமான “பதி பக்தி” யாகத்தான் இருக்கும்! தங்களுக்கு இயல்பான எண்ணங்களைக் கூட – அவை தவறானவை என்கிற போதனையால்தான் – கொத்தடிமைகளாக இருந்து வரும் பெண்கள் வெளியிடுவதில்லை. அதை ஒப்புக் கொள்ளுவதற்கும் அவர்களுக்கு அச்சம். தயக்கம். சமுதாயம் – முக்கியமாய் அதன் உறுப்பினர்களா யிருக்கும் ஒரு பெண்ணின் பெற்றோர் உட்பட – அவளை ஏசிச் சாடி அவளது நிம்மதியைக் குலைப்பதோடு, ஆணைச்சார்ந்து பிழைப்பவளாக அவளை வைத்துள்ளதுதான் இந்தக் கோளாறுகளுக்கெல்லாம் அடிப்படையான காரணம். அந்தக் காலத்தில் அப்பா தனக்குச் செய்த கொடுமைகளுக்காக என் அம்மாவே அவர் காலமான பிறகும் கூட எப்படியெல்லாம் அவரைத் திட்டித் தீர்த்திருக்கிறாள்! செத்துப் போனவர்களைப் பற்றி இழிவாய்ப் பேசக்கூடாது எனும் மரபு சார்ந்த வழக்கம் கூட அம்மாவிடம் எடுபடவில்லையே! .. .. .. பங்கஜத்தை மிக, மிக மெதுவாகவும் ஜாக்கிரதையாகவும்தான் வழிக்குக் கொண்டுவர வேண்டும். அவசரமே கூடாது. அப்படி அவளை என் வழிக்குக் கொண்டுவர முடிந்தால், அதன் பிறகு அவளை அழைத்துக்கொண்டு நான் மெட்றாசுக்குப் போய்விட வேண்டும். .. .. அம்மாவுக்குக் கூடச் சொல்லக் கூடாது. அவளுக்கு வாழ்வு தரவும், நான் அவளை யடையவும் அதுதான் வழி.. .. ..’ – தன் எண்ணங்கள் ஓடின ஓட்டம் கண்டு அவனுள் தன்னைப் பற்றிய திகைப்பு உண்டாயிற்று. அவன் மேசை மீது தலையைக் கவிழ்த்துக் கொண்டான்.

“ வாம்மா, வா!” என்று பங்கஜத்தைப் புன்சிரிப்புடன் வரவேற்ற தங்கம்மா அவளை உள்ளெ அழைத்துப் போனாள்.

பங்கஜத்துக்கு இலேசாய் வேர்த்துக் கொண்டிருந்தது. தங்கம்மாவை நோக்கிப் பதிலுக்குக் கூடப் புன்னகை புரியாமால் அவளுக்குப் பின்னால் உள்ளே சென்றாள்.

“என்னமோ மாதிரி இருக்கியே? உடம்பு கிடம்பு சரியில்லையாம்மா?”

“இல்லியே, மாமி? எப்பவும் போலத்தான் இருக்கேன். காலம்பற லேசாத் தலையை வலிச்சுது. அதுவா யிருக்கலாம்,” என்றபடி உள்ளெ போன பங்கஜம் கிணற்றடிக்குப் போய்க் கால்களைக் கழுவிக்கொண்ட பின் உள்ளே வந்து தங்கம்மாவிடம் அன்றைச் சமையலுக்கான குறிப்புகளைக் கேட்டுப் பெற்றுக்கொண்டாள். பிறகு, காப்பி போட முற்பட்டாள்.

காப்பி தயாரானதும், “சாமிநாதன் – என்னோட பிள்ளை பேரு சாமிநாதன் – அவனோட ரூம்ல இருக்கான். நீயே கொண்டு போய்க் காப்பியைக் குடுத்துட்றியா?” என்ற தங்கம்மாவிடம், “ இல்லே, மாமி. நீங்களே கொண்டுபோய்க் குடுத்துடுங்கோ!” என்று தான் சொன்ன பதிலால் தங்கம்மா மாமியின் முகத்தில் இலேசாய்ப் புன்சிரிப்புத் தோன்றியதாகப் பங்கஜத்துக்குத் தோன்றியது. ‘இந்தப் பொண்ணு அசட்டுப் பிசட்டுன்னெல்லாம் நடந்துக்கக் கூடியவ இல்லே! அடக்காமானவ’ என்கிற திருப்திப் புன்சிரிப்பு அது என்று கூடப் பங்கஜத்துக்குத் தோன்றியது. ‘இவ என் பிள்ளையை ஒண்ணும் பண்ணிட மாட்டா’ என்கிற பொருளும் அதில் ததும்பியதாக எண்ணிய பின், ‘அடச் சீ ! என்ன இது! நான் என்னென்னவோ யோசிக்கிறேனே? நேக்குப் பயித்தியந்தான் பிடிக்கப் போறது போலிருக்கு!’ என்றும் அவள் எண்ணினாள். எனினும், ‘இல்லை, இல்லை! என் உள்ளுணர்வு தப்பானதே இல்லை. நான் எப்படிப்பட்டவள் என்பதைத் தெரிந்து கொள்ளுவதற்காகத் தங்கம்மா மாமி எனக்கு வைத்த சோதனை அது!’ என்றே கடைசியில் அவள் முடிவு செய்தாள். அது உண்மையில் சோதனை யெனில், தான் ஜெயித்துவிட்ட மகிழ்ச்சியும் அவளுள் கிளர்ந்தது.

.. .. .. “என்னம்மா, இது? எப்பவுமே ஒரு சாம்பார், கூட்டு, இல்லேன்னா ரசம், கறின்னுதானே பண்ணுவே? அந்தப் பொண்ணு வந்ததுலேர்ந்து தெனமும் சாம்பார், ரசம், கறி, கூட்டுன்னு வெளுத்து வாங்கறியே?” என்று ஒரு வாரத்துக்குப் பிறகு ஒரு நாள் பங்கஜம் அறியாமல் அவன் கேட்ட போது, “சம்பளம் குடுக்கப் போறோம். செய்யட்டுமேடா? வக்கணையா உக்காந்துண்டு அவளும்தானே எல்லாத்தையும் சாப்பிட்றா? வந்ததுக்கு இப்ப ஒடம்பு இன்னும் நன்னாத் தேறி யிருக்கா!” என்றாள் தங்கம்மா.

ஒரு நாள் பங்கஜம் இருவரையும் உட்கார்த்தி உணவு பரிமாறிக்கொண்டிருந்த போது, “உங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியுமா?’ என்று சாமிநாதன் நேருக்கு நேராக அவளைப் பார்த்து விசாரித்தான். ‘வேண்டாம்’, ‘போறும்’ , ‘கொஞ்சமாப் போடுங்கோ’ ஆகிய சொற்களைத் தவிர வேறெந்தச் சொற்பரிமாற்றமும் அதுவரை அவளுடன் செய்தறியாத சாமிநாதன் பங்கஜத்தை அவ்வாறு வினவியது தங்கம்மாவின் புருவத்தை உயர்த்தியது.

“தமிழ் எழுதுவேன், படிப்பேன். அப்பாதான் கத்துக் குடுத்தா, ” என்று பங்கஜம் அவன் முகத்தைப் பாராமலே பதில் சொன்னாள். ஏனெனில் தங்கம்மாவின் பார்வை குறுகுறுவென்று தன் மீது பதிந்திருந்ததைத் தலையைத் திருப்பாமலே அவளால் தெரிந்துகொள்ள முடிந்தது.

“காந்தியோட கட்டுரைகள் சிலது இருக்கு. நானே இங்கிலீஷ்லேர்ந்து தமிழ்ப் படுத்தினது. மெட்றாஸ் போனதும் அச்சுக்குக் குடுப்பேன். மத்தியானம் உங்க சமையல்கட்டு வேலையெல்லாம் முடிஞ்சதும் படிச்சுப் பாருங்கோ.” – அவனும் தன் பார்வையை அகற்றிக்கொண்டு இலையைப் பார்த்துக்கொண்டே பேசினான்.

“சரி.”

“எங்கம்மாவுக்கு எழுதப் படிக்கக் கத்துக் குடுக்கணும்னுட்டு நேக்கு ரொம்பவே ஆசை. ஆனா அம்மா பிடிவாதமா மாட்டவே மாட்டேன்னுட்டா.”

“ஆமாண்டா. வேற வேலை இல்லே. இத்தனை வயசுக்கு மேல கத்துண்டு நான் என்ன சாதிக்கப் போறேனாம்?”

.. .. .. அன்றே, பிற்பகலில், அவன் கூடத்து ஊஞ்சலில் ஒரு நோட்டுப் புத்தகத்தைக் கொண்டுவந்து வைத்துவிட்டு, அடுக்களையில் வேலையாக இருந்த அவள் பக்கம் பார்த்து, “நான் சொன்னேனே, காந்தியோட எழுத்துகள், அதெல்லாம் இருக்கிற நோட்புக்கை ஊஞ்சல்ல வெச்சிருக்கேன். படியுங்கோ!” என்று தங்கம்மாவின் முன்னிலையில் இரைந்த குரலில் அறிவித்துவிட்டுத் தன்னறைக்குள் புகுந்து சாமிநாதன் கதவைச் சாத்திக்கொண்டான்.

தன் மகன் மீது அளவு கடந்த நம்பிக்கை கொண்டிருந்ததாலோ, அல்லது பிரும்மசரிய விரதம் என்று சொல்லிக்கொண்டு திருமணம் செய்துகொள்ள மறுத்துவருபவன் என்பதாலோ, கிராமத்து வழக்கத்தை மீறிய அவனது செயல் தங்கம்மாவுக்குத் தப்பாகப் படவில்லை. அவளது சந்தேகமெல்லாம் – அதுவும் மிகவும் கொஞ்சமாய் – அந்தப் பெண் பங்கஜத்தின் மேல்தான்! கணவனை விட்டுப் பிரிந்திருந்த அவள் தன் மகனை மயக்கிவிடாதிருக்க வேண்டுமே என்பது பற்றித்தான்!

.. .. ..பிற்பகலில் தங்கம்மா குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் பங்கஜம் சாமிநாதன் கொடுத்திருந்த நோட்டுப் புத்தகத்தைப் படித்தாள்.

‘யங் இண்டியா – ‘வெட்கக்கேடான இளைஞர்கள்’ எனும் தலைப்பில் காந்தி எழுதியுள்ளது:

ஓர் இளைஞன் இருபதாயிரம் வரதட்சிணை கேட்டுப் பெற்றதாக ஐதராபாத்திலிருந்து எனக்கு ஒருவர் எழுதியுள்ளார். அசிங்கம் பிடித்த இவ்வழக்கத்துக்கு எதிராகப் பொதுஜன அபிப்பிராயத்தை நாம் உருவாக்க வேண்டும். வசரதட்சிணை வாங்கித் தங்கள் விரல்களை மாசுபடுத்திக்கொள்ளும் இளைஞர்களை மக்கள் ஒதுக்கிவைக்க வேண்டும்.. .. .. ‘திருமணம் இன்றிச் செத்து மடிந்தாலும் மடிவேனே யல்லாது, வரதட்சிணை கேட்பவனை ஒரு போதும் மணக்கமாட்டேன்’ எனும் வைராக்கியம் ஒவ்வொரு பெண்ணுக்கும் வரவேண்டும். .. .. வரதட்சிணை கேட்பதன் மூலம் இளைஞர்கள் தங்கள் கல்வியையும் தங்களையும் அவமானப்படுத்திக் கொள்ளுகின்றனர். .. .. ’ – ஒரு பெரிய கட்டுரையின் மேற்கண்ட இவ்வாக்கியங்கள் அவனால் அடிக்கோடிடப்பட்டிருந்தன. .. .. அடுத்து, குழந்தைத் திருமணம் பற்றியது. .. .. வயதுக்கு வரும் முன்னரே கணவனை இழந்த சிறு குழந்தைப் பெண்களுக்குக்கூட மறுமணம் மறுக்கப்படுவதன் கொடுமை பற்றிய ஒரு கட்டுரை .. .. .. துன்புறும் பெண்கள் மீது மிகவும் பரிவு உள்ளவன் என்பதாய்த் தன்னை அவளுக்குத் தெரிவிக்கிற முயற்சியே அவனது அந்த நடவடிக்கை என்பது தெற்றெனப் புடிய, அவளுள் சன்னமாய் ஓர் அதிர்வு ஏற்பட்டது.

பத்துப் பக்கங்கள் தாண்டிய பிறகு, ‘அன்புள்ள பங்கஜம்’ என்று ஒரு கடிதம் தொடங்கப் பட்டிருந்தது. அவளுள் ஏற்கெனவே விளைந்த்¢ருந்த சன்னமான அதிர்வு தீவிரம் கொண்டது. அவள் விழிகள் தங்கம்மாவின் புறம் நோக்கின.

அவள் குறட்டைவிட்டவாறு ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.

– தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation

author

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts