நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-18) (Based on Oscar Wilde’s Play Salome)

This entry is part [part not set] of 34 in the series 20060428_Issue

சி. ஜெயபாரதன், கனடா


மான் வேங்கை ஆன திங்கே!
மயில் மாறிப் போன திங்கே!
தேன்மொழியாள் வாய்நீளு மிங்கே!
தீங்கிழைப்பார் கை ஓங்கு மிங்கே!
எங்கும் ஞானிக்கு கத்தி உண்டோ?
இரக்க மற்ற அரக்க ரிங்கே!
நங்கையின் சீற்றம் பொங்கு திங்கே!
நரபலிக் கான பூசை யிங்கோ?

+++++++++++++++

“தனிப்பட்ட முறையில் கலைத்துவப் படைப்புகளுடன் தொடர்பு கொள்ளும் போது நான் பேருவகை அடைகிறேன். வேறு எத்துறைகளிலும் பெற முடியாத பூரிப்பு உணர்வை அவை எனக்கு அளிக்கின்றன.”

“சுயநல இச்சைகளை முதன்மையாக நிறைவேற்ற முற்படும் ஒருவரது வாழ்க்கை சீக்கிரமாக அல்லது தாமதமாகச் சீர்கேட்டில் முடிந்து கசப்பான ஏமாற்றத்தில் அவரைத் தள்ளிவிடும்!”

“மகிழ்ச்சிகரமான ஒரு வாழ்க்கையை நீ விரும்பினால், ஒரு குறிக்கோளை நோக்கிச் செல்ல உன்னைப் பிணைத்துக் கொள். மனிதருக்காகவோ அல்லது பொருளுக்காகவோ வேண்டிப் போகாதே!”

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1879-1955)

“சொர்க்கபுரி அதோ உள்ளது, அந்த கதவுக்குப் பின்புறத்தில், அல்லது பக்கத்து அறையில்! ஆனால் அதன் சாவியைத் தொலைத்து விட்டேன் நான்! ஒருவேளை சாவியை எங்கோ தவறாக வைத்து விட்டேனோ தெரிய வில்லை!”

“பிறப்பும், மரணமும் வீரத்தனத்தின் இரண்டு மகத்தான உச்சரிப்பு வார்த்தைகள்.”

“ஆசை பாதி வாழ்க்கை! ஆனால் கவனமின்மை (Indifference) பாதி மரணம்!”

கலில் கிப்ரான் [Kahlil Gibrahn (1883-1931)]

“பெண்ணை எந்த குறையுமற்ற பூரணியாக எண்ணும் ஓர் ஆடவனுடன் எப்படி ஒரு பெண்ணானவள் ஆனந்தமா யிருக்க எதிர்பார்க்க முடியும்?”

“நான் எதனையும் எதிர்த்துத் தடுக்க முடியும், கவர்ச்சி வசப்பாடு [Temptation] ஒன்றைத் தவிர!”

“என் நெருங்கிய நண்பர்களைக் கவர்ச்சியான அவரது தோற்றத்துக்காகவும், தோழர்களை அவரது நற்பண்புக்காகவும், பகவர்களை அவரது மேதமை ஞானத்துக்காகவும் தேர்ந்தெடுக்கிறேன்.”

ஆஸ்கர் வைல்டு [1854-1900]

நாடக நபர்கள்:

ஏரோத் ஆன்டிபஸ் (Herod Antipas) : ஜுடேயா (Judea) நாட்டில் காலிலீயின் ஆளுநர் [Governor of Galilee
ஏரோதியாஸ் (Herodias): ஏரோத் மன்னின் மனைவி
ஸாலமி இளவரசி: ஏரோதியாஸின் முதல் கணவன் ·பிளிப்புக்குப் (Philip) பிறந்த புதல்வி.
(·பிளிப்: ஏரோத் ஆன்டிபாஸ¤க்கு மாற்றாந்தாய் சகோதரன்)
ஜொகானன் (Jokanan): ஜான், புனித நீராட்டி
ஏரோதியாஸின் சேடியர், காவலர்
ஸிரியா வாலிபன் : நாராபாத், ஸாலமி மீது தீராக் காதல் கொண்டவன்
சேனைக் காவலர்.
கப்பதோசியன் : (Cappadocian) ஓரினத்தைச் சேர்ந்தவன்.
நியூபியன் : (Nubian) வேறோர் இனத்தைச் சேர்ந்தவன்.
யூதர்கள்: மூவர்.
நாஸரீன் [Nazarene], மற்றும் ரோமாபுரி டைஜெல்லினஸ் [Tigellinus]

நேரம்:

அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை. முழுச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.

காட்சி அமைப்பு:

ஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம். கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை. வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது. ஏரொத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் மாளிகையில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரையாடிக் கொண்டிருக்கிறாள். அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள். ஏரோத் மன்னனின் காம விழிகள் ஸாலமியை வட்ட மிடுகின்றன! மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள். ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக்கிறான். இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொகானன் [ஜான் புனித நீராட்டி] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார்.

இடை இடையே சிறையில் கிடக்கும் ஜொகானன் உரக்கக் குரல் கேட்கிறது. ஸாலமி அருவருப்படைந்து மேல்மாடிக்கு வருகிறாள். அப்போது ஸாலமி ஜொகானனைக் காண வேண்டுமென விரும்பியதும், காவலர் அவரை மாடிக்கு அழைத்து வருகிறார்! சிறைக் கைதி ஜொஹானன் மீது ஸாலமிக்குப் பரிவும், பாசமும், பற்றும் உண்டாகிறது. போதகரை ஸாலமி முத்திமிடப் போவதை, ஸிரியா வாலிபன் தடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான். ஜொகானன் ஸாலமியை உதறித் தள்ளி சிறைக்கு மீள்கிறார். ஏரோத் மன்னன், ஸாலமியைத் தேடி அவரது மனைவி ஏரோதியாஸ் ஆகியோர் புடைசூழ மாடிக்கு வருகிறார். ஸாலமியை நாடும் ஏரோதை ராணி கண்டிக்கிறாள். ஏரோதியாஸின் மேல் சாபமிடும் ஜொகானன் மீது ராணி ஏரோதியாஸ் கோபப் படுகிறாள். ஸாலமியின் மேனி எழிலில் மயங்கி ஏரோத் தன்முன் நடனம் ஆடும்படிக் கெஞ்சுகிறான். ராணி அதைத் தடுக்கிறாள். முடிவில் வெகுமதி தருவதாய் ஏரோத் உறுதி மொழி கொடுத்ததும், ஸாலமி நடனம் ஆட ஒப்புக் கொள்கிறாள். ஆனால் அவள் கேட்கும் வெகுமதி என்ன? பயங்கர வெகுமதி ஒன்று! வெள்ளித் தாம்பாளத்தில் ஜொகானன் தலை! போதர் மீது பேரளவு மதிப்பு வைத்துள்ள ஏரோத் அவ்விதம் செய்ய மறுக்கிறான்.

*********************

ஸாலமி: என் பேரழகு மயக்க முடியாமல் போனது ஒருவரை, ஒரே ஒருவரை! போதகர் ஜொகானனை! தேக்கு மர உத்தரம் போன்ற கரங்கள்! தெய்வீகப் பார்வை உள்ள கண்கள்! ஆனால் மலைக் குகையில் வாழும் காட்டு மனிதர்! அந்த காட்டு மனிதர்தான் என்னைக் கவர்ந்தார்! ஆனால் அவர் என்னை நாடவில்லை! எதிலும் அவருக்கு நாட்டமுமில்லை! அதனால் என் நெஞ்சம் அடிமை ஆனது அவரிடம்! என் கால்கள் என்னை அறியாமல் அவர்முன் மண்டி யிட்டன! என் கைகள் எனக்குத் தெரியாமல் அவரைத் தழுவிடச் சென்றன. என் கண்கள் யாரையும் பாராது அவரையே முற்றுகை யிட்டன! என்னழகு அவரை அபகரிக்க முடியாமல் வலுவிழந்தது! என்ன, என் கவர்ச்சிக்குப் பெரும் தோல்வியா? எனக்கொரு தோல்வியா? தோல்வியை ஏற்றுக் கொண்டு தொய்ந்து செல்பவள் ஸாலமி யில்லை! வெற்றியை அடையாது ஒதுங்கிச் செல்பவள் ஸாலமி யில்லை! அவர் நெஞ்சை என் கண்கள் எரிப்பதற்குப் பதிலாக, அவர் கண்கள் என் நெஞ்சைச் சுட்டெரித்தன! என்னையும் மீறிக் காதல் நிறைவேறாது கண்கள் கண்ணீர் விட்டன! ….என்னால் தாங்க முடியாத ஒன்று புறக்கணிப்பு! அதுவும் நான் விரும்பும் ஆடவர் ஒருவரின் புறக்கணிப்பு! ஏமாந்து தவிக்கும் என் ஆத்மா பலிவாங்கப் புறப்பட்டது! உள்ளே உறங்கிக் கொண்டிருந்த வேங்கை, விழித்தெழுந்தது! அதைத் தடுக்க முன்வருவோர் என்னுடன் போருக்கு வரத் தயாராக வேண்டும்! பசித்துப் பாயவரும் வேங்கைக்குத் தீனி கிடைக்கா விட்டால், அது என்னையே தின்றுவிடும்! மன்னரே! உம்மைத் தின்பதற்குள், காவலருக்கு ஆணை யிடுவீர்! வாளெடுத்து வீசட்டும்! வெள்ளித் தட்டில் பொத்தென்று விழட்டும் தலை! குருதி பொங்கப் புனிதர் சிரசைக் காண வேண்டும். [ஸாலமிக்கு மூச்சு வாங்குகிறது]

ஏரோத்: [மதி மயக்கமுற்று, கலக்கமுடன்] மயிலென்று உன்னை நினைத்தேன்! துள்ளி வரும் புள்ளி மானென்று உன்னை நினைத்தேன். வண்ணச் சிறகேந்தும் பட்டாம் பூச்சியாக உன்னை நினைத்தேன்! பொங்கிவரும் பொன்னிலவு என்று உன்னை நினைத்தேன். கண்ணைக் கவரும் வண்ண மயமான வானவில் என்று நினைத்தேன்! ஆனால் நீ காட்டு விலங்காய் மனிதரை வேட்டையாட விரும்புகிறாய்! என்ன விந்தை? நீ வெறி பிடித்த வேங்கை என்று தெரியாமல் போனதே! ஸாலமி நீ ஒரு பெண்ணா? அன்றி நரபலி தேடும் பேய் பிசாசா?

ஸாலமி: மதுக் கிண்ணத்திலிருந்த மயக்க பானமெல்லாம் உங்கள் மண்டையில் நிரம்பி வேலை செய்கிறது! கவிஞனைப் போல் என்னை இத்தனை அழகாகப் பாராட்டுவதைக் கேட்டு என் நெஞ்சம் பாகாய் உருகுகிறது! மன்னரே! ஆமாம் நீங்கள் சொன்னவை அனைத்தும் உண்மை! நளினமான அந்த மயில் கேட்பதைக் கொடுத்தால் என்ன? துள்ளி வரும் மான் விரும்பும் வெள்ளித் தட்டைத் தந்தால் என்ன? பறந்து செல்லும் பட்டாம் பூச்சி கேட்கும் புனித விருந்தளித்தால் என்ன? பொங்கி வரும் பொன்னிலவுக்கு வெகுதி கொடுக்க ஏன் தயக்கம்? வண்ண மயமான வானவில்லுக்கு மனதைப் பறி கொடுத்த மன்னர், பரிசளிக்க ஏன் தயக்கம்? …[கோபமாகக் கத்துகிறாள்] மன்னரே! வெகுமதி வேண்டும் எனக்கு! வெள்ளித் தட்டில் வேண்டும் எனக்கு! வேண்டும், வேண்டும், வேண்டும் ஜொஹானன் தலை!

ஏரோதியாஸ்: [ஆத்திரமுடன்] அப்படி அடித்துக் கேள் ஸாலமி! எப்படி அழுத்தமாகப் பேசுகிறாய்? பெற்றவள் உள்ளம் குளிர்கிறது மகளே! நீ கேட்பதை அவர் கொடுக்கத்தான் வேண்டும்.

ஏரோத்: மூடு வாயை, மகாராணி! நீ ஒரு முட்டாள்! ஆனால் ஸாலமி உன்னை விட அறிவாளி! அவள் சினம் கொண்டாலும் சற்று சிந்திப்பவள்! உன்னைப் போல் போதகரை நிந்திப்பவ ளில்லை ஸாலமி! தெரியுமா புனித போதகரைக் காதலிக்கிறாள் ஸாலமி! போதகர் தன்னை நோக்கிப் புன்னகை புரிய மாட்டாரா என்று ஏங்குகிறாள் ஸாலமி. [ஸாலமியைப் பார்த்து] கண்மணி! போதகரைக் கண்டு நேராகப் பேசினால் என்ன? காதல் கவிதையை உன் காந்த விழிகள் எழுதட்டும்! மீண்டும், மீண்டும் முயன்றால் ஆண்டவன் கூட மயங்கி விடுவார்! முயற்சியைக் கைவிடாதே!

ஸாலமி: [அப்புறம் பார்த்துக் கொண்டு] மன்னரே! என் அன்னை முட்டாளுமில்லை! நான் ஓர் அறிவாளியுமில்லை! ஜொகானன்தான் ஒரு பேரரறிவாளி! அவர் என்னை நிராகரித்து விட்டார்! மீண்டும் அவரைக் கண்ணால் நான் தீண்ட முடியாது! அவரை உயிரோடு நான் பிடிக்க முடியாது! ஒளிமிக்க அந்த கண்கள் வேண்டும் எனக்கு! உன்னத அந்த மூளை வேண்டும் எனக்கு! உத்தரம் போன்ற அந்த உடம்பு வேண்டாம் எனக்கு! என்னையே உற்று நோக்கும் அந்த ஒளிக் கண்கள் வேண்டும் எனக்கு! கட்டளை யிடுங்கள் மன்னரே! அவரது மூடாத கண்களைக் காண வேண்டும்! காத்திருக்க முடியாது என்னால்!

ஏரோத்: [கண்களில் கண்ணீர் பொங்க, ஆசனத்தில் மயங்கியபடி] .. அவள் கேட்டதைக் கொடுத்து விடுங்கள். அவள் ஆங்காரத் தாயின் வேங்கை மகள்! நரபலி வெறிகொண்ட நங்கை அவள்! கொடுத்து விடுங்கள் வேண்டும் வெகுமதியை!

[முதற் காவலன் வந்து வணங்கி நிற்கிறான். மகாராணி ஏரோதியாஸ் ஏரோதின் கைவிரலில் பூண்ட மரண மோதிரத்தைக் கழற்றிக் காவலன் கையில் தருகிறாள். உடனே அந்த மரண மோதிரத்தை எடுத்துச் சென்று, காவலன் சிரச்சேதம் செய்யும் கொலையாளியிடம் கொடுக்கிறான்]

ஏரோத்: ….[மது மயக்கத்தில்] யார் என் மோதிரத்தை உருவி எடுத்தது? என்னிடது கைவிரலில் ஒரு மோதிரம் இருந்ததே! எங்கே அதைக் காணோம்? … யார் எனது ஒயினைக் குடித்தது? எனது மதுக்கிண்ணம் காலியாக உள்ளதே! நிரம்பிய கிண்ணம் வெறுமையாய்க் கிடக்குதே! யாரோ அதை முழுவதும் குடித்து விட்டார்! ஏதோ கேடுகாலம் வரப் போகுதா? பயமாக உள்ளது எனக்கு! … மன்னன் யாருக்கும் வரம் தருவாய் வாக்களிக்கக் கூடாது! அதிலும் உறுதி அளிக்கக் கூடாது! நாட்டியக்காரி நளினத்தில் மயங்கி விடக் கூடாது! … நர்த்தகிக்கு வெகுமதி கொடுத்தாலும் சீர்கேடு! வெகுமதியை மறுத்தாலும் சீர்கேடு! கடவுளே! அறிவு கெட்ட எனக்கு என்ன தண்டனை கொடுக்கப் போகிறாய்? [முகத்தைக் கைகளால் மூடிக் கொண்டு அழுகிறான்]

[கொலையாளி மரண மோதிரமோடு சிறைச்சாலை நோக்கிப் போகிறான்]

(தொடரும்)

[காட்சி-1, பாகம்-19 அடுத்த வாரத் திண்ணையில்]

**********************************

தகவல்:

1. Salome from The Plays of Oscar Wilde, The Modern Library, New York
2. The Greatest Man Who Ever Lived By: Watch Tower Bible (1991)
3. The Desire of Ages By: Ellen G. White
4. The Story of Jesus By: Reader’s Digest (1993)
5. Who is Who in the Bible, An Illustrated Biographical Dictionary By Reader’s Digest (1994)
6. The New Testament & Psalms, Placed By the Gideons.
7. The Original New Testament By Hugh J. Schonfield (1998)
8. Encyclopaedia of Britannica [1978]
9. Student Bible, The New International Version (2002)
10 The Artist’s Way (A Spiritual Path to Higher Creativity) By: Julia Cameron (1992)
11 Oscar Wilde By Richard Ellmann [1988]
12 Collected Works of Oscar Wilde [1997]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan April 24, 2006]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts