மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 18

This entry is part [part not set] of 34 in the series 20060428_Issue

ஜோதிர்லதா கிரிஜா


‘அவங்களையும்தான்’ என்று பதில் சொன்ன சின்னக்கண்ணுவை வள்ளி வியப்பாகப் பார்த்தாள்.

“அதெப்படீடி அம்புட்டு நிச்சியமாச் சொல்றே? அவங்களுக்கும் தனியா ஏதானும் அடையாளம் இருக்குதா?” என்று அவள் ஆவலுடன் விசாரித்தாள்.

“அவங்க நல்ல செவப்புன்னு சொல்ல முடியாது. பொது நெறந்தான். அவங்களுக்கும் பெரிய நெத்தி. சுருள் சுருளா முடி. அய்யா எம்புட்டுக்கு எம்புட்டு ஒசரமோ, அம்புட்டுக்கு அம்புட்டு அவங்க படு குள்ளம். குண்டு. மூக்குச் சப்பையா யிருக்கும். சின்னக்கண்ணு. ஆனா, அளகாயில்லாட்டியும், களையா யிருப்பாங்க. அவங்க மொகமும் என் கண்ணு முன்னாலவே நிக்கிது. அப்படியாக்கொந்த மொகம். அதையும் கண்டுக்குறது சொலபந்தான்.”

“சரி, சொல்லு. அப்பால?’

“அப்பால என்ன. அப்பால? அம்புட்டுத்தான்.”

“அது சரி, அது யாரு வீட்டுக் கொளந்தைன்னு அவங்க ரெண்டு பேரும் ஓங்கிட்ட கேக்கல்லியா?”

“கேக்காம இருப்பாங்களா? கேட்டாங்க. மொதக்கா, நான் ‘அவங்க யாரா யிருந்தா என்ன, சாமி’ ன்னுதான் சொன்னேன். ஆனா அவங்க விடல்லே. திருப்பித் திருப்பிக் கேட்டாங்க. ‘அம்மா! இது யாரு வீட்டுக் கொளந்தைங்கிறது எங்களுக்குத் தெரிஞ்சிருக்கிறதுதான் நல்லது. நாங்க செத்தாலும் உன்னயக் காட்டிக் குடுக்கப் போறதில்லே. இருந்தாலும், தெரிஞ்சு வச்சுக்குறதுதான் சரி. பின்னாடி ஒரு காலத்துல அதுக்கு அவசியம் ஏற்பட்டா உபயோகமா யிருக்கும்’ னாங்க. சரிதான்னு நானும் உண்மையைச் சொல்லிட்டேன். பொறந்த நாளும் நேரமும் தெரியுமான்னு கேட்டாங்க. ‘நேத்துப் பொறந்திச்சு. ராத்திரி பத்து மணிக்குப் பொறந்ததாப் பேசிக்கிட்டாங்க’ ன்னு சொன்னேன். அப்பால ரெண்டு பேரும் கொளந்தையோட போயிட்டாங்க. அந்தக் கொளந்தை குடுத்து வெச்ச கொளந்தை. இப்ப கலியாணம் காச்சி ஆயி, நல்ல எடத்துல வாக்கப்பட்டிருக்கும்!”

“அவங்க ரெண்டு பேரும் எந்த ஊர்க்காரங்கன்னு கேட்டியா?”

“.. .. எந்த ஊருன்னு தெரியல்லே. ஆனா, அவங்க இன்னும் ஒரு வெசயம் பேசிக்கிட்டாங்க. ‘இப்ப இந்தக் கொளந்தையும் கையுமா நம்ம ஊருக்குப் போனா ஊர்லே இல்லாத பொல்லாத கேள்வி எல்லாம் கேப்பாங்களே?’ ன்னிச்சு அந்தம்மா. அதுக்கு அந்தய்யா, ‘ இப்ப நாம நேரா திண்டுக்கல்லுக்குப் போறோம். அங்கிட்டு நீ ஒங்கப்பா அம்மாவோட இரு. நான் நம்ம ஊருக்குப் போயிர்றேன். ஒரு பத்து மாசம் களிச்சு நம்மூருக்குப் போயிரலாம். இது ஒனக்குப் பொறந்ததுன்னு சொல்லிரலாம்’ அப்படின்னாரு.”

“அதுக்கு அப்பால, அவங்க உன் கண்ணுக்குத் தட்டுப்படவே இல்லியா?”

“இல்லே, வள்ளி.”

“என்னமோ கதை கேக்குறாப்ல இல்ல இருக்குது!”

“இன்னைக்கு அதைப் பத்தி ஓங்கிட்ட சொல்லிடணும்னு ஏன் எனக்குத் தோணிச்சோ, தெரியல்லே.”

“அது, வேற ஒண்ணுமில்லே, சின்னக்கண்ணு. நான் தாசரதி அய்யாவோட பொஞ்சாதியைப் பாத்துப் பேசினது பத்தி ஓங்கிட்ட சொன்னேனில்ல? அதான்.”

இருவரும் குடிசைக்குத் திரும்பினார்கள். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி யென்றாலும், அது சின்னக்கண்ணுவைப் பெரும் பாரமாக அதுகாறும் அழுத்திக்கொண்டுதான் இருந்தது. நடந்ததை யெல்லாம் வள்ளியிடம் சொன்ன பிற்பாடு, அதை இறக்கிவைத்தது போன்ற நிம்மதியில் அவள் ஆழ்ந்தாள்.

.. .. .. இன்னும் இரண்டே வாரங்களில் நடப்பதற் கிருந்த திருமணத்துக்கான முன்னேற்பாடுகளால், பத்மநாபனின் வீடு திமிலோகப் பட்டுக்கொண்டிருந்தது. வீட்டுக் கூடத்தில் ஒரு காலை மடக்கி மற்றொரு காலை நீட்டி யமர்ந்து அப்பளம் இட்டுக் கொண்டிருந்தவர்களில் பங்கஜமும் ஒருத்தி. பெண்களின் அந்தக் கும்பலில் அவள் ஒருத்திதான் வயதில் சின்னவள்.

“சின்னஞ் சிறுசுடியம்மா நீ! இன்னும் எத்தனையோ நாளைக் கழிச்சாகணும். தீப்பந்தமும் கையுமா நீ தெருவிலே ஓடினேன்னு தெரிஞ்சதும், நடந்தது இன்னதுங்கிறதைப் புரிஞ்சுண்டு அந்தக் கடங்காரன் மேல மனசுக்குள்ள காறித் துப்பாதவாளே இல்லே. எந்த இடத்துல வேலைக்குப் போனாலும் சர்வ ஜாக்கிரதையா இருடியம்மா. பச்சைக் கிளியாட்டமா இருக்கே. என்ன வயசாறது நோக்கு?”

“இருபத்தொம்பது முடிஞ்சுடுத்து, மாமி.”

“இருபத்தொம்பதா! பாத்தா இருபத்திரண்டு வயசாட்டமாத் தெரியறே! ஜாக்கிரதை! இந்த லோகத்துல யாரையுமே நம்பப் படாதுடியம்மா! எம் மச்சினம் பொண்ணு ஒருத்தி இருக்கா. சின்ன வயசிலயே என்னாட்டமா அறுத்துப் போயிட்டவ. மாமனாராத்துலேயே இருந்துட்டா. மாமியார் கிடையாது. அந்த மாமனார்க் கடங்காரன், ‘மாட்டுப் பொண்ணு என்னோட சொந்தப் பொண்ணு மாதிரியாக்கும்!’ னு சொல்லி ஆத்தோட இருத்திண்டுட்டு ஒரு நாள் ஆத்துல வேற யாரும் இல்லாதப்ப அவளைக் கெடுத்துட்டான். அதுக்கும் வயத்துல வந்துடுத்து. என்னன்னு சொல்லிக்கும்? வெக்கக்கேடு! அந்த மாமனார்க் கடங்காரனே கர்ப்பத்தைக் கலைக்கிறதுக்குன்னு சொல்லி எத்தையோ அவளுக்குச் சாப்பிடக் குடுத்திருக்கான். அது அரளி விதையை அரைச்சுக் கலக்கினதுன்னு தெரியாம அந்தப் பொண்ணும் குடிச்சுட்டு – பாவம் – கடோஷில செத்தே போயிடுத்து. அதை இப்ப நெனைச்சாலும் வயித்தை என்னவோ பண்றது. இருபத்தஞ்சே வயசு!”

“அதான் காந்தி தலை தலையா அடிச்சுக்கறாராமே? கம்மனாட்டிகளுக் கெல்லாம் மறுகல்யாணம் பண்ணி வைக்கணும்னு?”

“நடக்கிற கதையாப் பேசட்டும் அந்த மகானுபாவன்! வெள்ளைக்காரன்கிட்டேர்ந்து தேசத்தைப் பிடுங்கிச் சுதந்திரம் வாங்கிக் குடுக்கிறதோட நிறுத்திக்கட்டும் அந்தப் பிராமணன்!”

“அவரொண்ணும் பிராமணன் இல்லே! குஜராத்துல ‘பனியா’ ன்னு சொல்லுவா அவாளை!”

“பின்ன பூணூல் போட்டுண்டிருக்காப்ல ஒரு ·போட்டோவில பாத்த ஞாபகம் இருக்கே?”

“நம்மூர்ல செட்டியார்கள், தச்சர்கள், தட்டார்கள்லாம் கூடத்தான் பூணூல் போட்டுக்கறா. அதே மாதிரிதான் காந்தியும்! அவரும் வைசியாள் ஜாதியைச் சேந்தவர். எங்காத்துக்காரர் அன்னைக்கு யாரோடவோ பேசிண்டிருந்தப்ப காதுல விழுந்துது.”

“அதெல்லாம் கிடக்கட்டும். அந்த மனுஷன் எதுக்கு நீங்க சொல்றாப்ல நம்ம சம்பிரதாயங்கள்லே யெல்லாம் மூக்கை நொழைக்கணும்? சுதந்திரம் வாங்கிக் குடுத்தமாம், போனமாம்னு அத்தோட நிறுத்திக்க வேண்டியதுதானே?”

“நன்னாச் சொன்னேள், மாமி! தாலியறுத்தவாளுக்கு மறுபடியும் கல்யாணம் பண்ணி வைக்கிறதெல்லாம் நம்ம ஊர்கள்லே நடக்கிற காரியமா! நம்ம சாஸ்திர சம்பிரதாயங்கள்லே யெல்லாம் எதுக்கு இவர் தலை யிடணும்? கேக்கறேன்!”

“ஏம்மாமி தலையிடக் கூடாது? அவர் சொல்றதுல என்ன தப்புன்றேள்? ஏம்மாமி! உங்க நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கோ – ஆம்படையான் செத்துப் போன கையோட ஆசைகளும் செத்துட்றதா என்ன?”

“என்னடி இது நீ – அசிங்கமால்லாம் பேசிண்டு! நன்னாருக்கு, போ. நாக்குல பல்லப் போட்டு இதென்ன பேச்சுன்னு பேசறே? .. .. நீ சொல்றது நெஜம்னாலும், அதுக்கோசரம் நம்ம ஆசார அனுஷ்டானங்களை யெல்லாம் விட்டுட முடியுமா என்ன! தாலியறுத்த பொம்மனாட்டிக்காவது, மறு கல்யாணமாவது! விடிஞ்சுது, போ!”

“நான் என்ன சொல்றேன்னா, தாலியறுத்தவளை பொண்டாட்டி செத்துப்போன ஒருத்தன் கூடக் கல்யாணம் பண்ணிக்கத் தயாரா யிருக்க மாட்டான்கிறதுதான் நெஜம்! அவா வெதவாளா இருந்தாலும் புதுசு புதுசாத்தான் பொண்கள் வேணும் அவாளுக்கு!”

“இதென்னடியம்மா புது வார்த்தை சொல்றே – வெதவான்னு!”

“பின்னே, புருஷாளுக்குத் தாலியா கட்றேள் – அவாளையும் ‘தாலி யறுத்தவன்’ னு சொல்றதுக்கு?”

“நீங்க சொல்றது நெஜந்தான், மாமி. புருஷா அரதப் பழசானவாளா யிருந்தாலும், படு கெழமா யிருந்தாலும், அவாளுக்குப் பொண்கள் புதுசு புதுசாத்தான் வேணும் – யாரும் தொட்டிருக்காத புதுப் பொண்ணுகள்!”

“நன்னாச் சொன்னேள், மாமி! அவாளுக்கு ஒரு நியாயம், நமக்குன்னா வேற நியாயம்! அதைத்தான் காந்தி தட்டிக் கேக்கறார். நீங்க என்னடான்னா அவரைத் தப்பு சொல்றேள்!”

“சரி. காந்தி சொல்றபடி கேட்டுத் தாலியறுத்த பொண்ணுகளைக் கல்யாணம் பண்ணிக்க சில புருஷா தயாரா யிருக்கான்னே ஒரு பேச்சுக்கு வெச்சுப்போம். அவாளோட பிரச்னை இப்ப சத்திக்கு இல்லாட்டாலும், இன்னும் கொஞ்ச வருஷம் கழிச்சு சரியாயிடும்னும் வெச்சுப்போம். ஆனா, இப்ப பங்கஜம் மாதிரி இருக்கிற பொண்களுக்கு என்ன வழி? சுமங்கலியும் இல்லே, அமங்கலியும் இல்லேன்னு ரெண்டாங்கெட்டானா நிக்கறவாளுக்கு உங்க காந்தி என்ன வழி வெச்சிருக்கார்? நேக்குத் தெரிஞ்சு எத்தனையோ வாழா வெட்டிப் பொண்கள் கிராமங்கள்ளே நிறைய பேரு இருக்கா. அவாளைக் கரை யேத்தறதுக்கு என்ன வழி சொல்றார் உங்க காந்தி?”

“ .. .. ‘எங்க’ காந்தி என்ன மாமி வந்தது, ‘எங்க’ காந்தி? அவர் இந்த தேசத்துக்கே பொதுவான பெரிய மனுஷர். எங்க சித்தப்பாவோ பெரியப்பாவோ இல்லே.”

“கோவிச்சுக்காதேள், மாமி! சும்மா வெளையாட்டுக்குச் சொன்னேன்.”

“காந்தி சொல்ற தெல்லாம் மீட்டிங் போட்டுப் பிரசங்கம் பண்றதுக்கும், கேட்டுட்டுக் கை தட்றதுக்கும்தான் லாயக்கு! நான் சொல்றேனேன்னு பாருங்கோ! இன்னும் நூறு வருஷம் ஆனாலும் நம்ம புருஷா மாறப் போறதில்லே. அவாளுக்குன்னா மட்டும் சட்டமும் நியாயமும் தனிதான்! ஏதோ, அங்கேயும் இங்கேயுமா ரெண்டொருத்தர் மாறுவாளே தவிர, இதெல்லாம் போகாத ஊருக்கு வழி தேட்ற அசட்டுத்தனந்தான்!”

“காந்தி பங்களூர்ப் பக்கம் வந்திருக்காராமே? இந்தப் பக்கம் கூட கூடிய சீக்கிரம் வந்தாலும் வருவார்னு எங்காத்துக்காரர் சொல்றார்.”

“இந்தப் பக்கம் வந்தாலும், மதுரை, திண்டுக்கல், திருச்சினாப்பள்ளின்னு வருவாரே தவிர, நம்மூருக்கெல்லாம் எங்க வரப்போறார்?”

“அப்படிச் சொல்லிட முடியாது. திண்டுக்கல்லுக்கு வந்தாலும் வருவர். அப்படி வந்தார்னா, அவரைப் போய்த் தரிசிக்கணும்னுட்டு எங்காத்துக்காரருக்கு ஆசையான ஆசை! போனாலும் போவர்.”

“.. .. ‘தரிசிக்கணும்’ கறேள்? அவரென்ன, கடவுளா?”

“எங்காத்துக்காரருக்கு அவர் கடவுளே தாண்டியம்மா! நியாயங்களை யெல்லாம் அழுத்தந்திருத்தமாப் பேசறாரோன்னோ, அதான்!”

“.. .. ‘பறையா’ளை யெல்லாம் கோவிலுக்குள்ள விடணும்கறாரே, அந்த நியாயத்தைச் சொல்றேளா?”

“ என்னா, மாமி, கிண்டலாக் கேக்கறேள்? அவாள்ளாம் என்ன பாவம் பண்ணினா- கோவிலுக்குள்ள வரக் கூடாதுன்றதுக்கு?”

“காலங்காலமா அப்படித்தான் நடந்திண்டிருக்கு. இவரெதுக்கு இதிலே யெல்லாம் மூக்கை நொழைக்கணும்?”

“காலங் காலாமா ஒரு தப்பு நடந்திண்டுருக்குன்றதாலேயே, அதை எப்பவுமே செஞ்சிண்டிருக்கணுமா என்ன! ரொம்ப அழகுதான்!”

“அப்ப? நீ காந்தி கட்சியா?”

“சொன்னாலும், சொல்லாட்டாலும்.”

“அப்படின்னா, ஒம் பிள்ளைக்கு ஒரு தீண்டத்தகாத பொண்ணாப் பாத்துக் கல்யாணம் பண்ணி வைப்பியா?”

“ரொம்ப நன்னாருக்கே நீங்க பேசறது! காந்தியைப் பிடிக்கும்கிறதுக்கோசரம் அந்த அளவுக்குப் போயிட முடியுமா? மொதல்ல, கோவிலுக்குள்ள கூட அவாளை விட்ற வழியைக் காணல்லே. கல்யாணம் வரைக்கும் போயிட்டேளே! ஒண்ணுமில்லே. ஒரு சேரிப் பொண்ணை நான் எங்காத்துலே வேலைக்கு வெச்சுண்டாலே, நீங்கல்லாம் சேந்து என்னை ஜாதிப் பிரஷ்டம் பண்ணிப்பிடுவேளா இல்லியா? மாட்டுப் பொண்ணா ஆக்கிண்டா அவ்வளவுதான்! கொன்னே போட்டுட மாட்டேளா!”

“நாம இப்படி அவாளை ஒதுக்கி வைக்கிறதுனாலதான் அவாள்லே நிறையப் பேரு கிறிஸ்துவாளா மாறிண்டு வர்றா.”

“மாறிண்டு போகட்டுமே! அவாளுக்கு மரியாதையும் சோறும் கிடைக்கிற மதத்துக்கு அவா போறா. அதுல நமக்கென்ன நஷ்டம்?”

“அதென்ன அப்படிக் கேட்டுட்டேள்? நம்ம மதத்துக்கு அது ஒரு நஷ்டந்தானே? “

“நம்ம மதத்துக்காரா எண்ணிக்கை கொறையக் கூடாதுன்னா, அப்ப அவாளையும் காந்தி சொல்றாப்ல கோவிலுக்குள்ள விடுங்கோ!”

“நீங்க சொல்றது சரிதான், மாமி. கோவிலுக்குள்ள கூட விட மாட்டோம்; ஆனா அவா மதமும் மாறக் கூடாதுன்னு நாம சொல்றது அயோக்கியத்தனந்தான்.”

“காந்தி பிரசங்கம் பண்ண வர்ற மீட்டிங்ல யெல்லாம் லட்சக் கணக்குல ஜனங்கள் கூட்றாளாமே?”

“ஆமா, மாமி. எங்காத்து மாமா ஒரு தரம் பூனாவிலே காந்தி நடத்தின மீட்டிங்குக்குப் போயிருந்தாராம். அடியம்மா! கூட்டமான கூட்டமாம்! பொம்மனாட்டிகள் கூட்டமும் அலை மோதித்தாம். சொன்னார்.”

“.. .. ‘சுதந்திரப் போராட்டத்தை நடத்தறதுக்குப் பணம் வேணும். அதானால உங்க வீட்டுப் பெரியவா கிட்ட அனுமதி வாங்கிண்டு உங்க நகைகளைக் கழட்டிக் குடுங்கோ’ ன்னு சொல்றாராம். பொண்கள்ளாம் அந்த எடத்துலயே காதுல, மூக்குல, கையில, கால்ல இருக்கிறதை யெல்லாம் கழட்டிக் குடுத்துட்றாளாமே! என் கொழுந்தன் கூட கதை கதையாச் சொன்னான். போன மாசம் வடக்கே போயிருந்தான்.”

“காந்தி எல்லாரையும் மயக்கித்தான் வெச்சிருக்கார்னு தோண்றது. ஆனா, அவர் சொல்ற ஒண்ணை இன்னும் பல வருஷங்களுக்கு நம்ம மனுஷா கேக்கவே போறதில்லே.”

“ என்னது?”

“அதான் – இந்த வரதட்சினை விஷயம்! ஏழைகளாத்துப் பொண்ணுகள்ளாம் காலாகாலத்துல கல்யாணம் ஆகாம நிக்கத் தொடங்கி யிருக்குகள். எங்க தெருவிலேயே பெரியவளான பொண்ணுகள் தடித் தடியா ஏழெட்டு இருக்கு.”

“ஆயிரக் கணக்குல கொண்டான்னா ஏழைகள் பணத்துக்கு எங்க போவா?”

“அதுக்கென்ன பண்றது? கடனோ ஒடனோ வாங்கி எப்பிடியாவது சமாளிச்சுத் தள்ளிவிட வேண்டீதுதான்.”

“உங்களுக்கென்ன, மாமி? நீங்க பேசுவேள். பேச மாட்டேளா பின்ன? எல்லாம் பிள்ளைகளாப் பெத்திருக்கேள்.”

“பிள்ளைகளாப் பெத்து வெச்சிருக்கிறவா மனசில நியாயம் இருந்தா, வரடட்சிணை வாங்காம பிள்ளைகளுக்குக் கல்யாணம் பண்ணலாமே?”

“என்னடி, கிண்டலா பண்றே? ஜாதி வித்தியாசமெல்லாம் பாக்கக் கூடாதுன்னு கூடத்தான் காந்தி சொல்றார். அப்ப, கீழ் ஜாதிக்கார மாப்பிள்ளையாத் தேட வேண்டீதுதானே? அப்ப, வரதட்சிணை தர வேண்டாமே?”

பேச்சின் போக்குத் தடிப்பதைக் கண்ட காவேரி, “வேற ஏதாவது பேசுங்கோ, மாமி! வேண்டாத வாக்குவாதமெல்லாம் நமக்கு என்னத்துக்கு? அப்புறம் வார்த்தை தடிச்சுச் சன்டை கிண்டை வந்துடப் போறது உங்களுக்குள்ள! கெழட்டுத் தவளைக்கு நாட்டு வளப்பம் என்னத்துக்காம்? விடுங்கோ. நாம பாட்டுக்கு நாம உண்டாம், நம்ம வேலை உண்டாம்னு இருக்கிறதை விட்டுட்டு, என்னத்துக்கு இந்த அக்கப் போர்ப் பேச்செல்லாம்? காந்தியும் வெள்ளைக்காரனும் என்னவோ பண்ணிண்டு போகட்டும். அதுக்காக நாம வந்த எடத்துல முட்டி மோதிக்க வேண்டாம். மட மடன்னு வேலை நடக்கட்டும்!” என்றாள்.

“நீங்க சொல்றதுதான் சரி, காவேரி மாமி! பருவதத்தைப் பாருங்கோ! கோவிச்சுண்டுட்டான்னு தோண்றது. கோவத்துல உருண்டையை அழுத்தின அழுத்துல அது பலகையோட ஈஷிண்டுடுத்து! “ என்று ஒருத்தி சொல்ல எல்லாருமே சிரித்தார்கள் – பருவதம் உட்பட.

“மொதல்ல அப்பளாத்து மாவு நசுங்கும். அதுக்கப்பறம் மனுஷா! அவாவா கையில அப்பளக் கொழவி வேற வெச்சிண்டிருக்கேள்! ஜாக்கிரதை!” என்று காவேரி விளையாட்டாக எச்சரிக்க, மறுபடியும் அங்கு சிரிப்பலைகள் புறப்பட்டன.

இந்த உரையாடல்களைக் கவனித்தாலும், அவற்றில் அவ்வளவாக ஒட்டாமலும், ஈடுபடாமலும் பங்கஜம் தன் வேலையே கண்ணாக இருந்தாள். எனினும், அவள் மனத்தில் ஏதேதோ எண்ணங்கள் எழுந்தவாறாகத்தான் இருந்தன. ‘ஆனா, இப்ப பங்கஜம் மாதரி இருக்கிற பொண்ணுகளுக்கு என்ன வழி? சுமங்கலியு மில்லே, அமங்கலியு மில்லேன்னு ரெண்டாங்கெட்டானா நிக்கற வாளுக்கு உங்க காந்தி என்ன வழி வெச்சிருக்கார்?’ என்று ஓர் அம்மாள் கூறிய சொற்களைச் சுற்றியே அவள் சிந்தனை வட்டமடித்துக் கொண்டிருந்தது. சட்டென்று அவள் மனக்கண் முன்பு சாமிநாதனின் கனிவான முகம் பளிச்செனத் தோன்றி அவளைத் துணுக்குறச் செய்தது. அப்பளக் குழவியைப் பற்றி யிருந்த அவள் கைகள் வேர்க்கலாயின.

‘அய்யோ! நான் என்ன அவரைப் பற்றி நினைக்கிறேன்? இந்தப் பேச்சின் போது எனக்கு அவரைப் பற்றிய ஞாபகம் வர வேண்டிய அவசியம் என்ன? என் பிரச்னைக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? அய்யோ! கடவுளே! என் மனத்தில் என்னையும் அறியாமல் – என்னையும் மீறி – ஒரு கள்ளம் புகுந்திருக்கிறது. அதனால்தான் அவரது முகம் என் நினைவில் தோன்றுகிறது. கடவுளே! என்னை எந்தச் சிக்கலிலும் மாட்டிவைத்துவிடாமல் நீதான் காப்பாற்ற வேண்டும்.. ..’

“என்னது! நாம இவ்வளவு பேச்சுப் பேசி யிருக்கோம்? பங்கஜம் மட்டும் வாயே தொறக்கல்லையே?”

“அவ எப்பிடித் தொறப்பாளாம்? நீங்க பாட்டுக்கு அவ மனசு புண் பட்ற மாதிரி தொசுக்னு என்னத்தையோ சொல்லிப்பிட்டேள்! அவ ஞாபக மெல்லாம் எங்கேயோ போயிடுத்து.”

“என்னை மன்னிச்சுக்கோடியம்மா, பங்கஜம்!”

“சேச்சே. அதெல்லாம் ஒண்ணு மில்லே, மாமி. பெரிய பெரிய வார்த்தை யெல்லாம் சொல்லாதங்கோ!”

“நீங்க வேற. இப்ப நாம ஞாபகப் படுத்தினதுனாலதான் பங்கஜத்தோட நெனப்பு எங்கேயோ போச்சா என்ன? பாவம், கொழந்தை! சர்வசதா அந்தக் கடன்காரனைப் பத்தித்தானே யோசிச்சிண்டிருப்பா அவ? என்னமோடியம்மா. பொம்மனாட்டி ஜென்மமே எடுக்கப்படாது.”

பங்கஜம் தலை குனிந்தவாறு அப்பளக் குழவியை உருட்டிக் கொண்டிருந்தாள். கைகள் இயங்கிக்கொண்டிருக்க, மனமென்னவோ சாமிநாதன் பற்றிய நினைப்பிலிருந்து விடுபடாதிருந்தது. தனது வருங்கால வாழ்க்கை நன்றாக அமைய அவன் ஏதோ ஒரு வகையில் காரணமாகப் போகிறான் என்று உள்ளுணர்வாக அவளுக்குத் தோன்றியது. ‘எப்படி? அவரைப் போய்ப் பார்த்துப் பேசி, என்னை அவருடன் சேர்த்து வைப்பாரோ? சே! நான் ஏன் இப்படி யெல்லாம் நினைக்கிறேன்? என் மேல் அந்த அளவுக்கு அக்கறை கொள்ள அவருக்கென் ன தலையெழுத்து?’

அப்போது அந்த வீட்டுக்கு ஓர் ஆள் வந்தார். அந்த நேரத்தில் பத்மநாபன் வெளியே ஏதோ வேலையாகப் போயிருந்ததால், என்ன, ஏது என்று விசாரிப்பதற்காகக் காவேரி வாசலுக்குப் போனாள்.

“அம்மா! இது பத்மநாப அய்யர் வீடுதானே?” என்று வினவிய அவர் வேலையாளைப் போலத் தெரிந்தார்

“ஆமா. நீ யாரு?”

“ நான் தேவராசய்யர் வீட்டு வேலையாளுங்க. அய்யாவோட சம்சாரந்தான் என்னய இங்கிட்டு அனுப்பினாங்க. என் பேரு பெரியசாமி. நீங்க .. ..”

“நான் கல்யாணப் பொண்ணுக்கு அம்மா.”

“ஆங்! உங்களத்தான் ஒடனே இட்டாரச் சொன்னாங்க. வண்டியோட என்னய அனுப்பி வெச்சிருக்காங்க அந்தம்மா.”

“எங்க வீட்டு அய்யாவையா, என்னையா? யாரைக் கூட்டிண்டு வரச் சொன்னா?”

“கலியாணப் பொண்ணோட அம்மாவை இட்டான்னுதான் சொன்னாங்க.”

காவேரிக்கு எதனாலோ அந்த அழைப்பு விபரீதமாய்ப் பட்டது. அவள் திகைப்பும் திகிலுமாய் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கணம் போல் நின்றாள்.

– தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation

author

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts