மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 15

This entry is part [part not set] of 32 in the series 20060407_Issue

ஜோதிர்லதா கிரிஜா


பாகீரதி நல்லவள்தான். இருந்தாலும், படிப்பறிவற்ற கிராமத்துப் பெண்களுக்கே உரிய வம்பு வளர்த்தல் எனும் இயல்புக்கு அவள் விதிவிலக்காக இல்லை. இப்போது கூட அவள் ஏற்பாடு செய்துகொடுத்த வேலை என்பதனால்தான் பங்கஜம் காமாட்சியின் கணவனால் தனக்கு நேர விருந்தது பற்றிச் சொன்னாளே தவிர, மற்றப்படி அவள் மீது கொண்டிருந்த நம்பிக்கையால் அன்று. தான் உள்ளது உள்ளபடியே சொன்னவற்றை யெல்லாம் பாகீரதி அப்படியே நம்பி யிருப்பாள் என்கிற நம்பிக்கை பங்கஜத்துக்கு இல்லைதான். ‘சொன்னதே இவ்வளவென்றால், இவள் சொல்லாமல் விட்டது இன்னும் எவ்வளவோ!’ என்கிற சராசரி எண்ணத்துக்குத்தான் இடம் கொடுத்து அவள் தன் கற்பனையை ஓடவிடுவாள் என்பது அவள் அறியாததன்று.

சாமிநாதனின் வருகையைப் பொறுத்தமட்டில், பஞ்சாட்சரம் சொல்லி வைத்திருந்தபடியே அதைப் பற்றித் தானாக அவளிடம் தெரிவிக்காதிருப்பதுதான் நல்லதென்று அவள் எண்ணி யிருந்தாள். ஆனால், பாகீரதியின் பார்வையில் அவன் பட்டிருக்கக்கூடுமோ என்கிற ஐயமோ, ஒருகால் அவளுக்கு அவனைத் தெரிந்திருக்கலாமோ என்கிற எண்ணமோ பங்கஜத்துக்கு ஏற்பட்டிருக்கவில்லை.

எனினும் பங்கஜம் திகைத்ததெல்லம் கணப் பொழுத்துக்குத்தான். உடனேயே சமாளித்துக்கொண்டுவிட்டாள்:

“அவர் காமாட்சி மாமியாத்துக்குப் பக்கத்தாத்துலயா இருக்கார் ? நேக்குத் தெரியாது,மாமி. ஜோசியம் பாக்கறதுக்காக அப்பாகிட்ட வந்தார்.”

“என்னவாம் ? எதுக்கு ஜோசியம் ?”

“நேக்குத் தெரியாது, மாமி. நான் கவனிக்கல்லே. அப்பாவும் எதுவும் சொல்லல்லே. உங்களுக்கு அவாளைத் தெரியுமா – வந்தவரோட அம்மா-அப்பாவைச் சொல்றேன்.”

“அவனுக்கு அப்பா இல்லே. அம்மா மட்டும்தான் இருக்கா. கொஞ்சம் செயலுள்ள குடும்பம். மெட்றாஸ்க்குப் போய் பீ.ஏ. படிச்சுப் பட்டம் வாங்கினான். அதனால, வத்தலப் பாளையத்துல அவனுக்கு பீ.ஏ. சாமிநாதன்னு பேரு. தடியாட்டமா முப்பது வயசு ஆறது. கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னுட்டான். அதுல அவனோட அம்மாக்காரிக்கு வருத்தமான வருத்தம். அவனோட அம்மா இருக்கிற வரைக்கும் வந்து போயிண்டிருப்பன். அதுக்கு அப்புறம் சாமியாராப் போயிடுவன்னு நெனைக்கிறேன். தங்கம்மாவுக்கு ஒரே கவலை.”

“தங்கம்மாங்கிறது அவரோட அம்மாவா ?”

“ஆமா. நிறைய சொத்து சுகம் இருக்கு. எல்லாத்தையும் தாயாதிக்காரன் கொண்டு போயிடப் போறானேன்னு தங்கம்மாவுக்கு மனசு கெடந்து அடிச்சுக்குறது. அவளோட நச்சரிப்புத் தாங்க முடியாமயே அந்தப் பிள்ளையாண்டான் வருஷத்துக்கு ஆறேழு மாசம் மெட்றாஸ், பாண்டிச்சேரின்னு போயிட்றான். அங்க என்னமோ அச்சாபீஸ் நடத்தறானாம்.”

பங்கஜம் தலையை ஆட்டிக் கேட்டுக்கொண்டாள். சில விநாடிகளுக்கு இருவரிடையேயும் மவுனம் விளைந்தது.

அதைப் பாகீரதி கலைத்தாள். “வேற ஏதாவுது நல்ல எடமாத் தெரிய வந்தா நோக்குச் சொல்றேன். பங்கஜம்!.. .. வத்தலப்பாளையத்துல தேவரரஜ அய்யர்னு ஒரு பெரிய பணக்காரர் இருக்கார். அவாத்துல இருக்குற சமையல்கார மாமிக்கு ரொம்பவே வயசாயிடுத்து. அதனால நோக்கு அங்க வேலை கெடைக்குமாங்கிறதப் பத்தி மொள்ள அளப்பறிஞ்சு பாக்கறேன்.”

“சரி, மாமி. அப்ப நான் வரட்டுமா ?”

“இரு. குங்குமம் தறேன். இட்டுண்டு போ.”

குங்குமத்தை இட்டுக்கொண்டு பங்கஜம் புறப்பட்டாள்.

.. .. .. பஞ்சாட்சரத்திடம் பாகீரதியுடன் நடந்த உரையாடல் பற்றிச் சொன்ன பங்கஜம், “உங்ககிட்ட ஜோசியம் கேக்க அந்த மனுஷன் வந்துட்டுப் போனதாச் சொல்லி யிருக்கேன்ப்பா. ஞாபகமா நீங்களும் அப்படியே சொல்லுங்கோ,” என்று முடிவாக எச்சரித்தாள்.

“சரிம்மா. ஆனா அந்தப் பிள்ளை இன்னும் ஒரு வாரம் கழிச்சு உன்னை வேலைக்கு வரச் சொல்றதுக்காக இங்க வந்தா, அப்ப விஷயம் வெளியாயிடுமே ?”

“அதைப் பத்தி இப்ப என்னப்பா ?அப்படி அங்க வேலைக்குப் போகும்படி ஆச்சுன்னா, இன்னிக்கு அவர் இங்க வந்தப்போ பேச்சுவாக்கில நீங்க என்னைப் பத்தி அவர் கிட்ட சொன்னதா யிருக்கட்டுமே ? அதை மனசில வெச்சிண்டு என்னை வேலைக்குக் கூப்பிட அப்புறமா அவர் வந்ததா அப்ப சொல்லிண்டாப் போச்சு.”

“உண்மையைச் சொல்லிடலாந்தான். ஆனா அவன் இன்னும் தன்னோட அம்மா கிட்டவே விஷயத்தைச் சொல்லல்லேங்கறான். பாகீரதி மாமியோ அடிக்கடி வத்தலப் பாளையத்துக்குப் போறவ. இவ பாட்டுக்கு அவரோட அம்மாகிட்ட என்னத்தையானும் கேட்டுத் தொலைச்சா என்ன செய்யறது ? அதனால நீ சொல்றதுதான் சரி. இப்போதைக்குச் சொல்ல வேண்டாம்.”

“பாகீரதி மாமி சொன்ன அந்த வத்தலப்பாளையம் தேவராஜய்யர் இருக்காரே, அவாத்துல வேலை கெடைச்சா நன்னாருக்கும்.”

“ஆமாம்மா. அது பத்திரமான எடமா யிருக்கும்னு தோண்றது.”

‘ஆண்பிள்ளைகள் இருக்கிற இடம் பெண்களுக்குப் பத்திரமானதா யிருக்காது. அவர்கள் மனங்களுக்குள் புகுந்தா பார்க்க முடியும் ? பாகீரதி மாமியும் அப்படித்தானே சொன்னாள் ?’ – இவ்வாறு பங்கஜத்தின் சிந்தனை ஓடியது. ஆனால், அவள் பஞ்சாட்சரத்திடம் அதைச் சொல்லவில்லை.

.. .. .. இரண்டு நாள்கள் கழித்து, பாகீரதி பங்கஜத்தின் வீட்டுக்கு வந்தாள்.

“வாங்கோ மாமி. உக்காருங்கோ.”

உட்கார்ந்துகொண்ட பாகீரதி, “இன்னிக்கு வத்தலப்பாளையம் போயிருந்தேன். தேவராஜய்யர் ஆத்துக்கும் போய் நைஸா அளப்பறிஞ்சேன். அந்தச் சமையல்கார மாமியோட தங்கையே இருக்காளாம். இப்ப இருக்கிற மாமி ரொம்ப வருஷமா இருக்கிறதால அவளை நிறுத்துறதுக்கு அவாளுக்குக் கஷ்டமா யிருக்காம். அதனால், அவளோட தங்கைக்காரியையும் ரெண்டாவது ஆளா வெச்சுண்டுடப் போறாளாம். அதனால, என்னோட எண்ணம் தப்பாப் போயிடுத்து.”

“அதைப்பத்த்ி என்ன, மாமி ?”

“அதை விடு. இப்ப நான் சொல்ல வந்தது வேற விஷயம். .. அந்த தேவராஜய்யரோட பிள்ளைக்குப் பொண்ணு குடுத்துச் சம்பந்தம் பண்ணிக்கப் போறவா சிலுக்குப்பட்டிக்காராளாம்.”

“நம்மூர்லேர்ந்து வத்தலப்பாளையத்துக்குப் போற வழியில குறுக்காப் போனா வரும்னு சொல்லுவாளே, அந்தச் சிலுக்குப் பட்டியத்தானே சொல்றேள் ?”

“ஆமா. அதேதான். அந்த ஊர்ல இருக்குற பத்மநாபய்யர்ங்கிறவரோட பொண்ணைத்தான் தேவராஜய்யரோட பிள்ளைக்குக் குடுக்கிறதா யிருக்கா. தேவரஜய்யர் அளவுக்கு இல்லாட்டாலும், அவாளும் பணக்காராதானாம். நாலு நாள் கல்யாணம். பட்சணம்பாடியெல்லாம் பண்றதுக்கு ஆள்கள் தேவைப்பட்றாளாம். தெனமும் காலம்பர பத்து மணிக்குப் போய்ச் சேந்தா, சாயங்காலம் ஒரு நாலு மணி வரைக்கும் அப்பளம் இட்றது, மாவு சலிக்கிறது, லட்டுப் பிடிக்கிறது அது இதுன்னு அவா சொல்ற வேலைகளைப் பண்ணிட்டுக் கெளம்பி வந்துடலாம். சிலுக்குப் பட்டியும் மூணுகல் தொலவுதான். அது குறுக்கால போற ஊர். அவ்வளவுதான். உன்னை அமத்தி விடலாம்னு. மாமா அனுப்பினா நானும் போறதா யிருக்கேன். வந்து வேலை பண்ற பொம்மனாட்டிகளுக் கெல்லாம் பொடவை, ரவிக்கை வெச்சுக் குடுப்பாளாம். அவாத்துலேயே சாப்பாடு, டிஃபன், காப்பி எல்லாம். அது தவிர கையில வேற காசும் குடுக்கறாளாம். என்ன சொல்றே ?”

“என்னிக்கு மாமி கல்யாணம் ?”

“இன்னும் பதினஞ்சு நாள் இருக்கு. நாளைக்கே நீயும் நானுமாச் சிலுக்குப் பட்டிக்குப் போய்ப் பாக்கலாம். ஒம்பது மணிக்கெல்லாம் ரெடியா யிரு. என்ன ?”

“சரி, மாமி.”

“ஏன் ஒரு மாதிரி விட்டேத்தியா பதில் சொல்றே ?”

பங்கஜம் தலையைக் குலுக்கிக்கொண்டாள். உண்மைதான். அவள் அந்த நேரத்தில் சாமிநாதனைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தாள். ஐந்தாறு நாளில் வருவதாய்ச் சொல்லி யிருந்த அவன் தேவராஜய்யர் அகத்து வேலையைத் தான் ஏற்றுக்கொண்ட பிறகு வந்து நின்றால் என்ன செய்வது என்கிற யோசனைதான். அது தன் குரலில் தெரிந்ததைப் பாகீரதி மாமி கண்டுபிடித்துவிட்டது அவளை வியப்பில் ஆழ்த்தியது. ‘பாகீரதி மாமி பலே மாமிதான்!’

“விட்டேத்தியான்னெல்லாம் ஒண்ணுமில்லே, மாமி. அந்தக் காமாட்சியாத்துக்கு வேலைக்குப் போன ஞாபகம் வந்துடுத்து. வேற ஒண்ணுமில்லே.”

“அதையே நெனைச்சு மனசைப்போட்டு உழப்பிண்டிருக்காதே. இப்ப நாம போகப் போற எடம் கலகலன்னு இருக்கும். அஞ்சாறு பொம்மனாட்டிகள் வந்து வேலை செய்யப்போறா. வேலையை என்னிக்கு ஆரம்பிக்கப் போறாங்கிறது தெரியாட்டாலும், மொதல்ல போய் எடம் பிடிச்சுண்டுடலாம்.”

“சரி, மாமி. உங்களுக்கு நல்ல மனசு.”

“அதெல்லம் ஒண்ணுமில்லே. நான் வரட்டுமா ? அப்பா ஒடம்பு எப்பிடி இருக்கு ?”

“நன்னாயிடுத்து, மாமி.”

“அப்புறம், இன்னொண்ணு சொல்ல விட்டுப் போயிடுத்து.”

“என்னது, மாமி ?”

“வத்தலப்பாளையத்துக்குப் போயிருந்தேனா ? அப்படியே கமாட்சியாத்துக்கும் போனேன்.”

“அய்யய்யோ!”

“ஒண்ணும் தெரியாதவ மாதிரி போனேன். காமாட்சி என்னோட சண்டை பிடிச்சா.”

“அவ எதுக்கு உங்களோட சண்டை போடணும் ?”

“சின்னப் பொண்ணா வேலைக்குக் கூட்டிண்டு வந்து விட்டுட்டேனாம்!”

“நான் ஒண்ணும் சின்னப் பொண்ணு இல்லே, மாமி. நேக்கு இருபத்தொம்பது வயசு ஆச்சு. அது சரி. அந்தக் காமாட்சியும்தானே என்னைப் பாத்தா ? நான் சின்னவங்கிறது அவளோட அபிப்பிராயமா யிருந்தா வேண்டாம்னு சொல்லி யிருக்க வேண்டியதுதானே ? எதுக்கு வீணா உங்களைக் குத்தம் சொல்லணும் ?”

“தென்ன மரத்துல தேள் கொட்ட, பன மரத்துல நெறி ஏறின கதைதான்! ஆத்துக்காரன் மேல இருக்கிற கோவத்தை அவ எம்மேல காட்டினா! நான் சும்மாருப்பேனா ? நன்னா விடுவிடுன்னு விட்டுட்டுத்தான் வந்தேன். ‘உன் ஆம்படையான் கிரிசை கெட்டுப்போய் அவ கிட்ட அசட்டுப் பிசட்டுனு பேசினானாமே ? நீ வேற அசந்து தூங்கிண்டிருந்ததால அவளை நாசம் பண்ணப் பாத்திருக்கான். அவ கொள்ளிக்கட்டையைக் கையில எடுத்திருக்கா, பாதுகாப்புக்காக. அதைக் கீழ போட மறந்து போய்க் கையில பிடிச்சுண்டே தெருவில கொஞ்ச தூரம் ஓடியிருக்கா. எல்லாரும் பாத்திருக்காளே! ஊகிக்க மாட்டாளா என்ன ? இனிமே ஜென்மத்துக்கும் நோக்கு நான் ஆள் அனுப்ப மாட்டேண்டியம்மா! வயசான பொம்மனாட்டியாவே இருந்தாலும் உன் ஆம்படையான் அசடு வழிய மாட்டான்னு என்ன நிச்சியம் ? பொடவையைப் பாத்தாலே வெறி வர்றவனா உன் ஆம்படையான் இருந்தா அதுக்கு நான் செய்ய முடியும் ?’னு நன்னா டோஸ் விட்டுட்டுத்தான் கெளம்பினேன். அப்புறம் பக்கத்தாத்துக்குப் போனேன்.”

“யாரு ? தங்கம்மா மாமின்னு சொன்னேளே அவாத்துக்கா ?” என்று கேட்ட பங்கஜம் தன் முகத்தில் எதையும் காட்டாதிருந்தாள்.

“ஆமா. அவளையும் நேக்கு ரொம்ப வருஷமாத் தெரியுமே! அதான் சொன்னேனே! பாத்து ரொம்ப நாளாச்சேன்னு போனேன். அவளோட பிள்ளையும் இருந்தான்.. .. ..”

‘.. .. .. ‘அவளோட பிள்ளையும் இருந்தான்’ என்று தன்னிடம் இந்த மாமி சொல்ல வேண்டியதன் அவசியம் என்ன ? அவர் எதற்காக இங்கே வந்தார் என்பது தெரிந்துவிட்டதோ ?’

பங்கஜம் ஆர்வம் காட்டாத முகத்துடன் பாகீரதியைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“நீ கொள்ளிக்கட்டையும் கையுமா அவாத்துக் கொல்லைக் கதவைத் தொறந்துண்டு ஓடினதை அவன் தன்னாத்து மொட்டை மாடியிலேர்ந்து பாத்திருக்கான். தங்கம்மா கிட்டவும் ஒடனே சொல்லியிருக்கான்.”

“அப்படியா ? ஆனா அவர் எங்காத்துக்கு வந்தப்போ நான் அடுக்குள்ள இருந்தேன். என்னை அவர் பாத்திருக்க மாட்டார்னு நெனைக்கறேன். அதனால ஜோசியர் பஞ்சாட்சரத்தோட பொண்ணுதான் அதுன்னு அவருக்குத் தெரிஞ்சிருக்காதோ என்னவோ!”

“இல்லேல்லே. நீ யாருன்னு அவனுக்குத் தெரிஞ்சுதான் இருக்கு. ஏன்னா, நீ கொள்ளிக்கட்டையோட ஓடினது பத்தித் தங்கம்மா கிட்ட அவன் சொன்னதுமே ஜோசியர் பஞ்சாட்சரத்தோட பொண்ணுன்னு அவ சொல்லிட்டாளாமே அவன்கிட்ட ?”

“ஓகோ! அப்படியா ? ஆனா அதைப் பத்தி அவர் எங்கப்பா கிட்ட எதுவும் சொல்லியிருக்க மாட்டார்னுதான் நெனைக்கறேன். அது ஒரு சங்கடமான விஷயம் இல்லியா ? எங்கப்பாவும் அவர் சொன்னதாச் சொல்லல்லே.”

பங்கஜம் எதையோ தன்னிடமிருந்து மறைப்பதாய்ப் பாகீரதிக்குத் தோன்றியது. எனினும் மேலும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் போனாள்.

தங்கம்மா கூட எதையோ தன்னிடமிருந்து மறைத்ததாகப் பாகீரதிக்குப் பட்டது. என்னவா யிருக்கு மென்பதைத்தான் அவளால் ஊகிக்க முடியவிலை. தங்கம்மாவுடனான தனது உரையாடலை அசைபோட்டபடி அவள் தன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தாள்.

அவள் போன போது தங்கம்மா கொடியில் புடைவை உலர்த்திக்கொண்டிருந்தாள். பொதுவான பேச்சுக்குப் பிறகு பாகீரதி விஷயத்துக்குப் போனாள்.

“உங்க பிள்ளை நேத்து செங்கல்பாளையத்துக்கு வந்திருந்தான்.”

“செங்கல்பாளையத்துக்கா ? எங்க பாத்தேள் அவனை ?”

“எங்காத்துக்குப் பக்கத்தாத்துலதான். ஜோசியர் பஞ்சாட்சரத்தைப் பாக்க வந்திருந்தான். கல்யாணம் ஏதானும் கூடி வருதா என்ன ?”

பாகீரதி இவ்வாறு கேட்தும், தங்கம்மாவின் முகத்தில் இருள் பரவியது.

‘ஓ! அதுவா! நான் தான் அவனை ஜோசியரைப் பாத்துட்டுவான்னு அனுப்பினேன். நேக்கு வர வர ஒடம்பு தள்ளவே யில்லே. கொஞ்ச நாளா துர் சொப்பனமா வந்திண்டிருக்கு. ஏதானும் பரிகாரம் பண்ணணுமான்னு கேட்டுத் தெரிஞ்டுண்டு வர்றதுக்கோசரம்தான் அனுப்பினேன்.’

தன் பிள்ளை செங்கல்பாளையத்துக்குப் போனதே தங்கம்மாவுக்குத் தெரிந்திருக்கவில்லை என்றும், தன்னிடமிருந்து சேதியை வாங்கிய பின் எதையோ சொல்லிச் சமாளிக்கிறாள் என்றும் அவளுக்குத் தோன்றியது. பங்கஜமும் தன்னிடம் முழு உண்மையையும் சொல்லவில்லை என்று அவளுக்குப் பட்டதால், அவனது செங்கல்பாளைய வருகையில் ஏதோ விஷயம் இருக்கவேண்டும் என்று அவள் நினைத்தாள். ‘சரக்கு மலிஞ்சா, தானே கடைக்கு வந்துட்டுப் போறது!’ என்று நினைத்துவிட்டு அவள் தெருவில் வேடிக்கை பார்க்கலானாள்.

.. .. .. மறு நாள் வத்தலப் பாளையத்தில் தனக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது பற்றி அறியாத பங்கஜம் பஞ்சாட்சரம் வீடு திரும்பியதும் பாகீரதியுடன் நிகழ்ந்த உரையாடல் பற்றி அவரிடம் தெரிவித்தாள்.

– தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation

author

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts