சி. ஜெயபாரதன், கனடா
மயிலாடு கின்ற திங்கே!
மயங்கிடுது விழிக ளிங்கே!
மானாடு கின்ற திங்கே!
மனதாடி மகிழ்வ திங்கே!
தானாடும் தலைக ளிங்கே!
தடம்புரளும் உடல்க ளிங்கே!
தீராத மோக மிங்கே!
தீர்த்திடுவாள் பாவை யிங்கே!
****
கடவுள் மனித சந்ததியை உருவாக்க பெண்ணுக்குப் பொறுப்பைக் கொடுத்தது. ‘நான் மட்டும் தாய்ப்பணியைத் தனியாகக் தாங்கிக் கொள்ள முடியாது ‘ என்று அலறினாள் பெண். ‘துணைப் பிறவியாக, உனக்கொரு கருவியாக உதவி செய்ய ஆணை அளிக்குகிறேன் என்று கூறியது கடவுள். உனது கவர்ச்சியைக் கணைகளை ஏவி அவனை அடிமையாக்கிப் பணி புரிய உடன் வைத்துக்கொள் ‘ என்றது. ஆடவன் முழுமையாக ஒப்ப வில்லை அதற்கு! ‘பெண் கவர்ச்சியால் என்னை ஆதிக்கம் செய்வாள்! பழிவாங்க அவளை நான் கைப் பதுமையாய் ஆக்கி ஆட்டி வைப்பேன், ‘ என்று ஆங்காரமாய்க் கூறினான் ஆடவன்!
****
‘என்னைக் காதல் மொழியில் மயக்கிடு! உன்னைப் பின்தொடர்வேன். மன்னர் தன் மாளிகைக்கு என்னை அழைத்துள்ளார்! ஆனந்தக் கடலில் மூழ்கி ஆடிப்பாடி மகிழ்வேன். மதுபானத்தை விட மன்னரின் காதல் சொற்களை நாடுவேன். நேர்மையான காதல் மீது தீராத மோகம் எனக்கு. ‘
சாலமன் பாடல் [Song of Solomon]
‘இல்லை. அங்கிருந்து தப்பவே முடியாது. நரகமும் உடனிருக்கும் ஒரு சொர்க்கபுரி எங்கும் கிடையாது. நமது உள்ளத்திலே எழும் மாயப் பிசாசின் மடத்தனக் கோளாறுகளை எடுத்துக் கொள்ளும் ஞானம் எதுவுமில்லை. சாத்தானின் ஒவ்வொரு குரோத ரோமமும், சிறகும் தூக்கி வெளியே எறியப்பட வேண்டும் ‘
ஜியார்ஜ் மாக்டானல்டு
வான் உயர்ந்த உன்னத கோபுரங்கள் எல்லாம் மண் தரையிலிருந்தான் எழும்பி யுள்ளன.
சைனீஸ் பழமொழி
கடவுள் ஒவ்வொரு பறவைக்கும் உணவு அளிக்கிறார். ஆனால் அதனுடைய கூட்டுக்குள்ளே அவர் உணவைப் போடுவ தில்லை.
டேனிஷ் பழமொழி
‘ஒவ்வொரு புனிதருக்கும் ஓர் இறந்த காலம் உண்டு. அது போலின்றி ஒவ்வொரு பாபிக்கும் ஓர் எதிர்காலம் உள்ளது. ‘
‘வெறுப்புக்கும் கண்கள் குருடு, காதலைப் போல. ‘
‘உணர்ச்சியுடன் வரையப்படும் ஒவ்வொரு முகத்தோற்ற ஓவியமும் [Portrait] ஓவியரின் தோற்றமே தவிர உட்கார்ந்திருப்பவரின் தோற்றமன்று. ‘
‘மனிதர் பலியாகும் கவர்ச்சி வசப்பாடுகளுக்கு [Temptations] அவரது பலவீனம் காரணமன்று. நான் சொல்கிறேன்: பயங்கர வசப்பாடுகள் பலவற்றின் வாசற் படியேறிப் பலியாக மிக்க உந்துதலும், துணிச்சலும், மன வலுவும் வேண்டும். ‘
‘மனச்சாட்சியும் கோழைத்தனமும் மெய்யாக ஒன்றுதான். மனச்சாட்சி என்பது வர்த்தகத் துறையில் மனிதரிடும் பெயர். ‘
ஆஸ்கர் வைல்டு [1854-1900]
நாடக நபர்கள்:
ஏரோத் ஆன்டிபஸ் (Herod Antipas) : ஜுடேயா (Judea) நாட்டில் காலிலீயின் ஆளுநர் [Governor of Galilee
ஏரோதியாஸ் (Herodias): ஏரோத் மன்னின் மனைவி
ஸாலமி இளவரசி: ஏரோதியாஸின் முதல் கணவன் ஃபிளிப்புக்குப் (Philip) பிறந்த புதல்வி.
(ஃபிளிப்: ஏரோத் ஆன்டிபாஸுக்கு மாற்றாந்தாய் சகோதரன்)
ஜொகானன் (Jokanan): ஜான், புனித நீராட்டி
ஏரோதியாஸின் சேடியர், காவலர்
ஸிரியா வாலிபன் : நாராபாத், ஸாலமி மீது தீராக் காதல் கொண்டவன்
சேனைக் காவலர்.
கப்பதோசியன் : (Cappadocian) ஓரினத்தைச் சேர்ந்தவன்.
நியூபியன் : (Nubian) வேறோர் இனத்தைச் சேர்ந்தவன்.
யூதர்கள்: மூவர்.
நாஸரீன் [Nazarene], மற்றும் ரோமாபுரி டைஜெல்லினஸ் [Tigellinus]
நேரம்:
அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை. முழுச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.
காட்சி அமைப்பு:
ஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம். கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை. வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது. ஏரொத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் மாளிகையில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரையாடிக் கொண்டிருக்கிறாள். அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள். ஏரோத் மன்னனின் காம விழிகள் ஸாலமியை வட்ட மிடுகின்றன! மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள். ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக்கிறான். இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொகானன் [ஜான் புனித நீராட்டி] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார்.
இடை இடையே சிறையில் கிடக்கும் ஜொகானன் உரக்கக் குரல் கேட்கிறது. ஸாலமி அருவருப்படைந்து மேல்மாடிக்கு வருகிறாள். அப்போது ஸாலமி ஜொகானனைக் காண வேண்டுமென விரும்பியதும், காவலர் அவரை மாடிக்கு அழைத்து வருகிறார்! சிறைக் கைதி ஜொஹானன் மீது ஸாலமிக்குப் பரிவும், பாசமும், பற்றும் உண்டாகிறது. போதகரை ஸாலமி முத்திமிடப் போவதை, ஸிரியா வாலிபன் தடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான். ஜொகானன் ஸாலமியை உதறித் தள்ளி சிறைக்கு மீள்கிறார். ஏரோத் மன்னன், ஸாலமியைத் தேடி அவரது மனைவி ஏரோதியாஸ் ஆகியோர் புடைசூழ மாடிக்கு வருகிறார். ஸாலமியை நாடும் ஏரோதை ராணி கண்டிக்கிறாள். ஏரோதியாஸின் மேல் சாபமிடும் ஜொகானன் மீது ராணி ஏரோதியாஸ் கோபப் படுகிறாள். ஸாலமியின் மேனி எழிலில் மயங்கி ஏரோத் தன்முன் நடனம் ஆடும்படிக் கெஞ்சுகிறான். ராணி அதைத் தடுக்கிறாள். முடிவில் வெகுமதி தருவதாய் ஏரோத் உறுதி மொழி கொடுத்ததும், ஸாலமி நடனம் ஆட ஒப்புக் கொள்கிறாள்.
****
ஏரோத்: [கோபத்துடன்] என்ன புதிராகப் பேசுகிறாய்! புரியவில்லை! சிறிய வெகுமதி! எளிய வெகுமதி! மலிவு வெகுமதி! நான் வேண்டாதது! நீ வேண்டாதது! ஸாலமி காதலிப்பது! …. ஏனிப்படிக் குழப்புகிறாய் ? குழம்பிப் போன நீ, என்னையும் குழப்புகிறாய்! எளிய பரிசைக் கேட்பாள் என்றால் ஏன் ஸாலமி காதில் அதை முணுமுணுத்தாய் ? என் காதில் விழாமல் ஏனதை ஒளித்துக் கொண்டாய் ? தாயும், மகளும் சேர்ந்து எனக்குப் பிடிக்காத ஒன்றைக் கேட்கச் செய்ய சதி பண்ணுகிறீர்! ஆமாம் சதிதான் அது! என்ன ரகசியப் பரிசு அது ? சொல், அதுவென்ன அதிசயப் பரிசு ? சொல், சொல்!
ஏரோதியாஸ்: ஸாலமியே அதை உங்களிடம் கேட்பாள். வெகுமதியைக் கேட்கப் போவது அவள்! எனக்கா கேட்கும் உரிமை அளித்தீர்கள் ? நானிந்த பரிசுப் போட்டியில் தலையிட வில்லை! ஆனால் அவளிடம் என் விருப்பத்தைத் தெரிவித்தேன். அது என் விருப்பம். அவள் விருப்பம் என்னவோ, யாருக்குத் தெரியும் ?
ஏரோத்: அதோ பார்! சலங்கை கட்டி, உடல் குலுங்க ஸாலமி வந்து விட்டாள்! உட்கார்! நீயும் நடன விருந்தைக் கண்டுகளி! [ஸாலமியைப் பார்த்து] நாட்டியப் பாவையே! உன் காலணிகள் எங்கே ? அன்னத்தின் தூவியான உன் பொற் பாதங்கள் வெறும் தளத்தில் படலாமா ? [சற்று கவலையுடன்] காற் தடங்கள் குருதிக் கறை படிந்த தளத்தில் படியலாமா ? ஸாலமி! குருதிக் கறை தன்னைக் கழுவ வேண்டாமா ? அது தீய சகுன மாயிற்றே!
ஸாலமி: எனது பாதங்களில் குருதிக் கறை படவில்லை மன்னரே! கறைபட்ட காலணிகளை கழற்றித் தீயில் போட்டு விட்டேன்! ஆனால் கறை பட்டுப் போனது என்னிதயம்! பாதங்கள் அல்ல. பாத அணிகள் எனக்குத் தேவை யில்ல, நாட்டியம் ஆடுகையில்! எனக்குத் தீய சகுனத்தில் நம்பிக்கை யில்லை! குருதியில் கால் பட்டால் என்ன ? கை பட்டால் என்ன ? உடம்பே குருதியால் உயிர்ப்பிக்கப் படும் போது, கால் வேறா ? கை வேறா ? மெய் வேறா ? எல்லாம் ஒரே குளத்தில் மிதப்பவை! ஒருவன் எனக்காக உயிர் கொடுத்தான்! குருதி கொடுக்க வில்லை. புனித உயிர் போய் விட்டது! ஆனால் எனக்கின்னும் மோகம் உள்ளது. வாலிபன் மீதில்லை! வேறொருவர் மீது காதல்! என்மேல் மோகம் கொண்ட வாலிபன் தன்னுயிரைத் தானம் செய்தான்! நான் மோகம் கொண்ட காதலர் எனக்கு வேண்டும்! அவரை வேறு ஒருத்தி தீண்டக் கூடாது! அதுவரை என் தாகம் அடங்காது! என் மோகம் முடங்காது!
ஏரோதியாஸ்: அவள் குருதிமேல் ஆடினால் உங்களுக்கு என்ன தீய சகுனம் ? ஸாலமிக்கு ஆசை காட்டி ஆட வைப்பதில் தோல்வி அடைந்தீர்! அதில் வெற்றி பெற அவளுக்கு வெகுமதி தருவாய்க் கூறி உறுதி அளித்தீர் ?
ஏரோத்: போதகர் சொன்னது மெய்யாகப் போனது! பார், செந்நிறத்தில் மூழ்கி விட்டது வெண்ணிலா! செந்நிற மாகும் வெண்ணிலா உன் கண்களுக்குத் தெரிகிறதா ?
ஏரோதியாஸ்: ஆம், தெரிகிறது எனக்கு. விண்மீன்கள் அத்திக் காய்கள் போல வானிலிருந்து வீழ்கின்றன! மேற்கே கீழ்வானம் சிவந்து, வெண்ணிலவைச் செந்நிலவாக வரைகிறது பரிதி! பூகோளத்தின் மன்னர்கள் வேதனப் படுகிறர் என்பது உண்மைதான்! போதகர் சொன்னதில் அது ஒன்றுதான் மெய்யானது. வாருங்கள் உள்ளே போகலாம். நோயில் விழுந்தவர் போல் நீங்கள் காணப்படுகிறீர்! நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும்.
ஜொகானன் குரல்: [உச்சக் குரலில்] ஏடாம் நகரிலிருந்து வருபவர் யார் தெரியுமா ? பாஸ்ரா நகரிலிருந்து வருபவர் யாரென்று தெரியுமா ? அறிந்து கொள்வீர். பழுப்பு நிற உடை அணிந்தவர் அந்த மனிதர்! ஒளி பொருந்திய கண்களையும், மினுமினுக்கும் மேனியையும் படைத்தவர் அவர்! நடையில் மிடுக்குடன் நடப்பவர் அவர்! குருதியில் நனைந்த உனது உடை எங்கே ? மெருகுடன் ஓளிரும் அவரது மேனி எங்கே ?
ஏரோதியாஸ்: போதகர் பேச்சைக் கேட்டால் பைத்தியம் பிடிக்கிறது எனக்கு! முதலில் அவரது வாயைக் கட்டாமல், என் மகள் ஆடப் போவதில்லை! உமது விழுங்கும் கண்கள் முன்பாக ஸாலமி ஆடுவதை நான் அனுமதிக்கப் போவதில்லை. [எழுகிறாள்]
ஏரோத்: நீ எங்கும் போகாமல் முதலில் உட்கார். ஸாலமி ஆடப் போவது உண்மை! நடனத்தை நீயும் அமர்ந்து ரசிக்க வேண்டும். அவள் ஆட்டத்தைக் காணாமல் நானிந்த இடத்தை விட்டு நகரப் போவதில்லை!
[ஸாலமி நர்த்தகி போல் ஒப்பனை செய்து கொண்டு அரங்கிற்கு வருகிறாள். அனைவரும் நிசப்தமாக அமர்கிறார்கள்]
ஸாலமியின் தோழி: மாண்புமிகு மன்னரே! ஸாலமி இளவரசி ஆடப் போகிறார்! [வாத்திய ஒலிகள் வாசிக்கப் படுகின்றன. சேடியர் பாடுகிறார். ஸாலமி ஆடத் துவங்கிறாள். அவையோர் ரசிக்கிறார்கள்.]
மயிலாடு கின்ற திங்கே!
மயங்கிடுது விழிக ளிங்கே!
மானாடு கின்ற திங்கே!
மனதாடி மகிழ்வ திங்கே!
தானாடும் தலைக ளிங்கே!
தடம்புரளும் உடல்க ளிங்கே!
தீராத மோக மிங்கே!
தீர்த்திடுவாள் பாவை யிங்கே!
[ஸாலமி பாட்டுக்கும், தாளத்திற்கும் ஏற்ப வளைந்து, நெளிந்து, மேனி குலுக்கி ஆடுகிறாள்]
ஏரோத்: ஆஹா, ஸாலமி! என்ன ஒயிலாக ஆடுகிறாய்! தேவ மயில் போல் ஆடுகிறய்! புள்ளி மான்போல் துள்ளி ஓடுகிறாய்! நெஞ்சத்தில் தேனை ஊற்றுகிறது உனது நெளிவாட்டம்! நெஞ்சைத் துடிக்க வைக்கிறது உனது நர்த்தனம்! மின்னல் போல் வெட்டுகிறது உன் பொன்னுடல்! உன் காந்தக் கண்ணொளி என் உள்ளத்தைக் கவ்வுகிறது! கேள் ஸாலமி, கேள்! உன் வெகுமதியைக் கேள்! விலை மதிப்பற்ற வைரக் கழுத்தணியா ? கண்கவரும் பொன் ஆபரணங்களா ? மாட மாளிகையா ? ஆடலரசியே கேள்! கேட்டது கிடைக்கும் உறுதியாக!
ஸாலமி: [ஆடிக்கொண்டே] கேட்டது கிடைக்குமா ? உறுதியாகக் கிடைக்குமா ? கேட்கவா நான் ? எனக்கு வேண்டியது, விலை மதிப்பற்ற நகைகள் அல்ல! மாட மாளிகை அல்ல! பாதி நாட்டைக் கேட்க வில்லை! நான் கேட்கப் போவது ….!
ஏரோத்: [வியப்பாக, வேதனையுடன்] கண்மணி ஸாலமி! இவை யெல்லாம் வேண்டாமா ? பிறகு கொடுப்பதற்கு என்னிடம் வேறு எதுவுமில்லை, ஸாலமி! இவைதான் என்னிடமிருப்பவை. வேறென்ன கேட்கப் போகிறாய் நீ ?
ஸாலமி: [நடனத்தை சற்று நிறுத்தி] தலை! எனக்கு வேண்டியது, தலை! வெறும் தலை! வாளால் சீவிய தலை! ஜொகானன் தலை! வெள்ளித் தாம்பாளத்தில் போதகரின் தலை! துண்டிக்கப் பட்ட தலை! குருதில் மூழ்கிய தலை! நான் காதலித்தவர் தலை!
ஏரோத்: [பயங்கரக் குரலில்] அடி பாவி! அடி பாதகி! என்ன கேட்டாய் ? புனித போதகர் தலையா ? [தலை சுற்றி ஆசனத்திலிருந்து கீழே விழுகிறார்] காவலர் அருகில் போய் ஏரோதைப் பிடித்துக் கொண்டு கவனிக்கிறார்கள்]
(தொடரும்)
[காட்சி-1, பாகம்-16 அடுத்த வாரத் திண்ணையில்]
****
தகவல்:
1. Salome from The Plays of Oscar Wilde, The Modern Library, New York
2. The Greatest Man Who Ever Lived By: Watch Tower Bible (1991)
3. The Desire of Ages By: Ellen G. White
4. The Story of Jesus By: Reader ‘s Digest (1993)
5. Who is Who in the Bible, An Illustrated Biographical Dictionary By Reader ‘s Digest (1994)
6. The New Testament & Psalms, Placed By the Gideons.
7. The Original New Testament By Hugh J. Schonfield (1998)
8. Encyclopaedia of Britannica [1978]
9. Student Bible, The New International Version (2002)
10 The Artist ‘s Way (A Spiritual Path to Higher Creativity) By: Julia Cameron (1992)
****
jayabarat@tnt21.com [S. Jayabarathan April 4, 2006]
- ரா கு கே து ர ங் க சா மி -4
- கவிதைகள்
- சூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-1 [The Approaching Global Thermage
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -4 (சென்ற வாரத் தொடர்ச்சி)
- ரிகர்சனிசம்:பின்நவீனத்தின் இன்னொரு முகம்
- மாஜிகல் ரியலிசம் : கற்பனைகளின் எல்லைகளை கடந்து
- கழகக் கந்தன் என்கிற பரிஷத் முருகன்
- ரஜினி வாய்ஸ் ! ஒரு கற்பனை
- கடிதம்
- வகாபிகளின் நவீன தீண்டாமை
- உயிர்நிழல் கலைச்செல்வன் நினைவு-கூடல்
- இஸ்லாமியப் பெண்ணியம் – ஹெச்.ஜி.ரசூல் நூல் வெளிவந்துவிட்டது
- ‘விளக்கு ‘ குறித்து சில விளக்கங்கள்
- கடிதம்
- சன் டிவி
- கவிதைகள்
- மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் கவிதைகள்
- தண்டனை
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-15) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 15
- என் கணவரின் மனைவி!
- கோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 1
- ஷரீஅத் குற்றவியல் – ஒரு மறுவிவாதம்
- ரஃபீக் ஜகாரியா எழுதிய ‘நல்லிணத்துக்கான பாதை : எங்கே வழி தவறினர் இந்திய இசுலாமியர் ? ‘ – நூல் அறிமுகம்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக மின்நூலகம் – வசதிகளும் வாய்ப்புகளும்
- மகாத்மாவை இனி பரமாத்மா என்றே அழைப்போம்
- உள்ளுணர்வில் பலரும் ஹிந்துக்களே
- கீதாஞ்சலி (67) வானும் நீ! கூடும் நீ! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- அந்தக் கணம்
- கவிதைகள்
- பெரியபுராணம் – 83 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- அவுரங்கசீப்…. ? !!!