தண்டனை

This entry is part [part not set] of 32 in the series 20060407_Issue

இரா.இராமையா


அருள் தேவி தியேட்டரில் மாலைக் காட்சிக்கு பிளாக்கில்

டிக்கெட் விற்று விட்டு வீட்டிற்கு வந்தால் வீட்டில் அம்மா இல்லை.

‘அம்மா எங்கக்கா ? ‘ என்று முக்கு வீட்டு வாசலில் உட்கார்ந்து

இருந்த ராமக்காவைக் கேட்டான்.

‘உங்கம்மா தம்பிக் கூட்டிட்டு ஆசுபத்திரி போயிருக்கா.. ‘

‘எதுக்கு ? ‘

‘எதோ இஸ்கூல்ல அடிபட்டிருச்சாம். ‘

அருளுக்கு எரிச்சல் வந்தது. சிறிது நாளாகச் சம்பாதித்த

பணம் மொத்தமும் தம்பிக்கே போகிறது.

அருள் வீட்டிற்கு வந்து சற்று நேரம் சட்டி, பாத்திரம் எல்லாவற்றையும்

திறந்து பார்த்தான். சுத்தமாகத் துடைத்திருந்தது.

அவனுக்குக் கோபம் வந்தது. இனி திரும்பி வந்து சமைக்கப் போகிறாளா ?

மத்தியானம் இரண்டு இட்லி சாப்பிட்டதோடு சரி. கோபத்துடன் பாத்திரங்களை

ஓங்கி உதைத்தான். அவை உருண்டு உருண்டு போய்ச் சுவரருகே நின்றன. பிறகு

அவனே திரும்ப எடுத்து வந்து ஒழுங்காக வைத்து விட்டு வெளுயே கிளம்பினான்.

அம்மா கோபம் பொல்லாதது.

****

நன்றாக பாய் கடையில் பரோட்டா வெட்டி விட்டு (தம்பிக்கும் அம்மாவுக்கும்

பிடிவாதமாக பார்சல் எடுத்துக் கொள்ளாமல்) திரும்பி வந்தான். அவன் வீட்டிற்கு வந்த

போது அம்மா வாசலில் உட்கார்ந்து பக்கத்து வீட்டுத் தோழியுடன் பேசிக்

கொண்டிருந்தாள்.

‘இன்னாடா..இப்ப வர ? ‘ என்றாள்.

அருள் கோபத்துடன் ஒன்றும் பேசாமல் உள்ளே போனான்.

‘கேக்குறம்ல..சாப்பிட்டியா ? ‘

‘நீ தான் எதுவும் செஞ்சு வக்கலியே..இன்னாத்தச் சாப்பிடுறது ? ‘ என்று

கத்தினான் அருள். சற்றுத் தள்ளி நின்று கொண்டு தான் கத்தினான். அவன் அம்மா புலி

போல பாய்ந்து அடித்தால் ஓடுவதற்குத் தயாராக இருந்தான்.

‘ஏண்டா கத்துற ? ராசு தூங்கறாம்ல ? ‘

‘அவனுக்கு இன்னா இப்பவே தூக்கம் ? நானு நாள் முழுக்கச் சுத்திட்டு வரேன்.

எனக்கே தூக்கம் வரல.. ‘

அவன் அம்மா மெளனமாக இருந்தாள். இது அருளுக்குச் சற்றுப் புதிராக

இருந்தது. பொதுவாக ரஜினி ‘தர்லே கால் படாம ஏர்லே பறந்து சுத்தி சுத்தி ‘ அடிப்பது

போலப் பந்தாடுபவள் இன்று ஏன் சும்மா இருக்கிறாள் ?

அருள் திரும்பிப் பார்த்தான். ஓரத்தில் அவன் தம்பி படுத்திருப்பது தெரிந்தது.

சற்றுப் பக்கத்தில் சென்று பார்த்தான். தலை மட்டும் வெளுயே தெரிந்தது. கண்ணுக்கு

மேலே பெரிய பிளாஸ்திரி ஒட்டியிருந்தது.

‘இன்னாம்மா இது..இப்பிடி அடிபட்டிருக்குது ? ‘ என்று கேட்டான் அருள்.

‘இஸ்கூல்ல பசங்க எல்லாம் கபடி விளையாடிச்சாம். படி மேல இருந்து

உருண்டு விழுந்திருக்கான். ‘

அருளுக்கு வெட்கமாக இருந்தது.

****

ஒரு வாரம் கடுமையான சுரத்திற்குப் பிறகு ராசு சிறிது எழுந்து நடமாடும் நிலைக்கு

வந்திருந்தான். ஒரு நாள் கபடி பார்க்க வந்தான். இன்னமும் முகத்தில் காயம் ஆறவில்லை.

கட்டுப் போட்டிருந்தான். முதலில் அமைதியாக இருந்தான். ஆனால் ஆட்டம் சுறுசுறுப்பு

பிடிக்க, கொஞ்சம் கொஞ்சமாக உணர்ச்சி வசப்பட்டுத் தாண்டவம் ஆடத் தொடங்கிக்

கடைசியில் அருளின் சகா ரமேஸைப் பார்த்து ‘மூதேவி, கம்மனாட்டி ‘ என்று கத்தத் தொடங்கியதும்

பையன் பூரண குணமடைந்து விட்டான் என்று அருளுக்குத் தெரிந்தது.

விளையாட்டு முடிந்துி வீட்டுக்கு வந்ததும் அருளிடம் ராசு, ‘அருளு..நானு ஸ்கூலுக்குப்

போவல.. ‘ என்றான்.

‘நிறைய லீவு போட்டியே. நாளைக்குப் போயிரு. ‘

‘நாளைக்கு இல்ல. இனிமே போவல. ‘

அருள் உற்றுக் கேட்டான். தம்பி சொன்னது மனதில் பதிய சிறிது நேரமாயிற்று.

‘இனிமே போவலியா ? ‘

‘ம் ‘

அருள் தான் அண்ணனாக இருந்து என்ன செய்ய வேண்டும் என்று

யோசித்தான். வீட்டுக்கு மூத்த ஆண் பிள்ளை. தன் அப்பாவாக இருந்தால் என்ன

செய்திருப்பார் ?

தடதடவென்று நடந்தான். ஓரத்தில் இருந்து துடைப்பக் கட்டையை

எடுத்தான். திரும்பி நடந்து வந்தான்.

‘இதால அடி வேணுமா ? ‘

‘ஏ..இன்னா அருளு இது ? ‘

‘அடி வேணுமா சொல்லு. ‘

ராசு அதிகம் பயந்தவனாகத் தெரியவில்லை. இருந்தாலும், ‘வேணாம் ‘, என்றான்.

அருள் துடைப்பத்தைக் கீழே இறக்கினான்.

‘அப்பிடியே வீட்டக் கூட்டிப் பெருக்கிரு ‘, என்று விட்டு ராசு வெளுயே போனான்.

****

மறு நாளில் இருந்து ராசு ஸ்கூலுக்குப் போகத் தொடங்கினான். ஸ்கூல் போகாமல்

பிளாக்கில் டிக்கெட் விற்று மானத்துடன் பிழைக்கும் திட்டத்தை அவன் கை விட்டதாகவே

தோன்றியது. தன் புத்தகங்கள், நோட்டுக்கள் எல்லாவற்றையும் அவனே எடுத்து வைத்துக்

கொண்டு உற்சாகத்துடன் கிளம்பினான்.

அருளுக்குச் சற்று மிதப்பாக இருந்தது. மறு நாள் மதியம் ரமேஸிடம் தன்

சாதனையை விவரித்தான். ரமேஸுக்கு இதில் பெரிதாக எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை.

‘அருளு..அடி ஒதை மாதிரி அண்ணன் தம்பி கூட ஒதைக்க மாட்டான் ‘, என்று

தன் வாழ்க்கைத் தத்துவத்தை எடுத்துச் சொன்னான்.

அருள் துடைப்பத்தை எடுத்ததைச் சொல்லவில்லை. துடைப்பம் அவ்வளவு ஆண்மையான

ஆயுதம் இல்லை என்று அவனுக்குத் தோன்றியது.

‘கைய ஓங்கினேன் பாரு.. ‘அருளு வுட்டுரு ‘னு கால்ல விளிந்திட்டான். ‘

ரமேஸ் இதை அவ்வளவாக நம்பவில்லை.

‘அதாண்டா..இந்தக் காலத்துல எல்லாத்துக்கும் அடி தான். நீ பணிவா ‘இல்லடா தம்பி..

ஸ்கூலுக்குப் போ..படி..பட்டம் வுடு.. ‘னு சொன்னனு வையி..நாமந் தான்.. ‘ என்றான்.

ஆனால் மாலை வீட்டுக்குத் திரும்ப வரும் போது ராமக்கா கூப்பிட்டாள்.

‘அருளு..உன் தம்பி இல்ல..ராசு..இன்னிக்கு மதியம் காசி தியேட்டராண்ட

சுத்திட்டிருந்தானாம்.. ‘ என்றாள்.

அருளுக்குத் தலை சுற்றியது.

‘இப்ப எங்க அவன்.. ‘

‘டி.வி பாக்குறாம்பா.. ‘

அவன் வேகத்துடன் கிளம்பினான்.

****

அருள் வரும் போது கெட்ட கோபத்துடன் வந்தாலும் ஒரு விஷயம்ி தெளுவாகத்

தெரிந்தது. எந்தக் காரணம் கொண்டும் தம்பியை அடிக்காமல் இருப்பது நல்லது. அடித்தாலும்

அதிகமாக அடிக்கக் கூடாது. போன முறை இப்படித் தான் கபடி விளையாடும் போது

கெட்ட வார்த்தை சொன்னதற்காக அடிக்கப் போய் அவன் அம்மாவுக்குத் தெரிய வந்து விட்டது.

மாலை நேரம் அக்கம்பக்கத்துக் குமரிகள் எல்லோரும் பவனி வரும் நேரம் பார்த்து நடுத்

தெருவில் சாக்கடை தள்ளும் குச்சியை வைத்து விளாசி விட்டாள். அது தான் அருள் மிகவும்

ஸ்டைலாக அடி வாங்கிய நாள்.

இந்த விஷயத்தில் தெளுவுடனும் மற்றபடி கூவத்தைப் போலக் குழம்பிய மனதுடனும்

அருள் டி.வி அறையை அடைந்தான்.

குப்பத்து மக்கள் எல்லோரும் இருபத்தோராம் நூற்றாண்டைச் சென்றடைய

வேண்டும் என்பதற்காக பல திட்டங்களை யோசித்துக் கை விட்டுப் பின் ஒரு டி.வியை வாங்கி

வைத்திருந்தார் வார்டு தலைவர். அதுவும் சிறியது. ஆனால் கலர் டி.வி. ஒரு சிறிய அறையில்

அதை வைத்து ஆன்டெனா இணைப்புக் கொடுத்திருந்தார்கள். அடுத்த தேர்தலுக்குள் ‘சன் டி.வி ‘

வேண்டும் என்பது குப்பத்து மக்களின் கோரிக்கை.டி.வியின் வழியே இருபத்தோராம்

நூற்றாண்டைக் கண்டு மகிழ்ந்தார்கள்.

டி.வி அறைக்கு நாலு பக்கமும் ஜன்னல்கள் இருந்தன. அருள் அந்த அறையைச்

சென்றடையும் போது அறை நிரம்பியிருந்தது. வெளுயேயும் நல்ல கூட்டம். நெருக்கியடித்து

ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அருள் வாசலில் நின்று ‘ராசு..வெளுய வா.. ‘ என்று கத்தினான். சுற்றி எல்லோரும்

திரும்பி ‘ஷ்.. ‘ என்று வாயில் விரல் வைத்துச் சும்மா இருக்கும்படி சொன்னார்கள்.

அறை உள்ளே இருந்து, ‘ அப்போ விளைச்சல் .நல்லா வர யூரியா எத்தனை

சதவீதம் ? ‘ என்று டி.வியின் குரல் கேட்டது.

இதற்கான பதிலை எதிர்பார்த்து எல்லோரும் ஆவலுடன் காத்திருந்தார்கள்.

அருள் சலிப்புடன் ‘ராசு. ? ‘ என்றான்.

உள்ளே இருந்து கூட்டத்தை விலக்கிக் கொண்டு ராசுவும் அவனுடன்

இன்னொரு பையனும் வெளுயே வந்தார்கள்.

‘இன்னாடா இப்பப் பாத்து ? ‘ என்றான் ராசு.

ராசுவின் நண்பன், ‘இன்னா அருளு..டென்சனா கீற ? ‘ என்றான்.

‘ஏண்டா ஸ்கூல் போவல ? ‘

ராசுவின் முகத்திலும் அவன் நண்பன் முகத்திலும் புன்னகை மறைந்தது.

‘வூட்டுக்குப்ி போலாம் வா ‘, என்றான் ராசு.

அருளுக்குச் சிறிது சிறிதாக வெறி ஏறத் தொடங்கியது.

‘ஏம் போல..சொல்லு.. ‘

‘பிடிக்கல. போல ‘

அருள் தன்னை மறந்தான். தன் அம்மாவை மறந்தான். அம்மாவின்

ஆயுதமான சாக்கடைக் குச்சியை மறந்தான்.

‘பொய் சொல்லுற ? நாயே ‘ என்று ஓங்கிக் கன்னத்தில் ஒரு அறை விட்டான்.

ராசு தள்ளாடி விழத் தெரிந்தான்.

யூரியாவையும் வயலும் வாழ்வையும் விட்டு வெளுயே நின்ற அத்தனை

பேரும் அருளைப் பார்த்தார்கள். டி.வி அறைக்குள்ளிருந்து நாலைந்து பேர் வெளுயே

ஓடி வந்து பார்த்தார்கள்.

ராசுவின் நண்பன் அருளைப் பார்த்து, ‘ஏ அவன ஏன் அடிக்கிற ? போய்

வாத்தியார அடி… ‘, என்றான்.

அருளுக்கு எல்லோரும் அவனையே பார்ப்பது சற்றுக் கூச்சமாக இருந்தது. அதே

சமயம் வீட்டுத் தலைவன் என்ற முறையில் பெருமையாகவும் இருந்தது.

‘இன்னாது..வாத்தியாரா ? ‘ என்று கேட்டான்.

‘ஸ்கூல்ல வாத்தி போட்டு அடிக்கிறாரு அவன.. ‘ என்றான் நண்பன்.

அருளுக்குச் சம்பிரதாயமான கேள்வி நினைவு வந்தது.

‘இவன் இன்னா பண்ணான் ? ‘

‘ஒண்ணும் பண்ணல ‘

‘சும்மா ஒண்ணும் அடிக்க மாட்டாரு. ‘

சுற்றிக் கூட்டத்தில் எல்லோருக்கும் போரடித்தது. அடிதடி, சண்டை என்று

பார்த்தால் டிராமா மாதிரி பேசிக் கொண்டிருந்தார்கள். வயலும் வாழ்வுமே பரவாயில்லை

என்று சிலர் டி.வி அறைக்குள் போனார்கள்.

ராசு அருளை நிமிர்ந்து பார்த்து ஏதோ முனங்கினான். அவன் கன்னத்தில் விரல்

தடம் கன்றிப் போயிருந்தது. அருளுக்குச் சுய நினைவு வந்தது.

கீழே குனிந்து, ‘இன்னா..சொல்லு ‘ என்றான்.

ராசு மெதுவாக, ‘அன்னிக்கு… கபடில ஒண்ணும் அடிபடல… ‘, என்றான்.

ராசுவின் நண்பன், ‘வாத்தி தான் மாடில இருந்து தூக்கி அடிச்சிட்டாரு.. ‘ என்றான்…

****

இந்த வாத்தியை என்ன செய்வது ?

அருளுக்கு ஒரு வாரம் முன்னால் உடம்பெல்லாம் பிளாஸ்திரி உடுத்திப்

படுத்திருந்த தம்பியின் முகம் நினைவு வந்தது.

ஒருவேளை பள்ளியில் இப்படித் தான் செய்வார்களோ என்ற சந்தேகம்

அவனுக்கு உண்டானது. அவன் படித்தில்லை. ரமேஸ் கெட்டதனமாக அடிப்பார்கள்

என்று சொல்லியிருக்கிறான். நன்றாகப் படிப்பு வர வேண்டுமே என்ற கவலையில்

மாடியில் இருந்து தூக்கிப் போட்டாரோ ?

சாப்பிடும் போது அம்மா ராசுவை உற்றுப் பார்த்து, ‘ஏண்டா கன்னம்

வீங்கியிருக்குது ? ‘ என்று கேட்டாள்.

ராசு பதறாமல், ‘கபடில அடிபட்டுது ‘, என்றான்.

****

மறு நாள் பள்ளியைப் பார்த்து நடக்கும் போது அருளுக்குக் குழப்பம்

அதிகமானது. ஒரு வேளை ராசு பொய் சொல்கிறானோ என்ற சந்தேகம் எழுந்தது.

ரமேஸும் கூட வந்தான்.

பள்ளி வாசல் திறந்திருந்தது. மதிய இடைவேளை நேரம்.

மாணவர்கள் எல்லோரும் கற்றுத் தெளுந்த மகிழ்ச்சியுடன் வெளுயே வந்து

கொண்டிருந்தார்கள். பலர் கற்றது போதும் என்ற முடிவுக்கு வந்தவர்களாகக்

காணப்பட்டார்கள்.

இருவரும் உள்ளே சென்றார்கள்.

எதிரே நடந்து வந்த ஒருவர் அவர்களை ஏற இறங்கப் பார்த்தார்.

‘ஏய்..யாருப்பா ? ‘ என்று கேட்டார்.

அருள் தயக்கத்துடன், ‘கணேசன் மாஸ்டர் பாக்கணும் ‘, என்றான்.

‘இங்க படிக்கிறியா என்ன ? ஏன் யூனிஃபார்ம் போடல ? ‘

‘இல்லீங்க. தம்பி படிக்கிறான். ‘

‘அப்பிடியா..ஸ்டாஃப் ரூம்ல இருக்காரு..போய்க்கோ. ‘

ரமேஸ் ஏனோ சுறுசுறுப்பு அடங்கி மெளனமாக இருந்தான். அவனும் இதே

பள்ளியில் நாலு வகுப்பு படித்தவன். உள்ளே வந்தவுடன் மனதில் பயமும் வந்து விட்டது.

ஸ்டாஃப் ரூமில் நீள மர மேஜையைச் சுற்றி நாலைந்து ஆசிரியர்கள் அமர்ந்து

இருந்தார்கள். ஃபேன் காற்றில் ரூம் குளுமையாக இருந்தது.

அருள் எட்டிப் பார்த்ததும் ஒருவர், ‘யாருப்பா ? ‘ என்றார்.

அருள் உள்ளே நுழைந்து, ‘கணேசன் சார் யாரு ? ‘ என்று கேட்டான். அவனுக்குக்

குரல் நடுங்கியது.

‘என்ன ? ‘ என்று வலப்பக்கம் அமர்ந்திருந்த ஒருவர் கேட்டார்.

ரமேஸ் அவரைப் பார்த்தான். ஆறடிக்கு மேல் இருப்பார் போலிருந்தது. கை கால்கள்

தூண்களைப் போல இருந்தன. கிட்டத்தட்ட நெப்போலியன் போல இருந்தார்.

அருள், ‘என் தம்பி ராசு..ராசப்பன்..உங்க கிளாஸ்ல.. ‘, என்று இழுத்தான்.

மேஜையைச் சுற்றி இருந்த எல்லோரும் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்.

பேப்பர் திருத்திக் கொண்டிருந்த ஒருவர் நிறுத்தி விட்டு அருளை உற்றுப் பார்த்தார்

கணேசன், ‘அவனுக்கென்ன ? அவனத் தான் ஸ்கூல்ல இருந்து

அனுப்பியாச்சே ‘, என்றார்.

அருள் ஏனோ கணேசன் மாஸ்டர் தன் தம்பியைத் தெரியாமல் அடித்து

விட்டதற்காக மன்னிப்பு கேட்பார் என்று நம்பிக்கை வைத்திருந்தான் அந்த நம்பிக்கை

இப்போது பறந்தது. அடுத்து என்ன பேசுவது என்று தெரியவில்லை.

‘போ..போ ‘, என்றார் கணேசன்.

‘ஏன் சார்..அவன அடிச்சீங்க ? ‘

ரமேஸ் பின்னால் தப்பி ஓட இடம் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டான்.

கணேசன் நாற்காலியைச் சத்தத்துடன் பின்னால் தள்ளி விட்டு எழுந்து நின்றார்.

இப்போது நெப்போலியனின் அண்ணன் போல இருந்தார்.

‘உன் தம்பி சரியில்ல..சுத்தப் பொறுக்கி. அடிக்காம ? பின்ன கொஞ்சவா ? ‘

ரமேஸுக்கு அவர் எழுந்து நின்ற பின் அவர் பக்கமும் நியாயம் இருப்பதாகத்

தோன்றியது.

‘அதுக்காக ? ரத்தம் வர மாதிரி ஏய்யா அடிச்ச ? ‘ என்றான் அருள். அவன்

குரல் உயர்ந்தது.

‘ஏய்..போடா..போட்டன்னா.. ‘ என்று கணேசன் கையை ஓங்கி முன்னால்

ஒரு அடி எடுத்து வைத்தார்.

ரமேஸ் சற்றுப் பயந்து, ‘ நெப்போலியன் சார்..எதுவா இருந்தாலும் பேசித்

தீத்துக்கலாம்.. ‘, என்றான்.

வாத்தியார் எட்டி முன்னால் வந்து ரமேஸைக் கன்னத்தில் ‘பளார் ‘ என்று

அறைந்தார்.

‘போடான்னா.. ‘ என்றார்.

ரமேஸ் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு பின் வாங்கினான்.

அருளுக்கு முன்னால் நின்றார் கணேசன்.

‘ஏய்..ஓடிப் போ. உன் தம்பிக்கு அடிச்ச அடி தான் உனக்கும்.. ‘, என்று

அவனைப் பின்னால் தள்ளினார்.

ரமேஸ், ‘அருளு..வா. பெறகு பேசிக்கலாம் ‘, என்றான்.

அருள் மெதுவாகத் திரும்பி நடந்தான்.

கணேசன் திரும்பி அறையிலிருந்த மற்றவர்களைப் பார்த்து, ‘பிக்பாக்கட்

மாதிரி இருக்கான் பாருங்க ‘, என்றது காதில் விழுந்தது.

ரமேஸ் கன்னத்தைப் பிடித்துக் கொண்டே சிறிது தூரம் நடந்தான்.

ஒன்றும் பேசாமல் இருவரும் சென்றார்கள்.

‘அருளு! ‘

‘என்னடா ? ‘

‘அடி கிடி பட்டுதுனு யாரு கிட்டயும் சொல்லாத.. ‘

‘எனக்காகத் தானடா நீயு வந்த. இப்பிடி அடி வாங்கிட்டியே. ‘

‘த பாரு..மறுபடி அடின்ற பாரு. மறந்துரு அருளு ‘

‘சரிடா. ‘

‘ராசுவாண்ட சொல்லாத. ‘

அருள் பெரிய மனிதனாகத் தான் செய்யப் போன முதல் காரியம்

இப்படி முடியும் என்று எதிர்பார்க்கவில்லை. வாத்தியார் அவனை விடப் பெரிய

மனிதனாக இருந்தார்.

****

அன்று இரவு ரமேஸ் அருளின் வீட்டுக்கு வந்தான். இருவரும் கூவம்

நதிக் கரையில் சிறிது தூரம் நடந்து சென்றார்கள்.

நிலா வெளுச்சத்தில் கூவம் நதி வெளிளியாகப் பளபளத்தது. நாற்றத்தை

மட்டும் வைத்துத் தான் அடையாளம் சொல்ல முடிந்தது.

‘பிளான் எல்லாம் போட்டாச்சுரா. நாளைக்குச் சாயந்திரம் அந்தாளப்

போட்டுத் தள்ளிரலாம் ‘, என்றான் அருள்.

‘ஏ..என்ன உளர்ற ? ‘ என்றான் ரமேஸ்.

‘ராசுவோட ஃபிரெண்டு கிட்ட நைசாக் கேட்டேன். அந்தாளு வீடு பக்கத்துல தான்.

கிண்டி டேசனாண்ட. ‘

ரமேஸுக்கு ஒன்றுமே புரியவில்லை.

‘அந்தாள..நீயு அடிக்கப் போறியா ? ‘

‘நான் மட்டும் இல்ல. நீயம் வா. போட்டுச் சாத்திரலாம். ‘

‘அருளு..எதுக்கு வம்பு வச்சிட்டு ? விடு.. ‘

அருள் அவனை முறைத்தான்.

‘ஏண்டா.. உன்னப் போட்டு அந்தச் சாத்து சாத்தினாருல்ல.. ? ‘

‘ஏ..இன்னா..சாத்தல்லாம் ஒண்ணும் இல்ல. ஒரு அடி தான். ‘

‘அந்த ஒரு அடிக்கே நீ சுருண்டு போயி.. ‘, என்று அருள் தொடர்ந்தான்.

ரமேஸுக்கு வாத்தியாரை விட அருள் மேல் கோபம் அதிகமாக வந்தது.

‘நீ நாளைக்கு வர்ர ‘ என்றான் அருள்.

‘கொஞ்சம் வேற வேல இருக்கு.. ‘

‘உன்ன அந்தாளு கீள போட்டுப் பொரட்டினப்ப.. ‘

‘சரிடா. வரேன். ‘

‘அந்தாளுக்கு நான் யாருன்னு காட்டுறேன். ‘

இருவரும் வீட்டைப் பார்த்துத் திரும்பி நடந்தார்கள். சற்று நேரம்

சும்மா இருந்து விட்டு ரமேஸ், ‘அருளு..நெசமாச் சொல்லு. சண்டை உன்ன வச்சா..

இல்ல உன் தம்பிய வச்சா ? ‘ என்று கேட்டான்.

‘ராசுவுக்காகத்தான்… ‘

இருவரும் சற்று நேரம் மெளனமாக நடந்தார்கள். ரமேஸ் மூச்சை இழுத்து

விட்டான். உடனே அதற்காக வருத்தப்பட்டான்.

அருள் திடாரென்று, ‘த பாரு ரமேஸு..நீ சொல்றல்ல..நாளைக்கு ராசுவையும்

கூட்டிப் போவோம் ‘, என்றான்.

‘எதுக்குடா தேவயில்லாம.. ? ‘

‘இல்ல. அவனே அடிக்கட்டும். ‘

வீடு வந்து விட்டது. வாசலில் ராசுவும் அம்மாவும் நின்று கொண்டிருந்தார்கள்.

அம்மா ரமேஸை உற்றுப் பார்த்து விட்டு, ‘இன்னாடா..கன்னம் இப்பிடி வீங்கிருக்குது ? ‘

என்று கேட்டாள்.

‘கபடில அடிபட்டுது.. ‘ என்றான் ரமேஸ்.

ராசு அவனை சந்தேகத்துடன் பார்த்தான். ‘என்ன விளையாட்டோ.. ‘ என்றாள்

அம்மா.

****

கிண்டி ‘டேசனாண்ட ‘ இருந்த ஒரு அமைதியான தெருவில் இருந்தது

கணேசன் மாஸ்டர் வீடு. தனி வீடு. பக்கத்தில் ஓரு வீடு பாதி கட்டிக் கல் மண் குவியலுடன்

நின்றது. இந்த வீட்டின் வாசலில் மாலை ஐந்தரை மணிக்கு அருள், ரமேஸ், ராசு மூவரும்

வந்து நின்றார்கள்.

‘இங்க எதுக்குக் கூட்டி வந்த ? ‘ என்று கேட்டான் ராசு.

அவனுக்குப் பதில் சொல்லாமல் அருள் பரபரவென்று உள்ளே சென்றான்.

ரமேஸ் பின்னாலேயே தயங்கித் தயங்கிச் சென்றான். ராசு சுற்றிப் பார்த்தவாறே

வந்தான்.

‘நம்ம புது வீடா ? ‘

ராசுவுக்குப் பதில் சொல்லாமல் அருள் சில பெரிய கற்களைத்

தனியாக எடுத்து வைத்தான். ஒன்றிரண்டு இரும்புக் கம்பிகளை எடுத்துக்

கொண்டான்.

ரமேஸுக்குக் கை கால் லேசாக நடுங்கத் தொடங்கி இருந்தது.

குப்பத்துப் பிள்ளையார் கோவில் போய்த் திருநீறும் எஸ்.ஜானகி சைஸுக்குக்

குங்குமமும் வைத்திருந்தான்.

அருள் அவனைத் தனியாகக் கூப்பிட்டு, ‘கவனமா கேளு. அந்தாளு

வரப்ப புல்லட்ல இருந்து தள்ளி விட்ரலாம். பெறகு நீ முன்னால இருந்து வா. நான்

பின்னால இருந்து.. ‘

‘நான் பின்னால இருந்து வரேனே.. ? முந்தியே அடி வாங்கிட்டேன். ‘

‘ஏ..கேக்குறம்ல..இங்க எதுக்கு வந்தோம் ? நான் போயிப் படிக்கணும் ‘,

என்றான் ராசு.

ரமேஸ், ‘ஸ்கூலே போவல. என்ன படிக்கப் போற ? ‘ என்றான்.

அருள், ‘அந்தாளு வர நேரமாச்சு. எல்லாம் உள்ள வா ‘, என்றான்.

‘யாரு வராங்க ? ‘

‘உங்க கணேசன் வாத்திக்கு இங்க தான் சமாதி ‘, என்றான் அருள்.

ராசு, ‘வாத்தியாரா ? அவரு எங்க இங்க ? ‘ என்று கேட்டான்.

‘அதோ அதான் அவரு வீடு. ‘

‘அவர அடிக்கப் போறியா ? ‘

ரமேஸ், ‘இல்லாட்டி நல்லா வாங்கப் போறோம் ‘, என்றான்.

ராசு அங்கிருந்து வெளுயே போய்த் தெருவில் நடக்கத் தொடங்கினான்.

அருள், ‘ஏ..ஏய்..இங்க வாடா.. ‘ , என்று கத்தினான்.

ராசு தலையைத் தலையை ஆட்டிக் கொண்டு தனக்குத் தானே பேசிக்

கொண்டே நடந்து கொண்டிருந்தான்.

‘அவனப் போய்ப் பிடிரா ‘, என்றான் அருள்.

ரமேஸ் ராசுவிடம் போய் ஏதோ சொன்னான். பிறகு இருவரும் சேர்ந்து

நடந்து போனார்கள்.

அருள் அவர்கள் பின்னால் ஓடினான். அவர்களை அடைந்ததும் பல்லைக்

கடித்தவாறே, ‘திரும்பி வாங்கடா.. ‘ என்றான்.

ரமேஸ், ‘போடா..அந்தாள் கிட்ட எவ்வளவு முறை அடி வாங்குறது ? ‘ என்றான்.

அருள் வெறுப்புடன், ‘அப்ப நீ போ. ராசு..நீ வா ‘, என்றான்.

‘நீ அந்தாள அடிக்க மாட்டனு சத்தியம் பண்ணு ‘

‘இப்ப வரியா இல்லையா ? ‘ என்று அருள் ராசு கையைப் பிடித்து இழுத்தான்.

ராசு கையை உதறினான்.

அருள் வெறியுடன் அவன் கன்னத்தில் ஓங்கி அடித்தான்.

ராசு கன்னத்தைப் பிடித்துக் கொண்டு, ‘அடி நல்லா..உனக்கும் அந்தாளுக்கும்

என்ன வித்தியாசம் ? ‘ எனறான்.

‘நான் அடிக்கிறதும் அந்தாளு அடிக்கிறதும் ஒண்ணா நாயே ? ‘

‘ரெண்டும் தான வலிக்குது.. ‘

அருள் இதற்குப் பதில் சொல்லத் தெரியாமல் திகைத்து நின்றான்.

சற்றுத் தொலைவில் ஒரு புல்லட் வரும் சத்தம் கேட்டது.

ரமேஸ் அடித்துப் பிரண்டு செங்கல் வீட்டை நோக்கி ஓடினான்.

அருளும் ராசுவும் பின்னாலேயே மெதுவாக ஓடினார்கள்.

அருள் வீட்டுள் நுழைந்ததும் ராசுவிடம், ‘ராசு..நான் என்ன பண்ணனும்ற ? ‘

என்றான். அவன் கண்கள் பனித்திருந்தன.

‘என்ன வேற ஸ்கூல்ல சேத்திரு. இல்ல ஹெட்மாஸ்டர் கிட்ட கூட்டிப் போ ‘,

என்றான் ராசு.

புல்லட் சத்தம் வர வரப் பெரிதாகிப் பெரும் இடியுடன் வாத்தியார் வீட்டெதிரே

போய் நின்றது. ரமேஸ் அருளருகே வந்து நின்றான்.

‘ஸாரிடா ரமேஸு.. ‘

‘பேசாத..வாத்திக்குக் கேட்டுரப் போவுது ‘

கணேசன் புல்லட்டில் இருந்து இறங்கி சுற்றுமுற்றும் பார்த்தார். வீட்டுக் கதவைத்

திறந்து கொண்டு ஒரு பெண் வந்தாள். இருவரும் உள்ளே சென்றார்கள்.

அருள், ‘போலாம் வா. நாளைக்கே ஹெட்மாஸ்டர் கிட்டப் போவோம் ‘, என்றான்.

மூவரும் வீட்டுக்குக் கிளம்பினார்கள்.

‘ரமேஸு..நீயும் வாத்தியாராண்ட அடி வாங்கினியா ? ‘ என்று கேட்டான் ராசு.

ரமேஸ், ‘அடினெல்லாம் இல்ல.. ‘ என்று தொடங்கும் போதே, அருள் குறுக்கே

புகுந்தான்.

‘அடினா சாதாரண அடி இல்ல..வச்சு மிதி மிதினு மிதிச்சு.. ‘

‘ஏ..இன்னா அருளு.. ‘

****

arramiah1@gmail.com

Series Navigation

author

இரா.இராமையா

இரா.இராமையா

Similar Posts