சி. ஜெயபாரதன், கனடா
‘ஒளிமயமான எதிர்காலம் உள்ள ஆடவரைப் பிடிக்கிறது எனக்கு! அதுபோல் கடந்த காலம் சிறப்பாக உள்ள மாதரின் மீதும் பெரு மதிப்புள்ளது எனக்கு. ‘
‘இந்த உலகம் ஆடவருக்காக உருவாக்கப் பட்டிருக்கிறது! பெண்டிருக்காக அமைக்கப் படவில்லை. ‘
‘மாதர்கள் எதனையும் கண்டுபிடித்திடுவார்கள், வெளிப்படையாகத் தெரிவதைத் தவிர. ‘
‘பெண்டிர் பரிவுடன் நேசிக்கப்பட வேண்டியவர், புரிந்து கொள்ளப் படுபவர் அல்லர். ‘
‘வயது இலக்கம் 35 மாதருக்குக் கவர்ச்சியான வயது! லண்டன் நகரில் தமது சுய விருப்பப்படி என்றும் 35 வயதிலே நிலைத்து நிற்கும் மாதர் ஏராளமாக நிரம்பி யிருக்கிறார்! ‘
ஆஸ்கர் வைல்டு [1854-1900]
‘என்னை யாரென்று பொதுமக்கள் நினைக்கிறார் ? ‘ என்று கேட்டார் ஏசு கிறிஸ்து. ‘புனித நீராட்டி ஜான் என்பவர் சிலர்; தேவதூதர் எளையாஸ் என்பவர் சிலர்; பூர்வீகத் தூதர் மீண்டும் பூமியில் உதித்திருக்கிறார் என்று கூறுவாரும் உள்ளார், ‘ என்றனர் அவரது சீடர்கள்.
பைபிள் வாசகம்
வஞ்சகி வரும் வழியை விட்டு ஒதுங்கிடு, அவள்
வாசற் கதவு முன் நடப்பதையும் நிறுத்திடு!
உள்ளத்தை, உடலைத் தந்திட மறுத்திடு! அவளுடன்
வாழ்நாளை வீண்நாளாக ஒருங்கே வெறுத்திடு!
உடல் நாடினும், உள்ளம் தேடினும் அவள்
மடியில் உறங்கும் சுகத்தை என்றும் துறந்திடு!
பைபிள் பழமொழியிலிருந்து.
நாடக நபர்கள்:
ஏரோத் ஆன்டிபஸ் (Herod Antipas) : ஜுடேயா (Judea) நாட்டில் காலிலீயின் ஆளுநர் [Governor of Galilee
ஏரோதியாஸ் (Herodias): ஏரோத் மன்னின் மனைவி
ஸாலமி இளவரசி: ஏரோதியாஸின் முதல் கணவன் ஃபிளிப்புக்குப் (Philip) பிறந்த புதல்வி.
(ஃபிளிப்: ஏரோத் ஆன்டிபாஸுக்கு மாற்றாந்தாய் சகோதரன்)
ஜொஹானன் (Johanan): ஜான், புனித நீராட்டி
ஏரோதியாஸின் சேடியர், காவலர்
ஸிரியா வாலிபன் : நாராபாத், ஸாலமி மீது தீராக் காதல் கொண்டவன்
சேனைக் காவலர்.
கப்பதோசியன் : (Cappadocian) ஓரினத்தைச் சேர்ந்தவன்.
நியூபியன் : (Nubian) வேறோர் இனத்தைச் சேர்ந்தவன்.
யூதர்கள்: மூவர்.
நாஸரீன் [Nazarene], மற்றும் ரோமாபுரி டைஜெல்லினஸ் [Tigellinus]
நேரம்:
அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை. முழுச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.
காட்சி அமைப்பு:
ஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம். கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை. வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது. ஏரொத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் மாளிகையில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரையாடிக் கொண்டிருக்கிறாள். அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள். ஏரோத் மன்னனின் காம விழிகள் ஸாலமியை வட்ட மிடுகின்றன! மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள். ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக்கிறான். இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொஹானன் [ஜான் புனித நீராட்டி] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார். இடை இடையே சிறையில் கிடக்கும் ஜொஹானன் உரக்கக் குரல் கேட்கிறது. ஸாலமி அருவருப்படைந்து மேல்மாடிக்கு வருகிறாள். அப்போது ஸாலமி ஜொஹானனைக் காண வேண்டுமென விரும்பியதும், காவலர் அவரை மாடிக்கு அழைத்து வருகிறார்! சிறைக் கைதி ஜொஹானன் மீது ஸாலமிக்குப் பரிவும், பாசமும், பற்றும் உண்டாகிறது. போதகரை ஸாலமி முத்திமிடப் போவதை, ஸிரியா வாலிபன் தடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான். ஜொஹானன் ஸாலமியை உதறித் தள்ளி சிறைக்கு மீள்கிறார். ஏரோத் மன்னன், ஸாலமியைத் தேடி அவரது மனைவி ஏரோதியாஸ் ஆகியோர் புடைசூழ மாடிக்கு வருகிறார். ஸாலமியை நாடும் ஏரோதை ராணி கண்டிக்கிறாள். ஏரோதியாஸின் மேல் சாபமிடும் ஜொஹானன் மீது ராணி ஏரோதியாஸ் கோபப் படுகிறாள்.
****
ஏரோத்: [மிகவும் கவனமுடன்] அந்த தூதர் யார் ? செத்தவரைப் பிழைக்கும் தேவதூதரா ? நான் தெரிந்தாக வேண்டும் அவரைப் பற்றி! செத்தவரை உயிர்ப்பித்து மீண்டும் பிழைக்க வைப்பது தவறான மனிதப் பணி! என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத கோரப் பணி! செத்தவ ரெல்லாம் பிழைத்து மீண்டும் வாழ வந்தால், என் நாட்டில் பஞ்சம் உண்டாகி விடும்! வாழத் தளமின்றி நாடு சுருங்கிப் போகும்! உண்ண உணவில்லாமல் மண்ணைத் தின்னும்படி திண்டாட வேண்டும்! குடிக்க நீரில்லாமல் போகும்! இருக்க வீடில்லாமல் போகும்! மக்கள் தொகை ஏறிக்கொண்டே போய்விடும்!
முதல் நாஸ்ரீன்: மாண்புமிகு மன்னா! மடிந்தவர் எல்லோரையும் தூதர் உயிர்ப்பிக்க மாட்டார்! அது அவரது தொழிலன்று! அவர் இதுவரை பிழைக்க வைத்திருக்கும் மாந்தர் மூன்று அல்லது நான்கு பேர்! அவ்வளவுதான்! இதனால் நாட்டில் இடத் தட்டுப்பாடு, உணவுத் தட்டுப்பாடு வந்திடும் என்று தாங்கள் அஞ்ச வேண்டாம்! சிந்தித்துச் செயல்படும் சேவைப் பணியாளர் அவர்!
ஏரோத்: ஒருவர் உயிர்ப்பித்து எழுந்தால் என்ன ? மூவர் உயிர்ப்பித்து எழுந்தால் என்ன ? எனக்கு எல்லாம் தவறாகத்தான் தெரிகிறது! செத்தவன் எவனும் மீளக் கூடாது! அதுதான் கடவுளின் கட்டளை! கடவுளின் நியதி! கடவுள் உயிரனங்களைப் படைக்கிறார்! மாந்தரது பணிகள் முடிந்தபின், கடவுள் அவரது உயிரை எடுத்துக் கொள்கிறார்! தேவ தூதர் எவரும் கடவுளின் பணியில் குறுக்கிடக் கூடாது! மனிதர் பிறப்பு, வளர்ப்பு எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி வரும் கடவுள் பணியைத் தூதர் எவரும் தோளில் சுமக்கக் கூடாது! எங்கே உபதேசம் செய்து வருகிறார் அந்த தூதர் ? நான் அவரைக் காண வேண்டும்! அழைத்து வருவீரா ?
ஜொஹானன் குரல்: [உரத்த குரலில்] அதோ அவர் உம்மைத் தேடி வருகிறார்! நீ தேடிச் செல்ல வேண்டிய தில்லை! யார் அழைப்பினும் அவர் வருவார்! ஆனால் அவரிடம் வஞ்சகர் மன்னிப்புக் கேட்க வேண்டும், முதலில்! பாபிகளே! உங்கள் வஞ்சகப் பாவங்களைக் கழுவத் தயாராகக் காத்திருப்பீர்! அடுத்தவர் கூட்டைக் கலைக்காதீர்! அடுத்தவர் பொருள் மீது ஆசை வைக்காதீர்! அடுத்தவன் படுக்கையைத் தேடாதீர்!
ஏரோதியாஸ்: [ஆங்காரமாய்] மறைமுகமாகப் பரதேசி என்னைத்தான் சுட்டிக் காட்டுகிறார்! அவரது நாக்கை அறுக்க வேண்டும்! செய்வீரா எனக்காக ?
ஏரோத்: புனித நாக்கால் அவர் திட்டுவது உன்னை யில்லை! எவரையோ திட்டினால் உன்னை என்று மனதில் ஏன் வேதனைப் படுகிறாய் ? அவர் உன்னதப் போதகர்! அவரை நான் துயர்ப்படுத்த மாட்டேன்! இப்போது நான் தேடுவது செத்தவரை உயிர்ப்பிக்கும் தேவதூதரை!
இரண்டாம் நாஸரீன்: மாண்புமிகு மன்னா! தாங்கள் தேவ தூதரைத் தேடிச் செல்லத் தேவையில்லை! நம்மைக் காண அவர் வருகிறார் என்பது முற்றிலும் உண்மை! எல்லாத் தளங்களுக்கும் அவர் போகிறார்! அவர் இப்போது சமேரியாவில் உபதேசித்து வருகிறார்!
முதல் யூதர்: அந்த தூதர் போலி வேசக்காரர் என்பதை எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்! சமேரியாவைத் தேடிச் சென்று உபதேசிப்பவர் நிச்சயம் புனிதத் தூதராக இருக்க முடியாது! சமேரிய மாந்தர் சாபக் கேடானாவர்! அவர்கள் மனமார ஆலயத்துக்கு எதுவும் சமர்ப்பணம் செய்யாதவர்! யூத ஆலயத்தை மதிக்காத சூதர்கள்! அவருக்குப் போதனை செய்பவர் போலிப் பரதேசியாகத்தான் இருக்க முடியும்!
இரண்டாம் நாஸ்ரீன்: தூதர் சமேரியாவை விட்டுச் சென்று சில நாட்கள் ஆகி விட்டன! நான் கேள்விப் பட்டது, அவர் ஜெரூஸலத்தின் அருகே உபதேசித்து வருகிறார் என்று.
முதல் நாஸரீன்: இல்லை! அவர் அங்கே யில்லை! ஜெரூஸலத்திலிருந்துதான் நான் வருகிறேன்! சென்ற இரண்டு மாதங்களாக அவர் மறைவில் எங்கோ யிருக்கிறார்! அவரைப் பற்றி எந்த தகவலு மில்லை!
ஏரோத்: அதைப் பற்றி எனக்குக் கவலை யில்லை. அவரைக் கண்டுபிடித்து, ‘செத்தவரை உயிர்ப்பிக்க வேண்டாம் ‘ என்று நான் சொல்லும் தீர்மான உரையைக் கூற வேண்டும். குஷ்ட ரோகியைக் குணமாக்கினார்! எனக்குக் கவலை யில்லை! குருடருக்குக் கண்ணொளி கொடுத்தார்! நான் அதைத் தடுக்க வில்லை! திருமணப் பந்தியில் நீரை ஒயினாக்கினார்! அந்த அற்புதங்கள் புரிந்ததை நான் தடுக்க வில்லை! மாறாக நான் பூரிப்படைகிறேன்! ஆனால் செத்தவனை அவர் உயிர்ப்பித்தால் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது! அது பயங்கர நிகழ்ச்சி! அதை நான் தடுக்க முற்படுவேன்!
ஜொஹானன் குரல்: [உரத்த குரலில்] வஞ்சகியே! விலைமகளே! வாலிபரை வசீகரிக்கும் வனப்பு மாதே! பொன்விழிகள் மின்னும் பாபிலோன் புத்திரியே! மனிதர் கூட்டைக் கலைக்காதே! கடவுள் சொல்கிறார்! அவளை எதிர்க்கும் ஆயிரக் கணக்கான மானிடரே, வாருங்கள்! வரிசையாக வந்து கற்களை எடுத்து அவள் மீது வீசி எறிவீர்!
ஏரோதியாஸ்: [கோபத்துடன்] அன்பே! அவர் வாயைக் களிமண்ணால் அடைக்க வேண்டும்! உத்தர விடுங்கள்! அவரது நாக்கு ஒரு மலைப் பாம்பு! நீளும் அந்தப் பாம்பை அடிக்க வேண்டும்! என்னை அருவருப்புடன் பார்க்கின்றன அவரது கண்கள்! பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கோலால் அவற்றைக் குத்த வேண்டும்! அரண்மனைக் கஞ்சியைக் குடித்துக் கொண்டு, நம்மீதே காரி உமிழும் அந்த பரதேசியைத் தடியால் அடிக்க வேண்டும்! நமது சிறையில் படுத்துக் கொண்டு நமது நெஞ்சிலே ஈட்டியைப் பாய்ச்சும் பயங்கரவாதி! என்னைத் திட்டுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு ஏனிப்படி நிற்கிறீர் ? காவலரை அனுப்பி சவுக்கால் அடிக்க ஆணை யிடுங்கள்! அல்லது இன்று தூக்கம் வராதெனக்கு! [கோவென அழுகிறாள்]
ஏரோத்: [கனிவாக] கண்மணி! அழாதே! அவர் உன்னைத் திட்ட வில்லை! போதகர் வாயைக் கட்டிப் போட முடியாது! ஏன் திட்டுகிறாய் என்று தட்டிக் கேட்க முடியாது! கோபக்கார மனிதர் அவர்! புனித மனிதரைச் சவுக்கால் அடிப்பது பாபம்! நான் ஆணையிட முடியாது! அவர் உலகில் எதற்காகப் பிறந்தாரோ, அந்த பணியைச் செய்து வருகிறார். உனக்காக அவரைச் சிறையில் பிடித்துப் போட்டிருக்கிறேன். அதற்கு மேல் என்னால் தண்டிக்க முடியாது அவரை!
ஜொஹானன் குரல்: வஞ்சகியைக் கல்லால் அடித்துக் கொல்வீர்! அப்படித்தான் தீயவரைப் பூமியிலிருந்து அகற்ற வேண்டும்! தண்டனையைப் பார்த்துப் பாபம் புரிபவர் தயங்குவார்! எப்படி நெறியுடன் வாழ வேண்டு மென்று, மற்ற பெண்கள் உடனே கற்றுக் கொள்வார்! வஞ்சகி நடந்து வந்த பாதையில், மற்ற பெண்டிர் தடம் வைக்கப் பயப்படுவார்!
ஏரோதியாஸ்: [மனம் வெதும்பி] பார்த்தீரா ? பார்த்தீரா ? மறுபடியும் என்னைப் பற்றியே பேசி அவமானம் செய்கிறார்! உமக்குப் புரிய வில்லையா ? என்னைக் கல்லால் அடித்துக் கொல்லச் சொல்கிறார்! பிறர் கல்லால் என்னை அடித்துக் கொல்வதை வேடிக்கை பார்ப்பீரா ? அல்லது அந்த பரதேசிக்கு நிரந்தர விடுதலை தருவீரா ? ஆமாம்! அவருக்கு நாம் தர வேண்டும் நிரந்தர விடுதலை! அல்லது அவர் எனக்கு நிரந்தர
விடுதலை கொடுத்து விடுவார்!
ஏரோத்: அவர் உன் பெயரைச் சொல்லிக் கல்லால் அடிக்கச் சொல்ல வில்லை! நீயாக நினைத்து ஏன் வேதனைப் படுகிறாய் ? பாவம்! அவருக்கு நிரந்தர விடுதலை தரச் சொல்கிறாயே! அது தவறு!
ஏரோதியாஸ்: என் பெயரைச் சொல்லா விட்டால் என்ன ? அவர் திட்டுவது நானில்லை என்று ஏன் மழுப்புகிறீர் ? அவர் அவமதிப்பது உங்கள் மனைவியை! உங்கள் கண்மணியை! அதாவது மறைமுகமாக உங்களை! என்னைக் குத்திக் காட்டினாலும் புண்படுத்துவது மன்னரை! மகா மன்னரை! என்னருமைக் கணவரை!
ஏரோத்: அவர் என்னை இழிவு செய்வதாக நான் நினைக்க வில்லை! ஆமாம், ஐயமின்றி நீ என் கண்மணி! என்னருமை மனைவி நீ! ஆனால் அதற்கு முன்பு என் தமையனின் மனைவி நீ!
ஏரோதியாஸ்: நீங்கள்தான் என் முதற் கணவரிடமிருந்து என்னைப் பறித்து வந்தவர்! தம்பதிகளாக இருந்த எங்கள் கூட்டை உடைத்து என்னருமைக் கணவரைப் பிரித்தீர்! ஆருயிர்க் கணவனைச் சிறைப் படுத்தினீர்! கூட்டிலிருந்து அண்ணன் மனைவியைக் களவாடிக் கொண்டுவந்து உங்கள் அரண்மனைச் சிறையிட்டார்! அதனால் பரதேசி உங்களைத்தான் திட்ட வேண்டும்! என்னை ஏன் அனுதினம் அவமானம் செய்கிறார் ?
ஏரோத்: நீயே எனக்குரியவள்! என் தமையனை விட நானே பராக்கிரமசாலி! உன் முதற் கணவனை விட நானே சகலகலா வல்லவன்! சரி! சரி! அதைப் பற்றிப் பேச நான் விரும்பவில்லை. போதகர் குமுறலுக்கு அது காரணமாக இருக்கலாம்! நாம் அதைப் பேசி நமக்குள் இப்போது சண்டை, சச்சரவு வேண்டாம்! ரோமானிய அதிகாரிகள் முன்பு நமது அழுக்குத் துணிகளைத் துவைக்க வேண்டாம்! …. சேடியரே! இந்த மதுக் கிண்ணங்களை நிரப்புங்கள்! மாலைப் பொழுது மயங்கிப் போகிறது! காலைப் பொழுது வரும்வரை ஆடிப் பாடிக் களிப்போம்! … ஸாலமியின் ஆடலைப் பார்க்க வேண்டும்! ஸாலமியின் தளிர் மேனி நெளிந்து அவள் பாம்பு நடனம் அரங்கேற வேண்டும். ரோமாபுரி விருந்தினர் மனம் நோகாமல் நாம் பார்த்துக் கொள்வது அவசியம். … எங்கே ஸாலமி! … அழைத்துவா அந்த நிலத்துவ நிலாவை! பூச்சூடிய நிலவுக்கு நான் பொன்னாடை போர்த்துகிறேன்!
ஏரோதியாஸ்: [சினத்துடன்] மறுபடியும் உங்களின் கழுகுக் கண்கள் ஸாலமியை ஏன் தேடுகின்றன ? .. பாம்பு நடனம் ஆடப் பாவையர் எத்தனையோ பேர் காத்துக் கொண்டிருக்கிறார் இங்கே ? … ஆனால் ஸாலமி ஏதோ கவலையி லிருக்கிறாள்! … அவளைக் கட்டாயப் படுத்த வேண்டாம். அவளுக்கு ஓய்வு தேவை!
ஏரொத்: ஸாலமிக்கு என்ன கவலை ? தாயிக்குத் தெரிய வேண்டாமா ? போயவளைக் கேள்! அவள் இன்று எங்கள் முன்னால் ஆட வேண்டும்! சாமர்த்தியமாகப் பேசி ரோமானியிர் முன்பு ஆடச் சொல்! போ, கண்மணி போ!
ஏரோதியாஸ்: முடியாது! நானதை அனுமதிக்க மாட்டேன்! குடித்து ஆடிக் கொண்டிருக்கும் ரோமானியர் முன்பு என் வாலிபப் பெண் ஆடுவது எனக்குப் பிடிக்க வில்லை! நான் அதை அனுமதிக்க மாட்டேன்!
ஏரொத்: ஸாலமி! இன்று எங்களுக்கு நடன விருந்தளிக்க வேண்டும்! நீ தடை செய்யாதே அதை! …[ஸாலமியின் அருகில் சென்று] …. ஸாலமி! ஸாலமி! அழகிய மயிலே! ஆடவா! அன்பு மயிலே! ஆடவா! கண்ணுக்கு விருந்தளிக்க மின்னல் போல் ஆடவா! எழிலணங்கே எங்கள் முன் ஆடவா! எனக்கொரு கனிவு முத்தம் தா! கண்ணுக்கு விருந்தளிக்க வா! காளையரைக் கண்ணால் அடித்துக் காயப் படுத்து! கண்ணே! கனிரசமே! கவர்ச்சி மாதே! ஆடவா! உன்னழகை மின்னலாய்ப் பின்ன வா!
(தொடரும்)
[காட்சி-1, பாகம்-12 அடுத்த வாரத் திண்ணையில்]
****
தகவல்:
1. Salome from The Plays of Oscar Wilde, The Modern Library, New York
2. The Greatest Man Who Ever Lived By: Watch Tower Bible (1991)
3. The Desire of Ages By: Ellen G. White
4. The Story of Jesus By: Reader ‘s Digest (1993)
5. Who is Who in the Bible, An Illustrated Biographical Dictionary By Reader ‘s Digest (1994)
6. The New Testament & Psalms, Placed By the Gideons.
7. The Original New Testament By Hugh J. Schonfield (1998)
8. Encyclopaedia of Britannica [1978]
9. Student Bible, The New International Version (2002)
10 The Artist ‘s Way (A Spiritual Path to Higher Creativity) By: Julia Cameron (1992)
****
jayabarat@tnt21.com [S. Jayabarathan February, 21 2006]
- ஹெச். ஜி. ரஸூலின் மீள்பார்வை இலக்கு
- கடிதம் – ஆங்கிலம்
- 365 நாட்கள் 365 முகாம்கள் சத்தமில்லாமல் சாதனை படைக்கும் சம்ஸ்க்ருதபாரதி
- அவுரங்கசீப் VS அரவிந்தர் நீலகண்டர்
- கடிதம்
- செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் . . . (1)
- திருவிழாவுக்குப் போன ஒரு கதை
- போயஸ்கார்டன் கேட் அருகில்
- உண்மையின் ஊர்வலங்கள் – ஊர்வலம் 2
- நான் கண்ட சிஷெல்ஸ் – 12. மக்கள் வாழ்க்கையும் – கலாச்சாரமும்
- கடிதம் – ஆங்கிலம்
- கடிதம் – ஆங்கிலம்
- ஒளியின் மழலைகள் புத்தக வெளியீடு – பிப்ரவரி 25,2006
- கடிதம்
- கடிதம் – ஆங்கிலம்
- வாழ்க கற்பக விநாயகத்தின் நேர்மை! ஒழிக மலர்மன்னனின் பொய்கள்!
- கீதாஞ்சலி (63) வழிகாட்டித் துணைவன்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- சான்றோர் சமூகமும் தோள்சீலைக் கலவரமும்
- புலம் பெயர் வாழ்வு (2)
- அடுத்த இரு வாரங்கள் – ஒரு முக்கிய அறிவிப்பு
- சூபியின் முகமூடி மட்டும்
- தமிழில் உலகப் புகழ் பெற்ற அறிமுக நூல்கள்
- அ.ந.க நினைவு தினக்கட்டுரை (14-02-2006): தொடரும் தேடல்: அ.ந.க.வின் படைப்புகள்!
- சொற்புணர்ச்சி விளக்கச் சொற்கள் – 4
- அலறியின் கவிதைகள்
- விவேகானந்தர் பாறையும், ராணி மங்கம்மா கடிதமும், மைசூர் மூக்கறுப்புப்போரும்
- ரொமீலா தாப்பர் கூறும் கோவில் வரலாறை முன் வைத்து சில குறிப்புகள்
- விவாதங்களை முறைப்படுத்தல் குறித்து.
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-11) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! – (இலக்கிய நாடகம் – நான்காம் பகுதி)
- சூது
- அதிசயம்!
- லுா ஸ்
- பட்ட மரம்
- மணிமேகலை பிரசுரம் – தமிழ் சேவையா ? வியாபார தந்திரமா ?
- கிழவன் சேதுபதியும் ஜான் பிரிட்டோவும்
- நல்ல அறிகுறி
- கவிதைகள்
- எனது கனவில் சிரித்தவர்கள்
- ஆதிக்கத்தின் நுண்ணரசியல்
- அலகிலா விளையாட்டு
- எனக்கொன்றும் பிடிக்கவில்லை
- பெரியபுராணம் — 78 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- எடின்பரோ குறிப்புகள் – 10
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ : அத்தியாயம் நான்கு: நல்லூர் கந்தசாமி கோயில்!
- பழிவாங்கப்படும் ஓரினச் சேர்க்கையாளர்கள்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 10