ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! – (இலக்கிய நாடகம் – நான்காம் பகுதி)

This entry is part [part not set] of 47 in the series 20060224_Issue

கரு.திருவரசு


காட்சி- 4.

காட்சியில் வருவோர். துரியோதனன், அவன் மனைவி பானுமதி, கர்ணன்.

காட்சி நிகழும் இடம். துரியோதனன் அரண்மனையில் விருந்தினர் கூடம்.

காட்சி நிலை. கர்ணனும் அவன் நண்பன் துரியனின் மனைவி பானுமதியும் நட்புமுறையில் தரையில் அமர்ந்து நட்புமுறையில் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருக்கின்றனர். (கர்ணன் ஒரு சிற்றரசன் என்றாலும் சாதாரணத் தோற்றத்தில் இருக்கிறான். பானுமதியோ நல் அணிமணிகளோடு இடையிலே முத்துச்சரம் கோத்த மேகலையும் அணிந்திருக்கிறாள்)

கர்ணன்- (பெரிதாகச் சிரித்து) சொக்கட்டான் ஆட்டம் என் பக்கம் திரும்பிவிட்டது பானு. இனி வெற்றி எனக்குத்தான்.

பானுமதி- முதல் ஆட்டத்திலும் அப்படித்தான் தெரிந்தது. இறுதியில் நீங்கள் தோற்கவில்லையா! இப்போதும் அதே கதைதான், பாருங்களேன்.

கர்- இல்லையில்லை, இம்முறை நான்தான் வெற்றிபெறுவேன். அப்பொழுதுதான் அறுதி வெற்றி முடிவுக்காக நாம் மூன்றாவது ஆட்டத்துக்குப் போகலாம்.

பானு- அப்படியெல்லாம் நடக்காது கர்ணமா மன்னரே! இந்த ஆட்டத்திலும் நீங்கள் தோற்று இன்றைய விளையாட்டே நிறைவுபெறப் போகிறது. இதோ பாருங்கள் காய்களை…(என்று தாயம் உருட்டுகிறாள்)

கர்- அதையுந்தான் பார்த்துவிடுவோமே! (என்று அவன் உருட்டுகிறான்) ஆங்… இதோ தாயம் விழுந்துவிட்டது, வெற்றி நெருங்கிவிட்டது.

பானு- இன்னொரு உருட்டலில் எனக்கும் வெற்றி வருகிறது… (தனக்குள்) ஆ, மன்னர் வருகிறாரே!

(வாயில்புறத்தே கணவன் வருவதைப் பார்த்து, மரியாதைக்காகச் சடாரென எழுகின்றாள். தனக்குப் பின்னால் துரியன் வந்திருப்பதைக் கவனியாமல் ஆட்டத்தின் சுவை வேகத்திலே இருந்த கர்ணன், அவள் தன்னுடைய வெற்றியைத் தடுப்பதற்காகப் பாதியில் எழுகின்றாள் என நினைத்துத் தோல்வி வெறியோடு…)

துரி- பானு!… ஆட்டத்தின் இடையில் எழுந்தால் எப்படி ?… நான் விடமாட்டேன்! உட்கார் பானு! உட்கார்!

(என்று அவள் இடுப்பைப் பற்றி இழுக்க முயல்கிறான். அவன் கை பானுமதி இடுப்பில் அணிந்திருந்த மேகலையைப் பற்ற, அவள் வேகமாக எழ, மேகலை அறுந்துபோக; மேகலையிலிருந்த முத்து மணிகள் சிதறி ஓடுகின்றன)

பானு- அய்யய்யோ!… என்ன என் இடைமேகலையைப் பற்றி இழுத்துவிட்டார்கள் ? மேகலையே அறுந்து முத்துகளெல்லாம் சிதறிவிட்டனவே! அய்யய்யோ!

(கர்ணனும் பானுமதியும் பதறி நிற்க, வந்த துரியோதனன் மிகவும் இயல்பாகப் பேசுகிறான்)

துரியோதனன்- என்ன கர்ணா, சிதறிய முத்து மணிகளை எல்லாம் நான் எடுக்கவோ! கோக்கவோ!… முத்துகளை எல்லாம் பொறுக்கிச் சேர்த்துவிடுவோமே!

(என்று சொல்லிக்கொண்டே மணிகளைப் பொறுக்கத் தொடங்குகிறான் துரியன்)

கர்- ஓ… துரியோதனா, நண்பா! தவறு, பெருந்தவறு. பானு என் வெற்றியைப் பொறுக்காமல், அதைத் தடுக்கத்தான் திடாரென எழுகின்றாள் எனத் தவறாக நினைத்து ஏதோ ஒரு வேகத்திலே அவள் மேகலையைப் பற்றி இழுத்துவிட்டேன். என்னைப் பொறுத்தருள் நண்பனே!

துரி- (இயல்பாகவே) என்ன பேசுகிறாய் கர்ணா! எந்தத் தவறும் நடந்துவிடவில்லை. பானு என்னைப் பார்த்ததும்தான் எழுந்தாள், நீ நான் வந்ததைப் பார்க்கவில்லை. சொக்கட்டானில் சொக்கிப் போயிருந்ததால் அவள் தோல்விக்குப் பயந்து எழுந்து ஓடப்பார்க்கிறாள் என்று நினைத்துவிட்டாய். உன் நிலையில் நான் இருந்தாலும் அப்படித்தான், அதுதான் நடந்திருக்கும்.

கர்- ஓ… ஓ… கர்ணா! கர்ணா உன்னை நண்பனாக அடைய என்ன பேறு செய்தேன், என்ன பேறு செய்தேன். எங்கிருந்தோ வந்துசேர்ந்த ஏதுமில்லாத இந்தத் தேரோட்டி மகனுக்கு நீ என்னென்ன தந்தாய்! என்னை மனிதனாக்கி, எனக்கொரு நாடு தந்து அதற்கு மன்னனாக்கி, உன் உற்றார் உடன்பிறந்தார் , ஏன் இந்த உலகமே என்னை மதிக்கும் ஓர் ஏற்றம் தந்து, எல்லாம் தந்த நண்பா! உன் மனைவியின் மடியைப் பிடித்திழுத்த இந்த மடையனைப் பொறுத்தருள வேண்டும், பொறுத்தருள வேண்டும்!

துரி- என்ன பேசுகிறாய் கர்ணா! உன்னை எனக்குத் தெரியாதா! என் மனைவி பானுமதியின் குணநலனும் எனக்குத் தெரியாததா! (மனைவியை நோக்கி) பானு! நீயேன் தயங்கி நிற்கிறாய் ? சிதறிய முத்து மணிகளை நீயும் பொறுக்கி எடு! நண்பா, நீயும் எடு!

கர்- நண்பனே, நண்பனே! தெளிந்தபின் ஐயுறவு தேவையேயில்லை என்று தெளிந்தவனே! இனி எத்தனை பிறவி எடுத்தாலும் உனக்கு நண்பனாகவே நான் பிறக்க விரும்புகிறேன், வேண்டுகிறேன்! (என்று துரியோதனனைக் கட்டித் தழுவிக்கொள்கிறான்.)

(காட்சி இருளில் மெதுவாக நிறைவு பெறுகிறது. அரங்கின் கோடியில் ஒளிவட்டத்துள் கவிஞரும் புலவரும் தோன்றுகின்றனர்.)

புல- அருமை, அருமை! தெளிந்த நட்புக்கு இலக்கணம் சொல்லும் இனிய காட்சி கவிஞரே!

கவி- தொடர்ந்து இன்னொரு காட்சியை விளக்கப்போகிறேன் புலவரே! ஒரு கணவன் தன் மனைவியின் வழியாகவே, அவள் ஐயப்படாமலே, அவளுக்குத் தெரியாமலே தன் காதலிக்குத் தூது அனுப்பமுடியுமா ?

புல- அதெப்படி ? அவள் ஐயப்படாமல் இருப்பதற்கு ஏதாவது செய்யலாம். ஆனால், அவளுக்குத் தெரியாமல் அவள் வழியாக எப்படித் தூது அனுப்பமுடியும் ?

கவிஞ- உதயணன் கதையிலே வருகிறது அந்தப் புதுமையான காதல் தூது. மனைவியே அவள் கணவனுக்கும் கணவனின் காதலிக்கும் இடையே தூது போகிறாள் அதை உணராமலே!

புல- விந்தையாக இருக்கிறதே, கதையைச் சொல்லுங்கள் கவிஞரே!

கவி- சொல்கிறேன்! சொல்கிறேன்!

(காட்சி நிறைவு, நாடகம் தொடரும்)

thiru36@streamyx.com

Series Navigation

author

கரு.திருவரசு

கரு.திருவரசு

Similar Posts