ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! (இலக்கிய நாடகம், பகுதி மூன்று)

This entry is part [part not set] of 46 in the series 20060217_Issue

கரு.திருவரசு


காட்சி – 3

காட்சியில் வருவோர்: கோவலன், மாதவி.

காட்சி நிகழும் இடம். இந்திரவிழாவின் உச்சமாகக் கடலாடல் நிகழும் கடற்கரை.

காட்சி நிலை. ஓவியத்திரைகள் சூழ அமைக்கப்பட்ட தற்காலிகக் குடில். அழகிய கட்டிலின்மேல் கோவலனும் மாதவியும் அமர்ந்திருக்கின் றனர். அருகிருந்த யாழை வணங்கி எடுத்துக் கோவலனிடம் தருகிறாள் மாதவி.

மாதவி- அத்தான்! இந்த யாழை மீட்டி ஒரு பாடல் பாடுங்களேன்!

கோவலன்- பாடுகிறேன் மாதவி, பாடுகிறேன். உனக்கில்லாத பாட்டா ? (என யாழைச் சுருதி மீட்டிப் பாடுகிறான்)

திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல் அதுஓச்சிக்

கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி!

கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவா தொழிதல் கயல்கண்ணாய்!

மங்கை மாதர் பெருங்கற்பென் றறிந்தேன் வாழி காவேரி!

மாத- (தனக்குள்ளாகவே பேசிக்கொள்கிறாள்) என்ன இவர் பாடுகிறார் ?

‘காவிரிப்பெண்ணே, உன் கணவன் கங்கை எனும் மங்கையைக் காதலித்து அவளைச் சேர்ந்தாலும் நீ அவனை வெறுப்பதில்லை, மறப்பதில்லை. காவேரியே! அது உன் கற்புநெறி, பெருங் கற்புநெறி என்று நான் அறிந்தேன். நீ வாழ்க ‘ என்று பாடுகிறாரே! இவர் மறைமுகமாக எனக்கு என்ன சொல்கிறார்!…

கோவ- (தொடர்ந்து பாடுகிறான்)

மன்னும் மாலை வெண்குடையான் வளையாச் செங்கோல் அதுஓச்சிக்

கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி!

கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவா தொழிதல் கயல்கண்ணாய்!

மன்னும் மாதர் பெருங்கற்பென் றறிந்தேன் வாழி காவேரி!

மாத- (தனக்குள்) ‘காவேரிப் பெண்ணே, உன் கணவன் கன்னி எனும் குமரியைக் காதலித்து அவளைச் சேர்ந்தாலும் நீ அவனை வெறுப்பதில்லை, மறப்பதில்லை. காவேரியே! அது உன் கற்பு நெறி, பெருங் கற்புநெறி என்று நான் அறிந்தேன். நீ வாழ்க! ‘ என்று பாடுகிறாரே! கங்கையும் குமரியும் அவனை வெறுத்துக் கைவிடாத மாதரசிகள் என்ற புகழ்ச்சியின் பொருள் என்ன ? கண்ணகிக்கும் மாதவிக்கும் கற்பைச் சொத்தாக விட்டுவிட்டு இவர் வேறொரு மலருக்குத் தாவுகிறாரோ! பெண்ணுக்குமட்டும்தான் கற்பு நெறியா ? ஆணுக்கு இல்லையா ? இதற்கு நான் மறுப்புச் சொல்லவேண்டும். (கோவலனிடம்)

அடிகளே! உங்கள் பாட்டின் உட்பொருள் சூல்கொண்ட மேகம்போல இருந்தாலும் கொஞ்சம் எனக்கும் விளங்குகிறது. நானும் மறுமொழியாகப் பாடவிரும்புகிறேன், அந்த யாழை இப்படிக் கொடுங்கள்!

கோவ- ஓ… தாராளமாகப் பாடலாம்! இதோ…( என யாழை மாதவியிடம் கொடுக்கிறான்.)

மாத- (யாழை வாங்கி இசைமீட்டிப் பாடுகிறாள்)

மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அதுபோர்த்து

கருங்க யல்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி!

கருங்க யல்கண் விழித்தொல்கி நடந்த தெல்லாம் நின்கணவன்

திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி!

பூவர் சோலை மயில்ஆலப் புரிந்து குயில்கள் இசைபாடக்

காமர் மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி!

காமர் மாலை அருகசைய நடந்த தெல்லாம் நின்கணவன்

நாம வேலின் திறம்கண்டே அறிந்தேன் வாழி காவேரி!

கோவ- (தனக்குள்) என்ன பாடினாள் இவள் ? ‘காவேரிப் பெண்ணே, நீ பெருமையாகக் கைவீசி நடப்பதன் காரணம், உன் கணவன் ஆற்றல் மிக்கவனாய் இருப்பதால்! உன் கணவன் செங்கோல் வளையாமல் அவன் நேர்மையாளனாய் இருப்பதால்! ‘

எனக்கு முன்னாலே இன்னொரு ஆடவனைப் புகழ்ந்து பாடுகிறாளே! மனத்தில் மற்றொருவனை வரித்துவிட்டாளா! (மாதவியிடம் கோபமாக) மாதவி! உன் குலவித்தையை என்னிடமே காட்டுகிறாயா ? என்ன இருந்தாலும் நீ ஆடல் மகள்தானே! நாடகக்காரி! நாடகக்காரி! (என்று எழுந்து வேகமாகப் போய்விடுகிறான்)

மாத- அத்தான்! அடிகளே! அடிகளே! அவசரப்படாதீர், கொஞ்சம் இருங்கள்! (தனக்குள்) ஐயகோ, போய்விட்டாரே!

(கோவலன் ஒரு கோடியில் சென்று மறைந்ததும் அரங்கு இருளாகிறது. அங்கே ஒளிவட்டத்துள் கவிஞரும் புலவரும் மீண்டும் தோன்றுகின்றனர்)

கவிஞர்- என்ன கொடுமை! அவன் மற்றொரு பெண்ணை நினைத்துப் பாடுவதுபோல் பாடினான். அதற்கு மாற்றாக அவளும் ஏதோ பாடினாள். தூய்மையான காதல் மகளான மாதவியை ஆடல்மகளென்று சொல்லி அவமானப்படுத்திவிட்டுப் போகிறானே கோவலன்!

புலவர்- ஆமாம் கவிஞரே! இந்தக் கடலாடு காதையில் கானல்வரிப் பாட்டோடு பிரிந்தவன் கண்ணகியிடம் போனான், மதுரைக்குப் போனான், தொடர்ந்து உலகைவிட்டே போனான்!

கவிஞ- மாதவியின்பால் கோவலன் கொண்ட சந்தேகத்தின் விளைவு கொடுமையானது.

புல- பெண்ணின் சந்தேகம் பாட்டோடு போனது. ஆணின் சந்தேகம் அவன் வாழ்க்கையோடு போனது. இங்கே பெண்ணின் ஐயத்தைவிட ஆணின் ஐயம் மிகவும் தூக்கலாகிப் போனதே கவிஞரே!

கவிஞ- ஆமாம் புலவரே! சிலப்பதிகாரக் கதைத்தலைவனான கோவலன் சந்தேகப்படுவதிலும் தலைவன்தான்! இதற்கு நேர்மாறாகத் தோற்றம் தருகிறான் மகாபாரதத்திலே வரும் துரியோதனன்.

புல- துரியோதனன் மனைவியும் கர்ணனும் சொக்கட்டான் ஆடிய காட்சியைச் சொல்கிறீர்களா ?

கவிஞ- ஆமாம் புலவரே! மகாபாரத்திலே வரும் ஒரு சுவையான காட்சி இது. துரியோதனன் கர்ணன் இருவரும் கதை நெடுக நட்புக்கு இலக்கணமாக வருகிறார்கள். இறக்கும்வரை நண்பர்களாகவே இருந்து சிறந்த, அந்த நண்பர்களின் வாழ்க்கையிலே நடந்த ஒரு சிறிய காட்சிதான் இது. தெளிந்த நட்புக்கும், எந்த நிலையிலும் நண்பர்களுக்கிடையில் சந்தேகம் என்பது வரக்கூடாது, வராது என்பதற்கும் சாட்சியாக வரும் காட்சி.

புல- ஆண்மகன் ஐயத்துக்கு அப்பாற்பட்டவன் என்பதை விளக்கும் அருமையான காட்சிதான்.

கவிஞ- துரியோதனன் அரண்மனையில் துரியோதனன் மனைவி பானுமதியும் அவன் நண்பனான கர்ணனும் என இருவர்மட்டும் அமர்ந்து சொக்கட்டான் ஆடுகின்றனர். ஒரு நண்பனும் நண்பன் மனைவியும் தனியே இருந்தாலே ஐயப்படும் இந்த உலகத்திலே இவர்கள் இருவரும் தனியே அமர்ந்து சொக்கட்டான் எனும் தாய விளையாட்டு விளை யாடுகின்றனர்.

(காட்சி நிறைவு, நாடகம் தொடரும்)

thiru36@streamyx.com

Series Navigation

author

கரு.திருவரசு

கரு.திருவரசு

Similar Posts