நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-3) (Based on Oscar Wilde ‘s Play Salome)

This entry is part [part not set] of 28 in the series 20051230_Issue

சி. ஜெயபாரதன், கனடா


‘புனித நீராட வரும் நச்சுப் பரம்பரைப் பாம்புகளே! எதிர்காலக் கோபத் தவறுகளிலிருந்து பிழைத்துக் கொள்ள உங்களுக்கு எச்சரிக்கை விட்டிருக்கிறார், அவர்! உங்களுக்குள் சொல்லித் தீர்க்க முடியாத, பாப மன்னிப்புக்கு ஏற்ற உங்கள் செய்கைக் கனிகளை அவர்முன் கொண்டு வாரீர்! நமது கடவுள் ஆப்ரஹாம் இருக்கிறார். நான் சொல்கிறேன் உங்களுக்கு: கடவுள் அந்தத் தளத்துடன் பாலகரைத் தூக்கி, ஆப்ரஹாம் வசம் அளிப்பார். அதோ, அடிமரத்தை வெட்டக் கோடாறி, தயாராய் உள்ளது! நற்கனிகள் முளைக்காத ஒவ்வொரு மரமும் வெட்டிக் கீழே தள்ளப்பட்டு தீக்கிரையாகப் போகிறது!

இரண்டு அங்கிகள் கொண்டவர், இல்லாதவருக்கு ஒன்றை அளிக்க வேண்டும்! உண்ண இரைச்சி மிகுதியாய் உள்ளவர், இல்லாதவருக்குப் பகிர்ந்து கொள்ள வேண்டும்! உணவுச்சாலை நடத்துவோர், தகுதிக்கு ஏற்பப் பிறரிடம் பெற்றுக் கொள்வீர்! படை வீரர் யாருடனும் வன்முறையில் நடக்காதீர்! யார் மீதும் பொய்க் குற்றம் சாட்டாதீர்! உமக்குக் கிடைக்கும் ஊதியத்தில் திருப்பி அடைவீர்! நிச்சயம் நீரை ஊற்றி உமக்கு நான் புனித நீராட்டுவேன். ஆனால் என்னை விடப் பராக்கிரசாலி ஒருவர் வரப் போகிறார்! அவரது காலணிக் கயிறைக் கூட அவிழ்க்கத் தகுதி யற்றவன் நான்! தனது புனித ஆன்மீக சக்தியால், அவர் உமக்குத்

தீயால் புனித நீராட்டப் போகிறார். ‘

புனித நீராட்டி: ஜான் போதகர்.

நாடக நபர்கள்:

ஏரோத் ஆன்டிபஸ் (Herod Antipas) : ஜுடேயா (Judea) நாட்டில் காலிலீயின் ஆளுநர் [Governor of Galilee

ஏரோதியாஸ் (Herodias): ஏரோத் மன்னின் மனைவி

ஸாலமி இளவரசி: ஏரோதியாஸின் முதல் கணவன் ஃபிளிப்புக்குப் (Philip) பிறந்த புதல்வி.

(ஃபிளிப்: ஏரோத் ஆன்டிபாஸுக்கு மாற்றாந்தாய் சகோதரன்)

ஜொஹானன் (Johanan): ஜான், புனித நீராட்டி

ஏரோதியாஸின் சேடியர், காவலர்

ஸிரியா வாலிபன் : ஸாலமி மீது தீராக் காதல் கொண்டவன்

சேனைக் காவலர்.

கப்பதோசியன் : (Cappadocian) ஓரினத்தைச் சேர்ந்தவன்.

நியூபியன் : (Nubian) வேறோர் இனத்தைச் சேர்ந்தவன்.

நேரம்:

அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை. முழுச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.

காட்சி அமைப்பு:

ஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம். கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை. வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது. ஏரொத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் மாளிகையில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரையாடிக் கொண்டிருக்கிறாள். அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள். இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொஹானன் [ஜான் புனித நீராட்டி] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார். மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள். ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக்கிறான். இடை இடையே சிறையில் கிடக்கும் ஜொஹானன் உரக்கக் குரல் கேட்கிறது.

****

முதற் காவலன்: முடியாது! முடியவே முடியாது! ஏரோத் மன்னர் தடை போட்டிருக்கிறார், ஜொஹானனை யாரும் பார்க்கக் கூடாதென்று! மீறினால் சவுக்கடி விழும், தெரியுமா ? எதற்காக நீ ஜான் போதகரைப் பார்க்க விரும்புகிறாய் ?

கப்பதோசியன்: போதகரை நான் காண வேண்டும். கடவுளைப் பற்றி நான் அவருடன் உரையாட வேண்டும்.

முதற் காவலன்: உன்னாசை நிறைவேறாது! மெதுவாகப் பேசு! நீ உரக்கப் பேசினால், உன்னைப் பிடித்துக் கொண்டு ஜொஹானன் கிடக்கும் சிறையில் தள்ளி விடுவார்! எச்சரிக்கை உனக்கு!

கப்பதோசியன்: நல்ல ஆலோசனை! அப்போது சிறைக்குள்ளே ஜொஹானன் கூட, நான் பேசத் தடை யிருக்காதல்லவா ? அவரிடம் கடவுளைப் பற்றி உரையாட வேண்டும்! சிறைக்குப் போனாலும், ஒரு போதகரின் நிழல் படுவதில் பூரிப்படைவேன்! அவரது அருள் வாக்கு செவியில் படுவதைப் புண்ணியமாகக் கருதுவேன்.

அவரது நெறி மொழிகள் என் ஆத்மாவைக் கழுவினால், அதுவே எனக்குப் பாப மன்னிப்பாகும்.

முதற் காவலன்: நீ சாகும் வரை அவரோடு பேசலாம்! அல்லது ஜொஹானன் சாகும் வரை அவரோடு நீ உரையாடலாம்! கைகளைக் கட்டினாலும் உன் வாயைக் கட்ட மாட்டார்! கவலைப் படாதே. மேலும் ஜொஹானன் பேச ஆரம்பித்தால், உமது செவிகளுக்குத்தான் வேலை! வாயிக்கு வேலை யில்லை! ஆனால் உன்னாசை நிறைவேறாது! சிறைக்குப் போக வாய்ப்பில்லை உனக்கு!

ஸிரியா வாலிபன்: ஸாலமியின் மீன்விழிகள் கீழேதான் ஏனோ வலை விரிக்கும்! அவளது விழிக் கணைகள் ஒரே ஒருமுறை மேல் நோக்கி என் நெஞ்சைக் காயப் படுத்தின! அந்தக் காயத்திற்கு அவள்தான் மருந்திட்டு ஆற்ற வேண்டும்! ஸாலமியின் பட்டாம் பூச்சி விழிகள் படபடக்கும் போது, என்னிதயம் ஏனோ தடதட வென முரசடிக்கிறது!

ஏரோதியாஸின் காவலன்: வாலிபச் சிங்கமே! அந்தப் புள்ளி மான் மீது ஆசை வைக்காதீர்! அது பேராபத்தை உண்டாக்கும்! அவளது தீக்கண் பார்வை மனிதரை எரிப்பவை! உமது தீராக் காதல் ஒருதலைக் காதல்! ஒருதலைக் காதல் உனக்குத் தலைவலி தருவது! உனது உறக்கத்தைக் கெடுப்பது! உனது உயிரைச் சிறுகச் சிறுக உண்பது! உடலை எலும்புக் கூடாய் உருக்குவது! உன்னைப் போல் பலரது உயிர்களை உருக்கி விட்டவள் ஸாலமி! உன்னுயிரை அவளிடம் இழந்து விடாதே! ஸாலமி காதலிக்கத் தகுதி யற்றவள்! உன் கண்களால் அவளைத் தீண்டாதே! அவள் நிற்கும் திசையைக் கண்ணால் நோக்காதே!

ஸிரியா வாலிபன்: ஸாலமி ஓரிளம் மங்கை! வாலிபன் ஒருவனின் காதலுக்கு உகந்தவள்! அந்த ஆடவன் ஏன் நானாக இருக்கக் கூடாது ? இராப்பகலாக நெஞ்சில் கனலைக் கொட்டித் தூக்கத்தைக் கெடுக்கிறாள்!

கப்பதோசியன்: என்ன பயங்கரமான சிறை அது ? மிருகங்கள் கூட வாழத் தகுதியற்ற குகைக் கூண்டு!

உயிரோ டிருப்பவர் தானாகச் சாவதற்கு ஏற்ற நச்சுச் சிறை அது!

இரண்டாம் காவலன்: மெய்யான வாசகம் அது! சாவதற் கேற்ற நச்சுச் சிறை! நல்ல பெயர்! உனக்குத் தெரியாது! ஏரோதின் மூத்த சகோதர் ஃபிளிப் அங்குதான் சிறைப்பட்டுக் கிடந்தார்! எத்தனை வருடம் தெரியுமா ? பனிரெண்டு வருடங்கள்! அவர் மகாராணி ஏரோதியாஸின் முதற் கணவர்! பேரழகி ஸாலமியின் அருமைத் தந்தை! ஆனால் அந்தப் பாழும் சிறை அவரைக் கொல்ல வில்லை தெரியுமா ?

கப்பதோசியன்: யார் ? ஏரோதின் சகோதரரா ? ஏரோதியாஸின் முதற் கணவரா ? அவரின்று உயிரோடில்லையா ? எப்படிச் செத்தார் என்று விளக்கமாகச் சொல்! பரிதாபப் படுகிறேன்.

இரண்டாம் காவலன்: பனிரெண்டு வருட முடிவில் என்ன செய்தார் தெரியமா ? அவரது கழுத்தை நெரித்துக் கொன்றான், ஒரு காட்டுமிராண்டி!

கப்பதோசியன்: [வருத்தமுடன்] அட பாவிகளா ? கழுத்தை நெரித்தா கொலை செய்தான் ? யார் அந்த பயங்கரவாதி ?

இரண்டாம் காவலன்: [சிறைக்கருகே நின்ற ஒரு நீக்ரோவைக் காட்டி] அதோ நிற்கிறானே! அந்தக் கறுப்புக் குடிகாரன்! காட்டுமிராண்டி! அவன்தான் ஸாலமியின் தந்தையைக் கொன்றவன்! ஏரோதியாஸின் முதற் கணவரைக் கொன்றவன்!

கப்பதோசியன்: அந்தக் கோர மரணம் மகாராணிக்குத் தெரியமா ? சகோதரர் ஏரோதுக்கு அந்தப் பயங்கரக் கொலை தெரியுமா ?

இரண்டாம் காவலன்: [காதில் குசுகுசுத்து] ஏரோதுதான் தன் முத்திரை மோதிரத்தை அனுப்பியவர்.

கப்பதோசியன்: என்ன ? முத்திரை மோதிரமா ?

இரண்டாம் காவலன்: அதுதான் மரண மோதிரம்! பயங்கரவாதிக்கு மரண மோதிரத்தை அனுப்பிச் சகோதரனைக் கொல்ல ஏற்பாடு செய்தது, ஏரோத் மன்னர்தான்! மனைவி ஏரோதியாஸ் அதற்கு உடந்தை!

கப்பதோசியன்: என்ன பயங்கரக் கொலை அது ? என்ன பயங்கர சகோதரர் ? என்ன பயங்கர மனைவி ? என்ன பயங்கர உலகம் ?

[ஸாலமி அப்போது எழுந்து படியேறி மாடிக்கு வருகிறாள்]

ஸிரியா வாலிபன்: பாருங்கள், எழிலரசி ஸாலமி எழுந்து நகர்கிறாள்! விருந்து மாளிகையை விட்டுக் கோபத்துடன் வெளியேறுகிறாள்! முகத்தைப் பார்த்தால் ஓர் கொந்தளிப்பு தெரிகிறது! படியில் ஏறி நம்மை நோக்கித்தான் வருகிறாள்! முகம் மிகவும் ஏனோ வெளுத்துப் போயிருக்கிறது ? ஒருபோதும் இப்படி முகம் தெளிவற்றுச் சோகமாய் நான் கண்டதே யில்லை!

ஏரோதியாஸின் காவலன்: வாலிபனே! ஸாலமியை உற்று நோக்காதே! அவளுக்குப் பிடிக்காது! அவளது அன்னைக்கும் பிடிக்காது! அவளை நேசிப்பவர் ஆபத்தில் சிக்கிக் கொள்வார்!

ஸிரியா வாலிபன்: ஸாலமி ஒரு வெள்ளி மலர் போல வீசுகிறாள் ஒளியை! முறிந்து விழப் போகும் வெண் புறாவைப் போல அவள், மெல்ல நடந்து வருகிறாள்! புல்லின் இலை மெல்லிய தென்றலில் நடுங்குவது போல் தெரிகிறது எனக்கு!

[ஸாலமி மாடியில் வந்து நின்று பேசுகிறாள்]

ஸாலமி: நான் தங்கப் போவதில்லை இங்கே. நின்று பேச எனக்கு நேர மில்லை. என்னையே பார்க்கிறார், ஏரோத் மன்னர்! ஏனென்று தெரியவில்லை! அருவருப்பாய் உள்ளது எனக்கு! கீழே என்னால் நிற்க முடிய வில்லை! பூச்சி போன்ற மன்னர் விழிகள் என்னை நோக்கும் போது, என் மேனியில் புழு ஏறுவது போல் புல்லரிப்பு உண்டாகிறது! உற்று நோக்கும் அவரது முட்டைக் கண்கள் ஊசி முனை போல் என்னுடலைக் குத்துகின்றன! வியப்பாக உள்ளது எனக்கு! என் அன்னையின் கணவர் எனக்குத் தந்தை போன்றவர்! என் தந்தையின் தனயன் எனக்குச் சிற்றப்பன்! ஆனால் கனிவாய்ப் பார்க்க வேண்டிய கண்கள் ஏன் கழுகாய் மாறி என்னை வட்டமிட்டுச் சுற்றுகின்றன ? இமை தட்டாமல் அவரது கண்கள் ஏன் வேட்டைக்குக் கிளம்பி விட்டன ? குள்ள நரி ஆட்டை விரட்டுவது போல், அவர் விழிகள் என்னைத் துரத்துகின்றன. அந்தப் பார்வையின் அர்த்தம் எனக்குத் தெரியவில்லை! கீழே நான் நானாக நிற்க முடிய வில்லை! மேலே நான் மூச்செடுக்க முடிகிறது! உள்ளத்தில் எனக்கோர் ஐயம் எழுகிறது. அது உண்மையாக இருக்குமோ ?

ஸிரியா வாலிபன்: [ஸாலமி அருகில் கனிவுடன் வந்து] ஸாலமி! நிலவையும் மிஞ்சி நீ மிக்க ஒளி வீசுகிறாய்! பொங்கிவரும் பெருநிலவும் உன் முன் மங்கித்தான் தோன்றுகிறது! நீ வந்த பிறகு இந்த மாடித் தளத்தில் பளிச்சென வெளிச்சம் தெரிகிறது. வாலிபன் ஒருவன் உன் வாசலில் வீணை மீட்டிய வண்ணம் நின்று கொண்டிருக்கிறான்!

ஸாலமி: எங்கே அந்த வாலிபன் ? வீணையின் குரல் என் காதில் படவில்லையே! நான் அவனைப் பார்க்க வேண்டும்! மாடி மீது வீசும் இளந் தென்றல் இனிமையாக உள்ளது! முள்ளம்பன்றிகளின் பார்வையிலிருந்து விடுதலையாகி வந்திருக்கிறேன்! இங்கே நான் மூச்செடுக்க முடிகிறது! துள்ளிடும் தென்றல் என் மேனியைத் தழுவி இன்னிசை பாடுகிறது! ஜெருசலப் பகுதிலிருந்து வந்த யூதர்கள் கீழே ஆடம்பரச் சடங்குகள் வேண்டு மென்று சண்டை யிட்டு ஒருவரை ஒருவர் பிய்த்துக் கிழிக்கிறார்! காட்டுமிராண்டிகள் குடித்துக் கொண்டு ஒயினை ஒருவர் வாயில் ஒருவர் ஊற்றிக் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறார்! ஓவியப் பொம்மை போன்ற கிரேக்கர் சிலைகள் போல் மெளனமாய் அமர்ந்துள்ளார்! எகிப்தியர் நீண்ட அங்கிகளை அணிந்து கொண்டு பூதங்களைப் போலத் திரிகிறார்! திமிர்பிடித்த ரோமானியர் கெட்ட வார்த்தைகளில் யாரையோ திட்டிக் கொண்டிருக்கிறார்! ஏதோ தாங்கள் பெரிய செல்வக் கோமான் போல, நெஞ்சை நிமிர்த்திய வண்ணம் நிற்கிறார்! அவரைப் பார்க்கவே அருவருப்பாக உள்ளது எனக்கு! முற்றிலும் வெறுக்கிறேன் ரோமானியரை!

ஸிரியா வாலிபன்: [கையில் வீணையை எடுத்து] இளவரசி! இந்த ஆசனத்தில் அமர்வீரா ? நான் வீணை வாசிக்கிறேன். இந்த வீணையின் இசை உங்கள் எழிலை மிகையாக்கும்!

ஏரோதியாஸின் காவலன்: இளவரசியிடம் அப்படி நீ பேசாதே! இளவரசியை வைத்த கண் வாங்காமல் அப்படிப் பார்க்காதே! ஏதோ இன்று பெரும் இன்னல் நேரப் போவதாய்த் தோன்றுகிறது எனக்கு!

ஸாலமி: [வானில் நிலவை உற்று நோக்கி] நிலவைப் போல் நானும் மேக மண்டலத்தில் மிதக்க வேண்டும்! பொங்கும் நிலா எப்படிப் பொலிவுடன் காணப் படுகிறது இன்று ? தங்க நாணயம் போல் தகதக வென்று மிளிர்கிறது, பொங்கு நிலா! வானத் தெப்பத்தில் மிதக்கும் மோன நிலா உள்ளத்தில் தேனைப் பொழிகிறது! வெண்ணிலா தூய்மையான ஒரு கன்னியாகத் துலங்குகிறது! நிச்சயம் நிலா ஒரு பச்சைக் கன்னிதான்! ஆம் அதில் சற்றேனும் ஐயமில்லை! நிலவும் என்னைப் போலொரு கன்னியே! என்னைப் போல் நிலவும் கறையற்ற ஓர் கன்னியே! நிலவும் என்னைப் போல் ஆடவருக்குத் தன்னை அர்ப்பணிக்காத ஓரிளம் கன்னியே!

[கீழே சிறையிலிருந்து மறுபடியும் ஜொஹானன் கூக்குரல் முழங்கிறது]

ஜொஹானன்: [உரத்த குரலில்] யாவரும் கேளீர்! அதோ! புதுப் போதகர் உம்மை நோக்கி வருகிறார்! கடவுளின் புத்திரர் அருங்கே வந்து விட்டார்! மனிதக் குதிரைகள் [Centaurs (A Horse with a Man ‘s Head)] நதிக்குள்ளே ஒளிந்து கொள்ளும்! கடற் தேவதைகள் [Nymphs (Sea Goddesses)] காட்டு வனாந்திர மரங்களில் ஒளிந்து கொள்ளும்! மானிடருக்குப் புனித நீராட்டத் தகுதி யுடையர் அவர் ஒருவரே!

ஸாலமி: [வியப்போடு] யாரது அப்படி உரக்கப் பேசுவது ? யார் வரப் போவதாய் அறிவிக்கப் படுகிறது ?

இரண்டாம் காவலன்: ஓ! அவர்தான் போதகர்! சிறைக்குள் மன்னர் அடைத்திருக்கும் ஜொஹானன்! ஏரோத் மன்னருக்கு அச்சம் ஊட்டும் ஜான், போதகர்! ஏரோதியாஸ் தூக்கத்தைக் கெடுக்கும் ஜான் போதகர்! அவர் புனித நீராட்டிய ஏசுப் போதகர் வரப் போவதை அறிவிக்கிறார்!

ஸாலமி: [ஆர்வமுடன்] நான் பார்த்ததே யில்லை அந்தப் போதகரை! காண வேண்டும் அந்த ஞானியை!

ஸிரியா வாலிபன்: வேண்டாம் ஸாலமி! வேண்டாம்! அவரை நீ கண்ணால் காணக் கூடாது! பாபம் செய்தாவள் நீ! பாபம் செய்தவர்தான் அவரைப் பார்க்க வேண்டும்! நீ பார்த்தால், உன்னைப் பாபங்கள் தீண்டிவிடும்! அவர் கண்பட்டால் நீயும் பாபம் செய்யத் துணிவாய்!

(தொடரும்)

[காட்சி-1, பாகம்-4 அடுத்த வாரத் திண்ணையில்]

****

தகவல்:

1. Salome from The Plays of Oscar Wilde, The Modern Library, New York

2. The Greatest Man Who Ever Lived By: Watch Tower Bible (1991)

3. The Desire of Ages By: Ellen G. White

4. The Story of Jesus By: Reader ‘s Digest (1993)

5. Who is Who in the Bible, An Illustrated Biographical Dictionary By Reader ‘s Digest (1994)

6. The New Testament & Psalms, Placed By the Gideons.

7. The Original New Testament By Hugh J. Schonfield (1998)

8. Encyclopaedia of Britannica [1978]

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan December, 27 2005]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts