மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 2

This entry is part [part not set] of 28 in the series 20051230_Issue

ஜோதிர்லதா கிரிஜா


“அம்மா! சாஸ்திரி மாமாக்கு கூஜாவில தீர்த்தம் தறியா ?” என்றவாறு வந்து நின்ற துர்க்காவைப் பார்த்துச் சிரித்த காவேரி, “ஆயுசு நூறு சாஸ்திரிகளுக்கு. இந்தா,” என்று கூஜாவில் குளிர்ந்த நீரும் தம்ளரும் கொடுத்தனுப்பிய பிறகு, கதவிடுக்கு வழியே எட்டிப் பார்த்தாள் புன்னகையுடன்.

கூஜாவை எடுத்துப் போய்த் துர்க்கா வைத்ததுமே, “நீ போய் உங்கம்மாக்கு அடுக்களையிலே ஏதாவது ஒத்தாசை பண்ணு, போ!” என்று பத்மநாபன் சொன்னது கேட்டதும் காவேரியின் முகத்துப் புன்னகை அகலமாயிற்று.

அடுக்களைக்கு வந்த துர்க்காவிடம், “நீ இனிமே அம்மாக்குக் கூடமாட ஒத்தாசை பண்ணணும்டி, துர்க்கா. நாளைக்கு உன்னோட புக்காத்து மனுஷா, ‘பொண்ணை வளத்திருக்கா, பாரு, தடித்தாண்டவராயி மாதிரி’ அப்படின்னு என்னைப் பத்திப் பேசப்படாது. வா, வா. மூணு வாழைக்காயை எடுத்துத் தோல் சீவு, பாப்போம்!” என்ற அம்மாவைப் பார்த்துத் துர்க்காவுக்குச் சிரிப்பு வந்தது. ‘ஏதொ எனக்குக் கல்யாணம் நிச்சியமே ஆயிட்ட மாதிரி பேசறாளே இந்த அம்மா!’

“அருவாமணையை முதல்ல அலம்பிக்கோ.”

“சரிம்மா.. .. அய்யோ!”

“என்னடி ? விரல்ல கிரல்ல வெட்டிண்டுட்டியா ?”

“ஆமாம்மா.”

“மாமியாராத்துல போய் இப்படி விரலை வெட்டிண்டா என்ன சொல்லுவா, தெரியுமோல்லியோ ? வேலையிலேர்ந்து தப்பிக்கிறதுக்காக விரலை வேணும்னே வெட்ட்ண்டுட்டேம்பாடி.”

துர்க்காவை உட்காரப் பணித்துக் காயத்துக்கு மருந்து போட்டபின், காவேரி தானே காயைத் தோல்சீவலானாள். காய்களின் மீது ஒட்ட வைத்திருந்த ரிப்பனை இழுப்பது மாதிரி அம்மா பரபரவென்று தோலை நீள நீளமாய் நீக்கியது துர்க்காவை அயர்த்தியது.

“சாம்பாருக்குப் போட்ற காயை நீள நீளமாத்தானே நறுக்கணும் ?”

“பரவால்லே. சமத்துதான்!”

“அதான் சாம்பார் அடிக்கடி பண்றியே! இது கூடத் தெரியாதாக்கும்!”

அப்போது, “காவேரி! மோர் ஒரு தம்ளர் எடுத்துண்டு வா,” என்று பத்மநாபனின் குரல் இரைந்து ஒலிக்க, காவேரி சற்றுப் பொறுத்து மோரை எடுத்துக்கொண்டு போய், சாஸ்திரிகளுக்கு முன்னால் முக்காலியில் வைத்துவிட்டு, “துர்க்காவுக்கு ஒரு நல்ல வரனாப் பாத்துச் சொல்லுங்களேன்!” என்றாள்.

மோரை எடுத்து வாய் வாயாகப் பருகி முடித்துவிட்டு வாயைத் துடைத்துக்கொண்ட அவர், “நான் வந்ததே அதுக்குத்தானேம்மா ? வத்தலப் பாளையத்துல ஒரு நல்ல வரன் இருக்கு. பையன் அந்த ஊர்ப் பள்ளிக்கூடத்துல ஒம்பதாவது படிச்சிண்டிருக்கான். பதினஞ்சு வயசு ஆறது. பணக்காரக் குடும்பம். எக்கச்சக்கமான சொத்து, சுகம். பையன் வேலைக்குப் போக வேண்டிய அவசியமே இல்லாத குடும்பம். ஆனா, அவனென்னவோ மெட்றாசுக்குப் போய் பிசினஸ் பண்ணணும்கிற ஐடியாவில இருக்கானாம்.. ..”

“பக்கத்து ஊராயிருக்கு. நல்ல சம்பந்தம்கறேள். அப்பப்ப கொழந்தையைப் போய்ப் பாத்துக்கலாம். ரொம்பச் செய்யணும்னு எதிர்பார்ப்பாளோ ?”

“பின்னே ? அந்தப் பையனுக்கு நீ, நான்னு ஏகப்போட்டி. ஆனா, என்னோட ப்ரிஃபரன்ஸ் நம்மாத்துக் குட்டிக்குத்தான் – அதாவது முக்கியத்துவம்.. .. நான் கொஞ்சம் படிச்சிருக்கேன். பத்மநாபன் அளவுக்கு இல்லே. ஏதோ ஒம்பதாவது வரையில படிச்சிருக்கேன். அதான் அப்பப்ப இங்கிலீஷ் வார்த்தை வந்துட்றது!” என்று கூறிவிட்டு, காவேரியைப் பார்த்துப் பெருமையாய்ச் சிரித்தார்.

பத்மநாபன் சிரித்துக்கொண்டார். ரங்கநாத சாஸ்திரிகள் தமக்கும் இங்கிலீஷ் கொஞ்சம் தெரியும் என்பதைக் காட்டிக்கொள்ளுவதற்காக அவ்வப்போது அம்மொழிச் சொற்களை உதிர்ப்பார். சில நேரங்களில் முழு வாக்கியங்களையே -அபத்தமான இலக்கணத்துடன்- பேசிவிடுவார். இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த வெள்ளைக்காரனின் மொழியில் பேசுவது கவுரவம் என்கிற எண்ணமுடையவர்.

“ஜாதகம் பொருந்தணுமே ?”

“ஜாதகம் பொருந்தாம நான் இங்க வந்திருப்பேனா ? ‘மேட் டு ஈச் அதர்’ னு இங்கிலீஷ்ல சொல்லுவாளொல்லியோ ? அந்த அளவுக்குப் பொருந்தியிருக்கு.”

“ஓ! மேட் ஃபார் ஈச் அதர் (made for each other) ங்கிற அளவுக்குப் பொருந்தியிருக்குன்னா உடனே போய்ப் பாத்துட்டு வர வேண்டியதுதான்!” என்ற பத்மநாபன் ‘ஃபார்’ (for) என்பதற்குப் பதிலாய் ‘டு’ (to) எனச் சாஸ்திரிகள் செய்த தப்பான சொல்லை நாசூக்காய்த் திருத்திய பின், “நீங்களே ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்லுங்களேன்,” என்றார்.

“நாளைக்கே போலாம் நீங்க. காலம்பர ஒம்பது மணிக்கெல்லாம் போயிடுங்கோ. குட்டியோட ஜாதகத்தையும் எடுத்துண்டு போங்கோ. பொருந்தி யிருக்குன்னு நான் சொன்னதாச் சொல்லுங்கோ. எம் மேல அவாளுக்கு ரொம்பவே ரெஸ்பெக்ட்! வத்தலப்பாளையம் அக்கிரகாரம் தெரியுமோல்லியோ ?”

“பேஷாத் தெரியும்,” என்ற பத்மநாபன் இடுப்பிலிருந்து ஒரு பத்து ரூபாய்த் தாளை எடுத்து அவரிடம் நீட்ட, அவர் அதைப் பெற்றுக் கண்களில் ஒற்றிக்கொண்டார்.

“அப்ப நான் வரட்டுமா, பத்மநாபா ? அம்மா, கொழந்தே! வறேன். இனிமே உன்னை நால் கொழந்தேன்னு கூப்பிடக் கூடாது. உன்னோட கொழந்தைக்குக் கல்யாணம் பண்ணப் போறே சீக்கிரமே!”

காவேரிக்குச் சிரிப்பு வந்தது. ரங்கநாத சாஸ்திரிகள் தமது இடக்கையைத் தரையில் ஊன்றி, “அப்பனே, ஷண்முகா, நமச்சிவாயம், அம்மா, காமாட்சி!” என்று முனகியபடி மெதுவாக எழுந்துகொண்டார்.

அவர் போன பிறகு பத்மநாபன் உள்ளே வந்தார்.

“நாளைக்கே வத்தலப்பாளையம் போகணும், காவேரி. பெரிய இடம்கறார் சாஸ்திரிகள். என்ன கேப்பாளோ, என்னமோ ?”

“நல்ல இடம்கிறப்ப, எப்படியாவது செஞ்சுட வேண்டியதுதான். என்னோட நகைகள் அம்பது பவுன் தேறும். கடனோ உடனோ வாங்கி நடத்த வேண்டியதுதான்.”

“ஜமாய்ச்சுடலாண்டி, காவேரி!”

“கையிலே எவ்வளவு ரொக்கம் வெச்சிண்ட்ருக்கேள்னா ?”

“அதை யெல்லாம் பத்தி நோக்கென்னடி கவலை, காவேரி ? எல்லாம் நான் பாத்துக்கறேன். நீ போய் உம்பொண்ணைக் கவனி. சமையல் பண்ணக் கத்துக்குடு. வாய்க்கு வழங்கச் சமைக்கிற பொண்டாட்டியைத்தான் புருஷாளுக்குப் பிடிக்கும்.”

“அதான் உங்களுக்கு என்னைப் பிடிக்கிறதா ?”

“அப்படின்னு நான் சொன்னேனா ?”

“அய்யோ! அப்படின்னா, நான் நன்னாச் சமைக்கல்லேன்றேளா ?”

“பரவால்லே. புத்திசாலிதான். புரிஞ்சுக்கறியே!”

“அம்மா! அம்மா! கறி தீயறது. சீக்கிரம் வா. என்னால கிளற முடியல்லே. கை சுட்றது.”

“இதுதான் நன்னாச் சமைக்கிற லட்சணமாக்கும்!” என்று சிரித்த பத்மநாபனுக்குப் பதில் சொல்லாமல் காவேரி அடுக்களைக்கு விரைந்தாள்.

அப்போது வாசற்பக்கம் நிழலாடியது.

“யாரு ?” என்றார் பத்மநாபன்.

“நாந்தேன். வள்ளி, சாமி.”

பத்மநாபன் சட்டென்று எழுந்துகொண்டார். இதற்குள் சமையலறையிலிருந்து காவேரியும் எட்டிப் பார்த்தாள். வந்திருந்தது ஒரு பெண்பிள்ளை என்பது தெரிந்ததே ஒழிய இன்னாரென்று தெளிவாய்த் தெரியவில்லை. எனவே அவள் வெளியே வந்தாள்.

மிக விரைந்த நடையில் இரேழியை யடைந்த பத்மநாபன், “என்னம்மா இது ? போன மாசந்தானே வந்து பணம் வாங்கிண்டு போனே ? அடிக்கடி வந்தா எப்படிம்மா ? இது நோக்கே நியாயமா யிருக்கா ?” என்று அடிக்குரலில் அந்தப் பெண்பிள்ளையை அதட்டாத குறையாகப் பற்களைக் கடித்தவாறு வினவியவாறே பின்னால் திரும்பிப் பார்த்தார்.

இதற்குள் காவேரி அங்கு வந்துவிட்டாள்.

-தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation

author

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts