மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 1

This entry is part [part not set] of 34 in the series 20051223_Issue

ஜோதிர்லதா கிரிஜா


ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு கதை இருக்கிறதாமே ? அதாவது அவனது சொந்தக் கதை. இவ்வாறு ஒரு பிரபல எழுத்தாளர் சொன்னது இந்த நேரத்தில் எனக்கு மிகவும் அதிகமாகவே நினைவுக்கு வருகிறது. சொல்லிக்கொள்ளக்கூடிய எண்ணங்கள், நிகழ்வுகள், சொல்லக்கூடாத எண்ணங்கள், நிகழ்வுகள் இவற்றை யெல்லாம் ஒவ்வொரு மனிதனும் ஒரு தன்வரலாற்றின் வடிவிலோ அல்லது வேறு ஒருவர் சொல்லுவது போன்ற வடிவிலோ எழுதினால், அது நிச்சயகாக ஒரு சுவையான நெடுங்கதையாக அமையத்தான் செய்யும்.

இப்படி நினைத்துப் பார்த்த போது என்னுடைய கதையையேதான் எழுதினால் என்ன என்கிற எண்ணம் வந்தது. நம் நாட்டில் தன் வரலாறு எழுதுவதற்கான முழுத் தகுதியும் படைத்திருந்த ஒரே மனிதர் மகாத்மா காந்திதான்! பொய்களைச் சொல்லியும், உண்மைகளை மறைத்தும் தம்மைத் தாமே உயர்த்திக் கொள்ளாதவர். எனினும் இந்தக் கதையில் நான் பொய் எதையும் சொல்லப் போவதில்லை. பிறரைப் புண்படுத்தாமல் எந்தெந்த உண்மைகளைச் சொல்ல முடியுமோ அவற்றை மட்டுமே இதில் சொல்ல எண்ணம்.

பிறர் என்று நான் குறிப்பிடுவது என் வாழ்க்கையோடு சம்பந்தப் பட்டவர்களை மட்டுமன்று. மொத்தத்தில் தாங்க முடியாத துன்பங்களைத் தாண்டிவந்தவள் என்கிற முறையில் நான் கூறப் போகும் சில உண்மைகள் அவை போன்ற துன்பங்களை இன்றளவும் பிறர்க்கு இழைத்துக் கொண்டிருக்கும் ஆண்-பெண்களை யெல்லாம் புண்படுத்தக்கூடும்தான்! ஆனால் அதற்கு நான் என்ன செய்வதாம் ?

சரி. இந்தப் புலப்பத்தை இத்துடன் நிறுத்திக் கொள்ளூகிறேன். எனக்கு எண்பத்தெட்டு வயது ஆகிவிட்டது. அதாவது, நான் பிறந்த ஆண்டு 1916. ‘அய்யே! அப்படியானால் இது ஒரு கிழவியின் கதை!’ என்று யாரும் சுவாரசியம் இழக்க வேண்டாம். ஏனெனில், இப்போதைய கிழவியாகிய நான் ஒரு காலத்து இள மங்கை என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம். நான் சொல்லச் சொல்ல இந்தக் கதையை எழுதப் போவதும் ஓர் இள மங்கைதான். தவிர, எனது கதை நான் பிறந்த பிறகு எனக்கு நினைவு தெரியத் தொடங்கியதுமே ஆரம்பித்து விடுவதால், இந்தக் காலத்து வாசகர்கள் எதிர்பார்க்கும் காதல், காமம், கோபம், எதிர்பாராத திருப்பங்கள், சண்டைகள், துயரங்கள், போராட்டங்கள் எல்லாமே இந்தக் கதையில் உண்டு. எனவே, ஒரு கிழவியின் கதையில் என்ன இருக்கப் போகிறது என்று யாரும் என்னை ஓரங்கட்ட வேண்டாமென்று கேட்டுக்கொள்ளுகிறேன்.

. . . பக்கத்து வீட்டுப் பெண் மாலதி. திருமணம் ஆனவள். ஒரு பெண்ணும், ஓர் ஆணுமாய் இரண்டே குழந்தைகள். பெண்தான் மூத்தவள். எட்டாம் வகுப்பில் படிக்கிறாள். ஆண் குழந்தை நான்காம் வகுப்பில் இருக்கிறான். இன்றைய எனது அந்தஸ்து, சமுதாய நிலை ஆகியவற்றின் தாக்கத்தால் சில தடவைகள் ஏதேதோ காரியங்களுக்காக அவள் என் வீட்டுக்கு வந்து என்னைப் பார்த்துப் பேசுவதுண்டு. அந்தச் சிறு பழக்கந்தான். ஏதோ ஒரு சமயம் ஒரு பெண்ணின் பிரச்சினை சம்பந்தமாய் அவள் அந்தப் பெண்ணுடன் என்னைப் பார்த்த போது, என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை அவர்களுடன் நான் பகிர்ந்துகொள்ள நேர்ந்தது. அந்தப் பெண்ணுக்குத் தன்னம்பிக்கை யூட்டுவதற்காக நான் சொன்னது. அதற்குப் பிறகும் இரண்டொரு நிகழ்வுகளின் பகிர்தலுக்குப் பிறகுதான் மாலதி, “மேடம்! நீங்க ஏன் உங்க சுயசரிதையை எழுதக் கூடாது ? அந்தக் காலத்துலேயே ரொம்ப தைரியமா நடந்திருக்கீங்க. நீங்க சொன்ன சில விஷயங்கள்லேருந்து உங்கம்மா உங்களை விடவும் துணிசல்காரங்கன்னு தோணுது. உங்க வாழ்க்கை வரலாற்றைப் படிக்கிறதால இந்தக் காலத்துப் பொண்ணுங்களுக்கு நிறைய விஷயங்கள், பாடங்கள் தெரியவரும். துணிச்சல், தன்னம்பிக்கை இவையெல்லாமும் வரும். இந்தக் காலத்துப் பெண்கள் அனுபவிக்கத் தொடங்கி யிருக்கிற சுதந்திரங்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் அந்தக் காலத்துப் பெண்கள் கொடுக்க நேர்ந்த விலைகள் பற்றியும் தெரியும். என்ன சொல்றீங்க ?” என்றாள்.

அந்தக் கணத்தில்தான் என் கதையை எழுதும் எண்ணம் என்னுள் கிளர்ந்தது. நான் வியப்போடு அவளைப் பார்த்தேன். அதுகாறும் அப்படி ஓர் எண்ணம் எனக்கு வராதது பற்றிய வியப்பும் அடைந்தேன்.

“சுயசரிதையை எழுதுற அளவுக்கெல்லாம் நான் பெரிய ஆள்ங்கிற எண்ணம் எனக்கு இல்லைன்னாலும், எங்கம்மாவுடைய வாழ்க்கை என்னுடையதைக் காட்டிலும் அதிகச் சோதனைகளும் சுவாரசியங்களும் நிறைஞ்சதுங்கிறதுனால, என்னோட கதையை எழுதுற சாக்கில அவங்களைப் பத்தியும் நிறையவே சொல்லாலாமேங்கிறதுனால, எழுதினா என்னன்னு நீ சொன்னதைக் கேட்டதும் எனக்கே தோண்றது. ஆனா, அதுக்கு எனக்கு ஒரு ஆள் வேணும். ஒண்ணு, நான் சொல்லச் சொல்ல எழுதணும். இல்லேன்னா, நன் என் கதையை அப்பப்ப சொல்றதைக் கண்ணு, காது, மூக்கெல்லாம் வச்சு சுவாரசியமா எழுதத் தெரிஞ்ச யாரோட உதவியாவது எனக்கு வேணும். . .”

நான் முடிப்பதற்குள் மாலதி குறுக்கிட்டாள் : “ உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம், மேடம். ஏன்னா, நானே எழுதுவேன். ஒரு காலத்துல நான் எழுத்தாளரா இருந்தவதான். கல்யாணத்துக்கு முந்தி சில கதைகள் எழுதி யிருக்கேன். கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் சரிப்பட்டு வரல்லே. நிறுத்திட்டேன்.. .. ..”

“என்ன! சரிப்பட்டு வரல்லியா ? அப்படின்னா ? .. .. என்னம்மா பதில் சொல்லாம இருக்கே ? உங்க வீட்டுக்காரருக்குப் பிடிக்கல்லியா ?”

மாலதி சிரித்தாள். சிரிப்பில் கசப்புத் தெறித்தது: “அதேதான்! கரெக்டா ஊகிச்சுட்டேள். கல்யாணத்துக்கு அப்புறம் வரதட்சிணை எதிர்ப்புக் கதை ஒண்ணு எழுதி அது பத்திரிகையில வந்துடுத்து. அதுக்கு முன்னாடி நான் எழுதினது சாதாரணக் குடும்பக் கதைகள். ஆனா இந்தக் கதை எழுதினதும்தான் அவருக்குக் கடுமையான கோபம் வந்துடுத்து. ஏன்னா, அவரும் வரதட்சிணை வாங்கினவர். ‘இனிமே பேனாவைத் தொடு சொல்றேன். உன் கையையே அடுப்புக்குள்ள சொருகிடுவேன்!’ அப்படின்னாரு. அதான்!”

“அவர்தான் இப்ப இல்லியே உன்னைக் கட்டுப் படுத்துறதுக்கு ? இப்ப எழுதலாமில்ல ?”

“என்னமோ தெரியல்ல, மேடம். அதுக்கு அப்புறம் எனக்கு ஆர்வமே இல்லாம போயிடிச்சு.. .. ஆனா உங்க கதையை எழுதுற சாக்கில அதைப் புதுப்பிச்சுக்கலாமேன்னு ஒரு ஆசை இப்ப திடார்னு வந்திருக்கு. அதான் கேட்டேன்.”

“சரி. முதல்ல நான் உனக்குச் சுருக்கமா என் கதையை எழுதிக் குடுத்துட்றேன். ஆனா அதைச் சுய சரிதையா எழுத வேண்டாம்மா. ஒரு நாவல் வடிவத்துல மாத்தி எழுதிடு. ஒரு நாவலுக்கு உண்டான -அதிகம் பொய் கலக்காத -சுவாரசியங்களைச் சேர்த்து எழுது. நீதான் எழுத்தாளராச்சே! உனக்குச் சொல்லித் தரணுமா ?”

கொஞ்ச நேர விவாதத்துக்குப் பிறகு தன்னிலையில் எழுதுவதை விடவும் படர்க்கையில் எழுதுவதுதான் சரியாக இருக்கும் என்கிற முடிவுக்கு இருவரும் வந்தோம்.

இனி நீங்கள் படிக்கப் போவது அவள் எழுதிய கதையைத்தான்!

.. .. .. .. .. ..

அது ஒரு பட்டிக்காடு. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது மூதுரை. ஆனால் பள்ளிக்கூடம் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று நானறிந்த வரையில் யாரும் சொன்னதாய்த் தெரியவில்லை. அதனாலோ என்னவோ, அந்தச் சின்ன ஊரில் கோவில் இருந்ததே ஒழுய, பள்ளிக்கூடம் இல்லை. வெறும் திண்ணைப் பள்ளிக் கூடந்தான் இருந்தது. அதிலும் அக்கிரகாரத்துக் குழந்தைகள் மட்டுமே படித்தார்கள். குழந்தைகள் என்றால், ஆண் குழந்தைகள். ஐந்தாம் வகுப்பு வரை அதில் படித்துவிட்டு, ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படிக்கப் பக்கத்து ஊருக்குப் போகவேண்டும். அந்த ஊர் மூன்று கல் தொலைவில் இருந்தது. பெண் குழந்தைகளுக்குப் படிப்புத் தேவை யில்லை என்பதே எல்லாருடையவும் ஒருமித்த கருத்தாக இருந்தது

அருமையும் ஆசையுமாய்த் துர்க்காவை வளர்த்து வந்தாலும், பத்மநாபனும் காவேரியும் பொதுவான இந்த விதிக்கு விலக்காக இல்லை. எனவே, பத்மநாபன் அவளைப் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே படிப்புச் சொல்லிக் கொடுத்தார். படிப்பு என்றால், சரித்திரம், பூகோளம், ஆங்கிலம் என்றெல்லாம் இல்லை. தமிழ் எழுதப் படிக்கவும், கணக்குப் போடவும்தான். ஏதோ தபாலில் வரும் கடிதங்களைப் படிப்பதற்கும், பால்-தயிர்க் கணக்கு எழுதுவதற்கும் தெரிந்தால் போதும் என்பதே அவர்களது எண்ணமாக இருந்தது. இவ்வாறான விதிவிலக்குகள் கூட, பெரும்பாலும் பிராமணக் குடும்பங்களில் மட்டுமே இருந்தனர்.

துர்க்கா கணக்குப் போடுவதில் மிகவும் கெட்டிக்காரியாக இருந்தாள். தமது பள்ளிப் பருவத்தில் ஒரு கணக்கைப் போடத் தாம் எடுத்துக்கொண்ட நேரத்தில் பாதியைக்கூட துர்க்கா எடுத்துக்கொள்ளாதது பத்மநாபனை வியப்பில் ஆழ்த்தியது. ஒரு நாள் தன் மனைவியைக் கூவி யழைத்த அவர், “அடியே, காவேரி! நம்ம பொண்ணு கணக்குல மகா கெட்டிக்காரியா யிருக்கா. படிக்க வெச்சா பெரிய கணக்கு மேதையா வருவான்னு தோண்றது. ஒரு கணக்காவது தப்பாப் போடணுமே!.. .. இவளைப் பக்கத்து ஊருக்கு அனுப்பிப் படிக்க வெச்சா என்னா ?” என்றார், ஆர்வமாக.

துர்க்காவின் கெட்டிக்காரத்தனம் காவேரிக்கு உவகையாகத்தான் இருந்தது. ஆனால், அதற்காக ஊர் உலகத்தில் இல்லாத வழக்கமாக அவளால் துர்க்காவைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிப் படிக்க வைப்பது பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

“என்னன்னா சொல்றேள் ? படிக்க வைக்கிறதா! நன்னாருக்கு, போங்கோ. நம்ம ஜாதி வழக்கப்படி பெரியவளாகிறதுக்கு முந்தி மூணு முடிச்சுப் போட்டுத் தள்ளிவிடப் பாருங்கோ. அப்புறம் நாலு பேர் நாலு விதமாப் பேசுவா நம்மைப் பத்தி. என்னத்துக்குன்னா வீண் வம்பு ?” என்றாள் காவேரி, கவலையுடன்.

“அப்படின்னா சொல்றே ? என்னடி காவேரி இது ? எவ்வளவு கெட்டிகாரியா இருக்கா, தெரியுமா ? நீயோ படிக்காத தற்குறி. உங்கிட்டப் போய் இவளைப் பத்திப் பேசறதுல அர்த்தமே இல்லே. ஆனாலும் சொல்லாம இருக்க முடியல்லே. இவளோட அருமை நோக்குத் தெரியல்லே.”

“தெரியாம இல்லேன்னா. நீங்க சொல்றதும் பெருமைப் பட்டுக்குறதும் நேக்கும் சந்தோஷமாத்தான் இருக்கு. ஆனா பொண் கொழந்தையாச்சேன்னா ? காலாகாலத்துல கல்யாணத்தைப் பணி அனுப்ப வேண்டியதுதானே நம்மளோட கடமை ? இவளே பிள்ளைக் கொழந்தையா இருந்தா நான் ஒண்ணும் தடுக்கப் போறதில்லே.”

“நீ என்னடி தடுக்கிறது ? அப்படியே தடுத்தாத்தான் என்ன ? நான் கேட்டுடவா போறேன் ? தவிரவும் இப்படி ஒரு ஆட்சேபணை உன் வாயிலேருந்து வரவா போறது ? பெருமையில அப்படியே பூரிச்சுப் போய் ஆசையாத் தூக்கி முத்தம் கொடுத்திருப்பே. பொண்ணாப் பொறந்து தொலைச்சுட்டாளே இவ!”

“அதேதான்னா! படிக்க வெச்சா நம்மளை இந்த ஊர்க்காரா உண்டு இல்லைன்னு ஆக்கிப்பிடுவா. சொப்பனத்துல கூட அப்படி எல்லாம் நினைக்காதங்கோ. பெரியவளாகிறதுக்கு முந்தி கல்யாணம் பண்ண முடியல்லேன்னா வாயில வந்ததைப் பேசுற ஊர் இது. இப்ப மாதிரியே ஆத்துலயே உக்கார வெச்சு ஏதோ கொஞ்சம் எழுதப் படிக்கக் கத்துக் குடுங்கோ, போறும். நீங்கதான் மெட்றிகுலேஷன் வரைக்கும் படிச்சிருக்கேளேன்னா ?”

“பட்டணத்துல யெல்லாம் இப்ப பொண் கொழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிப் படிக்கவைக்கிறா, காவேரி. நோக்குத் தெரியுமா ? வடக்கே ஒரு பொண்ணு டாக்டருக்குட்ப் படிக்கிறதுக்காக அமெரிக்காவுக்குப் போயிருக்காளாம். பேப்பர்ல எல்லாம் கூட வந்தது.”

“அவாள்ளாம் ரொம்ப, ரொம்பப் பெரிய பணக்காராளா யிருப்பா. பணக்காரா என்ன செஞ்சாலும் யாரும் குத்தம் சொல்ல மாட்டா. ஆனா நாம அந்த அளவுக்குப் பணக்காரா இல்லியே! அதனால அவளைப் படிக்க வைக்கிறதைப் பத்தின பேச்சையே மறந்துடுங்கோ.. .. அது சரி, வயக்காட்டுக்குப் போனேளே, நாத்தெல்லாம் நன்னா வந்திருக்கா ?”

“ம்.. ..ம்..” என்ற பத்மநாபன் சிந்தனையில் ஆழ்ந்தார். காவேரி பேச்சை மாற்றியது சின்னதாய் அவரும் ஒரு சினத்தைக் கிளர்த்தியது. ‘எவ்வளவு கெட்டிக்காரக் கொழந்தை துர்க்கா! அவளைப் படிக்க வைக்கப் படாதுங்கறாளே ? .. ஆனா, அவ சொல்றது வாஸ்தவந்தான். பக்கத்து ஊருக்கு ஒரு நாளைப் போல நடந்து போகணூம். எங்கிட்ட என்ன வில்வண்டியா இருக்கு, கூட்டிண்டு போய்க் கொண்டு விட்றதுக்கும், திரும்ப அழைச்சிண்டு வுர்றதுக்கும் ? நான் கூட்டிண்டு போய்க் கொழந்தையை விட்டுட்டு சாயந்தரம் திருப்பிக் கூட்டிண்டு வரலாந்தான்னாலும், இவளுக்குத் துணையாப் படிக்கிறதுக்குப் பள்ளிக்கூடத்துல ஒரு பொண் கொழந்தையாவது இருக்கவேண்டாமா ? அப்படி யாரு தன்னோட பொண் கொழந்தையைப் படிக்க வைக்கிறதுக்கு இந்த ஊர்ல தயாரா யிருக்கப் போறா ? அதனால காவேரி சொல்றாப்ல அதை பத்தி சொப்பனம் கூடக் காணக்கூடாதுதான்!’ என்று எண்ணியவாறு பத்மநாபன் நீளமாய் ஒரு பெருமூச்சை உதிர்த்தபடி துர்க்காவை ஆசையுடன் நோக்கினார்.

“அம்மா, கொழந்தே! நோக்குப் பள்ளிக்கூடத்துல சேரணும்னு ஆசை இருக்காம்மா ?”

“கணக்குப் போட்றதுன்னா நேக்கு ரொம்ப ஆசையா இருக்குப்பா! நாளெல்லாம் கணக்குப் போட்டுண்டே இருக்கச் சொன்னாக் கூட, போட்டுண்டே இருப்பேம்ப்பா.”

அவளது ஆர்வம் புரிய, அவர் சட்டென்று தமது பார்வையை அப்பால் நகர்த்திக்கொண்டார். அவர் ஏதாவது சொல்லுவார் என்று எதிர்பார்த்தவள் போன்று வைத்த விழிகளை வாங்காமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்த துர்க்கா, அவர் ஒன்றும் கூறாதிருக்கவே, அம்மாவின் பேச்சுத்தான் எடுபடப் போகிறது என்பகைப் புரிந்துகொண்டு முகம் சாம்பினாள்.

“அப்பா!”

“என்னம்மா ?”

“என்னைப் பள்ளிக்கூடத்துல சேர்த்துடுங்கோப்பா!”

“அதெல்லாம் நடக்காத காரியம்மா, கொழந்தே. ஏதோ கடுதாசி வந்தா படிக்கிற அளவுக்கும், ஆத்துல கணக்குவழக்கைப் பார்க்கிற அளவுக்கும்தாம்மா நோக்கு நான் சொல்லிக் குடுக்க முடியும். உங்கம்மா நீ படிக்கிறதைத் தடுக்கிறதா நினைக்காதேம்மா. அவ சொல்றது நூத்துக்கு நூறு சரிம்மா, கொழந்தே!”

அப்போது வாசற்பக்கம் நிழல் தெரிய, பத்மநாபன் தலை உயர்த்திப் பார்த்தார். ரங்கநாத சாஸ்திரி வந்துகொண்டிருந்தார்.

“வாங்கோ, வாங்கோ! உக்காருங்கோ!.. ..”

“என்ன! பொண்ணுக்குப் படிப்புச் சொல்லிக் குடுக்கிறீராக்கும்! ஜமாயும்!” என்றவாறு துண்டால் தரையைத் தட்டிவிட்டு ரங்கநாத சாஸ்திரி உட்கார்ந்துகொண்டார்.

“ஆமா. என்னதான் பொண் கொழந்தைதானேன்னாலும், ஆத்தை நிர்வாகம் பண்ற அளவுக்கானும் எழுத்து வாசனை இருக்கணுமோன்னோ ?”

“ஆமாமா. நல்லதுதான்.”

“ஏதானும் விசேஷம் உண்டாங்காணும் ? சும்மா வர மாட்டாரே ?”

“சரியாச் சொன்னேள்! காரியமாத்தான் வந்திருக்கேன்.”. .. அம்மா, கொழந்தே! ஒரு கூஜாவில தீர்த்தமும் தம்ளரும் எடுத்துண்டு வா, பாப்போம்!”

துர்க்காவை அவர் விரட்டினார் என்பது புரிந்ததும், என்ன விஷயத்துக்காக என்பது புரியாமல் பத்மநாபன் அவரை ஏறிட்டார்.

-தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation

author

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts