நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-2) (Based on Oscar Wilde ‘s Play Salome)

This entry is part [part not set] of 34 in the series 20051223_Issue

சி. ஜெயபாரதன், கனடா


‘கலைத்துவப் படைப்புகளில் ஒழுக்க நூல், ஒழுக்கங் கெட்ட நூல் என்பது கிடையாது! நூல் முறையாக எழுதப் பட்டது அல்லது முறையற்று எழுதப் பட்டது என்றுதான் குறிப்பிடப்படும். அவ்வளவுதான். கலைஞன் பின்பற்றும் நெறி வாழ்க்கை அவனைச் சார்ந்து தனித்துவம் கொண்டது. ஆனால் கலையின் நெறிமுறை குறைபாடான ஓர் ஊடகத்தின் மூலம் பூரணத்துவப் பயன்பாட்டை எதிர்பார்க்கிறது! எந்தக் கலைஞனுக்கும் நெறித்துவம் மீது இரக்கம் கிடையாது. கலைஞனிடம் உள்ள ஒழுக்கவியல் பரிவு மன்னிக்க முடியாத ஓர் எழுத்து நடைப் பண்பாடு! கலைஞன் எவனும் மனக் கோளாறுடன் எப்போதும் இருப்ப தில்லை! எதையும் அவன் தனது மொழியில் படைத்துக் காட்ட முடிகிறது. சிந்தனையும், மொழியும் கலைஞனின் இரண்டு கலையாக்கக் கருவிகள்.

கலைப் படைப்புக்கு நற்பண்பும், துர்க்குணமும் கலைஞனின் இரண்டு கைச் சாதனங்கள். கலை வடிவ ஆக்கங்களை நோக்கினால், எல்லாத விதக் கலைகளும் ஓரிசை ஞானியின் கலைத்துவப் படைப்புகளை ஒத்தவையே. கலை உண்டாக்கும் உணர்ச்சியை நோக்கினால், அது நடிகனின் நடிப்புத் திறனைப் போன்றதுவே! அனைத்துக் கலைகளும் தோற்றத்தில் பளிச்செனக் காட்டும் வெளிப்புறச் சின்னங்களே! அவற்றின் அடித்தளத்தில் மூழ்கி ஆய்ந்திடுவோர் ஆபத்தில் சிக்கிக் கொள்வார். சின்னங்களை மட்டும் படித்து அறிபவரும் விபத்தில் மாட்டிக் கொள்வர்! கலைத்துவப் படைப்பு ஒன்றின் மீது பலவித முரண்பாடான கருத்துகள் எழுந்து எறியப் பட்டால் அந்தப் படைப்பு புதிதானது, சிக்கலானது, முக்கியமானது என்று குறிப்பிடலாம்! கலைத்துவம் காட்டுவது வாழ்க்கை யன்று; அது காண்பவர் பிம்பத்தைக் காட்டும் காட்சிக் கண்ணாடி!

ஆஸ்கர் வைல்டு, நாவல் முன்னுரை (The Picture of Dorian Gray)

பாவங்களை விலக்கிப் புனித நீராடுவீர்!

தேவன் உமது பாவத்தை மன்னிப்பார்!

தயாரித்து வைப்பீர், பிரபுவின் பாதம்பட!

யாரோ ஒருவர் சாலையில் முழக்குவார்!

நேராக்குவீர் பயணத் துக்குப் பாதைகளை!

நிரப்புவீர் பள்ளத்தை! தணிப்பீர் மேடுகளை!

நேர்பாதை ஆக்குவீர், நெளிந்து போனதை!

கரடு முரடான பாதை வழுவழுப் பாகட்டும்!

காண்பர் அனைத்து மாந்தரும்,

கடவுளின் பாவத் தீர்ப்பு!

புனித நீராட்டி: ஜான் போதகர்.

நரபலி நர்த்தகி ஸாலமி

(ஓரங்க நாடகம்)

நாடக நபர்கள்:

ஏரோத் ஆன்டிபஸ் (Herod Antipas) : ஜுடேயா (Judea) நாட்டில் காலிலீயின் ஆளுநர் [Governor of Galilee

ஏரோதியாஸ் (Herodias): ஏரோத் மன்னின் மனைவி

ஸாலமி இளவரசி: ஏரோதியாஸின் முதல் கணவன் ஃபிளிப்புக்குப் (Philip) பிறந்த புதல்வி.

(ஃபிளிப்: ஏரோத் ஆன்டிபாஸுக்கு மாற்றாந்தாய் சகோதரன்)

ஜொஹானன் (Johanan): ஜான், புனித நீராட்டி

ஏரோதியாஸின் சேடியர், காவலர்

ஸிரியா வாலிபன் : ஸாலமி மீது தீராக் காதல் கொண்டவன்

சேனைக் காவலர்.

கப்பதோசியன் : (Cappadocian) ஓரினத்தைச் சேர்ந்தவன்.

நியூபியன் : (Nubian) வேறோர் இனத்தைச் சேர்ந்தவன்.

நேரம்:

அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை. முழுச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.

காட்சி அமைப்பு:

ஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம். கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை. வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது. ஏரொத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் மாளிகையில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரையாடிக் கொண்டிருக்கிறாள். அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள். இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொஹானன் [ஜான் புனித நீராட்டி] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார். மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள். ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக்கிறான். இடை இடையே சிறையில் கிடக்கும் ஜொஹானன் உரக்கக் குரல் கேட்கிறது.

****

ஸிரியா வாலிபன்: ஸாலமியை நான் கண்களால் பார்ப்பது ஏன் தவறு ? திருமணம் ஆகாத வாலிபன் நான்! ஸாலமியும் மணமாகாத ஓர் எழில் மங்கை! ஏழை ஆயினும் எழிலரசியைப் பார்ப்பது தவறா ? அதோ திருமணம் செய்த ஏரோத் மன்னர் கொத்தித் தின்பது போல் ஸாலமியைப் பார்க்கிறாரே அது மட்டும் நியாயமா ? அதுதான் தவறு! ஸாலமி அவரது குருதியில் முளைக்காத புதல்வி! மாற்றான் ஒருவனுக்கும், அவர் மனைவிக்கும் பிறந்த வேற்றுப் புத்திரி! ஸாலமி மாற்றாம் தாய் வயிற்றுச் சகோதரனின் மகள்! ஸாலமியை விட மூன்று மடங்கு வயது மூத்த ஏரோத், தனயன் மகள் மீது வைத்த கண் வாங்காமல் பார்க்கிறாரே அதுதான் தவறு! நான் பார்ப்பது நெறியானது. தவறில்லை. ஸாலமியை நான் மனதார நேசிக்கிறேன்! ஏரோதின் காம விழிகள் அவரது உடற்பசிக்கு இளமானைத் தேடுகின்றன!

ஏரோதியாஸின் காவலன்: [கோபமாக] வாயை மூடடா வாலிபனே! கன்னத்தில் அறைந்து விடுவேன்! அரசர் மாளிகை மீது நின்று கொண்டு, அரசர் விருந்தைச் சுவைத்துக் கொண்டு, அரசரையே குறை சொல்கிறாயா ? மூடனே! ஓடிப்போ! ஸாலமியை முறைகெட்டுப் பார்க்கும் உன்னிரு விழிகளைப் பிடுங்கி வீதியிலே வீசி விடுவேன்.

முதற் காவலன்: கீழே பார்! கணவர் வைத்திருக்கும் கிண்ணத்தில் மதுவை நிரப்புகிறார், மகாராணி! நிரம்பக் குடித்து நிலை தடுமாறி நெளிகிறார் மன்னர்! மதுக்கிண்ணம் மட்டும் எப்படிக் கையிலிருந்து தவறி விழாமல் உள்ளது ?

கப்பதோசியன்: யார் மகாராணி, தெரியவில்லையே ? தங்கக் கிரீடம் தலையில் மின்னும் மாதா ? முத்து மாலை மார்பில் ஊஞ்சலாடும் முதிய மாதா ? கூந்தலில் நீலப் பொடியைத் தூவி யிருக்கும் கோமகளா ?

முதற் காவலன்: ஆம், ஆம் அந்த கோமகள்தான் நாட்டரசி! கலிலீ நாட்டின் ஆளுநர் ஏரோதின் இரண்டாம் மனைவி! புள்ளிமான் போல் அங்குமிங்கும் துள்ளிக் கொண்டு அனைவர் விழிகளையும் ஈர்த்துக் கொண்டிருப்பவள்தான் இளவரசி ஸாலமி! கோமகளின் ஏக புத்திரி! ஆனால் ஸாலமியின் தந்தை ஏரோத் மன்னரில்லை!

இரண்டாம் காவலன்: ஏரோத் மன்னருக்கு ஒயின் என்றால் உயிர்! எத்தனை வகையான திராட்சை ரசம் சுவைப்பவர் தெரியுமா ? ஆனால் அவற்றில் அவருக்குப் பிடித்தது மூன்று ரகங்கள். ஒன்று ஸமத்ராஸ் தீவிலிருந்து வரவழைக்கப் பட்டது! அது ரோமானியத் தளபதி ஸீசர் மேலங்கியைப் போன்று பழுப்பு நிறத்தில் உள்ளது!

கப்பதோசியன்: என்ன ஸீசரின் மேலங்கியைப் போன்ற பழுப்பு நிறமா ? நான் ஸீசரைப் பார்த்தது மில்லை! ஸீசர் மேலங்கியைப் பார்த்தது மில்லை!

இரண்டாம் காவலன்: இரண்டாவது ஒயின் சிறப்பாக ஸைப்பிரஸ் நகரத்திலிருந்து மன்னருக்கு வருவது. அந்த திராட்சை ரசம் தங்கத்தைப் போல் மஞ்சள் நிறத்தி லிருக்கும்.

கப்பதோசியன்: எனக்குத் தங்கம் பிடிக்கும்! எந்த அங்கத்தை ஈந்தும் நான் தங்கத்தை வாங்கத் தயார். ஆனால் மஞ்சள் நிறம் எனக்குப் பிடிக்காது! கடவுள் ஏன் தங்கத்திற்கு மங்கிப் போகும் மஞ்சள் நிறத்தை அளித்தார் ? தங்கத்துக்கு உகந்த ஊதா வண்ணத்தைக் கடவுள் பூசி யிருக்கலாம் ?

இரண்டாம் காவலன்: மன்னருக்குப் பிடித்த மூன்றாவது திராட்சை ரசம் ஸிசிலியிலிருந்து வருகிறது! அந்த ஒயின் குருதிபோல் செந்நிற முள்ளது! ஏன் அது சிவப்பாக இருக்கிற தென்று என்னைக் கேட்காதே! பால் வெள்ளையாக உள்ளது ஏன் என்று வினாவை எழுப்பும் ஆய்வாளன் நீ! யாருக்குத்தான் தங்கத்தின் மீது ஆசை யில்லை ?

நியூபியன்: என் நாட்டுத் தெய்வங்கள் நரபலி கேட்பவை! மானிடக் குருதி யென்றால் நாக்கு நான்கு முழம் நீண்டு தொங்கும்! ஆண்டுக்கு இருமுறை நரபலி யிடுகிறோம்! எங்கள் தெய்வங்களுக்கு ஐம்பது ஆண்கள், நூறு பெண்களை வருடந் தோறும் பலியிட்டுச் சமர்ப்பிக்கிறோம்! ஆயினும் எங்கள் தெய்வங்களுக்கு அவை போதா! தெய்வ சீற்றத்தால் நாங்கள் கேட்பது எங்களுக்குக் கிடைப்ப தில்லை! நாங்கள் தெய்வ வெறுப்புக்கு ஆளாகி விட்டோம்!

கப்பதோசியன்: என் தாய் நாட்டில் எந்த தெய்வமும் விட்டு வைக்கப்பட வில்லை! ரோமானியப் படையினர் எங்கள் எல்லா தெய்வங்களையும் நகரை விட்டே விரட்டி விட்டார்! கவலையே யில்லை! நான் கடவுளைத் தேடிக் கொண்டிருக்கிறேன், இப்போது! மலைப் பிரதேசங்களில் தெய்வங்கள் ஒளிந்துள்ளதாகக் கூறப் பட்டது! ஆனால் நானந்தக் கதைகளை நம்புவ தில்லை! மூன்று நாட்கள் மலைமுகப்பில் தங்கி எல்லா இடங்களிலும் தேடினேன். மனதார வேண்டி வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தேன்! தெய்வங்கள் என் கண்ணில் படவில்லை! பிறகு தெய்வங்களை நான் வாயாரத் திட்டினேன்! அப்போதும் என் வாயை மூடக் கடவுள் வரவில்லை! எனது நாட்டில் தெய்வம் யாவும் மறைந்து போய் விட்டன! அவை எதுவும் மனிதனின் ஊனக் கண்களுக்குக் காட்சிச் சிலையாய் வரப் போவதில்லை!

முதல் காவலன்: யூதர்கள் கண்ணிலே காண முடியாத கடவுளைத்தான் வணங்கி வருகிறார். ஒருவருக்கும் புரியாத ஒன்றின் மீதுதான் அவர் மிக்க நம்பிக்கை வைக்கிறார்!

கப்பதோசியன்: எனக்குப் புரிய வில்லை அது. அவரது குருட்டு நம்பிக்கை நகைப்பிடமாக உள்ளது!

[கீழே சிறையிலிருந்து புனித நீராட்டி ஜானின் (ஜொஹானன்) ஆங்காரக் குரல் அழுத்தமாகக் கேட்கிறது]

ஜொஹானன்: [சிறைக் கதவை ஆட்டிக் கூச்சலுடன்] கேளுங்கள் மானிடரே! என்னை நீவீர் புறக்கணிக்கலாம்! என் வார்த்தைகளை மீறலாம்! ஆனால் அடுத்து எனக்குப் பின்னால் அதோ வந்து கொண்டிருக்கிறார், பாரீர்! என்னை விடப் பராக்கிரமசாலி! பெரிய தீர்க்க தரிசி! அவரது காலணியின் கயிற்றை அவிழ்க்கக் கூடத் தகுதி யில்லாதவன், நான்! அந்தப் புனிதர் வரும் போது, புறக்கணிக்கப் பட்ட மக்களுக்கு ஆதரவு கிடைக்கும்! அவர்கள் அனைவரும் ரோஜா பூக்கள் போன்று மலர்ச்சி அடைவார்! குருடாய்ப் போனவருக்குக் கண்ணொளி கிடைத்துப் பகலிரவு மாறுபாடு தெரியப் போகிறது! செவிடாய்ப் போனவருக்குக் காதொலி செம்மையாய்க் கேட்கப் போகிறது! கைசூப்பும் கைக் குழந்தை தீயைக் கக்கும் அசுர முதலை [Dragon] வாழும் குகைமீது கை வைக்கத் துணியும்! புனிதப் போதகர் பிடரி மயிரைப் பிடித்து சிங்கத்தை இழுக்கும் பேராற்றல் உடையவர்!

இரண்டாம் காவலன்: அவன் வாயை அடக்கு! அவன் ஒரு கிறுக்கு! பித்துப் பிடித்தவன்! தாறு மாறாக, ஏட்டிக்குப் போட்டியாக எப்போதும் பேசுபவன்! சிறையிலே போட்டாலும், வாயைக் கட்ட முடிய வில்லை! அவன் குரலை ஒடுக்க அறுக்க வேண்டும் நாக்கை! அல்லது ஊசியால் தைக்க வேண்டும் வாயை!

முதற் காவலன்: [மனம் வெகுண்டு] அப்படிச் சொல்லாதே! அவர் ஒரு போதகர்! ஒரு புனித மகான்! ஆங்காரமாய்க் கத்தினாலும் அவருக்கு நெஞ்சில் கனிவு, பரிவு மிகுதி! அவர் ஒரு தீர்க்க தரிசி! தினமும் அவருக்கு நான்தான் தட்டிலே உணவு தருபவன். அன்போடு எனக்குத் தவறாமல் நன்றி சொல்வார்! மனிதர் அறநெறிகளைப் பற்றி பேச ஆரம்பித்தால் போதும்; அறிவு வெள்ளம் கரை புரண்டு செல்லும். கேட்டுக் கொண்டே யிருக்கலாம்!

கப்பதோசியன்: அத்தகைய புனித மனிதருக்கு ஏனப்பா சிறைவாசம் ? அவர் பெயரென்ன ? ஊரென்ன ? ஏன் அவரை அந்தப் புலிக் குகையில் அடைத்துக் கத்த விட்டிருக்கிறார் ?

முதற் காவலன்: அவரது பெயர் ஜொஹானன். ஏசுவுக்குப் புனித நீராட்டிய ஜான் என்று அழைக்கப் படுகிறார். பாலை வனத்தில் எங்கோ ஒரு குகையில் வாழ்ந்து வருகிறார். ஸெக்கரையா என்னும் பாதிரியின் ஒரே மகன் அவர். தாயார் பெயர் எலிஸபெத். வாலிப வயதில் பிள்ளை யில்லாமல் முதிய வயதில் பெற்றோருக்குப் பிறந்த ஞானக் குழந்தை அவர்! பிள்ளை யில்லாத வேளையில் தெய்வ சன்னதியில் தேவதை காபிரியல் தோன்றி, பிறக்கப் போகும் குழந்தை, பின்னால் ஏசு பிரபுக்குக் கால் தடமிட முன்பாதை விரிக்கு மென்று சொன்னது! மேலும் அந்தக் குழந்தைக்கு ஜான் என்று பெயர் வைக்கும்படிக் கூறியது.

கப்பதோசியன்: எல்லாம் ஒரு பெரிய கதை போல யிருக்கிறதே! யாரிந்த ஏசு பிரபு ?

முதற் காவலன்: நானின்னும் ஜானைப் பற்றிச் சொல்லி முடிக்க வில்லை. ஏசு பெருமானைப் பற்றிப் பிறகு சொல்கிறேன். ஒட்டகத் தோல் உரோமத்தில் உடுத்தி யுள்ள உடை! இடுப்பில் ஓர் பட்டை! உண்ணும் உணவு என்ன வென்று தெரியுமா ? பெரிய விட்டில் பூச்சி, காட்டுத் தேன்! அவ்வளவுதான். மனிதர் திடகாத்திரமாக இருக்கிறார்! நல்ல உயரம்! கண்களில் எப்போதும் அறிவுக்கனல் பறக்கும்! ஆனால் பார்க்கச் சற்று விகாரமாகத் தோன்றுவார்! அவரைப் பின்பற்றிச் செல்லும் சீடரோ கணக்கில் அடங்கா.

கப்பதோசியன்: புனிதப் போதகர் என்ன சொல்கிறார் ? ஏன் ஆங்காரமாய்க் கத்துகிறார் ?

முதற் காவலன்: என்ன சொல்கிறார் என்பது எனக்கு முழுவதும் புரிய வில்லை. யாரையோ திட்டுகிறார்! கேட்டால் அச்சத்தை ஊட்டுகிறது! அடிவயிற்றைக் கலக்குகிறது நமக்கு! அவரது சொல்லடி யார் மீது படுகிறதோ, அவருக்கு நெஞ்சழுத்தம் ஏற்பட்டு மயக்கத்தில் விழுந்து விடுவார்!

கப்பதோசியன்: அவரை நான் காண விரும்புகிறேன். பார்க்க முடியுமா அவரை ?

முதற் காவலன்: முடியாது! முடியவே முடியாது! ஏரோத் மன்னர் தடை போட்டிருக்கிறார், அவரை யாரும் பார்க்கக் கூடாதென்று! மீறினால் சவுக்கடி விழும், தெரியுமா ?

(தொடரும்)

[காட்சி-1, பாகம்-3 அடுத்த வாரத் திண்ணையில்]

****

தகவல்:

1. Salome from The Plays of Oscar Wilde, The Modern Library, New York

2. The Greatest Man Who Ever Lived By: Watch Tower Bible (1991)

3. The Desire of Ages By: Ellen G. White

4. The Story of Jesus By: Reader ‘s Digest (1993)

5. Who is Who in the Bible, An Illustrated Biographical Dictionary By Reader ‘s Digest (1994)

6. The New Testament & Psalms, Placed By the Gideons.

7. The Original New Testament By Hugh J. Schonfield (1998)

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan December, 20 2005]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts