நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்) (Based on Oscar Wilde ‘s Play Salome)

This entry is part [part not set] of 32 in the series 20051216_Issue

சி. ஜெயபாரதன், கனடா


‘கலைஞன் அழகு வடிவங்களின் படைப்பாளி. கலையின் குறிக்கோள் கலைஞனை ஒளித்து வைத்துக் கலைத்துவக்குக் காட்சி தருவது. எழில் படைப்புகளில் அவலட்சணத்தைக் காண்போர் நளினமற்ற கள்ளத் தனம் பெற்றவர்! அவ்விதம் காண்பது தவறு. அழகு வடிவுகளில் எழிலைக் காண்பவர் அனைவரும் நாகரீகப் பண்பாளர். எந்தக் கலைஞனும் எதையும் நிரூபிப்ப தில்லை! எந்தக் கலைஞனுக்கும் ஒழுக்க நெறி மீது பரிவு கிடையாது! கலைஞன் எதையும் வடித்துக் காட்ட முடியும். எல்லாக் கலைகளும் ஆழமற்று அறிவிக்கும் மேல்முகப்புச் சின்னங்களே! எல்லாக் கலைகளும் அறவே பயனற்றவை! ‘

ஆஸ்கர் வைல்டு, நாவல் முன்னுரை (The Picture of Dorian Gray)

எழுத்தாள மேதை: ஆஸ்கர் வைல்டின் வரலாறு

எழுத்தாள மேதை ஆஸ்கர் வைல்டு (1854-1900) டப்ளின் அயர்லாந்தில் (அக்டோபர் 16, 1854) பிறந்து, பெர்னாட்ஷா வாழ்ந்த காலத்தில், கவிதை, நாவல், நாடகம், கட்டுரை ஆகியவற்றை எழுதிப் புகழ் பெற்றவர். கலைப் படைப்பு கலைத்துவப் பண்புக்கே (Art for Art ‘s sake) என்னும் நியதியில் காவியங்களைப் படைத்தவர் ஆஸ்கர் வைல்டு. அறிவு நூல் களஞ்சியங்கள் பலவற்றைப் படைத்து, இலக்கிய நகைச்சுவை ததும்பும் நாடகங்கள் எழுதிய நாகரீகக் கலைஞர் அவர். டப்ளின் டிரினிடி கல்லூரியிலும், ஆக்ஸ்போர்டு மெக்தாலன் கல்லூரியிலும் மேன்மையுடன் கற்று முதல் வகுப்பில் தேறி B.A. பட்டம் பெற்றவர். நடை, உடை, கலை யுணர்ச்சி ஆகியவற்றில் சற்று முரணான திரிந்த புத்தியும் கொண்டவர் அவர். வால்டர் பீட்டர், ஜான் ரஸ்கின் ஆகியோரின் அழகுணர்ச்சிக் கலைநயங்களில் ஆழ்ந்த பற்றும், ஆர்வமும் கொண்டு அவரது படைப்புக்களால் ஊக்கப் பட்டவர்.

அவரது முதல் வெளியீட்டுக் கவிதை நூல் (1881) பேரளவில் வரவேற்கப் பட்டது. அடுத்த ஆண்டு அமெரிக்கா சென்று உரையாற்றினார். அங்குதான் அவரது நாடகம் வீரா [1883] படைப்பானது. 1884 ஆம் ஆண்டில் கான்ஸ்டன்ஸ் லாயிட் என்னும் மாதை மணந்து அவர்களுக்கு சிரில், விவியன் [Cyril, Vyvyan] என்னும் இரண்டு புதல்வர் பிறந்தனர். பிறகு 1891 இல் கோமகனார் ஆர்தர் ஸாவில்லின் குற்றம், மற்ற கதைகள் [Lord Arthur Savile ‘s Crime & Other Stories], 1888 இல் பூரித்த இளவரசன் [The Happy Prince], 1891 இல் முதல் நாவல்: டோரியன் கிரேயின் படம் [The Picture of Dorian Gray], 1892 இல் மாதுளைகளின் மாளிகை [The House of Pomegranates] ஆகியவை பின்னால் வந்த அவரது கதைப் படைப்புகள்.

ஆஸ்கர் வைல்டின் கதைகளும், கட்டுரைகளும் பலரால் மிகவும் பாராட்டப் பட்டன. அவரது உன்னத ஆக்கத் திறமை அவர் எழுதிய நாடகங்களில் வெளிப் பட்டது. லேடி விண்டர்மியரின் விசிறி [Lady Winermere ‘s Fan (1892)], படுவாவின் கோமகள் [The Duchess of Padua (1892)], ஸாலமி [Salome (1893)], ஏது மதிப்பில்லா ஒரு மாது [A woman of No Importance (1893)], ஒரு பரிபூரணக் கணவன் [An Ideal Husband (1895)], மகத்தான படைப்பாகக் கருதப்படும், மெய்யுறுதியின் முக்கியம் [The Importance of Being Earnest (1895)] ஆகியவை ஆஸ்கர் வைல்டு எழுதிய அரிய நாடகப் படைப்புகள். ஆஸ்கர் வைல்டு அக்கால மாந்தர் வெறுக்கும் ஓரினப் பாலுறவு முறைகளில் ஈடுபட்டு, குற்றம் சாட்டப்பட்டு (1895) ஈராண்டுகள் சிறையில் தள்ளப்பட்டார். அப்போது அவர் தன்னரிய பெயரையும், புகழையு மிழந்து சமூகத்தால் முற்றிலும் புறக்கணிக்கப் பட்டார்! சிறையில் உள்ளபோது அவர் எழுதிய சிறை அனுபவக் கவிதைப் படைப்பு, ‘சிறை அனுபவப் பாடல் ‘ [The Ballad of Reading Gaol] என்னும் நூலில் 1898 ஆம் ஆண்டில் வெளியானது. இங்கிலாந்தில் தீண்டப்படாத மனிதராய் ஒதுக்கப்பட்டு நிதிவசதி யில்லாமல் நோய்வாய்ப்பட்டு பிரான்ஸில் கடைசிக் காலங்களைக் கழித்து 1900 நவம்பர் 30 இல் ஆஸ்கர் வைல்டு காலமானார்.

பைபிள் வரலாற்று நூலில் கூறப்படும், புனித நீராட்டி ஜான் [Prophet: John, The Baptist] யூதப் போதகரின் மரணத்தைப் பற்றிய ஓரங்க நாடகம், ஸாலமி. ஜொஹானன் என்று அழைக்கப்படும் ஜான், கி.பி. முதல் நூற்றாண்டில் ஏசு நாதர் காலத்தில் தோன்றி, ஏசு பெருமானுக்குப் புனித நீராட்டப் பிறந்த தீர்க்க தரிசியாகப் புதிய நெறிவாக்கில் [New Testament காணப் படுகிறது. மிகவும் பயங்கரமாகக் கொடூர முறையில் கொலை செய்யப் பட்ட, யூத மதஞானி ஜானின் நாடகம் ஸாலமியை, முதலில் ஆஸ்கர் வைல்டு பிரெஞ்ச் மொழியில் எழுதினார். 1894 இல் அதன் ஆங்கில வசனம் எழுதப் பட்டது. ஆனால் ஸாலமி முதன்முதல் பெர்லினில் 1903 ஆண்டு அரங்கேறியது! நாடகம் அங்கே வரவேற்கப் பட்டு 200 தடவைகள் காட்டப் பட்டது. ஆனால் அந்த அரிய நாடகத்தை ஆக்கிய ஆசிரியரான ஆஸ்கர் வைல்டு ஒருதடவை கூட, அப்போது காண அவர் உயிரோடு வாழவில்லை!

****

நரபலி நர்த்தகி ஸாலமி

(ஓரங்க நாடகம்)

நாடக நபர்கள்:

ஏரோத் ஆன்டிபஸ் (Herod Antipas) : ஜுடேயா (Judea) நாட்டு மன்னன்

ஏரோதியாஸ் (Herodias): ஏரோத் மன்னின் மனைவி

ஸாலமி இளவரசி: ஏரோதியாஸின் முதல் கணவன் ஃபிளிப்புக்குப் (Philip) பிறந்த புதல்வி.

(ஃபிளிப்: ஏரோத் ஆன்டிபாஸுக்கு மாற்றாந்தாய் சகோதரன்)

ஜொஹானன் (Johanan): ஜான், புனித நீராட்டி

ஏரோதியாஸின் சேடியர், காவலர்

ஸிரியா வாலிபன் : ஸாலமி மீது தீராக் காதல் கொண்டவன்

சேனைக் காவலர்

நேரம்:

அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை. முழுச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.

காட்சி அமைப்பு:

ஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம். கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை. வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது. ஏரொத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் மாளிகையில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரையாடிக் கொண்டிருக்கிறாள். அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள். இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொஹானன் [ஜான் புனித நீராட்டி] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார். மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள். ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக்கிறான்.

****

ஸிரியா வாலிபன்: மேலே என்னைக் கவரும் நிலவின் முகம் எப்படிக் கீழே தெரிகிறது! பொங்கி வரும் பெரு நிலவா ? புது நிலவா ? பொன்னிலவா ? எந்த நிலா எழிலாக உள்ளது ? கீழே உலவும் உயிருள்ள நிலவா ? அல்லது மேலே நகரும் உயிரில்லாத நிலவா ? உயிருள்ள நிலவைத்தான் என் ஆத்மா நாடுகிறது! ஸாலமி! ஸாலமி! ஸாலமி! எங்கிருந்து உனக்கு இத்தனை அழகு இன்று வந்தது ? என்னிரு விழிகள் இமை தட்டாமல் உன்னைத்தான் நோக்கிய வண்ணம் உள்ளன! என் நெஞ்சம் என்னை விட்டுப் போய் உன்னிடம் அடைக்கல மாகிறது! என்னுயிர் உனக்காக நீங்கவும் எத்தனிப்பு செய்கிறது! இதோ பார், என்னை! எல்லாவற்றையும் உனக்காக அர்ப்பணித்துக் கற்சிலையாய் நிற்கிறேன் கவர்ச்சி அணங்கே! திரும்பிப் பார் என்னை! ஒருமுறை பார் என்னை! ஸாலமி என் கண்மணி!

ஏரோதியாஸின் காவலன்: வாலிபனே! ஸாலமியைப் பார்க்காதே! அது ஓர் சுறாமீன்! காதல் புரிவதற்கு ஏற்ற மாதில்லை அவள்! முழு நிலாவைப் பார்த்தால் உனக்குப் பெண்ணைப் போல் தெரிகிறது! ஆனால் சற்று கூர்ந்து பார்! அடிவானில் பரிதி சிந்திய செந்நிறக் குருதி, வானத்தின் மீது தெறித்துள்ளது! பார்த்தாலே எனக்குப் பயமாகத் தோன்றுகிறது! ஏதோ கேடு வரப் போகிறது! ஏனோ இன்று விசித்திரமாகத் தெரிகிறது எனக்கு! பிரேதக் குழியிலிருந்து எழுவது போல் நிலா தலை நீட்டுகிறது! செத்தபெண் போல விழுந்து கிடக்கிறது, நிலா! சாகும் பிறவியை நோக்குவது போல் விழிக்கிறது சந்திரன்! கேதம் விசாரிக்க வரும் பேதை மாதைப் போல் சோகமாய் உள்ளது நிலா! உனக்குத் தெரிய வில்லையா ?

ஸிரியா வாலிபன்: எனக்கு அப்படித் தெரியவில்லை! ஸாலமி ஓர் திமிங்கலம் என்றாலும் நான் அஞ்சப் போவ தில்லை! விசித்திரப் பார்வை வெண்ணிலவுக் கில்லை! ஆனால் ஸாலமியின் வேங்கை விழிகளில் ஏதோ வேதனை தெரிகிறது! தனிமையின் கனலில் வேகிறாள் ஸாலமி! அது காதலைத் தேடும் வேதனை! கன்னிப் பெண்டிர் நெஞ்சில் கனல் பற்றி எரியும் வயதல்லவா, ஸாலமிக்கு ? அவளது விழிகள் மேலே நாடும் என்னை நோக்காமல் கீழே ஏன் சுற்றித் திரிகின்றன ? என்னை விடக் கம்பீரமான ஆடவர் மீது அவள் விழிகள் அம்புகளை ஏவுகின்றன! ஸாலமியின் கண்கள் நர்த்தனம் ஆடிப் பிறரை மயக்குகின்றன! கண்கள் வலைவீசி ஆண்களைப் பிடிக்க ஓடுகின்றன! என்னைப் பார்த்தும் பாராததுபோல் ஸாலமி நடிக்கிறாள்! அவள் கண்களின் பட்டொளி படாத ஆயிரம் பேரில் நானும் ஒருவன்!

ஏரோதியாஸின் காவலன்: செத்த நிலவை மெதுவாகத் தூக்கி வருவது போல், மேகங்கள் ஏந்தி வருகின்றன, பார் வாலிபனே! ஏதோ கேடு விளையத்தான் வானத்தில் அப்படித் தெரிகிறது!

முதன் படையாளி: [கீழே விருந்து மாளிகையில் ஆரவாரம் கேட்கிறது] என்ன ஆரவாரம் அது! யார் போடும் கூக்குரல் அவை ? கேடு விளைவது கீழேயா அல்லது வானத்தின் மேலேயா ?

இரண்டாம் படையாளி: குடி குடித்தவர் குடில் அழிவது இடியிலே என்பது பழமொழி! குடிகாரக் கோமான்கள் போடும் கூத்தாட்டம் அவை! யாரென்றா கேட்கிறாய் ? அவர்கள் யூதர்! சிலர் பார்ஸிக்காரர், சிலர் சாதுஸீக்கள்! ஏசு கிறிஸ்துவை சிறிதும் நம்பாதவர்! ஏசு நாதர் தேவ தூதர் அல்லர் என்று புறக்கணிப்பவர்! மூச்சு விடாமல் மதச் சண்டை போடுவதில் வல்லவர்! யூதப் போதகர் ஜொஹானன் தெருவில் நின்று ஞான உரையாற்றினால், செவிகளை மூடி வீட்டுக் கதவைச் சாத்துபவர்!

முதல் படையாளி: யூதர் எதற்காக மதச் சண்டை போடுகிறார் ?

இரண்டாம் படையாளி: எனக்குத் தெரியாது! எப்பவும் அவர்களுக்குள் சண்டைதான். கேட்பது எதனையும் ஆழ்ந்து கேட்காது மேலாகக் கேட்டு, விதண்டா வாதம் செய்பவர்! பார்ஸிக்காரர் மேலோகத் தேவதைகள் இருப்பதை நம்புகிறார்! ஆனால் சாதுஸீக்கள் தேவதைகளே கிடையா தென்று அவருடன் சண்டை செய்வார்! இப்படி தெரியாத ஒன்றை வைத்துச் சண்டை போடுவது வேடிக்கையாகத் தோன்றுகிறது எனக்கு.

ஸிரியா வாலிபன்: சண்டையால் பயனில்லை! பார்க்கிறேன் நிலவை! நோக்குவேன் ஸாலமியை! நெஞ்சில் அவள் அழகைப் படமெடுத்து நீண்ட நேரம் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறேன்! தூங்காமல் இரவு வேளைகளில் அவளை நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கிறேன்! பகலில் நேரே அவளைப் பார்த்து மீண்டும் நெஞ்சில் படமெடுத்துக் கொள்கிறேன்!

ஏரோதியாஸின் காவலன்: வாலிபனே! நீ பகலிரவு தூங்காமல் ஸாலமியை நினைத்துக் கொண்டே கிடந்தால், சிறிது நாட்களில் பைத்தியமாய்த் தெருவில் சுற்ற ஆரம்பித்து விடுவாய்!

ஸிரியா வாலிபன்: அப்பனே! எப்போதும் அவளை நினைக்கும் அந்த பாக்கியம் எனக்குக் கிடைக்கட்டும்!

ஏரோதியாஸின் காவலன்: ஸாலமி ஓர் அரச குமாரி! இளவரசி! நீ ஓர் குடிசைவாசி! நீ எங்கே ? அவள் எங்கே ? எப்போதும் நீ அவளையே பார்க்கிறாய்! அப்படி அவளை நீ இச்சையுடன் பார்ப்பது தவறு! நல்ல வேளை! நீ இன்னும் அந்த முற்றிய நிலைக்குப் போக வில்லை! பைத்தியம் முற்றுவதற்குள் கற்றுக்கொள் வாலிபனே! ஒரு பெண்ணை அப்படி உற்றுப் பார்ப்பது தவறு! பட்டும் படாமலும் பார்த்து அகல வேண்டும்!

ஸிரியா வாலிபன்: நான் ஸாலமியைப் பார்ப்பது ஏன் தவறு ? நான் திருமணம் ஆகாத வாலிபன்! ஸாலமியும் மணமாகாத எழில் மங்கை! எழிலரசியை ஏழை ஆயினும் பார்ப்பது ஏன் தவறு ? அதோ திருமணம் செய்த ஏரோத் மன்னர் தின்றுவிடுவது போல் ஸாலமியைப் பார்க்கிறாரே, அது நியாயமா ? அதுதான் தப்பு! ஸாலமி மனைவியின் மகள்! ஸாலமி மாற்றாந் தாயிக்குப் பிறந்த சகோதரனின் மகள்! ஸாலமியை விட மூன்று மடங்கு வயோதிகரான ஏரோத், தம்பி மகள் மீது வைத்த விழி வாங்காமல் பார்க்கிறாரே அதுதான் தவறு!

நான் பார்ப்பது தவறில்லை!

ஏரோதியாஸின் காவலன்: [கோபமாக] வாயை மூடடா வாலிபனே! கன்னத்தில் அறைந்து விடுவேன்! அரசர் மாளிகை மீது நின்று கொண்டு, அரசர் விருந்தைச் சுவைத்துக் கொண்டு, அரசரையே குறை சொல்கிறாயா ? மூடனே! ஓடிப்போ! ஸாலமியை முறைகெட்டுப் பார்க்கும் உன்னிரு விழிகளைப் பிடுங்கி உன் கையிலே கொடுத்து விடுவேன்.

[காட்சி-1, பாகம்-2 அடுத்த வாரத் திண்ணையில்]

(தொடரும்)

****

தகவல்:

1. Salome from The Plays of Oscar Wilde, The Modern Library, New York

2. The Greatest Man Who Ever Lived By: Watch Tower Bible (1991)

3. The Desire of Ages By: Ellen G. White

4. The Story of Jesus By: Reader ‘s Digest (1993)

5. Who is Who in the Bible, An Illustrated Biographical Dictionary By Reader ‘s Digest (1994)

6. The New Testament & Psalms, Placed By the Gideons.

7. The Original New Testament By Hugh J. Schonfield (1998)

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan December, 12 2005]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts