காலை

This entry is part [part not set] of 28 in the series 20051104_Issue

இரா. குருராகவேந்திரன்


பஸ்ஸின் ஓட்டம் நின்று கண்டக்டர் குரல் கொடுத்தார். பஸ்ஸின் தாலாட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நான் விழித்துக்கொண்டு எனது ஊர் வந்துவிட்டதை உணர்ந்தேன். சுகமான தூக்கத்தில் பஸ்ஸில் இன்னும் கொஞ்ச நேரம் போகலாம் போல இருந்தது. வெளியே இன்னும் இருள் இருந்தது. எனது கடிகாரம் மணி நாலரை என காட்டியது. கொஞ்சம் நேரம் முன்பாகவே ஊர் வந்துவிட்டது போலும். எனது சிறுபெட்டியை எடுத்துக்கொண்டு மெல்ல இறங்கினேன். பஸ் என்னைவிட்டு நேர்ரோட்டில் தொலைதூரம் போய் பின்புற சிகப்புவிளக்கு மட்டும் அமைதியாக தெரிந்தது. சாலையில் நான்மட்டும் இருந்தேன். சோம்பல் முறித்துவிட்டு பெட்டியை தூக்கிக்கொண்டு மெல்ல வீடுநோக்கி நடந்தேன்.

மார்கழி மாத அதிகாலை குளிர் உடல் முழுவதும் பரவியது. ஒரு துண்டை கழுத்தில் சுற்றிக்கொண்டு நடந்தேன். சாலைஓர விளக்குகள் கொஞ்சம் மங்கலாக ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தன. கிராம பக்கங்களில் இவ்வளவுதான் கிடைக்கும். சீக்கிரமாக வந்துவிட்டதால் வீட்டில்உள்ளோரை தூக்கத்தில் எழுப்ப வேண்டாமென்று ஊரைசுற்றி செல்லும் பைபாஸ் ரோட்டில் நடந்தேன். ஒருமணி நேரம் கழித்து வீடுபோய் சேரலாம். மார்கழி மாதமாகையால் பெண்நாயை ஆண்நாய்கள் துரத்திக்கொண்டிருந்தன. பாரதியின் இரண்டு கயிறுகளின் காதல் கதை ஞாபகத்திற்கு வந்தது. எனக்குள் மெல்ல சிரித்துக்கொண்டு நடந்தேன்.

சாலை ஓர புளிய மரங்கள் சிறுசிறு இலைகளை மடித்துக் கவிழ்த்து சுகமாக உறங்குவதை தெளிவாக உணர்ந்தேன். சூரியன் வந்து தட்டி எழுப்பினால்தான் சோம்பல் முறித்து இலைகளை மெல்ல விரித்து எழும். பைபாஸ் ரோடு வயல்களின் ஊடே நேராக போடப்பட்டிருந்தது. நெற்பயிர்கள் நன்கு கரும்பச்சையாக வளர்ந்திருந்ததாலும் இருட்டினாலும் இருபுறமும் வயல் மொத்ததில் கருமையாக காட்சியளித்தது. ரோட்டோர புல்களின் தலையில் பனித்துளிகள் அமிழ்த்தியதால் அவை நாணமுற்ற இளம்பெண்போல நிலம்நோக்கி மெல்ல கவிழ்ந்திருந்தன. ஊர் எல்லையில் பூக்கடைக்காரரின் தோட்டம் இருக்கிறது. மரிக்கொழுந்து, மல்லி, ஜாதி, கனகாம்பரம் என நிறைய உண்டு. அதிகாலை நேரத்தில் மொட்டுக்களின் மொத்த வாசம் ரம்மியமாக சுகமாக இருந்த்து.

கிழக்கே கீழ்வானத்தில் மெல்லிய வெளிச்சக்கீற்றும் அதற்குமேலே வானத்தில் பிரகாசித்த விடிவெள்ளியையும் ரசித்தபடி நடந்தேன். மரத்தில் பறவைகள் எழுந்து கீச்சுகீச்சு என கத்திக்கொண்டிருந்தன. அவைகளுக்கு அதிகாலை எப்படித்தான் மிகச்சரியாக தெரிகிறதோ. மனிதனுக்குத்தான் அலாரம் தேவைப்படுகிறது.

வள்ளுவர் ‘உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு ‘ என்ற குறளை காலைவேளையில்தான் எழுதியிருப்பார் போல தோன்றுகிறது. அதிகாலை எழுந்து கொல்லையில் பல்துலக்கச் சென்றவர்க்கு கொஞ்சம் தூக்கக்கலக்கத்தில் காலையின் ஸ்பரிசத்தால் திடாரென எண்ணம் தோன்ற அவசரமாக வாசுகியிடம் ஓலையையும் எழுத்தாணியையும் கொண்டுவரச் சொல்லியிருப்பார். வேகமாக எழுதிவிட்டு ‘இது எப்படி இருக்கிறது ‘ என வாசுகியிடம் கேட்டுருப்பார். அவர்களும் ‘ரொம்ப சமத்துதான் போங்கள் ‘ எனச் சொல்லிவிட்டு பெருமையுடன் உள்ளே போயிருப்பார்கள். அதற்கப்புறம் காபி மாதிரி ஏதாவது போடச்சொல்லி குடித்தாரா ?. தெரியவில்லை. வாசுகியைத்தான் கேட்கவேண்டும்.

காபியின் வாசம் ரோட்டின் முனையிலிருந்த டாக்கடையிலிருந்து என் மூக்கில் நுழைந்து ஏதோ செய்தது. காபியை கண்டுபிடித்தவனை பாராட்டத்தான் வேண்டும். நான் வேகமாக நடந்தேன்.

சூரியன் இப்பொழுது கீழ்வானிலிருந்து முழூவட்டமாக சிவப்புப் பழமாக தகதகவென எழுந்தான். கண்கள்கூசாத இளஞ்சிவப்பு நிறத்தில் அருணோதயத்தின் அழகு கண்கள் வழிச்சென்று மனதை கவ்வியது. அழகான சிறுகுழந்தையின் நிர்மலமான அழகுமுகம்போல், மனதை கொள்ளை கொள்ளும் வடிவத்துடன் அவன் அமைதியாக மேல்நோக்கி வானத்தில் தவழ்வதைப் பார்த்தேன். பட்டணத்து வேலையில் வேளைகளை மறந்து இவ்வித அனுபவங்களை தொலைத்து வெகுநாட்களாகிவிட்டன. எனது கண்கள் பகலவனை ஸ்பரிசித்தபோது இன்று வித்யாசமான உணர்வுகளையும் எண்ணங்களையும் கொடுத்தது. உடம்பு கொஞ்சம் சிலிர்த்தது.

சூரியனுக்கும் எனது கண்களுக்கும் உள்ள தொடர்பை, பந்தத்தை நினைத்தேன். சூரியனுக்காக எனது கண்கள் படைக்கப்பட்டதா அல்லது எனது கண்கள் உணருமாறு சூரியன் உள்ளதா ? குழந்தை பிறப்பைப்போல் அவனிடமிருந்து வெகுகாலம்முன்பு பூமித்தாயின் வடிவில் பிறந்து, ஒரு தூரத்தில் இன்னும் பாசத்துடன் பந்தத்தால் அவன்பால் இழுத்து வைத்துக்கொண்டிருக்கிறான். உயிர்கொடுத்ததோடு அல்லாமல் சூரியக் கதிரின் ஆற்றலே தாவரங்களால் சேமிக்கப்பட்டு இவ்வுலகின் அனைத்து உயிர்களின் இயக்கத்திற்கு வேண்டிய சக்தியாகிறது. ஆகையால் ஒவ்வொரு வினாடியும் நான் வாழ்வதற்கு வேண்டிய சக்தியை தாய்போல் ஊட்டிக்கொண்டிருக்கிறான். நான் உருவானதுக்கு ஆரம்ப காரணம் இவனே. நான் ஒவ்வொரு வினாடியும் சந்தோஷமாக உயிர்வாழ்வதற்குக் காரணம் ஞாயிறே. எனவே கண்ணுக்குத்தெரியும் சாட்சாத் தெய்வம் இவனே. எனக்கும் சூரியனுக்கும் உள்ள ஆழமான பந்தத்தையும், அர்த்தத்தையும் உணர்ந்தபோது மனது ஏனோ நெகிழ்ந்தது. ஒருவேளை சாப்பாடு போட்டாலே மனதில் நன்றியுணர்வு தோன்றுவதில்லையா ?. இவ்வளவும் கொடுத்த இந்த பரிதிக்கு, ஜடப்பொருளே ஆனாலும் மனதில் இயல்பாய் நன்றி சொல்லவேண்டும் போல தோன்றியது. கண்களை மூடிக்கொண்டு மனதாறச் சொன்னேன். ‘ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி. அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள்நீக்கும் தந்தாய் போற்றி. தாயினும் பரிந்து சால சகலரை அணைப்பாய் போற்றி. தழைக்கும் ஓர் உயிர்க்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி. தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தை தருவாய் போற்றி. ‘ இது சூரியனுக்கு கேட்டதோ இல்லையோ என் மனதில் நிறைவு ஏற்பட்டது. இப்போற்றுதல் இயல்பாய், சரியாய், தாய்க்குச் சொல்வதுபோல் கடமையாகப் பட்டது.

இது பொதுவாய் எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தாலும் இதன் முக்கியத்துவத்தை அனுபவபூர்வமாக உணர்ந்ததால் ஒரு நிறைவான மனது ஏற்பட்டது. இனிவரும் அதிகாலைகளை தூங்கிக் கழிக்காமல் எழுந்து நன்கு சுகிக்கவேண்டுமென மனதில் நினைத்துக்கொண்டு நடந்தேன். வீடு வந்ததும் கதவைத்தட்டினேன். அம்மா கதவைத் திறந்து வாடா வா என்றாள். நான் வீட்டினுள் சென்று வாசலைத் திரும்பிப் பார்த்தேன். அதிகாலையின் வெளிச்சம் எங்கும் நிறைந்திருந்தது. எனக்குள்ளும்தான்.

இரா. குருராகவேந்திரன்.

gururagav@gmail.com

Series Navigation

author

இரா. குரு ராகவேந்திரன்.

இரா. குரு ராகவேந்திரன்.

Similar Posts