(ஏழாம் காட்சி பாகம்-1)
சி. ஜெயபாரதன், கனடா
இறுதியாகத் தீ மேடையில்
ஜோன் கண்ணொளிப் பட்டு
புகை பூசிய
புனிதச் சிலுவை இது!
வரலாற்றுப் புகழ் பெறும்
வலுவான
சிலுவை இது!
சகோதரர் மார்டின் லாட்வெனு.
அலைமோதும் என்மனம்,
ஆலயத்தில்
துண்டு துண்டாய்ப் போய்!
கன்னி மாடத்தில் அந்த மங்கை
கண்மூடினாள், பலியாகி!
கண்டும் காணாத மாடத்துப் பெண்டிர்
விண்டு போயினரா ?
சிரம்மேல் வளையம் சுழலும்
செந்நிறப்
பொன்னுடைப் பாதிரிகள்
புண்பட்டுக்
கண் கலங்கினரா ?
எதுவும் மெய்யில்லை இந்த ஆலயத்தில்,
பூத்து அவள் மலர்ந்த
புது நறுமண நினைவு
தவிர!
கவிதைச் செல்வி லைலா பெப்பர், கனடா [Leila Pepper (1997)]
கதைச் சுருக்கம்: பதினைந்தாம் நூற்றாண்டில் விடுதலை வேட்கை கொண்டு நூறாண்டுப் போரில் பிரிட்டனுடன் போரிட்டு, அடிமை நாடாக இருந்த பிரான்ஸை விடுவித்த 19 வயது ஜோன் ஆஃப் ஆர்க் வீராங்கனையை மதத்துரோகி என்று ஆங்கில ஆதிக்க வர்க்கம் குற்றம் சுமத்தி உயிரோடு எரித்தது. அவளது குறுகிய வாழ்வின் அதிசயக் கதை மெய்யாக நிகழ்ந்தது. பிரான்ஸ் நாட்டில் லொர்ரேன் பகுதியில் உள்ள டோம்ரெமி என்னும் கிராமத்தில் 1412 ஆம் ஆண்டு ஜனவரி 6 இல் ஜோன் ஆஃப் ஆர்க் பிறந்தவள். மன வைராக்கியம் படைத்த ஜோன், சிறு வயதிலேயே பிரான்ஸின் விடுதலையைக் கனவாகக் கண்டு கடவுளால் ஏவப் பட்டதாகக் கருதிப் போராடியவள். கல்வி கற்காத பட்டி நங்கை ஆயினும் அவள் கொண்டிருந்த ஆழ்ந்த மத நம்பிக்கையும், தளராத மன உறுதியும், உயர்ந்த போர்த் திறனும், படைகளை முன்னடத்திச் சென்று பிரான்ஸின் விடுதலைக்கு அடிகோலிப் பிரெஞ்ச் மன்னர் ஏழாம் சார்லஸ் மகுடம் சூடச் செய்தது. ஆனால் பட்டம் சூடிய சார்லஸ் மன்னன், ஜோன் ஆஃப் ஆர்க்கின் தொடர்ந்த போர் முயற்சிகளுக்குப் போதிய படையினரை உதவாமல், மாறாகத் தன் விருப்புத் திட்டங்களில் முனைந்தது, அவளுக்கு வினையாகி அவளது மரணப் பாதைக்கு வழி வகுத்தது!
****
இதுவரை நிகழ்ந்தது: ஜோன் ஆஃப் ஆர்க் போரை முன்னடத்திச் செல்ல, பிரெஞ்ச் படையினர் கடுமையாகப் போரிட்டு ஆர்லியன்ஸ் கோட்டையை முதலில் கைப்பற்றினார்கள். போர்க் களத்தில் ஜோன் படுகாய முற்றாள். ஆவேசமாக ஜோன் ஆணையில் போரிட்ட பிரெஞ்ச் படையினர், ஆர்லியன்ஸ் கோட்டையை மீட்டனர்! ரைம்ஸ் தேவாலய அரங்கத்தில் மங்கல வாத்தியக் கருவிகள் முழங்க, பணிமங்கை ஜோன் முன்னிற்க, பாதிரியார்களும், அரசவை உறுப்பினர்களும் சூழ சார்ல்ஸ் மன்னர் முடி சூடினார். ஆங்கிலக் கார்டினல் ஜான் போயர், ஆங்கிலச் செல்வந்தக் கோமகனார் மற்றும் கிறித்துவத் திருச்சபை மேல்வர்க்கப் பாதிரியார் பீட்டர் கெளஸான் மூவரும் ஆங்கிலப் படையின் முதல் தோல்வியையும், பிரெஞ்ச் மன்னர் சார்லஸ் முடி சூட்டு விழாவையும் கேள்வியுற்று அவமானப்பட்டு, ஜோனைப் பழிவாங்கத் திட்டமிடுகிறார்கள். ஆர்லியன்ஸ் கோட்டையை ஆக்கிரமித்த பிறகு மற்ற சில இடங்களையும் கைப்பற்றி, ஜோன் பாரிஸைப் பிடிக்கத் திட்டமிடுகிறாள்.
ஆனால் அடுத்து வரப்போகும் போர்களில் சார்லஸ் மன்னருக்குச் சிறிதுகூட விருப்பம் இல்லை. தொடர்ந்து ஜோனுக்குப் படை அனுப்பவும் மன்னர் உடன்படவில்லை. அவளைப் பின்பற்றும் சிறு படையுடன் ஜோன் தனியாகச் சென்றால், பகைவர் கையில் சிக்கிக் கொள்வாள் என்று பலர் அவளைத் தடுக்கின்றனர். ஆயினும் ஜோன் தன்னைச் சூழ்ந்த சிறு படையுடன் போரிட்டு காம்பைன் மற்றும் சில தளங்களைப் பிடித்தாள். பாரிஸைத் தாக்கச் சென்ற ஜோனின் படை தோல்வியுற்றுப் பின்வாங்கியது! வசந்த காலத்தில் காம்பைன் பகுதியை நோக்கி ஜோன் மீளும் போது, அது பர்கண்டி டியூக் (பிரெஞ்ச்) கைவசம் இருந்தது. அப்போது சிறு படையுடன் நெருங்கிய ஜோனைத் தனிப்படுத்திப் பர்கண்டி பகைவர் (பிரெஞ்ச்) பிடித்துப் பியூரிவாயர் [Beaurevoir] சிறையில் இட்டனர்! பணமுடிப்பைப் பெற்று பர்கண்டி அதிகாரிகள் ஜோனை ஆங்கில நண்பர்களுக்கு விற்கிறார்கள். ஜோன் விலங்கிடப் பட்டு ரோவன் [Rouen] சிறையில் ஆங்கில மூர்க்கரிடம் சித்திரவதை செய்யப் படுகிறாள். விசாரணை நடத்திய வழக்கு மன்றம் கடைசியில் தண்டனை வழங்குகி, ஆங்கிலக் காவலர் எரிப்புப் பீடத்துக்கு ஜோனை இழுத்துச் செல்கிறார்கள். ஆணாதிக்க உலகம் 19 வயது (மே மாதம் 30, 1431) அபலைப் பெண்ணை உயிரோடு எரித்து வேடிக்கை பார்க்கிறது!
ஏழாம் காட்சி (பாகம்-1)
[ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து]
காலம்: ஜோன் எரிந்து 25 ஆண்டுகள் (1456 ஜூன் மாதக் வேனிற் காலம்)
இடம்: அரண்மனையில் அரசரின் படுக்கை அறை.
நேரம்: பகல் வேளை
நாடகத்தில் பங்கு கொள்வோர்:
1. பிரெஞ்ச் மன்னன் சார்லஸ் [வயது: 51]
2. சகோதரர் மார்டின் லாட்வெனு
3. ஜோன் ஆஃப் ஆர்க் [அசரீரிக் குரலில்]
4. பிரெஞ்ச் மேல்நிலைப் பாதிரி கெளஸான் [அசரீரிக் குரலில்]
அரங்க அமைப்பு: சார்லஸ் மன்னன் படுக்கையில் தூக்கம் வராது ஏக்கமுடன் தலையைச் சொரிந்து கொண்டு மிரள மிரள விழித்துக் கொண்டு கையில் புத்தகம் ஒன்றை ஏந்திப் படித்தும், படிக்காமலும் பரபரப்புடன் காணப்படுகிறார். அலங்காரம் செய்யப்பட்ட அறையில் கவர்ச்சியான ஓவியங்கள் காண்போர் கவனத்தை ஈர்க்கின்றன. படுக்கை அருகில் இருக்கும் கன்னி மேரியின் படத்திற்கு முன் மெழுகுவர்த்தி ஒன்று எரிந்து கொண்டுள்ளது. வயதான சகோதரர் மார்டின் லாட்வெனு, 25 ஆண்டுகளுக்கு முன் ஜோன் ரோவென் நகரில் எரியும் போது காட்டிய சிலுவைக் கம்பை ஏந்திக் கொண்டு உள்ளே நுழைகிறார். சார்லஸ் மன்னன் அவர் வருகையை எதிர்பார்க்க வில்லை. படுக்கையில் அமர்ந்திருக்கும் சார்லஸ் பயந்துபோய்ப் புத்தகத்தை விட்டெறிந்து, சட்டெனக் குதித்தெழுகிறார். பக்கத்தில் தொங்கும் உறைக்குள் இருந்த வாளை உருவி வருவோன் முன்னால் நீட்டுகிறார்.
சார்லஸ் மன்னன்: [அதிர்ச்சியுடன் வாளை உயர்த்திக் கொண்டு மெதுவாக அங்குமிங்கும் நோக்கி] யாரது இங்கே ? வராதே என் முன்பு! வாள் உள்ளது என் கையில்! எங்கே அரண்மனைக் காவலர் ? உனக்கு என்ன வேண்டும் ? சொல்! முதலில் நில்! என்னை நெருங்கினால் உன் தலை உடம்பை விட்டு விடைபெற்று ஓடிவிடும்!
லாட்வெனு: [கையில் சிலுவைக் கம்புடன்] மாண்புமிகு மன்னரே! அடியேன் சகோதரன் மார்டின்! லாட்வெனு! என் கையில் சிலுவை உள்ளது! அதற்கு முன்பாக உங்கள் வாளை நீட்டாதீர்கள்! இருபத்தி ஐந்து ஆண்டுக்கு முன், ஜோன் கண்களைக் கடைசியாகத் தெரிசனம் செய்த புனிதச் சிலுவை இது! வரலாற்றுப் புகழ் பெற்ற வலுவான சிலுவை இது! தயவு செய்து உங்கள் வாளை உறைக்குள் புகுத்துங்கள்! நான் நல்ல செய்தி கொண்டு வந்திருக்கிறேன். உங்களைத் தாக்க நானிங்கு இந்த வேளையில் வரவில்லை!
சார்லஸ்: [வாளை உறையுள் சொருகிக் கொண்டு] நீ யாரென்று முதலில் சொல்! உன்முகம் எனக்குச் சரியாகத் தெரியவில்லை. சற்று அருகே வா!
லாட்வெனு: சகோதரன் மார்டின் நான். உங்களுக்கு உள்ளம் பூரிக்கும் ஒரு நற்செய்தி கொண்டு வந்திருக்கிறேன். ஆனந்தப் படுங்கள் அரசே! உங்கள் குருதியிலிருந்து களங்கம் நீக்கப்பட்டு விட்டது! உங்கள் மகுடத்திலிருந்து கறை எடுக்கப்பட்டு விட்டது! நீண்ட காலம் தாமதப்பட்ட நீதி, கடைசியில் வெற்றிகரமாய் வழங்கப்பட்டு விட்டது!
சார்லஸ்: நீவீர் யாரென்று எனக்குத் தெரியவில்லை! யாருக்கு நீவீர் சகோதரர் ? சற்று விளக்கமாய்ச் சொல்வீரா ?
லாட்வெனு: மாண்புமிகு மன்னா! யாம் எவர்க்கும் சகோதரர் அல்லோம்! யாம் எல்லோருக்கும் சகோதரர் ஆவோம்! தீயில் எரிந்துபோன ஜோனுக்குக் கடைசியில் சிலுவைக் காட்சியை அளித்தவன், அடியேன்தான்! எனது சிலுவை புனிதமடைந்து இருபத்தியைந்து ஆண்டுகள் கழிந்து போயின! அதாவது சுமார் 10,000 நாட்கள்! கடந்து போன அந்த ஒவ்வொரு நாளும், இப்படி நான் கடவுளைப் பிரார்த்தனை செய்து வருகிறேன்: மேல் உலகில் நீதி கிடைப்பதுபோல், இந்த மண்ணில் பிறந்த அவரது புதல்வி ஜோனுக்கும் நீதி வழங்க வேண்டு மென்று!
சார்லஸ்: [சற்று சிந்தித்து] ஓ! எனக்கு நினைவுக்கு வருகிறது! … இப்போது! உன்னைப் பற்றிக் கேள்விப் பட்டிருகிறேன். ஜோன் பணிமங்கை மீது உனக்குத் தீராத பாசம் என்று தெரியும் எனக்கு. ரோவென் நீதி மன்றத்தில் நீ வழக்காடலைப் பார்த்தாயா ?
லாட்வெனு: ஆமாம் மன்னரே! ஜோன் வழக்கில் நான் சாட்சியாய்ப் பேசவும் செய்தேன். எல்லாம் முடிந்து விட்டதே, ஒரு கனவுபோல்!
சார்லஸ்: என்ன ? எல்லாம் முடிந்து விட்டதா ? ஆனால் திருப்தியாக முடிந்ததா ?
லாட்வெனு: கடவுளின் போக்கே விந்தையாய் உள்ளது! புதிராய் உள்ளது! புரிய வில்லை எனக்கு!
சார்லஸ்: ஏனப்படிச் சொல்கிறாய் ?
லாட்வெனு: நீதி வழக்கில் உண்மை வெளிவந்தது! ஒரு புனித மங்கையை மதத் துரோகி என்றும், சூனியக்காரி என்றும் குற்றம் சாட்டி, தீக்கம்பத்திற்கு அனுப்பிய உண்மை வெளிப்பட்டது! சட்டம் அதற்கு உதவியது! ஆனால் பாபம், பணிமங்கைக்குச் சட்டம் புரியாத வயது! சட்டம் தெரிந்த வல்லுநர்கள் அவளைக் குற்றம் சாட்டப் பொய்யுரைகளைப் புகன்று தப்பிக் கொண்டார்! சட்டம் தெரியாத பணிமங்கை உண்மை சொல்லி அவர்கள் விரித்த வலையில் சிக்கிக் கொண்டார்! பாபத் தீர்ப்பளிக்க வழக்கு மன்றத்தார் ஜோன் மீது அளவிலாப் பரிவும், பாசமும், இரக்கமும் காட்டித் தீயிலிருந்து காப்பாற்றப் பெரு முயற்சி செய்தார்! ஆனால் அது வெற்றியாக வில்லை! வழக்கு நிபுணரால் முடியாமல் தோல்வி யுற்றதும், அனுதாபம் எல்லாம் ஆவேச மானது! அவரது ஆங்காரம் ஜோனை உடனே தீயில் தள்ளியது! கடைசிவரை பரிவு காட்டியோர், ஜோன் மீது பொய்க்குற்றம் சாட்டி இரக்கமற்ற கடுந்தீயில் தள்ளினர்!
சார்லஸ்: ஆலய நீதிபதிகளும், வைத்துக் கொண்ட வழக்கறிஞர்களும் உன்னத ஞானம் படைத்த வல்லுநர் ஆயிற்றே! அவர்கள் அனைவரும் அப்படியா நடந்து கொண்டார் ? ஆச்சரியமாக இருக்கிறதே!
லாட்வெனு: பைபிள் மீது கைவைத்து நெஞ்சார உறுதிமொழி கூறிய உத்தமர், ஜோனுக்கு எதிராய் வெட்கமற்றுப் பொய்யுரைத்தார். ஆலயப் பாதிரிகள் சிலர் கைப்பணம் ஒரு கையில் வாங்கிக் கொண்டு, அடுத்த கையைப் பைபிள் மீது வைத்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார். வேடிக்கையாக இல்லையா ? பொய்யும் புரட்டும் ஜோனின் மேல் ஈட்டிகளாய் ஏவப் பட்டன! தூய நங்கை ஜோனைச் சூனியக்காரி என்று பட்டம் சூட்டி, நியாயமற்ற முறையில் அவளைத் தூக்கித் தீயின் வாயில் ஊட்டினர் ஆலயத் தூதர்கள்! அவ்விதம் செய்து எல்லாரது முன்பாக ஒரு பெரும் பொய்மூட்டை நிரந்தரமாய்ப் புதைக்கப் பட்டது! எல்லாரது முன்பாக மாபெரும் தவறு, மன்னிக்க முடியாத தவறு ஒன்று தெரியாமல் மறைக்கப் பட்டது!
சார்லஸ்: அதெல்லாம் போகட்டும்! எனக்கு மகுடம் சூடியவள் ஒரு சூனியக்காரி, மந்திரக்காரி என்று இகழ்ச்சி ஏற்படாத வரையில் பொய், புரட்டு பழிகளைக் கூறி ஜோனைத் தீயிலிட்டுப் பொசுக்கியதைப் பற்றி நானெதுவும் கவலைப்படப் போவதில்லை! கடைசியில் எல்லாம் முறையாக நடந்திருந்தாலும், ஜோன் அதைப் பொருட் படுத்தி யிருக்க மாட்டாள்! அவளைப் பற்றி நன்கு அறிந்தவன் நான் ஒருவனே! அவளுக்குக் கிடைத்தது நல்ல மரணம்! மண்ணுலகை விட்டு அவள் பொன்னுலகுக்குப் போய்விட்டாள்! தீ விழுங்கி ஜோன் கரிப் புகையாய் அழிந்து விட்டாள் என்று நினைப்பது நீ! தீயால் புனிதப்பட்டு நறுமணப் புகையாய்ப் புவியெங்கும் பரவி விட்டாள் என்று நினைப்பவன் நான்!
(தொடரும்) [ஏழாம் காட்சி பாகம்-2 அடுத்த வாரத் திண்ணையில்]
****
தகவல்:
1. Saint Joan, A Play By: George Bernard Shaw, Penguin Plays (1971)
2. Saint Joan of Arc By: Mark Twain
3. Personal Recollections of Joan of Arc By: Mark Twain
4. The Creativity of Joan of Arc By: Christopher Russell (1997).
5. Saint Joan of Arc Encyclopaedia of Britannica (1978)
6. Saint Joan of Arc (1412-1431) Chambers Encyclopaedia (1968)
7. The New Book of Knowledge By: Grolier International (1984)
8. Britannica Concise Encyclopedia (2003)
9. English Poem, ‘Warrior Woman ‘ By: Maria Jastrzebska (Poland English Poetess)
10 The Visionary of Joan of Arc, The Story of Saint Joan (French Web Sites)
11 The Maid of Orleans A Play By: Friedrich von Schiller
****
jayabarat@tnt21.com [S. Jayabarathan October 25, 2005]
- கவிதைகள்
- கேள்வி-பதில்
- திறந்திடு சீஸேம்!
- 24 வது புகலிட தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2005
- எழுத்தில் ஒளிரும் பெருஞ்சுடர்
- கவிஞர். எஸ்.வைதீஸ்வரனின் 70வது வயது நிறைவை ஒட்டி சென்னையில் நடந்தேறிய சிறப்பு இலக்கியக் கூட்டம்….
- சுவாசம் தரும் மராத்தியத் திரைப்பட உலகம்
- தெளிவு
- சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – II
- அறிவுஜீவிகளின் குஷ்பி(வி)சம்.
- விம்பம் – குறும்படவிழா
- நண்பர் சுரா அவர்களுக்கு
- காலம்
- அலறியின் மூன்று கவிதைகள்
- இலையுதிர் காலம்
- புதுமையும்,பெண்ணியமும்!
- இதயம் முளைக்கும் ?
- கற்புச் சொல்லும் ஆண்!
- பெரியபுராணம் – 62
- கைகளை நீட்டி வா!
- சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – I
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க ஆலயங்கள் -4 (The Great Abu Simbel Temples of Egypt)
- இதயம் முளைக்கும் ?
- தொழிற்றுறை விரிவும்,மனிதவதையும்!
- அமெரிக்க தகவல் மையத்திற்கு ஒரு ‘ஸி.ஐ.ஏ. ஏஜெண்ட் ‘(!) எழுதிய கடிதம்
- கண்காணிப்பு சமுதாயம்
- என் புருஷன் எனக்கு மட்டும்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து)
- 4: 03
- பால்வீதி
- ஆயிரத்து முன்னூறு ரூபாய்
- தேசியப் பொருளாதாரம்
- பெண்ணீயம் என்பது
- பூவக பூலோக வாழ்க்கை ! (Earth Life in Florida)
- கீதாஞ்சலி (46) – வாசல் முன் நீ வந்தாய்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- தீயில் கரையத்தானே
- சாவி ? ? ?
- தீயில் கரையத்தானே
- ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் ஒரு விசாரணைக் குழு
- கணினிக்குள் விழுந்துவிட்ட தத்தை
- ஒரு கடல் நீரூற்றி
- புத்தக அறிமுகம் – பெரும் திருட்டு: தீவிரவாதிகளிடமிருந்து இஸ்லாத்தை மீட்டெடுத்தல்
- மழலைச்சொல் கேளாதவர்