சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஐந்தாம் காட்சி பாகம்-4)

This entry is part [part not set] of 26 in the series 20050722_Issue

சி. ஜெயபாரதன், கனடா


‘நான் இராணுவக் கூட்டத்தோடு ஓடி விடிவேன் என்று என் தந்தை அடிக்கடிக் கனவு காண்பதாக, என் தாய் என்னிடம் கூறினாள்! தந்தை என் சகோதரக்கு இட்ட உத்தரவு: ‘அவ்விதம் ஓடி விடுவாள் என்று நம்பும் என் கனவு மெய்ப்பித்தால், நீங்கள் அவளைக் குளத்தில் மூழ்க்க வேண்டும்! அவ்விதம் நீங்கள் செய்யா விட்டால், நானே என் கையால் அவளை மூழ்க்கி விடுவேன் ‘. அக்கூற்றுக்கு இரண்டாண்டுகள் கழித்துத்தான் எனக்கு அசரீரிக் குரல்கள் கேட்க ஆரம்பித்தன! நாட்டை விடுவிக்கக் கடவுள் எனக்குக் கட்டளை யிட்டிருப்பதால், நான் அப்பணியை முடிக்கப் போயாக வேண்டும். ஆயிரம் ஆயிரம் அப்பனுக்கும், அம்மைக்கும் நான் பிறந்தாலும் சரி, அல்லது ஓர் அரச குமாரியாக நான் அவதரித் திருந்தாலும் சரி, கடவுளின் ஆணையாக இருப்பதால் நான் வீட்டை விட்டு ஓடத்தான் போகிறேன். ஆங்கில அன்னியரைப் பிரான்ஸிலிருந்து விரட்ட என்னைப் போன்ற ஒரு பாமர மங்கை முன்வருவதில் கடவுளுக்குப் பேருவகை அளிக்கிறது! ‘

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431)

கதைச் சுருக்கம்: பதினைந்தாம் நூற்றாண்டில் விடுதலை வேட்கை கொண்டு நூறாண்டுப் போரில் பிரிட்டனுடன் போரிட்டு, அடிமை நாடாக இருந்த பிரான்ஸை விடுவித்த 19 வயது ஜோன் ஆஃப் ஆர்க் வீராங்கனையைச் சூனியக்காரி என்று ஆங்கில ஆணாதிக்க வர்க்கம் குற்றம் சாற்றி உயிரோடு எரித்தது. அவளது குறுகிய வாழ்வின் அதிசயக் கதை மெய்யாக நிகழ்ந்தது. பிரான்ஸ் நாட்டில் லொர்ரேன் பகுதியில் உள்ள டோம்ரெமி என்னும் கிராமத்தில் 1412 ஆம் ஆண்டு ஜனவரி 6 இல் ஜோன் ஆஃப் ஆர்க் பிறந்தவள். மன வைராக்கியம் படைத்த ஜோன், சிறு வயதிலேயே பிரான்ஸின் விடுதலையைக் கனவாகக் கண்டு கடவுளால் ஏவப்பட்டதாகக் கருதிப் போராடியவள். கல்வி கற்காத பட்டி நங்கை ஆயினும் அவள் கொண்டிருந்த ஆழ்ந்த மத நம்பிக்கையும், தளராத மன உறுதியும், உயர்ந்த போர்த் திறனும், படைகளை முன்னடத்திச் சென்று பிரான்ஸின் விடுதலைக்கு அடிகோலிப் பிரெஞ்ச் மன்னர் ஏழாம் சார்லஸ் மகுடம் சூடச் செய்தது. ஆனால் பட்டம் சூடிய சார்லஸ் மன்னன், ஜோன் ஆஃப் ஆர்க்கின் தொடர்ந்த போர் முயற்சிகளுக்குப் போதிய படையினரை உதவாமல், மாறாகத் தன் விருப்புத் திட்டங்களில் முனைந்தது, அவளுக்கு வினையாகி அவளது மரணப் பாதைக்கு வழி வகுத்தது!

****

இதுவரை நிகழ்ந்தது: ஜோன் ஆஃப் ஆர்க் போரை முன்னடத்திச் செல்ல, பிரெஞ்ச் படையினர் கடுமையாகப் போரிட்டு ஆர்லியன்ஸ் கோட்டையை முதலில் கைப்பற்றினார்கள். போர்க் களத்தில் ஜோன் படுகாய முற்றாள். ஆழமாய் நுழைந்த அம்பை எடுக்கப் பிறர் அஞ்சிய போது, பற்களைக் கடித்துக் கொண்டு ஜோனே தன் கையால் அகற்றினாள்! ஆவேசமாக ஜோன் ஆணையில் போரிட்ட பிரெஞ்ச் படையினர், ஆர்லியன்ஸ் கோட்டையை மீட்டனர்! ரைம்ஸ் தேவாலய அரங்கத்தில் மங்கல வாத்தியக் கருவிகள் முழங்க, பணிமங்கை ஜோன் முன்னிற்க, பாதிரியார்களும், அரசவை உறுப்பினர்களும் சூழ சார்ல்ஸ் மன்னர் முடி சூடினார். ஆங்கிலக் கார்டினல் ஜான் போயர், ஆங்கிலச் செல்வந்தக் கோமகனார் மற்றும் கிறித்துவத் திருச்சபை மேல்வர்க்கப் பாதிரியார் பீட்டர் கெளஸான் மூவரும் ஆங்கிலப் படையின் முதல் தோல்வியையும், பிரெஞ்ச் மன்னர் சார்லஸ் முடி சூட்டு விழாவையும் கேள்வியுற்று அவமானப்பட்டு, ஜோனைப் பழிவாங்கத் திட்ட

மிடுகிறார்கள். ஆர்லியன்ஸ் கோட்டையை ஆக்கிரமித்த பிறகு மற்ற சில இடங்களையும் கைப்பற்றி, ஜோன் பாரிஸைப் பிடிக்கத் திட்டமிடுகிறாள். ஆனால் அடுத்து வரப்போகும் போர்களில் சார்லஸ் மன்னருக்குச் சிறிதுகூட விருப்பம் இல்லை. தொடர்ந்து ஜோனுக்குப் படை அனுப்பவும் மன்னர் உடன்படவில்லை. அவளைப் பின்பற்றும் சிறு படையுடன் ஜோன் தனியாகச் சென்றால், பகைவர் கையில் சிக்கிக் கொள்வாள் என்று பலர் அவளைத் தடுக்கின்றனர்.

ஐந்தாம் காட்சி (பாகம்-4)

இடம்: ரைம்ஸ் கிறித்துவத் தேவாலயம்

நேரம்: பகல் வேளை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

1. மகுடம் சூடிய சார்லஸ் மன்னர்

2. ஜோன் ஆஃப் ஆர்க்

3. போர்த் தளபதி ஜாக் துனாய்ஸ்

4. அரசாங்கப் போர் அதிகாரி லா ஹயர்.

5. புளு பியர்டு எனப்படும் கில்லெஸ் தி ரைஸ்.

6. ஆர்ச்பிஷப்.

அரங்க அமைப்பு: ரைம்ஸ் தேவாலய அரங்கத்தில் மங்கல வாத்தியக் கருவிகள் முழங்கிய வண்ணம் இருக்கின்றன. ஆலய மாளிகையில் பாதிரியார்களும், அரசவை உறுப்பினர்களும் சூழ்ந்து பாராட்டுகள் தெரிவிக்க, முடி சூடிய சார்ல்ஸ் மன்னர் மகிழ்ச்சியிடன் தென்படுகிறார். பிரார்த்தனை மண்டபத்தில் இரும்புக் கவச உடையில் தனியே மண்டியிட்டு, ஜோன் மேரி அன்னையைத் தொழுத வண்ண மிருக்கிறாள். தளபதி துனாய்ஸ் பிரார்த்தனை மண்டபத்தில் ஜோனுடன் உரையாடும் போது, சார்லஸ் மன்னர், ஆர்ச்பிஷப், புளு பியர்டு, லா ஹயர் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

ஜோன்: [ஆங்காரத்தில் எழுந்து] ஏன் ? ஏனிந்த அநீதி ? ஏனிந்தப் படுகொலை ? அந்த மாதைப் பார்ஸில் எரித்தது ஆடவரின் மிருகத்தனம்! அபலைப் பெண்ணை எரித்தது ஆடவரின் காட்டுத்தனம்! தற்கால மாந்தர் கற்கால மாந்தராய் மாறிய கதையைச் சொல்லி என்னைப் பயமுறுத்த வேண்டாம்! உண்மை உரைத்த அந்தப் பெண்ணை எரித்தது நியாயமற்றது! நெறியற்றது! நீதிக்குப் புறம்பானது!

ஆர்ச்பிஷப்: ஜோன்! நீ நீதிபதியா ? உன்னகென்ன தெரியும் ? பயங்கரமான அத்தண்டனை பாரிஸில் நிறைவேற்றப் பட்டது! நீ தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குச் சொன்னேன்! உனக்கு எச்சரிப்பாக இருக்கட்டும் என்பதற்குச் சொன்னேன்!

ஜோன்: ஆனால் நிச்சயம் உங்களுக்குத் தெரியும் அவள் நிரபராதி என்று. அப்படி நான் தண்டிக்கப் பட்டால், நீங்கள் அதைத் தடுத்து என்னைப் பாதுகாப்பீரா ? என்மீது அருள் கூர்ந்து எனக்கு எச்சரிக்கை செய்யும் நீங்கள், சிங்கத்தின் வாயிலிருந்து என்னை மீட்கச் சிரமப் படுவீரா ?

ஆர்ச்பிஷப்: [ஆவேசமாக] நான் சர்கஸ் வித்தைக்காரன் அல்லன்! சிங்கத்தின் வாயில் நீ சிக்கிக் கொண்டால், நான் அருகில் கூட அண்ட முடியாது! சிங்கம் தின்பதை வேடிக்கை பார்ப்பதைத் தவிர, ஆயுத மற்ற பாதிரியால் வேறு என்ன செய்ய முடியும் ? நான் ஆயுதங்களைக் கையால் தொடுபவனும் அல்லன்.

ஜோன்: நீங்கள்தான் தேவாலயத் திருச்சபையின் மேலாதிக்க அதிபர்! நாட்டு மன்னரும், பாமர மக்களும் உங்கள் முன் மண்டி இட்டு நீங்கள் இடும் கட்டளையை நிறைவேற்றுவார்! நாட்டில் நெறிகளை, ஆன்மீக உணர்வை மாந்தருக்கு ஊட்டி வருபவர் நீங்கள்! உங்களால் பாதுகாக்க முடியா தென்றால் பின் யாரால் முடியும் ? என்னைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பு! உங்கள் ஆசீர்வாதத்துக்குக் காத்துக் கிடப்பவள் இந்தப் பணிமங்கை ஜோன். [ஆர்ச்பிஷப் முன் மண்டி யிட்டு மனமுடைகிறாள்.]

ஆர்ச்பிஷப்: [முகத்தைத் திருப்பிக் கொண்டு] என் கரங்கள் உன்னை ஆசீர்வதிக்கா! பணிவில்லாத, அடக்க மில்லாத, கர்வம் பிடித்த ஒரு பாவைக்கு பாதுகாப்பு அளிக்க மாட்டார், பாதிரி. உன்னைக் காப்பாற்றக் கூடியவர் நீ மகுடம் சூட்டிய மன்னர் ஒருவர்தான். என் கால்களில் உன் கண்ணீர்த் துளிகளை விடுவதை விட, மன்னர் கால்களைப் பிடித்து மன்றாடு! அல்லது நீ தினமும் பேசிக் கொள்ளும், உன் கடவுளிடம் போய் மன்றாடு!

ஜோன்: [மண்டி யிட்ட நிலையில்] தேவாலயத் திருமகனே! ஏன் மீண்டும், மீண்டும் அவ்விதம் என்னை அவமதிக்கிறீர் ? நான் கர்வக்காரியும் இல்லை! பணிவில்லாப் பாவையும் இல்லை! நானொரு பாமர மங்கை! பட்டி மங்கை! பள்ளிக்குச் செல்லாத படிப்பறி வில்லாத பாவை! ஏயிக்கும், பியுக்கும் வேறுபாடு தெரியாது எனக்கு! நான் எவ்விதம் கர்வக்காரி ஆக முடியும் ? நான் பணிவு கொண்டவள்! பணிவில்லாத பாவையுடன் கடவுள் அடிக்கடித் தொடர்பு கொள்வாரா, பாதிரியாரே ? கடவுளின் எனக்கிடும் கட்டளையை என்றும் மீறாத ஒரு பணிவு மங்கை நான்!

ஆர்ச்பிஷப்: எனக்குத் தெரியும். தேவாலயம் மூலமாகத்தான் கடவுளின் கட்டளைகள் பூமிக்கு வருகின்றன! உன்னிடம் மட்டும் கடவுள் ஏன் நேராகப் பேசுகிறார் என்பது எனக்குப் புரியவில்லை! தேவாலயத் திருச்சபையின் தூண்களாகிய எங்களிடம் கடவுள் ஏன் பேசுவதில்லை ? நேராகக் கடவுள் உன்னிடம் பேசுவதாக நீ கூறி வருவதை நான் நம்ப மாட்டேன்! உன் மனத்தில் எழும் எதிரொலியைத்தான் கடவுளின் கட்டளை என்று எமக்கும், பிறர்க்கும் சொல்லி ஏமாற்றி வருகிறாய்!

ஜோன்: [சட்டென எழுத்து அழுத்தமாக] நீங்கள் சொல்வதில் சிறிது கூட உண்மை இல்லை! நம்பினாலும் சரி, நம்பா விட்டாலும் சரி, கடவுளின் கட்டளைகள் என் குரல்கள் அல்ல! படிப்பில்லாப் பாவை ஒருத்தி பிரான்ஸின் தலைவிதியை இவ்விதம் மாற்ற முடியுமா ? கடவுள் வழிகாட்டி என்னை நடத்தாமல், தனியே கனவு கண்டு நானொருத்தி இப்படிச் செய்ய முடியும் எப்படி நீங்கள் நம்பலாம் ?

ஆர்ச்பிஷப்: [கோபத்துடன்] அடக்கமற்ற பெண்ணே! நீ எப்படி தேவாலயத் திருச்சபை அதிபதியைப் பொய்யன் என்று மிடுக்காகக் கூறலாம் ? உன் செருக்கு இன்னும் அடங்க வில்லை! பெண்ணாக இல்லாமல் நீ ஓர் ஆணாக இருந்திருந்தால், இப்போது உன் கன்னத்தில் ஓர் அறை விழுந்திருக்கும்!

ஜோன்: [பணிவாக, அழுத்தமாக] திருச்சபை அதிபதியைப் பொய்யுரைத்தவர் என்று இகழவில்லை நான்! என் அசரீரிக் குரலின் மூலத் தலைவனை நம்பாது, ஏளனப் படுத்தியவர் என்றுதான் கூறினேன். கடவுளின் வாக்காக நம்பா விட்டாலும், என் வாக்காக இருந்தவை மெய்யாக நடந்தனவா இல்லையா ? படிப்பில்லாதவள் அவற்றை மெய்யென்று நிரூபிக்க வில்லையா ? அதன் பலாபலன்களை மன்னரும், மக்களும், ஆலயமும் அனுபவிக்கும் போது, பாதிரியார் மட்டும் ஏன் வேதனைப்பட வேண்டும் ? மேலும் ஆண்கள் பெண்களைக் கன்னத்தில் அறைவது வழக்கமற்ற செயலா ? நீங்கள் நாட்டு நிலவரம் தெரியாத பாதிரி என்பதைக் காட்டிக் கொண்டார்கள்! ஒரு கன்னத்தில் நீங்கள் அறைந்தால், நான் அடுத்த கன்னத்தைக் காட்டுபவள் என்று நினைக்காதீர். அவ்விதம் நீதிநூல் கூறுவது ஒருவரின் பணிவைக் காட்ட வில்லை! அடிமைத் தனத்தைக் காட்டுகிறது. பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அறைபவன் ஒரு கீழ்த்தர மனிதன்! அடியைத் தாங்கிக் கொண்டு, எதிர்க்காமல் அடுத்த கன்னத்தைக் காட்டுபவள் மேல்தர மாதாக இருக்க முடியாது!

ஆர்ச்பிஷப்: [வெறுப்புடன்] நீ ஒரு பெண்ணில்லை, ஆண் என்று மறுபடியும் நிரூபிக்கிறாய்! உனக்கு அறிவுரை புகட்டுவதும், எச்சரிக்கை செய்வதும் வீண் வேலை. எது சொன்னாலும், நீ வேங்கை போல் பாய்கிறாய்!

சார்லஸ் மன்னர்: செக்கு மாடுபோல் உன் உரலையே சுற்றிச் சுற்றி வருகிறாய்! நீ சொல்வது எல்லாம் உண்மை. ஆனால் மற்றவர் சொல்வது எல்லாம் தவறு. அப்படித்தானே.

ஆர்ச்பிஷப்: இதை எனது இறுதி எச்சரிக்கையாய் எடுத்துக்கொள். ஆன்மீகப் புனிதரின் ஆணைகளை மீறி, உன் தனிப்பட்ட நியாயத்தை நீ நிலைநாட்டினால், தேவாலயம் உன்னை அறவே புறக்கணிக்கும்! விதி தள்ளிச் செல்லும் பாதையில் நீ பாதிக்கப்பட உன்னை விட்டுவிட்டுத் திருச்சபை ஒதுங்கிக் கொள்ளும்! மேலதிகாரிகள் சொற்படி நடக்காது, போராசைப் பிடிவாதம் கொண்டு நீ போரைத் தொடர்ந்தால், தேவாலயம் உனக்கு ஆதரவு அளிக்காது.

துனாய்ஸ்: [குறுக்கிட்டு] ஆர்லியன்ஸ் கோட்டை முற்றுகையில் உன் கைவசம் படையினர் மிக்க எண்ணிக்கையில் இருந்தனர். காம்பைன் பகுதியின் பகைக் கூட்டத்தை [Garrison in Compiegne] எதிர்க்க, அவ்விதம் போதிய படைகள் இல்லாவிட்டால், நமக்குப் படுதோல்வி நேரும்! நம்மில் பலர் கொல்லப் படுவார். அல்லது கைதி செய்யப் படுவார்.

ஆர்ச்பிஷப்: துனாய்ஸ் சொன்னதைக் கேட்டாயா, ஜோன் ? தேவாலயம் மட்டுமன்று, இப்போது இராணுவமும் உன்னைப் புறக்கணிக்கப் போகிறது! பகைவரிடம் நீ சிக்கிக் கொண்டால், உன் படையாளிகளும் உனக்கு உதவி செய்யப் போவதில்லை! மேன்மை தங்கிய நம் மன்னரும் கூறி விட்டார், பணமுடிப்பு அளித்து உன்னை மீட்க அரசாங்கத்தில் நிதிவளமும் இல்லை என்று!

சார்லஸ் மன்னர்: [கையை விரித்து] ஆம் ஜோன்! கையில் ஒரு பிராங்க் நாணயம் கூடக் கிடையாது! அது முற்றிலும் உண்மை! தவறிப் போய் பகைவரிடம் போய்ச் சிக்கிக் கொள்ளாதே!

ஆர்ச்பிஷப்: மன்னர் சொன்னதைக் கேட்டாயா ஜோன்! நீ இப்போது தனிப்பட்டுப் போனாய்! போன மாதம் உனக்கிருந்த செல்வாக்கு இப்போது மறைந்து போனது! உன் பிடிவாதத்தால் படையினர் எதிர்ப்பையும் பெற்றுக் கொண்டாய்! உன் மூடத்தனத்தால் ஆலயத்தின் பாதுகாப்பை இழந்தாய்! உன் கர்வத்தால் மன்னரின் உதவியும் கிடைக்காது போனது! இத்தகைய பாபங்களைச் செய்து, கடவுளின் பற்றுப் போர்வைக்குள் மறைத்துப் பலரை நீ மயக்கி வந்திருக்கிறாய்! ஆனால் கவச உடையில் கைக்கொடி ஏந்தி, நீ தெரு வெளியே செல்லும் போது, பொதுமக்கள் ஈக்கள் போல் உன்மேல் விழுந்து போற்றுவர்! உன்மீது பூக்களைத் தூவுவர்! உன் காலைத் தொடுவர்! உன் கையைத் தொட்டு முத்தமிடுவர்! குழந்தைகளைத் தூக்கி வந்து உன்னைக் காட்டுவர்! நோயாளிகளைக் குணமாக்கச் சொல்லி உன்னை வேண்டுவர்! இப்படி எல்லாம் பொதுநபர் உன்னைச் சிரமேல் கொண்டு, புனித மங்கையாக்கி உனக்கு மதிப்பு அளித்து, நீ குப்புற விழுந்து மண்மூடிப் போக குழிபறிப்பர்! அவர்கள் விரும்பினாலும் உன்னை ஒருவர் காக்க முடியாது! மலர் தூவும் மக்கள் மையத்திலும், நீ தனிமையில்தான் தவிப்பாய்! உனக்கும் தீக் கம்பத்துக்கும் இடையே உன்னைக் காப்பாற்றக் கூடியது திருச்சபைக் குழு ஒன்றுதான்!

ஜோன்: [ஆங்காரமாய்] கடவுளைப் பின்பற்றும் ஒருத்தியைப் பாபம் செய்பவள் என்று பழி சுமத்துவதில் பரவசம் அடையும் பாதிரி நீங்கள் ஒருவர்தான்! தலைநகர் பாரிஸைக் கைப்பற்றாமல், மன்னர் மகுடம் சூடிக் கொண்டாலும், அதன் மதிப்பு பாதிதான்! நான் பாரிஸைப் பிடிக்கப் போரிடக் கூடாது என்பதற்குத் திருச்சபைப் பாதிரியார் போடும் தடைகளும், தண்டனைகளும் என் காதில் விழுந்தன! உங்கள் ஆலோசனைகளை விட மேலான ஆலோசனைகளை எனக்கு அளிக்கும் நண்பர் இருக்கிறார். எனக்கும் கடவுளுக்கும் இடையே எந்த தேவலாயமோ அல்லது திருச்சபைத் தூதுவரோ நிற்க நான் இடம் கொடுக்கப் போவதில்லை!

ஆர்ச்பிஷப்: பார்த்தீர்களா மன்னரே! நாம் எவ்வித எச்சரிக்கை அளித்தும் அவை ஜோனின் கல்நெஞ்சில் பாயவில்லை! ஜோன்! எங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாய்! உன் வரட்டுப் பிடிவாதத்தால், உனக்கு எதிராக எம்மைத் திருப்பிப் பகைவராய் ஆக்கி விட்டாய்! இனிமேல் உதவி கேட்டு நீ எங்களை நெருங்காதே! கடவுள் உன் ஆன்மா மீது கருணை காட்ட வேண்டுகிறோம்.

துனாய்ஸ்: அதுதான் உண்மை ஜோன். உன்னை நீதான் மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஜோன்: [அழுத்தமாக] ஆர்லியன்ஸ் கோட்டையைப் பிடிக்க நான் கடவுளின் ஆணையைப் பின்பற்றும் போதும் இதேபோல்தான் நீங்கள் முட்டுக்கட்டை போட்டார். அதற்கு நான் உடன்பட்டு ஒதுங்கி இருந்தால் என்னவாகி யிருக்கும் ? நாமின்னும் ஆங்கிலேயரின் அடிமைகளாக, அவர்கள் மிதிக்கும் தரை விரிப்பாகக் கிடப்போம்! உங்களில் ஒருவருக்குக் கூட ஒருதுளி விடுதலை உணர்ச்சி கிடையாது! ஆம் நான் தனியாகச் சிந்திப்பவள்தான்! இப்போது தனிப்பட்டுப் போனவள்தான்! பிரான்ஸ் அடிமை நாடாக உழலும் போது, ஆடு மேய்க்க மறுத்து நான் வெளியே ஓடியதால், குளத்தில் என்னைக் மூழ்க்க வேண்டுமென்று என் சகோதரருக்கு உத்தரவு இட்டார் என் தந்தை! நமக்கு ஆடு வேண்டுமா, அல்லது பிரான்ஸ் நாடு வேண்டுமா ? மகுடம் சூடிய மன்னரது பேரவையில், எனக்கு நண்பர்கள் இருப்பார் என்று நம்பி ஏமாற்றம் அடைந்தேன். அதற்குப் பதிலாக பிரெஞ்ச் நாட்டைத் துண்டுகளாக்கிப் பங்கிட்டுத் தின்னும் கழுகுகளும், நரிகளும் பெருகியதைக் கண்டு வெட்கப்படுகிறேன்! நான் பாபம் செய்கிறேன் என்றும், தனிப்பட்டுப் போனேன் என்றும் நீங்கள் பயமுறுத்த வேண்டாம்! கடவுள் தனியாக உள்ளார்! பிரான்ஸ் தனியாக உள்ளது! நாடு தனியாக வாடும் போது, நான் ஏன் தனிமையைப் பற்றி வருந்த வேண்டும் ? என் தனிமைப்பாடுக்கு நீங்கள் ஏன் கண்ணீர் விட வேண்டும் ? உங்களுக்கு என் தனிமை பலவீனமாகத் தோன்றலாம்! உண்மையில் தனிமைதான் எனக்கு உறுதி அளிப்பது! எனக்கு வலுவளிப்பது! என் மீது கடவுள் கொண்டுள்ள நட்பு என்றும் தளராது! தணியாது! அவரது வல்லமையில் நான் இயங்கி வருகிறேன்! கடவுளின் பணிகளான எனது கடமைகள் இன்னும் முடியவில்லை! ஆயுள் விளக்கு அணைவதற்குள், நான் பிரான்ஸ் விடுதலை விளக்கில் சுடர் ஏற்ற வேண்டும்! வாழ்க்கை குறுகியது! காலம் குன்றியது! நான் போகிறேன்! போகும் போது பொது மக்களின் கனிவும், கலகலப்பும் உங்கள் வெறுப்புகளுக் கிடையே என் இதயத்தைக் குளிர்விக்கும்! நான் தனியாகவே இவ்வுலகுக்கு வந்தேன்! தனியாகவே உலகை விட்டு நீங்குவேன்! ஆனால் பிரான்ஸின் தனிமைத் தளை நிரந்தரமாக நீங்கும்! [வேகமாக வெளியேறுகிறாள். எல்லாரும் அவள் போவதை அமைதியாக நோக்குகிறார்கள்].

புளு பியர்டு: இப்படி அடம்பிடித்த ஒரு கொடும் குறிக்கோள்வாதியை நான் பார்த்ததே இல்லை! அசையாத, தளராத ஜோனை ஏன் மக்கள் தழுவிக் கொள்ள மாட்டார்கள் ? அவள் நெஞ்சில் சுடர் விட்டெரியும் விடுதலை உணர்ச்சியைப் போற்றாமல் ஒருவன் இருக்க முடியாது! ஆனால் நெருங்க முடியாத எரிமலையின் நிழலில் நாம் எப்படி குளிர்காய முடியும் ?

சார்லஸ் மன்னன்: [அழுத்தமாக] துனாய்ஸ்! ஜோன் கூறியதில் ஓர் அழுத்தமான உண்மை இருக்கிறது! தலைநகர் பாரிஸைக் கைப்பற்றாது, இந்த தங்கக் கிரீடத்தைத் தலையில் வைக்க எனக்கு எப்படித் தகுதி இருக்கிறது ? ஆனால் பாரிஸைப் பிடிக்க நாம் பல உயிர்களைப் பலி கொடுக்க வேண்டும்!

என்ன செய்வது இப்போது ?

துனாய்ஸ்: மாண்புமிகு மன்னரே! பாரிஸைப் பிடிக்க எத்தனை படைவீரர்களை அனுப்பத் தயாராயாக இருக்கிறீர் ? முதலில் அதைத் தீர்மானிக்க வேண்டும்!

சார்லஸ் மன்னன்: [மேலே பார்த்த வண்ணம்] ஆழ்ந்து யோசித்துச் சொல்கிறேன். முதலில் என் மாமியாரைக் கலந்து பேச வேண்டும். அவளிடம்தான் பணப்பெட்டிச் சாவி இருக்கிறது. பணப்பெட்டியை அவள் திறக்கா விட்டால், பாரிஸின் கதையே மாறிப் போகலாம்!

லா ஹயர்: பாரிஸைப் பிடிக்கப் போகும் ஜோனைப் பாதுகாப்பது என் முதல் கடமை! அவள் என்ன பாபம் செய்து நரகத்தில் தள்ளப்பட்டாலும், திரும்பிப் பாராமல் நான் அவளைப் பின்பற்றிச் செல்வேன்!

துனாய்ஸ்: கடவுள் எனக்கு நீதி வழங்கட்டும்! ஜோன் லோயர் நதிக்குள் விழுந்தால், என் கவச உடையோடு குதித்து அவளைக் காப்பாற்றி இழுத்துக் கொண்டு கரை சேர்ப்பேன்! ஆனால் காம்பைன் நகரப் போரில் அவள் ஏதாவது தில்லுமுல்லு பண்ணிப் பகைவரிடம் சிக்கிக் கொண்டால், அவளது சீர்கேட்டில் அவளே நாசமடைய அப்படியே விட்டுவிடுவேன்.

லா ஹயர்: நன்றியுள்ள பிரெஞ்ச் தளபதி துனாய்ஸ் பேசும் பேச்சா இது ?

ஆர்ச்பிஷப்: ஜோன் அகந்தையில் அழியும் வேளை வந்துவிட்டது! அதிர்ச்சி யூட்டும் அவளது ஆவேசப் போக்கில் அபாயம் நிகழப் போகிறது, அவளுக்கும், நமக்கும்! அவளது பாதையில் ஆழ்குழி ஒன்று வாயைத் திறந்து கொண்டிருக்கிறது! நமக்கு நல்லதோ அல்லது கெட்டதோ, அவள் குழியுள்ளே விழப் போவதை யாரும் தடுக்க முடியாது!

[அனைவரும் பிரார்த்தனை மாளிகையை விட்டுப் போகிறார்கள்]

(ஐந்தாம் காட்சி முற்றும். ஆறாம் காட்சி பாகம்-1 அடுத்த வாரத் திண்ணையில் தொடரும்)

****

தகவல்:

1. Saint Joan, A Play By: George Bernard Shaw, Penguin Plays (1971)

2. Saint Joan of Arc By: Mark Twain

3. Personal Recollections of Joan of Arc By: Mark Twain

4. The Creativity of Joan of Arc By: Christopher Russell (1997).

5. Saint Joan of Arc Encyclopaedia of Britannica (1978)

6. Saint Joan of Arc (1412-1431) Chambers Encyclopaedia (1968)

7. The New Book of Knowledge By: Grolier International (1984)

8. Britannica Concise Encyclopedia (2003)

9. English Poem, ‘Warrior Woman ‘ By: Maria Jastrzebska (Poland English Poetess)

10 The Visionary of Joan of Arc, The Story of Saint Joan (French Web Sites)

11 The Maid of Orleans A Play By: Friedrich von Schiller

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan July 19, 2005]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts