சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஐந்தாம் காட்சி பாகம்-3)

This entry is part [part not set] of 30 in the series 20050715_Issue

சி. ஜெயபாரதன், கனடா


‘ஆங்கிலேயர்களே! பிரெஞ்ச் முடியரசு நாட்டில் உங்களுக்கு எந்தப் பந்தமும் இல்லை, உரிமையும் இல்லை. கோட்டைகளைக் கைவிட்டு உங்கள் நாட்டுக்கு ஓடிச் செல்ல ஜோன் பணிமங்கை, என்மூலம் கடவுள் உமக்கு எச்சரிக்கையும், ஆணையும் இடுகிறார். அல்லாவிட்டால் நான் அதற்காகப் போரிடுவேன்! நீங்கள் என்றென்றும் மறக்கா வண்ணம் உங்களை எதிர்த்துத் தாக்க முற்படுவேன்! இதுவே எனது மூன்றாவது எச்சரிக்கை! என் முடிவான எச்சரிக்கை! இனிமேல் நான் உமக்கு எழுதப் போவதில்லை! ‘

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431)

கதைச் சுருக்கம்: பதினைந்தாம் நூற்றாண்டில் விடுதலை வேட்கை கொண்டு நூறாண்டுப் போரில் பிரிட்டனுடன் போரிட்டு, அடிமை நாடாக இருந்த பிரான்ஸை விடுவித்த 19 வயது ஜோன் ஆஃப் ஆர்க் வீராங்கனையைச் சூனியக்காரி என்று ஆங்கில ஆணாதிக்க வர்க்கம் குற்றம் சாற்றி உயிரோடு எரித்தது. அவளது குறுகிய வாழ்வின் அதிசயக் கதை மெய்யாக நிகழ்ந்தது. பிரான்ஸ் நாட்டில் லொர்ரேன் பகுதியில் உள்ள டோம்ரெமி என்னும் கிராமத்தில் 1412 ஆம் ஆண்டு ஜனவரி 6 இல் ஜோன் ஆஃப் ஆர்க் பிறந்தவள். மன வைராக்கியம் படைத்த ஜோன், சிறுவயதிலேயே பிரான்ஸின் விடுதலையைக் கனவாகக் கண்டு கடவுளால் ஏவப்பட்டதாகக் கருதிப் போராடியவள். கல்வி கற்காத கிராமத்து நங்கை ஆயினும் அவள் கொண்டிருந்த ஆழ்ந்த மத நம்பிக்கையும், தளராத மன உறுதியும், உயர்ந்த போர்த் திறனும், படைகளை முன்னடத்திச் சென்று பிரான்ஸின் விடுதலைக்கு அடிகோலிப் பிரெஞ்ச் மன்னர் ஏழாம் சார்லஸ் மகுடம் சூடச் செய்தது. ஆனால் பட்டம் சூடிய சார்லஸ் மன்னன், ஜோன் ஆஃப் ஆர்க்கின் தொடர்ந்த போர் முயற்சிகளுக்குப் போதிய படையினரை உதவாமல், மாறாகத் தன் விருப்புத் திட்டங்களில் முனைந்தது, அவளுக்கு வினையாகி அவளது மரணப் பாதைக்கு வழி வகுத்தது!

****

இதுவரை நிகழ்ந்தது: ஜோன் ஆஃப் ஆர்க் போரை முன்னடத்திச் செல்ல, பிரெஞ்ச் படையினர் கடுமையாகப் போரிட்டு ஆர்லியன்ஸ் கோட்டையை முதலில் கைப்பற்றினார்கள். போர்க் களத்தில் ஜோன் படுகாய முற்றாள். கோட்டைப் போரில் கழுத்தடியில் வில்லம்பு அடித்து, இரும்புக் கவசத்தையும் ஊடுறுவிச் சென்று ஜோன் தரையில் வீழ்ந்தாள்! ஆழமாய் நுழைந்த அம்பை எடுக்கப் பிறர் அஞ்சிய போது, பற்களைக் கடித்துக் கொண்டு ஜோனே தன் கையால் அகற்றினாள்! ஆவேசமாக ஜோன் ஆணையில் போரிட்ட பிரெஞ்ச் படையினர், ஆர்லியன்ஸ் கோட்டையை மீட்டனர்! வயதான ஆங்கிலக் கார்டினல் ஜான் போயர், ஆங்கிலச் செல்வந்தக் கோமகனார் மற்றும் கிறித்துவத் திருச்சபை மேல்வர்க்கப் பாதிரியார் பீட்டர் கெளஸான் மூவரும் ஜோன் ஆஃப் ஆர்க்கின் முதல் வெற்றியைக் கேள்வியுற்று, அவமானப் பட்டு அவளைப் பழிவாங்கத் திட்டமிடுகிறார்கள். ரைம்ஸ் தேவாலய அரங்கத்தில் மங்கல வாத்தியக் கருவிகள் முழங்க, பணிமங்கை ஜோன் முன்னிற்க, பாதிரியார்களும், அரசவை உறுப்பினர்களும் சூழ சார்ல்ஸ் மன்னர் முடி சூடுகிறார். ஆர்லியன்ஸ் கோட்டையைப் பிடித்த பிறகு ஜோன் பாரிஸைப் கைப்பற்றத் திட்டமிடுகிறாள். ஆனால் அத்திட்டத்தில் சார்லஸ் மன்னருக்குச் சிறிது விருப்பமும் இல்லை.

ஐந்தாம் காட்சி (பாகம்-3)

இடம்: ரைம்ஸ் கிறித்துவத் தேவாலயம்

நேரம்: பகல் வேளை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

1. மகுடம் சூடிய சார்லஸ் மன்னர்

2. ஜோன் ஆஃப் ஆர்க்

3. போர்த் தளபதி ஜாக் துனாய்ஸ்

4. அரசாங்கப் போர் அதிகாரி லா ஹயர்.

5. புளு பியர்டு எனப்படும் கில்லெஸ் தி ரைஸ்.

6. ஆர்ச்பிஷப்.

அரங்க அமைப்பு: ரைம்ஸ் தேவாலய அரங்கத்தில் மங்கல வாத்தியக் கருவிகள் முழங்கிய வண்ணம் இருக்கின்றன. ஆலய மாளிகையில் பாதிரியார்களும், அரசவை உறுப்பினர்களும் சூழ்ந்து பாராட்டுகள் தெரிவிக்க, முடி சூடிய சார்ல்ஸ் மன்னர் மகிழ்ச்சியிடன் தென்படுகிறார். பிரார்த்தனை மண்டபத்தில் தனியே மண்டியிட்டு, ஜோன் மேரி அன்னையைத் தொழுத வண்ணமிருக்கிறாள். ஆண்களின் கவசப் போருடையைச் சீராக ஜோன் அணிந்திருக்கிறாள். தளபதி துனாய்ஸ் பிரார்த்தனை மண்டபத்தில் ஜோனுடன் உரையாடும் போது, சார்லஸ் மன்னர், ஆர்ச்பிஷப் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

துனாய்ஸ்: [சற்று வெட்கப்பட்டுத் தலை குனிந்து] ஜோன்! என்னருமை ஜோன்! ஜெனரல் ஜோன்! போதும், போதும் என் மானத்தை மன்னர் முன் வாங்குவது.

ஜோன்: என் போர்த் திறமையைப் பற்றி நான் புகழ்த்திக் கொள்ளக் கூடாது! என்னைப் பற்றி நீயே மன்னரிடம் சொல், துனாய்ஸ்!

துனாய்ஸ்: ஜோன்! போரிடும் போது கடவுள் உன்பக்கம் இருந்தார். நான் அப்போர்களை மறக்க முடியாது. நீ கால்வைத்த இடத்தில் அனுகூலமாக எப்படிக் காற்று திசை மாறியது ? அஞ்சிய எங்கள் நெஞ்சங்கள் உன் குரல் கேட்ட பின் எப்படிப் பொங்கி எழுந்தன ? உன் வருகையால், உன் இருக்கையால் நாம் வெற்றி அடந்தோம் என்பது முற்றிலும் உண்மையே! நானொரு போர்வீரன் என்ற முறையில் சொல்ல வருவது இதுதான்: கடவுள் எந்த மனிதனின் கூலியாள் இல்லை! எந்தப் பணிமாதின் வேலைக்காரன் இல்லை! உனக்கு வாழ விதி இருக்குமாயின், மரணத்தின் கோரப் பற்களிலிருந்து கடவுள் விடுவித்து உன் காலிலே உன்னை நிற்க விடுவார்! பிறகு நீயேதான் உன் சக்தி முழுவதையும் ஈந்து சண்டையில் போராட வேண்டும். அதே சமயம் கடவுள் உன் பகைவருக்கும் நடுத்தரம் காட்டுகிறார். அதை மறக்கக் கூடாது. ஆர்லியன்ஸ் போரில் கடவுள் நமக்கு ஆதரவாக இருந்து வெற்றி அளித்து, அடுத்த போர்களிலும் வெல்லச் செய்து சார்லஸ் மன்னர் முடிசூட வழி அமைத்தார். ஆனால் அதுபோல் சாதிக்க வேண்டிய கடமைகளை நாம் மேற்கொள்ளாது, கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு ஒதுங்கிக் கொண்டால், பகைவரால் நாமினி மிதிக்கப் படுவோம்! நமக்குத் தகுந்த வெகுமதி போரில் தோல்விதான்!

ஜோன்: என்னுடைய வேதவாக்கு இதுதான். கடவுளை துதித்துக் கொண்டு, கடமையே கண்ணாகக் கருதி முழு நம்பிக்கையோடு முற்பட வேண்டும். நமது கடமையச் கடவுள் செய்ய மாட்டார்! நமது போராட்டத்தில் நியாயம் இருப்பின், கடவுள் உதவி செய்வார். நமது கடமைகளை முடிப்பதற்கு நாம்தான் பொறுப்பாளிகள். கடவுள் மீது பாரத்தைப் போட்டு கடமையைச் செய்யாமல் வெற்றியை எதிர்பார்த்தால், தோல்விதான் கிடைக்கும்!

துனாய்ஸ்: ஜோன்! நமது வெற்றிக்கு நம்மன்னர் சார்லஸ் ஒரு காரணம். அதை நாம் மறக்கலாகாது. வெற்றி விழாவில் என்னைப் பற்றி, என் பங்களிப்பைப் பற்றி நீ ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை! நானதைப் புகார் செய்யப் போவதில்லை! அது போகட்டும். பணிமங்கை, பணிமங்கை என்று பாராட்டி, அவளது அற்புத வெற்றிகளைச் சீராட்டும் பொதுநபர், உணவு, உடை அளித்துப் படைகளைப் பயிற்சி செய்த தளபதி துனாய்ஸின் பெருமையை அறிய வாய்ப்பில்லைதான்! ஆனால் எனக்குத் தெரியும். பணிமங்கை மூலமாகக் கடவுள் நமக்குத் தந்த வெகுமதியும், அவர் நான் முடிக்காமல் விட்டுப் போனவையும் எனக்கு நன்றாகத் தெரியும். நான் உனக்குச் சொல்ல வருவது இதுதான்! உனது அற்புத வினைகள் முடியும் வேளை வந்து விட்டது! ஆனால் அதற்குப் பிறகு சாமர்த்தியமாகப் போரிட்டு வெல்பவரே, சாதனை வீரர்கள்! அத்துடன் அதிர்ஷ்ட தேவதையின் கண்ணொளியும் அவர் மீது பட வேண்டும்.

ஜோன்: துனாய்ஸ் தளபதியாரே! உனது போர்க் கலைத்திறன் புராதன முறையானது. உன் உதவியாளர் போரிடப் போதிய திறமை இல்லாதவர். கனமான கவசங்களை அணிந்து, விழுந்தால் எழ முடியாத நிலையில் உதவியாளரைத் தேடுகிறார். பீரங்கி முன்னால் இரும்புக் கவசங்கள் என்ன பாதுகாப்பளிக்கும் ? பிரான்ஸுக்காகப் போரிடுவோரும், கடவுளுக்காக வாளெடுப்போரும் கையில் பணமுடிப்பை வாங்கிப் பின்தங்க மாட்டார்! என்னுடன் இணைந்து போரிட்டவர் பாமர மக்கள்! அவருக்குக் கவச உடை இல்லை! பணமில்லா விட்டாலும் அவர் எவரும் பண முடிப்பைத் தேட வில்லை! பாதி உடை அணிந்த சாதாரண நபர்தான் நான் கோட்டை மீது ஏணி வைத்து ஏறிய போது கூடவே ஏறியவர்கள். ஆனால் காப்டன் போன்ற உனது மேலதிகாரிகள் ஆர்லியன்ஸ் முற்றுகையின் போது என்னைப் பின்பற்றி ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட மறுத்தனர் தெரியுமா ?

புளு பியர்டு: [அவமானப்பட்டு] ஜோன், நீ போப்பாண்டவராக இருப்பதோடு, போர்க் களத்தில் ஜூலியஸ் சீஸராகவோ அல்லது அலெக்ஸாண்டராகவோ இருக்க வேண்டும். வெகுத் திறமையாக தளபதியைக் கீழே தள்ளி, உன் சங்கை நன்றாகவே ஊதிக் கொள்கிறாய்!

ஆர்ச்பிஷப்: [ஆங்காரமாக] உந்தன் பீற்றல், பெருமைப் பேச்சு உன்னைக் கீழே தள்ளப் போகிறது, ஜோன்! அகந்தையில் அழியும் காலம், மெய்யாக உன்னை நெருங்கி விட்டது!

ஜோன்: ஆர்ச்பிஷப் அவர்களே! பீற்றலோ, பெருமையோ அதை எப்படி வேண்டுமாலும் எடுத்துக் கொள்ளுங்கள்! நமது படையினரைப் பற்றி நான் உரைத்தது மெய்யா அல்லது இல்லையா வென்று கூறுங்கள்.

ஆர்ச்பிஷப்: [சினத்துடன்] நான் இரும்புக் கவசம் அணிந்து உன்னைப் போல் போர்க்களத்தில் புரள்பவன் அல்லன்! புனித வெள்ளை அங்கி அணிந்து, மனித ஆத்மாக்களுக்குப் பாப மன்னிப்பு அளிப்பவன்!

லா ஹயர்: ஆர்ச்பிஷப் அவர்களே, ஜோன் கூறியது உண்மைதான்! நம்மில் பாதிப் படையினர் தமது அழகிய மூக்கு அறுபட்டு விடும் என்று பயந்து புறங்காட்டி ஓடினர்! மற்ற பாதிப்பேர் வீட்டுக் கடன் அடைபட வேண்டும் என்று பண முடிப்பை ஏற்றுக் கொண்டு போரிடாமல் இருந்தனர்! ஜோனுக்கு எல்லா விபரங்களும் தெரியாது. ஆனால் அவள் நியாயத்தைப் பின்பற்றி அவள் கூறுவது சரியே! பிரம்பின் சரியான நுனியைத்தான் அவள்கை பிடித்திருக்கிறது. அவளுக்குப் போர் பழக்க வழக்கங்களைப் பற்றிப் முழுமையாகத் தெரியாது. என் பொன்மொழி இதுதான்: போரைப் பற்றிச் சொற்ப அறிவுள்ளவர், அதைச் சீராக முடிப்பதில் தீரராக இருக்கிறார். அதற்குச் சான்று, பதினெட்டு வயது பணிமங்கை ஜோன்!

துனாய்ஸ்: எனக்குத் தெரியும் அது. பண்டை முறையில் நான் போரிட விரும்பினேன். அகின்கோர்ட், பாயிட்டியர், கிரிஸி போன்ற இடங்களில் போரிட்டு நிறையக் கற்றுக் கொண்டேன். ஒருநாள் போரில் எத்தனை உயிரிழப்பு நேரலாம் என்று ஊகித்து, அத்தனை அரிய உயிர்களைப் பலியிட்டு அந்தக் கோட்டையைப் பிடிப்பது தகுதி உடையதா என்று மதிப்பிடுவேன். ஆனால் ஜோனுக்குப் போரில் நேரும் உயிரிழப்போ அல்லது நிதியிழப்போ பெரியதாகத் தெரிவதில்லை! கண்களை மூடிக் கொண்டு கடவுளை நெஞ்சில் வைத்து, போர்க்களம் நோக்கி விரைகிறாள். தன்னைச் சுற்றி யிருக்கும் பகைவர் ஈட்டிகளை அவள் கண்டு கொள்வ தில்லை! … அதனால் ஒருநாள் ஜோன் பகைவர் கைவசப்படலாம் என்று எனக்கோர் பயம் உண்டாகிறது! அவளைப் பிடிப்பதற்குப் பல குள்ள நரிகள் பதுங்கி இருக்கின்றன! பிரிட்டாஷ் கோமகனார் ஓவரீக் (Ouareek) ஜோனைப் பிடித்தத் தருபவருக்கு பதினாறாயிரம் பவுன்ஸ் பண முடிப்பு அளிப்பதாகப் பறைசாற்றி யுள்ளார்!

ஜோன்: [சிரித்துக் கொண்டு] அத்தனை ஆயிரம் நாணயங்களுக்கு நான் நிகரானவளா ? ஆச்சரியப் படுகிறேன்! ஒரு படிப்பில்லா பாவையைப் பற்ற பதினாறு ஆயிரம் பவுண்ஸ் அளிக்கும் பைத்தியகாரனும் இருக்கிறானா ?

லா ஹயர்: [சீற்றமுடன்] சிரிக்காதே ஜோன்! அப்படி உன்னைப் பிடிக்க நாங்கள் விட்டுவிட மாட்டோம்! பிரான்ஸை மீட்டுத் தந்த ஜோனை, சார்லஸ் மன்னருக்கு மகுடம் சூட்டிய ஜோனை, நாங்கள் பகைவர் பிடித்திட விட்டு விடுவோமா ? துனாய்ஸ்! ஜோனின் கடமை முடிந்து விட்டது! இப்போது நமது கடமை, முதற் கடமை. ஜோனைப் பாதுகாப்பது!

ஆர்ச்பிஷப்: [சினத்துடன்] ஆனால் நாட்டில் விடுதலை உணர்ச்சியை எழுப்பி, ஜோன் தானாகக் கோட்டைகளைப் பிடிக்கச் சென்றால், இறுதியில் பகைவர் பிடியில் ஏன் சிக்க மாட்டாள். பிறகு சார்லஸ் மன்னர் கூட அவளைக் காப்பாற்ற முடியாது! ஏன் ? அவள் அடிக்கடிப் பேசும் அந்தக் கடவுள் கூட, அவளைக் காப்பாற்ற முடியாது! அந்தக் காட்சியை பிரெஞ்ச் படையும் வேடிக்கை பார்க்கும்! அவளுடைய மேலுலகப் பிரபுவும் வேடிக்கை பார்ப்பார்!

சார்லஸ் மன்னர்: நானும் வேடிக்கை பார்ப்பேன்! என்னைப் பிரெஞ்ச் மக்கள் மன்னராக ஏற்றுக் கொண்டாலும், ஆங்கிலேயர் என்னை ஏற்றுக் கொண்டதாகத் தெரிய வில்லை! ஜோன் பிடிபட்டால் நான் அவளை மீட்க முடியாது! அம்மாதிரி நடப்புக்குச் சமாதான நிலையை நிறுவத்தான், நான் பர்கண்டித் தளபதியுடன் உடன்பாடு செய்து கொள்ள விரும்புகிறேன்! ஆனால் ஜோன் அந்த உடன்பாட்டை வெறுக்கிறாள்! தானாகச் சென்று பகைவர் வலையில் ஜோன் சிக்கிக் கொண்டால், நான் அவருடன் போருக்குப் போக விரும்ப வில்லை!

லா ஹயர்: [மனம் நொந்து] என்ன ஒற்றுமை நமக்குள்ளே! பிரான்ஸைப் பகைவரிடமிருந்து கைப்பற்றிய பணிமங்கை ஜோனை மீட்க, ஆடவராகிய நாம் துணிவும், வலுவும் இல்லாமல் மண் புழுக்களாய் இருக்கிறோம்! நன்றி கெட்ட நாட்டினத்தவர் நாம்! ஜோன் தன்னுயிரை நாட்டுக்குக் கொடுக்க அஞ்ச வில்லை! ஆனால் அந்த நங்கையை மீட்டுவர நமக்கெவர்க்கும் துணிவில்லை! மனமில்லை! துடிப்பு மில்லை!

துனாய்ஸ்: [கோபமாக] அப்படியா ? நான் இப்போது உங்கள் அனைவரையும் கேட்கிறேன்! ஆங்கில மூர்க்கர் கையில் ஜோன் பிடிபட்டால், உங்களில் யாரெல்லாம் அவளைக் காப்பாற்ற முன் வருவீர்கள் ? நான் ஓர் படைத் தளபதி என்ற முறையில் பேசுகிறேன். பர்கண்டித் துரோகிகள் ஜோனைப் பிடித்தால், ஒரு படைவீரனைக் கூட அனுப்பி அவளை நான் மீட்க அனுமதிக்க மாட்டேன்! ஜோனை அவர்கள் சிறையில் தள்ளினால், ஜோன் துதிக்கும் காதிரைன் தேவமகளோ அல்லது மைக்கேல் தேவமகனோ சிறைப் பூட்டை உடைத்து அவளை விடுவிக்கப் போவ தில்லை! ஆனால் தனிப்பட்ட முறையில் ஜோன் மீது எனக்கு அளவு கடந்த மதிப்பும், பாசமும் உள்ளது! தனிப்பட்ட முறையில் ஜோனைக் காத்திட நான் தாவிச் செல்வேன்! என்னுயிரைக் கொடுத்தும் அவள் உயிரைக் காப்பேன்! இது என் உறுதி மொழி!

ஜோன்: [ஏமாற்ற உணர்ச்சியுடன்] நன்றி துனாய்ஸ் நன்றி! முதலில் நீ கூறியது உண்மையே! ஒரு படைவீரன் உயிர் இழப்புக்கு நான் உகந்தவள் இல்லை! பல்லாயிரம் பவுண்ஸ் நாணய மதிப்புக்கும் நான் தகுந்தவள் இல்லை! கடவுளின் கட்டளையைத் தலைமேல் கொண்டு பிரான்ஸை விடுவித்ததற்கு எனக்கு எந்தக் கைமாறும் தேவையில்லை! நான் கூலிக்கு உழைக்கும் பேதை யில்லை! என்னால் மற்றவர் பணமுடிப்பு பெற்றுப் பலனடைந்தால், யாருமதைத் தடுக்க முடியாது! ஆனால் அன்பர்களே! என்பணி இன்னும் முடியவில்லை! நீங்கள் பகைவரின் பாபச் செயல்களைக் காட்டி, என் மனதை மாற்ற முற்படாதீர்கள்! என்னைப் பிடிக்கப் பகைவர் ஒளிந்திருக்கிறார் என்று பயமுறுத்தி என் பணியிலிருந்து என்னைத் திருப்ப முற்படாதீர்கள்! இந்த எறும்புக் கடிகளுக்கு அஞ்சி நான் கடவுளின் கட்டளையை மறப்பவளில்லை! மனிதர் கைவிட்டாலும் கடவுள் என்னைக் கைவிட மாட்டார்!

ஆர்ச்பிஷப்: [சட்டெனக் குறுக்கிட்டு] ஜோன்! உன் அருமைக் கடவுள் உனக்குக் கைகொடுக்க மாட்டார்! கடவுளை நம்பியவர் கைவிடப் படுவார்! உன்னை இப்போது காப்பாற்றக் கூடியது ஒன்றே ஒன்று! அதுதான் கிறித்துவத் தேவாலயம்!

ஜோன்: [அழுத்தமாக] தேவாலய திருச்சபை உறுப்பினரே! கடவுள் என்னைக் கைவிட்டாலும், நானவரைக் கைவிட மாட்டேன்! போதும் உம் வரட்டு உபதேசம்!

சார்லஸ் மன்னர்: [ஏளனமாக] ஜோன்! என் கையில் பணமில்லை! நீ ஏற்றி வைத்த இந்த மகுடம் நிதியை உற்பத்தி செய்யாது! நிதியை விழுங்கும்! நீ செய்த இந்தத் தவறால், என் நிதிச் சேமிப்பையும் இழந்தேன்! ஜோன்! இதை நினைவில் வைத்துக்கொள். நான் பண முடிப்பளித்து உன்னை மீட்கக் கூடிய நிலையில் இல்லை. வருந்துகிறேன் அதற்கு! என்னிலை அப்படி! உன்னைப் பின்பற்றி ஊர் ஊராய்ச் சென்று படை எடுத்துப் பற்றுவது என் கை அகராதியில் இல்லை!

ஜோன்: மேன்மை மிக்க மன்னரே! கிறித்துவத் தேவாலயம் உங்களை விட நிதிச்செல்வம் கொண்டுள்ளது தெரியுமா ?

ஆர்ச்பிஷப்: பணிமங்கையே! கடவுளை நேராகத் தொடர்பு கொள்ளும் நீ, தேவாலய நிழலைத் தேடிச் செல்ல மாட்டாய்! உன்மீது தேவாலயம் கருணை காட்டுமா என்பது என் ஐயப்பாடு! உன்னைச் சூனியக்காரி என்று குற்றம் சாட்டித் தெருத் தெருவாய் இழுத்துச் செல்ல தேவாலயம் திட்ட மிட்டுள்ளது!

ஜோன்: [வேதனையுடன்] இல்லை! இல்லை! மெய்யாக நான் சூனியக்காரி இல்லை! தேவாலயத் திருவாளரே! அப்படி என்னைச் சொல்லாதீர்கள்! எனக்கு மந்திரமும் தெரியாது, சூனியமும் தெரியாது, மர்ம வித்தைகளும் தெரியாது! நான் ஒரு பட்டி மங்கை! கடவுள் சொற்படி நடக்கும் கன்னி! கடவுள் இடும் கட்டளையை நிறைவேற்றும் கடமைக் கன்னி!

ஆர்ச்பிஷப்: ஜோன்! அதுதானே உன் தவறு! அங்குதான் பிரச்சனையே எழுகிறது! அதில்தான் முரண்பாடே உதிக்கிறது! நீ தேவாலயத்தின் சொற்படி செய்யாமல், அதற்கும் உயர்ந்த மேற்படியில் நின்று எங்களுக்கு ஆணை இடுவதை நாங்கள் எப்படித் தாங்கிக் கொள்வோம் ? பீட்டர் கெளஸானைத் தெரியுமா ? அவர் ஒரு பீரங்கி! அதற்கு முன்னால் நீ நிறுத்தப் பட்டிருக்கிறாய்! கடவுளின் கட்டளையை மேற்கொண்டு உன்னைப் போல் இருந்த ஒரு மாதைப் பாரிஸ் பல்கலைக் கழகம் உயிரோடு எரித்ததை நீ அறியமாட்டாய்!

ஜோன்: [ஆங்காரத்தில் எழுந்து] ஏன் ? ஏன் ? அந்த மாதை அப்படி எரித்தது மிருகத்தனம்! அபலைப் பெண்ணை எரித்தது காட்டுத்தனம்! தற்கால மாந்தர் கற்கால மாந்தராய் மாறிய கதையைச் சொல்லி என்னைப் பயமுறுத்த வேண்டாம்! உண்மை உரைத்த அந்தப் பெண்ணை எரித்தது நியாயமற்றது! நெறியற்றது! நீதிக்குப் புறம்பானது!

(தொடரும்) (ஐந்தாம் காட்சி தொடர்ச்சி பாகம்-4 அடுத்த வாரத் திண்ணையில்)

****

தகவல்:

1. Saint Joan, A Play By: George Bernard Shaw, Penguin Plays (1971)

2. Saint Joan of Arc By: Mark Twain

3. Personal Recollections of Joan of Arc By: Mark Twain

4. The Creativity of Joan of Arc By: Christopher Russell (1997).

5. Saint Joan of Arc Encyclopaedia of Britannica (1978)

6. Saint Joan of Arc (1412-1431) Chambers Encyclopaedia (1968)

7. The New Book of Knowledge By: Grolier International (1984)

8. Britannica Concise Encyclopedia (2003)

9. English Poem, ‘Warrior Woman ‘ By: Maria Jastrzebska (Poland English Poetess)

10 The Visionary of Joan of Arc, The Story of Saint Joan (French Web Sites)

11 The Maid of Orleans A Play By: Friedrich von Schiller

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan July 13, 2005]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts