சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (நான்காம் காட்சி தொடர்ச்சி பாகம்-2)

This entry is part [part not set] of 23 in the series 20050609_Issue

சி. ஜெயபாரதன், கனடா


‘மெய்யாக நீவீர் என் உடலை அங்கம் அங்கமாக வெட்டி எனது ஆத்மாவைத் துண்டித்தாலும், இதற்கு மேல் நான் எதுவும் சொல்லப் போவதில்லை! அவ்விதம் நான் எதுவும் உங்களுக்கு இனிமேல் உரைத்தால், கட்டாயப் படுத்தி என்னை நீவீர் கூற வைத்ததாக நான் பறைசாற்றுவேன். ‘

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431)

‘கிறித்துவத் தேவதூதரே! உங்களுடைய செத்த மரக்கிளையை வெட்டி எம்மிடம் ஒப்புவித்து விடுங்கள்! அதற்குத் தீ வைத்துக் கொளுத்துவதை நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். ‘

பிரிட்டாஷ் கோமகனார், ரிச்சர்டு ஆஃப் பியூகாம்ப்.

கதைச் சுருக்கம்: பதினைந்தாம் நூற்றாண்டில் விடுதலை வேட்கை கொண்டு நூறாண்டுப் போரில் பிரிட்டனுடன் போரிட்டு, அடிமை நாடாக இருந்த பிரான்ஸை விடுவித்த 19 வயது ஜோன் ஆஃப் ஆர்க் வீராங்கனையைச் சூனியக்காரி என்று ஆங்கில ஆணாதிக்க வர்க்கம் குற்றம் சாற்றி உயிரோடு எரித்தது. அவளது குறுகிய வாழ்வின் அதிசயக் கதை மெய்யாக நிகழ்ந்தது. பிரான்ஸ் நாட்டில் லொர்ரேன் பகுதியில் உள்ள டோம்ரெமி என்னும் கிராமத்தில் 1412 ஆம் ஆண்டு ஜனவரி 6 இல் ஜோன் ஆஃப் ஆர்க் பிறந்தவள். மன வைராக்கியம் படைத்த ஜோன் பிரான்ஸின் விடுதலையைக் கனவாகக் கண்டு, சிறுவயதிலேயே கடவுளால் ஏவப்பட்டதாகக் கருதியவள். கல்வி கற்காத கிராமத்து நங்கை ஆயினும் அவள் கொண்டிருந்த ஆழ்ந்த மத நம்பிக்கையும், தளராத மன உறுதியும், உயர்ந்த போர்த்துறைத் திறனும், மக்களை முன்னடத்திச் சென்று பிரான்ஸின் விடுதலைக்கு அடிகோலி, சார்லஸ் மன்னர் மகுடம் சூடச் செய்தது. ஆனால் பட்டம் சூடிப் பரவசம் அடைந்த சார்லஸ் மன்னன், ஜோன் ஆஃப் ஆர்க்கின் போர் விதிகளுக்கு மாறாகத் தன் விருப்புத் திட்டங்களில் முனைந்தது, அவளுக்கு வினையாகி அவளது மரணப் பாதைக்கு வழி வகுத்தது!

****

இதுவரை நிகழ்ந்தது: ஜோன் ஆஃப் ஆர்க் போரை முன்னடத்திச் செல்ல, பிரெஞ்ச் படையினர் கடுமையாகப் போரிட்டு ஆர்லியன்ஸ் கோட்டையை முதலில் கைப்பற்றினார்கள். போர்க் களத்தில் ஜோன் படுகாய முற்றாள். முதல் நாள் காலில் அடிபட்டுக் காயம் ஏற்பட்டது. அடுத்த நாள் ஆங்கிலேயரின் தூரெல்லஸ் கோட்டையைத் [Fort Les Tourelles] தாக்கும் போது வலது நெஞ்சுக்கு மேல் வில்லம்பு அடித்து, இரும்புக் கவசத்தையும் ஊடுறுவிச் சென்று ஜோன் தரையில் வீழ்ந்தாள்! உடனே அன்றைய தினப்போர் நிறுத்தமாகி, ஜோன் சிகிட்சை பெற கூடாரத்துக்குத் தூக்கிச் செல்லப்பட்டாள். ஆழமாய் நுழைந்த அம்பை எடுக்கப் பிறர் அஞ்சிய போது, பற்களைக் கடித்துக் கொண்டு ஜோனே தன் கையில் எடுத்ததாக அறியப்படுகிறது! அன்றைய மாலைப் பொழுதில் சிறிது நேரம் ஓய்வெடுத்த ஜோன், பிறகு வலியைப் பொறுத்து எழுந்து கொண்டு படைகளை மீண்டும் திரட்டி ஆவேசமாகத் தாக்கி, தூரெல்லஸ் கோட்டையிலிருந்து ஆங்கிலப் பகைவரை ஓட்டினாள்.

நான்காம் காட்சி தொடர்ச்சி (பாகம்-2)

காலம்: மே மாதம் 10, 1429

இடம்: ஆங்கிலேயர் தங்கியுள்ள ஒரு கூடாரம்

நேரம்: பகல் வேளை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

1. செல்வந்தப் பிரபு வார்விக் கோமகனார், ரிச்சர்டு ஆஃப் பியூகாம்ப் [Earl of Warwick, Richard De Beauchamp]

2. இங்கிலாந்தின் கார்டினல், ஜான் போயர் ஸ்பென்ஸர் [Cardinal of England].

3. கிறித்துவத் திருச்சபைப் பாதிரியார் பீட்டர் கெளஸான் [Peter Cauchon, Bishop of Beauvais]

4. கோமகனாரின் காவலன்.

அரங்க அமைப்பு:

[ஆங்கிலேயரின் காவற் கூடாரம். 50 வயதான ஆங்கிலக் கார்டினல் ஜான் போயர், 46 வயதுடைய ஆங்கிலப் பிரபு செல்வந்தக் கோமகனார் மற்றும் 60 வயது கிறித்துவத் திருச்சபை மேல்வர்க்கப் பாதிரியார் பீட்டர் கெளஸான் மூவரும் ஜோன் ஆஃப் ஆர்க் பணிமங்கையின் வெற்றியைக் கேள்வியுற்று, அதிர்ச்சி அடைந்து, அவமானப் பட்டு அவளைப் பழிவாங்க திட்டமிட்டுகிறார்கள்.]

கெளஸான்: [அழுத்தமாக] இந்த முடிவில் நமது ஏகோபித்த கருத்தை மட்டும் எடுத்துக் கொள்ளாது, பிறர் கருத்திற்கும், விருப்பு, வெறுப்புகளுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும்! …. சான்றாக முதலில் பிரெஞ்ச் நீதி மன்றம் அவளுக்கு என்ன தீர்ப்பளிக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்வது அவசியம்! லோரேன் பணி மங்கை பிரெஞ்ச் மாது என்பதை நாம் மறக்கக் கூடாது!

கோமகனார்: [திருத்தமுடன்] நீங்கள் … குறிப்பிடுவது …பிரெஞ்ச் காத்திலிக் நீதி மன்றம்! …. இல்லையா ?

கெளஸான்: [சற்று சிந்தனையுடன்] எத்தகையப் புனிதப் பணி புரிந்திருந்தாலும், என்னதான் ஆன்மீக உணர்வு பெற்றிருந்தாலும் காத்திலிக் மதாலய மன்றங்களில் இருப்பவர், மற்ற நீதி மன்றங்களில் இருப்பவர் போன்று அதிசய விருப்பு, வெறுப்புகள் கொண்ட மனிதர்களே! இப்போது பிரிட்டாஷ் படைகளைப் பிரெஞ்ச் படையினர் கலக்கி அடித்துக் கவிழ்த்தி யிருப்பதால், காத்திலிக் ஆலய மன்றத்தில் உள்ள பிரெஞ்ச் மாந்தர், எப்படி ஏகமனதாக ஜோனைக் குற்றவாளியாகக் கருதுவார் ? அதிலும் அவளை எப்படி மந்திரக்காரி என்று இழிவாகப் பழி சுமத்துவார் ?

கார்டினல்: ஜோனின் மந்திர வேலையாக ஏன் இருக்கக் கூடாது ? பாராக்கிரம் கொண்ட தளபதி ஸர் டால்பட் தோற்கடிக்கப் பட்டுச் சிறைக் கைதியாகச் சென்ற அதிசயக் கதை எப்படி நடந்திருக்க முடியும் ? லொர்ரேன் பணி மடந்தையின் மாந்திரீக வேலைதான் இது! அதை நிரூபிக்க வழிகளைக் கண்டுபிடிக்கலாம்.

கெளஸான்: [அழுத்தமான குரலில்] நாம் எல்லோரும் நன்கு அறிவோம், ஸர் ஜான் டால்பட் ஒரு கடுமையான படைவீரர் என்பதை! ஆனால் அவர் ஓர் உயர்ந்த ஞானமுள்ள போர்த் தளபதியா என்பது கேள்விக் குரியது! ஆயினும் டால்பட்டை தோற்கடித்தது, படிப்பற்ற ஜோன் பணிமங்கை இல்லை! தோற்கடித்து கைது செய்தவர், போர்த்திறமை மிக்க பிரெஞ்ச் தளபதி துனாய்ஸ்.

கோமகனார்: [குறுக்கிட்டு] அது உண்மைதான். மண்டார்கிஸ் பகுதியில் துனாய்ஸ் என்னைத் தோற்கடித்ததை அடுத்து சொல்லப் போகிறீர் இல்லையா! நான் ஒப்புக் கொள்கிறேன், நமது சார்பில் போரிட்ட டால்பட் நெஞ்சுறுதி யில்லாத, முறையாகத் திட்ட மிடாத தளபதி! அவர் தோற்றது சரிதான்! பட்டாய் பகுதியில் தோற்று, பிரெஞ்ச் படையிடம் சரண் புகுந்ததும் சரிதான்! பிரிட்டாஷ் படை தவிர்க்க முடியாத தோல்வி இது! மேலும் நமக்குப் பெருத்த அவமானம் இது! நமது தோல்விக்கும், நாம் பட்ட அவமானத்துக்கும் காரணமான அந்த பணிப்பெண்ணைப் பழிவாங்க வேண்டும்! அவளது விஷப் பற்களைப் பிடுங்க வேண்டும்! பதிலுக்குப் பதில் அவளைப் பலர் முன்பாக அவமானப் படுத்த வேண்டும்!

கார்டினல்: [கோபம் மிகுந்து] கோமகனாரே! ஆர்லியன்ஸ் முற்றுகையின் போது, கழுத்தடியில் அம்பொன்று துளைத்துச் சென்று, வலி தாங்க முடியாமல் சிறு குழந்தை போல் கூக்குரல் இட்டாளாம் அந்தக் குமரிப்பெண்! அவளுக்கு அது மரணக் காயம்! அம்பை அகற்றிய பின்பு நாள் முழுவதும் அவளுக்கு வலியுடன் போராட்டம்! அத்தகைய மரணக் காயத்தோடு, மறுநாள் எப்படி போருக்குத் தயாரானாள் என்பது மர்மமாய் உள்ளது! அது மட்டு மில்லை. பிரெஞ்ச் படையின் கடும் தாக்குதல்களை ஆங்கிலப் படையினர் எதிர்க்கும் போது, கைக் கட்டுடன் கொடி ஏந்திய ஜோன் நமது கோட்டை வாயிலை நோக்கித் தனியாக நடந்து சென்றாளாம்! நமது படையினர் அனைவரும் மந்திர சக்தியால் கட்டிப் போட்டாற் போல் முடங்கிக் கிடந்தாராம்! எப்படி இருக்கிறது கதை ? பிச்சைக்கார பிரெஞ்ச் படையினர் பிரிட்டாஷ் படையைப் பாலத்தில் மடக்கித் தள்ளிய போது, பாலம் குப்பென தீப்பற்றி எரிந்ததாம்! மந்தை மந்தையாய் தீயில் மாய்ந்த ஆங்கிலப் படையினர் அடுத்து ஆற்றிலே மூழ்கினராம். எப்படிப் பாலம் தீப்பிடித்தது என்பது விந்தையிலும் விந்தை ? அது மாயத் தீயா ? அல்லது மர்மத் தீயா ? அல்லது மாந்திரீகத் தீயா ? அந்த மந்திர வித்தைக்காரி ஜோனுக்குத்தான் தெரியும்! இந்த மாய வேலைகள் எல்லாம் சாத்தானின் கைவேலைகள்! நரகத்தின் கதவைத் திறந்து, தீயை வெளியில் எறிந்தது மந்திர சக்தி! துனாய்ஸ் தளபதிக்கு எங்கே மாந்திரீகம் தெரியும் ? எல்லாம் மந்திரக்காரி பணிமங்கையின் கைவேலைகள்!

கோமகனார்: [உறுதியாக] கார்டினல் நமக்குப் பரிந்து பேசுவதை ஏற்றுக் கொள்கிறேன்! காப்டன் துனாய்ஸ் பெரும் போர்வீரர் என்பதை மெய்யென்றே வைத்துக் கொள்வோம். ஆனால் இதுவரை ஆர்லியன்ஸ் எதிரே கோட்டையில் இருந்த மகா வீரர் துனாய்ஸ், மந்திரக்காரி வருவதற்கு முன்பாக ஏன் நம்மைத் தாக்க வில்லை ? எனது அழுத்தமான யூகம், துனாய்ஸ் பராக்கிரமம் பெற்றுப் பாய்ந்ததற்குப் பணிமங்கை முன்னின்றதே முற்றிலும் காரணம்!

கெளஸான்: [குறுக்கிட்டு] பணிமங்கையிடம் ஓரளவு தெய்வீக சக்தி இல்லை என்று நான் கூறவில்லை! பாருங்கள், அவளது கைக்கொடிப் படத்தில் சாத்தானோ அல்லது சனியனோ இல்லை! ஏசு பிரபுவின் படமும், அன்னை மேரி படமும் உள்ள கொடியைத்தான் கையில் ஏந்தி யிருக்கிறாள். …. யார் அவர் ? கிலாஸ்டா ? ஆற்றில் மூழ்கிய உங்கள் ஆணைத் தளபதி ? பெயர் சரியாகத் தெரிய வில்லை! மறந்து விட்டேன்.

கோமகனார்: [சற்று சிந்தித்து] கிலாஸ்டேல்! ஸர் வில்லியம் கிலாஸ்டேல்! பிரிட்டாஷ் ஆணைத் தளபதி கிலாஸ்டேல்! போர்க்களப் பராக்கிரமசாலி! அவரைப் போன்ற திறமைசாலி இனி பிறக்கப் போவதில்லை!

கெளஸான்: கிலாஸ்டெல்! ஆமாம், அவர்தான், நன்றி. அவரே இனி பிறப்பாரா என்பது ஐயமே! அவர் ஒன்றும் புனித மனிதரில்லை! போர்த் தீரராக இருக்கலாம்! நான் கூற வருவது அதுவன்று. ஆனால் பிரிட்டாஷ் மாந்தர் பலர் இப்படி நினைக்கிறார்! போரிடும் சமயம் கிலாஸ்டெல் ஆற்றில் விழுந்து மூழ்கிப் போனதற்குக் காரணம், பணிமங்கை ஜோனை வேசி, மூடச் சிறுக்கி, ஒழுக்க மில்லாதவள் எனப் பலமுறைக் கெட்ட வார்த்தையால் அவர் திட்டியது என்று சொல்கிறார்கள்!

கோமகனார்: [வெகுண்டு கெளஸான் முன்வந்து] மாண்பு மிகு தேவ தூதரரே! முடிவாக நீங்கள் எங்களுக்கு என்ன சொல்ல வருகிறீர் ? … நீங்கள் … சுற்றி வளைத்துப் பேசுவதைக் கேட்டால் …. மூடநங்கை மந்திரம் போட்டு உங்களையும் மாற்றி விட்டாள் என்று தெரிகிறது.

கெளஸான்: [நகைத்துக் கொண்டு] அவள் மெய்யாக என்னை மாற்றி யிருந்தால், இப்போது உங்கள் முன்னின்று இப்படி வாதாடுவேனா ? அவளுடைய போலி வித்தையில் மயங்கி யிருந்தால், இவ்விதப் புனித அங்கி அணிந்து, தேவ தூதனாய் ஆலயப்பணி செய்வேனா ? … சாத்தானோ, சனியனோ இந்தச் சூனியக்காரி வடிவத்தில் வந்து என்னை மாற்றப் பிறந்திருப்பாளே ஆகின் …. (பேசத் தடுமாடுகிறார்).

கோமகனார்: (குறுக்கிட்டு) நீங்கள் தடுமாற வேண்டாம்! தைரியமாகப் பேசலாம், எங்களிடம்! நீங்கள் எம்மைக் கைவிட மாட்டார் என்று நம்புகிறோம்! எங்கள் நெஞ்சில் துடித்தெழுவதை நீங்கள் நிறைவேற்றுவீர் என்று நிச்சயம் நம்புகிறோம். …. சொல்ல வந்ததைச் சொல்லுங்கள், தேவதூதரே!

கெளஸான்: சூனியக்காரியின் மர்ம சக்தி என்ன என்ன தீங்குகளை நமக்கு இன்னும் இழைக்கப் போகிறதோ எனக்குத் தெரியாது! பிரெஞ்ச் மாந்தருக்கு இன்னும் என்ன என்ன நன்கொடைகளை வைத்திருக்கிறதோ எனக்குத் தெரியாது! அவற்றால் என்ன என்ன பங்கத்தை மங்கைக்கு விளைவிக்கப் போகிறதோ யாருக்கும் தெரியாது! சாத்தான் காரிருளின் வேந்தன்! சாத்தான் தாக்கினால் அவன் குறிவைப்பது அனைத்து ஆன்மீக பூமியான காத்திலிக் ஆலயத்தை! சாத்தான் அழிக்க விரும்புவது, அனைத்து மனித இனத்தின் ஆத்மாக்களை! அந்த பயங்கரச் சிதைவிலிருந்து மாந்தரைக் காத்திடக் கிறித்துவ ஆலயம் எப்போதும் கண்விழிப்பாக இருக்கிறது. அத்தகைய அபாய ஆயுதங்களில் ஒன்றாக அந்த நங்கை எனக்குத் தோன்றுகிறாள். ஜோனுக்குப் சூனியப் பேய் பிடித்து அவளை ஆக்கிரமித்துள்ளது!

கார்டினல்: எனக்குத் தெளிவாகத் தெரிகிறது, ஜோன் ஒரு மந்திரவாதி!

கெளஸான்: [கோபமாக] இல்லை! அவள் ஒரு சூனியக்காரி! மாந்திரீகம் புரியும் மங்கை இல்லை!

கோமகனார்: சூனியக்காரி, மந்திரக்காரி இந்த இரண்டில் என்னதான் வேறுபாடு ? நான் கூறுவது அவள் ஒரு மங்கையே இல்லை! மனித வடிவில் தோன்றும் மர்மப் பிறவி! இதுவரை வரலாறு காணாத ஒரு வானரப் பிறவி.

கெளஸான்: அவளே தான் மாய வித்தைகளோ அல்லது அற்புதச் சாதனைகளோ செய்பவளில்லை என்று வெளிப்படையாகச் சொல்கிறாள். அவள் வெற்றிக்குக் காரணம் அவளது அழுத்தமான குறிக்கோள்! அதை வைத்துக் கொண்டு படைகளை நடத்திச் செல்லும் பேராண்மை! நிமிர்ந்த தலை! நேர் கொண்ட பார்வை! நேரடிப் பேச்சு! இப்பண்புகளில் ஒன்றுகூட கெட்ட வார்த்தை பேசும் உங்கள் கிலாஸ்டேலுக்கோ அல்லது காட்டெருமையான முரட்டு டால்பட்டுக்கோ கிடையாது. ஜோனுக்கு இருப்பது ஆழ்ந்த நம்பிக்கை! உங்கள் தளபதிக்கு இருப்பது ஆழ்ந்த சினம்! உறுதியான நம்பிக்கை, வலுவான சினத்தை வெல்லும் என்பதை ஜோன் நிரூபித்து விட்டாள்!

கார்டினல்: [ஆத்திரமுடன்] மாண்பு மிகு தேவதூதரே! அயர்லாந்துக்கு மூன்று தரம் கவர்னராக நியமிக்கப்பட்ட ஸர் ஜான் டால்பட்டா உங்களுக்குக் காட்டெருமையாகத் தெரிகிறது ?

கோமகனார்: [சாந்தமாகக் கார்டினலைப் பார்த்து] தேவதூதர் கெளஸான் காட்டெருமை என்று ஒப்புமை கூறுவதை நீவீர் ஏற்கா விட்டாலும் நான் ஏற்றுக் கொள்கிறேன். .. ஆனால் தேவதூதரே! .. என் ஆசை! சூனியக்காரியை நீங்கள் சூட்டால் எரிக்க வேண்டும்!

கெளஸான்: [சினத்துடன்] நான் ஜோனை எரிக்க முடியாது! கிறித்துவ திருச்சபை மாந்தர் உயிரை நீக்க முயற்சி எடுக்காது! அவ்விதத் தண்டனை அளித்து உயிரைப் போக்குவது அதன் குறிக்கோள் இல்லை! பொது மக்கள் நீதி மன்றத்துக்கு இழுத்து வந்து தீர்ப்பளிக்காமல், ஒரு மனிதரைத் தண்டிப்பது கடவுளுக்குப் பொறுக்காது.

கோமகனார்: ஆனால் கிறித்துவ ஆலயம் மத நியதிகளுக்கு எதிராகப் போனவரை, புறம்பாகப் பேசியவரை திருச்சபை தண்டித்துள்ளது. பிரபஞ்சத்தில் பூமியை மையமாகக் கொண்டு, பரிதி, நிலா, புதன், வெள்ளி, செவ்வாய், பூத வியாழன், சனிக் கோள்கள் சுற்றி வருகின்றன என்னும், புவிமைய நியதியைத் திருச்சபை ஆயிரத்தி ஐநூறு ஆண்டுகளுக்கு மேல் பின்பற்றி வருகிறது! அதனை எதிர்த்து பரிதி மையக் கருத்தை உறுதியாக நம்பி உரையாடி வந்தோரைச் சிறைப்படுத்திச் சித்திரவதை செய்து, கம்பத்தில் கட்டி எரித்தது வரலாறுகளில் உள்ளனவே!

கெளஸான்: [கோபத்துடன்] நடந்ததை மாற்ற முடியாது! நடக்கப் போவதைத் தடுக்கலாம்! எனது முதல் கடமை, பணிமங்கைக்குப் பாப விடுவிப்பு அளிப்பது! கிறித்துவ மதாலயத்தின் வழியாக நாடாமல், தனியாகக் நேரடியாகக் கடவுளை நாடுவது, துதிப்பது, அவருடன் உரையாடுவது யாவும் குற்றமானவை! கிறித்துவ திருச்சபையை அவமதித்து, அதைச் சுற்றிச் செல்வது தவறானது! அவ்வினைகள் யாவும் பாப வினைகள்! அந்தப் பாபங்களைத் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும், பணிமங்கையைத் தடுப்பது, எனது முதல் பணி! இதுவரை அவள் செய்த பாபங்களுக்கு விடுவிப்பு அருளி, உடலைக் காக்க முடியாது போயினும் அவள் ஆத்மாவைக் காப்பது எனது இரண்டாம் பணி!

கோமகனார்: அப்படியானல் பொது நீதி மன்றத்தின் முன்பு எப்படி பணிமங்கையை நிறுத்துவது ? அதைப் பற்றி எனக்கு ஆலோசனை சொல்லுங்கள்!

கெளஸான்: [கண்ணிமை கொட்டாமல் கூர்ந்து நோக்கி] அடம் பிடித்த சூனியக்காரியைக் கிறித்துவ திருச்சபை, செத்த மரக்கிளைபோல் வெட்டி, பொது நீதி மன்றத்தாரிடம் ஒப்புவித்து விடும். அதற்கு மேல் சூனியக்காரிக்கு என்ன தீர்ப்பு, என்ன தண்டனை பொது மன்றம் விதிக்கும் என்பதில் திருச்சபைக்கு எவ்வித அக்கரையு மில்லை. கவலையும் இல்லை!

கோமகனார்: கிறித்துவத் தேவதூதரே! இந்த வழக்கில் நான்தான் பொது மன்றத்தின் பிரதிநிதி! உங்களுடைய செத்த மரக்கிளையை வெட்டி எம்மிடம் ஒப்புவித்து விடுங்கள்! அதற்குத் தீ வைத்துக் கொளுத்துவதை நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். நீங்கள் திருச்சபையின் பதவியில் இதைச் செய்தால், நான் பொது மன்றப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன்.

கெளஸான்: [கோபத்தில் உடல் நடுங்க] நான் என் பொறுப்பை ஏற்க மாட்டேன்! அதற்கு உறுதி கூற மாட்டேன்! திருச்சபை உறுப்பினர்களை என்ன வென்று நினைத்தீர் ? செல்வந்த பிரபுக்கள் கிறித்துவத் தேவாலயத் தூதர்களைத் தம் கைப் பொம்மைகளாக ஆட்ட முடியாது. அரசியல் திருவிளையாட்டில் எங்களைப் பகடைகளாக உருட்ட முடியாது! நாங்கள் வேந்தருக்கு வேந்தர்கள்! நாம் யார்க்கும் அடி பணியோம்! நாம் யார்க்கும் அஞ்ச மாட்டோம்! நாம் யார்க்கும் பின் செல்லோம்!

(நான்காம் காட்சி இரண்டாம் பாகம் முற்றும். மூன்றாம் பாகம் அடுத்த வாரத் திண்ணையில்)

****

தகவல்:

1. Saint Joan, A Play By: George Bernard Shaw, Penguin Plays (1971)

2. Saint Joan of Arc By: Mark Twain

3. Personal Recollections of Joan of Arc By: Mark Twain

4. The Creativity of Joan of Arc By: Christopher Russell (1997).

5. Saint Joan of Arc Encyclopaedia of Britannica (1978)

6. Saint Joan of Arc (1412-1431) Chambers Encyclopaedia (1968)

7. The New Book of Knowledge By: Grolier International (1984)

8. Britannica Concise Encyclopedia (2003)

9. English Poem, ‘Warrior Woman ‘ By: Maria Jastrzebska (Poland English Poetess)

10 The Visionary of Joan of Arc, The Story of Saint Joan (French Web Sites)

11 The Maid of Orleans A Play By: Friedrich von Schiller

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan June 6, 2005]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts