போதி மரம்

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

ரம்யா நாகேஸ்வரன்


‘அம்மா! நம்ம வீட்டுலே ரொம்ப நாள் முன்னாடி வாடகைக்கு இருந்தாங்களே விமலா மாமி, அந்த மாமியொட அட்ரஸ் இருக்கா ? ‘ அமெரிக்க வாசனையுடன், இரண்டு ராட்ஷச பெட்டிகள் பாதி திறந்த நிலையில் சாமான்களுக்கு நடுவெ அமர்ந்திருந்த என்னை ஆச்சர்யத்தோடு பார்த்தாள் அம்மா.

‘என்ன வைஷு ? வந்து 24 மணி நேரம் கூட ஆகலை, அதுக்குள்ளே 10-12 வருஷம் முன்னாடி காலி பண்ணிண்டு போன மாமியை பத்தி கேட்கறெ ? மாமிக்கு தெரிஞ்சவா யாரையாவது வாஷிங்டன்ல பார்த்தியா ? ‘

‘இல்லெம்மா. இது வேற காரணதுக்காக. அட்ரஸ் இருக்கா இல்லையா ? ‘

என்னுடைய பிடிவாத குணம் தெரிந்த அம்மா, ‘அப்பாவை கேட்டு பார்க்கறேன். சொந்த வீடு கட்டிண்டுதான் போனா விமலா. அதே இடத்துல தான் இருப்பாள்னு நினைக்கிறேன் ‘ என்று சொல்லிவிட்டு இரண்டு வருடம் கழித்து வந்திருக்கும் பேரன் பேத்திக்காக தட்டை செய்ய ஆரம்பித்தாள் அம்மா.

நல்ல வேளை! அப்பாவிடம் அட்ரஸூம் போன் நம்பரும் இருந்தது. அடுத்த நாளே போன் செய்து, அட்ரஸை சரி பார்த்துக் கொண்டு கிளம்பி விட்டேன். ஏழு வயது ஷ்ரவன் தாத்தாவின் மடியில் அமர்ந்து வி.சி.டியில் ராமாயணம் பார்த்துக் கொண்டே ‘தாத்தா, ஏன் ராமா எல்லார் மேலேயும் darts போடறாரு ? ‘ என்றான். நான்கு வயது ஷ்ருதி ஓடி வந்து ‘அம்மா! பாட்டி ஏன் ப்ளாண்ட் கிட்டே பேசறாங்க ? ‘ என்றாள் துளசி பூஜை செய்யும் அம்மாவைப் பார்த்து. ‘ரெண்டு பேரும் ஒரு த்ரீ அவர்ஸ் சமர்த்தா இருக்கணும் ‘ என்றபடி தலைப் பின்னிக் கொண்டேன்.

‘இன்னும் ஜெட் லாக் கூட போகலை! அத்தை, பெரியம்மா யார் வீட்டுக்கும் போகலை! இப்ப என்ன முக்கியமான வேலை விமலா மாமி கிட்டெ ? ‘ என்று புலம்பிய அப்பாவிடம் மழுப்பலாக சிரித்து விட்டு புறப்பட்டேன்.

ஒரு மணி நேர கார் பயணத்தில் நினைவுகள் அலை பாய்ந்தன!

‘அழகி….பேரழகி….உலகத்து அழகியே! ‘ அப்பொழுது எனக்கு பத்து வயது இருக்குமா ? இல்லை சற்று கூடவா ? நான், என் தோழிகள் ரமா, பாகீரதி மற்றும் அவள் தம்பி ப்ரகாஷும் சேர்ந்து இந்த பாட்டை பாடுவோம். விமலா மாமியின் பெண் உமாவைப் பார்த்து பாடுவோம். உமா பார்ப்பதற்க்குச் சுமாராக இருப்பாள். நிறம் கம்மி. அதுவும் தவிர கன்னத்தில் ஒரு பெரிய மச்சம் வேறு! அவளை சீண்டுவதற்காக நாங்கள் நால்வரும் அழகி என்ற சொல் வருகிற மாதிரி பல பாட்டுக்கள் இயற்றி இருக்கிறோம். உமா அழுது கொண்டெ மாமியிடம் ஓடுவாள். மாமி எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருப்பார். உமா அழும் பொழுது, கண்களில் சிறிது வலி தெரியும். ஆனால் சிரிப்பு மாறாது. ‘ந்ீங்களேல்லாம் சமுத்து தானே ? அவளை கேலி பண்ணாதீங்கப்பா ‘ என்று கெஞ்சும் குரலில் சொல்வார். ‘ சரி மாமி ‘ என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு ஓடி விடுவோம். இரண்டே நாளில் மறுபடியும் இதே நிகழ்வுகள் தொடரும்.

கொஞ்சம் பெரியவர்கள் ஆனவுடன் கேலி செய்வது குறைந்தாலும் உமாவை விட நாங்கள் எல்லொரும் அழகு என்ற கர்வம் இருக்கத் தான் செய்தது. சிறு சிறு செயல்களில் அது வெளிப்பட்டது. புன்னகை மாறாமல் அதை எதிர் கொண்டார் விமலா மாமி. உமாவும் அதை பெரிதாக சட்டை செய்த மாதிரி தெரியவில்லை.

இப்பொழுது நினைத்து பார்க்கும் பொழுது மிகவும் அவமானமாக இருந்தது. சே! மற்றவர்களின் அழுகையில் சந்தோஷப் படுகிற ஒரே ஜன்மம் மனித ஜன்மமாகத்தான் இருக்க முடியும்.

பிறகு அவர்கள் காலி செய்துக் கொண்டு போய்விட்டார்கள். நானும் கல்யாணம் ஆகி வாஷிங்டன் வந்து விட்டேன். ஷ்ரவன், ஷ்ருதி பிறந்தார்கள். நிறம் மற்றும் பழக்க வழக்கங்கள் வித்யாசமாக இருப்பதால் அவ்வப் பொழுது பள்ளியில் சீண்டல்கள், அவமானங்கள். ஷ்ருதி ஒரு நாள் அழுதபடி சொன்னாள், ‘அம்மா, என் தலை முடி கோல்டன் கலர்லே இல்லாததால் நான் விளையாட்டிலே ஒரு நாள் கூட ப்ரின்சஸ் ஆக முடியலைம்மா! ‘

ஒரு முறை என் கணவரின் நண்பர் ஷ்ரவனிடம், ‘நீ அப்பா மாதிரி எகானமிஸ்ட் ஆகப் போறியா இல்லே டாக்டரா ? ‘ என்று கேட்டவுடன் அவன் முகம் சிவக்க, கண்ணீரை அடக்கிக் கொண்டு, ‘நான் சாக்லெட் கலர். என்னாலே அதெல்லாம் ஆக முடியாது, ‘ என்றான்.

இரவு தூங்கப் பண்ணும் பொழுதுமெதுவாக, ‘யாருடா கண்ணா அப்படி சொன்னா ? ‘ என்றவுடன் ‘என் கூட படிக்கிற ஆலன் ‘ என்றான்.

செப்டம்பர் 11க்கு அப்புறம் சீண்டல்கள் அதிகமாயின. வாயைத் திறந்து ஷ்ரவன் சொல்லாத போதிலும் பள்ளியிலிருந்து திரும்பும் பொழுது அவன் மூக்கும், காது நுனிகளும் சிவந்து இருப்பதை வைத்து புரிந்து கொண்டேன். ‘அண்ணாக்கும் ஆலனுக்கும் இன்னிக்கு சண்டை. ஆலன் அண்ணாவை பார்த்து கோ பாக் டு யுவர் கண்ட்ரினு சொன்னான் ‘ என்று ஒரு நாள் சொன்னாள் ஷ்ருதி. மிகவும் வலித்தது.

என் சமவயது தோழி சந்தியாவுடன் இது பற்றி பேசினேன். மிகவும் தெளிவானவள். ‘பட்’டேன்று விஷயத்தை விளக்கி விடுவாள். நான் சொல்வதைக் கேட்டு விட்டு சொன்னாள், “வைஷு, நீ ஏன் இதைப் பெரிசு படுத்தறே ? Bullying, racism எல்லாம் நம் வாழ்க்கையில் ஒரு அங்கம். நாம் அதை ஒரு experience ஆக எடுத்துக் கொண்டு முன்னேற வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை. இந்தியாவில் இல்லாத நிற வெறியா ? உனக்குத் தான் தெரியுமே. நான் நிறம் கொஞ்சம் கம்மி. எவ்வளவு வரன்கள் இதனாலே தட்டி போச்சு தெரியுமா ? என் அறிவோ, குணமோ, படிப்போ அங்கே எடுபடவே இல்லையே. ஆனால், நான் வருத்தப் படலை. என்னை எனக்காக கல்யாணம் செய்து கொள்ள வருண் வரலையா ? இப்போ நான் சந்தோஷமா இருக்கேன். அதனாலே நீயும் பெரிசா கவலைப்படாதே,” என்றாள்.

அவள் சொன்ன உண்மை என்னை சுட்டது. நான் இதைப் பற்றி தீவிரமாக யோசிக்க வேண்டிய சந்தர்ப்பம் அமையவில்லை. ஆமாம்.. எவ்வளவு சிகப்பழகு பொருட்கள் இந்தியாவில். நம் நிறத்திற்கு என்ன குறைச்சல் ? ஏன் நாமே ஒரு தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்கிறோம் ? இருந்தாலும் ஒரு தாய் என்ற முறையில் என் மனம் சமாதானமடையவில்லை. என் குழந்தைகளுக்கு இதை எப்படி புரிய வைப்பது ?

அப்பொழுது தான் சட்டென்று விமலா மாமியின் முகம் கண் முன்னே தோன்றியது. இந்தியா வந்தவுடன் மாமியை பார்க்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு தான் வந்தேன்.

பல்லாயிரம் மையில்கள் தள்ளி இருக்கும் ஒரே பெண் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று தான் பெற்றோர்கள் நினைப்பார்கள். அதனால் ஷ்ரவன் எல்லா பாடத்திலும் ஏ வாங்குவான் என்பதும் ஷ்ருதி மேரிலாண்ட் கோவிலில் பாட்டு பாடினாள் என்பது மட்டுமே அவர்களுக்கும் ஈ-மெயிலில் தவறாமல் வரும் விஷயங்கள்.

இதோ வந்து விட்டது வீடு. விமலா மாமி சிரிப்பு மாறாமல் இருந்தார். சில சுருக்கங்களுக்கு நடுவே பூத்த புன்னகை மனதை வருடியது. இவ்வளவு வருஷம் கழிச்சு ஞாபகம் வைச்சுண்டு வந்திருக்கியே வைஷு. ரொம்ப சந்தோஷம் ‘ என்றார்.

‘பாவ மன்னிப்பு கேட்க வந்திருக்கேன் மாமி ‘ என்று குரல் கம்ம எல்லாவற்றையும் சொன்னேன். ‘மாமி! இப்பத்தான் ஒரு தாயோட வலி என்னன்னு நான் புரிஞ்சுண்டேன். நீங்க எப்படி அமைதியா சமாளிச்சீங்க மாமி ? ‘

ஆதரவாக என் கைகளை பற்றிக் கொண்டார் மாமி. ‘பைத்தியம். இதுக்கா இவ்வளவு அப்ஸெட் ஆயிட்டே ? வைஷு, இந்த உலகத்துலே நாலு நல்லவங்க இருத்தா, இரண்டு கெட்டவங்க இருக்கத்தான் செய்வாங்க. சில குழந்தைகள் தங்கள் செயல்களோட

விளைவுகள் புரியாம தவறுகள் செய்யறாங்க. கேலி செய்யறவங்களை நினைச்சு வருத்தமோ, கோபமோ படுவதை விட நம்ம குழந்தைகளை மன ரீதியாவும், அறிவு பூர்வமாகவும் உலகத்தை சந்திக்க தயார் பண்ணணும். நீ சோர்ந்தாலோ, உடைத்தாலோ நிச்சியமா அது குழந்தைகளைப் பாதிக்கும். சகிப்புதன்மையும், தன்னம்பிக்கையும் வளர்க்கறது ஒரு தாயோட முக்கியமான கடமை. நான் உமா கிட்டே என்ன சொல்லுவேன் தெரியுமா ? கடவுள் சில பேருக்கு அழகைத் தரான், சிலருக்கு அறிவை, இன்னும் சிலருக்கு வேற சில நல்ல குணங்களை. பல விதமான பூக்கள் இருத்தாலும் எல்லா பூக்களும் அழகு தான் உமான்னு சொல்லுவேன். உன் குழந்தைகளுக்கு சொல்லு வைஷு. ஐஸ்வர்யா ராய் அழகுதான் ஆனால் மதர் தெரீஸாவும் அழகு தான் இல்லையா ? நான் உமாவோட நல்ல குணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தேன். வெளித் தோற்றத்தை விட முக்கியமான விஷயங்களை அறிமுகப் படுத்தினேன். மெதுவா அவ தன்னம்பிக்கையை வளர்த்தேன். அதான் நான் கையாண்ட வழி. ‘

மனதில் கொஞ்சம் அமைதி பிறந்தது. ‘உமா எப்படி இருக்கா மாமி ? ‘ என்றேன்.

‘கல்யாணம் ஆகி சந்தோஷமா பெங்களூர்ல இருக்கா. சைன் லாங்வேஜ் கத்துண்டு காது கேட்காத குழந்தைகளுக்கு டாச்சரா இருக்கா. எவ்வளவு குழந்தைகளுக்கு வழி காட்டறா தெரியுமா ? ‘ நிறைவோடு புன்னகைத்தார் மாமி. ‘வித்யாசங்கள் கொண்டாடப்படுகிற காலம் நிச்சியம் வரும் வைஷு. இப்ப நீ புரிஞ்சுகலையா ? கவலைப்படாதே! நீ காந்தி பிறந்த நாட்டிலேர்ந்து அமெரிக்கா போயிருக்கே. அதை மறத்துடாதே ‘ என்றபடி விடை கொடுத்தார்.

மாமி சொன்னது புரிந்தது. குழந்தைகளைத் தயார் படுத்த வேண்டும். அது தான் சிறந்த வழி. ஆனால் மாமியிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டதால் இனிமேல் ஆலன் ஷ்ரவனைக் கிண்டல் செய்ய மாட்டான் என்ற நப்பாசை மனத்தின் ஓரத்தில் ஒட்டிக் கொண்டு போக மறுத்தது!

Mangayar Malar 2004

ramyanags@hotmail.com

Series Navigation

author

ரம்யா நாகேஸ்வரன்

ரம்யா நாகேஸ்வரன்

Similar Posts