நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -50

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


கற்றின வீழ்பனி தூங்கத் துவண்டு துயர்கஎன்று

பெற்றவ ளேஎனைப் பெற்றாள் பெடைசிற கான்ஒடுக்கிப்

புற்றில வாளர வன்தில்லைப் புள்ளும்தம் பிள்ளைதழீஇ

மற்றினம் சூழ்ந்து துயிலப் பெறும்இம் மயங்கிருளே.

-(திருக்கோவையார்)- மாணிக்கவாசகர்

பதினான்காம் நூற்றாண்டு….

‘கச்சியப்ப சிவாச்சாரியார் இல்லந்தானே ? ‘

‘ஆம். தாங்கள் ? ‘

வார்த்தைகளில் சங்கீதம் தொனிக்கிறது. வடிவத்தில் யெளவனம் கொழித்திருக்கிறது. கோடி சூரியன் பிரகாசத்துடன் பெண்மை ஜொலிக்க, நேரிட்டுப் பார்த்ததில் கண்கள் கூசுகின்றன. தேனில் நனைந்த வார்த்தைப் பலாச்சுளைகள். அவற்றை உச்சரித்து ஓய்ந்த இதழ்களைப் பார்க்கிறான். இதழ் சுமக்கும் சிவந்த கன்னங்களைப் பார்க்கிறான். இமைக்க மறந்த, இரு கருவிழிகளைப் பார்க்கிறான். கண்ணின் மணியைப் பார்க்கிறான். செவ்வலரி சூடிய நீண்ட கரியகூந்தலைப் பார்க்கிறான். ஜென்ம ஜென்மமாய் ஒருவர் மற்றொருவருக்காக காத்திருப்பதை இவன் மாத்திரமல்ல அவளும் உணர்ந்திருக்கவேண்டுமென்றே நினைத்தான்.

‘என் கேள்விக்கு மறுமொழியில்லையே ? ‘

‘மன்னிக்கவும். என் பெயர் பழனிவேலன்(பொய்). உத்திர மேரூர் பெரு நிலக்கிழார் ஆரூரார் மைந்தன்(பொய்..பொய்). ஸ்ரீ குமரக் கோட்டம் ஆலயத்திலிருந்து வருகிறேன். மஹா அபிஷேகத்திற்கென்று தொண்டைமண்டல அதிகாரிகள், பெரு நிலக்கிழார்கள், இறை அதிகாரி குமரக்கோட்ட தக்கார் என எல்லோரும் காத்திருக்கிறார்கள். கச்சியப்ப சிவாச்சாரியாரை உடனே அழைத்து போகவேண்டும் (உண்மை) ‘

‘தந்தைப் புறப்பட்டுச் சென்று ஒரு நாழிகை ஆயிற்றே! கந்தபுராணத்தை எழுதி முடிக்கும் ஆவலில் தனது அன்றாடப் பணிகளைக் கூட மறந்து விடுகிறார் ‘ எனத் தடுமாற்றத்துடன் கூறியவள் மெல்ல நிமிர்ந்ததும் வெட்கமுற்றவளாய், முகம் கவிழ்ந்து மெள்ள கதவடைத்துவிட்டு விடுவிடுவென்று உள்ளேபோகத்தான் செய்தாள். ஆனால் இவன் மன வாசலைத் திறந்துகொண்டு கால் பதித்தவள் உள்ளத்துக்குள்ளே அல்லவா உட்கார்ந்து கொண்டாள்.

அப்பெண்ணைச் சந்தித்த தினத்திலிருந்து, இரு கிழமைகளாக அச்சமும் பரவசமும் இரு வேறு இழைகளாக அவனிடம் பின்னிக்கொண்டிருக்கின்றன. வார்த்தைகளை முன்பின்னாக மொழிகிறான். வாட் பயிற்சியில் தடுமாறுகிறான். உணவு கொள்ளவில்லை, உறக்கம் கொள்ளாமல் நள்ளிரவு வெகுநேரம் பனியில் நனைந்தவண்னம் கால்போனபோக்கிலே நடக்கிறான். தனிமைப் பூங்காவைத் தேடித் தஞ்சம் புகுந்துவிடுகிறான்.

அப்பூங்காவில், இவன் மனதிற்கென்றெரு தாடாகமுண்டு. படித்துறையில் அமர்ந்தவண்ணம் தடாகநீரில் நடக்கும் கூத்துகளில் லயிக்கிறான். குளிர்ந்த நீரில் சலசலத்துக்கொண்டு நீராடுகின்ற அப்பெண்ணின் நிலவு முகம்; நீர்த் திவலைகள் தெறிக்க துள்ளும் மீன் விழிகள்; நீரில் விழுந்த கருமேகமொத்து, பரவி அசையும் கூந்தல். அன்றலர்ந்த அச்செந்தாமரையொத்த அவளது வதனத்திற்குத் தோழிகளாய் வெண்தாமரை, நீலோற்பலம், செங்கழு நீர் மலர்கள். சிலநேரங்களில் இவனைக் கண்டு, அர்ச்சகர் பெண் மெல்ல முறுவலிப்பாள். அம்முறுவலுக்கிடையில் ஒளிரும் பற்களின் வெண்மைக்கு நாணி, குளக்கரையிலிருக்கின்ற கொக்குகள் சிதறிப் பறக்கும், இவன் மாத்திரம் பறக்காமல் இருப்பதை நினைக்க, இவனுக்குள் வியப்பு. துருவநட்சத்திரத்தைக் குறிவைத்து பயணிக்கும் மரக்கலத்தினைப்போல, நெஞ்சம் அப்பெண்ணைக் குறிவைத்து பயணிக்கிறது. நெருங்கிவிட்டோமென்று நெஞ்சம் குதூகலிக்க, அவள் நிலவு முகம் அவனிடமிருந்து விலகிப் போகிறது. சில நேரங்களில் ஆழ்கடலிலும், சில நேரங்களில் வெட்டவெளியிலும் இவ்வாலிபனை எறிந்துவிட்டு ஒளிந்துகொள்கிறது.

அருகிலிருந்த மரமல்லி மரத்திலிருந்த இரு குயில்கள், ஆணும் பெண்ணுமாயிருக்கவேண்டும். அணைந்து உட்காருகின்றன. பார்த்திபேந்திரன் காதற்குளிகையை மனதிற் அடக்கி ஆண்குயிலாக வடிவெடுத்திருக்கிறான், தன் இறகுயர்த்தி அணைத்தவண்ணம், காதற்சில்மிஷங்களில் இறங்குகிறான். அணைப்பிற்குள்ளான குயில் அசப்பில் அர்ச்சகர் பெண் போலவே வெட்கப்படுகிறது, கண்களிலோ பளபளக்கும் தாபம். கழுத்துப் பிடரியிலிருந்த கேசம் சிலிர்த்துக்கொள்ள, வாலை உயர்த்தி அணைப்பிலிருந்து விடுபட விருப்பமுள்ளதுபோலப் பாவனை செய்கிறது. இவன் ‘குக்கூ, குக்கூ ‘ வென்கிறான். அவள் ம்க்கூம், ம்க்கூம் என்று மறுத்தவண்ணம் ஒதுங்குவதும், ஒட்டி உரசுவதுமாயிருக்கின்றாள்; விளையாட்டு சிறிதுநேரம் நீடித்தது. முடிவில் பார்த்திபேந்திரன்குயில் தாபத்துடன், அர்ச்சகர்பெண்குயிலை அணைக்க, மரக்கிளையிலிருந்து இரண்டும் தடுமாறி பறக்க சக்தியற்று காதல் மயக்கத்துடன் விழுகின்றன. தங்கள் காதலுக்கு இடந்தராத மரமல்லிகை மரத்தின்மீது இவனுக்கு அடக்கமுடியாத சினம்.

மரமல்லிமரத்தினை வேருடன் சாய்க்கத் தீர்மானித்தவனைப்போல தன் பலத்தினைப் பிரயோகித்து அசைக்கிறான். சிரசில் சொரிந்த மரமல்லிகைப் பூக்கள் கபாலத்தில் நுழைந்து, அடிமனத்தைத் தேடி, இவன் சேமித்துவைத்திருந்த அவளது இரு சொற்களை பூஜிக்கிறது. ‘ஆம்.. தாங்கள் ? ‘ என்று அவள் உதிர்த்த வார்த்தைகள், குவிந்த முகவாய், பேசத் துடித்து ஊமையாய் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கின்ற சிவந்த, ஈர அதரங்கள். ரோஜா மொக்காய் நாசி. அதனிருபுறமும் சிறிய மல்லிகை மொக்காய் மூக்குத்தி, நெற்றியின் மத்தியில் பவளச் சிவப்பில் சாந்துப்பொட்டு ‘, அவன் மனதிற்பதிந்த ஷணநேர காட்சி பின்பனிக்கால நள்ளிரவு பனிஊசிகளாய் உடலிற் தைத்து பரவசமூட்டுகிறது.

‘பார்த்திபேந்திரா!… இப்படியே எத்தனை நாட்களுக்கு, அப்பெண்ணை எண்ணி வருந்திக்கொண்டிருக்கப்போகிறாய். ஒன்று அவளைப் பற்றிய நினைப்பினை உன் மனதிலிருந்து முற்றாக விலக்கியாகவேண்டும். இயலாதென்றால், அவளை அடைவதற்கான முயற்சியில் இறங்கியாகவேண்டும். ‘ ‘ கேட்டவன் அவனது நெருங்கிய தோழனும், தொண்டைமண்டல அதிகாரிகளுள் ஒருவனுமான உத்திரமேரூர் மூவேந்த வேளாளன் இளைய குமாரன் பேசும்பெருமாள்.

பார்த்திபேந்திர பல்லவரையன் தன் சிநேகிதன் வார்த்தையில் உள்ள நியாயத்தினை உணர்ந்தான்.

‘என்ன செய்யலாம் ? ‘ சொல்.

‘அந்தப் பெண்ணிண் மீதுள்ள காதலால், பல்லவ சாம்ராச்சியத்தை மீண்டும் ஸ்தாபிக்கவேணுமென்கிற உன் மனோராச்சியத்திற்கு ஆபத்திருக்கிறது என்று சொல்லவந்தேன். அர்ச்சகர் பெண்ணை நெஞ்சத்தில் வைத்து, மனக் கவலைகளை வளர்க்கும் பட்ஷத்தில், நாம் நினைத்ததைச் சாதிக்க முடியாது. கூடிய சீக்கிரம் நடக்கவிருக்கும் தொண்டைமண்டலப்போரில், சம்புவரையர்களை ஒய்மாநாட்டு முந்நூற்றுப்பள்ளிக்கே துரத்துவேன் என்று நீயிட்ட சங்கற்பம் பொய்யாய்ப் போகும். அம்மன்னர்களுக்கு அடங்கிய குடியாகப் பல்லவரினம் தொடர்ந்து இருக்க வேண்டிவரும்.

‘அப்பெண்ணின் நினைப்பிலிருந்து என்னால் மீளமுடியாது போலிருக்கிறது. ‘

‘மீள முடியாதென்றால் அப்பெண்ணைக் கைப்பிடிக்க முயலவேண்டுமேயன்றிச் சராசரிச் சனங்களைப்போல சோர்ந்து போகக்கூடாது. ‘

‘உன் யோசனைதான் என்ன ? ‘

‘மீண்டும் அர்ச்சகர் வீட்டிற்குப் போகவேணும். அந்தப் பெண்ணிடம் உன்னுடைய பிரேமையைத் தெரியப்படுத்தவேணும். ‘

‘இது நடக்குமா ? அவள் அர்ச்சகர் பெண், நான் அரசகுமாரன். அவள் சம்மதிப்பாளா ? ‘

‘சம்மதிப்பாள், அதற்கு சிறிதுகாலம் பிடிக்கலாம். அதுவரை உத்திர மேரூர் பெரு நிலக்கிழார் ஆரூரார் மைந்தன், பழனிவேலனாகவே நீ நடிக்கவேணும். ‘

‘என்ன காரணத்தினை முன்வைத்து அவர்கள் வளவிற்குள் நுழைவது. ‘

‘சிவாச்சாரியாரிடம் உன்னைச் சீீடனாக ஏற்றுக்கொள்ளவேணுமென்று வற்புறுத்தவேணும். ஆம்.. அதுவொன்றே அவர் இல்லத்துக்குள் நீ நுழைவதற்கான வாய்ப்பினைத் தரமுடியும். ‘

‘என்ன கற்கப் போகிறேன் ? ‘

‘சிவாச்சாரியாரிடம் பயில்வதற்கு விஷயங்களா இல்லை. அவருக்கு வடமொழி வேதங்கள் தெரியும், தேவார திருவாசகங்கள் தெரியும். சைவ ஆகமங்களில் கிரியா காண்டமும், ஞான காண்டமும் தெரியும். சிவபெருமானின் இளையகுமாரன் அவர் கனவிற் தோன்றி ஸ்கந்த புராணத்து ஆறு சங்கிதைகளுள் சங்கர சங்கிதையின் முதற்காண்டமாகிய சிவரகசிய காண்டத்திலுள்ள அவரது சரித்திரத்தைக் கந்தபுராணம் எனப் பெயரிட்டுத் தமிழிலே பெருங்காப்பியமாகப் பாடவேண்டுமெனக் கேட்டுக்கொண்டதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு நாளும் நீராடி விட்டு நித்திய கருமங்களை முடித்துக் கொண்டு குமர கோட்டம் சென்று வடிவேல் முருகனை வழிபட்டபின் புராணம் பாடுகிறாராம். நாள்தோறும் நூறு செய்யுட்களைப் பாடியபின் எழுதிய ஏட்டையும், எழுத்தாணியையும் அர்த்தஜாம பூஜைக்குப் பிறகு இறைவன் திருவடிகளில் வைத்துவிட்டு, கதவைத் திருக்காப்பிட்டுக்கொண்டு இல்லம் திரும்புகிறாரென்றும், மறுநாள் கோயிலுக்குச் சென்று ஏட்டை எடுத்துப்பார்த்தால், அதில் முருகப்பெருமான் திருத்தங்கள் செய்திருப்பது தெரியவருமென்றும் சொல்லிக்கொள்கிறார்கள். அரசாளுபவர்களைக் குறித்தோ, அவர்களின் அபிலாஷைகள் குறித்தோ அக்கறை கொள்ளாத மனிதர். முருகப்பெருமான் மாத்திரமே அவரது அக்கறை.

‘நீர் சொல்வதை வைத்துப்பார்த்தால், அவர் ஞானவிற்பன்னரென்றும், கடவுள் அநுக்கிரகம் பெற்றவரென்றும் ஆகிறது. அத்தகைய மனிதரை, பொய் சொல்லி நெருங்குவதென்பது முறையான காரியமாகுமாவென்று யோசிக்கிறேன். ‘

‘நீ நினைப்பதை அடையவேணுமென்றால் அப்படித்தான் நடந்து கொள்ளவேணும். ‘

பேசும் பெருமாளும், பார்ந்திபேந்திர பல்லவரையனும் மதிய உணவு முடித்த இரண்டு நாழிகைகளுக்குப் பிறகு புறப்பட்டு காஞ்சிபுரம் வந்து சேர சூரியன் மேற்கில் மறைந்து கொண்டிருந்தான். சினேகிதர்கள் இருவரும் குதிரைகளைத் தங்களுக்குப் பரிச்சயமான காஞ்சி மண்டல அதிகாரி இல்லத்தில் கட்டிப்போட்டுவிட்டு, அவருடைய வற்புறுத்தல் பேரில் ஓய்வெடுத்தார்கள். காஞ்சிபுரம் வந்திருந்த காரணத்தினை பேசும்பெருமாள், மண்டல் அதிகாரியிடம் தெரிவித்தான். மண்டல அதிகாரி சினேகிதர்களிடம், ‘இரவு முதற் சாமம் பிறந்து மூன்று நாழிகையாகப் போகிறது. வந்ததற்குச் சிரமபரிகாரம் செய்துக்கொண்டு, இரவுத் தங்கியிருந்து காலையிற் சென்று சிவாச்சாரியாரைச் சந்திக்கலாமே. அதுவன்றி கந்தபுராணமெழுதும் சிவாச்சாரியார் அர்த்தசாமத்திற்குப் பிறகே வளவிற்குத் திரும்புவதாகப் பேச்சு. ‘, என்பதாக வற்புறுத்திப்பார்த்தார். பார்த்திபேந்திரன், இரவே அர்ச்சகர் இல்லம் போவதென்று குறியாய் இருந்தான். மண்டல அதிகாரியைச் சமாதானப்படுத்திவிட்டு, நண்பர்களிருவரும் அரை நாழிகை கழித்து ஏகாம்பரேசுவரர் கோவில் கோபுர திசைக்காய் இறங்கி நடந்தார்கள்.

தூரத்தில் கோபுரம் தெரிந்தது. கோபுரத்தைத் தலையிற் சுமந்திருந்த வீதியின் இரு புறமும் தெரிந்த வீடுகள் மகுடத்தை ஒட்டிய குழைமாதிரி அடங்கிக் கிடக்கின்றன. வீட்டிலிருந்த நிலைமாடங்கள் விளக்கேற்றுவதற்குத் தயாராகின்றன. வாசல் தெளித்து கோலம் போட்டிருக்க, இரவு சுவாமி வீதி புறப்பாடிருப்பதை உறுதிசெய்தது. எதிரேவந்த இரண்டொரு மனிதர்களிடம், ‘சிவாச்சாரியார் இல்லம் இன்னும் எவ்வளவு தூரமிருக்கவேணும் ‘, என்று பேசும்பெருமாள் விசாரித்தான். ‘கூப்பிடு தூரந்தான் ‘, என்றார்கள். சிறிது தூரம் நடந்திருப்பார்கள், கண்ட சில குறிப்புகளை வைத்து அர்ச்சகரில்லத்தை நெருங்கிவிட்டோமென்று பார்த்திபேந்திரன் உணர்ந்தான். உணர்ந்தமாத்திரத்தில், அவனுள்ளத்தில் படபடப்பும், பரவசமும் கலந்து எழுந்தது.

அகன்றவீதியில், அர்ச்சகர் கச்சியப்ப சிவாச்சாரியார் குடில், நெற்றியிலிட்ட சாந்தினைப்போல பூர்வபட்ச நிலவில் பளிச்சென்று நின்றிருக்கிறது. விழல் வேய்ந்த கூரை, மண்சுவர். சுவரெங்கும் வெண்புள்ளிகள், அவற்றைச் சுற்றி எழுதப்பட்ட கோட்டோவியங்கள். இடை இடையே கோழியைப்போல, மயிலைப்போல சித்திரங்கள். மத்தியில் சிற்ப வேலைபாடுகள் நிறைந்த தடித்த ஒற்றைக் கதவு. சினேகிதர்கள் நெருங்கிய மாத்திரத்தில், யாழ்நரம்புகளின் சிணுங்கல்களுக்குகிடையில் தேனிற் பிசைந்த குரல் வெளிப்பட்டு இவற்கள் வாசற்படியில் கால்வைக்க இசைமாலை சூட்டுகிறது.

‘ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்

கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்

ஏறிய மஞ்சை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க

மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீரடியார் எல்லாம் ‘

பாடியவள் முடித்தபோது தோழர் இருவருக்கும் பிரந்தாவனத்தில் கோபிகைகளுக்கு ஏற்பட்ட அனுபவம். இசைமயக்கத்திலிருந்து மீண்ட பார்த்திபேந்திரன் மெல்ல பாடல்வந்த வீட்டின் உட்புறம்நோக்கிக் குரல் கொடுத்தான்.

‘ஐயா ? ‘

‘யாரு ? ‘ அகல் விளக்கொன்று மெல்ல அசைந்து இவர்களை நோக்கி முன்னேறுகிறது வாசற்கதவினை ஒட்டி நிற்கின்றது.

‘தந்தை இராக்கால பூஜைக்காக கோவிலுக்குச் சென்றிருக்கிறார், வருவதற்கு சில நாழிகைகள் ஆகும் ‘ எனச் சொல்லியவண்ணம் அகல் விளக்கை ஏந்தியிருந்த தனது வலது கையினை உயர்த்திப்பிடித்தாள். ‘ ‘இவர், சில தினங்களுக்கு முன் உச்சிவேளை பூஜைக்காக, தந்தையைத் தேடி வந்தவர் அல்லவா ?, இந்த நேரத்தில் எதற்காகத் தன் சினேகிதருடன் வந்திருக்கிறார் ? ‘ என்றெண்ணியவளாய்த் தன்னைத் திடப்படுத்திக்கொண்டு பார்த்தாள், வெடுக்கென்று தலை குனிந்தாள், மீண்டும் ஏறிட்டுப் பார்த்தாள், நீண்ட பார்வையைப் பார்த்திபேந்திரன் முகத்திற் பதித்தாள், வியர்த்தாள். நெருக்கத்தில் நின்ற வாலிபனின் முகமும், விட்ட பெருமூச்சும், பெண்மனதில் இடி இடித்து மழையைப் பெய்வித்தது. அடைமழையில் நனைந்தவளைப்போல சரீரத்தில் நடுக்கங் கண்டாள். அதற்குமேலும் அவ்விடத்திலிருந்தால் தனக்குக் குளிர்காய்ச்சல் வரலாம் என்றஞ்சியவளாக, அகல் விளக்கைத் தவறவிட்டுவிட்டு சலங்கை சத்தமிட ஓடி, இருட்டில் கலந்தாள்.

‘தோழர்கள் இருவருக்கும், நடந்து முடிந்த நாடகத்தின் பிரமையிலிருந்து மீள்வதற்குச் சில நாழிகைகள் பிடித்தன. இரவு நேரத்தில் வந்திருக்கக் கூடாது. பகற்பொழுதில் வருவதுதான் உத்தமமென்று நண்பர்கள் முடிவுக்கு வந்தார்கள். ‘

‘பெண்ணே!.. ? ‘ பேசும்பெருமாள், உட்கூடத்தை நோக்கிக் குரல்கொடுத்தான். ஆமணக்கு எண்ணெயில் விளக்கொன்று அமைதியாய் எரிந்துகொண்டிருக்கிறது. வெளிச்சமும், இருட்டும் சம விகிதாச்சாரத்தில் உள்ளேப் பரவிக்கிடக்கிறது. குடிலில், சற்றுமுன்பு இல்லாத நிசப்தம். உள்ளிருக்கும் பெண்ணிடம் சுவாசத்தின் வேகம் கூடியிருப்பதை, இவர்களிருக்குமிடத்திலிருந்து கேட்க முடிகிறது.

‘பெண்ணே!.. நீ எங்கிருக்கிறாய் ? நாங்கள் அழைப்பது செவியில் விழுகிறதா ? இல்லையா ? ‘ –பார்த்திபேந்திரன்.

இம்முறை வளையோசையும், அதனைத் தொடர்ந்து காற் சலங்கையும் கலகலக்கிறது.

‘பெண்ணே உன்னைத் தொந்தரை செய்ததற்காக மன்னிக்கவேணும். நாங்கள் அருகிலிருந்த எங்கள் சினேகிதரில்லத்தில் இரவைக் கழித்துவிட்டு, நாளைக்குக் காலையில் சிவாச்சாரியாரைச் சந்திக்கிறோம் ‘ – பார்ந்திபேந்திரன்

‘போகவேண்டாம், திண்ணையில் இருங்கள். தந்தையைச் சந்தித்துவிட்டே நீங்கள் போகலாம். ‘

‘இந்த நேரத்தில் வந்திருக்கக்கூடாது, ஏதோ ஓர் ஆர்வத்தில் புறப்பட்டு வந்துவிட்டோம். சிவாச்சாரியார் வர நேரமாகுமோ ? ‘. பேசும் பெருமாள் குரலில், இவர்கள் மீது அவளுக்கு நம்பிக்கை வேண்டுமென்கிற விண்ணப்பமிருந்தது.

‘தந்தை, இப்போதெல்லாம் இரவு நேரங்களில் அர்த்தஜாமப் பூஜைப்பணிகை¢கு மாத்திரமே குமர கோட்டத்திற்கு செல்வது வழக்கம். இராக்கால பூஜையை மற்ற அர்ச்சகர்கள் பார்த்துக்கொள்வார்கள். இன்றைக்கு என்னவோ புறப்பட்டுப் போயிருக்கிறார், வருகின்ற நேரந்தான் ‘

உள்ளேயிருந்து வந்த குழைவான வார்த்தைகள் தந்த பரவசத்தில் பார்த்திபேந்திரன், தன் தோழன் பேசும்பெருமாளுடன் காத்திருந்தான்.

/தொடரும்/

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

author

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts