நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 48

This entry is part [part not set] of 50 in the series 20041202_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


இக்காயம் நீங்கி இனியொரு காயத்திற்

புக்குப் பிறவாமல் போம்வழீ நாடுமின்

எக்காலத் திவ்வுடல் வந்தெமக் கானதென்

றக்கால முன்ன அருள்பெற லாமே.

– (திருமந்திரம்) -திருமூலர்

….

நண்பனே! நான் நிரந்தரமானவன், எனினும் தனித்துச் செயல்படுவதில்லை. எனது காரியம் நிறைவேற, உனது நட்பு அவசியமாகிறது. வண்ணப் பாத்திரத்தில் நிரப்பப்படும் நீரானது பாத்திரத்தின் வண்ணத்தைப் பிரதிபலிப்பதில்லையா ? நானும் அவ்வப்போது உன் வடிவ குணத்திற்கேற்ப வினையாற்றுகிறேன். உன்னைவைத்தே என் விருப்பங்களை நிறைவேற்றவும், எனது காரியங்களை செயல்படுத்தவும் வேண்டும். உனது ஆயுள்பரியந்தம் உன்னுடன் ஜீவிக்கிறேன். நீ சீர்கேடு அடைவதற்கு முன் எனது விருப்பங்களை பூர்த்திசெய்தல் வேண்டும். நீ எனக்கு ஒத்துழைக்க மறுக்கும் நிலையில், உன்னைவிட்டு நீங்கி, என் காரியம் தொடர வேறு உடலை தேடவேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்படுகிறது. இப்பிறவியிலேனும் எனது விருப்பங்கள் சித்தியாகவேண்டும். அதுவன்றி மீண்டும் மீண்டும் புது உடல், புதிய எண்ணம், புதிய விருப்பமெனில் நான் விடுதலை பெறுவது எக்காலம் ?

….

இருபதாம் நூற்றாண்டு…

டிரைவர், புகையைக் கடைசியாய் ஒருமுறை இழுத்தவன், விரல்களுக்கிடையில் மிச்சமிருந்த சிகரட் துண்டினை, வீதியில் எறிந்துவிட்டு தனது இருக்கையில் அமர்ந்தான். நேரெதிரே லாமினெட் செய்து நிறுத்தியிருந்த திருப்பதி வெங்கிடாஜலபதியின் தலையில் மல்லிகைச் சரத்தை அவசரமாய் வைத்து, உபசாரமாக இரண்டு ஊதுவத்திகளைச் செருகினான். தீக்குச்சி உரசலில் அவையிரண்டையும் பற்றவைத்து, புகை எழும்பக் காத்திருந்து நாசூக்காய் ஒரு கும்பிடுபோட்டான். சாவியைச் செருகித் திருப்ப எஞ்சின், அந்நியமனிதனைக் கண்ட நாய்போல உர்ரென்கிறது. காரெங்கும் அடர்த்தியாய்ப் பரவிய மணம், பெர்னாரின் நாசிகளை அடைக்கிறது. இவனுக்குப் பிடிக்காத மல்லிகைப் பூ, ஊதுவத்தி மணம். டிரைவர், இவனது காலையைக் கசப்பில் ஆரம்பித்துவைப்பானென எதிர்பார்க்கவில்லை. நண்பன் வேலுவோ சற்று முன் வாங்கிய காலைத் தமிழ்த் தினசரியைத் தீவிரமாக வாசித்துக்கொண்டிக்கிறான்.

கடலூர்த் திசைக்காய்க் கார் திரும்பி, சீரான வேகத்தில் செல்கிறது. இறக்கியிருந்த கண்ணாடியின் காரணமாக குளிர்ந்த காற்று, சடசடவெனக் காருக்குள் நுழைந்து பயணிப்பவர்களைச் சீண்டிப்பார்க்க்கிறது. காரில் அசாத்திய மெளனம். பொறுமை இழந்த பெர்னார், தன் கைப்பையைத் திறந்து பிரெஞ்சு வாரஇதழொன்றில் மூழ்கினான். வீராம்பட்டினத்திற்கருகே வளைவில் டிரைவர் வேகத்தின் அளவைக்குறைக்காமல் காரைச் செலுத்தியது கண்டு, ‘தம்பி மெதுவாய் போ! அவசரமில்லை ‘ என எச்சரித்துவிட்டு, தொடர்ந்து இதழைப் புரட்ட ஆரம்பித்தான்.

‘என்ன சார் வைத்தீஸ்வரன் கோவில் புறப்பட்டிருக்கீங்க ? நாடி ஜோதிடமா ? ‘ வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த டிரைவர் கேள்விகேட்டுவிட்டு, இவர்களிடமிருந்து பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தான். காரின் பின்னிருக்கையில் உட்கார்ந்திருந்த நண்பர்களின் மெளனத்தைத் தனது பேச்சுக்கு அளிக்கப்பட்ட அனுமதியாக நினைத்து, தொடர்ந்து பேச ஆரம்பித்தான்.

‘அப்படி இல்லைன்னா செவ்வாய்க் கிழமைங்கிறதாலே, தோஷ நிவர்த்தி செய்யப்போறீங்களா ? வைத்தீஸ்வரன் கோவில் அங்காரகனுக்கு செவ்வாய் கிழமைகளில் அர்ச்சனை செய்தால், நம்மைப் பிடித்துள்ள தோஷங்கள், பீடைகள் நீங்கும்னு சொல்றாங்க, சார். அங்காரகனே வைத்தீஸ்வரன் கோவிலிலுள்ள சித்தாமிர்த தீர்த்தத்துல மூழ்கித்தான் தனது தொழுநோயைக் குணப்படுத்திக்கொண்டதாக ஐதீகம்.. இத்தீர்த்தம் மனிதனுக்கு ஏற்படுகிற நாலாயிரத்தி நானூற்றி சொச்ச நோய்களையும் குணப்படுத்துமாம். ‘

‘தம்பி எங்களிடம் உள்ள நோய், அந்த லிஸ்ட்ல இருக்குதாண்ணு தெரியலை. நேரம் கிடைக்கும்போது சொல்லு, நாங்கஅதைக் கேட்டுத் தெரிஞ்சுக்கறோம். இப்போதைக்கு கவனமாகக் காரைப் பார்த்து ஓட்டு, ‘வேலு குறுக்கிட்டுப் பேசவும், டிரைவர் அமைதியானதைத் தொடர்ந்து, வேலு தினசரியை விரித்து வாசிப்பைத் தொடர்ந்தான்.

பாதிரியார் எரிப்பு: 18 பேர் மீது குற்றப்பத்திரிகை: சி.பி.ஐ.தாக்கல்

‘புவனேசுவரம், ஜூன்.23-(1999):ஒரிசா மாநிலத்தில் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ஸ்டெயின்ஸ் என்பவரும் அவரது 2 மகன்களும் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர் அல்லவா ? இந்தச் சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளி தாராசிங் உட்பட 18 பேர் மீது சி.பி.ஐ. நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தனி நீதிபதி பி.பாசுதேவ் முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆனது. சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ள 18 பேரில் 9 பேர் மட்டுமே கைதாகிக் காவலில் உள்ளனர். தாராசிங் உட்பட மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர். 18 பேர் மீதும் 6 பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டு உள்ளது. ‘

சர்வதேச ஆதரவு பெருகுகிறது: கார்கில் பிரச்சினை, இந்தியாவுக்கு இங்கிலாந்து ஆதரவு – பாகிஸ்தான் படைகள் வெளியேற எச்சரிக்கை.

‘புதுடெல்லி, ஜூன் 23-(1999): காஷ்மீர் மாநிலம் கார்கில் உட்பட பல பகுதிகளில் பாக். ஊடுருவற்காரர்களை எதிர்த்து இந்திய ராணுவம் போராடி வருகிறது அல்லவா ? அதில் இந்தியாவுக்கு சர்வதேச அளவில்ஆதரவு பெருகி வருகிறது. ரஷியா, அமெரிக்கா, ஜெர்மனி உட்பட பல நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சீனா கூடப் பாகிஸ்தானை ஆதரிக்கவில்லை. இந்தியாவுக்குச் சீனா மறைமுக ஆதரவைத் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து நாடும் கார்கில் பிரச்சினையில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து…. ‘

கார் வேகம்பிடித்திருந்தன் விளைவாக, எதிர்க்காற்று முன்னைவிட வேகமாக உள்ளே நுழைந்து வேலு விரித்து வாசித்த தினசரியின் பக்கத்தைப் படபடவென மோதுகிறது. உட்கார்ந்திருந்த நண்பர்கள் இருவரது கேசத்தையும் கலைத்து விளையாட ஆரம்பித்தது. நிமிர்ந்த வேலுவின் கண்களில், ஈரக்காற்றினால் நீர்கோர்த்திருப்பது தெரிந்தது. கையிலிருந்த கைக்குட்டையின் முனையை இரு கண்களிலும் மாற்றி மாற்றி ஒற்றி எடுத்தான்.

‘டிரைவர் தம்பி கதவின் கண்ணாடியை ஏத்து. காத்து மோசமா அடிக்குது பாரு ‘ டிரைவர், வேலு எப்போது வாய் திறப்பான் என்று காத்திருந்திருக்கவேண்டும்.

‘சார் பேப்பர்ல இன்னா நியூஸ். நம்ம ஊருல எம்.பி எலெக்ஷன்ல இந்த முறை யாரு ஜெயிப்பாங்கண்ணு நினைக்கிறீங்க ? ‘

‘பேப்பர்ல அதைப் பத்தி எதுவுமில்ல. நீதான் சொல்லேன். என்ன நினைக்கிற ? ‘

‘சார் பாண்டிச்சேரியைப் பொறுத்த அளவில பா.ம.கவுக்கு வாய்ப்பு இருக்கிறமாதிரித் தெரியலை. பக்கத்துல இருக்கிற தமிழ்நாடு மாவட்டங்களான கடலூர் விழுப்புரம் பகுதிகளில் வேண்டுமானா அவர்களுக்குச் செல்வாக்கு இருக்கலாம். இங்கே அவர்களால ஒண்ணும் செய்ய முடியாது. அதில்லாம, பா.ம.க. வேட்பாளர் ராமதாஸ், புதுச்சேரி அரசியலுக்குப் புதுசு. காங்கிரஸ் வேட்பாளர் பரூக் பழம்தின்னு கொட்டைபோட்டவர். அப்புறம் த.மா.க. வேட்பாளாரா ஹோம் மினிஸ்டராகவிருந்த கண்ணன் நிக்கிறாரு. போட்டி என்னவோ கடுமையாகத்தான் இருக்கணும். ஆனால் பரூக் தான் வருவார்னு சொல்றாங்க.. ‘

‘அப்படியா ?.. இருக்கலாம். ‘

‘என்ன சார் ? உங்க மனசிலே என்ன இருக்குது சொல்லுங்களேன். ‘

‘நான் என்னப்பா சொல்லப்போறேன். நீ தான் எல்லாத்தையும் சொல்லி முடிச்சிட்டியே ? ‘

‘சார் கிண்டல் பண்ணாதீங்க. அவரென்ன சார், பேசாம வராரு. உங்ககூடச் சரியாகப் பேசலை மாதிரித் தெரியுதே. எத்தனைவருஷமா நம்ம ஊருல இருக்கிறாரு ? தமிழ் ஏதாச்சும் கொஞ்சம் வருமா ? ‘

‘கொஞ்சமா இல்லை, நிறைய வரும். நம்மைவிட நல்ல தமிழ்ல பேசுவாரு. எதையோ ரொம்ப ஆர்வத்துடன் படித்துக்கொண்டு வறாரு. இல்லைன்னா நம்மால பதில் சொல்லி மாளாது. எட்டுமணிக்குக் கிளம்பினோம். ஒன்பது ஒன்பதரைக்கெல்லாம் போயிடலாமா ? ‘

‘எங்கசார் ? ‘

‘என்னப்பா கிண்டலா. நாம எங்கே போறோம்னு நினைக்கிற ‘

‘வைத்தீஸ்வரன்கோவிலுக்கு ‘.

‘பிறகெதற்கு குதர்க்கமான கேள்வி ? ‘

‘ தப்பா நினைச்சுக்காதீங்க சார். இந்த ரூட்டைப்பத்தி உங்களுக்குத் தெரியாதா ? ஒன்பது, ஒன்பதரைக்குத்தான் சிதம்பரமே போக முடியும். பிறகு அங்கிருந்து, சீர்காழி பதினெட்டு கி.மீ, சீர்காழியிலிருந்து வைத்தீஸ்வரன்கோவில் ஆறு அல்லது ஏழு கி.மீட்டர் இருக்கும். எப்படியும் பத்தரை பதினொண்ணு ஆயிடும் சார். ‘

‘சரி சரி கொஞ்சம் வேகமாப் போ. ‘ என்ற வேலுவின் கவனம் வாசித்துக் கொண்டிருக்கும் நண்பன் பெர்னார் பக்கம் திரும்பியது.

பெர்னார் டிரைவருக்கும் வேலுவுக்கும் இடையில் நடந்த காதில் வாங்கியவனாகத் தெரியவில்லை. வேலு உதட்டைப் பிதுக்கித் தோளைக் குலுக்கினான்; தமிழ்தினசரி செய்தியை விட்ட இடத்திலிருந்து வாசிக்க ஆரம்பித்தான். அடுத்தடுத்து கார்கில் போர், 13வது இந்திய மக்களவைத்தேர்தல் சம்பந்தமாக அரசியல் வாதிகளின் கூச்சல் எனவிருக்க, நான்காக மடித்துத் தூக்கி எறிகிறான். இம்முறை பெர்னார் கவனம் இவன்பக்கம் திரும்பியிருக்கிறது. தலையை அசைத்து, மெல்ல பெர்னார் சிரிக்கிறான்.

‘என்ன சிரிக்கிற ? ‘-வேலு.

‘இல்லை கொஞ்ச நாளா எனக்கொரு சந்தேகம், உன்னிடமிருந்த காம்ரேட் தோழரை எங்க ஒளிச்சுவச்சிருக்கிற. வாய்திறந்தாலே உழைக்கும் வர்க்கம், முதலாளிகள், ஸ்டாலின், நம்பூதிரி, ஜீவா, வ. சுப்பையாண்ணு பேசறவன் நீ. என்ன ஆச்சு ? சித்தாந்தம் அழுக்காப் போச்சுதுண்ணு சலவைக்குப் போட்டிருக்கிறாயா ? அதிலும் இப்போதெல்லாம் வேம்புலிநாயக்கரின் விதவை மருமகள் வீட்டிற்தான் உன்னை பார்க்க முடிவதாக வேலையாள் மணி சொல்கிறானே! உண்மையா ? ‘

‘நீ ஏதாச்சும் கற்பனை பண்ணிக்காதே. ஆனா நீ சொல்லவந்ததில உண்மை இல்லாமலுமில்லே. வயதுபோன விதவைப்பெண்களானாலும் பரவாயில்லைண்ணு, கல்யாணம் கட்டிகிறதுக்கு புதுச்சேரியில ஒரு கூட்டமே காத்திருக்குது. இவர்கள் அப்படியான பெண்களைக் கல்யாணம் செய்வதில் சீர்திருத்த நோக்கமேதுமில்லை. ஐரோப்பிய நாடுகளுக்குப் போனா தங்கள் வறுமைையை மட்டுப்படுத்தலாமென்கிற தந்திரம். பிரெஞ்சுக் குடியுரிமையுள்ள விதவைப் பெண்களில் சிலர் இதற்காக பணங்கூட வாங்குகிறார்கள். உங்கள் நாட்டிற்குப் போனதும், அனுமதியோ, குடியுரிமையோ சம்பந்தபட்ட நபருக்குக் கிடைத்ததும் அந்த நபரை விவாகரத்து செய்துவிட்டு, புதுச்சேரி திரும்பிவிடுவாள். சம்பந்தப்பட்ட இருவருமே இதில் லாபம் பார்க்கிறார்கள். ஆனா வேம்புலி நாயக்கர் வீட்டில் நான் பழியாய் கிடப்பதற்கான காரணம், உனக்குத் தெரிந்ததுதான். அவளது உறவினர் புதுப்பாக்கம் கிருஷ்ணப்பிள்ளை என்பவர் வீட்டுப் பரணிலிருந்துதான், உன் பூட்டன் பெர்னார் குளோதன் சிநேகிதன், மாறனது தினக்குறிப்பு ஓலைகள் கிடைத்தன. அந்த மனிதரிடம், பெர்னார் குளோதன் இறந்த விபர ஓலை நறுக்குகள் கிடைக்குமாவென்று தேடச் சொல்லியிருந்தேன். அப்படி ஏதேனும் கிடைக்குமென்கிற நப்பாசையில், அப்பெண்மணியின் வீட்டிற்கு அடிக்கடி போகவேண்டியிருக்கிறது. ‘

‘வருத்தப்படாதே. உன்னை பரிபூரணமா நம்பறேன். அதுசரி, என்னுடைய மற்றொரு கேள்விக்குப் பதிலில்லையே. காம்ரேட் வேலு எங்கே ஒளிந்துகொண்டார், என்று கேட்டேனே. ‘

‘காம்ரேட் வேலு எங்கேயும் ஒளிந்துகொள்ளவில்லை. அவனிடமுள்ள கம்யூனிஸ சித்தாந்தத்திற்கும் எந்த விக்கினமுமில்லை. இரத்தத்தில ஊறினது, அதெல்லாம் சுலபத்துல போயிடாது. முதலளித்துவம் இருக்கும்வரை, பொதுவுடமையும் இருக்கும். அதுவுந்தவிர வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்கிற ஆன்மீகவாதியாகவிருந்தாலும் சரி, சோஷலிஸத்தில் நம்பிக்கைக் கொண்ட அரசியல்வாதியும் சரி, தனது அறிவு பாமரனுக்கும் போய்ச் சேரணும் என்று சிந்திக்கிற அறிவுஜீவியும் சரி எனக்குப் பொதுவுடமைவாதிகளே. இந்த ஒரு வேலுவை நம்பிக் கம்யூனிஸம் ஜீவிக்கலை. வர்க்கபேதத்திற்குப் பலியாகும் ஒவ்வொரு உயிரையும் நம்புகிறது. உயர்வையும் தாழ்வையும் சமப்படுத்தணும்னு நினைக்கிற உள்ளங்கள் அனைத்துமே எங்கள் இனந்தான். கிழக்கு ஐரொப்பிய நாடுகளிலும், சோவியத் யூனியனிலும், இருந்த கம்யூனிசம், அமெரிக்கக் குதிரையின் கடிவாளத்தை இறுக்கிப் பிடித்திருந்தவரை எல்லாம் ஒழுங்காக இருந்தது. இன்றைக்கு என்ன நடக்கிறது ? குதிரை கட்டுப்பாடற்றுத் தாறுமாறாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதனை நம்பி சவாரி செய்யும் உலகத்தை குப்புற கவிழ்ப்பதற்கு முன்பு, கம்யூனிஸம் மறுபடியும் விழித்துகொள்ளணும். அது சரி நீ அப்படி என்னத்தை அந்தப் பிரெஞ்சு இதழ்ல படிக்கிற ? ‘

‘எழுத்தாளர் தஸ்தாய்வ்ஸ்கியைத் தெரியுமா ? ‘

‘சொல்லு.. என்ன சேதி ? ‘

‘அவரது வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவம்.. ‘

‘சுத்திவளைக்காமா, என்ன படிச்சங்கிறதைச் சொல்லு. எனக்கதில் சுவாரஸ்யம் இருக்குதா, இல்லையாங்கிறதைப் பிறகு சொல்றேன் ‘

‘1866ம் ஆண்டு நவம்பர் 8ந்தேதி. அலுவலகத்தில், எழுத்தாளர் தஸ்தாய்வ்ஸ்கி, புதிதாக சுருக்கெழுத்தாளர் பதவியில் தான் அமர்த்தியிருக்கும், அன்னா கிரிகொரிவ்னா என்ற பெண்ணிடம் தனது புதிய படைப்பினைக் குறித்துப் பேசவந்திருக்கிறார். அன்னாவின் ஒத்துழைப்பில் வந்திருந்த இதற்கு முந்தையநாவல் நல்ல வறவேற்பினைப் பெற்றிருந்தது. தஸ்தாய்வ்ஸ்கிக்கும் அன்னாவுக்கும் அன்றைய தினம் நடந்த உரையாடலை, ஒரு வார்த்தைவிடாமல் பின்னர் அப்பெண்மணி தனது நினைவுக் குறிப்பில் எழுதவேண்டியிருந்திருக்கிறது. அந்த உரையாடலும், அந்த உரையாடலுக்குக் காரணமான கனவும் அப்பெண்மணியின் வாழ்க்கையில் முக்கியமானது.

‘எப்படி ? ‘

அன்னா தன் நினைவுக் குறிப்பில் எழுதியுள்ளபடி அன்றைக்கு எழுத்தாளர் தஸ்தாய்வ்ஸ்கி மிகவும் மகிழ்ச்சியுடன், உள்ளே வந்திருக்கிறார். இதற்குமுன் அன்னா, தனது எழுத்தாளர் எஜமானரின் முகத்தில் அப்படியொரு சந்தோஷத்தைப் பார்த்ததில்லை. அன்னா இதுவரை, எழுத்தாளரிடம் தெரிந்துகொண்டதெல்லாம், அவரது கடந்த கால வாழ்க்கை எவ்வளவு துயரமானது என்பதைத்தான். அநேக நாட்கள், தனது வாழ்க்கையிலேற்பட்ட இன்னல்களை, இப்பெண்ணிடம் எழுத்தாளர் பகிர்ந்துகொண்டு ஆறுதலடைந்திருக்கிறார். வழக்கத்திற்கு மாறாக அன்றைய தினம் ‘ஒரு சந்தோஷச் செய்தியைச் சொல்லப்போகிறேன் ‘ என்றுகூற, அந்தப்பெண்ணும், ‘உங்களை மகிழ்ச்சியிலாழ்த்த அப்படியென்ன விநோதம் நடந்தது ‘, எனக் கேட்கிறாள். அவர், ‘இரவு ஒரு நல்ல கனவு கண்டேன். ‘ என்று சொல்லவும், அன்னாவுக்கு அவரது பதில் வேடிக்கையாக இருந்தது. ‘இதற்காகவா, அவ்வளவு சந்தோஷம்! ‘ என்று கேலி செய்கிறாள்.*

‘அன்னா சிரித்ததில் நியாயமிருக்கிறது. நான்கூட, உன்னுடைய கனவுகளைக் கேட்டுக் கிண்டல் செய்திருக்கிறேனே. சரி மேலே சொல்லு, அவளது சிரிப்புக்கு அவரது பதிலென்ன ? ‘ -வேலு.

‘எழுத்தாளர் பதிலை அப்படியே வாசிக்கிறேன் கவனி, இனிமேல் தான் சுவாரஸ்யமே உள்ளது.:

‘சிரிக்காதே. தயவுசெய்து நான் சொல்லவருவதை முழுமையாக் கேள் அன்னா! எனது கனவுகள் தீர்க்க தரிசனங்கள் என்பதால் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பவன் நான். உதாரணமாக என் இறந்துபோன சகோதரன் மிஷாவோ அல்லது என் தகப்பனாரோ கனவில் வந்தால், எனக்கேதோ கெட்டது நடக்கவிருக்கிறது என்பதாய்ப் பொருள். ‘ – தஸ்தாய்வ்ஸ்கி

‘அதிருக்கட்டும்.. நீங்கள் கண்ட கனவினைச் சொல்லுங்கள்.. ‘ -அன்னா

‘அந்தப் பெட்டியைப் பார். எனது சைபீரிய நண்பன் சொக்கான் வலிக்கனோவ் கொடுத்த பரிசு. என் வரையில் அது மிகவும் முக்கியமானது. எனது கையெழுத்துப் பிரதிகள், முக்கிய கடிதங்கள், அரிதான நினைவுப்பொருட்கள் ஆகியவற்றை அதில்தான் வைத்திருப்பேன். இரவு கண்டிருந்த கனவில், அப்பெட்டியில் எதனையோ தேடுகிறேன். தேடும்பொழுது, ஒரு பொருள் கண்களை கூசச்செய்வதுபோன்று ஒளியை உமிழ்ந்துகொண்டு தாட்களுக்கிடையில் உருண்டோடிக் கண்ணாமூச்சி ஆடுகிறது. ஆர்வத்தில் எல்லாவற்றையும் வெளியே எடுத்துப்போட்டு என்னவென்று பார்த்தால், மிகச்சிறிய வைரக்கல். ‘- எழுத்தாளர்.

‘அதை என்ன செஞ்சீங்க. ‘-அன்னா

‘ஞாபகத்தில் உள்ள கனவு அவ்வளவுதான். அதற்கப்புறம் என்ன நடந்ததுண்ணு நினைவில் இல்லை. அந்த வைரக்கல்லுக்கும் என்ன நேர்ந்திருக்கும்ணு, தெரியலை. அதனாலென்ன, இக்கனவு என்னைப் பரவசப்படுத்தியிருக்கிறது ‘ -எழுத்தாளர்.

பெர்னார் ஃபோந்த்தேன் படித்து முடித்துவிட்டு வேலுவைப் பார்த்தான். வேலு குழப்பத்துடன் பார்க்கிறான்.

‘எனக்கெதுவும் புரியலை ‘ -வேலு

‘உன்னைப் போலத்தான் தஸ்தாய்வ்ஸ்கீயின் செயலாளர் அன்னாவும் தனக்கேதும் விளங்கவில்லையெனவும், தான் கனவுகளை நம்புவதில்லையென்றும் சொல்லிவிட்டாள். அன்றையதினச் சந்தோஷத்திற்குக் காரணமான கனவினைச் சொல்லிமுடித்த எழுத்தாளர், தான் எழுதவிருக்கும் புதிய படைப்பின் கதைக்கருவை அன்னாவிடம் சொல்லுகிறார். வயதான மனிதரொருவர், இளவயதுப் பெண்ணொருத்தியை நேசிப்பதாகக் கதை. கதையின் கருவைச் சொல்லிவிட்டு அன்னாவிடம் ‘வயதில் மூத்த அம்மனிதரை உண்மையாக நேசிக்க, ஓர் இளம்பெண்ணால் முடியுமென நீ நினைக்கிறாயா ? அவளை நீயாகப் பாவித்து எனக்குப் பதில் சொல், என்னை மணக்க விருப்பமா ?வென்று நான் கேட்கும் பட்ஷத்தில் உனது பதில் என்னவாகவிருக்கும் ? ‘ என்று கேட்கிறார்*.

‘அவளது பதிலென்ன ? ‘-வேலு

‘அன்னாவுக்கு தஸ்த்தாய்வ்ஸ்கியின் கேள்வியின் பொருள் புரிந்துவிட்டது. தயக்கமின்றி ‘நானானால், பூரண சம்மதமென்பேன் ‘ எனத் தனது இணக்கத்தைத் தெரிவிக்கிறாள். அவள் எழுத்தாளரை மணக்க சம்மதம் தெரிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, அலுவலகத்திலிருந்து புறப்படவிருந்தசமயம் எழுத்தாளர் அப்பெண்ணிடம், ‘அன்னா கிரிகொரிவ்னா!.. கனவில் கண்ட வைரக்கல் எங்கேயென கண்டுபிடித்துவிட்டேன் ‘, என்கிறார். அவள், ‘எப்படி ? ஒருவேளை நீங்கள் கண்ட கனவின் கடைசிப்பகுதியை ஞாபகத்திற்கு வந்துவிட்டதா ? ‘ என்று கேட்கிறாள். அதற்கவர், ‘கனவின் முடிவு ஞாபகத்திற்கு வரவில்லை, ஆனால் என் வாழ்நாள் முழுவதும் பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டிய வைரக் கல் எதுவென்று கண்டுபிடித்துவிட்டேன். ‘ என்கிறார்.*

‘இதன் மூலம் எனக்கு என்ன சொல்ல வற ? ‘

இந்தக் கனவு பிராய்டின் முடிவோட ஒத்துப்போகிறது என்கிறேன். எழுத்தாளர் தஸ்தாய்வ்ஸ்கிக்குத் தனது செயலாளர், அன்னா கிரிகொரிவ்னாவிடம் தனக்கேற்பட்ட காதலினைப் பூர்த்திசெய்துகொள்வதற்கான சாத்தியங்கள் குறைவு என்று நம்பியதால்தான், அப்பெண்ணை கனவில் வைரக்கல்லாக எழுத்தாளர் கண்டிருக்கிறார். பின்னர் அவர் அன்னாவை மணந்துகொண்டது வேறு விஷயம். ஆனால் அன்னா சம்மதம் தெரிவித்த அந்த நிமிடம் வரை, அதுவொரு நிறைவேற்றிக்கொள்ளாத விருப்பமாகவே எழுத்தாளருக்கு இருந்திருக்கிறது. அதுவே அவரது கனவுக்கான காரணம். ‘

‘ஆக உன் கனவுகளும், நிறைவேறாத ஆசை காரணமாகவே உனக்கு ஏற்படுகின்றன என்கிறாய், அப்படித்தானே ? ‘

‘அப்படித்தான்.. பிராய்டு சொல்லுவதுபோல, கனவுகள், நம் அடிமனதில் இருக்கிற நிறைவேறாத விருப்பங்கள். பாலுணர்வு, வஞ்சம், மூர்க்கம், மரணம் ஆகியவை அதன் குணாதிசயங்கள். மேற்கத்திய சித்தாந்தத்தின்படி கனவுகளைக்கூட, காண்கிற மனிதனின் புறவுலகு சார்ந்ததென்று நம்பலாம். நானதில் அகவுலகம் குறித்துப் பேசும் இந்திய சித்தாந்தத்தின் மையமான ஆத்மாவையும் பொருத்திப் பார்க்கிறேன், அவ்வளவுதான். ஆசைகளும் அவற்றின் வினைகளும் அற்றுப் போகாதவரை ஆன்மா உடல் விட்டு உடல் ஓடுகிறதென வேதங்கள் சொல்கின்றன. இந்த ஆன்மாவிடம் அதன் நிறைவேறாத விருப்பங்களும் ஒட்டிக்கொண்டு பயணிப்பதாக ஏன் கொள்ளமுடியாதென்று கேட்கிறேன். கனவில் வெளிப்படுகின்ற நிறைவேறாத விருப்பங்கள், நமது முந்தைய பிறவிக்கும் சொந்தமாக இருக்கலாமில்லையா ? ‘

‘எனது பதில் முரணாகவிருக்கும், கோபம் வராதென்றால் சொல்வேன். ‘

‘எனது நம்பிக்கையில் தெளிவாக இருக்கின்ற இச்சமயம் உனது பதிலேதும் வேண்டாம். எனது நம்பிக்கைக்கு, ஒரு வேளை நான் தேடி வந்திருக்கிற நாடி ஜோதிடம் துணைபுரியலாம். ‘

‘சார் வைத்தீஸ்வரன் கோவில் வந்திருக்கிறோம். இது சுவாமி சன்னதி வீதி. எங்கே காரை நிறுத்தட்டும் ‘

‘எங்கேயாவது, ஒருபக்கமா நிறுத்தப்பா ? ‘

கார் நின்றதும் நண்பர்கள் இருவரும் இறங்கிக்கொள்கின்றார்கள். காரருகே ஓடிவந்த இளைஞன், ‘ சார்.. இன்றைக்கு, செவ்வாய்க்கிழமை, அங்காரகனுக்கு அர்ச்சனை செய்வதென்பது விசேஷம். ஏற்பாடு செய்யட்டுமா ? ‘ என்கிறான்.

‘வேண்டாம்பா பிறகு வந்து பார்க்கிறோம். நல்லதா ஒரு நாடி நிலயமிருந்தாச் சொல்லு. -வேலு

‘சார் எதிரில் தெரிவது ஜலகண்டேசுவரர் நாடி நிலயம்- அங்கேவேணா விசாரிக்கட்டுமா ? ‘ -டிரைவர்

‘என்ன பேரு சொன்ன ? ஜலகண்டேசுவரரா ? வேலு! மாறன் ஓலையில்கூட அப்படியொரு பேரு வருதே. விசாரிச்சுப்பாறேன்.. ‘ -பெர்னார்

நாடி நிலையத்திலிருந்து ஓடிவந்த நபர், ‘புதுச்சேரியிலிருந்து வறீங்களா ? உங்களைத்தான் இரண்டு நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் ‘ எனச் சொன்னவர் சொன்ன வேகத்தில் திரும்பி நடக்க, நண்பர்களிருவரும். அவரைப் பின் தொடர்ந்தனர்.

/தொடரும்/

*Les grands reves de l ‘Histoire – Helene Renard & Isabelle Garnier

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

author

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts